அண்ணா குறித்து ஒரு விவாதம்


அண்ணா குறித்து ஒரு விவாதம். அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அண்ணா குறித்த எனது ஆங்கிலப் பதிவில் சில கேள்விகளை எழுப்பினார். என்னளவில் பதில் தந்தேன். அந்த கேள்வி-பதில்கள் இவை:

1. 1967 திமுக வெற்றியில் எம்ஜியாரின் பங்கு என்ன? அவர் மருத்துவமனையில் கழுத்தில் மாவுக்கட்டுடன் இருந்தப் புகைப்படத்தை வைத்தே திமுக பெரு வெற்றியை சம்பாதித்தது.

அண்ணாவின் வீச்சு எம்ஜிஆரையும் கடந்த ஒன்று. காமராஜர் தலைவர், அண்ணா வழிகாட்டி என எம்ஜிஆர் பேசிய உடனே வந்த திரைப்படம் பெருந்தோல்வி. இது எம்ஜிஆரின் ஈர்ப்பை குறைத்து மதிப்பிடுவது அல்ல. அண்ணாவுக்கு கூடிய கூட்டத்தில் பாதி கூட எம்ஜிஆருக்கு கூடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கடும்தோல்வியை அவர் ஆட்சி சந்தித்து இருந்தது. அண்ணாவின் கவர்ச்சியை தனதாக்கிக் கொண்ட சாதுரியம் எம்ஜிஆரிடம் இருந்தது. எகா கொடி, அண்ணாயிசம்

2. சினிமா கவர்ச்சியை தமிழக அரசியலில் வேரூன்ற வைத்தது அண்ணாதுரை தானே?

திரைப்பட நடிகர்களை அழைத்து வருவது அண்ணா ஆரம்பித்து வைத்தது அல்ல. அது காங்கிரசின் சத்யமூர்த்தி போட்ட விதை. சினிமா ஆட்கள் மீது கவர்ச்சி இன்னமும் அதிகம். எனினும் சில கேள்விகள். தமிழர்களின் தேர்தல் முடிவுகளை சினிமா கவர்ச்சி முடிவு செய்கிறது என்றால் கடந்த 30 வருடங்களில் ஏன் சினிமா நடிகர்கள் தேர்தல் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. ஜெ தன் சினிமா நடிகை அடையாளம் துறந்தே சாதித்தார். தமிழர்கள் கைலாசபதியின் வரிகளில் கொண்டாட்ட மனப்பான்மை கொண்டவர்கள். உடனே ரஜினி வாய்ஸ் என்று சொல்லாதீர்கள். சிரித்துவிடுவேன்.

3. ஜெயகாந்தனின் இரங்கள் உரையில் அவர் மிக முக்கியமான விமர்சனங்களை முன் வைத்தார். எல்லோரும் அதில் இருந்த சில வரிகளுக்காக அவ்வுரையை வெறுத்தனர். ஆனால் அவர் வினர்சனங்களுக்கு பதிலில்லை.

ஜெயகாந்தனிடம் ஒரு பெரும் திராவிட இயக்க வெறுப்பு இருந்தது. அவர் பிராமணியத்தின் அடக்குமுறையை உணர்ந்து பேசியதாக எனக்குத் தோன்றவில்லை. அவர் காமராசரின் அணுக்கச்சீடர். நானூறு தமிழக இளைஞர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த (உத்தரவே காமராசர் ஆசீர்வாதத்தில் தரப்பட்டது என்பார்கள்) காமராசரை குறித்து விமர்சித்தாரா? இந்திராவின் அவசரநிலையை தூக்கிப்பிடித்தவர் அவர். ஆக அவர் ஒரு தாராளவாதி என நான் கருதவில்லை. Yale பல்கலை கவுரவப்பட்டம் தந்த அண்ணா, பல ஆழமான சிந்தனைகள் கொண்ட அண்ணா (அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளைப் படியுங்கள்) மூடர் என்கிற தொனியில் பேசுவது வெறுப்பு மிகுந்த ஒன்று என்றே எண்ணுகிறேன். காமராசருக்கு கிடைத்த துதிபாடிகள் மு.க.வின் ஆட்சியால் அண்ணாவுக்கு இல்லாமல் போனார்கள்.

4. கண்ணதாசனின் ‘வனவாசம்’ புத்தகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல விமர்சனங்களை வைத்ததே. அவற்றுக்கும் பதில் இல்லையே (பொதுவில் சொல்கிறேன்)

கண்ணதாசனின் பேச்சு பல சமயங்களில் நேற்று பேசியது இன்றைக்கு செல்லாது தொனியிலானது. கண்ணதாசனின் சொந்த அனுபவங்கள் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் விமர்சனத்துக்கு ஒப்பாகாது. அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற தட்டையான புரிதலோடு எழுதிய அவரின் இந்த விமர்சனங்கள் சொந்த அனுபவம் என்றே சொல்வேன்.

5. இன்று நாம் காணும் கலாசார தற்பெருமை பண்பு அவரின் கைங்கர்யம் தானே?

கலாசார பெருமை அடையாளங்கள் தாண்டி ஒரு சமூகத்தை இணைக்கிறது. இந்திஸ்தானாக தமிழகம் ஆகாமல் தடுத்தது நீங்கள் வெறுக்கும் தமிழ்ப்பற்று தான். அதன் அரசியலை, நியாயத்தை அறிய Passions of the Tongue உதவும். பொங்கலை வெகுமக்கள் விழாவாக மாற்றியது திராவிட இயக்கம். குறளை, சங்க இலக்கியத்தை மக்களிடையே கொண்டு சேர்த்தது அண்ணா. கலாச்சார பெருமை அண்ணாவுக்கும் முன்னும் சாதி, மதம், மொழி என்கிற பெயரில் இருந்தது. பெனடிக்ட் ஆன்டர்சன் சொல்வதைப்போன்ற Imagined communities ஆக மேடைப்பேச்சு படிப்பகங்கள் நாடகங்கள் மூலம் அண்ணா இல்லாத திராவிட அடையாளத்தை ஒருங்கிணைத்து சாதித்தார்.

6. ‘ஆரிய மாயை’ கோல்வால்கர் வகை வெறுப்பு அரசியல் தானே?

ஆரியர் உசத்தி என அன்னிபெசண்ட் கிளம்பியதற்கு எதிர்வினை தானே திராவிட இயக்கம்? ஒரு புரட்டை இன்னொரு புரட்டு எதிர்கொண்டது. அண்ணா உண்மையில் பிராமண வெறுப்பை மட்டுப்படுத்தினார். நாத்திகவாதம் நீக்கி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். பிராமணர் எதிரியல்ல பிராமணியம் எதிரி என்றார் (அவர் காலத்தில் அது பெருமளவு உண்மையே) யோகேந்திர யாதவ் கவனப்படுத்துவதை போல காங்கிரஸ் இந்தி பகுதியில் பிராமணர்கள் ஆதிக்கத்தில் நேருவின் ஆட்சிக்காலத்திலும் கட்டுண்டிருந்தது. அண்ணா பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் தேங்காயும் உடைக்க மாட்டேன் என்றார். ரஜினி கோத்தாரி குறிப்பிடுவதைப்போல வெகுமக்கள் தேர்தல் அரசியலில் வெறுப்பானது சனநாயகமயமாகி ஆக்கப்பூர்வமானவற்றை சாதிக்கிறது. அண்ணா அவ்வாறு பிரிவினை பேசியவர்களை மையநீரோட்டத்தில் இணைத்தார். அண்ணாவுக்கு அம்பேத்கருக்கு ஏற்பட்டது போல ஒரு நல்ல வரலாற்றாளர் கிட்டவில்லை. அதுவரை அண்ணா யாருமற்று தனியாக நிற்பார். மு.க. குடும்பம் அரசியலை விட்டு விலகினால் மட்டும் தான் அண்ணா குறித்த புரிதல் மேம்படுமோ என்னவோ? அண்ணாவுக்கு பிந்தையவர்களின் பாவம் அண்ணாவைச் சேர்கிறது.