‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ எனும் இரு சொற்களின் அடர்த்தி, வலி அபரிமிதமானது. எது தனக்கான நாடு? சமத்துவம், சம உரிமைகள், சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பிறப்பின் அடிப்படையில் அந்நியரைப் போல நடத்தப்படுவது தகுமா? நீதி, நியாயம், நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பை உறுதியளிக்கும் அந்த சமத்துவ விசாவுக்கான காத்திருப்பு எப்போது கைகூடும்? இப்படி பற்பல வினாக்களை முப்பதிற்கும் குறைவான பக்கங்களில் பாபாசாகேபின் தன் வரலாறு எழுப்புகிறது.
ஏராளமான நூல்களை எழுத வேண்டும் என்கிற கனவுகள் கைகூடுமுன்னே அண்ணல் நம்மை விட்டுப்பிரிந்தார். அரசமைப்புச் சட்ட உருவாக்கம், கட்சிப் பணிகள், இந்து சட்ட மசோதா வரைவினை எழுதுதல், சித்தார்த்தா கல்லூரி உள்ளிட்ட கல்வித்தலம் எழுப்பல், மக்கள் பணி, இதழில் என ஓய்வு அலைச்சல் இல்லாமல் இயங்கியவரை வறுமை, ஏளனம், அவமதிப்பு, புறக்கணிப்பு வீழ்த்தவில்லை. அத்தனைக்கு நடுவிலும் அவர் எழுதினார், இயங்கினார். டாக்டர் அம்பேத்கரின் அகவுலகினை கண்முன் நிறுத்தும் எழுத்து இப்போது தமிழில். இந்நூலின் முதல் பதிப்பினை வெளியிட்ட நீலம் பதிப்பகத்திற்கு நன்றிகள்.
இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 158,159-ல் கிடைக்கும். நன்செய் வெளியீடு ஓவியம்: சந்தோஷ் நாராயணன் விலை: 20
நாகராஜ் மஞ்சுளேவின் ‘Jhund’ திரைப்படத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். நாக்பூரின் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை ‘கால்பந்து’ எப்படி மாற்றுகிறது என்கிற ஒரு வரிக்கதையாக இப்படத்தை கடந்துவிட முடியாது. அமிதாப் பச்சன் பேராசிரியர் விஜய் வேடத்தில் இன்னுமொரு ‘மீட்பர்’ வந்து ஈடேற்றும் படமும் அல்ல. இவற்றைத்தாண்டிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை நுண்மையான திரைமொழியில் நாகராஜ் தருகிறார்.
இப்படத்தின் உச்சத்தருணம் ‘தோற்கப்பிறந்தவர்கள்’ பெரும் வெற்றியைப் பெறுவதாக இல்லை. அது முதல் பாதியிலேயே நிகழ்ந்து விடுகிறது. அதற்கடுத்து வறுமை, அநீதி, சாதி, சமூகப்புறக்கணிப்பு, அரசாங்க ஒதுக்கல், ஏளனம் ஆகியவற்றால் ஆன சுவர்களைக் கடந்தேறும் பயணமே பல்வகை கதைகளால் கண் நிறைக்கிறது. அசலான மனிதர்கள் அவர்களாகவே திரையில் மின்னுகிறார்கள். கொண்டாட்டமும், கழிவிரக்கம் கோராத கம்பீரமும் அவர்களின் தொனி, பண்பு, வாழ்வினில் ஒளிர்கிறது.
ஆவணப்படங்களாக, புள்ளிவிவரங்களாக மட்டுமே கடக்கக்கூடிய ஆதிக்க சாதி, ‘படித்த’, ‘மேம்பட்ட’ பொதுபுத்தியிடம் இப்பெருங்கூட்டம் யாசகம் எந்த மறுக்கிறது. இருக்கிறானா, செத்தானா என கவலைப்படாமல் ஆவண ஆதாரங்களில் மட்டுமே குடிமக்களை அளவிடும் அதிகார வர்க்கத்தை எள்ளி நகையாடியபடியே எதிர்கொள்கிறது. ‘உங்களின் பாரதம் கம்பிகளால், அநீதிகளால், புறக்கணிப்புகளால் ஆனது. எங்களுடையதே அசலான, உண்மையான திறமைமிக்க பாரதம். ‘ என நரம்புபுடைக்க வீரவசனங்கள் இல்லாமலே கடத்தப்படுகிறது. ‘நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என அத்தனை அழகியலோடு, நெகிழ வைக்கும் தருணங்களின் வழியே நெக்குருக வைக்கிறார்கள்.
இத்திரைப்படம் நாம் பொதுவாக பார்க்கும் விளையாட்டுப் படங்களில் இருநது வேறுபட்டது. நாமும் பாபாசாகேப்பின் நீல வண்ணம் மின்னும் நாக்பூர் மண்ணிற்கு பயணமாகிறோம். பதைபதைப்பில் பங்குகொள்கிறோம். வண்ண உடை அணிந்து போர்க்களத்தில் விழாக்கோலம் பூணுகையில் சிரித்து இணைகிறோம். ‘என் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருந்தாலும் நான் யாருடைய பரிதாபத்துக்குரியவனாக இருக்க விரும்பவில்லை’ எனும் அண்ணல் அம்பேத்கரின் வரிகள் திரைக்காவியமாக மாறுகிறது. கழிசடைகள் அல்ல கனவுக்காட்டாறு நாங்கள எனும் கனவு அனுபவம். சென்னையில் ‘Inox’ ல் மட்டும் subtitles உடன் காணக்கிடைக்கிறது. தவறாமல் பாருங்கள்.
தந்தை என்.சிவராஜ் அவர்கள் ஆசிரியராக நடத்திய ‘ஜெய் பீம்’ இதழ் ஏப்ரல் 13 1946ல் பாபாசாகேப் அம்பேத்கரின் அண்ணலின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. பாபாசாகேப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கீழ்கண்ட சிறப்புச்செய்தியை வழங்கினார் :
என்னுடைய 55-வது பிறந்த நாளையொட்டிய சிறப்பிதழிற்கு நான் பங்களித்து என் கருத்துகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டீர்கள். வெளிநாடுகளில் மக்கள் தங்களுடைய இறைத்தூதர்களின் பிறந்தநாட்களையே கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கெடுவாய்ப்பாக, இந்தியாவில் மட்டுமே இறைத்தூதர்களுக்கு நிகராக அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப்படுகின்றன. இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பது பரிதாபகரமானது. தனிப்பட்ட முறையில் என் பிறந்த நாளை கொண்டாடுவது எனக்கு உவப்புடைய ஒன்றல்ல. உச்சபட்ச ஜனநாயகவாதியான நான், நாயக வழிபாடானது ஜனநாயகத்திற்குப் பெருங்கேடு விளைவிக்கிறது எனக்கருதுகிறேன். ஒரு தகுதிமிக்கத் தலைவன் மீது நேசம், அன்பு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றைச் செலுத்துவது ஏற்புடைய ஒன்றுதான். அதுவே அத்தலைவனுக்கும் அவர் தொண்டர்களுக்கும் போதுமானது. ஆனால், தலைவர்களை வழிபடுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. அது இருதரப்பினரின் ஒழுக்கச்சிதைவிற்கு வழிவகுக்கும். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். எப்போது ஒரு அரசியல் தலைவரை இறைத்தூதர்களுக்கு நிகராக முன்னிறுத்துகிறோமோ, அப்போது அவர் இறைத்தூதரைப் போல நடந்து கொண்டு தன்னைப் பின்பற்றுபவர்களுக்குச் செய்தி வழங்க வேண்டும்.
புகைப்பட நன்றி : அம்பேத்கர் அம்பேத் தளம்
நான் உங்களுக்கு என்ன செய்தியை வழங்குவது? அதற்குகுப் பதிலாக ஒரு கிரேக்க புராணக் கதையைச் சொல்லி அதன் நீதியை தங்களுக்குச் சுட்டிக்காட்ட முனைகிறேன். ஹோமர் கிரேக்க இறைவி டெமிடருக்கு இயற்றிய பாடலில் இக்கதை காணக்கிடைக்கிறது. டெமிடர் தன்னுடைய மகளைத் தேடி கேலியோஸ் மன்னனின் அவைக்கு வருகிறார். எளிய செவிலித்தாய் உருவத்தில் வந்திருந்த இறைவியை யாராலும் கண்டுகொள்ள இயலவில்லை. இராணி மெட்டோநிய்ரா அண்மையில் தான் பெற்றெடுத்திருந்த பச்சிளம் குழந்தை டெமோஃபூனை (பிற்காலத்தில் ட்ரைப்ட்டோலமஸ் என அறியப்பட்டவன்) டெமிடரிடம் வளர்த்தெடுக்கக் கொடுக்கிறார்.மொத்த மாளிகையும் உறங்கிய பிறகு, ஒவ்வொரு இரவும், தொட்டிலில் இருந்து மழலையை வாரியெடுத்து, மின்னுகிற தீக்கங்குகளால் ஆன படுக்கையில் கிடத்தி வந்தார். பார்ப்பதற்குக் கொடூரமானதாகத் தோன்றினாலும், உண்மையில் அக்குழந்தையை தெய்வத்தன்மை உடையவனாக ஆக்கும் பேரன்பு, வேட்கையினால் தான் டெமிடர் அப்படிச் செய்தார். தீக்கங்கின் வெம்மையில் சிக்கி படாதபாடுபட்ட மழலை டெமோஃபூன் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று வளர்ந்து வந்தான். படிபடிப்படியாகச் சற்று தெய்வத்தன்மையும், சற்று கட்டுரமும், சற்று நம்புதற்கரிய மகிமையோடும் அவன் வளர்த்தெடுக்கப்பட்டான்.
இராணி மெட்டோநிய்ரா மாலை வேளை ஒன்றில் பரபரப்புடன் சோதனை நடக்கும் அவ்வறையின் கதவை திறந்து, தேவையற்ற அச்சத்தால் உந்தப்பட்டு வளர்ப்புத்தாயை தள்ளிவிட்டு, பேராளுமையாக மாறிக்கொண்டிருந்த குழந்தையைத் தீக்கங்குகளிலான தொட்டிலில் இருந்து மீட்கிறார். குழந்தை காப்பாற்றப்பட்டாலும் அதன் பேராளுமையையும், தெய்வத்தன்மையையும் இழக்கிறது.
இக்கதை நமக்கு என்ன நீதியைக் கூறுகிறது? என்னைப் பொருத்தவரை , வாழ்வினில் மேன்மையை இன்னல்களையும் தியாகங்களையும் சந்தித்தால் மட்டுமே எட்டமுடியும் எனக்கற்பிக்கிறது. மானுடப்பண்போ, தெய்வத்தன்மையோ அக்னிப்பரீட்சைக்கு ஆளாகாமல் கிட்டுவதில்லை. நெருப்புப் பரிசுத்தப்படுத்துகிறது, உரமேற்றுகிறது. அதேபோல் தான் போராட்டங்களும், துயரங்களும் வலிமை கூட்டும். ஒடுக்கப்பட்ட எந்த மனிதனும் போராட்டங்களும் இன்னல்களும் இன்றி மேன்மையை அடைய இயலாது. அவன் தன் சுகதுக்கங்களையும், தற்போதைய உடனடித் தேவைகளையும் தியாகம் செய்தால்தான் ஓர் நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும். விவிலியத்தின் மொழியில் சொல்வதென்றால் வாழ்வின் ஓட்டப்பந்தயத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர். ஏன்? அதற்கான காரணம் தெள்ளத்தெளிவானது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கைப்பந்தயத்தில் நிகழ்காலத்தின் இன்பங்களை எதிர்காலத்தேவைகளுக்காகத் தியாகம் செய்யும் தைரியமோ, மன உறுதியோ இல்லாததால் மேன்மையை எட்ட இயலவில்லை.
இக்கதையில் உள்ளதைவிட மேலான,உயர்ந்த அறிவுரை உள்ளதா? எனக்குத் தெரிந்தவரை இதுவே தீண்டப்படாதவர்களுக்கு வழங்கும் சிறந்த, உகந்த அறிவுரையாகும். அவர்களின் போராட்டங்கள், அவர்களின் வேதனைகளை அறிந்தே உள்ளேன். விடுதலைக்கான அவர்களின் போராட்டத்தில் என்னைவிடப் பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என நன்கறிவேன். இத்தனைக்குப் பிறகும், அவர்களுக்கு வழங்க என்னிடம் ஒரே செய்தி தான் உள்ளது. என்னுடைய செய்தி இதுதான்: போராடுங்கள், இன்னமும் போராடுங்கள், தியாகம் செய்யுங்கள், இன்னமும் தியாகம் புரியுங்கள். தியாகங்களுக்கும், துயரங்களுக்கும் துவளாத போராட்டங்கள், இடையறாத போராட்டங்கள் மட்டுமேவிடுதலை அளிக்கும். வேறெதுவும் நமக்கான விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை.
தீண்டப்படாதவர்கள் ஒன்றுபட்டு எழுந்து,எதிர்க்கத் துணிய வேண்டும். தாங்கள் ஒப்புக்கொடுத்திருக்கும் அரும்பணியின் புனிதத்தை உணர்ந்து , உத்வேகத்தோடு ஒருங்கே உறுதிபூண்டு தங்களின் இலக்கை அடைய முயலவேண்டும். அவர்கள் காரியத்தின் மகத்துவத்தையும் உன்னத நோக்கத்தையும் மனதில் நிறுத்தி பிரார்த்தனையாக இதனைக் கூட்டாக உச்சரிக்க வேண்டும் :
தங்களோடு பிறந்தவர்களை வளர்ப்பதற்கான கடமைக்காகக் களம் கண்டு உயிர்வாழ்பவர்கள் பேறு பெற்றோர். தங்கள் காலத்தின் மலர்களை, உடல்,பொருள், ஆவியின் வலிமையை, தீரத்தை எல்லாம் தங்களின் அடிமைத்தளையை அறுக்க அர்ப்பணித்தவர்கள் பேறு பெற்றொர். நன்மை வரட்டும், தீமை வரட்டும், கோடை சுடட்டும், கடுங்குளிர் வாட்டட்டும், புகழ் பெருகினாலும், அவமானங்கள் அடைந்தாலும் தீண்டப்படாதவர்கள் தங்களுடைய ஆண்மையை மீட்கும் வரை துவளமாட்டோம் என உறுதியோடு உழைப்பவர்கள் பேறுபெற்றோர்”
‘நல்ல உயரம், கட்டுகோப்பான உடல், கரிய நிறம். லாவகமாகவும், துரிதமாகவும் இயங்கும் மூளைக்குச் சொந்தக்காரர். அவர் அறிவின் பேருரு. வெளியே கரடுமுரடாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மானுடம் மிகைத்த பண்பாளர். இன்னல்கள் இடைவிடாது துரத்தினாலும், எப்போதும் வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடுக்காத தீரம் மிக்கவர். ஒரு காலத்தில் சமூகத்தில் மேல்தட்டினர் வாழும் பகுதியில் அவர் கீழ்சாதி என்பதால் தங்க கூட இடம் தரப்படவில்லை. அவரின் மனவுறுதியின் தீரம் அவரை மகத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்றது.’ (ஹரி ஷரண் சப்ரா (தொகுப்பாசிரியர்) Opposition in the Parliament, Delhi, New Publishers, 1952, பக்கம் 142)
மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பத்தி ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு பிராமண எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இது அப்போது அம்பேத்கர் தன்னுடைய அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருந்தார் என்பதைத் தெளிவாக நிறுவுகிறது. இப்படிப்பட்ட அங்கீகாரம் அம்பேத்கருக்கு கிடைத்தற்கு அவர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புக்கு உரிய ‘வரைவுக்குழு’வின் தலைவராக அம்பேத்கர் திகழ்ந்ததும் காரணம். அந்த வரைவுக்குழுவில் சட்ட நிபுணரான அம்பேத்கர் உன்னதமான உச்சத்தை எட்டினார். அதுவே அம்பேத்கரின் வாழ்வின் பெருமைமிகு காலமாகும். இறுக்கமான சூட், டை, வட்ட வடிவிலான கண்ணாடி, கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி, கையில் அரசியலமைப்புச் சட்டம் என்கிற அம்பேத்கரின் உருவமே பொதுமக்களின் மனக்கண்ணில் இன்றும் அகலாமல் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இப்படி அம்பேத்கரை சிலையாகச் செதுக்குவதும் வழக்கமானது. 1
தீண்டப்படாத சாதியை சேர்ந்த ஒருவர் தேசிய அரசியலில் மாபெரும் தாக்கம் செலுத்துகிற நிலையை அடைந்தார் என்பதே உயர் சாதி இந்துக்களிடமிருந்து கசப்பான விமர்சனங்களை ஊற்றெடுக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார் என்பதையே நிராகரிக்கிற அளவிற்குச் சிலர் சென்றார்கள்.
அம்பேத்கர் ‘போலி மனுவா’?
அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவிற்கு அம்பேத்கர் நியமிக்கப்பட்டதால், அவருக்கு ‘நவீன மனு’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது. இப்பட்டம் மனுநீதியை இயற்றிய புரதான மனுவை நினைவுபடுத்தியது. மனுநீதியை 1927-ல் நடைபெற்ற மகத் சத்தியாகிரகத்தின் போது அம்பேத்கர் எரித்தார் என்பதை நினைவுகூர்ந்தால் இந்தப்பட்டம் வேடிக்கையான ஒன்றாகத் தெரியும். அம்பேத்கர் குறித்த தன்னுடைய குற்றப்பத்திரிகையில் அருண் ஷோரி, அம்பேத்கரை ‘போலி மனு’ என்று முத்திரை குத்துகிறார். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் பல்வேறு துணை குழுக்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளைச் செப்பனிடும் பொறுப்பு மட்டுமே வரைவுக்குழுவிற்கு இருந்தது. வரைவுக்குழுவின் பரிந்துரைகளையும் கூட அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முழு அமர்வு விவாதித்தே முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தவில்லை என்பது அருண் ஷோரியின் வாதம். மேலும் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. அக்கட்சியினருக்குள் தான் ஒவ்வொரு சட்டப்பிரிவின் முக்கியமான அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன என்பது அருண் ஷோரியின் வாதம்.2 அம்பேத்கர் துணை குழுக்கள், வரைவு குழு, முழு அமர்வு ஆகிய பல இடங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் தோற்கிற பக்கமே இருந்தார் என்று ஷோரி வாதிடுகிறார். அருண் ஷோரியின் இக்கருத்துகள் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன என்பதே என்னுடைய வாதமாகும். காங்கிரஸ் தலைவர்கள் முன்னரே பேசி வைத்துக்கொண்டு சில சட்டப்பிரிவுகளை வேகமாக நிறைவேற்ற முயன்றார்கள் என்று அம்பேத்கர் அவ்வப்போது குறைபட்டுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கர் மற்றவர்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளை வெறுமனே செப்பனிடுவதொடு மட்டும் நின்றுவிடவில்லை. 3
அருண் ஷோரி அம்பேத்கரை சித்தரிக்கும் விதத்தில் இருந்து அறிஞர்கள் ஹெச்.எஸ்.வர்மா, நீதா வர்மா முற்றிலும் முரண்படுகிறார்கள். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவரின் ஆட்சி நிர்வாகத்திறனும், அரசியல் தாக்கமும் தான் காரணம் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.4 அம்பேத்கரை வரைவுக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் காரணமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 1946-ல் சபையில் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அம்பேத்கரின் தலையீடு பலரையும் கவர்ந்தது. நேரு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன் அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களைப் பட்டியலிட்டார். சபையின் இன்னொரு உறுப்பினராக ஜெயகர் ஒரு பிரச்சினையை எழுப்பினார் பாகிஸ்தானா, இந்தியாவா என்று இன்னமும் ஊசலாடிக்கொண்டிருந்த முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் சபையில் இணைவதா, வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலையில் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார் ஜெயகர். அடுத்து எழுந்த அம்பேத்கர், மிகவும் அற்புதமானதொரு ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரை நடுநிலைமையோடு திகழ்ந்ததோடு, அம்பேத்கருக்கு இருந்த கச்சிதமான, ஆழ்ந்த சட்ட அறிவையும் புலப்படுத்தியது. அம்பேத்கர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமரசத்தீர்வை முன்வைத்தார். ஆகவே, அம்பேத்கரின் திறமையினால் தான் அவரை அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமித்தார்கள் என்று வர்மாக்கள் வாதிடுகிறார்கள்.
அடுத்ததாக, நாம் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இக்குழு அடிப்படையான சட்டங்களை இயற்றுகிற பணியில் ஈடுபடவில்லை. பல்வேறு துணைக்குழுக்கள் பரிந்துரைத்த சட்டப்பிரிவுகளை, செம்மைப்படுத்தி, செப்பனிட்டு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன்னால் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பே வரைவுக்குழுவுக்கு உரியது. சபையானது பல்வேறு வரைவுகளை வாசிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் சட்டப்பிரிவுகள் குறித்து நிகழ்ந்த விவாதங்களை நெறிப்படுத்தி, வழிநடத்தும் பணியில் வரைவுக்குழுவின் உறுப்பினர்கள், அதிலும் அடிக்கடி அம்பேத்கரே ஈடுபட்டார். மேலும், அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் வரைவுக்குழுவின் உறுப்பினராகவும், பதினைந்து குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினராகவும் திகழ்ந்த வெகு சில உறுப்பினர்களில் அம்பேத்கரும் ஒருவர்.5 ஆகவே, அம்பேத்கரால் அனைத்து சட்டப்பிரிவுகள் சார்ந்து நடைபெற்ற விவாதங்களையும் கவனிக்க முடிந்தது. சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவுகள் சார்ந்த விவாதங்களையும் கூர்ந்து நோக்க முடிந்தது.
பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் வரைவுக்குழுவின் தலைவர் என்கிற முறையில் அம்பேத்கருக்கும், குழுக்களின் செயலாளராகத் திகழ்ந்த எஸ்.என்.முகர்ஜிக்கும் (இவருக்கு இறுதியாக அம்பேத்கர் நெகிழவைக்கும் புகழாரத்தைச் சூட்டினார்) அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் சட்டப்பிரிவுகளைத் திருத்தியமைப்பதோடு,பல சட்டப்பிரிவுகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிற போது அவற்றைப் பல்வேறு குழுக்களிடம் இருந்து பெறுகிற பொறுப்பும் இருவருக்கும் உரியதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே இல்லை. இதனால், இந்தத் திருத்தியமைக்கும் பணிச்சுமைகள் பெரும்பாலும் அம்பேத்கரின் தோளிலேயே விழுந்தன. இந்த வரைவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி நவம்பர் 1948-ல் சபையின் முன்னால் இப்படிப் பேசினார்:
‘நீங்கள் வரைவுக்குழுவிற்கு நியமித்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் பதவியை விட்டு விலகியதால், அந்த இடத்துக்கு வேறொரு நபரை நியமனம் செய்தீர்கள். ஒரு உறுப்பினர் காலமானார். அவரின் இடம் நிரப்பப்படவில்லை. இன்னொரு உறுப்பினரோ அமெரிக்காவில் இருந்தார். அவரின் இடத்திற்கும் யாரும் கொண்டுவரப்படவில்லை. இன்னொரு நபரோ அரசாங்க அலுவல்களில் மும்முரமாக மூழ்கிவிட்டார். ஓரிரு உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து வெகுதூரம் தள்ளியிருந்தார்கள். அவர்களின் உடல்நலக்குறைவால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் ஒட்டுமொத்த பொறுப்பும் டாக்டர்.அம்பேத்கரின் தலைமேல் விழுந்தது. இப்பணியை மெச்சத்தக்க வகையில் சிறப்பாகச் செய்து முடித்திருக்கும் டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.’ 6 அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதவில்லை என்றாலும், அதன் உருவாக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் அவரின் கைவண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அவர் குழுக்களின் பரிந்துரைகளைத் திருத்தியமைப்பதோடு நிம்மதியடையவில்லை. சபையின் முழு அமர்வில் கலந்து கொண்டு, பொறி பறக்கும் விவாதங்களில் சட்டப்பிரிவின் ஒரு வரைவு ஏன் மற்றொன்றை விட மேம்பட்டது என விளக்கினார். விவாதங்களின் போக்கையே தொடர்ந்து திசைமாற்றும் பணியிலும் அவர் அயராது ஈடுபட்டார். ஆகவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார். இதுவே, ஏன் அருண் ஷோரி அவர் மீது இத்தனை வன்மமிகுந்த விமர்சனங்களை வைக்கிறார் என்பதை விளக்குகிறது. அருண் ஷோரியின் இன்னொரு வாதமான, காந்திய சிந்தனைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார் என்பதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது.
காந்தியை பழிதீர்த்த மேற்கத்திய ஜனநாயகவாதி:
அம்பேத்கர் இளவயதில் வெளிநாட்டில் படித்த போது தான் உள்வாங்கிக்கொண்ட விழுமியங்களையும், அரசியல் மாதிரிகளையும் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் நியாயப்படுத்தினார். அவர் தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டப்பிரிவில், இந்தியாவைச் ‘சோசியலிஸ்ட்’ என அறிவிப்பதில் துவங்கி, இந்திய குடியரசை முழுவதும் மாற்றியமைக்க முயன்ற இடதுசாரிகளை அம்பேத்கர் எதிர்த்தார். அப்படி, இந்தியக்குடியரசை சோசியலிஸ்ட் என்று அறிவித்து விட்டால், ‘அது ஜனநாயகத்தை எளிதாக அழித்துவிடும்’ என்று அவர் எண்ணினார்.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே எது மிகச்சிறந்த சமூக அமைப்பு என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை, அவர் நவம்பர் 19, 1948 அன்று கீழ்கண்டவாறு விளக்கினார்:
‘ நாம் நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசியல் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். எந்த வகையிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவும் தொடர்ந்து சர்வாதிகாரத்தோடு கோலோச்ச கூடாது என்கிற காரணத்துக்காகவே அரசியல் ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம். நாம் அரசியல் ஜனநாயகத்தை நிறுவி விட்டோம் என்பதால், லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்… […] [இப்போது], பொருளாதார ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு மக்கள் பல்வேறு வழிகளைக் கைக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். தனி உரிமை கோட்பாடே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று சிலர் நம்புகிறார்கள்; வேறு சிலரோ சோசியலிச அரசே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று கருதுகிறார்கள்; இன்னும் சிலர், கம்யூனிச சிந்தனைகளே மிகக் கச்சிதமான பொருளாதார ஜனநாயக வடிவம் என்று எண்ணுகிறார்கள் […] [இப்படிப்பட்ட சூழல்களில்] வழிகாட்டு நெறிமுறைகளில் நாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி திட்டமிட்டே இறுக்கமானதாக, நிலையானதாக எழுதப்படவில்லை. பல்வேறு வகையான சிந்தனைகள் கொண்ட பல்வேறு மக்களுக்குப் போதுமான இடத்தை வழங்கியுள்ளோம். லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தை அடைய அவரவரும் அவர்களின் சொந்த வழியில் முயற்சிக்கலாம். அவர்களின் வழியே பொருளாதார ஜனநாயகத்தை எட்டுவதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்று பொதுமக்களை நம்பவைக்க அவர்கள் முயலட்டும்.’8
இந்த வாதத்திற்குத் தன்னை உளமார ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக, இயற்கை வளங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அவர் எதிர்த்தார். அந்தச் சட்டத்திருத்தம் வாக்களிப்பிற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் எத்தகைய அறரீதியான வல்லமை மிக்கவராக திகழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.9 அம்பேத்கர் தாராளவாத ஜனநாயகத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. எப்போதும், வரைவுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட சட்ட வடிவத்தை நியாயப்படுத்துவதையே அம்பேத்கர் செய்வார். ஆனால், ஒருமுறை அவ்வாறு சட்ட வடிவத்தைத் தாக்கல் செய்த போது, அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்று முழு அமர்வை கேட்டுக்கொண்டார். அவர் தாக்கல் செய்த சட்டவடிவத்தைத் திருத்தி, அரசு நிர்வாக அதிகாரத்தையும் , நீதித்துறையையும் முழுமையாகப் பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.10 சில உறுப்பினர்கள், அரசின் அதிகாரத்துக்கு ஆதரவாக வாதிடுவதாகச் சொல்லிக்கொண்டு, நீதித்துறையின் மிகக்கடுமையான கட்டுப்பாடு அரசை பலவீனப்படுத்தும் என்றார்கள். நிற்க கூட நேரமின்றிப் பிரதமராக பல்வேறு பொறுப்புகளோடு இயங்கிக்கொண்டு இருந்த நேரு கூட, அம்பேத்கரின் சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் பொருட்டு விவாதத்தில் கலந்து கொண்டார்.11 இதன் விளைவாக, அம்பேத்கரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, இந்த முழுமையான அதிகாரப் பிரிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் சட்டப்பிரிவு 50 ஆனது. பிரிட்டிஷ் நீதித்துறையின் தாக்கத்தில் ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்தி இருப்பதை அம்பேத்கர் பின்னர் நியாயப்படுத்திப் பேசினார்.12 அதிகாரங்களைப் பிரித்து வைப்பது, எந்த வகையிலும் அரசை பலவீனப்படுத்தி விடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.
கூட்டாட்சி முறையினால் ஏற்படும் அதீதமான அதிகாரப்பரவலாக்கம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிக்கும் என்பதால் அம்பேத்கர் வலிமைமிக்க மத்திய அரசையே ஆதரித்தார். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்குக் கூடுதலான சுயாட்சி கிடைத்தால், தீண்டாமை ஒழிப்பை கட்டாயமாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரி அமல்படுத்தாமல் போகக்கூடும் என்று வாதிட்டார்.13 காந்தியவாதிகள் கிராமத்தில் இருந்து துவங்கி எல்லா மட்டத்திலும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டிருந்தார்கள். இதனால், அதிகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற முடிவு, இயல்பாகவே காந்தியின் ஆதரவாளர்களைக் காயப்படுத்தியது. மிகவும் தீவிரமான காந்தியவாதிகளின் பரிந்துரைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார், அல்லது அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தினார். இவ்வாறு அம்பேத்கர், மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரைப் பழிதீர்த்துக் கொண்டார்.
அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத உபயோகப்படுத்திய எழுத்துக்கள் பெரும்பாலும் காந்திய பார்வை கொண்டவையாக இருக்கவில்லை. நேரு கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் குறித்த தீர்மானத்தில் மகாத்மா காந்தியின் தாக்கம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தென்பட்டது. பல்வேறு குழுக்கள், துணைக்குழுக்களின் அறிக்கைகள் (இவற்றில் முக்கியமான குழுக்கள், துணைக்குழுக்களுக்கு நேரு, படேல் தலைமை தாங்கினார்கள்) காந்தி குறித்து மூச்சே விடவில்லை. இவற்றால் மட்டுமே, நவம்பர் 1948-ல் அம்பேத்கர் சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தில் காந்தியத்தின் முத்திரை இல்லாமல் போனது என்பதற்கு இல்லை. அம்பேத்கர் தாக்கல் செய்த சட்ட வடிவத்தில், மலைப்பை ஏற்படுத்தும் வகையில் 315 சட்டப்பிரிவுகள் இருந்தன. இதனால் தான், அம்பேத்கர் அப்பட்டமான நிறைவோடு, ‘உலகத்தின் வேறு எந்த அரசியலமைப்பு சட்டமும் இத்தனை பெரிதில்லை.’ என்றார்.14 அதற்குப் பின்னர், அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தில் கிராமங்களுக்கு இடமில்லை என்கிற காந்தியவாதிகளின் விமர்சனத்தைக் கீழ்கண்டவாறு தவிடுபொடியாக்கினார்:
‘வரைவு அரசியலமைப்பு சட்டத்தின் மீது வைக்கப்படும் இன்னுமொரு குற்றச்சாட்டு உண்டு. அது பண்டைய இந்திய ஆட்சியமைப்பை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பண்டைய இந்து அரசை மாதிரியாகக் கொண்டு உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். மேற்கின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னமும் தீவிரமான காந்தியப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மத்திய, மாநில அரசுகளும் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான கிராம அரசுகள் மட்டும் இருந்தால் போதுமானது. அறிவார்ந்த இந்தியர்கள் கிராம சமூகத்தின் மீது கொண்டிருக்கும் காதல் பரிதாபப்படும்படியாக இல்லாவிடினும், அளவில்லாததாக இருக்கிறது. […] கிராமம் என்னவாக இருக்கிறது? உள்ளூர் பெருமிதம் ஊற்றெடுக்கும் சாக்கடையாக, அறியாமை, குறுகிய மனப்பான்மை, வகுப்புவாதத்தின் கிடங்காக அல்லவா இருக்கிறது. வரைவு அரசியலமைப்புச் சட்டம் கிராமத்தை தூக்கி எறிந்துவிட்டு, தன்னுடைய அடிப்படையாகத் தனிமனிதனை ஏற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.’15
மகத் சத்தியாகிரகம் அம்பேத்கரால் மார்ச் 20 அன்று 1927-ல் நிகழ்த்தப்பட்டது. அதைப்பற்றி பேராசிரியர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ நூலில் காணப்படும் பக்கங்கள் உங்கள் வாசிப்புக்காக:
மார்ச் 1927-ல் ஒரு மாநாட்டை அம்பேத்கர் மகத்தில் கூட்டினார். இந்த மாநாட்டிற்குத் தலித் அல்லாத தலைவர்கள் ஆதரவு நல்கினார்கள். காயஸ்தரான எஸ்.திப்னிஸ், பூனாவில் பிராமணரல்லதோர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரும், அம்பேத்கர் வழக்கேற்று நடத்தியவருமான கே.எம்.ஜெத்தே ஆகியோர் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தந்தார்கள். மகத்தில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை சமஸ்கிருதமயமாக்கலின் இலட்சியங்களை நோக்கிய பயணமாக இருந்தது:
‘நாம் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் முன்னேற்றத்தை எட்ட மூன்று கட்ட சுத்திகரிப்பிற்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நடத்தையின் பொதுவான தொனியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், நம்முடைய உச்சரிப்பை செம்மைப்படுத்த வேண்டும், நம்முடைய சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இந்தக் கணத்தில் இருந்து நீங்கள் அழுகிப்போன இறைச்சியை உண்பதை துறப்பீர்கள் என்று உறுதி பூணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’
இதற்குப் பிறகு அம்பேத்கர் ஒரு ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசிய மேடையில் துவங்கிய அந்த ஊர்வலம், சவுதார் குளத்தில் முடிந்தது. தண்ணீர் மூலமான அந்தக் கிணறு எழுத்தளவில் தீண்டப்படாத மக்களுக்குத் திறந்திருந்தது. ஆனால், அந்தக் குளத்தைப் பயன்படுத்த தீண்டப்படாத மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காந்தி தண்டி யாத்திரையின் போது உப்பை கையில் எடுத்ததைப் போல, சாதி தடையை உடைத்ததன் அடையாளமாக, கம்பீரமாக அம்பேத்கர் குளத்தில் இருந்து நீரை எடுத்து பருகினார். இந்த அத்துமீறல் தங்களை உசுப்பேற்றுகிற செயல் என்று கருதிய உள்ளூர் உயர் சாதி இந்துக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டம் நடந்த இடத்திற்குத் திரும்பிக்கொண்டு இருந்த போது தாக்கினார்கள்.
அடுத்தடுத்த நாட்கள், வாரங்களில் மகத்தின் உயர் சாதியினர் தீண்டப்படாத மக்களைச் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆட்படுத்தினார்கள். சமயங்களில் அவர்களை வேலையை விட்டு நீக்குவது, உழுது கொண்டிருந்த நிலத்தை விட்டு வெளியேற்றுவது ஆகிய செயல்களிலும் ஈடுபட்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆகஸ்ட் 4,1927 அன்று மகத் நகராட்சி மூன்றாண்டுகளுக்கு முன்னால் சவுதார் குளத்தைத் தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்கிற தன்னுடைய 1924-ம் ஆண்டு உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டது. அம்பேத்கர் இரண்டாவது கூட்டத்தைக் கூட்டினார். இதில் ஒரு புதிய வகையான போராட்டம் உருப்பெற்றது. இந்த இரண்டாவது மகத் மாநாடு டிசம்பர் 1927-ல் நடைபெற்றது. அம்பேத்கரின் பேச்சு சாதி அமைப்பை அக்குவேர், ஆணிவேராக அறுத்தெறிய அறைகூவல் விடுத்தது. அவர் பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை நினைவுகூர்ந்தார். மகத் மாநாட்டை, மூன்றாவது எஸ்டேட் பிரெஞ்சு புரட்சியை ஒட்டுமொத்தமாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘Etats Generaux de Versailles’ நிகழ்வோடு ஒப்பிட்டார்.
‘துவக்கத்திலேயே நான் உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். இந்தச் சவுதார் குளத்தில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பதற்காகக் கலைந்து செல்லவில்லை. இப்போது அந்தக் குளத்திற்குள் நாங்க நுழைய விரும்புவதற்கு ஒரே காரணம் தான் உண்டு…நாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள் என்று நிரூபிக்க விரும்புகிறோம் […] இந்த மாநாட்டைக் கூட்டியதன் மூலம் இந்த மண்ணில் சமத்துவச் சகாப்தத்தைத் துவக்கி வைத்துள்ளோம். தீண்டாமையை அகற்றுவது, அனைத்து சாதியினரும் கலந்து உணவுண்ணும் சமபந்தி ஆகியவை மட்டுமே நமக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்டிவிடாது. நீதிமன்றங்கள், ராணுவம், காவல்துறை, வியாபாரம் முதலிய அனைத்து சேவைத்துறைகளும் நமக்குத் திறந்து விடப்பட வேண்டும் […] இந்து மதம் சமத்துவம், சாதிய ஒழிப்பு ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளின் மீது மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.’
இந்தப் பேச்சை தொடர்ந்து மனித உரிமை அறிக்கை, மனிதர்களுக்கான பிரிக்க முடியாத சமத்துவத்தை ஆதரிக்கும் தீர்மானம் ஆகியவை கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் இன்னும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் இந்து சமூகத்தின் உட்பாகுபாடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரே மக்கள் குழுவாக இணைய வேண்டும் என்றது. இரண்டாவது தீர்மானம் அர்ச்சகர் தொழிலை அனைத்து சாதியினருக்கும் உரியதாக ஆக்க வேண்டும் என்றது. இறுதியாக, பல்வேறு பேச்சாளர்களும் மனுஸ்மிருதியை கடுமையாகத் தாக்கினார்கள். அந்நூலின் ஒரு பிரதி மேடையின் முன்னால் இருந்து பீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. மனுஸ்மிருதியை ஒரு தலித் துறவி கம்பீரமாக எரித்தார்.
அடுத்த நாள், சவுதார் குளத்திற்குள் இலவச நுழைவை பெறுவதற்கான சத்தியாகிரகத்தை அம்பேத்கர் துவங்கினார். அதில் நான்காயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். சவுதார் குளம் தனியார் சொத்து என்று சொல்லி மேல்சாதி இந்துக்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தார்கள். ஆகவே, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வரும்வரை அமைதியாகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், அம்பேத்கர் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு, நீர்நிலையைச் சுற்றி ஒரு ஊர்வலத்தை நடத்தினார். இந்த அணுகுமுறை இப்படிப்பட்ட சூழல்களில் வருங்காலத்தில் அவர் பின்பற்றப்போகும் யுக்தியை ஒத்திருந்தது. அந்த யுக்தியானது பிரச்சினைகளை வீதிகளில் தீர்த்துக் கொள்வதை விட, நீதிமன்றத்திடம் அவற்றை ஒப்புக்கொடுப்பதே ஆகும். இது சட்டத்தை முழுமையாகச் சார்ந்திருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்கிற அம்பேத்கரின் பாணியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அம்பேத்கரின் நிலைப்பாடு சரியென்று நீதிமன்றங்கள் 1937-ல் தீர்ப்பளிக்கும்.
தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்
இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)
தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?
இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை, பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும், இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.
(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )
தனித்தொகுதி முறையை அம்பேத்கர் வென்றெடுத்த நிலையில், உண்ணாவிரதம் இருந்து காந்தி அதனைத் தட்டிப் பறித்தார். இதைக்குறித்து ஓரிரு கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணம். முதலாவதாக ரோஹித் வெமுலாவின் மரணத்தை அடுத்து சோயப் தானியல் எழுதிய கட்டுரையில் இருந்து தனித்தொகுதி முறை, தற்போதைய தேர்தல் முறை குறித்த பத்திகள் மட்டும் வாசிப்புக்காக:
தேர்தல் முறை குறித்த அம்பேத்கரின் விமர்சனம்: … அம்பேத்கர் காலம் தொடங்கித் தலித் இயக்கமானது தேர்தலில் தலித்துகளுக்கு இடங்களை ஒதுக்கும் முறையானது பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்த வண்ணம் உள்ளது.
1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பு சட்ட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அம்பேத்கர் தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள். காங்கிரசின் தலைவரான காந்தி இதனை எதிர்த்தார். இதற்கு மாறாக, சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று எதிர்த்தார் (தற்போதைய முறையின் முன்னோடி). இதைக்குறித்து, 1955-ல் அம்பேத்கர் பேசிய போது, அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையானது “இந்துக்களுக்கு அடிமையாக இருக்கும், சுதந்திரத்திறமற்ற ஆட்களையே” தலித் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் என்று நேரடியாகச் சாடினார்.
காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், அம்பேத்கர் வேறு வழியின்றி ஒப்புக்குள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அவர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி, தலித் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அம்பேத்கருக்கு ஒரே ஒரு சிறிய சலுகையாக, முதல்கட்டத் தேர்தலில் ஒவ்வொரு தலித் தொகுதியிலும் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முதல் கட்டத் தேர்தலில் வெற்றி பெறும் நான்கு வேட்பாளர்களுக்கு இறுதியாக அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பார்கள்.
அம்பேத்கர் சரியாகக் கணித்ததைப் போலவே, இத்தகைய கூட்டு வாக்களிப்பு முறை அவருடைய கட்சிக்கு பேரிடராகவும், காங்கிரசிற்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சின் தலைமைப் பொறுப்பில் முழுக்க முழுக்க மேல்சாதியினரே ஆதிக்கம் செலுத்தினாலும் இத்தகைய கூட்டுத் தொகுதி முறை அதற்கே பயனளித்தது. பூனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற 1937-ம் ஆண்டுத் தேர்தலில் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிப் பெற்றது. அம்பேத்கர் தோற்றுவித்து இருந்த விடுதலை தொழிலாளர் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்து நடந்த 1946 தேர்தலில் காங்கிரசின் வெற்றியும், அம்பேத்கரின் தோல்வியும் இன்னமும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகளில் 123 இடங்களில் வெற்றிப் பெற்றது. அம்பேத்கரின் கட்சி இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது,
”மோசடியான பிரதிநிதித்துவ முறை’:
இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பேத்கரை கடுமையாகக் கோபப்படுத்தியது. கூட்டு வாக்களிப்பு முறையே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அம்பேத்கர் குற்றஞ்சாட்டினார். 1946 -ம் ஆண்டுத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களித்த நிலையில், தன்னுடைய கட்சி 26% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 29% வாக்குகளையும் பெற்றதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். ஆனால், அனைத்து சாதிகளும் வாக்களித்த இறுதித் தேர்தல் முடிவுகளில் அறுபது மடங்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆகவே, இந்தத் தேர்தலில் இறுதியாக வென்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உண்மையான தலித் பிரதிநிதிகள் இல்லையென்று அம்பேத்கர் வாதிட்டார். 1946-ம் ஆண்டின் இறுதியில் அம்பேத்கர் இப்படிப் பேசினார்:
‘பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்கு எப்போதும் சட்டமன்றத்தில் போராடக்கூடிய நம்பகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பட்டியல் சாதியினரே தேர்ந்தெடுப்பதைத் தனித்தொகுதி முறை மட்டுமே உறுதி செய்யும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ஒழித்துக் கட்ட முயன்றால் அவற்றை எதிர்க்கவும் தனித்தொகுதிகள் தேவைப்படுகின்றன. வெவ்வேறு மாகாணங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறவைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை, பட்டியல் சாதியினரின் வலிகளை வலிமையாகக் கொட்டித் தீர்ப்பதற்காக ஒரே ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கூடக் கொண்டுவரவில்லை […] இப்படிப்பட்ட பட்டியல் சாதி உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்புகிற மோசடிக்கு பதிலாகப் பட்டியல் சாதியினருக்குச் சட்டமன்றத்தில் இடமே தராமல் இருந்துவிடலாம்’
இத்தகைய கவலை அம்பேத்கரை மட்டுமே அரித்துக் கொண்டிருக்கவில்லை. ஆய்வாளர்கள் ஆலிவர் மென்டெல்சொஹ்ன் & மரிக்கா விக்ஸியன்யாண்ட் ஆகிய இருவரும் எம்.சி.ராஜா அவர்களை ‘விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய தீண்டப்படாதவர்களில் இருந்து எழுந்த அரசியல்வாதி’ என்று வர்ணிக்கிறார்கள். அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “காங்கிரஸ் தலைமையில் கூட்டு வாக்களிப்பு முறையால் சாதி இந்துக்களோடு இணைந்து கொண்டு நுழைகிற தலித்துகள், எங்களுக்கு அரணாக இருப்பதைவிட, சாதி இந்துக்களின் தலைமையில் எங்களுடைய சுதந்திரத்தை அழிக்கவும், எங்கள் கழுத்துகளை வெட்டி சாய்க்கவும் காங்கிரசிற்குத் துணை போகிறார்கள் என்று எண்ணுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்’ என்று கசப்போடு எழுதினார்.
விடுதலைக்குப் பிறகு:
விடுதலைக்குப் பிறகு தலித்துகளுக்குத் தனித்தொகுதி என்கிற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. முதலாவதாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறைய பிரிவினைக்கு அடிகோலிய முதன்மையான காரணம் என்று பரவலாகக் கருதப்பட்டது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. பிரிவினை ஏற்படாமல் போயிருந்தாலும் தன்னுடைய இருபதாண்டு கால நிலைப்பாட்டைக் காங்கிரஸ் மாற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம். உண்மையில், இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்குப் பூனா ஒப்பந்தத்தில் தரப்பட்டிருந்த உரிமைகளை இன்னமும் குறைத்தது. முந்தைய முறையில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்றிருந்ததை அடியோடு கைகழுவியது. செய்வதறியாமல் திகைத்து நின்ற அம்பேத்கர், கடைசி முயற்சியாகத் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் குறைந்தபட்சம் 35% தலித் ஓட்டுக்களையாவது பெற வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவந்தார்.
இதன்மூலம், தலித் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சமுகத்தின் உண்மையான பிரதிநிதிகளாகத் திகழ்வதை உறுதி செய்ய முடியும் என்று கருதினார். வல்லபாய் படேல் அதனை முழுமையாக நிராகரித்தார். “இதனை நான் எதிர்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? பெரும்பான்மையான இந்துக்கள் உங்களுடைய (தலித்துகளின்) நலத்தையே நாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே செல்ல முடியும்? அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதை மறந்து விடுங்கள்…இத்தகைய தாழ்வு மனப்பான்மையைத் தாங்கிக் கொண்டு இருந்தால், அவர்களால் சமூகத்திற்குச் சேவையாற்ற முடியாது.”
விடுதலை இந்தியாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் அம்பேத்கரின் கட்சி இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையானது பேரிடராக மாறியது என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலித் நலன்களை முன்னிறுத்தவில்லை என்பது ஒரு புறம். மறுபுறம், இத்தகைய தொகுதி ஒதுக்கீட்டு முறையால், பிற சமூகக் குழுக்களோடு தலித்துகளால் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்ள இயலாமல் போனது. 1955-ல் அம்பேத்கரின் கட்சியானது தலித்துகளுக்கு என்று தொகுதிகளைத் தேர்தல்களில் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.
அம்பேத்கரின் கருத்து 1932-ல் புறக்கணிக்கப்பட்டதைப் போன்று, 1955-லும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்டது. இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அப்படியே தொடர்கிறது. தலித்துகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கிளர்ந்து எழும் “உயர் சாதி” குழுக்கள் நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்குத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சட்டை செய்வதே இல்லை. இந்த முறை அதிகார அமைப்பினில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது. இதனால், இம்முறை “மோசடியான பிரதிநிதித்துவம்” என்று தெளிவாகிறது. கிறிஸ்தோப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுவதைப் போல, விடுதலையடைந்த காலத்தில், “தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலித் அல்லாதோர் வாக்குகளைக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதில் தேர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது”. இம்முறையைப் பாரதி ஜனதா கட்சி தற்போது கைக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச தலித் எம்பிக்களைக் கொண்டுள்ள கட்சியாக அது திகழ்ந்தாலும், ரோஹித் வெமுலாவின் தற்கொலையைப் போன்ற பெரும் தலித் துயரத்தை எதிர்கொள்வது எப்படி என்று புரியாமல் அக்கட்சி திகைத்து நிற்கிறது.
அண்ணல் அம்பேத்கர் குறித்த இந்த அண்ணன் யுகபாரதியின் இப்பாடலை எத்தனை முறை காலையில் இருந்து கேட்டிருப்பேன் என்று தெரியாது. திட்டமிட்டு விடுதலை இந்தியாவில் பாபாசாகேபின் பெயர் புறக்கணிக்கப்பட்டது என்று உறுதிபடச் சொல்லலாம்.
‘இனி இவருக்கு வெல்வதற்கு உலகங்கள் இல்லை.’ என்று பேராசிரியர் பாக்ஸ்வெல் தன்னுடைய செயலாளருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்த அதே வேளையில், படிப்பதற்குப் பணம் கிடைக்குமா என்று தெரியாமல் லண்டனிற்குள் அவர் இறங்கியிருந்தார் என்பது எத்தனை நகை முரண்.
மூன்றாவது முனைவர் பட்ட ஆய்வினை BONN பல்கலையில் செய்ய அவர் கடிதத்தை சரளமான ஜெர்மன் மொழியில் எழுதியிருந்ததைப் பார்த்த போது மனம் எங்கெங்கோ அலைந்தது. பள்ளியில் பிறப்பின் அடிப்படையில் சம்ஸ்கிருதம் மறுக்கப்பட்ட அந்தச் சிறுவனின் கனவுக்கடல் எல்லையற்றதாகப் பிரபஞ்சமாகப் பாய்ந்த வண்ணம் இருந்தது.
கல்வி, அதிகாரம், பொருள் சேர்ப்பது, ஆயுதம் ஏந்துவது என்று அனைத்தும் மறுக்கப்பட்ட சமூகங்களை தட்டியெழுப்ப தான் கற்றவற்றை எல்லாம் அவர் செலுத்தினார். சாதியின் ஆணிவேரான பிராமணியக் கருத்தியலுக்கு எதிராக அவர் போர் முரசம் கொட்டிய போது அவருக்கு வயது 25!
பம்பாய் நீதிமன்றத்தில் உடன் யாரும் உணவருந்த இல்லாமல் தனியே அவர் தவித்திருந்த காலங்களில் கூட எளியவர்களின் பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எளியவர்கள், இழப்பீடு இல்லாமல் நீக்கப்பட்ட தொழிலாளிகள், கருத்துரிமை நெரிக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள், ‘தேசவிரோதி’ என முத்திரை குத்திய காங்கிரஸ் இயக்கத்தினர் என்று அனைவருக்காகவும் போராடினார். பெரும்பணமும் , தனிப்பட்ட அதிகாரமும் தரும் உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பை நிஜாம் வழங்கியபோது ‘சுதந்திரமான அம்மனிதர்’ ஏற்க மறுத்தார்.
பல நூறு வழக்கறிஞர்களையும், பட்டதாரிகளையும் அவர் நிர்மாணித்த சித்தார்த், மிலிந்த் கல்லூரிகள் உருவாக்கின. ‘கற்பி’ என்பதன் பொருள் தான் கற்றுத் தேர்வதில் முடிவதில்லை. சமூகத்தைத் தட்டியெழுப்ப நம்மை ஒப்புக்கொடுப்பதே பெரும் கனவு என்கிற சமூக, அரசியல் ஜனநாயகத்துக்கான பெரும் வழியை அவர் போட்டுக் கொடுத்தார்.
அவர் கண்ட சமத்துவக் கனவு என்பது பொருளாதாரத் தளத்தையும் ஆட்டிப்பார்த்தது. பிரிவினை நெருங்கி கொண்டிருந்த காலத்தில் அவர் இயற்றியளித்த ‘அரசும், சிறுபான்மையினரும்’ எனும் மாதிரி அரசியலமைப்புச் சட்டம் ஒரு புரட்சிகர ஆவணம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம்,நிலம் என்று அனைத்திற்குமான உரிமை கடைக்கோடி மனிதருக்கும் உரியது எனும் புரட்சிகரச் சமத்துவக் கனவு அது. வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டாம்,மேற்சொன்ன உரிமைகள் யாவும் அடிப்படை உரிமைகளாகத் திகழ வேண்டும் எனும் பெரும் கனவு அவருக்கு இருந்தது. அந்த லட்சியத் தாகத்திற்கு அரசியலமைப்பு சட்ட உருவாக்க குழுவினர் ஈடுகொடுக்கவில்லை என்பது துயரமான ஒன்று.
சாதியை அழித்தொழிக்கவும், ‘அறநெறி, பகுத்தறிவை’ கொல்லும் மதக்கருத்தியலை தகர்க்கவும் அவர் அறிவு வெடிமருந்தினை நமக்கு நல்கினார். பெண்களின் சொத்துரிமை, தத்தெடுப்பு உரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். அவரின் கனவுச் சட்ட வரைவினில் பரம்பரை சொத்தில் சம உரிமை, தத்தெடுப்பதில் ஆண்களுக்கு இணையான இடம், விவகாரத்தில் முறையான ஜீவனாம்சம், கணவன் இறந்த பின்பு சொத்தில் உரிமை என்று பெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டு இருந்தது. ‘இந்து மதத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு’ என்று அலறினார்கள். குடியரசுத் தலைவர் முதல் காங்கிரஸ் கொறடா வரை தடுத்தார்கள். ‘இந்த மசோதாவிற்கு ஏன் நேரம் தரவேண்டும்’ என்று படேல் வினவினார்.
அண்ணல் நொந்து பதவி விலகினார். அவருக்குப் பதவி துய்ப்பதற்கான ஒன்றல்ல. அது சமூக-பொருளாதார-அரசு சமத்துவத்தைச் சாதிப்பதற்கான கருவிகளில் ஒன்று. அது சாத்தியமில்லை என்ற போது, பட்டியல் சாதியினரின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரசினை குற்றஞ்சாட்டினார். நேருவின் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமைகள் வழங்காமல், அவர்களுக்கான ஆணையத்தை அமைத்து இட ஒதுக்கீடு வழங்காமல் போனதையும் சாடினார்.
இந்து மதத்தில் தான் நிகழ்த்தவிருந்த ஆகச் சிறந்த சீர்திருத்தத்தைக் கொன்றதை குறித்து அரற்றினார். சமூகப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு சட்டங்கள் இயற்ற முடியாமல் போனது ‘சாணிக் குவியல்களின் மீது கோட்டைகளைக் கட்டுவது தான்’. சனாதன கோட்டைகளை தகர்க்கும், எல்லா மனிதருக்கும் எல்லா வகையிலும் சம மதிப்புக்கான தேடலுக்கான அறிவு, அற வெளிச்சத்தை, அடிமைத்தன்மை அற்ற விழிப்புணர்வை நல்கும் பாபாசாகேப் வாழ்வினை திரையில் பார்க்க காத்திருக்கிறேன்.
அவரின் வாழ்க்கை எத்தனை அறிவு பூர்வமாக அணுகினாலும் உணர்ச்சிவசப்பட வைப்பது. அவமானம், ஏளனம், வஞ்சகம் சூழ்ந்த வாழ்வினில் புரட்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்ட அந்நாயகனின் வாழ்வினை திரையினில் தொடராக பார்ப்பது பலரையும் அவர் வாழ்வினை நோக்கி இழுத்து வரும். அண்ணன் யுகபாரதியின் வரிகளில் பாபசாகேப் கண்முன் நிற்கிறார். தட்டியெழுப்புகிறார். குரலற்றவர்களின் தலைவரின் கிளர்ச்சியும், சுயமரியாதையும் மிக்க வாழ்வோடு பயணிப்போம், ‘உச்சத்திலே ஒரு சூரியன்
இன்று தான் இந்திய அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 289 (தற்போது சட்டப்பிரிவு 324) ஐ பாபாசாகேப் அம்பேத்கர் இதே நாளில் (15-06-1949) அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் வாக்குரிமையை வடிவமைப்பதில் அம்பேத்கரின் பணியை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, அதற்குப்பிறகு தேர்தல் ஆணையத்திற்கு வருவோம். முதல் கூறை விரிவாகப் பார்த்தால் தான் தேர்தல் ஆணையத்தில் அண்ணல் அம்பேத்கர் செய்த புரட்சிகர மாற்றத்தின் தத்துவ அடிப்படை புலப்படும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது நடைமுறையில் இருக்கவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை தர வேண்டும் என்கிற சிந்தனை மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உருப்பெறாத காலம். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள், ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை கிட்டியது. பெண்களின் வாக்குரிமைக்காக போராடியவர்களை suffragette என்று அழைத்தார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாட்சியில் வாக்குரிமை என்பதைச் சொத்து, கல்வி, பாலினம் என்று பலவற்றைக் கொண்டு நிர்மாணித்தார்கள். மதம் சார்ந்து சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள், வாக்களிப்பதற்கான தகுதியை குறைவாக நிர்மாணிப்பது ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் இந்திய அரசு சட்டம் 1935-ல் தான் அதிகபட்ச வாக்குரிமை விரிவாக்கம் நிகழ்ந்தது. அப்படியும் கூட ஐந்தில் ஒரு பங்கு வயது வந்த மக்களுக்கே வாக்குரிமை கிட்டியது. (சான்று: Sumit Sarkar: ‘Indian Democracy: The Historical Inheritance)
இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று பல்வேறு பெண்கள் போராடினார்கள். இவர்களின் வரலாற்றை வரலாற்றாசிரியர் சுமிதா முகர்ஜி ஆவணப்படுத்தியுள்ளார். (காண்க:
Indian Suffragettes: Female Identities and Transnational Networks). 1928-ல் வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று கனவு கண்டது. இதனையடுத்து, கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இப்படிப் பல தரப்பினரும் வயது வந்தோர் வாக்குரிமைக்கு ஆதரவாக இந்தியாவில் இயங்கினார்கள். எனினும், ஏட்டளவில் வயது வந்தோர் வாக்குரிமை எனும் கனவை முன்மொழிந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே காலனிய ஆட்சியாளர்கள், மாகாணங்களில் பதவியில் இருந்த இந்தியர்கள் எண்ணினார்கள் (இந்திய வாக்குரிமை அறிக்கை, 1932).
இந்தப் பின்னணியில் தான் வாக்குரிமையைக் குறித்த அண்ணல் அம்பேத்கரின் வாதங்கள், பார்வைகள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. யாருக்கெல்லாம் வாக்குரிமை தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட சவுத்பரோ கமிட்டியின் முன் அம்பேத்கர் தோன்றி தன்னுடைய கருத்துகளை 1919-ல் பதிவு செய்தார். அப்போது, ஒரு நாட்டின் குடிமக்களுக்குப் பிரதிநிதித்துவ உரிமை, ஆட்சியதிகாரத்தில் பதவி வகிக்கும் உரிமை ஆகியவை மிக முக்கியமான உரிமைகள் என்று கருத்துரைத்தார். மேலும், தகுதியுள்ளவர்களே வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் என்கிற வாதத்தை அழகாக எதிர்கொண்டார். அவர் பேராசிரியர் L.T.Hobhouse ஐ மேற்கோள் காட்டி ‘ஜனநாயகம் வெற்றியடைவது மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒட்டியே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், வாய்ப்புகள் தரப்பட்டால் தான் மக்கள் அவற்றைப் பயன்படுத்த இயலும். பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு இயங்கும் அரசின் செயல்பாடுகள் பங்கேற்பது எல்லாமே கல்வி தான்… வாக்குரிமை வழங்குவதன் மூலமே மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, தட்டியெழுப்ப இயலும்.’ என்று வாதிட்டார்.
மேலும், சொத்துரிமையைக் கொண்டு வாக்குரிமையைத் தீர்மானிப்பது எப்படிப் பட்டியலின சாதி மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். பட்டியலின சாதி பெண் ஒருவர் தர்பூசணி விற்றதற்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட அநீதியை தொட்டுக் காட்டினார். செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை, உரிமைகளை மறுதலித்து விட்ட சாதி சமூகத்தில் தங்களுக்கான வாக்குரிமையைச் சொத்துரிமையைக் கொண்டு தீர்மானிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அல்லவா இருக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பத்தாண்டுகள் கழித்துச் சைமன் கமிஷன் முன்பு தோன்றிய அண்ணல் அம்பேத்கர் வாக்குரிமை என்பது சலுகை அல்ல, அது உரிமை என்றார். மேலும், அதனை வெறுமனே சலுகை என்று கருதுவதால் வாக்குரிமை இல்லாத மக்கள் முழுக்க முழுக்க வாக்குரிமை உள்ளவர்களை அண்டி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும் என்று வாதிட்டார். கல்வியை அடிப்படையாகக் கொண்டு வாக்குரிமையை மறுப்பது என்பது கயமைத்தனமானது என்று அம்பேத்கர் சாடினார். கல்வியைக் காலங்காலமாக மறுத்துவிட்டு, அதனையே வாக்குரிமைக்கான தகுதி ஆக்குவது எப்படித் தகும் என்பது அவரின் வினாவாக இருந்தது. ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் ஜனநாயகத்திற்கும், அரசியல் பங்கேற்பிற்கும் இடையே உள்ள உறவை கவனப்படுத்தினார். பலதரப்பட்ட மக்கள் இணைந்து ஜனநாயகத்தில் இயங்க வேண்டியிருக்கிறது. அது மக்கள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. வாக்குரிமையின் மூலமே ஒருவர் பிறரோடு இணைந்து வாழும் தன்னுடைய வாழ்க்கையை நெறிப்படுத்தும் அதிகாரத்தைப் பெற முடியும் என்று அம்பேத்கர் தெளிவாகப் பேசினார். இத்தகைய வாக்குரிமையை மறுதலிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்தால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்குண்டு கிடக்க நேரிடும் என்று அவர் கவலைப்பட்டார். (இப்பத்தி மாதவ் கோஷ்லாவின் ‘India’s founding moment, முனைவர் Scott Stroud-ன் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது)
மேலும், வாக்குரிமை குறித்துச் சைமன் கமிஷன் முன்பு கருத்துகளை முன்வைத்த அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் ஏழைகளாக, சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களாக, அரசியல்ரீதியாகப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்; ஆகவே,சிறுபான்மையினராக அவர்களுக்கு அரசியல்ரீதியான பாதுகாப்புக் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. ஆகவே, அனைவருக்கும் வாக்குரிமை இல்லையென்றால் தனித் தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தரவேண்டும் என்றும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை இருந்தால் ஒதுக்கீட்டு இடங்கள் தரப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார்.
மக்கள் கூட்டத்திற்கு வாக்குரிமையைப் பயன்படுத்தும் அளவுக்கு போதுமான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ? என்கிற வினாவிற்கு, ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சார்பாகப் பேசுகிற முறையில், தீண்டாமைக் கொடுமை அவர்களின் வாழ்வை நீக்கமற பீடித்திருப்பதால், அப்பிணியில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஒரே வழி அரசியல் அதிகாரம் மட்டுமே என்று அறிந்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த வாக்காளர் தன்னுடைய வாக்குரிமையை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவார் என்று உறுதிபடக் கூற முடியும்.’ என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.
மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப மட்டும் இடங்களை ஒதுக்குவது சரியான அணுகுமுறை இல்லை என்று அவர் வாதிட்டார். சட்டமன்றத்தை ஏதோ அருங்காட்சியகம் போலக் கருதிக்கொண்டு ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த சிலரை மாதிரிகளாகச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பது சரியானது அல்ல. சட்டமன்றம் என்பது அரசியல் போர்கள் நிகழும் களம், சிலர் மட்டும் வாய்ப்புகளில் தனியுரிமை செலுத்துவதைத் தகர்க்கவும், உரிமைகளை வென்றெடுக்கவும் முனைந்து இயங்கும் இடம் அதுவே ஆகும். மக்கள் தொகைக்கு ஏற்ப சிறுபான்மையினருக்கு இடம் தருவது என்பது சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வாய்ப்பை மறுத்து, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினராகச் சிறைப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகும் என்று அண்ணல் அம்பேத்கர் பேசினார்.
சிறுபான்மையினர் என்று அவர் பட்டியலின மக்களை மட்டும் குறிக்கவில்லை என்பது அவரோடு சைமன் கமிஷன் உறுப்பினர்கள் நிகழ்த்திய உரையாடலில் தெளிவாகிறது. பழங்குடியினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் ஆகியோரில் உள்ள வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை தர வேண்டும் என்று கருதுகிறீர்களா என்று அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது. மேற்சொன்ன சிறுபான்மையினரில் உள்ள அனைத்து வயது வந்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.
இவ்வாறு வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயராது குரல் கொடுத்தார். அவரே ஜூன் 15 அன்று 1949 -ல் தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தினார். அதனை அறிமுகப்படுத்தும் போது, அண்ணல் அம்பேத்கர் தேர்தல் ஆணையம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இரண்டு தேர்வுகள் இருந்தன – ஒன்று நிரந்தர அமைப்பொன்றை நிறுவி நான்கைந்து உறுப்பினர்கள் இடைவெளியின்றித் தொடர்ந்து பதவி வகிக்கும் அமைப்பு ஒன்றாக இருப்பது அல்லது தேர்தல் வருகிற போது மட்டும் தேர்தல் ஆணையத்தைத் தேவைக்கேற்ப நிறுவிக்கொள்வது. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாகத் தலைமை தேர்தல் ஆணையரோடு ஒரு அமைப்பை நிறுவ முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். தேர்தல்களைச் செவ்வனே நடத்த இத்தகைய அமைப்பு தேவை என்று அம்பேத்கர் பேசினார்.
மேலும், முதலில் தேர்தல்களைச் சுதந்திரமாக நடத்துவது, தேர்தலை நடத்துவதில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் தலையிடாமல் இருப்பதை அடிப்படை உரிமையாகக் கருத வேண்டுமென அடிப்படை உரிமைகள் கமிட்டி கருத்துத் தெரிவித்தது. அம்பேத்கர் , ‘சட்டமியற்றும் மன்றங்களுக்கான தேர்தல்கள் தூய்மையாக, சுதந்திரமாக நடக்க ஆட்சியில் இருக்கும் அரசுகளின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்’ என்கிற கருத்தை நிர்ணய சபையும் எந்த எதிர்ப்புமின்றி உறுதிப்படுத்தியது. சபையின் இக்கருத்தை கணக்கில் கொண்டு, வரைவுக் குழு அடிப்படை உரிமைகளில் இருந்து அவற்றைப் பிரித்தெடுத்து தனி அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 289, 290 என்று இயற்றப்பட்டன. தேர்தலை நடத்தும் அமைப்பானது ஆட்சியில் இருக்கும் அரசின் ஆளுகையில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எந்தச் சச்சரவும் இல்லை. சட்டப்பிரிவு 289 அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முடிவை நிறைவேற்றுகிறது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது, சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களைக் கண்காணித்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்துவது ஆகிய அதிகாரங்களை ஆட்சியில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வராத தேர்தல் ஆணையத்திடம் கைமாற்றப்படுகிறது.’ என்று தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தி இதே தினத்தில் பேசினார்.
முதலில் தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் சட்டப்பிரிவு 289-ஐ முன்மொழிந்த போது நாடாளுமன்ற தேர்தல்களை மட்டுமே நடத்தும் அமைப்பாகத் தேர்தல் ஆணையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல்களை நடந்த அந்தந்த மாநிலத்தின் ஆளுநர் அல்லது மாநில ஆட்சியாளர் தேர்தல் ஆணையத்தை நியமித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆய்வாளர் ஆர்னித் ஷானி தன்னுடைய ஆய்வுகளின் மூலம் எப்படிப் பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவில் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில அரசுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரை நீக்க முயற்சி செய்தன முயன்றன என்பதை நிறுவுகிறார். இந்தப் பின்புலத்தில். அண்ணல் அம்பேத்கர் மேற்சொன்ன சட்டப்பிரிவில் ஒரு அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘ஒரு புரட்சிகரமான மாற்றத்தை’ செய்தார்.
தேர்தலை நடத்த ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தை நிறுவுவதோடு, அதற்கு உதவும் வண்ணம் பிராந்திய ஆணையர்களை நியமிப்பது என்று சட்டப்பிரிவு மாற்றப்பட்டது. ‘பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அந்த மாநிலத்தின் பூர்வ குடிகள் இருப்பார்கள். அவர்களோடு இனம், மொழி அல்லது கலாசார ரீதியாக அவர்களிடம் இருந்து வேறுபட்ட மக்கள் அந்த மாகாணங்களில் வசிக்கிறார்கள். அந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் இனம், கலாசாரம் அல்லது மொழிரீதியாக தங்களிடமிருந்து வேறுபட்ட மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாகாண அரசுகள் உத்தரவிடுவது, செயல்களைத் திட்டமிடுவது எல்லாம் சட்ட வரைவுக்குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். …. அந்தந்த உள்ளூர் அரசின் முன்முடிவுகள் அல்லது அதிகாரியின் மனச்சாய்வுக்கு ஏற்ப வயது வந்த யாரையும் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது. அத்தகைய செயல்கள் ஜனநாயக அரசின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதாகும். இந்த வகையான அநீதியை மாகாண அரசுகள் மேற்கொள்வதைத் தடுக்கும் பொருட்டே …வரைவு அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் சட்டப்பிரிவுகளில் புரட்சிகரமான, அடிப்படையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.’
வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, அரசின் கட்டுப்பாட்டிற்குள் வராத தேர்தல்களைச் சுதந்திரமாக, நேர்மையாக நடத்துவதற்கான தேர்தல் ஆணையம் ஆகியவற்றைச் சாதிப்பதற்குப் பெருமளவில் முயன்ற அண்ணல் அம்பேத்கரை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்.
அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல் -முனைவர் சுமீத் மஹஸ்கர் கடந்த சில ஆண்டுகளில் டாக்டர் அம்பேத்கரை ‘மையநீரோட்டப்படுத்தும்’ முயற்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. வலதுசாரிகள், இடதுசாரிகள் என்று பல தரப்பிலும் உள்ள அரசியல் கட்சிகள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்த அரும்பாடுபடுகிறார்கள். ஆய்வுலகிலும் அண்ணல் அம்பேத்கர் குறித்து எழுதுவது வாடிக்கையாகி விட்டது . முன்முடிவோடு கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணலின் எழுத்துகளை மறைப்பதோடு, அவரின் சமூக, அரசியல் தலையீடுகளையும் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நிகழ்ந்தது. இதனை மேற்சொன்ன முயற்சிகள் கேள்விகேட்கவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ தவறின. தொழிலாளர் பிரச்சனையை அம்பேத்கர் எப்படி அணுகினார் என்பது இதற்குச் சான்று பகர்கிறது. பல அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் அம்பேத்கர் “சாதி பிரச்சனையை” மட்டுமே கருத்தில் கொண்டு அதனை எதிர்கொண்டார். அவர் “பெரும்” முக்கியத்துவம் மிக்க “வர்க்க பிரச்சனையை” கண்டுகொள்ளவில்லை என்று வாதிடுவதைக் கண்டிருக்கலாம். இத்தகைய பார்வை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் பம்பாய் நகரத்தில் எழுந்த கம்யூனிச அரசியலையும், அம்பேத்கரின் தலைமையில் சாதி ஒழிப்புக்காக அணிதிரண்ட புரட்சிகரமான தலித் அரசியலையும் கணக்கில் கொள்ளத் தவறுகின்றன. இவ்விரு அரசியல் இயக்கங்களும் களத்தில் “தொழிலாளர் பிரச்சனைகளில்” தீவிரமாக மோதிக்கொண்டன. அவை அரிதாக ஒன்றிணைந்தும் இயங்கின. இவ்விரு இயக்கங்களிடையே நிகழ்ந்த பலதரப்பட்ட ஊடாட்டங்கள் “உழைக்கும் வர்க்க ஒற்றுமையின்” போதாமைகளையும், இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்களையும் ஒருங்கே முன்னிலைப்படுத்தின.
ஜவுளி ஆலைப் போராட்டங்கள்
அம்பேத்கரின் ஆரம்ப கால தொழிலாளர் இயக்க செயல்பாடுகள் பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் யூனியனில் இணைந்து இயங்குவதாக இருந்து. இந்த தொழிலாளர் அமைப்பை N.M. ஜோஷி,R.R.பக்ஹலே ஆகியோர் துவங்கினார்கள். இந்த ஆலைகளில் நெசவு நிகழும் துறைகளில் அதிகபட்ச கூலி வழங்கப்பட்டு வந்தது. இந்த வேலைகளில் தலித்துகள் ஈடுபட்டால் “தீட்டாகி”விடும் என்று சொல்லி புறக்கணிக்கப்பட்டார்கள். ஆடை இழையை நெய்வதற்கு உதவும் பாபினை மாற்ற வேண்டும் என்றால், நூலை தங்கள் எச்சிலால் தொழிலாளர்கள் ஈரப்படுத்தி முடிச்சிட வேண்டும். மராத்தா சாதியை சேர்ந்த தொழிலாளர்கள் இப்பணியில் தலித்துகள் ஈடுபட்டால் அது தங்களுக்கு தீட்டாகி விடும் என்று வாதிட்டார்கள். இதைக்காரணம் காட்டி தலித்துகளை நெசவுப் பணிகளில் ஈடுபடுத்த மறுத்தார்கள். அண்ணல் அம்பேத்கர் இப்பிரச்சனையை புகழ்பெற்ற 1928 பம்பாய் ஜவுளி தொழிலாளர் போராட்டத்தின் போது கவனப்படுத்தினார். அவர் முன்வைத்த உரிமைகளுக்கான கோரிக்கைகளில் ஆலையின் எல்லா தொழில்களிலும் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என்பதும் இருந்தது. அதனை கம்யூனிச தலைவர்கள் ஏற்க மறுத்தால் தலித் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டாமென தான் தடுக்கப்போவதாகவும் அம்பேத்கர் அச்சுறுத்தினார். பெரும் தயக்கத்தோடு அம்பேத்கரின் உரிமைக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அம்பேத்கர் மேற்சொன்ன போராட்டத்தை ஆதரித்தார் என்றாலும், 1929-ல் நடந்த ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை எதிர்த்தார். இப்போராட்டத்தின் போது தலித் தொழிலாளர்கள் ஆலைகளுக்குள் பணியாற்ற போவதற்கான வசதிகளை அவரே முன்னின்று ஏற்படுத்திக் கொடுத்தார்.
இடதுசாரி விமர்சகர்கள் மேற்சொன்ன போராட்டத்தில் அம்பேத்கர் “தொழிலாளர் ஒற்றுமையை” ‘சாதியைக்’ கொண்டு தகர்த்தெறிந்ததோடு நில்லாமல், தொழிலாளர் போராட்டத்தை பிசுபிசுக்க வைக்கும் வண்ணம் ஆலைகளுக்குள் கருங்காலிகளை அனுப்பி வைத்தார் என்று சாடுகிறார்கள். 1928-ல் நடந்த போராட்டம் தலித் தொழிலாளர்களை கடன் சுமைக்கு ஆட்படுத்தியதோடு, அவர்கள் பெரும் அவமானங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. தலித் அல்லாத தொழிலாளர்களை போல நெடுங்காலம் போராட்டங்கள் தொடர்ந்தால் தங்களை ஜீவித்துக் கொள்வதற்கு என்று விவசாய நிலங்கள் எதுவும் தலித்துகளிடம் இல்லை. ஆகவே, இன்னொரு நீண்ட போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் தலித்துகள் இல்லை என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது.
இதே காரணங்களுக்காக 1934-ல் கம்யூனிஸ்ட்கள் நடத்திய பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் போராட்டத்தையும் அம்பேத்கர் எதிர்த்தார். அதே வேளையில், நீதிமன்றங்களில் இப்போராட்டத்தின் தலைவர்களுக்காக அம்பேத்கர் வாதாடவும் செய்தார். இப்போராட்டங்களில் ஈடுபட்டதற்காக வழக்குகள் பாய்ச்சப்பட்ட நிலையில், ஒரு தொழிற்சங்க தலைவருக்காக அம்பேத்கர் திறம்பட வாதிட்டதால் அவர் விடுதலையானதோடு பிற கம்யூனிச தலைவர்களின் விடுதலைக்கும் அதுவே வழிவகுத்தது.
‘கட்டாய ஊழியத்தை ’ எதிர்ப்பது
உழைக்கும் வர்க்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காக பாடுபடுவதற்காக அம்பேத்கர் 1936-ல் சுதந்திர தொழிலாளர் கட்சியை தோற்றுவித்தார். இக்கட்சி எந்த ஒரு ஒற்றை மதம், சாதியையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அறிவித்தது. மேலும் தீண்டப்படுபவர்-தீண்டப்படாதோர், பிராமணர்-பிராமணரல்லாதோர், இந்து-முஸ்லிம் இடையே எந்த பாகுபாடும் இல்லை என்று முழங்கியது. அடுத்தாண்டு நிகழ்ந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தொழிற்சாலை சச்சரவுகள் சட்டம்,1938 ஐ எதிர்ப்பதில் அக்கட்சி முதன்மையான பங்காற்றியது. இச்சட்டமானது, சமரசத்தை கட்டாயமாக்கியதோடு சட்டத்துக்கு புறம்பான போராட்டங்களில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கியது. இந்த மசோதாவை எதிர்த்து பம்பாய் சட்டமன்றத்தில் உரையாற்றிய அண்ணல் அம்பேத்கர், போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர்களை தண்டிப்பது என்பது “தொழிலாளரை அடிமையாக்குவது அன்றி வேறொன்றுமில்லை” என்று வாதிட்டார்.
மேலும், அடிமைமுறை என்பது “கட்டாய ஊழியமே ஆகும்.” என்றும் முழங்கினார். மேலும், சட்டமன்றத்துக்கு வெளியே இந்த மசோதாவிற்கு எதிராக ஒரு நாள் போராட்டத்தை நவம்பர் 7, 1938-ல் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். இம்மசோதா நிறைவேறாமல் தடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட்கள், சோசியலிஸ்ட்கள் வழங்கிய ஆதரவையும் அம்பேத்கர் வரவேற்றார்.
கிராமப்புறத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மாற்றுவது:
கம்யூனிஸ்ட்கள் முன்னின்று நடத்திய தொழிலாளர் அரசியல் எல்லாம் நகர்ப்புற தொழிற்சாலைகள் சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தன. அம்பேத்கரோ கிராமப்புறத்தில் வழக்கத்தில் இருந்த மகர் வட்டன் முறையை எதிர்த்து போரிட்டார். இதன்மூலம் சாதி அடிப்படையில் தொழில்களை வகுத்து பாகுபடுத்தும் படிநிலையை கிடுகிடுக்க வைத்தார். மகர் வட்டன் என்பது கிராமத்தின் சமூக-பொருளாதார அமைப்பினில் மகர்களுக்கு வழங்கப்படும் நிலமாகும். இந்த நிலத்திற்கு பதிலாக மகர்கள் பலதரப்பட்ட கடுமையான வேலைகளை செய்ய வேண்டும் என்பதோடு, கடும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.
இவ்வாறு கிராமப்புறத்தின் பொருளாதார அமைப்புகளின் உழைப்பை சுரண்டும் முறைகள் சாதி அமைப்போடு ஆழமாக பின்னிப்பிணைந்து இருந்தன. அம்பேத்கர் இவற்றை அறவே அழித்தொழிக்க பாடுபட்டார். அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிரான போரானது இத்தகைய அடிமைப்படுத்தும் அமைப்புகளை எதிர்த்து போர் தொடுக்காமல் முழுமையடையாது என்று அறிவித்தார். அம்பேத்கர் 1928-ல் பம்பாய் சட்ட மேலவையில் மகர் வட்டன் முறையை ஒழிப்பதற்கான மசோதாவை , தாக்கல் செய்தார். மேலும், அரசானது மகர் வட்டன்தாரர்களை அரசாங்க ஊழியர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கான உழைப்புக்கான ஊதியத்தை கிராமத்தினர் வழங்க அடிகோல வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆரம்பத்தில் பிராமணர் அல்லாதோர் இம்மசோதாவை ஆதரித்தாலும், பின்னர் படிப்படியாக இதனை எதிர்த்தனர். மகர்கள் செய்து கொண்டிருந்த இழிவாக கருதப்பட்ட, வெறுத்தொதுக்கப்பட்ட தொழில்களை இனிமேல் யார் செய்வார் என்கிற கவலை அவர்களை ஆட்கொண்டுவிட்டது. அம்பேத்கரின் நெருங்கிய சகாவான A.V. சித்ரே ஷெட்காரி சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு கொங்கன் பகுதியில் நிலவி வந்த கோட்டி எனும் நில வரி வருவாய் முறையை ஒழிக்க பாடுபட்டது. இம்முறையானது சிறு, குறு விவசாயிகளை சுரண்டியதோடு, அவர்களை கொத்தடிமைத்தனத்தில் உழல வைத்தது. ஆங்கிலேயே அரசு வசூலித்த வரியை போல நான்கு மடங்கு கூடுதல் வரியை இம்முறையில் செலுத்த வேண்டியிருந்தது. இம்முறையில் நிலச்சுவான்தார்களாக சித்பவன பிராமணர்கள், சில உயர்சாதி இந்து மராத்தாக்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். இம்முறையால் சுரண்டப்பட்ட பயிரிடுபவர்களாக மராத்தாக்கள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரான குன்பிக்கள், பண்டாரிக்கள், அக்ரிக்கள், தலித்துகளில் சில மகர்கள் இருந்தனர். பழமைவாத தேசியவாதியான பால கங்காதர திலகர் காலனிய அரசு கோட்டி முறையை ஒழிக்க முயன்ற போது கடுமையாக அதனை எதிர்த்தார். இம்முறைக்கு எதிராக கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் அம்பேத்கர் போராட்டங்கள், மாநாடுகளை நடத்தினார். அவர் பம்பாய் சட்டமன்றத்தில் கோட்டி ஒழிப்பு மசோதாவை 17 செப்டம்பர் 1937-ல் அறிமுகப்படுத்தினார். மாகாண அவைகளில், முதன்முறையாக விவசாயிகளை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்கான சட்ட மசோதாவை முன்னெடுத்த சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கரே ஆவார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வைஸ்ராயின் செயற்குழுவில் தொழிலாளர் உறுப்பினராக அம்பேத்கர் பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவை விடுதலைக்கு பிந்தைய இந்தியாவில் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியது.
பிராமணியம் எனும் இன்னொரு பெரும் பகை:
முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி என்கிற பார்வையில் கம்யூனிஸ்ட்களோடு உடன்பட்ட அம்பேத்கர், அதற்கு இணையான எதிரி பிராமணியம் என்று வாதிட்டார். மேலும், கம்யூனிஸ்ட்களைப் போல முதலாளித்துவ அமைப்பினை அழித்தொழித்து விட்டால் தானாகவே சாதி முறையினால் உண்டாகும் இன்னல்கள் காணாமல் போய்விடும் என்று அவர் கருதவில்லை. அண்ணல் அம்பேத்கரை பொருத்தவரை, சமூகப் பாகுபாட்டைக் களைவது என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் இன்றியமையாத ஒன்றாகும். அம்பேத்கர், உழைப்பாளர் சந்தையில் தலித்துகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முதலாளித்துவத்துக்கு எதிரான போர் சாத்தியப்படும் என்று வாதிட்டார். இதனைச் சாதிக்க, சாதி அடிப்படையில் பணிக்கு ஆட்களை எடுக்கும் பிராமணிய தாக்கத்தை விடுத்து, அதனைப் புறந்தள்ளும் சந்தைப் பொருளாதார அடிப்படைகளின்படி இயங்கலாம். இது தொழிலாளர்கள் இடையே உள்ள சாதி, மத வெறுப்பைப் போக்குவதோடு, உழைப்பாளர் ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்தெறியும்.
அம்பேத்கர் “வர்க்கம்” என்பதைப் பொருள் ரீதியான உறவுகள், பொருளாதாரச் சுரண்டல் சார்ந்து மட்டும் குறுகலாக அணுகுவதை ஏற்க மறுத்தார். மூலதனம்-தொழிலாளர் இடையே உள்ள உறவை நிர்மாணிப்பதில் பொருளாதாரக் காரணிகளோடு, பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், சுரண்டல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார். மேலும், இத்தகைய பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், மக்கள் சுயமரியாதை மிக்க வாழ்க்கை வாழவும், பரஸ்பர மதிப்பை பெற்று வாழ்வும், பொதுச் செயல்பாடுகளில் பங்குபெறவும் விடாமல் தடுக்கின்றன. இந்தியாவில் தனிமனிதர்களின் வாழ்க்கை தேர்வுகளில் சாதி, பாலினம், மதம் பெரும் தாக்கம் செலுத்தி வரும் சூழலில் தொழிலாளர் பிரச்சனையில் அம்பேத்கரின் செயல்பாடுகள், தலையீடுகள் கருத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன.