பகுத்தறிவை பயன்படுத்திக் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்து முடிப்பது எளிமையான காரியம். அதே சமயம், ஒருவரின் அற நம்பிக்கைகளைப் பகுத்தறிவை கொண்டு எடை போடுவது சவாலான ஒன்று. எப்படிப்பட்ட அறக்கொள்கைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு விடாமுயற்சி தேவைப்படும். இதை நேருவின் வாழ்க்கை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. காந்தி அகிம்சையைத் தன் வாழ்நாள் முழுக்கக் கடைபிடித்ததை எடுத்துக் கொள்வோம். அகிம்சை தான் உலகத்தின் உன்னதமான கொள்கையா? நவீன காலத்தில் அரசாங்கங்களின் வன்முறையின் வடிவமாகத் திகழும் சிறைச்சாலைக்குள் நேரு அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபடி ‘இந்தச் சிறைச்சாலையில் தான் ஒரு அரசாங்கத்தின் அடிப்படை குணம் என்ன என்று எனக்குத் தெளிவாகப் புரிகிறது. அது வன்முறை, கட்டாயப்படுத்துதல், ஆள்பவர்களின் வன்முறை ஆகியவையே ஆகும்.’ என்று எழுதினார் நேரு. இப்படிப்பட்ட மன உளைச்சல் தரும் வேளையில் காந்தியின் அகிம்சையை நேரு ஆய்வு செய்தார்.
காந்தியை போல அகிம்சையில் நேரு அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அகிம்சையில் காந்தி அளவுக்குப் பற்றில்லாத தன்னைப் போன்றவர்களை அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றார் நேரு. “நான் தொடர்ந்து சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுகிறேன்… எப்போதும் பயன்படும் ஒரு தத்துவம் இருக்கக்கூடாதா? அந்தத் தத்துவம் தனிமனிதனின் அறத்தை காக்க வேண்டும். அதே சமயம் சமூகத்திற்கும் பயன்படுகிற ஒன்றாகவும் அது இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.”(சுயசரிதை, பக்கம் 538). அகிம்சை அரசியலில் வேலைக்கு ஆகுமா? ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை தொடர்ந்து வன்முறை, வன்முறையின் கருவிகளோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது. “வன்முறையே நவீன அரசுகள், சமூக அமைப்புகளை இயங்க வைக்கும் ரத்தமாக இருக்கிறது…அரசுகள் கருணையின் சாயலின்றி அடிப்படையில் வன்முறையையே நம்பியே இருக்கின்றன.”, அரசுகள் நேரடியாக வன்முறையைப் பயன்படுத்துகின்றன. அது மட்டுமில்லாமல் மறைமுகமாக, நாசூக்காக, ‘வன்முறையைக் கல்வி, பத்திரிகை ஆகியவற்றின் மூலம் மறைமுகமாக, நேரடியாகப் பரப்புரை செய்கின்றன. மதத்தைக் கொண்டும், வறுமை, பஞ்சம் ஆகியவற்றைக் காரணம் காட்டியும் வன்முறையை அரசுகள் நியாயப்படுத்துகின்றன’ என்று நேரு எழுதினார். (சுயசரிதை, பக்கம் 541). ஜெர்மானிய அமெரிக்க ஆன்மீகவாதியான ரெயின்ஹோல்ட் நீபுரின் கருத்துக்களின் தாக்கம் தெரிகிற ஒரு பத்தியில் நேரு இப்படி எழுதினார். “பகுத்தறிவின் வளர்ச்சியோ, மதப்பார்வையின் எழுச்சியோ, அற உணர்வின் பெருக்கமோ எதுவுமே வன்முறையை நாடுகிற மனப்பான்மையைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை.” என்று புலம்பினார் (சுயசரிதை பக்கம்: 542).

அரசே வன்முறையைப் பயன்படுத்தும் நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது? அரசை எதிர்க்கும் நேருவைப் போன்றவர்கள் வன்முறையை எப்படிக் கையாள்வது? நாளை இந்தியர்கள் ஆட்சிக்கு வந்தால் நாம் எப்படி அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று கவலைப்படுவதா? இல்லை கண்மூடித்தனமான நம்பிக்கையோடு வன்முறை பாதையில் எப்போதும் பயணிக்கக் கூடாது என்று உறுதியோடு காந்தியின் வழியில் பயணிப்பதா? நேருவுக்கு இப்படிப் பல்வேறு கேள்விகள் குடைந்து எடுத்தன. எப்படி அதிகாரத்தை அறத்தோடு பயன்படுத்துவது என்கிற கேள்வியோடு நேரு மல்லுகட்டி கொண்டிருந்தார். (இந்தக் கவலை நேருவுக்கு அவர் வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருந்தது.)
‘நேரு உங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் எது?’ என்று ஆண்ட்ரே மால்ராக்ஸ் கேட்டார். ‘ஒரு நியாயமான சமூகத்தை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்றார் நேரு. (இதைவிட நேரு துல்லியமாக, ‘ஒரு நியாயமான அரசை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்று சொல்லியிருக்கலாம்.) ஒரு தனிமனிதனுக்கு எது அறமாக இருக்கிறதோ, அதை அரசியல், சமூகச் செயல்பாட்டுக்கான கொள்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா? அது ஒரு பெருங்கூட்டத்தை வழிநடத்த முடியுமா? காந்தி முடியும் என்று நம்பினார். நீபுர் அது சாத்தியமில்லை என்று எண்ணினார். நேரு நீபுர் சொன்னதே சரி என்று பெருமளவில் ஒத்துப்போனார். தனிமனிதனின் அறத்துக்கும், ஒரு பெருங்கூட்டத்தின் அறத்துக்கும் இடைவெளிகள் உண்டு என்று நீபுர் போல நேருவும் கருதினார். ஆகவே, தனிமனித அறம் அப்படியே முழுக்க முழுக்கப் பெருங்கூட்டத்துக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது.
இதுவரை நீபுர் சொன்னதோடு ஒத்துப்போன நேரு, இதற்குப் பிறகு காந்தியின் பக்கம் சாய்கிறார். ‘ஒரு இலக்கை எப்படி அடைகிறோம் என்பதும் முக்கியம். எது நடைமுறைக்கு உகந்தது என்று பார்ப்பதோடு நில்லாமல், எது அறம் என்றும் பார்க்கவேண்டும். மோசமான, அறமற்ற வழிமுறைகள் இறுதியிலும் பெரும்பாலும் தோல்வியைத் தருகின்றன. இல்லையென்றால், அவை புதிதாகப் பெரிய பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றன. ஒரு மனிதன் எப்படிப்பட்ட பாதையில் பயணிக்கிறான் என்பதைக் கொண்டே அவனை உண்மையாக எடை போடவேண்டும். அதைவிட்டுவிட்டு அவன் தன்னுடைய இலக்கை அடைந்ததைக் கொண்டு மட்டும் அவனைச் சீர்தூக்கி பார்க்கக் கூடாது… பயணிக்கிற பாதையும், அடைய வேண்டிய இலக்கும் பிரித்துப் பார்க்க கூடாதவை. இரண்டுமே முக்கியம்.’ (சுயசரிதை பக்கம்: 549). காந்தி தன்னுடைய அறநெறிக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த அகிம்சையைக் கூட நேரு அப்படியே ஏற்கவில்லை. அதைப் பகுத்தறிவோடு அணுக வேண்டும் என்று நேரு கருதினார். அகிம்சையைக் கேள்வி கேட்க கூடாத கொள்கையாகவோ, மத நம்பிக்கையாகவோ நேரு பார்க்க மறுத்தார். அதைத் தொடர்ந்து அறிவுப்பூர்வமாக மீளாய்வு செய்து, அதை வெவ்வேறு எடுத்துக்காட்டுகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார்.

தன்னைத் தொடர்ந்து சுய விமர்சனம் செய்து கொண்டிருந்த நேருவின் விழிப்புணர்வைப் புரிந்து கொள்வது முக்கியமானது. நேரு எப்படித் தனக்கான அறப்பொறுப்புகளை முடிவு செய்யப் போராடிக்கொண்டே இருந்தார் என இதுவே உணர்த்தும். எப்படி எதிரிகளைக் கையாள்வது என்கிற கவலைதருகிற கேள்வி நேருவுக்கு எழுந்தது. அது குறித்துக் காந்தியும், நேருவும் முப்பதுகளில் உரையாடிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் தான் காந்தி தீண்டாமைக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்தார். காந்திக்குப் பழமைவாதிகளான சனாதனிகள் பலர் எதிரிகளாக மாறினார்கள். காந்தியை தொடர்ந்து வசைபாடும் விஷமம் மிகுந்த பரப்புரைகளை மேற்கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் நேரு 1933-ல் காந்திக்குக் கடிதம் எழுதினார். தன்னுடைய எதிரியின் முரண்பாடான கருத்துக்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை மக்களுக்கு இல்லாமல் இருப்பதை நேரு சுட்டிக்காட்டினார். அந்தக் கடிதத்தில் இன்னொரு சுவையான உண்மையை நேரு வெளிப்படுத்தினார். நேருவும் சமயங்களில் எதிர்த்தரப்பின் கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதவராக இருந்தார் என்பதே அந்த உண்மை. “ஒருவர் கடுமையாக அழுத்தம் கொடுக்கும் பொழுது எல்லாச் சகிப்புணர்வும் காணாமல் போய்விடுகிறது. சனாதனிகள் உங்களைக் கடுமையாக வெறுப்பதற்கு என்ன காரணம்? நீங்கள் அவர்களுக்குக் கடும் அழுத்தத்தைத் தருவதன் அடையாளமே அது.” என்று நேரு எழுதினார்.
மேலும், “நான், சாப்ரூ ஆகியோர் எங்களுடைய மதச் சகிப்புத்தன்மை எப்படி உயர்ந்தது என்று பெருமையாகப் பேசிக்கொண்டே பீடுநடை போடுவோம். ஆனால், எங்களுக்கு என்று பெரிதாக மத நம்பிக்கை என்று எதுவுமில்லை… எங்கள் மனதுக்கு நெருக்கமான ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து நீங்கள் பேசுங்கள். அப்போது எங்களுடைய சுயரூபம் தெரியும். நாங்கள் சகிப்புத்தன்மை துளிகூட இல்லாதவர்கள் என்று புரிந்துவிடும். சில விஷயங்களில் உங்களை விடப் பொறுமை இல்லாதவர் யார் இருக்கிறார்? உண்மையில் சகிப்புத்தன்மை என்பதே அரிதிலும் அரிதாகத்தான் தென்படுகிறது. சகிப்புத்தன்மை என்கிற பெயரில் அலட்சியமே நிலவுகிறது. நாம் எதை மதிக்கவில்லையோ, அவற்றைக் கொண்டு நாம் மற்றவர்களைச் சகித்துக்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறோம்.” என்று நேரு எழுதினார். இந்த மேற்கோளின் மூலம் நேரு தன்னுடைய அற லட்சியங்களைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டே இருந்தார் என்பது தெளிவாகிறது. எப்போதெல்லாம் தான் தடுமாறுவதாக நேரு உணர்ந்தாரோ அப்போதெல்லாம் அதனை நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

அறக்கொள்கைகள் உலகத்தில் இருந்தே தோன்ற வேண்டும். அவை உலகத்தோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். நடைமுறைத் தேவைகளை உணர்ந்த பகுத்தறிவாகவும் அறப்பகுத்தறிவு இருக்க வேண்டும். அறப்பகுத்தறிவு வெறுமனே புரியாத கொள்கைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்ல. அனுபவங்கள், வரலாறு ஆகியவற்றைத் தொடர்ந்து மனதுக்குள் அசை போட்டு, எடை போடுகிற தெளிவான முயற்சி அது. “இன்றைய தேவைகள் தங்களுக்கு ஏற்றவாறு புதிய அறங்களை உருவாக்க நம்மைக் கட்டாயப்படுத்தும். நாம் இந்த ஆன்மாவின் நெருக்கடிகளில் இருந்து வெளிவர விரும்பினால், உண்மையான ஆன்மீக இலட்சியங்கள் எது என்று உணர விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? நம் கண் முன்னால் நிற்கும் பிரச்சினைகளைத் திறந்த மனதோடும், தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டும். மதத்தின் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போய்விடக் கூடாது.” என்று நேரு தன்னுடைய சுயசரிதையில் எழுதினார். (பக்கம் 550). இன்னும் பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டும் என்றால் நேருவின் வாழ்க்கையை ஒரு அறிவு சார்ந்த செயல்திட்டம் எனலாம். அந்த வாழ்வில் அவர் பகுத்தறிவின் கருவிகளை, அறப்பகுத்தறிவோடு இணைக்கவும், அவற்றுக்குள் சமரசத்தை ஏற்படுத்தவும் முயன்றார்.
நேரு தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கு முற்றிலும் நேர்மாறாகக் கொள்கை முடிவுகள், அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றில் செயல்பட்ட தருணங்கள் உண்டு. ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பு உரையாடுவது, பகுத்தறிவால் அச்செயலின் பல்வேறு கோணங்களை ஆய்வு செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டார். அதற்குப் பின்பே அவர் செயல்பட்டார். இதற்கு அனைவரும் நன்கறிந்த, நமக்குப் பாடமாகத் திகழும் மொழிவாரி மாநில உருவாக்கமே எடுத்துக்காட்டு. ஐம்பதுகளில் இருந்தே மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்றும், இந்திய குடியரசின் பல்வேறு மாநிலங்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் எண்ணற்ற கோரிக்கைகள் எழுந்தன. நேரு தன்னுடைய ஆரம்பக் கால அரசியல் வாழ்க்கையில் மொழிவாரி மாநிலங்களை ஆதரித்தவர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவை மொழிவாரியாகப் பிரித்தால் இந்தியாவின் மாநிலங்களுக்குள் மோதல்கள் ஏற்பட்டு, நாடு பிளவுபடும் என அஞ்சினார். ஆரம்பகட்ட அரசியலமைப்பு சட்ட உருவாக்க விவாதங்களில் அழுத்தமாக நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நேரு பதிவு செய்தார். ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் போராட்டங்கள் (சமயங்களில் வன்முறை போராட்டங்கள்) வாதங்கள் ஆகியவை நேருவின் பார்வையை மாற்றின. நேரு இந்த விஷயத்தில் தொடர்ந்து காலதாமதப்படுத்துபவராக, மழுப்புவராக இருந்தார் என்று சாடப்படுகிறார். பொதுமக்களின் உணர்ச்சி மிகுந்த கோரிக்கைகளுக்கு உடனே செவிமடுக்காமலும், இழுத்தடிக்கவும் செய்தார் நேரு. இதனால் போராடுபவர்களைத் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வைத்ததோடு, படிப்படியாகக் கோரிக்கைகளை மறு ஆய்வு செய்யவும் வழிகோலினார். இப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் அவர் இந்திய குடியரசை வலிமைப்படுத்தியதோடு, அதன் ஆயுளை நீட்டிக்கவும் செய்தார்.
தாகூர், காந்தியை போல அல்லாமல் நேரு நாட்டை ஆளும் பொறுப்பைச் சுமந்தார். ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பு அதிகாரத்தை ஓரிடத்தில் அமைப்புரீதியாகக் குவித்து வைக்கிறது. நவீனகாலங்களில் பகுத்தறிவை உன்னதமான செயல்களுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை தருகிற மிகமுக்கியமான பொறுப்பு அது. இப்படிப்பட்ட அதிகாரத்தோடு எண்ணற்ற தேர்வுகள், பொறுப்புகளும் நேருவை வந்து சேர்ந்தன. இது எப்போதும் ஒரு எதிரியை கூடவே வைத்திருப்பதைப் போன்றது. அர்னால்ட் டோய்ன்பீ குறிப்பிடுவதைப் போல, “தன்னுடைய லட்சியங்களுக்காகப் பிறரை சிறையில் அடைப்பதை விடத் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தானே சிறைச்சாலையை முத்தமிடுவது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. நேரு இரு வகையான அனுபவங்களுக்கும் சொந்தக்காரர்.” அதிகாரம் கட்டற்ற கண்மூடித்தனத்தோடு இயங்குகிறது என வலியோடு நேரு உணர்ந்தார். அதிகாரத்தை நியாயமான காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற தாகம் குறையாமல் நேரு இயங்கினார். அந்த உயரிய லட்சியத்திற்காக சமூகத்தின் அறநெறிக்கான தேடலைப் பகுத்தறிவை கொண்டு மேற்கொண்டார்.
இந்த அறநெறிக்கான வழிகாட்டுதலைப் பெறுவதற்கு மற்றவர்கள் மதநூல்களை நாடியிருப்பார்கள். நேரு அப்படிச் செய்யவில்லை. பலதரப்பட்ட, தீவிரமான மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் நவீன அரசு எப்படிப்பட்ட பண்புகளோடு இருக்கும் என்கிற நேருவின் புரிதலே இதற்குக் காரணம். அவருக்கு இருந்த அசரவைக்கும் வரலாற்று அறிவோடு, அவரின் சொந்த அனுபவங்களும் கைகொடுத்தது. ஒரு அரசாங்கம் எப்படி இயங்கும் என்பதை வெகு அருகில் இருந்து பார்த்தவர் நேரு. ஒரு சிறைக்கைதியாக எப்படி மூடநம்பிக்கை அலைக்கழிக்கும் என்றும் நேருவுக்குத் தெரியும். அரசியல் அதிகாரம் எப்படித் தான் விரும்பியபடியெல்லாம் இயங்கும் என்றும் நேருவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆட்சியாளன் எப்படிப்பட்ட அதிகாரத்தைத் தன்னுடைய குடிகள் மீது செலுத்த முடியும் என்பதை நேரு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்ததால் நன்கு அறிந்திருந்தார்.
இந்தியா மேலும் மேலும் ஜனநாயகமயமாகி வருகிறது. அரசியல் செயல்பாடுகள் பலரையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றன. ஆகவே, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், அரசு ஆகியவை மத நம்பிக்கையை இன்னமும் நெருக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற வாதங்கள் பல தளங்களில், வெவ்வேறு வடிவங்களில் கேட்கின்றன. ஐரோப்பியாவில் வரலாற்று அனுபவங்களில் இருந்து இரண்டு அடிப்படையான அரசியல் பாடங்களை நாம் படிக்க வேண்டியிருக்கிறது. மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அரசின் பண்பை வரையறுக்க முயல்வதில் ஒரு பேராபத்து இருக்கிறது. அரசுக்கு ஒரு மத அடையாளத்தை அது தந்துவிடுகிறது. இரண்டாவதாக, சில அவசர காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் பொது மக்கள் தங்களுடைய அதிகாரங்களைச் சில அரசியல்வாதிகளின் கையில் ஒப்படைக்க முடியாது. அதைப் போலவே மதத்தை நம்பியும் குடிமக்கள் தங்களுடைய அதிகாரங்களை ஒப்படைப்பது ஆபத்தான ஒன்று. தொடர்ந்து வெவ்வேறு ஜனநாயக அமைப்புகளின் மூலம் அரசியல் அதிகாரம் என்பது பொறுப்பு மிக்கதாக, நியாயமான முறையில் செயல்படுவதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக அரசுகளை மத நம்பிக்கை கொண்டதாக மாற்றுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. இந்த இரண்டு பாடங்களுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கிறது. ஜனநாயகம், மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாத அரசு ஆகியவை உலகம் முழுக்கப் பெரும்புயலில் சிக்கிக் கொண்ட படகுகள் போல அல்லாடுகின்றன.
ஐரோப்பாவின் அரசியல் அனுபவத்தில் இருந்து பாடம் படித்த மிகச் சில இந்திய அறிவுஜீவிகளில் நேரு ஒருவர். அவர் இந்த இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டார்: ஒரு நவீன அரசுக்கு அரசியல் ஏற்பை தருகிற ஒரே அளவுகோல் ஜனநாயகம் மட்டுமே. ஒரு நவீன அரசை மதத்தோடு தொடர்புபடுத்தினால் அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும். நேரு ஐரோப்பிய, இந்திய வரலாறுகளை வாசித்து உணர்ந்தவர் என்பதால் அவரால் ஒரு ஒற்றுமையைக் காண முடிந்தது. இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய அரசுகள் எப்படி அதிகாரத்தையும், மதத்தையும் கையாண்டன என அவர் ஆராய்ந்து பார்த்தார். இந்த அரசுகள் எல்லாம் சமூகத்தின் மத நம்பிக்கைகளை முடிந்தவரை அரசியல் அதிகாரத்தில் இருந்து தள்ளியே வைத்திருந்தன. சமயங்களில் மதம் அரசியலில் தலையிட்டாலும், அதை அரசுகள் மட்டுப்படுத்தவே முயன்றன என நேரு உணர்ந்து கொண்டார்.

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்திப் பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.