‘Everything everywhere all at once’ – திரைப்படம் குறித்துப் பிப்ரவரி மாதம் தான் தெரியவந்தது. நண்பர் ஒருவர் instagram -ல் அப்படத்தில் இருந்து காட்சி ஒன்றை பதிந்திருந்தார். அதன் சாகசம், கற்பனைத்தெறிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக, இசையோடு கூடிய அபத்தமான நிகழ்வுகள் கட்டிப்போட்டன. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பெருமளவில் இப்படம் கவனம் ஈர்த்திருக்கிறது என்று தெரிந்ததும், கடந்த வாரம் திரைப்படத்தைக் கண்டு பேறு பெற்றோம்.
Mild Spoilers ahead
மார்வெல் காமிக்ஸ் அடிப்படையிலான படங்களின் ரசிகர்களுக்கு Multiverse என்பது புதிதில்லை. ஆனால், சூப்பர் ஹீரோக்கள் இல்லாமல் எளிய மனிதர்கள் பல்வேறு பிரபஞ்சங்களுக்கு இடையே எண்ணியபடி தாவி குதிக்க ஆரம்பித்தால் என்னாகும்? அது தான் இப்படத்தின் மைய இழை.
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ஈவ்லின் (மிச்செல் யோஹ்), அவரின் கணவர், மகள் ஆகியோர் சலவை செய்யும் கடையொன்றை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள். வாழ்க்கை ஒரே மாதிரி எல்லா நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நம் அன்றாட உலகை இக்குடும்பத்தினர் பிரதிபலிக்கிறார்கள். என்ன செய்கிறோம், எதற்காக ஓடுகிறோம் என்கிற வினா வாழ்க்கையை அரித்துக் கொல்கிறது. ஏற்பிற்கும், அன்பிற்கும், கனிவிற்குமான நேரமே இல்லாதது கண்முன் விரிகிறது. வருவாய் துறை அதிகாரியிடம் கணக்கு, வழக்குகளைக் காட்டுவதற்காகக் கணவனும், மனைவியும் லிஃப்ட்டில் ஏறுகிறார்கள். அங்கே தான் வாழ்க்கை திசை மாறுகிறது.
வேறொரு பிரபஞ்சத்தின் மக்கள் ஈவ்லினின் உதவியை நாடுகிறார்கள்? எதற்காக? ஈவ்லினிற்கு என்னவென்று புரிவதற்குள் பெரும் களேபரங்கள் வரி அலுவலகத்தில் நிகழ்கிறது. வேற்றுலகில் ஈவ்லினின் வாழ்க்கைகள் கண்முன் தோன்றுகின்றன. ஒரே கணத்தில் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு வாழ்க்கைகளுக்கு எகிறி குதிக்க முடிகிறது. இதனால், நிகழ்காலத்தை மாற்ற முடிகிறதா?
நம் காலத்தின் நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கை குறித்த அபத்த நகைச்சுவையாக இப்படத்தை ஒரு தளத்தில் அணுகலாம். உடைந்து போயிருக்கும் சக மனிதர்களின் கதைகளை நிதானித்துப் பார்க்க வைக்கும் மென்மையான விவரிப்பாகவும் புலப்படலாம். நிராகரிப்பும், வஞ்சனையும், துரோகமும் நிறைக்கின்றன. மிக நெருங்கிய உறவின் வெம்மை, மனப்போராட்டங்கள், அங்கீகரிப்புக்கான ஏக்கங்கள் எதுவும் புரியாத நம் வாழ்க்கை ஏன் இப்படியாகிப் போனது?
‘என்னை விட்டுவிடுங்கள். எங்கேயோ போகிறேன்’ எனப் பரிதவித்து, பிரிந்து போகத் துடிக்கும் உறவோடு எப்படி அன்பு பாராட்டுவது? முடிந்து போகும் வாழ்வில் நிலையாமை மட்டுமே உண்மை என்பது புரிந்தும், எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது? தகிப்பையும், புறக்கணிப்பையும், வெறுப்பையும் உமிழும் உலகினில் விரும்பியதை செய்ய நம்மால் முடியுமா?
இத்தனை கேள்விகளுக்கான தேடல்களையும், அறிவியல் புனைவு ஒன்றில் தத்துவ விசாரணைகள், தாய்-தந்தை-மகள் இடையேயான பாசப்போராட்டம் ஆகியவற்றோடு பிணைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பும், இசையும் மறக்க முடியாத அனுபவத்தைப் பரிசளிக்கின்றன. பல்வேறு ஹாலிவுட் படங்களை மென்மையாகக் கேலி செய்யும் காட்சிகளும் இப்படத்தில் உண்டு.
சண்டைக்காட்சிகளில் விலா நோக சிரிப்போம். பல்வேறு பிரபஞ்சங்களுக்குள் பாத்திரங்கள் பயணிப்பதால் சில நொடிகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பார்வைகள், போராட்டங்கள், அனுபவங்கள் திரையில் விரிகின்றன. அதனால் ஒரு கணத்தைத் தவறவிட்டாலும் கதையின் போக்கு குழப்பி விடும். கருந்துளையாக நம்மை உள் இழுக்கும் வாழ்க்கையைப் பேரன்போடு குறுக்கு விசாரணை செய்யும் இப்படத்தின் பெரும் பலம் அதன் நடிகர்கள்.
ஜாக்கி சான் நடிக்க வேண்டியதாக இருந்த நாயகியின் கணவர் வேடத்தில் நடித்திருக்கும் கி ஹுய் குவான் நெகிழ வைக்கிறார். வரி அதிகாரியின் கடுமையும், ஏளனமும், எச்சரிப்பும் கலங்கடிக்கின்றன. Multiverse கதைகளின் சில புள்ளிகள் பூடகமாக இருக்கும். சமயங்களில் எளிய பார்வையாளர்களைக் குழப்பியடிக்கும். இத்திரைப்படம் தன்னுடைய நேர்த்தியான திரைக்கதை, மையமான ஒரு கதையைச் சுற்றிய துணைக்கதைகளால் அருமையாகப் புரியும் வண்ணம் வெளிவந்திருக்கிறது. இப்படம் ஒவ்வொரு மனிதரைப்பற்றிய ஒரே கதைகளைப் புறக்கணித்து, அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் பற்பல கதைகளின் மீது கவனம் குவித்திருக்கிறது. அரவணைத்துக் கொள்ளவும், முன்முடிவின்றி வாழ்வினை அணுகவும், பேரன்பை பரிமாறவும், இறுதியில் எதுவும் முக்கியமில்லை என்பதையும் வண்ணமயமாகச் சொல்லிச்செல்கிறது. மறக்காமல் திரையரங்குகளில் பாருங்கள்.
“பல கோடி விளிம்புநிலை மக்களின் கனவுகளின் அடையாளமாக என்னுடைய ஹார்வர்ட் டிகிரி திகழ்கிறது.”- அனுராக் பாஸ்கர்
அனுராக் பாஸ்கர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து தன்னுடைய LL.M. பட்டத்தை 2019-ல் பெற்றிருக்கிறார். அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக வேலை பார்த்த அனுபவம், ஹார்வர்ட் நோக்கிய பயணம், ஹார்வர்ட் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை, அவரின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்.
அனுராக் பாஸ்கர் தன்னுடைய LL.M. பட்டத்தை ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிடம் இருந்து பெற்றிருக்கிறார். இவர் லக்னோவில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( RMLNLU) B.A. LL.B பட்டங்களை 2012-17 காலத்தில் பெற்றார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக ஜூலை 2017-18 காலத்தில் பணியாற்றினார். அனுராக் கூர்மையான அறிவுத்திறமிக்கப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. செய்தித்தாள்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தோவியங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளார். அவருடைய கட்டுரைகள் The Wire, LiveLaw, The Print, EPW முதலிய பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இனி அவரின் பயணம் குறித்து உரையாடுவோம்.
கேள்வி: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து LL.M. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்?
அனுராக் : திக்குமுக்காடிப் போயிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய பட்டமளிப்பு விழா மே 30, 2019 ல் நடைபெற்றது. நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதை நம்பவே ஒரு வாரம் ஆனது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை, நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. அமெரிக்காவை எட்டிப் பார்க்க வேண்டும் என்று கூட எனக்குப் பட்டதில்லை. எண்பதுகளில் எங்கள் வீட்டிற்குச் சவால்மிக்கக் காலம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து வேலை தேடி லக்னோவிற்கு என் அப்பா அடிக்கடி நாற்பது கிலோமீட்டர்கள் கால் வலிக்க, வலிக்கச் சைக்கிள் மிதிப்பார். என் அப்பாவை பொறுத்தவரை லக்னோ சென்று வருவது என்பது வெளிநாட்டிற்குப் போய்வருவதாகும். நான் லக்னோவில் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போது, வேலையின் பொருட்டு டெல்லிக்கு இடம்பெயர வேண்டும் என்பது எனக்கு வெளிநாட்டிற்குப் போகிற ஒன்றாகவே தோன்றியது. அந்தச் சைக்கிள் பயணத்தில் இருந்து ஹார்வர்ட் வரையிலான இப்பயணத்தை வந்தடைய என் குடும்பம் நெடுந்தூரம் நடந்திருக்கிறது. தற்போது நான் கலவையான உணர்வுகளில் ஆட்பட்டுள்ளேன்.
கேள்வி: நீங்கள் ஏன் சட்டம் பயில முடிவு செய்தீர்கள்? உங்கள் குடும்பத்தில் யாரேனும் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்களா?
அனுராக்: இல்லை ! நான் முதல் தலைமுறை வழக்கறிஞர்.
நான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க ஒரு வரலாற்று ஆளுமையே முதன்மையான காரணம். அவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பள்ளிக்காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் படைத்தளித்த தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் என்கிற மனப்பிம்பம் என்னைப் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. அவரின் வாழ்வானது சட்டம் பயின்று அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்திற்கான கருவியாக மாறவேண்டும் என்கிற கனவினை விதைத்தது. ஆனால், சட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நான் பொறியியல் பயில வேண்டும் என்று விரும்பினார்கள். அடிக்கடி, நடுத்தர வர்க்க/அடித்தட்டு நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதாரத்திலோ, சமூகத்திலோ பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபர்களின் முதல் போராட்டம் தங்களுடைய குடும்பங்களிலேயே துவங்குகிறது. நாம் விரும்பிய பாடத்தைப் படிக்கப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. என்னுடைய பெற்றோர் நான் விரும்பிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
கேள்வி: ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (RMLNLU) உங்களுடைய எத்தகைய அனுபவம் கிட்டியது?
அனுராக்: செறிவான அனுபவம்! சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள், வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள இப்பல்கலைக்கழகம் உதவியது. மேலும், எனக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொணரவும் RMLNLU பெருமளவில் கைகொடுத்தது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்புக் கொண்ட பல்கலைக்கழகங்களில் என் கல்விக்கூடமும் ஒன்று. அங்கே உள்ள நூலகத்தில் குவிந்துள்ள நூல்கள் அறிவின் ஊற்று. எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் மகத்தானவர்கள். எனினும், RMLNLU கல்வி நிறுவனமாக இன்னமும் தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்குக் கிட்டிய சில நல்ல நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்து வருகிறார்கள்.
கேள்வி: RMLNLU-ல் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வேறென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?
அனுராக்: பொதுவாகச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது, விவாதம் புரிவது ஆகியவற்றில் மின்னுவார்கள். நான் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வந்தமையால், எனக்குச் சரளமான ஆங்கிலம் கைவரவில்லை. இதனால், பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்கவோ, பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய அவசியமிருக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ எனக்குத் தயக்கமாக இருக்கும். இதைக்கண்டு திகைத்து போய் நிற்காமல், என்னுடைய பிற திறன்களைப் பட்டை தீட்டிக்கொண்டேன்.
RMLNLU-வில் படித்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தினேன். இது எனக்குள் தலைமைப்பண்பை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. களத்தில் அரும்பெரும் சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், அரசுப்பதவி வகிப்பவர்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. பின்தங்கிய குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகப் பாடுபடும் டாக்டர். சந்தீப் பாண்டே (ராமன் மகசேசே விருதினை 2002-ல் பெற்றவர்), உத்திர பிரதேச குழந்தை உரிமைப்பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் தலைவர் திருமதி. ஜூஹி சிங் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியதை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். மனித உரிமைகள் வழக்கறிஞரான ஆதித்யா ஸ்ரீவத்ஸவா வழிகாட்டுதலில் களத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய உதவியோடு புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயத் தற்கொலைகளைக் கவனப்படுத்தவும், அதற்குப் பின்னுள்ள காரணங்களை ஆவணப்படுத்தவும் முடிந்ததைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். என்னுடைய பல்கலையின் இணைப் பேராசிரியரான முனைவர். KA பாண்டேவுடன் இணைந்து இந்தியாவின் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைச் சமூகத் தணிக்கை புரியும் செயல்பாட்டை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்து முடித்தோம். மேற்சொன்ன அமைப்பு ரீதியான திறன்களைத் தாண்டி, ஆய்வுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன். என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் பெருமைமிக்க Economic & Political Weekly இதழில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் வெளிவந்தன.
கேள்வி: நீங்கள் RMLNLU-வில் சட்டம் பயின்ற போது ஏழு வெவ்வேறு நீதிபதிகளுடன் பணியாற்றினீர்கள். எது இத்தனை நீதிபதிகளிடம் பயிற்சி பெற உங்களைத் தூண்டியது?
அனுராக்: என்னுடைய மூன்றாவது செமஸ்டரின் போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) இம்தியாஸ் முர்டாசாவிடம் பயிற்சி பெற்றேன். அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் நீதிபதிகள் பணியாற்றும் முறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எப்போது, எவ்வளவு முடியுமோ அப்போதெல்லாம் பல்வேறு நீதிபதிகளிடம் பயிற்சி பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர்களுடைய ஆக்கங்களுக்கு என்னாலான பங்களிப்பினை புரிந்தேன்.’Philadelphia’ திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், “ அடிக்கடி அது அமைவதில்லை. எங்காவது, எப்போதாவது அரிதாகத்தான் நீதி வழங்குவதில் நீ பங்கேற்க இயலும். அது நிகழும் போது ஏற்படும் பரவசம் அதியற்புதமானது.” அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நான் வெவ்வேறு துறை வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளின் கீழ் பணியாற்ற விண்ணப்பித்தேன். இதன்மூலம் பலதரப்பட்ட வழக்குகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, நான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி DY சந்திரசூட் வழிகாட்டுதலில் பணியாற்றியதும், லக்னோ உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தேவேந்திர உபத்யாயா, ராஜன் ராய், AR மஸூதி ஆகியோரிடம் பணியாற்றியதும் சுவாரசியம் கூட்டுபவையாக இருந்தன.
கேள்வி: இதே காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சட்ட உதவியாளராக பணிபுரிந்தீர்களா?
அனுராக்: நவம்பர் 2013-ல் எங்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அலகாபாத் தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பங்கேற்றார். அவர் பேசியதை கேட்டது முதல் அவர் ஊக்கமூட்டும் ஆளுமையாக எனக்கு ஆனார். அவரிடம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பித்தேன். அவரிடம் நேரடியாகக் கற்றுத்தேறும் வாய்ப்பில்லாமல் போயிருந்தால் வேறேதேனும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்.
கேள்வி : நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது ?
அனுராக்: அது அசாதாரணமான ஒன்றாக இருந்தது என்று எண்ணுகிறேன். சட்ட உதவியாளர்களில் நான் பெரும் நல்வாய்ப்பு பெற்றவன் என்றே உணர்கிறேன். அவர் செவிமடுத்த பல்வேறு புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் ஜூலை 2017-18 காலத்தில் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. நீதிபதி சந்திரசூடின் அனுபவங்களை அவர் அடிக்கடி தன்னுடைய சட்ட உதவியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனைப் பதிவு செய்வதற்காக நீதிபதி சந்திரசூட் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணுகிறேன்.
நீதிபதி சந்திரசூட் ஒருமுறை தன்னுடைய தந்தையும், காலஞ்சென்ற நீதிபதியுமான YV சந்திரசூட் குறித்த தன்னுடைய நினைவலைகளில் மூழ்கினார். அவருடைய தந்தை அப்போது இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் பம்பாயில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வார். (அனேகமாகக் காலா கோடா கஃபே/வேஸைட் இன்). அங்கே நண்பகல் வேளையில் ஒரு மனிதர் எப்போதும் அமர்ந்திருப்பதைக் காண்பார். அம்மனிதர் தனக்குள் தோன்றும் கருத்துகளைச் சளைக்காமல் எழுதிக்கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார். அந்த மாமனிதர் டாக்டர். அம்பேத்கர். நீதிபதி YV சந்திரசூட் தான் டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்கில் அவருக்கு எதிர்தரப்பில் நின்று வாதாடிய நினைவுகளை ஆசையோடு அசைபோடுவாராம்.
கேள்வி: கடந்த செப்டம்பர் 2018-ல் விஞ்ஞான் பவனில் உரையாற்றும் போது நீதிபதி சந்திரசூட் உங்களைக்குறித்துக் குறிப்பிட்டார். அவர் உங்களுடைய சமூகப் பின்னணி குறித்தும் பேசினார். உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், அதைக்குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
அனுராக்: “ஆம். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பல்வேறு அடையாளங்களில் அதுவும் ஒன்று. எனினும், என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான தேர்வுகளைத் தலித் அடையாளமே செதுக்கியிருக்கிறது. ஹார்வர்டில் பட்டம் பெற்றது என்பது என்னைப்பற்றிய ஒன்று என்பதையும் தாண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எனக்குத் தனிப்பட்ட அளவிலும், வழக்கறிஞராகவும் கிட்டிய அனுபவங்கள் முக்கியமானவை என்பதோடு என்னுடைய ஹார்வர்ட் நோக்கிய இந்தப் பயணமானது இன்னமும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழவேண்டிய நிலைக்கு இன்றுவரை தள்ளப்பட்டிருக்கிற பல கோடி மக்களின் கனவுகளின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த ஹார்வர்டில் பெற்ற LL.M. பட்டமானது, மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் முன்பே தற்கொலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர். பாயல் தட்விக்குச் சமர்ப்பணம். இந்தப் பட்டமானது ரோஹித் வெமுலாவிற்கான என்னுடைய அஞ்சலி. அவருடைய இறுதிக்கடிதம் அறவுணர்வுமிக்கதாகத் திகழவேண்டிய தேசத்தினுடைய மனசாட்சியை நோக்கி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் முன்முடிவுகளை அறவே அழிக்க வேண்டியதை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். குதிரையில் ஏறி சவாரி செய்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்ட, இது போன்ற எண்ணற்ற அநீதிகளை அன்றாடம் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எம்மக்களுக்கான பட்டம் இது. பஞ்சம் தாக்கிய பகுதிகளில் நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளுக்காக இப்பட்டம். இது ஒடிசாவில் ஃபனி புயலில் பாதிக்கப்பட்டும், புயற்காலப் பாதுகாப்பு உறைவிடங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டும், நிவாரண உதவிகள் தரப்படாமலும் அல்லல்படுத்தப்படும் தலித்துகளுக்கான பட்டம். நான் ஹார்வர்டில் பட்டம் பெற்றது எண்ணற்றோரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். என்டிடிவியில் தோன்றிய பதினான்கு வயது சிறுமி சுனைனா உள்ளிட்ட பெருங்கனவுகள் கொண்ட அனைவருக்கும் எட்டாததாகத் தோன்றும் எல்லைகளையும் தொட்டுவிட இது உத்வேகம் தரும் என்று நம்புகிறேன்.”
கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் LL.M. பட்டம் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.
. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ஒருவர் : தற்குறிப்பு (CV/Résumé); தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை ( Personal statement question); மதிப்பெண் பட்டியல்கள், குறைந்தபட்சம் இரண்டு பேரின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை A, B என்று இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில், விண்ணப்பிப்பவர் தனக்குப் பிடித்த துறையில் காணப்படும் முக்கியமான பிரச்சனை ஒன்றையோ, ஒரு நாடு/பகுதி/உலகம் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல் ஒன்று குறித்து விவரிக்க வேண்டும். பின்னர் இது சார்ந்து தத்துவார்த்த வரைவு ஒன்றையோ, அச்சிக்கலை எதிர்கொள்ளும் அணுகுமுறையையோ பரிந்துரைக்க வேண்டும். இந்தச் சட்டக்கட்டுரையானது முழுக்க முழுக்க விவரணையாக அமையாமல் பகுத்தாய்வது, ஒழுங்குமுறைகளை (normative) அணுகுவதில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையானது நீங்கள் எடுத்துக்கொண்ட சட்டச்சிக்கல் குறித்து அசலான, ஆழமான புரிதலை வெளிக்கொணர வேண்டும். தேவையான மேற்கோள்கள், தேவையென்றால் விளக்கத்தோடு கூடிய அடிக்குறிப்புகள் இடம்பெறலாம். பகுதி B ஆனது ‘தன்னைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கை’ பிற LL.M பட்டங்களில் அமைவதை ஒத்திருக்கும். இதில் விண்ணப்பிப்பவர் ஏன் ஹார்வர்டில் LL.M பட்டம் பெற விரும்புகிறார் என்பதையும், இப்பட்டம் பெறுவது அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்களை எப்படி இணைக்கிறது என்றும் பேச வேண்டும். மேலும், மனதைக்கவரும் தனிப்பட்ட கதையொன்றையும் இப்பகுதியில் எழுத வேண்டும். ஹார்வர்ட் சட்டக்கல்லூரிக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறரும், நானும் சட்டத்தின் குறிப்பிட்ட கூறுகளோடும், எங்களுடைய பணி அனுபவங்களையும் இணைத்து இப்பகுதியை எழுதியிருந்தோம். விண்ணப்பிப்பவர் அடிப்படையில் கீழ்கண்டவற்றை விளக்கி எழுத வேண்டும்: (1) ஏன் LL.M பட்டம் பயில விரும்புகிறார், (2) என்னென்ன பாடங்களைப் பயில விருப்பம், ஏன்?, (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும்?. விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலதரப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள்? ( (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.)
கேள்வி : ஹார்வர்டில் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும், உங்களுடைய பார்வையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஹார்வர்ட் சட்டக் கல்லூரி இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் உதவித்தொகைகளை வழங்கி உதவுகிறதா?
அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரி ஹார்வர்டில் படிக்கப் போதுமான வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது. எனக்கு $52000 டாலர் நிதியுதவி கிட்டியது (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 36 லட்சம்). இதைக்கொண்டு கல்விக்கட்டணத்தில் 80% செலுத்த முடிந்தது மீதமிருந்த கட்டணத்தை வங்கிக்கடனை கொண்டு செலுத்தினேன் ஹார்வர்ட் வழங்கும் நிதியுதவி போக இன்லாக்ஸ் உதவித்தொகை, ஃபுல்ப்ரைட் உதவித்தொகை ஆகியவை உள்ளன. மேலும், வட்டியில்லா கடனாக உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளும் உண்டு (டாடா அறக்கட்டளை போன்றவை).
கேள்வி: ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்
அனுராக்: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனக்குள் கனன்று கொண்டிருந்த கனவு. நம்முடைய கனவுலகில் நிஜமாகவே சஞ்சரிப்பது என்பது உலகத்தின் அற்புதமான உணர்ச்சிகளில் ஒன்று.
ஹார்வர்ட் பல்வேறு அரிய வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் கொட்டிக்கிடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் LL.M. பட்டப்படிப்பிற்கான ஒன்பதரை மாதத்தில் பயன்படுத்துவதும், அறிவுக்கடலில் முத்துக் குளிப்பதும் மலைப்பூட்டுகிற ஒன்று. என்னுடைய சகா ஒருவர் குறிப்பிட்டதைபோன்று “ஹார்வர்ட்டின் ஒட்டுமொத்த எல்லையைத் தொட்டுணரவும், அதன் அனுபவங்களை முழுமையாக அள்ளிக்கொள்ளவும் ஆக்டோபஸாகத் தான் இருக்க வேண்டும்”. மகத்தான சில பேராசிரியர்களிடம் படிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம். வகுப்புகளைத் தாண்டி என்னுடன் உடன் பயின்ற மாணவர்கள் பலதரப்பட்ட கலாசாரங்கள், சமூகப் பின்புலங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடன் 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றார்கள். இவர்கள் சட்டக்கல்வி, சட்டத்துறை ஆய்வு, அரசாங்க பணி, நீதித்துறை, சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தனியார் துறையினர் என்று பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்.
எடுத்துக்காட்டாக நான் அஷுடோஷ் சலீல் (மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முனைப்பான அரசு அதிகாரி), ஷீலா செய்ல் (ஐம்பது வயதாகும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அதிகாரி) உள்ளிட்ட ஊக்கமூட்டும் ஆளுமைகளுடன் இணைந்து வகுப்புகளில் பங்கெடுப்பேன், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பரிமாறிக்கொள்வேன் என்றோ எப்போதும் எண்ணியதில்லை. மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளிலும் (கென்னடி கல்லூரி போன்றவை), பிளெட்சர் கல்லூரியிலும் இணைந்து பயிலும் வாய்ப்பும் உண்டு. இதனால் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பாடங்களைப் பயிலும் மாணவர்களோடு தொடர்புகொள்ள இயலும். அமெரிக்கா வந்ததால் நான் வெகுவாக மதிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும் பேராசிரியர் மைக்கேல் சாண்டெல் (நம் காலத்தின் கற்றறிந்த தத்துவ அறிஞர்), டாக்டர் ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர்) ஆகியோரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.
கேள்வி : நீங்கள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்றுத்தேர்ந்தீர்கள்?
அனுராக் : 2018 செப்டம்பர்-டிசம்பர் காலத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் நடத்திய ‘சட்டத் தொழில்’ பாடம், ஜென்னி ஸுக் ஜெர்சனின், ‘அரசியலமைப்புச் சட்டம்: அதிகாரப் பகுப்பு, கூட்டாட்சி மற்றும் பதினான்காவது சட்டதிருத்தம்’, பேராசிரியர் லூஸி வைட்டின், ‘வறுமை, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி’, பேராசிரியர் ஸ்டீபனி ராபின்சனின் , ‘நிறப்பாகுபாட்டில் இருந்து நிறக்குருட்டுத் தன்மை, அதிலிருந்து நிறத்தை மறுவரையறை செய்வது : மாறிக்கொண்டே இருக்கும் இனம் குறித்த கருதுகோள்களோடு அமெரிக்காவின் போராட்டங்கள்’ முதலிய பாடங்களைப் பயின்றேன். :. 2019-ன் பிப்ரவரி – ஏப்ரல் காலத்தில் மைக்கேல் க்ளார்மேனின் ‘அரசியலமைப்பு சட்ட வரலாறு II: அமெரிக்காவின் புனரமைப்புக் காலத்தில் இருந்து சிவில் உரிமைகள் இயக்கம் வரை’ , பேரசிரியர் லாரன்ஸ் லெஸ்ஸிக்கின், ‘அரசியலமைப்பு சட்டங்களின் ஒப்பீடு’, பேராசிரியர் டயானா ரோசென்ஃபீல்டின் ’பாலின வன்முறை, சட்டம் மற்றும் சமூக நீதி’ ஆகிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்தேன். மேலும், தத்துவம் சார்ந்து பேராசிரியர்கள் ராபர்டோ உங்கெர், மைக்கேல் பொயட் ஆகியோர் நடத்திய, ‘மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவங்களில் வாழ்வியல் ஒழுக்கங்கள்’ எனும் பாடத்தையும் கற்றறிந்தேன்.
கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் உங்களால் மறக்க முடியாத நினைவு என்று ஏதேனும் உண்டா?
அனுராக் : ஒட்டுமொத்த ஹார்வர்ட் அனுபவமே மறக்க முடியாத ஒன்று தான். எனினும், சில தருணங்கள் இன்னமும் உரமேற்றுவதாக, ஊக்கப்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக மூன்று தருணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது அனுபவம் இது:
2018-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட வகுப்பின் இறுதி வகுப்பு பேராசிரியர் ஜென்னி ஸுக்ஜெர்சன் தன்னுடைய வலிமையான உரையோடு வகுப்பை முடித்துவைத்தார். அவர் நம் சமகாலத்தின் அரசியலமைப்பு சட்ட நெருக்கடிகள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய பாத்திரத்தை குறித்தும் விரிவாக உரையாற்றினார் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் பேசிக்கொண்டே இருக்கையில் உணர்ச்சிவசப்பட்டவராகத் தென்பட்டார். அவர் தன்னுடைய வகுப்பை, “நமக்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான தடுப்புச்சுவராக அரசியலமைப்பு சட்டமே உள்ளது” என்று சொல்லியவாறு நிறைவுசெய்த போது கிட்டத்தட்ட அழுதுவிட்டார். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க பற்றுறுதியும், பிணைப்பும் கொண்ட அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், இப்பெரும்பணிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிற உணர்வும் மெய்சிலிர்க்க வைத்தது.
இரண்டாவது, பட்டமேற்பு விழாவிற்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் பேராசிரியர் மைக்கேல் க்ளார்மேனின் ‘இறுதி சொற்பொழிவு’. இது ஏப்ரல் 2019-ல் நிகழ்ந்தது. அந்த உரையில் பேராசிரியர் க்ளார்மேன் தற்போதைய தலைமுறை அரசியல், சமூக நிலப்பரப்பில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த காலத்தில் சிவில் உரிமைகளுக்காக அயராது போராடிய வழக்கறிஞர்களின் வாழ்க்கை நம்பிக்கையையும், மீண்டெழும் வலிமையையும் நமக்கு வழங்குவதைக் கவனப்படுத்தினார். சிவில் உரிமைகள் சார்ந்த பேராசிரியரின் ஆய்வுகள் பிரமிக்க வைப்பவை.
மனதுக்கு நெருக்கமான மூன்றாவது நினைவு என்பது அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பு. 1990களில் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் இருந்து ஒபாமா பட்டம் பெற்றார் என்பதால், அவரோடு நெருங்கிப் பழகிய பேராசிரியர்களிடம் இருந்து அவர் குறித்த கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பேராசிரியர் வில்கின்ஸ் ஒபாமா குறித்துச் சொல்லும் போது, தன்னுடைய சட்டப்படிப்பிற்குப் பின்பு சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கிற சிந்தனைத் தெளிவு ஒபாமாவிற்கு அப்போதே இருந்தது என்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் டீனாக இருந்த பேராசிரியை மார்த்தா மினோவ் பராக் ஒபாமா வகுப்பில் அடிக்கடி பேசமாட்டார், ஆனால், அவர் பேச எழுந்தால் அதில் தொனிக்கும் உறுதி அனைவரையும் அவர் குரலுக்குச் செவிமடுக்க வைக்கும் என்று நினைவுகூர்ந்தார். இவை போக, எனக்குப் பிடித்த பேராசிரியர்களோடு மத்திய உணவிற்கு வெளியே போவது என் ஞாபக அடுக்கினால் நீங்காத நினைவாக ஆழப்பதிந்திருக்கிறது.
கேள்வி: உங்களுடைய ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த முதல் மாணவர் நீங்கள் தான். அனேகமாக, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்று L.L.M பட்டம் பெற்ற முதல் தலித் ஆளுமையும் தாங்களாக இருக்கக்கூடும். எப்படி உணர்கிறீர்கள்?
அனுராக் : இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல டோபி மக்வொயர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன் படத்தில் எனக்குப் பிடித்த வசனம் உதவும்.. அதில் பீட்டர் பார்க்கர், “வாழ்க்கை எனக்காக எதை என்ன வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், ‘பேராற்றலோடு பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது.’ என்கிற வார்த்தைளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்பான். என்னுடைய வெற்றி, சாதனைகளுக்கும் மேற்சொன்ன வசனம் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.
ஒவ்வொரு வெற்றியோடும், பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இந்தப் பொறுப்பானது கிட்டிய பாடங்களை மேம்பட்ட எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. எப்போது எல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மிடையே உள்ள விரிசல்கள், வேறுபாடுகளை (Fault-lines) பகுத்தாய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதும் பொறுப்பில் அடங்கும். இதே நேரத்தில், இத்தனை காலம் எனக்கு ஆதரவாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகிறது. குறிப்பாக எனக்கு எப்போதும் உற்ற வழிகாட்டியாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களாகவும் திகழ்ந்த முனைவர் பூனம் ஜெயந்த் சிங், முனைவர் பூஜா அவஸ்தி, திவ்யா திரிபாதி, அபூர்வா விஸ்வநாத், ஸ்ரீ அக்னிஹோத்ரி, சவிதா தேவி ஆகிய ஆறு பெண்களை நினைவுகூர்ந்து நன்றிகூற விரும்புகிறேன்.
கேள்வி: உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?
அனுராக் : அன்றாடம் பாதாள சக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்யும் போது இறந்துபோகும் நம்முடைய குடிமக்கள் குறித்த செய்திகளைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். பசியால் குடிமக்கள் இறப்பது குறித்து வாசிக்கிறோம். வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் இயைந்து இயங்க வேண்டிய இத்தகைய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நான் அறிவுத்துறை, சட்டப்போராட்டம், செயல்திட்டத்திற்கான கொள்கைகளைத் திட்டமிடல், அரசியல் ஆகியவற்றில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான்கு தளங்களிலும் தீவிரமாக இயங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருக்கிறேன். என் தொழில் சார்ந்த புத்தம் புதிய மைல்கற்களைக் கண்டடைவதன் மூலம், இத்துறைகளில் பரவலாகப் பங்களிக்க முனைய வேண்டும். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின். 2019-ம் ஆண்டின் வகுப்பறை நாள் விழாவில் மே 29 அன்று தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ரிச்சர்ட் லாசரஸ், “உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பெற்ற ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் பட்டத்தைக் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இந்தப் பட்டத்தைக் கொண்டு வாழ்வில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதிலேயே வாழ்வின் உண்மையான மதிப்பு பொதிந்திருக்கிறது.” என்றார். ஆகவே, இந்தியாவிற்குத் திரும்பி இயங்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.
உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்
அனுராக்: நன்றி
இக்கட்டுரை ‘நீலம்’ டிசம்பர் 2020 இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு மனம்நிறைந்த நன்றிகள்.
அண்ணல் அம்பேத்கர் குறித்த இந்த அண்ணன் யுகபாரதியின் இப்பாடலை எத்தனை முறை காலையில் இருந்து கேட்டிருப்பேன் என்று தெரியாது. திட்டமிட்டு விடுதலை இந்தியாவில் பாபாசாகேபின் பெயர் புறக்கணிக்கப்பட்டது என்று உறுதிபடச் சொல்லலாம்.
‘இனி இவருக்கு வெல்வதற்கு உலகங்கள் இல்லை.’ என்று பேராசிரியர் பாக்ஸ்வெல் தன்னுடைய செயலாளருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்த அதே வேளையில், படிப்பதற்குப் பணம் கிடைக்குமா என்று தெரியாமல் லண்டனிற்குள் அவர் இறங்கியிருந்தார் என்பது எத்தனை நகை முரண்.
மூன்றாவது முனைவர் பட்ட ஆய்வினை BONN பல்கலையில் செய்ய அவர் கடிதத்தை சரளமான ஜெர்மன் மொழியில் எழுதியிருந்ததைப் பார்த்த போது மனம் எங்கெங்கோ அலைந்தது. பள்ளியில் பிறப்பின் அடிப்படையில் சம்ஸ்கிருதம் மறுக்கப்பட்ட அந்தச் சிறுவனின் கனவுக்கடல் எல்லையற்றதாகப் பிரபஞ்சமாகப் பாய்ந்த வண்ணம் இருந்தது.
கல்வி, அதிகாரம், பொருள் சேர்ப்பது, ஆயுதம் ஏந்துவது என்று அனைத்தும் மறுக்கப்பட்ட சமூகங்களை தட்டியெழுப்ப தான் கற்றவற்றை எல்லாம் அவர் செலுத்தினார். சாதியின் ஆணிவேரான பிராமணியக் கருத்தியலுக்கு எதிராக அவர் போர் முரசம் கொட்டிய போது அவருக்கு வயது 25!
பம்பாய் நீதிமன்றத்தில் உடன் யாரும் உணவருந்த இல்லாமல் தனியே அவர் தவித்திருந்த காலங்களில் கூட எளியவர்களின் பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எளியவர்கள், இழப்பீடு இல்லாமல் நீக்கப்பட்ட தொழிலாளிகள், கருத்துரிமை நெரிக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள், ‘தேசவிரோதி’ என முத்திரை குத்திய காங்கிரஸ் இயக்கத்தினர் என்று அனைவருக்காகவும் போராடினார். பெரும்பணமும் , தனிப்பட்ட அதிகாரமும் தரும் உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பை நிஜாம் வழங்கியபோது ‘சுதந்திரமான அம்மனிதர்’ ஏற்க மறுத்தார்.
பல நூறு வழக்கறிஞர்களையும், பட்டதாரிகளையும் அவர் நிர்மாணித்த சித்தார்த், மிலிந்த் கல்லூரிகள் உருவாக்கின. ‘கற்பி’ என்பதன் பொருள் தான் கற்றுத் தேர்வதில் முடிவதில்லை. சமூகத்தைத் தட்டியெழுப்ப நம்மை ஒப்புக்கொடுப்பதே பெரும் கனவு என்கிற சமூக, அரசியல் ஜனநாயகத்துக்கான பெரும் வழியை அவர் போட்டுக் கொடுத்தார்.
அவர் கண்ட சமத்துவக் கனவு என்பது பொருளாதாரத் தளத்தையும் ஆட்டிப்பார்த்தது. பிரிவினை நெருங்கி கொண்டிருந்த காலத்தில் அவர் இயற்றியளித்த ‘அரசும், சிறுபான்மையினரும்’ எனும் மாதிரி அரசியலமைப்புச் சட்டம் ஒரு புரட்சிகர ஆவணம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம்,நிலம் என்று அனைத்திற்குமான உரிமை கடைக்கோடி மனிதருக்கும் உரியது எனும் புரட்சிகரச் சமத்துவக் கனவு அது. வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டாம்,மேற்சொன்ன உரிமைகள் யாவும் அடிப்படை உரிமைகளாகத் திகழ வேண்டும் எனும் பெரும் கனவு அவருக்கு இருந்தது. அந்த லட்சியத் தாகத்திற்கு அரசியலமைப்பு சட்ட உருவாக்க குழுவினர் ஈடுகொடுக்கவில்லை என்பது துயரமான ஒன்று.
சாதியை அழித்தொழிக்கவும், ‘அறநெறி, பகுத்தறிவை’ கொல்லும் மதக்கருத்தியலை தகர்க்கவும் அவர் அறிவு வெடிமருந்தினை நமக்கு நல்கினார். பெண்களின் சொத்துரிமை, தத்தெடுப்பு உரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். அவரின் கனவுச் சட்ட வரைவினில் பரம்பரை சொத்தில் சம உரிமை, தத்தெடுப்பதில் ஆண்களுக்கு இணையான இடம், விவகாரத்தில் முறையான ஜீவனாம்சம், கணவன் இறந்த பின்பு சொத்தில் உரிமை என்று பெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டு இருந்தது. ‘இந்து மதத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு’ என்று அலறினார்கள். குடியரசுத் தலைவர் முதல் காங்கிரஸ் கொறடா வரை தடுத்தார்கள். ‘இந்த மசோதாவிற்கு ஏன் நேரம் தரவேண்டும்’ என்று படேல் வினவினார்.
அண்ணல் நொந்து பதவி விலகினார். அவருக்குப் பதவி துய்ப்பதற்கான ஒன்றல்ல. அது சமூக-பொருளாதார-அரசு சமத்துவத்தைச் சாதிப்பதற்கான கருவிகளில் ஒன்று. அது சாத்தியமில்லை என்ற போது, பட்டியல் சாதியினரின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரசினை குற்றஞ்சாட்டினார். நேருவின் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமைகள் வழங்காமல், அவர்களுக்கான ஆணையத்தை அமைத்து இட ஒதுக்கீடு வழங்காமல் போனதையும் சாடினார்.
இந்து மதத்தில் தான் நிகழ்த்தவிருந்த ஆகச் சிறந்த சீர்திருத்தத்தைக் கொன்றதை குறித்து அரற்றினார். சமூகப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு சட்டங்கள் இயற்ற முடியாமல் போனது ‘சாணிக் குவியல்களின் மீது கோட்டைகளைக் கட்டுவது தான்’. சனாதன கோட்டைகளை தகர்க்கும், எல்லா மனிதருக்கும் எல்லா வகையிலும் சம மதிப்புக்கான தேடலுக்கான அறிவு, அற வெளிச்சத்தை, அடிமைத்தன்மை அற்ற விழிப்புணர்வை நல்கும் பாபாசாகேப் வாழ்வினை திரையில் பார்க்க காத்திருக்கிறேன்.
அவரின் வாழ்க்கை எத்தனை அறிவு பூர்வமாக அணுகினாலும் உணர்ச்சிவசப்பட வைப்பது. அவமானம், ஏளனம், வஞ்சகம் சூழ்ந்த வாழ்வினில் புரட்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்ட அந்நாயகனின் வாழ்வினை திரையினில் தொடராக பார்ப்பது பலரையும் அவர் வாழ்வினை நோக்கி இழுத்து வரும். அண்ணன் யுகபாரதியின் வரிகளில் பாபசாகேப் கண்முன் நிற்கிறார். தட்டியெழுப்புகிறார். குரலற்றவர்களின் தலைவரின் கிளர்ச்சியும், சுயமரியாதையும் மிக்க வாழ்வோடு பயணிப்போம், ‘உச்சத்திலே ஒரு சூரியன்
மருத்துவர் சுனிதி சாலமன் (14 அக்டோபர், 1939 – ஜூலை 28, 2015)
மருத்துவர் சுனிதி சாலமன் அவர்களை இந்தியாவில் முதன்முதலில் எய்ட்ஸ் நோய்த்தொற்றைக் கண்டறிந்த குழுவினை வழிநடத்தியவர் என்கிற ஒரு வரிச்செய்தியோடு கடந்துவிட முடியாது. அவரின் குடும்பம் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டது. தோல் பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி கொண்டிருந்த கைடொண்டே குடும்பத்தில் பிறந்தார். வீட்டிற்கு வந்து அம்மை நோய்த்தடுப்பு ஊசி போடும் மருத்துவரின் கனிவில் இருந்து தானும் டாக்டராக வேண்டும் என்கிற கனவு அவருக்குத் துளிர்த்தது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரின் மனு ஏற்கப்படவில்லை. அப்போதைய சுகாதாரச் சேவைகள் துறையின் பொது இயக்குனர் சென்னைக்கு வந்திருப்பதை அறிந்து அவரிடம் நேரடியாக வாதிட்டு தனக்கான இடத்தைப் பெற்றார்.
எம்.எம்.சி.யில் படிக்க வந்த சுனிதிக்கு சக மாணவர் சாலமன் விக்டர் மீது காதல் பூத்தது. “நான் ஓயாம பேசிக்கிட்டே’ இருப்பேன். அவர் குறைவா தான் பேசுவார். அவர் தமிழ். நான் மராத்தி. மதமும் வேற. அம்மாகிட்டே போய் நான் வேற மதத்து பையன் ஒரு கிறிஸ்டியன் இல்லை முஸ்லீம்னு வெச்சுக்கோயேன் அவன லவ் பண்ணினா என்ன பண்ணுவேன்னு கேட்டேன்.’ அம்மா, ‘அதுல என்னடா இருக்கு. எல்லாரும் ஒரே கடவுளோட படைப்பில பூத்த பூக்கள் தான?’ அப்படின்னு கேட்டாங்க. ஆனா, சாலமனை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னப்ப அவங்க ‘நான் உன்னை நினைச்சு அப்படிச் சொல்லலைன்னு சொன்னாங்க’ என்று பின்னாளில் எடுக்கப்பட்ட lovesick ஆவணப்படத்தில் பதிந்திருந்தார் சுனிதி.
ஒருவழியாக சாலமனை மணமுடித்தார்.மருத்துவர் சதாசிவம் அவர்களின் வழியில் இதய மருத்துவராக வேண்டுமென்று லண்டனில் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்பில் பணியாற்ற சாலமன் பயணமானார். அவரோடு பயணமான சுனிதியும் லண்டனின் கிங்க்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவத்துறையில் பணியாற்றினார். இருவரின் உலகமும் பணிப்பளுவால் நிரம்பிக்கொண்டது. ஒருவர் இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு திரும்ப வரும் போது, இன்னொருவர் பணிக்கு கிளம்பியிருப்பார். சமையலறையில் துண்டுச் சீட்டுகளின் மூலம் காதலை வளர்த்துக் கொள்ள வேண்டிய கொடுங்காலமாக அது கழிந்தது.
அடுத்து அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்குப் பயணம் என்கிற சூழல் வந்த போது, பணியையும்-குடும்பத்தையும் ஒருங்கே கவனித்துக் கொள்ளும் வகையில் சுனிதியை கிளினிக்கல் துறையல்லாத படிப்பை தேர்ந்தெடுக்கச் சொல்லி சாலமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சுனிதி நோயியல் துறையில் மேற்படிப்பினை சிகாகோவின் குக் கவுண்டி மருத்துவமனையில் பயின்றார். அதற்குள் சாலமனின் வழிகாட்டி சதாசிவம் இறந்துவிடத் துறையைத் தூக்கி நிறுத்த மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு இருவரும் திரும்ப நேர்ந்தது. சுனிதி தன்னுடைய பொது மருத்துவக் கனவுகளில் இருந்து மைக்ரோபயாலஜி துறைக்கு நகர்ந்திருந்தார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சுனிதி சாலமன். ஒவ்வொரு பேராசிரியரின் கண்காணிப்பின் கீழ் இரு மேற்படிப்பு மாணவர்கள் அமர்த்தப்படுவார்கள். அப்படிச் சேர்ந்த நிர்மலா செல்லப்பனிடம் ஹெச்.ஐ.வி கிருமி தமிழ்நாட்டிலும் காணப்படுகிறதா எனத் தேடுவோம் என்று சுனிதி சொன்னார். அப்போது முதலில் தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஆண்களிடம் எய்ட்ஸ் கண்டறியப்பட்டு இருந்தது. அதனால், ‘இங்கே எல்லாம் அவங்களைத் தேடி நான் எங்கே போவேன்’ என்று நிர்மலா கேட்டார். சுனிதி பாலியல் தொழிலாளிகளிடம் தேடலாம் என்று பரிந்துரைத்தார்.
இரண்டு குட்டிக் குழந்தைகளின் தாயான நிர்மலாவிற்கு அச்சமாக இருந்தது. அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தி பெரும் ஆதரவு நல்கினார். அவரின் பைக்கில் பாலியல் தொழிலாளிகளைக் காவல்துறை கண்காணிப்பில் வைத்திருந்த இல்லங்களுக்குச் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்தார். இவற்றை ஐஸ் பெட்டி ஒன்றில் எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் ஏறினார்கள். கணவனும், மனைவியும் ஆட்டோ பிடித்துச் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றார்கள். பரிசோதனையில் ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறின. அவர்களால் நம்பவே முடியவில்லை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்குப் புதிய மாதிரிகளை அனுப்பி வைத்த போது, அவர்களும் ஹெச்.ஐ.வி இந்தியாவின் கதவுகளைத் தட்டிவிட்டதை உறுதி செய்தார்கள். 1986-ல் அச்செய்தி அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
(சுனிதி சாலமன்-நிர்மலா செல்லப்பன்)
தமிழகம் பேரதிர்ச்சிக்கு ஆளானது. சுனிதி மராத்தி, அவர் தமிழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்க பார்க்கிறார் என்றெல்லாம் வசைகள் பாய்ந்தன. சுனிதி சாலமனை வேறொரு கவலை சூழ்ந்திருந்தது. ஹெச்.ஐ.வி நோயாளிகளை மருத்துவர்கள் தொட மறுத்தார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்க்க முடியாதென்று கதவுகள் மூடப்பட்டன. ‘எய்ட்ஸ் தொற்று பாலியல் தொழிலாளிகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இந்நோய் ஒழுக்கக் கேடானவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை முதன்முதலில் பச்சிளம் குழந்தைகளிடம் இந்நோய் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் இத்தனை வெறுப்பும், அருவருப்பும் இருந்திருக்காதோ என்னவோ’ என்று பின்னாளில் சுனிதி பேசினார்.
தான் கண்டுபிடித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் வெறுத்து ஒதுக்குவது சுனிதியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. முதன்மையான காரணம், அவர் கண்ட ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் கதைகள். முதன்முதலில் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டவர்களில் பதிமூன்று வயது சிறுமி ஒருவரும் இருந்தார். கடத்தப்பட்டு மூன்று நாட்கள் பட்டினி போட்டு அவரை வன்புணர்வு செய்த கொடூரத்தில் இருந்து தப்பி வந்திருந்தார். அவரை மாதிரி எத்தனையோ மக்களின் வாழ்க்கைக்குள் சத்தமில்லாமல் அவநம்பிக்கை, மரண பயம் சூழ்ந்திருந்தது.
சுனிதியிடம் ஒரு பெரும் பணக்காரர் வந்தார். தன்னுடைய தங்கை, மருமகனை மகளுக்கு மணமுடிக்கக் கேட்டிருந்தார். அப்போது தான், தன்னுடைய மகனுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதை அவர் சொன்னார். கதவுக்குப் பின்னிருந்து அதனைக் கேட்ட மனைவி, மகனிடம் உண்மையைச் சொன்னார். விஷத்தை குடித்துவிட்டு வண்டியோட்டிக் கொண்டு போய் இருவரும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். ‘என்னோட மருமவள எய்ட்ஸ் வராம காப்பாத்தனும்னு நான் நினைச்சது தப்பா டாக்டரம்மா’ என்று அவர் கேட்டார். அரற்ற முடியாமல் சுனிதி நேராக வீட்டிற்குப் போனார். தன்னுடைய நாய்க்குட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்.
ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரின் கனவாக மாறியிருந்தது. இத்தனைக்கும் எம்.எம்.சியிலேயே இலவச சிகிச்சை, கலந்தாய்வு மையம் ஒன்றை அவர் ஏற்படுத்தியிருந்தார். எனினும், மக்கள் அங்கே வர அஞ்சினார்கள். இனிமேலும், இப்படியே விடமுடியாது என்கிற கட்டத்தில், பதவியை விட்டுவிட்டு முழுநேரமாக அவர்களுக்கு உதவ முனைந்தார். சாலமன் முடியாது என்று அரற்றினார். எண்ணற்ற தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள், பல பேருடன் உறவு கொண்டவர்கள், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் என்று ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களோடு புழங்கி உயிரை போக்கிக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அவருக்கு இருந்தது. “சாலி! என்கூட வாங்க. அவங்க கதைங்கள கேட்டுப் பாருங்க. அவங்க கண்ணில இருக்கிற மரணப் பயத்தைப் பாருங்க. இவங்கள நாம காப்பாத்தாம யாரு காப்பாத்துவா?” என்று கணவரை ஏற்க வைத்தார்.
அந்த பெரும் பயணம் 1993-ல் துவங்கியது. கையில் பெரிதாகப் பணமில்லை. அன்பு தோய்ந்த கனவு மட்டுமே இருந்தது. விடுதிகளில் அறையை வாடகை எடுத்துச் சிகிச்சை தர ஆரம்பித்தார். நண்பர்களின் இல்லங்களில் இருந்த காலியிடத்தில் போராட்டம் தொடர்ந்தது. பொதுக் கிளினிக் ஒன்றை தியாகராய நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் துவங்கியிருந்தார். யார் வேண்டுமானாலும் வரக்கூடிய மருத்துவமனையாக இருந்தாலும் எய்ட்ஸ் பயம் உள்ளவர்கள், சிகிச்சை வேண்டுபவர்கள் வந்து சேரக்கூடிய இடமாக மாறியது அவரின் மருத்துவமனை. மூன்று பேரோடு துவங்கிய YRG Care முன்னூறு பேரோடு கிட்டத்தட்ட இருபதாயிரம் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கிற மையமாக வளர்ந்து நிற்கிறது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய தொழுநோய் வார்ட் ஒன்றை V.H.S அமைப்பிடம் இருந்து தன்னுடைய மையத்திற்காகச் சுனிதி பெற்றுக்கொண்ட அவர் . ‘எய்ட்ஸ் தான் புதிய தொழுநோய்’ என்று சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் சேவைகளைப் பெருமளவு இலவசமாக வழங்க உலகத்தின் பல்வேறு நாடுகள், அமைப்புகளின் ஆய்வுப்பணிகளில் தன்னையும், தன்னுடைய அமைப்பினரையும் தீவிரமாக ஈடுபடுத்தினார். ஏழை என்பதற்காக ஒருவருக்கு மருத்துவச் சேவை மறுக்கப்படக் கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.
இது ஒருபுறம் என்றால், வயதானவர்கள், இந்திய மரபை புனிதம் என்று கட்டிக் காக்கிறவர்கள் சுனிதி சாலமனின் எய்ட்ஸ் விழிப்புணர்வை செவிமடுக்க மறுத்தார்கள். அவர் மாணவர்கள், இளைஞர்கள் கதவுகளைத் தட்டினார். அவர்களிடம் ஹெச்.ஐ.வி குறித்து உரையாடினார். பல இளையவர்கள் திறந்த மனதோடு உரையாடினார்கள். தங்களையும் இந்தப் பயணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்கள். செக்ஸ் குறித்த திறந்த உரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டதோடு, எய்ட்ஸ் குறித்த கற்பிதங்கள், மூட நம்பிக்கைகளை மென்மையான குரலில் அவர் கேள்விக்கு உள்ளாக்கினார்.
‘கல்லால அடிச்சு கொல்ல வேண்டியவங்கள எப்படித் தொட்டு, கட்டிப்பிடிச்சு பேசுறியோ’ போன்ற வார்த்தைகளைச் சுனிதி காதில் போட்டுக்கொண்டதே இல்லை. அவருக்கு ஒவ்வொரு ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவருக்கும் நோய்த்தொற்று இல்லாத மழலை பிறக்கும் நாள் பொன்னாள் தான். ஹெச்.ஐ.வி தொற்றுள்ள கர்ப்பிணிகளையும் பிறரோடு பொதுப் பிரசவ வார்டிலேயே அனுமதிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து போராடினார். ‘நோயை விட மக்களிடம் நிலவும் தேவையில்லாத அருவருப்பும், வேறுபடுத்திப் பார்ப்பதுமே கொடுமையானவை’ என்று அவர் கருதினார். மேலும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு, புதிய நோய்த்தொற்று வருவதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு திருமண உறவை ஏற்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்தார்.
‘நிறைய அனாதைகளை உருவாக்க போறேன்னு கரிச்சு கொட்டுவாங்க. ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டவங்க இருபது, இருபத்தஞ்சு வருஷம் வாழுறாங்க. பிறகு என்ன?’ என்று ஆன் எஸ்.கிம்மின் ‘lovesick’ ஆவணப்படத்தில் பேசினார் சுனிதி சாலமன். ‘இவங்களுக்குத் திருமணம் ஆகுறப்ப மறக்காம பத்திரிகை வைப்பாங்க. ஆனா, தயவு செய்ஞ்சு வந்துடாதீங்கன்னு கேட்டுப்பாங்க. ஒரு எய்ட்ஸ் டாக்டர் அங்க போனா மத்தவங்க எல்லாம் என்னென்னெவோ பேசுவாங்க இல்ல. அதுதான் காரணம் ’ என்று அதே ஆவணப்படத்தில் தெரிவித்தார் சுனிதி.
ஒரு சம்பவத்தை அவர் UNDP-யின் இதழுக்கு அளித்த பேட்டியில் நெகிழ்வோடு கவனப்படுத்தினார் :
“ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவான பொண்ணு அவங்க ஃபிரெண்டை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்தாங்க. அவர் இவங்கள லவ் பண்றேன்னு சொன்னார். ‘எனக்கும் பிடிச்சு இருக்கு, ஆனா, காதல் எல்லாம் வேணாம்’ இவங்க சொல்லவே அவருக்கு ஒன்னும் புரில. தனக்கு ஹெச்.ஐ.வி இருக்குனு சொன்னா நம்புவாரானு தெரியாம என்கிட்டே கூட்டிட்டு வந்தாங்க. நான் பொறுமையா அவங்க நிலையை விளக்கி சொன்னேன். அவர் டக்குனு எழுந்து வெளியே போயிட்டார்.
பொண்ணு உடைஞ்சு போயிட்டாங்க. நானும் தான். சூழலை இயல்பாக்க ஒரு காபி சாப்பிட போனோம். அந்தப் பையன் திரும்ப வந்திருந்தார். கையில ரோஜா பூங்கொத்தோட நின்னுகிட்டு இருந்தார். ‘என்கிட்டே இதை மறைக்காம சொன்னது எனக்கு உன்மேலே இருக்கக் காதலை, மரியாதையைக் கூட்டித்தான் இருக்கு. எப்படி இப்படி ஆச்சுன்னு நான் கண்டிப்பா கேக்க மாட்டேன். ஆனா, உன்கூட எப்பவும் இருப்பேன்னு’ சொன்னார். எங்க ரெண்டு பேரு கண்ணிலயும் தண்ணி. எல்லா நேரத்திலும் அழுகையை மறைக்கணும்னு இல்லை. இப்படிப்பட்ட நிறையப் புரிஞ்சுக்குற மனுஷங்க தேவை.’
சுனிதி அப்படிப்பட்ட மனிதர்களில் முதன்மையானவர். இந்தியாவின் எய்ட்ஸ் தடுப்பு வரலாற்றின் முதன்மையான ஆளுமை அவரே. அந்நோய் குறித்த அவநம்பிக்கை, வெறுப்பு, நோய் பீடிக்கப்பட்டவர்களின் மீதான கண்டனப் பார்வைகளை அயராது எதிர்கொண்டார். இறுதிவரை மருத்துவர்கள் ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று மரணத் தண்டனையை அறிவிக்கும் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல், கனிவும், அக்கறையும் மிக்கவர்களாகச் சக மனிதர்களை அணுக வேண்டும் என்கிற அரிய பாடத்தின் முதன்மையான எடுத்துக்காட்டாக அவரே திகழ்ந்தார்.
இன்று தான் இந்திய அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 289 (தற்போது சட்டப்பிரிவு 324) ஐ பாபாசாகேப் அம்பேத்கர் இதே நாளில் (15-06-1949) அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் வாக்குரிமையை வடிவமைப்பதில் அம்பேத்கரின் பணியை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, அதற்குப்பிறகு தேர்தல் ஆணையத்திற்கு வருவோம். முதல் கூறை விரிவாகப் பார்த்தால் தான் தேர்தல் ஆணையத்தில் அண்ணல் அம்பேத்கர் செய்த புரட்சிகர மாற்றத்தின் தத்துவ அடிப்படை புலப்படும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது நடைமுறையில் இருக்கவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை தர வேண்டும் என்கிற சிந்தனை மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உருப்பெறாத காலம். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள், ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை கிட்டியது. பெண்களின் வாக்குரிமைக்காக போராடியவர்களை suffragette என்று அழைத்தார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாட்சியில் வாக்குரிமை என்பதைச் சொத்து, கல்வி, பாலினம் என்று பலவற்றைக் கொண்டு நிர்மாணித்தார்கள். மதம் சார்ந்து சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள், வாக்களிப்பதற்கான தகுதியை குறைவாக நிர்மாணிப்பது ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் இந்திய அரசு சட்டம் 1935-ல் தான் அதிகபட்ச வாக்குரிமை விரிவாக்கம் நிகழ்ந்தது. அப்படியும் கூட ஐந்தில் ஒரு பங்கு வயது வந்த மக்களுக்கே வாக்குரிமை கிட்டியது. (சான்று: Sumit Sarkar: ‘Indian Democracy: The Historical Inheritance)
இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று பல்வேறு பெண்கள் போராடினார்கள். இவர்களின் வரலாற்றை வரலாற்றாசிரியர் சுமிதா முகர்ஜி ஆவணப்படுத்தியுள்ளார். (காண்க:
Indian Suffragettes: Female Identities and Transnational Networks). 1928-ல் வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று கனவு கண்டது. இதனையடுத்து, கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இப்படிப் பல தரப்பினரும் வயது வந்தோர் வாக்குரிமைக்கு ஆதரவாக இந்தியாவில் இயங்கினார்கள். எனினும், ஏட்டளவில் வயது வந்தோர் வாக்குரிமை எனும் கனவை முன்மொழிந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே காலனிய ஆட்சியாளர்கள், மாகாணங்களில் பதவியில் இருந்த இந்தியர்கள் எண்ணினார்கள் (இந்திய வாக்குரிமை அறிக்கை, 1932).
இந்தப் பின்னணியில் தான் வாக்குரிமையைக் குறித்த அண்ணல் அம்பேத்கரின் வாதங்கள், பார்வைகள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. யாருக்கெல்லாம் வாக்குரிமை தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட சவுத்பரோ கமிட்டியின் முன் அம்பேத்கர் தோன்றி தன்னுடைய கருத்துகளை 1919-ல் பதிவு செய்தார். அப்போது, ஒரு நாட்டின் குடிமக்களுக்குப் பிரதிநிதித்துவ உரிமை, ஆட்சியதிகாரத்தில் பதவி வகிக்கும் உரிமை ஆகியவை மிக முக்கியமான உரிமைகள் என்று கருத்துரைத்தார். மேலும், தகுதியுள்ளவர்களே வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் என்கிற வாதத்தை அழகாக எதிர்கொண்டார். அவர் பேராசிரியர் L.T.Hobhouse ஐ மேற்கோள் காட்டி ‘ஜனநாயகம் வெற்றியடைவது மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒட்டியே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், வாய்ப்புகள் தரப்பட்டால் தான் மக்கள் அவற்றைப் பயன்படுத்த இயலும். பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு இயங்கும் அரசின் செயல்பாடுகள் பங்கேற்பது எல்லாமே கல்வி தான்… வாக்குரிமை வழங்குவதன் மூலமே மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, தட்டியெழுப்ப இயலும்.’ என்று வாதிட்டார்.
மேலும், சொத்துரிமையைக் கொண்டு வாக்குரிமையைத் தீர்மானிப்பது எப்படிப் பட்டியலின சாதி மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். பட்டியலின சாதி பெண் ஒருவர் தர்பூசணி விற்றதற்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட அநீதியை தொட்டுக் காட்டினார். செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை, உரிமைகளை மறுதலித்து விட்ட சாதி சமூகத்தில் தங்களுக்கான வாக்குரிமையைச் சொத்துரிமையைக் கொண்டு தீர்மானிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அல்லவா இருக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பத்தாண்டுகள் கழித்துச் சைமன் கமிஷன் முன்பு தோன்றிய அண்ணல் அம்பேத்கர் வாக்குரிமை என்பது சலுகை அல்ல, அது உரிமை என்றார். மேலும், அதனை வெறுமனே சலுகை என்று கருதுவதால் வாக்குரிமை இல்லாத மக்கள் முழுக்க முழுக்க வாக்குரிமை உள்ளவர்களை அண்டி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும் என்று வாதிட்டார். கல்வியை அடிப்படையாகக் கொண்டு வாக்குரிமையை மறுப்பது என்பது கயமைத்தனமானது என்று அம்பேத்கர் சாடினார். கல்வியைக் காலங்காலமாக மறுத்துவிட்டு, அதனையே வாக்குரிமைக்கான தகுதி ஆக்குவது எப்படித் தகும் என்பது அவரின் வினாவாக இருந்தது. ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் ஜனநாயகத்திற்கும், அரசியல் பங்கேற்பிற்கும் இடையே உள்ள உறவை கவனப்படுத்தினார். பலதரப்பட்ட மக்கள் இணைந்து ஜனநாயகத்தில் இயங்க வேண்டியிருக்கிறது. அது மக்கள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. வாக்குரிமையின் மூலமே ஒருவர் பிறரோடு இணைந்து வாழும் தன்னுடைய வாழ்க்கையை நெறிப்படுத்தும் அதிகாரத்தைப் பெற முடியும் என்று அம்பேத்கர் தெளிவாகப் பேசினார். இத்தகைய வாக்குரிமையை மறுதலிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்தால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்குண்டு கிடக்க நேரிடும் என்று அவர் கவலைப்பட்டார். (இப்பத்தி மாதவ் கோஷ்லாவின் ‘India’s founding moment, முனைவர் Scott Stroud-ன் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது)
மேலும், வாக்குரிமை குறித்துச் சைமன் கமிஷன் முன்பு கருத்துகளை முன்வைத்த அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் ஏழைகளாக, சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களாக, அரசியல்ரீதியாகப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்; ஆகவே,சிறுபான்மையினராக அவர்களுக்கு அரசியல்ரீதியான பாதுகாப்புக் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. ஆகவே, அனைவருக்கும் வாக்குரிமை இல்லையென்றால் தனித் தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தரவேண்டும் என்றும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை இருந்தால் ஒதுக்கீட்டு இடங்கள் தரப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார்.
மக்கள் கூட்டத்திற்கு வாக்குரிமையைப் பயன்படுத்தும் அளவுக்கு போதுமான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ? என்கிற வினாவிற்கு, ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சார்பாகப் பேசுகிற முறையில், தீண்டாமைக் கொடுமை அவர்களின் வாழ்வை நீக்கமற பீடித்திருப்பதால், அப்பிணியில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஒரே வழி அரசியல் அதிகாரம் மட்டுமே என்று அறிந்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த வாக்காளர் தன்னுடைய வாக்குரிமையை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவார் என்று உறுதிபடக் கூற முடியும்.’ என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.
மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப மட்டும் இடங்களை ஒதுக்குவது சரியான அணுகுமுறை இல்லை என்று அவர் வாதிட்டார். சட்டமன்றத்தை ஏதோ அருங்காட்சியகம் போலக் கருதிக்கொண்டு ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த சிலரை மாதிரிகளாகச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பது சரியானது அல்ல. சட்டமன்றம் என்பது அரசியல் போர்கள் நிகழும் களம், சிலர் மட்டும் வாய்ப்புகளில் தனியுரிமை செலுத்துவதைத் தகர்க்கவும், உரிமைகளை வென்றெடுக்கவும் முனைந்து இயங்கும் இடம் அதுவே ஆகும். மக்கள் தொகைக்கு ஏற்ப சிறுபான்மையினருக்கு இடம் தருவது என்பது சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வாய்ப்பை மறுத்து, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினராகச் சிறைப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகும் என்று அண்ணல் அம்பேத்கர் பேசினார்.
சிறுபான்மையினர் என்று அவர் பட்டியலின மக்களை மட்டும் குறிக்கவில்லை என்பது அவரோடு சைமன் கமிஷன் உறுப்பினர்கள் நிகழ்த்திய உரையாடலில் தெளிவாகிறது. பழங்குடியினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் ஆகியோரில் உள்ள வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை தர வேண்டும் என்று கருதுகிறீர்களா என்று அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது. மேற்சொன்ன சிறுபான்மையினரில் உள்ள அனைத்து வயது வந்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.
இவ்வாறு வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயராது குரல் கொடுத்தார். அவரே ஜூன் 15 அன்று 1949 -ல் தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தினார். அதனை அறிமுகப்படுத்தும் போது, அண்ணல் அம்பேத்கர் தேர்தல் ஆணையம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இரண்டு தேர்வுகள் இருந்தன – ஒன்று நிரந்தர அமைப்பொன்றை நிறுவி நான்கைந்து உறுப்பினர்கள் இடைவெளியின்றித் தொடர்ந்து பதவி வகிக்கும் அமைப்பு ஒன்றாக இருப்பது அல்லது தேர்தல் வருகிற போது மட்டும் தேர்தல் ஆணையத்தைத் தேவைக்கேற்ப நிறுவிக்கொள்வது. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாகத் தலைமை தேர்தல் ஆணையரோடு ஒரு அமைப்பை நிறுவ முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். தேர்தல்களைச் செவ்வனே நடத்த இத்தகைய அமைப்பு தேவை என்று அம்பேத்கர் பேசினார்.
மேலும், முதலில் தேர்தல்களைச் சுதந்திரமாக நடத்துவது, தேர்தலை நடத்துவதில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் தலையிடாமல் இருப்பதை அடிப்படை உரிமையாகக் கருத வேண்டுமென அடிப்படை உரிமைகள் கமிட்டி கருத்துத் தெரிவித்தது. அம்பேத்கர் , ‘சட்டமியற்றும் மன்றங்களுக்கான தேர்தல்கள் தூய்மையாக, சுதந்திரமாக நடக்க ஆட்சியில் இருக்கும் அரசுகளின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்’ என்கிற கருத்தை நிர்ணய சபையும் எந்த எதிர்ப்புமின்றி உறுதிப்படுத்தியது. சபையின் இக்கருத்தை கணக்கில் கொண்டு, வரைவுக் குழு அடிப்படை உரிமைகளில் இருந்து அவற்றைப் பிரித்தெடுத்து தனி அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 289, 290 என்று இயற்றப்பட்டன. தேர்தலை நடத்தும் அமைப்பானது ஆட்சியில் இருக்கும் அரசின் ஆளுகையில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எந்தச் சச்சரவும் இல்லை. சட்டப்பிரிவு 289 அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முடிவை நிறைவேற்றுகிறது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது, சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களைக் கண்காணித்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்துவது ஆகிய அதிகாரங்களை ஆட்சியில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வராத தேர்தல் ஆணையத்திடம் கைமாற்றப்படுகிறது.’ என்று தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தி இதே தினத்தில் பேசினார்.
முதலில் தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் சட்டப்பிரிவு 289-ஐ முன்மொழிந்த போது நாடாளுமன்ற தேர்தல்களை மட்டுமே நடத்தும் அமைப்பாகத் தேர்தல் ஆணையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல்களை நடந்த அந்தந்த மாநிலத்தின் ஆளுநர் அல்லது மாநில ஆட்சியாளர் தேர்தல் ஆணையத்தை நியமித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆய்வாளர் ஆர்னித் ஷானி தன்னுடைய ஆய்வுகளின் மூலம் எப்படிப் பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவில் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில அரசுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரை நீக்க முயற்சி செய்தன முயன்றன என்பதை நிறுவுகிறார். இந்தப் பின்புலத்தில். அண்ணல் அம்பேத்கர் மேற்சொன்ன சட்டப்பிரிவில் ஒரு அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘ஒரு புரட்சிகரமான மாற்றத்தை’ செய்தார்.
தேர்தலை நடத்த ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தை நிறுவுவதோடு, அதற்கு உதவும் வண்ணம் பிராந்திய ஆணையர்களை நியமிப்பது என்று சட்டப்பிரிவு மாற்றப்பட்டது. ‘பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அந்த மாநிலத்தின் பூர்வ குடிகள் இருப்பார்கள். அவர்களோடு இனம், மொழி அல்லது கலாசார ரீதியாக அவர்களிடம் இருந்து வேறுபட்ட மக்கள் அந்த மாகாணங்களில் வசிக்கிறார்கள். அந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் இனம், கலாசாரம் அல்லது மொழிரீதியாக தங்களிடமிருந்து வேறுபட்ட மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாகாண அரசுகள் உத்தரவிடுவது, செயல்களைத் திட்டமிடுவது எல்லாம் சட்ட வரைவுக்குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். …. அந்தந்த உள்ளூர் அரசின் முன்முடிவுகள் அல்லது அதிகாரியின் மனச்சாய்வுக்கு ஏற்ப வயது வந்த யாரையும் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது. அத்தகைய செயல்கள் ஜனநாயக அரசின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதாகும். இந்த வகையான அநீதியை மாகாண அரசுகள் மேற்கொள்வதைத் தடுக்கும் பொருட்டே …வரைவு அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் சட்டப்பிரிவுகளில் புரட்சிகரமான, அடிப்படையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.’
வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, அரசின் கட்டுப்பாட்டிற்குள் வராத தேர்தல்களைச் சுதந்திரமாக, நேர்மையாக நடத்துவதற்கான தேர்தல் ஆணையம் ஆகியவற்றைச் சாதிப்பதற்குப் பெருமளவில் முயன்ற அண்ணல் அம்பேத்கரை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்.
என்னுடைய அத்தையின் வீட்டை தீயிட்டு கொளுத்தினார்கள். இரண்டாக மடிக்கப்பட்ட ஐந்து பவுண்ட் தாளைப் போல மண்டியிட்டு தொலைக்காட்சிகளில் வரும் பெண்களைப்போல நான் தேம்பி அழுதேன். என்னைக் காதலித்தவனை அழைத்தேன் அவன் என் ‘குரலை’ ஆற்றுப்படுத்த முயன்றான்.
நான் ஹலோ என்றேன்
அவன் வார்ஷன், ஏன் இப்படியிருக்கிறாய், என்னாயிற்று எனக் கேட்டான். நான் பிரார்த்தித்து கொண்டிருந்தேன்
என் பிரார்த்தனைகள் இப்படி இருந்தன;
அன்புள்ள ஆண்டவரே
நான் இரு தேசங்களில் இருந்து வருகிறேன்.
ஒன்று தாகமாய் இருக்கிறது
இன்னொன்று தீப்பற்றி எரிகிறது
இரண்டிற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. அன்றிரவு
என் மடியில் உலக வரைபடத்தை ஏந்திக்கொண்டேன்
மொத்த உலகத்தின் மீதும் என் விரல்களால் நீவிவிட்டு
சன்னமாக
எங்கேனும் வலிக்கிறதா என வினவினேன்அது இவ்வாறு பதிலளித்தது
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும். – Warsan Shire.தமிழில்: பூ.கொ.சரவணன்
சிகாகோ பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்கள் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரியும் மருத்துவர் எமிலி லாங்டன் ‘ஏன் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், ஊரடங்கு உத்தரவை ஏன் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்பதைப் பற்றி எழுச்சிமிகு உரையொன்றை ஆற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம்:
அனைவருக்கும் வணக்கம்.
நம் ஊரிலும், உலகம் முழுக்கவும் பெரும்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், ஆதரவையும் உரித்தாக்குகிறேன். இத்தகைய கொள்ளை நோய் வைரஸின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க முயன்றிருக்கிறோம். எனினும், நம்மை புத்தம் புதிய வைரஸ் ஒன்று முற்றுகையிட்டு இருக்கிறது. இதனைப்பற்றி நமக்குப் பெரிதாக எதுவுமே தெரியாது. இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள நம்மிடம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. ஒவ்வொரு நாளும் தடுப்பு நடவடிக்கை பற்றிய வழிகாட்டுதல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு வாய்ப்பு என்பதே இங்கே இல்லவே இல்லை.
…..
இந்த வைரஸ் ஈவிரக்கமற்றது. அது உங்களைத் தாக்கியிருக்கிறது என்று தெரிவதற்குள் வேகமாகப் பரவ ஆரம்பிக்கிறது. சாதாரணச் சளி, காய்ச்சல் தான் என்று உங்களை அது ஏமாற்றுகிறது. நம்மில் பலருக்கு கூட ஒரு சாதாரணச் சளி, காய்ச்சலுக்கு எதற்கு இத்தனை கூப்பாடு என்று தோன்றலாம். இதற்குப் போய் ஏன் பள்ளிகளை மூடுகிறார்கள். உணவகங்களுக்குப் பூட்டு போடுகிறார்கள் என்று குழப்பமாக இருக்கலாம்.
இது போதாது என்று மிச்சம் மீதி இருக்கும் உங்களுடைய விலைமதிப்பற்ற சுதந்திரத்தையும் இந்த வைரஸ் காவு கேட்கிறது. ஆனால், உண்மையான சிக்கல் இந்த நோய்த்தாக்குதலில் இருந்து தப்பப்போகும் 80% மக்களைப்பற்றியது அல்ல. மீதமுள்ள 20% நோயாளிகள், குறிப்பாக வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியற்றவர்கள், பிற உடல்நலக்குறைவுகளால் அவதிப்படுபவர்கள் பற்றி நாம் பெருமளவில் கவலைப்பட வேண்டும். அவர்களுக்குக் கூடுதலாக ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர், உயிர்காக்கும் சிகிச்சை தேவைப்படும்.
நம் நாட்டிலும், உலகம் முழுக்கவும் மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் பல நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், எல்லாரையும் ஒரே வேளையில் கவனித்துக் கொள்ள முடியாது. நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாவிட்டால், நம் நோயாளிகளுக்குத் தேவைப்படும் கவனிப்பை நம்மால் தர முடியாது.
நேரு காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்தது. சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் தராமல் இந்தியா அதில் இணைவது என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று நேரு அடம்பிடித்ததாக ஒரு கருத்து பரவலாகப் பரப்பப்படுகிறது.
மெய்ப்பொருள்:
சீனாவின் ஐநா நுழைவு வரலாறு இடியாப்ப சிக்கலானது. சீனாவில் உள்நாட்டுப் போர் ஒன்று நடைபெற்றது. சியாங் ஷேக் தலைமையிலான சீனக்குடியரசு அமெரிக்க ஆதரவோடு உலகப்போருக்கு பின்னர் ஆண்டுக் கொண்டிருந்தது. அதனை எதிர்த்து மாவோ தலைமையிலான கம்யூனிச கட்சியினர் போராடி வென்றார்கள். அவர்கள் தைவான் தவிர்த்த ஒட்டுமொத்த சீனாவையும் தங்கள் வசப்படுத்தினார்கள். இவர்களுக்குச் சோவியத் ரஷ்யாவின் ஆதரவு இருந்தது. ஆனால், தைவானில் தஞ்சம் புகுந்த சீனக்குடியரசு தான் ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவாக இருந்தது. மேலும், பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாகவும் இருந்தது. அதன் இடத்திற்கு மாவோ தலைமையிலான சீன மக்கள் குடியரசை கொண்டுவர வேண்டும் என்கிற சோவியத் ரஷ்யாவின் முயற்சிகள் அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டது.
வீட்டோ எனப்படும் ஒரு எதிர் வாக்கு ஒட்டுமொத்த தீர்மானத்தையும் தோற்கடிக்கும் என்கிற வினோதமான வாக்கு முறையைப் பாதுகாப்புக் கவுன்சில் பின்பற்றியது இதற்கு முக்கியக் காரணம். கடும்கோபத்தோடு 1950 ல் ஐநாவை விட்டு சோவியத் ரஷ்யா சிறிது காலத்திற்கு விலகியது. ஒரு வழியாக, ரிச்சர்ட் நிக்சனின் காலத்தில் அமெரிக்கா சீன மக்கள் குடியரசோடு நல்லுறவு பாராட்டியது. இதனையடுத்து ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவின் இடத்தை 1971-ல் சீன மக்கள் குடியரசு பெற்றுக்கொண்டது.
இப்போது நேரு பாதுகாப்புக் கவுன்சிலில் சீனாவிற்கு இடமில்லாமல் நிரந்தர இடத்தைப் பெற மறுத்தார் என்கிற கூற்றை எடுத்துக்கொள்வோம். இந்தக் கருத்தை பாஜகவினர் மட்டும் எடுத்துரைக்கவில்லை. சசி தரூர் தன்னுடைய ‘Nehru-The invention of India’ நூலில் இதே கருத்தை முன்வைக்கிறார். இந்திய அயலுறவு அதிகாரிகள் ஆகஸ்ட் 1950-ல் இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடத்தைச் சீனாவிற்குப் பதிலாக எடுத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாக அமெரிக்கா அழைத்தது. அதனை நேரு ஏற்க மறுத்தார், இது பெரும்பிழை என்று கோப்புகளைப் பார்த்த அயலுறவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சசி தரூர் எழுதுகிறார்.
அடுத்து இன்னொரு முறை, 1955-ல் சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் செய்த போது (கவனிக்க அமெரிக்கா இல்லை) இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் ஆறாவது நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று யோசனை இருப்பதாகத் தெரிவித்தது. இதனையும் இந்தியா ஏற்கவில்லை. ஏன் என்று விரிவாகப் பார்ப்போம்.
முதலில் அமெரிக்கா சீனாவின் இடத்தைப் பாதுகாப்புக் கவுன்சிலில் எடுத்துக் கொள்ள வழங்கிய வாய்ப்பு. இது பரிந்துரைக்கப்பட்டது 1950-ல். அதாவது காஷ்மீர் பிரச்சினை ஐநாவில் இந்தியாவின் உள்நாட்டு சிக்கலாக அணுகப்படாமல், இந்திய-பாகிஸ்தான் பிரச்சினையாகப் பிரிட்டன், அமெரிக்காவால் மாற்றப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வு. ஆகஸ்ட் 24 1950-ல் சீனாவின் இடத்தை இந்தியா எடுத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சிலர் பரிந்துரைப்பதை அமெரிக்காவின் தூதுவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் நேருவிற்குத் தெரியப்படுத்துகிறார்.
இது இந்தியாவிற்கும்-சீனாவிற்கும் இடையே மோதலை மூட்டிவிடும், மேலும், ஐநா சபையை விட்டு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வெளியேறுவதும், ஐநா சபையே கலைவதற்கும் இது வழிகோலும் என்றும் நேரு அஞ்சினார். இந்தியாவிற்கு ஐநாவில் நிரந்தர இடம் வேண்டும், ஆனால், இப்படி அமெரிக்காவின் காய் நகர்த்தல் ஐநா சபைக்கும், உலக அமைதிக்கும் கேடாக முடியும் என்கிற அச்சம் நேருவிற்கு இருந்தது.
பேராசிரியர் நபரூன் ராய் வேறு சிலவற்றைக் கவனப்படுத்துகிறார். எகிப்திய தலைவர் நாசருடன் நேரு பேசுகிற போது, ‘சீனா பல லட்சம் மக்களை இழப்பதை குறித்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்னோடு உரையாடிக்கொண்டிருந்த மாவோ வெகு சாவகசமாகச் சில கோடி மக்களை இழப்பதற்கு நாங்கள் தயார்’ என நினைவுகூர்வதைக் கவனப்படுத்துகிறார். பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதும் சீனாவின் ஆக்ரோஷத்திற்குக் காரணம் என்று நேரு கருதினார்.
சீனா இந்தியாவின் அயலுறவு கொள்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும், அதனோடு உரையாடல், நல்லுறவு, அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதன் மூலமே ஐநா இயங்க முடியும் என்று நேரு கருதினார் என்கிறார் 1949-1962 காலத்தைய இந்திய சீன உறவுகள் குறித்து ஆய்வு செய்த ஆண்டன் ஹார்டர்.
மேலும், ஒருவேளை இந்தியா அமெரிக்கா வழங்குவதாகச் சொன்ன பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை ஏற்றிருந்தாலும் இதனைச் சோவியத் ரஷ்யா வீட்டோ செய்திருக்கக் கூடும். (ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்குள் வந்து விட்டது)
ஜவகர்லால் நேரு லண்டனில் 1960-ல் நிகழ்த்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீன மக்கள் குடியரசு ஐநாவின் பகுதியானால் உலகின் பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் எளிதாகிவிடும்’ என்றார். தன்னுடைய முதலமைச்சர்களுக்கு நேரு 1950-ல் எழுதிய கடிதத்தில், ‘….உலகின் அதிகாரச்சமநிலை புதிய சீனாவின் வருகைக்குப் பிறகு கிழக்கில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் மாறியிருக்கிறது. இதனை மேற்கத்திய நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்த உண்மையை உணர்வது துரிதமாக நடப்பது பேரிழப்புகளைத் தவிர்க்கும்’ என்று அக்கறையோடு எழுதினார்.
ஜனவரி 1950-ல் சீன மக்கள் குடியரசை ஐநாவில் சேர்க்காத போக்கை கண்டித்துச் சோவியத் ரஷ்யா ஐநாவை விட்டு வெளியேறி இருந்தது. இதே காலகட்டத்தில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா பங்குகொண்ட கொரியப்போரில் ஆரம்பத்தில் இந்தியா அமெரிக்காவிற்குச் சாதகமாக இயங்கியது. போக, போக நிலைமைக்கு ஏற்ப தன்னுடைய அமெரிக்க ஆதரவை இந்தியா குறைத்துக்கொண்டது. கொரியப்போர் குறித்த ஐநாவின் மூன்றாவது தீர்மானம் முழுக்க, முழுக்க அமெரிக்காவிற்குச் சாதகமாக இருந்த போது அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்கு வந்து சேர்ந்திருந்தது. இத்தகைய நிலையில் இந்தியா அமெரிக்காவின் அழைப்பை ஏற்றிருந்தால் அது முழுக்க அமெரிக்காவின் கையாளாக மாறியிருக்க வேண்டியிருக்கும். மேலும், சோவியத் ரஷ்யா, சீனாவின் பகையை ஒருங்கே பெற்றுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். சர்வதேச அமைதியை குலைக்கிற செயலில் இந்தியா ஈடுபடாது என்று நேரு உறுதியாக இருந்தார்.
இதே காலகட்டத்தில் தான் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்க்க அமெரிக்கா அழைத்தது. காஷ்மீர் பிரச்சினை ஐநாவிற்குச் சென்ற போது, விஜயலட்சுமி பண்டிட் ‘இந்தியா ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்றால் காஷ்மீரை கைகழுவ வேண்டியிருக்கும் போல’ என்று 2 செப்டம்பர் , 1949-ல் எழுதியிருந்தார். (விஜயலட்சுமி பண்டிட் தாள்கள் கோப்பு எண். 59, 47, NMML). ராணுவ ரீதியாகத் தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருப்பது புதிதாக உதித்த ஒரு நாட்டிற்கு உகந்தது அல்ல என்பது நேருவின் அக்கறையாக இருந்தது என்பது ராணுவ, அயலுறவு வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை.
சமீபத்தில் வந்த தி இந்து செய்தித்தாளின் பழைய கட்டுரையொன்றை மாலன் மேற்கோள் காட்டி நேரு பொய் சொல்லியிருக்கிறார் என்று எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நேருவிடம் உறுப்பினர் பரேக் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதற்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? என்கிற கேள்விக்கு ‘அப்படி எந்த அழைப்பும் வரவில்லை’ என்று நேரு செப்டம்பர் 1955-ல் உறுதிபட மறுத்திருக்கிறார். இதனைத்தான் ஏ.ஜி.நூரனி விஜயலட்சுமி பண்டிட் தாள்களை வாசித்து எழுதிய கட்டுரையைக் கொண்டு பொய்யர் நேரு என்கிற ரீதியில் மாலன் எழுதிச் செல்கிறார். (The Nehruvian approach)
என்ன நிகழ்ந்தது 1955-ல்?
சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் போயிருந்த போது அந்நாட்டின் பிரீமியர் புல்கானின் இந்தியாவை ஐநாவின் ஆறாவது பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராகச் சேர்க்க எண்ணம் என்கிறார். நேரு அதனை ஏற்க மறுக்கிறார். இதற்குப் பிந்தைய நாடாளுமன்ற விவாதத்தின் போது இதை அப்படியே நேரு மறைத்துவிட்டார் என்பது மாலன் முன்வைக்கிற பார்வை.
அந்த உரையாடலின் சில பகுதிகளை மட்டும் மாலன் பதிவு செய்கிறார். ஆனால், சோவியத் ரஷ்யா எப்படிச் சாதுரியமாக இந்தியாவைக் குழப்ப பார்த்தது என்பதையும், அதில் இருந்து நேரு எப்படிச் சாமர்த்தியமாகத் தப்பினார் என்பதையும் விளக்கும் உரையாடலின் பகுதியை மாலன் அறியாமல் விட்டுவிட்டார். சர்வபள்ளி கோபால் எழுதியிருக்கும் Jawaharlal Nehru; எனும் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றின் Volume II; பக்கம் 248-ல் வரும் “He (Jawaharlal Nehru) rejected the Soviet offer to propose India as the sixth permanent member of the Security Council and insisted that priority be given to China’s admission to the United Nations” என்கிற வரியை பிடித்துக் கொள்கிறார். சீனாவிற்காக இந்தியா ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்தது என்கிற பார்வையை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார் மாலன்.
இப்போது புல்கானின், நேரு இடையே நடந்த உரையாடலை பார்ப்போம்:
புல்கானின்: “நான்கு சக்திகள் மாநாடு குறித்த உங்களுடைய பரிந்துரையைக் கணக்கில் கொண்டு தேவையான நடவடிக்கையை எடுப்போம்.உலகளவில் நிலவி வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், பதற்றத்தை தணிக்கும் பொருட்டும், பிற்காலத்தில் இந்தியாவைப் பாதுகாப்பு கவுன்சிலின் ஆறாவது உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று எண்ணுகிறோம்…
நேரு: அமெரிக்காவில் சிலர் ஏற்கனவே சீனாவிற்குப் பதிலாக இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைத்ததைப் புல்கானின் அறிந்திருக்கலாம். அது எங்களுக்கும், சீனாவுக்கும் இடையே பகையைத் தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டது. அதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். அதேபோல, சில இடங்களைப் பிடிப்பதற்க வேகமாக முந்திக்கொண்டு செல்லவும் விரும்பவில்லை. அது பிரச்சினைகளை உண்டு செய்வதோடு, இந்தியாவையே சர்ச்சைக்கான பேசுபொருளாக மாற்றக்கூடும். இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் இணைக்க வேண்டுமென்றால், ஐநாவின் சாசனத்தைத் திருத்தி எழுத வேண்டும். அதற்கு முன்பு சீனாவை அனுமதிப்பது குறித்த சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். முதலில் சீனாவை சேர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். சாசனத்தைத் திருத்துவது குறித்துப் புல்கானின் அவர்களின் கருது என்ன? அதனைத் திருத்த இது சரியான நேரம் இதுவல்ல என்று நாங்கள் எண்ணுகிறோம்.
புல்கானின்: நாங்கள் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்ப்பது குறித்து உங்களின் கருத்துக்களை அறியவே இப்படிப்பட்ட பரிந்துரையை முன்வைத்தோம். இது அதற்கான நேரமில்லை, காலம் கனிந்து வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொன்றாகக் காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
மேற்சொன்ன உரையாடலில் சீனாவை நேரு அதிகமாக முன்னிறுத்துவது நமக்கு உறுத்தலை தரலாம். ஆனால், சாசனத்தைத் திருத்துவது கவனத்துக்கு உரியது. சாசனத்தைத் திருத்த ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து உறுப்பினர்களோடு பொதுக்குழுவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இது சாத்தியமில்லை என்பது நேருவுக்கு நன்றாகவே தெரியும். சோவியத் ரஷ்யா இந்தியா அமெரிக்கா பக்கம் சாய உள்ளதா? அது பாதுகாப்புக் கவுன்சிலில் தான் மட்டும் இடம்பெற கணக்கு போடுகிறதா என்று ஆழம் பார்த்தது. நேரு கச்சிதமாகச் சிக்காமல் தப்பினார். நேரு அயலுறவு சார்ந்த விஷயங்களை உள்நாட்டு பிரச்சினையாக்கி வாக்குச் சேகரிப்பதில் ஈடுபடாத மகத்தான தலைவர் என்று அதே கட்டுரையில் நூரனி புகழாரம் சூட்டுகிறார். இதை மாலன் வசதியாக மறந்துவிடுகிறார்.
உரையாடலின் போது வருகிற ஒரு பரிந்துரை ஏற்கப்படாத போது, அது நம் நாட்டை ஆழம் பார்க்கிற ஒன்றாக இருக்கிற போது அதனைப் பொதுச்சபையில் வைப்பது தேசத்தின் நலனிற்கும், அயலுறவு கொள்கைக்கும் மாறானதாக முடியக்கூடும் என்பது இந்திய அயலுறவு கொள்கையின் தந்தையான நேருவுக்கு நன்றாகத் தெரியும். நேருவுக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பு அமெரிக்காவின் நலனிற்கு உகந்ததாக இருந்திருக்கும். அதனால் சீனா, ரஷ்யாவின் பகைமையோடு வீட்டோவால் பாதுகாப்புக் கவுன்சில் இடமும் இந்தியாவிற்குக் கிடைக்காமல் போயிருக்கும். இன்னொரு முறை ரஷ்யா வாய்ப்பை வழங்கிய போது, அது கண்துடைப்பாகவே இருந்தது என்பதையும், அதை நிறைவேற்றுவது அப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா நன்றாகவே உணர்ந்திருந்தது.
இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்கிற அக்கறை நேருவிற்கு இருந்தது. அதே வேளையில், ஐநாவை கூறுபோட்டு, தன்னுடைய சீன, ரஷ்ய உறவுகளைக் கெடுத்துக்கொண்டு இன்னொரு போருக்கான சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்கிற தீர்க்கமும் நேருவிற்கு இருந்தது. இந்தச் சிக்கலான வரலாற்றை ‘நேரு பொய்யர்’, ‘சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை நேரு தாரைவார்த்து விட்டார்’ முதலிய அரைகுறை வரிகளால் விளங்கிக்கொள்ள முடியாது. ஐநாவில் சீனா அதன் தோற்றத்தில் இருந்தே இடம்பெற்று இருந்தது. எந்தச் சீனா என்பது தான் சிக்கலாக இருந்தது. சீனாவை தூக்கி எறிய வேண்டும் என்கிற அமெரிக்காவின் கணக்கிற்கு இந்தியா பலியாகாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது. சோவியத் ரஷ்யா சொன்னதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை இந்தியா தெளிவாக உணர்ந்திருந்தது. சாசனத்தைத் திருத்த தான் தயார் என்று புல்கானின் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், பிற்காலத்தில் இந்தியாவை ஆறாவது உறுப்பினராக ஆக்குகிறோம் என்கிற வரியின் ராஜதந்திர சதுரங்கத்தில் நேரு வெட்டுப்படாமல் தப்பினார். நேரு காஷ்மீர், சீனாவில் பிழைகள் புரிந்தார், அவர் அவற்றில் சரியாகவும் காய்களை நகர்த்திய தருணங்கள் உண்டு. வரலாறு சிக்கலானது மட்டுமல்ல, வெறுப்பினால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றல்ல.
நான் ஆறு பிள்ளைகளுக்கு தாய். கிறிஸ்துவத்தின் Mormon மதப்பிரிவை சேர்ந்தவள். கருக்கலைப்பு சார்ந்து மதரீதியாகவும், பிற தரப்புகளிலும் நடைபெறும் விவாதங்கள் குறித்த ஆழமான புரிதல் எனக்குண்டு. ஆண்கள் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளில் மிகுந்த அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். என்னால் ஆண்களுக்கு கருக்கலைப்பை தவிர்ப்பதில் துளிகூட அக்கறை இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். ஏன் இப்படியொரு முடிவுக்கு வந்தேன்?
கருக்கலைப்பு நிற்க வேண்டும் என்றால் பெண்கள் தேவையில்லாமல் கருத்தரிக்காமல் இருக்க வேண்டும். இப்படி தேவையில்லாத கர்ப்பங்களுக்கு ஆண்களே முழுக்க முழுக்க காரணம். அது எப்படி முடியும்? இருவரும் சேர்ந்து தானே உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்று நீங்கள் எண்ணலாம். நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று தம்பதிகள் முடிவு செய்துகொண்டு நிகழும் கருத்தரிப்பிற்கு தான் இரு தரப்பும் காரணம் ஆகும்.
தேவையில்லாத கர்ப்பங்கள் அனைத்துக்கும் ஆண்களே காரணம். பொறுப்பில்லாமல் விந்தை வெளியேற்றும் ஆண்களின் செயல்களே இதற்கு முழு பொறுப்பு. நம்ப முடியவில்லையா? நான் புரிய வைக்கிறேன். ஒரு மாதத்தில் இரண்டே தினங்களில் மட்டுமே பெண்களால் கர்ப்பம் தரிக்க முடியும். அதுவும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே சாத்தியம்.
ஆக, ஒரு ஆண்டில் பெண்களால் இருபத்தி நான்கு நாட்களில் தான் கர்ப்பமாக முடியும். ஆனால், ஆண்களால் ஆண்டின் 365 நாட்களும் பெண்களை கர்ப்பமாக்க முடியும். நீங்கள் ஒரே நாளில் பல முறை விந்தை வெளியேற்றுகிற ஆண் என்றால், நீங்கள் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கர்ப்பங்களுக்கு காரணமாக கூடும். ஏட்டளவில், ஒரு ஆணால் ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை தேவையில்லாத கர்ப்பங்களுக்கு காரணமாக முடியும்.
வயதாக வயதாக ஆண்களின் விந்தணுக்களின் வீரியம் குறைகிறது என்றாலும், பருவ வயதை அடைந்தது முதல் தங்களுடைய மரணம் வரை ஆண்கள் தேவையில்லாத கர்ப்பங்களை உருவாக்கி கொண்டே இருக்க முடியும். அடிப்படை உயிரியல், மேற்சொன்ன நாள் கணக்கு ஆகியவற்றை கொண்டு ஆண்கள் தான் பிரச்சினைக்கு காரணம் என எளிதாக புரிந்து கொள்ளலாம்.
கருத்தடை முறைகள் என்ன ஆனது என்று கேள்வி எழலாம். ஒரு பெண் தேவையில்லாமல் கர்ப்பமாகாமல் தன்னை காத்துக்கொள்ள எண்ணினால் ஏன் கருத்தடை முறைகளை பயன்படுத்த கூடாது. எப்படி கருக்கலைப்பு செய்வது என்பதை ஒரு பெண்ணால் தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், கருத்தடை குறித்தும் அறிந்து கொள்வது பெரிய விஷயமில்லை இல்லையா? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
நவீன கருத்தடை முறைகளே கடந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு. அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால், இம்முறைகள் கொடூரமானவை. இவற்றால் பெண்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மிக மோசமானவை. ஆண்களுக்கு என்று கண்டுபிடிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகளை புழக்கத்துக்கே கொண்டுவர முடியாத அளவுக்கு பின்விளைவுகள் மோசம். இத்தனைக்கும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளின் பட்டியலோடு ஒப்பிட்டால் இவை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. எனினும், இந்த ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் ஏற்கப்படவில்லை. (https://www.npr.org/sections/health-shots/2016/11/03/500549503/male-birth-control-study-killed-after-men-complain-about-side-effects?platform=hootsuite)
மேற்சொன்ன நிகழ்வு நமக்கு சொல்வது என்ன?
இந்த சமூகமானது, ஆண்களுக்கு வேலை எளிதாகும் என்றால் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் அது குறித்து சற்றும் கவலைப்படுவது இல்லை. ஆனால், ஆண்களே வயிற்றில் பால் வார்க்கும் ஒன்றை சொல்கிறேன். இவ்வளவு கொடூரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்து இருந்தாலும் பெண்கள் கருத்தடை முறைகளை பயன்படுத்த மிகவும் ஆர்வமாக காட்டுகிறார்கள். ஆனாலும், இது அவ்வளவு எளிமையானதாக இருப்பதில்லை. பெண்கள் மருத்துவரை சந்தித்து, அவரின் பரிந்துரைகளை அறிய வேண்டும். இவை எதுவும் இலவசமும் இல்லை, மலிவானதும் இல்லை.
இன்னமும் குறிப்பாக பல பேர் பெண்களுக்கான கருத்தடை முறைகளை மருத்துவ காப்பீட்டில் சேர்க்க கூடாது என்று அயராது உழைத்து கொண்டுள்ளார்கள். பெண்களுக்கான வாய்வழி கருத்தடை மாத்திரைகள் எளிதாக கிடைப்பதில்லை. அப்படியே உட்கொண்டாலும் அவை உடனே வேலை செய்வதில்லை.
மாத்திரைகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும் என்றால், அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும், மேலும், மறந்து விட்டாலோ, தவறாக உட்கொண்டு விட்டாலோ,என்றாவது மாத்திரையை சாப்பிட முடியாமல் போனாலோ கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எப்படி என்றாலும், பக்கவிளைவுகள் மோசமானவை. என்றாலும், இந்த மாத்திரைகளை ஒழித்து கட்ட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவற்றுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
நான் சொல்ல வருவதெல்லாம், பெண்கள் கர்ப்பமாகாமல் இருப்பது அத்தனை எளிதானதில்லை. இதை அப்படியே மாற்றி, ஆண்களின் தரப்பில் இருந்து அணுகுவோம். ஆண்கள் ஆணுறை பயன்படுத்தினாலே கர்ப்பங்கள் தேவையில்லாமல் ஏற்படாது. ஆணுறைகள் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும், விலை மலிவானவை என்பதோடு அவற்றை பயன்படுத்த மருத்துவரின் ஆலோசனை எதுவும் தேவையில்லை. அவை உடனடி பலன் தருபவையும் கூட.
ஆண்கள் ஆணுறைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் தேவைப்படுகிற போதெல்லாம் கவலையில்லாமல் உடலுறவில் ஈடுபட இயலும். ஆணுறைகள் பெண்களுக்கான கருத்தடை முறைகளை விட எளிமையானது. ஆணுறையை ஆண்கள் பயன்படுத்துவதை பெண்கள் விரும்புகிறார்கள். அது பால்வினை நோய்களை தவிர்ப்பதோடு, உடலுறவின் போது பெண்களுக்கு கிட்டும் சுகத்தை குறைப்பதில்லை. உச்சநிலை எட்டுவதற்கும் அவை தடை போடுவதில்லை. ஆணுறைகளை பயன்படுத்திய பின்பு சுத்தம் செய்வதும் எளிதானது. விந்தானது கால்களில் வழிந்தோடும் என்கிற கவலையில்லை. அப்புறம் ஏன் தேவையில்லாமல் பெண்கள் கருத்தரிக்க நேரிடுகிறது. ஒவ்வொரு உடலுறவின் போதும் ஏன் ஆண்கள் ஆணுறைகளை பயன்படுத்துவதில்லை. இவ்வளவு எளிமையான முறையை ஏன் பின்பற்ற மறுக்கிறார்கள்?
ஆண்கள் ஆணுறையை விரும்புவதில்லை. ஆணுறை அணியாமல் உடலுறவில் ஈடுபட அடிக்கடி பெண்களை ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். பெண்ணின் அனுமதியோ, விருப்பமோ இல்லாமல் உடலுறவின் போது ஆணுறையை ஆண்கள் நீக்குவதும் அடிக்கடி நடக்கிறது. இது பாலியல் வன்முறை என்று நான் உறுதியாக சொல்வேன். ( https://m.huffingtonpost.ca/2017/04/24/stealthing-removing-condom_n_16209510.html )ஏன் ஆண்கள் ஆணுறையை வெறுக்கிறார்கள்? நல்ல கேள்வி. தங்களுடைய இணையை புணர்கிற போது, ஆணுறை இல்லாமல் உள்நுழையும் கணங்களில் இன்பம் சற்றே கூடுதலாக ஆண்களுக்கு கிடைக்கிறது.
அதனால், ஆண்கள் தங்களோடு உடலுறவு கொள்ளும் பெண் கர்ப்பமானாலும் பரவாயில்லை என்று இப்படி செயல்படுகிறார்கள். ஒரு பெண்ணுடைய வாழ்க்கை, உடல்நலம், சமூக மரியாதை. உறவுகள், career இத்தனையும் என்ன ஆனாலும் எங்களுக்கு அக்கறையில்லை. கூடுதலாக கொஞ்சம் இன்பம் கிட்டினால் மட்டுமே போதுமானது என்று ஆண்கள் எண்ணுகிறார்களா? ஆமாம். அதேதான்.
ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது இன்பம் தருவதே இல்லை என்றில்லை. ஆணுறை அணிந்து கொள்வதால் ஒருவருக்கு 8/10 என்கிற அளவுகோலில் இன்பம் கிடைக்கிறது என்றால், ஆணுறை இல்லாமல் பத்து என்கிற அளவில் இன்பம் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். சில நிமிடங்கள் கூடுதலாக கிடைக்கும் இன்பத்திற்காக பெண்களை பெரும் தீங்கிற்கு ஆண்களுக்கு உள்ளாக்குகிறார்கள்.
ஆணுறையை வெறுக்கிற ஆண்கள் கூட, தேவையில்லாத கர்ப்பங்களை தவிர்க்க இயலும். விந்தணு வருவதற்கு முன்பு pull out புரிவதன் மூலம் இது சாத்தியம். இம்முறை முழுவதும் கச்சிதமானது இல்லை என்றாலும், இது பெருமளவில் பலன் தரக்கூடியதாக உள்ளது. ஆக, ஆணுறை அணியாத ஆண்கள் கூட சரியான கணத்தில் இயங்கி பெண்கள் கர்ப்பம் அடைவதை தடுக்க முடியும் இல்லையா. ஏன் அப்படி செய்ய மறுக்கிறார்கள். உச்சநிலையில் கூடுதல் இன்பம் நாடி இப்படி ஆண்கள் இயங்குகிறார்கள். உச்சநிலை நிகழும் அந்த ஐந்து நொடி இன்பத்திற்காக பெண்களின் வாழ்க்கை, உடல்நலத்தை சிதைக்கிறார்கள்.
ஆண்கள் இப்படி நடந்து கொள்வது அதிரவைப்பதோடு, கலங்க வைக்கிறது. ஆனால், எனக்கு இது ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை. இந்த உலகத்தில் சுகமே மிக முக்கியம் என்று ஆண்களுக்கு தொடர்ந்து கற்பிக்கிறோம். உடலுறவில் ஈடுபடும் போது சுகத்தில் அக்கறை காட்டு, கர்ப்பம் பற்றி கவலைப்படாதே என்று எண்ண வைக்கப்படுகிறார்கள்.
ஒரு ஆணால் பெண்ணை கர்ப்பம் ஆக்காமல் சுகம் காணவே முடியாதா என்ன? உண்மையில், ஒரு பெண்ணுக்கு எக்கச்சக்க வலி. வேதனை, கொடுங்கனவுகளை தந்துவிட்டும் ஒரு ஆணால் பெண்ணை கர்ப்பமாக்க முடியும். ஒரு பெண்ணால் ஒரு ஆணின் துணையோடும், எந்த ஆணின் துணை இல்லாமலும் உச்சநிலையை கர்ப்பம் தரிக்காமலே பல முறை அடைய இயலும். ஒரு பெண்ணின் உச்சகட்ட இன்பத்திற்கும் அவளுடைய கர்ப்பத்திற்கும் தொடர்பில்லை. பெண்ணின் clitoris பிள்ளைகள் பெற்றுப்போட படைக்கப்படவில்லை, அது இன்பத்திற்கானது மட்டுமே.
ஆண்கள் பெண்ணை கர்ப்பம் ஆக்காமலே உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும். பொறுப்பில்லாமல் ஆண்கள் உச்சநிலையை எட்டுகிற போது தான் பெண்கள் கர்ப்பமாக நேரிடுகிறது.
ஆண்களுக்கு அடிக்கடி தாங்கள் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரிவதில்லை. தான் தான் கர்ப்பத்திற்கு காரணமோ என்று கேள்வி எழுப்பிக்கொள்ளவோ, சிந்திக்கவோ தயாராகவும் இல்லை. ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஆண்களுக்கு தேவையில்லாத கர்ப்பங்களால் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு பெண் கர்ப்பத்தை சத்தமில்லாமல் கலைக்க முடிவு செய்தால், ஆணுக்கு தான் பொறுப்பில்லாமல் உடலுறவு கொண்டதே அதற்கு காரணம் என்று தெரியாமலே போகும். அந்த கர்ப்பத்தை கலைக்க வேண்டாம் என்று பெண் முடிவு செய்தாலும், அல்லது குழந்தையை தத்து கொடுத்தாலும் ஆணுக்கு தன்னுடைய பொறுப்பற்ற செயல் தெரியப்போவதில்லை. ஆனால், அந்த ஆணின் 50% மரபணுவோடு அப்பிள்ளை நடமாடும்.
பொறுப்பில்லாமல் என்னை கர்ப்பவதி ஆக்கியிருக்கிறாய் என்று ஆணிடம் பெண் சொல்ல நேர்ந்தாலும், அதற்கென்ன பெற்றுக்கொள், வளர்த்து கொள்ளலாம் என்று ஆண் எளிமையாக முடித்து கொள்ள இயலும். …..கருக்கலைப்பு குறித்து தீவிரமான விவாதங்கள் நிகழும் போதெல்லாம், ஆண்கள் கருக்கலைப்பு கொடூரமானது, பெண்களுக்கு இப்படி ஆகக்கூடாது என்றெல்லாம் எண்ணக்கூடும். ஆனால், இந்த கர்ப்பத்துக்கு காரணமான ஆண் குறித்து அவர்கள் எண்ணி பார்ப்பதில்லை. ஆண்களை தேவையற்ற கர்ப்பங்களுக்கு பொறுப்பாக்க மறுக்கிறீர்கள் என்றால் நீங்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறீர்கள்.
அன்பர்களே! மருத்துவமனைகள், பெண்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள். கருக்கலைப்பு சட்டங்களை குறை சொல்லாதீர்கள். நம் நாட்டில் கருக்கலைப்புகள் குறைய வேண்டும், அறவே ஒழிய வேண்டும் என்று விரும்பினால் ஆண்களை அவர்களின் செயல்களுக்கு பொறுப்பாளி ஆக்குங்கள். தேவையில்லாமல், பெண்ணின் விருப்பமின்றி அவளை கர்ப்பமாக்கும் ஆண்கள் உடனடியாக பாதிப்புக்கு ஆளானால் எப்படி இருக்கும் ? அந்த பாதிப்பு ஒரு பெண்ணை ஒன்பது மாதங்கள் கர்ப்ப வேதனையில் தவிக்க விடுவதை போல கடுமையானதாக, தீமைமிக்கதாக, அருவருப்பானதாக. அச்சம் தருவதாக, ஆபத்தானதாக, வாழ்க்கையை புரட்டிப் போடுகிற வகையில் இருக்க வேண்டுமா என்ன?
என் அனுபவத்தில் ஆண்கள் தங்களுடைய பிறப்புறுப்பை நேசிக்கிறார்கள். பொறுப்பற்ற விந்தணு செலுத்தல்களால் அவர்களின் இனப்பெருக்க திறன் ஆபத்துக்கு ஆளாகும் என்றால் ஆண்கள் பொறுப்புள்ளவர்களாக ஆகலாம். காயடிப்பது கொடூரமான, அநியாயமான தண்டனையாக தோன்றுகிறது அல்லவா? பல லட்சம் பெண்களை ஒவ்வொரு ஆண்டும் மாதக்கணக்காக வாந்தி எடுக்க வைத்து, பல கிலோ பாரத்தை சுமக்க வைத்து, குழந்தை பிறப்பின் போது அவர்களின் உடலை கூறுபோட்டு சிதைப்பது நியாயமானதா? பல பெண்கள் தங்களின் விருப்பமின்றி திணிக்கப்பட்ட கர்ப்பம், குழந்தை உற்பத்திக்காக சாவதை விட ஆண்களை காயடிப்பது மேலானது இல்லையா?
இதை சட்டமாக்கி, அமல்படுத்தி, ஊடகத்தின் மூலம் செய்தியை பரப்பினால் பொறுப்பற்ற முறையில் பெண்களை கர்ப்பவதிகளாக ஆக்குவது நின்றே போயிருக்கும். கருக்கலைப்பே இருக்க கூடாது எனக் கருதுபவர்கள் ஆண்டிற்கு சில லட்சம் பெண்கள் சாவதை விட, ஒரு சில காயடிப்புகள் சரியென்று கருதுவீர்களா? ஐயையோ என்று பதறுகிறது இல்லையா? நீங்கள் கருக்கலைப்புகளை பற்றியா அக்கறையோடு இருக்கிறீர்கள்? பெண்களின் உடல்கள், கற்புத்திறம், பாலினப்பெருமையை காவல் காப்பதில் தானே உங்கள் கவனம் எல்லாம் குவிந்து இருக்கிறது. காயடிக்கப்பட்ட ஆண்கள் வருங்காலத்தில் குழந்தை பெறுவதற்கு வசதியாக விந்தணுக்களை சேமித்து கொள்ளலாம் என்கிற சலுகையை தரலாம்.
இப்படி ஆண்களை உடல்ரீதியாக துன்புறுத்துவதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை இல்லையா? ஆனால், பெண்கள் மட்டும் உடலளவில் சித்திரவதை அனுபவிக்க வேண்டும். சரி விடுங்கள். தடுப்பு முறைக்கே வருவோம். வயதுக்கு வந்ததுமே ஆண்கள் வாசக்டமி செய்து கொள்ள வேண்டும். இவை பாதுகாப்பானவை. நினைத்த நேரத்தில் சரிசெய்து கொள்ள முடியும். ஒரே ஒரு நாள் சற்றே வலியிருக்கும், பெரிதாக எந்த பக்க விளைவுகளும் இல்லை. (பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உண்டுவிட்டு அனுபவிக்கும் மோசமான பக்க விளைவுகளோடு ஒப்பிடும் போது இது ஒன்றுமே இல்லை)
அந்த ஆண் பொறுப்பான இளைஞனாக வளர்ந்தான் என்றால், ஒரு இணையை கண்டடைந்தான் என்றால், அவர்கள் இருவரும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பினால் வாசக்டமியில் இருந்து அவனுக்கு விடுதலை தரலாம். குழந்தை பெறுகிற வயது முடிந்ததும் மீண்டும் வாசக்டமி செய்து விடலாம். பாதுகாப்புக்கு விந்தணு வங்கியில் விந்துவை சேகரித்து விடலாம்.
என்னுடைய இந்த திட்டங்கள் அனைத்துமே உங்களுக்கு பிடிக்கவில்லை இல்லையா? உங்களுக்கு சரியென்று படும் மாற்று திட்டங்களை முன்வையுங்கள். என்னுடைய வாதம் எல்லாம் ஒன்றே ஒன்று தான். கருக்கலைப்பை பொறுத்தவரை ஒட்டுமொத்த கவனத்தையும் பெண்கள் மீதே குவிக்காதீர்கள். . தேவையில்லாத கர்ப்பங்களுக்கான தீர்வாகவே கருக்கலைப்புகள் உள்ளன.
கருக்கலைப்பை நிறுத்த வேண்டும் என்றால், தேவையற்ற, பொறுப்பற்ற கர்ப்பங்கள் என்கிற நோயை குணப்படுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி ஆண்களை நோக்கி கவனத்தை திருப்புவது ஆகும். எல்லா தேவையற்ற கர்ப்பங்களும் ஆண்களின் பொறுப்பற்ற விந்தணு வெளியேற்றத்தின் மூலமே நிகழ்கின்றன. ஒரு ஆணாக இனிமேலும் பொறுப்பில்லாமல் உடலுறவின் போது செயல்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அபராதம், உரிமை பறிப்பு, விடுதலை ஒழிப்பு, உடல் வலி? எது உங்களை மாற்றும்.
ஆண்களே! உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களோடு உடலுறவு கொள்ளும் பெண்ணின் உயிரை உங்களுக்கு கிட்டும் சில கண இன்பம், சவுகரியத்தை விட மேலானதாக கருத என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு உணவுப்பண்டத்தை விரும்பி உண்கிறீர்கள் என எண்ணிக்கொள்ளுங்கள். அதை உண்கிற போதெல்லாம் நீங்கள் மிகவும் அன்பு செய்யும் ஒரு உறவுக்கு உடல், உளப்பிணி ஏற்படுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள். அந்த உணவை தவிர்க்க கூட தயங்க மாட்டீர்கள் இல்லையா? ஆனால், அந்த உணவை கையால் ஆனந்தமாக கொறிப்பதற்கு பதிலாக சற்றே மெனக்கெட்டு ஸ்பூனால் சாப்பிட்டால் உங்கள் உறவுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றால் அந்த சிறிய இன்பத்தியாகத்தை மேற்கொள்வீர்கள் இல்லையா? ஒவ்வொரு முறையும் உணவை ஆசையாக அள்ளி உண்பது மட்டும் தான் முக்கியம், என் அன்புக்குரியவர் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நடந்து கொள்ள மாட்டீர்கள் அல்லவா?
ஆணுறைகள் தான் அந்த எளிய மாற்றம். பெண்களை ஆபத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டாமே. பெண்களின் வலியை அதிகப்படுத்தி உங்களுடைய இன்பத்தில் உச்சம் எட்ட வேண்டுமா? ஆண்களே அரசாங்கத்தை பெரும்பாலும் நடத்துகிறீர்கள். நீங்களே சட்டங்கள் இயற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் நினைத்தால் கருக்கலைப்புகளை எந்த சட்டமும் இல்லாமலே முற்றிலும் நிறுத்த முடியும்.
மொத்தமாக சொல்ல வருவது இவ்வளவு தான்: பெண்களின் உடல், பாலுணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயல வேண்டாம். தேவையில்லாத, பொறுப்பற்ற கர்ப்பங்களுக்கு ஆண்களே பொறுப்பு.
புது யுக நாத்திகர்ளுக்கும், பெரியார், மார்க்ஸ் போன்ற நாத்திகர்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. பெரியார், மார்க்ஸ் முதலானோர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிணங்களைப் பயன்படுத்தித் தங்களுடைய நாத்திக கருத்துக்களை, மதம் குறித்த விமர்சனங்களை அவர்கள் பரப்பவில்லை. ‘Pray for Syria’ என்று ஹாஸ்டேக் பரவுவவதை பல்வேறு மீம்களின் மூலம் புது யுக நாத்திகர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். எங்கும் நிறைந்திருப்பதாக ஆத்திகர்கள் சொல்லிகொள்ளும் கடவுளின் இயலாமையைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். இல்லாத ஒருவரிடம் மன்றாடுவதால் என்ன பயன் என்று நகைக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால், புது யுக நாத்திகர்கள் பிணங்களைக் கொண்டு தங்களுடைய கருத்துக்களைப் பரப்ப முயல்வது கண்ணியமற்ற செயலாகும். இச்செயல் மக்களை அழித்தொழித்த அநியாயத்தை விட அநீதியானது ஆகும். இது வீழ்ந்து போன உயிர்களுடைய மானுட மேன்மையை அபகரிக்கிறது. இந்தப் புது யுக நாத்திகர்களைப் பொறுத்தவரை தங்களுடைய கருத்துககளைப் பரப்பும் கருவிகளாக மட்டுமே உயிரிழந்த மக்கள் மாறுகிறார்கள். இதனால் தானோ என்னவோ, எல்லா நாத்திகர்களும் கருணை மிக்கவர்களாகவோ, மனிதநேயர்களாகவோ (அவர்கள் இப்படித்தான் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்) இருக்க வேண்டியதில்லை எனக் கருத வேண்டியிருக்கிறது. இந்த இரக்கமற்ற வெறியர்கள் தங்களுடைய தட்டையான நாத்திகத்தைத் தங்களுடைய பெற்றோர்கள், உடன்பிறந்தோர், உறவினர்கள் பிணங்களைக் கொண்டு பரப்புவார்களா என வியக்கிறேன். இந்தப் புது யுக நாத்திகவாதிகளும் கூடத் தேவை ஏற்படுகிற போது தங்களுடைய வாழ்க்கையிலும், வீடுகளிலும் மதச் சடங்குகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம்.
இந்த இடத்தில் தான் தங்களை அறிவுமிக்கவர்களாகக் கருதிக்கொள்ளும் போலியான இக்கூட்டத்திடம் இருந்து மார்க்ஸ், பெரியார் முதலானோர் முரண்படுகிறார்கள். மார்க்ஸ், ‘மத அவலமானது ஒரே வேளையில் உண்மையான அவலத்தின் வெளிப்பாடாகவும், அந்த உண்மையான அவலத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் திகழ்கிறது. மதம் ஒடுக்கப்பட்ட மனிதனின் ஏக்கப்பெருமூச்சாக, இதயமற்ற உலகத்தின் இதயமாக, ஆன்ம உயிர்ப்பற்ற சூழல்களின் ஆன்மாவாக உள்ளது. அது வெகுமக்களின் அபின்.’ என்றார். பெரியாரும் புது யுக நாத்திகவாதிகளிடம் இருந்து வேறுபடுகிறார். தனக்கு உண்மையான அன்போடு விபூதியை வழங்கிய உற்ற தோழரின் நேசத்தை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட மூடத்தனமான மத வழக்கங்களை அயராது எதிர்த்து களமாடிய பெரியார், விபூதியை தன்னுடைய நெற்றியில் பூசிக்கொள்ளத் துளியும் தயங்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களான மார்க்ஸ், பெரியாரின் கருத்துக்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிணங்களைக் கொண்டு நாத்திகத்தைப் பரப்பும் ஈவிரக்கமற்ற பரப்புரைகளை நான் கண்டதில்லை.
இப்படிப்பட்ட சூழல்களில், ஒரு அரசியல் கருத்தை கட்டி எழுப்பவதே கொடூரமான செயலாகத் தோன்றுகிறது. இவர்கள் உண்மையில் ஆதரவற்ற இறந்து போன அம்மக்களின் இறப்புக் குறித்துக் கவலைப்படுகிறார்களா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. எப்போது சாவார்கள், எப்போது பரப்புரையைத் தீவிரமாக மேற்கொள்ள முடியும் என்று இவர்கள் காத்து கொண்டிருந்ததைப் போல இருக்கிறது. இவர்களுக்கு நசுக்கப்பட்ட ஆன்மாக்களை விட, தங்களுடைய நாத்திக பரப்புரையே முக்கியமானதாக இருக்கிறது போல. ஒருவருக்கு உண்மையாகவே சிரியாவில் இறந்து போயிருக்கும் மக்கள் குறித்து அக்கறை இருக்கும் என்றால், தங்களுடைய ஒட்டுமொத்த கோபத்தையும், விமர்சனத்தையும் அதற்குக் காரணமான சக்திகளின் மீது தானே தொடுக்க வேண்டும்? ஏதேனும் அதிசயம் நடந்து அம்மக்கள் காப்பாற்றப்பட மாட்டார்களா என நெக்குருகி பிரார்த்திப்பவர்களைக் குத்தி கிழிக்க மாட்டார்கள். மனிதனின் இயலாமையின், காயங்களின் படைப்பு தானே இறைவன்? தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கட்டுப்படுத்த முடியாத ஆற்றாமையில் தானே கடவுளை மனிதன் உருவாக்கினான்? துளியும் அதிகாரமற்ற இறைநம்பிக்கை உள்ள இம்மக்களின் ஹாஷ்டேக்குகள் சிரியாவின் மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற உளமார்ந்த ஏக்கத்தின் வெளிப்பாடே அன்றி, தங்களுடைய இறைநம்பிக்கையைப் பரப்புவது அவர்களின் நோக்கமில்லை. இதைக்கூடப் பகுத்து உணர முடியாத அறிவால் என்ன பயன்? ஆத்திகர்களின் இந்த இறைஞ்சல்களுக்குப் பின்னால் இருப்பது அன்பும், அக்கறையும் மட்டுமே. அதனை அவர்கள் கொட்டித்தீர்ப்பதை நாம் தடுக்கக் கூடாது.
இந்தக் கொந்தளிப்பான தருணத்தில் இப்படி நடந்து கொள்வது சரியானது இல்லை. இந்த அணுகுமுறை துளியும் இரக்கமற்ற ஒன்றாகும். இவற்றை எல்லாம் இந்தப் புது யுக நாத்திகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று எண்ணிக்கொண்டு, தங்களுடைய வாய்ப்புகளால் ஆன வசந்த மாளிகையில் இருந்து கொண்டு அனைத்தையும் அணுகுவது சரியல்ல. ஒருவேளை இவைதான் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கின்றனவோ என்னவோ – Suresh RV