டி.என்.சேஷன் – வாழ்வும், பணியும்


டி.என்.சேஷன் 10-11-2019 ல் காலமானார். கேரளாவின் திருநெல்லை நகரில் பிறந்த சேஷன் பொறியியல் படிக்கிற அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்தும் அண்ணனின் வழியில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்  என்று  உறுதி பூண்டார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார்.  காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற அவர் அப்பணிக்கு செல்லாமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் மதுரை ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது போராட்டங்களை மிக கடுமையாக அவர் அடக்கினார் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும் முதல்வர் பக்தவச்சலம் அதற்கு செவி சாய்க்கவில்லை.  பின்னாளில் சேஷனின் நினைவலைகள் கோவிந்தன் குட்டி எழுத்தில் நூலான போது, ‘மதுரை ஆட்சியராக இருந்த காலத்தில்  கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அண்ணா சி.ஐ.ஏ கைக்கூலி என்று எனக்கு தெரிய வந்தது. அவர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அவர் முன்னின்று நடத்தினார்’ என்கிற தொனியில் பேசியிருந்தார். இத்தகைய கூற்றுக்கு சேஷன் எந்த ஆதாரத்தையும் தரவில்லை. நூல் வெளிவருவதற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியாக மேற்சொன்ன கருத்து இதழ்களில் வெளிவந்தது. திமுக, அஇஅதிமுக ஆகியவை அவர் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தன.

திரிபுரா தலைமை செயலாளர், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவரும், இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் டெல்லியில் இருந்து அதனை கண்காணித்தவர்களில் ஒருவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ப.ஸ்ரீ.இராகவன்  அண்ணா குறித்த சேஷனின் கூற்று ‘அபாண்டமான குற்றச்சாட்டு, ஒன்று, அறிந்து சொல்லிய பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வீண் வம்பு பேசுகிறவர்கள் இவர் காதில் போட்ட வதந்தியாக இருக்க வேண்டும்.  அல்லது வேறெதாவது மறைமுக உள்நோக்கத்தில் பிறந்த குசும்பாக இருக்க வேண்டும்’ என்று ‘நேரு முதல் நேற்று வரை’ நூலில் பதிவு செய்கிறார். 

புகைப்பட நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சேஷனின் நூலிற்கு  நீதிமன்றங்கள் தடை விதித்தன. ப.ஸ்ரீ.ராகவன் சேஷனின் அண்ணா பற்றிய கருத்துக்கு வெளியிட்ட மறுப்பு அறிக்கை குறித்து சேஷன் அமைதி காக்கவே செய்தார். நூல் வெளிவந்த போது அண்ணா குறித்த பகுதிகளை அவர் நீக்கியிருந்தார்.

சேஷன் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் செயலலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் போபார்ஸ் பீரங்கி வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது பாதுகாப்புத் துறை செயலாளராக சேஷன் திகழ்ந்தார். போபர்ஸ் ஆயுத பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று அடித்து பேசினார். இது அவரை கேபினட் செயலாளராக ஆக்கி அழகு பார்க்கும் அளவுக்கு ராஜீவ் காந்தியின் நம்பிக்கையை பெற்றுத்தந்தது. வி.பி.சிங் பிரதமர் ஆனதும் சேஷனை திட்ட கமிஷன் உறுப்பினராக கட்டம் கட்டினார்.

அடுத்து சந்திரசேகர் பிரதமர் ஆன போது சுப்பிரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக இருந்தார். ஹார்வர்டில் சேஷன் படித்த போது அங்கு பணியாற்றிய சுவாமி சேஷனை தலைமை தேர்தல் ஆணையராக ஆக்க பரிந்துரைத்தார்.  அடுத்த ஆறு ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராக சேஷன் நிகழ்த்தியது இந்திய ஜனநாயகத்தின் போக்கையே மாற்றியது. தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் குறித்ததை போல தேர்தல் ஆணையத்தின் வரலாற்றை சேஷனுக்கு முன், சேஷனுக்கு பின் என்று பகுக்கலாம் என்கிற அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கியிருந்தது. சேஷன் அதற்கு முன்பு தேர்தலை எப்போதும் நடத்திய முன் அனுபவம் கொண்டவரில்லை. ‘சற்றும் தாமதமோ, குறைபாடோ இல்லாமல் இயங்க வேண்டும்’ என்று மட்டும் முடிவு செய்து கொண்டதாக பின்னாளில் தெரிவித்தார். முதல் வேலையாக தேர்தல் காலங்களில் நடக்கும் குற்றங்களை பட்டியலிட்டார். அவற்றின் எண்ணிக்கையே நூறுக்கு மேலே நீண்டது. அடுத்தது மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்த முனைந்தார்.

மாதிரி நடத்தை விதிகள் தேர்தல் காலத்தில் அமலுக்கு வருபவை. அவை சட்டங்கள் இல்லை என்றாலும் அவற்றை பொதுவாக பின்பற்ற வேண்டும் என்பது எழுதப்படாத உடன்படிக்கை. கேரளாவில் அறுபதுகளில் குடிமைச் சமூகத்தின் முயற்சியால் நடத்தை விதிகள் முதல்முறை உருப்பெற்றன. அவை அவசர நிலை அட்டூழியங்களுக்கு பிறகு புதிய, வலுவான வடிவத்தில் அனைத்து கட்சிகளால் வடிவைமைக்கப்பட்டன. எனினும், நடைமுறையில் அவை அரிதாகவே பின்பற்றப்பட்டன.

சேஷன் எங்கே சிக்கல் என்று பார்த்தார். தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மீது முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்திற்கே வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அதற்குண்டு என்று அவர் கேட்டார். சிலர் முரண்டுபிடித்தார்கள், சிலர் நீதிமன்ற படியேறினார்கள். சேஷன் உறுதியாக நின்றார்.  தேர்தலை நிறுத்தி வைக்கும், தள்ளிப்போடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு என்கிற சவுக்கை எடுத்துக் கொண்டார்.  சரத் பவார் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலத்தில் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் காலத்தில் எல்லைமீறும் அதிகாரிகளை வகையாக கவனித்து கொள்வதாக பொதுவெளியில் மிரட்டல் விடுத்தது இருந்தார். வாக்கு எண்ணிக்கையை நடத்த மாட்டேன் என்று சேஷன் தொடை தட்டியதும் பவார் இறங்கி வந்தார்.

தேர்தலில் ஆள் மாறாட்டங்கள், கள்ள வாக்குகள் மலிந்திருந்த காலம் அது. புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அட்டை வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கேட்டார் சேஷன். பதினெட்டு மாதங்கள் அரசாங்கம் சட்டை செய்யாமல் இருந்தது. சேஷன் ஒன்றே ஒன்றுதான் சொன்னார், ‘ஜனவரி 1,1995 முதல் புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்த தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தாது. அவ்வளவே!’. அலறியடித்து கொண்டு இயந்திரம் இயங்கியது.  உச்சநீதிமன்றம், வாக்குரிமை என்பது குடிமக்களின் உள்ளார்ந்த உரிமை, அவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை என்கிற காரணத்துக்காக தேர்தல்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று தீர்ப்பு எழுதியது. எனினும், சேஷன் ஓய்வு பெறுவதற்குள் இருபது லட்சம் அடையாள அட்டைகள் புழக்கத்திற்கு வந்திருந்தன.

அடுத்தது வாரி இறைக்கப்படும் பணம். தண்ணீர் போல தேர்தல் காலத்தில் பணம் செலவிடப்பட்டு கொண்டிருந்தது. எல்லா கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் வரவு, செலவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேஷன் உத்தரவு போட்டார். பூச்சாண்டி காட்டுகிறார் என்றே பலர் அசட்டையாக இருந்தார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்கிற முறையை அறிமுகப்படுத்தினார். தேர்தல் செலவுகள் 1991 நாடாளுமன்ற தேர்தலின் போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. கணக்குகளை ஒழுங்காக தாக்கல் செய்திருக்காத 1,488 வேட்பாளர்களை சேஷன் மூன்றாண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77 அவருக்கு கைகொடுத்து இருந்தது. வேட்பாளர்களின் செலவுக்கு கட்டுப்பாடுகளையும் வெற்றிகரமாக விதித்தார். 

அதோடு நிற்காமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிற காலத்தை மாற்றியமைக்க முடிவு செய்தார். சேஷனின் வருகைக்கு முன்புவரை தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது பொதுவாக தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பே நிகழும். அதற்கு பதிலாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் நாளில் இருந்தே விதிகள் நடைமுறைக்கு வரும் என்று தடாலடி காட்டினார். 

அடுத்தது சுவர்களை ஆக்கிரமித்து கொள்ளும் தேர்தல் சின்னங்கள், விளம்பரங்கள், காதை கிழிக்கும் ஒலிப்பெருக்கிகள் பக்கம் கவனம் திரும்பியது. காங்கிரஸ் கட்சி பெருமளவில் பிளவுண்டு சின்னங்கள் சார்ந்து பல்வேறு மோதல்கள் வெடித்த காலத்தில் அதனை விசாரிக்கும் பொருட்டு சின்னங்கள் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் 1968 -ல் இருந்து பயன்படுத்த ஆரம்பித்து இருந்தது. அதனை தனக்கு ஏற்றார் போல் வசதியாக பொருள் கொண்ட சேஷன்  அனுமதி இல்லாத ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டன. கிராமங்கள், நகரங்களில் முறையே இரவு 11 மணி, 10 மணியோடு பரப்புரை முடிந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டினார்.  ஒரு படி மேலே போய், பொது இடங்களில் தேர்தல் விளம்பரங்கள் என்பதே இருக்க கூடாது என்று உத்தரவிட்டதோடு, முடிந்தால் தனியார் வீடுகளில் தேர்தல் காலத்தில் விளம்பரங்கள் செய்பவர்கள் முடிந்தபிறகு தாங்களே வெள்ளையடித்து தரவேண்டும் என்றும் கண்டிப்பு காட்டினார். தேர்தலின் வண்ணமய பொழுதுகள், பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் பறிபோகிறதே என்று சிலர் சேஷனிடம் குறைபட்டுக் கொண்டார்கள். ‘பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் வேண்டுமென்றால் திரையரங்குக்கு போய் உட்காருங்கள். தேர்தல் தான் கிடைத்ததா?’ என்று அவர் பதிலளித்தார்.

சேஷன் கையில் தேர்தல் நிறுத்த ஆயுதம் சிக்கிக்கொண்டு படாத பாடு பட்டது என்றால் மிகையில்லை. வி.பி.சிங் கட்சியின் கோட்டைகளாக திகழ்ந்த பகுதிகளில் அவர் தேர்தலை உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி சேஷன் நிறுத்தினார் என்பதை பேராசிரியர்  கிறிஸ்தோஃப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுகிறார். பஞ்சாபின் கல்கா இடைத்தேர்தலின் போது சாலைகளை அடைப்பது, வாகனங்களை மொத்தமாக தடை செய்வது என்று சேஷன் எல்லை மீறினார். மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது என்று செய்தித்தாள்கள் கவனப்படுத்தின. பஞ்சாபில் வாக்குப்பதிவிற்கு நடக்க சில மணி நேரங்களே இருந்த போது தடாலடியாக சேஷன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தலை  நிறுத்த ஆளுநர் மனம் நொந்து பதவியை விட்டு விலகினார்.

தேர்தல் சமயத்தில் சாதி, மதம் என்றோ, இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்றோ வாக்குறுதிகள் தருவது கூடாது, அதன் மூலம் வாக்காளர்களை ஈர்த்தால் தேர்தலை ரத்து செய்வேன், வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று சேஷன் கண்டிப்பு காட்டினார். இது தேர்தல் அரசியலுக்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு வகையில் எதிரானது கூட. தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்காமல் எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என்று பேராசிரியர் கில்மார்ட்டின் வினா எழுப்புகிறார். இத்தகைய சேஷனின் அணுகுமுறைக்கு அவர் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருந்த பார்வையும் ஒரு காரணம் . ‘இந்தியாவின் இருநூறு அரசியல் தலைவர்கள் – மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று இவர்களில் எத்தனை பெற தனிப்பட்ட அல்லது கொள்கை ரீதியான ஊசலாட்டங்களில் தெளிவு பெற அணுக முடியும்? ஒருவரைக்கூட அணுக முடியாது…. இவர்கள் எல்லாம் சித்திரக்குள்ளர்கள்’ என்று சேஷன் எழுதினார்.

சேஷன் இப்படி மனம் போன போக்கில் தேர்தல்களை   நிறுத்திக் கொண்டிருந்தது இடதுசாரிகளை கடுப்பேற்றியது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். தனக்கு உதவிகரமாக இருப்பார் என்று தப்புக்கணக்கு போட்ட நரசிம்ம ராவ் சேஷனை காப்பாற்றினார். சேஷன் மகனுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஆளுநரின் செயலால் தேர்தலை நிறுத்தினார். பீகார் தான் சேஷனின் சோதனையின் உச்சம். வன்முறை, படுகொலைகள், பூத் கைப்பற்றல்களுக்கு பெயர் பெற்ற அந்த மாநிலத்தில் 650 கம்பெனி துணை ராணுவப்படையை இறக்கினார். நான்கு கட்டங்களாக தேர்தலை நடத்தினார். அதற்கு பிறகும் நான்கு முறை தேர்தலை தள்ளி வைத்தார். இந்த புள்ளிவிவரம் எவ்வளவு காலம் எடுத்தது என்கிற தெளிவைத் தரலாம்: தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 8, 1994 -ல் செய்யப்பட்டது. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்தது மார்ச் 28, 1995.
சேஷனின் தீவிரமான முயற்சிகளால் வன்முறைகள் பெருமளவில் தேர்தலில் குறைந்தன. உத்திர பிரதேசத்தில் 1991 பூத் கைப்பற்றல்கள் 873, 1993-ல் இந்த எண்ணிக்கை 255 ஆக குறைந்திருந்தது. 1996 பொதுத் தேர்தலில் 1500 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தியா முழுக்க அனுப்பப்பட்டார்கள். மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் முறையே 59,000 பேர் , 1,25,000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். மத்திய பிரதேசத்தில் மட்டும்   87,000 வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. பூத் கைப்பற்றல்கள் இந்திய அளவில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2614 ஆக இருந்தது இப்போது 1056 ஆக குறைந்திருந்தது. தேர்தல் வன்முறைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை 272-ல் இருந்து ஏழே வருடத்தில் 60 ஆக குறைந்திருந்தது.

சேஷன் தேர்தலில் வாக்களிக்க தைரியத்தோடு வரலாம் என்கிற நம்பிக்கையை தன்னுடைய நடவடிக்கைகளால் தந்ததால் வன்முறை சூழல், மதப்பிணக்குகள் என்று பல தரப்பட்ட சவால்களுக்கு இடையேவும் உத்திர பிரதேசத்தில் 1993-ல் வாக்களித்தவர்களின் அளவு 10% அளவு உயர்ந்தது. இதனை ‘சேஷன் விளைவு’ என்று பேராசிரியர் கிறிஸ்தோப் ஜாப்ரிலா புகழ்கிறார். தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்தலில் அச்சமில்லாமல் வாக்களிக்க இந்நடவடிக்கைகள் உதவின என்கிறார்.

சேஷன் தேர்தல் பரப்புரையில் விதிமுறைகளை மீறியதாக சொல்லி இரண்டு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று நரசிம்ம ராவிடம் அழுத்தம் கொடுத்தார். பல்வேறு வகைகளில் அவரின் செயல்பாடுகள் அரசுக்கு தலைவலி கொடுப்பதாக இருந்தன. சேஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்னும் இரண்டு தேர்தல் ஆணையர்களை அரசு நியமித்தது. ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட நியமனம் ஒன்றை முன்னெடுத்தவர் சேஷன். இப்போது தன்னுடைய கழுத்திலேயே கத்தி வைக்கப்பட்ட போது அவர் உச்சநீதிமன்ற படியேறினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டே மத்திய அரசு அவர்களை நியமித்து இருந்தது. நீதிமன்றம் அரசின் முடிவுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை என்றாலும் சேஷன் இரு ஆணையர்களுக்கும் எந்த பணியையும் ஒதுக்க வெகுகாலம் மறுத்து சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். நீதிமன்றம் ‘தன்னுடைய சொந்த பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்தி கொள்ள முனைகிறார்’ என்கிற அளவுக்கு காட்டம் காட்டிய பிறகே இறங்கி வந்தார். மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒரே அளவு அதிகாரம் படைத்தவர்கள், முரண்பாடுகள் வரும் போது பெரும்பான்மை வாக்கின் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

சேஷன் தன்னுடைய பதவிக்காலம் முடிந்ததும் குடியரசு தலைவர் தேர்தலில் சுயேட்சையாக நின்றார். அவர் சிவசேனா, பாஜக கட்சிகளிடம் ஆதரவு கோரினார். பால் தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரினார். ‘சாதி, மத, ஊழல் வேறுபாடுகளை கடந்த ஒருவரே ஜனாதிபதி ஆகவேண்டும்’ என்று அவருக்கு ஆதரவு நல்குவதாக சிவசேனா அறிவித்தது. ஐ.கே.குஜ்ரால் சிவசேனையின் இந்த முடிவு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்கோத்ராவிடம் கேட்டார், ‘அது வேறொன்றுமில்லை. ஒரு தலித் குடியரசுத் தலைவர் ஆகிவிடக்கூடாது என்பதே சிவசேனாவின் எண்ணம்’ என்றார். இதனை தன்னுடைய சுய சரிதையில் குஜ்ரால் பதிவு செய்துள்ளார். கே.ஆர்.நாராயணன் அந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். மனசாட்சியின் படி வாக்களியுங்கள் என்று குரல் கொடுத்த சேஷன் 5% வாக்குகளை மட்டும் பெற்று டெபாசிட்டை இழந்தார். வெகு சீக்கிரமே காந்தி நகரில் அத்வானியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நின்று சேஷன் இரண்டு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று தோற்றுப்போனார்.

‘உங்களுடைய சிறகுகளை அரசு வெட்டி எறிந்து விடும் போல் இருக்கிறதே?’ என்று சேஷனை பார்த்து கேட்டதும் இப்படி பதில் சொன்னார், ‘நான் அப்போதும் நெருப்புக் கோழியை போல மின்னல் வேகத்தில் இலக்கு நோக்கி ஓடுவேன்’. தேர்தல்களில் தோற்றவர் என்றாலும், தேர்தல் அரசியலில் கடைக்கோடி குடிமக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பெரும் முயற்சியை முன்னெடுத்த அரிய அதிகாரி என்று அவர் நினைவுகூரப்படுவார்.

சான்றுகள்:
1) One day’s sultan:T.N. Seshan and Indian democracy-David Gilmartin


2) The Great March of Democracy Edited  by S.Y.Quraishi
3) https://www.indiatoday.in/india/story/tn-seshan-no-nonsense-man-tn-seshan-cleaned-up-india-electoral-system-1617702-2019-11
4) Elections Model Code of Conduct: A Reference Handbook – K.C.Saha
5) A Tumultuous and Glorious Seventy Years – T.N.Seshan
6) T.N.Seshan – An intimate Story – Konark Publishers
7) நேரு முதல் நேற்று வரை – ப.ஸ்ரீ.இராகவன் 
8) T.N. Seshan CEC Vs Union of India & Ors, 14, July 1995
9) Matters of Discretion- An Autobiography- I.K.Gujral
10)https://www.thequint.com/voices/blogs/tn-seshan-a-life-of-integrity-dedicated-to-public-service
11) https://www.business-standard.com/article/beyond-business/-the-more-you-kick-me-112051

12) https://www.thehindu.com/todays-paper/tp-national/the-man-who-cleaned-up-the-indian-electoral-system/article29940502.ece

பி.எஸ்.கிருஷ்ணன் – சமூக நீதி சாம்ராட்.


இப்படி சாம்ராட் என்று விளிக்கப்படுவதை  மக்களாட்சி, சமத்துவத்தில் ஆழமான பிடிப்புடைய பி.எஸ்.கிருஷ்ணன் ஏற்க மறுத்திருப்பார். என்றாலும், அவரின் பங்களிப்புகள், பணிகள் மகத்தானவை. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் செயலாளராகவும் சமூக நீதியை முன்னெடுப்பதில் அவர் பெரும் பங்காற்றினார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த பி.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய பதினோராவது வயதினில் ஆங்கில செய்தித்தாளில் இந்தியாவில் ஏழில் ஒருவர் தீண்டப்படாதவராக சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிற அம்பேத்கரின் அறிக்கையை படிக்கிறார். தீண்டாமை என்றால் என்ன என்று தந்தையிடம் கேட்டார். அது அநீதியானது என்பதை உயர்சாதியில் பிறந்த அவரின் தந்தை தெளிவுபடுத்தினார். மேலும், தீண்டாமை எனும் பெருங்கொடுமை எப்படி சமூகத்தில் பின்பற்றப்படுகிறது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, திருவிதாங்கூரில் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்தை சேர்ந்த கே.சுகுமாரன் நடத்தி வந்த ‘கேரளா கௌமுதி’ நாளிதழில் தீண்டாமைக்கு எதிரான பல்வேறு எழுத்துகள் கிருஷ்ணனின் சிந்தனையை ஆட்கொண்டன. ‘என் மதம் சுயமரியாதைக்கு அவமதிப்பாக திகழ்கிறது என்றால் நான் எந்த மதத்திற்கு மாற வேண்டும்?’ என்கிற கே.சுகுமாரனின் மாநாட்டு கூக்குரல் கேரளாவின் ஆலயக்கதவுகளை  அனைத்து சாதியினருக்கும் திறந்து விட்டது.

நாராயண குருவின் ‘ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்’ எனும் முழக்கம் கிருஷ்ணனின் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்தது.  கேரளவில் தலித் தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினருக்கு கல்விக்கூடங்களை திறந்துவிட வேண்டும் என்று நிகழ்த்திய போராட்டங்கள், அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகளும் அவரின் வாழ்க்கை பயணத்தின் ஒளிவிளக்குகளாக திகழ்ந்தன.

காஞ்சிபுரத்தின் பச்சையப்பா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த காலத்தில்  கிருஷ்ணன் குடிமைப்பணி தேர்வு எழுதினார். அவர் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வு பெற்றார். எந்த மாநிலத்தில் பணி வேண்டும் என்கிற விருப்பத்தை சொல்லுமாறு கேட்ட போது, ‘எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பி வையுங்கள். எம்மாநிலமும் என் மாநிலமே’ என்று அவர் உறுதிபடச் சொன்னார். (அன்றைய ஹைதராபாத்) ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.

நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர் என்று சமூகத்தில் உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக அயராது பாடுபட்டார். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த கிருஷ்ணன் மக்களின் மொழியில் உரையாடி அவர்களின் சிக்கல்களை அறிந்து கொண்டு உடனடியாக தீர்வு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதற்கு முந்தைய தேடல், ஆய்வு, வாசிப்பு, விதிகள், சட்டங்கள் குறித்த சளைக்காத உழைப்பு அவரிடம் இருந்தது. இதனைக்கொண்டு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என்று பல தளங்களில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார். அரசு நிலங்கள், ஊருக்கு பொதுவான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய போது ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை மீறி பகிர்ந்து கொடுத்தார். ஜமாபந்திகளை தலித்துகள் வாழும் பகுதிகளில் நடத்திய முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணன் சமத்துவத் தேரை சேரிக்கும் இழுத்து வந்தவர் என்றால் மிகையில்லை.

தன்னுடைய சாதியை யார் கேட்டாலும் சொல்ல மறுத்த கிருஷ்ணன், சாதி விதித்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்ததாக மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். அவரின் அரும்பணிகளை கண்ட அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் ‘நீங்கள் ஏன் உங்கள் சாதியை மறைக்கிறீர்கள். நீங்கள் உயர்சாதியில் பிறந்தவர். நீங்கள் அதனை மறைப்பதால் என்ன நன்மை விளையப்போகிறது?’ என்று கேட்டார். கிருஷ்ணன் தீர்க்கமாக, ‘ஐயா, நான் சாதியை மறைக்கவில்லை. சாதியை நிராகரிக்கிறேன்’ என்று பதிலுரைத்தார்.  நெகிழ்ந்து போன ஜெயில் சிங் ‘இறைவன் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்காக உழைக்கும் புத்தியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார்’ என வாழ்த்தினார்.

வர்ணமா? வர்க்கமா? எது இந்திய சமூகத்தில் முக்கியமாக எதிர்கொள்ள வேண்டிய சவால் என்கிற வினாவிற்கு இரண்டுமே தான் என்று அவர் கருதினார். ஏழ்மையும், சாதி ஒடுக்குமுறையும் இணைந்து பெரும்பாலும் பயணிப்பதை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் நில சீர்திருத்தம், நிலப்பகிர்வை தீவிரமாக வலியுறுத்தினார்.

கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஆளுநர்களை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு தலித்துகளுக்கு நிலப்பகிர்வை சாதிக்க முடியுமா என்று ஆய்வு செய்தது. பெரும்பாலான தலித்துகள் நிலமற்றவர்களாக, வறுமையில் சிக்குண்டவர்களாக இருப்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்த அக்குழு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போதுமான அளவு நிலமிருப்பதையும் சுட்டிக்காட்டியது. இதனை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் ‘கண்ணியமான வாழ்வு, பாதுகாப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நிலவுரிமை, கல்வி இரண்டும் அவசியமாகும். நீர்ப்பாசன வசதியுள்ள நிலமிருந்தால், பிள்ளைகளை படிக்க வைக்கும் பொருளாதார பலம் இருக்கும். போதுமான வருமானம் இல்லாமல் போனால், குடும்பத்தின் தேவைகளுக்காக பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டிய அவலம் ஏற்படும். பாசன வசதியுள்ள நிலத்தால் வருமானம் கிடைக்கும் என்றால் பிள்ளைகளை படிக்க அனுப்புவது இலகுவாக இருக்கும்.’ என்று பதிந்தார்.

பொருளாதார ஏற்றத்தை சாதிக்க பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்களில்  நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர்  இணைத்துக்கொள்வது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அளவில் நெடுங்காலமாக அமலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அப்பணியில் இணைச் செயலாளராக சீரிய பங்காற்றினார் பி.எஸ்.கிருஷ்ணன். பின்னர், வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்த போது மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும் பொறுப்பு செயலாளராக இவர் வசம் வந்து சேர்ந்தது. அப்பணியையும் செவ்வனே செய்தார். ஆந்திர பிரதேச அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்த போது பி.எஸ்.கிருஷ்ணனின் உதவியை நாடியது. சட்ட வரைவு, உருவாக்கம், அமலாக்கத்தை அவர் திறம்பட கையாண்டார். உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

புகைப்பட நன்றி: நீதிராஜன்

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது, ‘எத்தனை நாளைக்கு தான் இட ஒதுக்கீடு தொடரும்?’ என நெறியாளர் கேட்க, மூப்பினால் நடுங்கிக் கொண்டிருந்த நிலையிலும் உறுதியாக ‘சாதியின் பெயரால் அநீதிகள் இந்திய சமூகத்தில் நிகழ்த்தப்படுவது நிற்கும் நாள்வரை இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.’ என்று பதிலுரைத்தார்.
பட்டியலின சாதியினர், பழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் (தடுப்புச்) சட்டம் உருவாவதற்கு பின்னால் அவரின் பெரும் உழைப்பிருந்தது. அச்சட்டம் கால் நூற்றாண்டு கழித்து திருத்தப்பட்டதிலும் அவரின் முத்திரை இருந்தது. மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும்  தொழிலை தடை செய்வதோடு, அக்கொடுமையினால் உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்கும் சட்ட உருவாக்கத்திலும் பங்களித்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வலுவிழக்க வைத்த போது, அதனை சீர்செய்யும் சீராய்வு மனுவை வடிவமைப்பதில் எண்பது வயதை கடந்த நிலையிலும் பங்குபெற்றார்.

வேறொரு பேட்டியில், ‘இட ஒதுக்கீட்டை சிலர் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்று உயர்சாதியினர் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்களே?’ என்று வினவப்பட்ட போது, ‘அது உயர்சாதியினரின் பொய் பரப்புரை அன்றி வேறொன்றுமில்லை. அவர்களின் மனநிலை சாதிக்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களையே குறைசொல்வதாக இருக்கிறது. அம்மக்களுக்கு நிலம், கல்வியை தருவதில் முனைப்பாக ஈடுபட்டுவிட்டு பின்னர் இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களை குறை சொல்லுங்கள்’ என்றார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயலாளராக இருந்த காலத்தில் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை அறிந்துணர்ந்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்த்தார். பட்டியலின சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையங்களை அரசியலமைப்பு அந்தஸ்து கொண்டதாக மாற்றுவதற்கும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காரணம் ஆவார். 

புகைப்பட நன்றி: நீதிராஜன்

பி.எஸ்.கிருஷ்ணனுக்கு இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுக்கையில் இருந்தார். இட ஒதுக்கீட்டிற்கான வரையறைகளை சாமர்த்தியமாக பொருள் கொண்டு இட ஒதுக்கீட்டை பல மாணவர்களுக்கு மறுத்த அவலநிலை அவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில் சமூகநீதிக்கான சமருக்காக அவர் படுக்கையை விட்டு எழுந்தார். நடுங்கும் விரல்களோடு தானே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய மனுவை தட்டச்சு செய்து கொடுத்தார். அம்மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை காக்கப்பட்டு அவர்களின் குடிமைப்பணி இடங்களை பெறுவது உறுதி செய்யப்பட்டது.

பி.எஸ்.கிருஷ்ணன் எழுதி முடிக்காமல் போன இறுதிக் கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள், நீதி குறித்து கவலையோடு, ‘பட்டியலின சாதியினருக்கு கண்ணியமிக்க வாழ்வும், மரணமும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன’ என்று பதிவு செய்திருந்தார். எத்தனை நாளைக்கு இந்த அநீதி தொடரும் என்று ஆதங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் சட்டங்கள், செயல்பாடுகள், திட்டங்கள் என்று பலமுனைகளில் சாதி ஒழிப்பு, சமத்துவத்துக்கான போரினை முன்னெடுக்க தன்னுடைய இறுதிக் கட்டுரையில் அழைப்பு விடுத்தார். முடிக்கப்படாத அந்த மாபெரும் சாம்ராட்டின் கனவினை முன்னெடுத்து ஈடேற்றுவதே அவருக்கான புகழஞ்சலியாக இருக்கும்.

நூலினை வாங்க: சமூக நீதிக்கான அறப்போர் : https://www.amazon.in/gp/product/8194340705/ref=cx_skuctr_share?smid=A2FA8VKKREFM6M

பி.எஸ்.கிருஷ்ணன் பங்களிப்பில் உருவான சட்டங்கள்:
புத்த மதத்தில் இணைந்த தலித்துகளைப் பட்டியல் சாதியினர் என்று அங்கீகரிப்பதற்கான சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989) & திருத்தச் சட்டம் (2015),
மனித கழிவகற்றுவோரைப் பணியமர்த்தல் மற்றும் உலர்கழிப்பறைகள் கட்டுதல் தடுப்புச் சட்டம் (1993). மேற்சொன்ன சட்டத்தின் மேம்பட்ட வடிவாமான மறுவாழ்வுக்கான சட்டம் (2013)

எழுதிய நூல்கள்: Empowering Dalits for Empowering India- A Road Map
Social Exclusion and Justice in India
நினைவலைகள் : ‘சமூக நீதிக்கான அறப்போர் – பி.எஸ்.கிருஷ்ணன் : நலிந்தோர் நலனுக்கான ஓர் வாழ்வின் அர்ப்பணம்’

(இன்று பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்)

நன்றி: விகடன் இயர்புக் 2020