என்னை உனக்குத் தெரியாதா என்று அவர்கள் வினவும்போது, தெரியாது என்று பதிலளி.
அவர்கள் பார்ட்டிக்கு அழைக்கையில், அந்தக் கூடுகைகள் எப்படியிருக்கும் எனப் பதிலளிப்பதற்கு முன் ஒரு கணம் யோசிக்கவும். உரத்த குரலில் யாரோ ஒருவர் தான் எப்போதோ கவிதையொன்றை இயற்றியதாக உன்னிடம் தெரிவிப்பார்கள். வழவழப்பான சாஸேஜ் உருண்டைகள் காகித தட்டுகளில் பரிமாறப்படும். இப்போது பதிலளி.
நாம் எல்லாம் சேர்ந்து களிப்போம் என அவர்கள் சொன்னால், ஏன் என வினவு.
அவர்களை முன்போல நீ அன்பு செய்யவில்லை என்று பொருளல்ல. நீ மறந்து விடக்கூடாத ஒன்றை நினைவுகூர முயன்று கொண்டிருக்கிறாய். மரங்கள். அந்திக் கருக்கலில் ஒலிக்கும் மடாலய மணி. அவர்களிடம் புதிய வேலையொன்று உனக்காகக் காத்திருப்பதாகச் சொல். அது எப்போதும் முடியப்போவதே இல்லை என அறிவிக்கவும்.
காய்கறிக்கடையில் யாரேனும் உன்னை அடையாளம் கண்டுகொண்டால், கொஞ்சநேரம் தலையசைத்துவிட்டு, முட்டைகோஸ் போல மாறிவிடு. பத்தாண்டுகளாகத் தலைகாட்டாத ஒருவரை வாசலில் சந்தித்தால், உன்னுடைய புதிய கீதங்களை எல்லாம் அவனிடம் பண்ணிசைக்காதே. உன்னால் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க இயலவே இயலாது.
இலை போல உணர்ந்து உலவி நட. எந்த நொடியிலும் நீ தடுமாறி விழலாம் எனத் தெரிந்துகொள். உன் நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய என இப்போது முடிவெடு. – Naomi Shihab Nye, Words Under the Words: Selected Poems தொகுப்பு
‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின் பாயிரத்தில் உள்ளது . பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர். கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார். தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக நூலிற்கு ஆங்கிலம், தமிழ் என்று இரு மொழிகளிலும் முன்னுரை எழுதியுள்ளார்.
தன்னுடைய முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது” என்று வருந்துகிறார்.
ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை
பாயிரத்தில் ‘தமிழ் தெய்வ வணக்கம்’ என்று தமிழை தெய்வமாக போற்றிப் பரவுகிறார். கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில் தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு என்று பலவாறு போற்றுகிறார். இப்பாடலில் வழங்கி வரும் முதன்மையான கருத்துகள் என்று சிலவற்றைப் பேராசிரியர் கைலாசபதி அடையாளப்படுத்துகிறார். அவை,
(அ) இந்திய நாட்டில் தெக்கணம் திலகமாகத் திகழும் பகுதி.
(ஆ) திராவிடம் முதன்மையான சிறப்புமிக்கதாகும்
(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும் புகழும், பெருமையும் மிக்கது
(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை போன்றது தமிழ்
(உ) தமிழே திராவிட மொழிகளுக்கு தாய்
(ஊ) ஆரியம் போல் வழக்கழியாமல் சீரிளமை மிக்க மொழியாகத் தமிழ் திகழ்கிறது
‘நீராருங் கடலுடுத்த’ எனும் துவங்கும் இப்பாடல் முந்தைய தமிழ் படைப்புகளில் இருந்து பல வகைகளில் வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில் புதிய பாய்ச்சலுக்கு அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின் பார்வையில் தமிழ்த்தேசியத்திற்கான முன்னோடிப் பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர் பிரேர்னா சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர் நலனும் கைகோர்க்கும் இடம் என்கிறார். தமிழ்த்தாயின் உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர் சுமதி ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார் கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.
இப்பாடலுக்கு பிறகே தமிழைத் தாயாக, தெய்வமாக போற்றிப்பரவுவது பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற பாடல்கள் தமிழன்னையை போற்றி பாடப்பட்டன. இவற்றுக்கான முதல் வித்து ‘தமிழ்த்தெய்வ வணக்கம்’ ஆகும்.
நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்
கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய மூன்றாம் ஆண்டறிக்கையை 1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப் பற்றி பேசுகிறது:
‘பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’ என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை ஆய்வாளர் கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார்.
1913-ம் ஆண்டறிக்கை
இப்பாடல் படிகளை கரந்தை தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த உமாமகேசுவரனார் பல நூறு பிரதிகள் அச்சிட்டு கொண்டு சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும் பாடப்பட்டது. பல்வேறு தமிழ்ச்சங்க கூட்டங்களில் இப்பாடல் ஒலித்தது. தனித்தமிழ் மாநாடுகளில் தவறாமல் இடம்பெற்றது. .தனித்தமிழ் மாநாடுகள், பாடநூல்களில் இடம்பெற்றது. தனிநாயகம் அடிகள் “இப்பாடலின் வரிகள் கடந்த அறுபது ஆண்டுகளாக எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான பாடல் எனும் அதன் பெருமையை விஞ்சும் படைப்பு எதுவுமில்லை” என்று 1963-ல் புகழ்ந்தார்.
இப்பாடலை தமிழக அரசு அனைவரும் பாடும்வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் அறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா இயற்கை எய்திவிட, கலைஞர் கருணாநிதி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
கரந்தைத் தமிழ்ச்சங்க விழாக்களிலேயே முதல் ஆறு வரிகள் மட்டுமே பாடப்பட்டு வந்தன என்பதை சுட்டிக்காட்டுகிறார் கரந்தை ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான விருதளிப்பு விழாவில் தமிழ்நாட்டின் வழிபாட்டுப் பாடலாக ‘நீராருங் கடலுடுத்த’ அமையும் என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
புகைப்பட நன்றி: kalaignar.dmk.in
பிற மொழிகளை தாழ்த்திப் பேசும் வரிகளைத் தவிர்த்து பாடலை அமைத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். ஆரியம் போல் வழக்கழிந்து முதலிய வரிகளும் சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வழக்கத்தை அடியொற்றியே இப்பாடல் வரிகள் அமைந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை தமிழ்நாட்டின் வழிபாட்டுப் பாடலாக ஆக்கிய அரசாணையை கூர்ந்து நோக்கினால் இன்னொன்றும் புலப்படும்.
ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 1393-ல் தமிழ்நாடு முழுமைக்கும் பொதுவாக வழிபாட்டுப் பாடல் அமையும் வண்ணமே ‘நீராருங் கடலுடுத்த ‘ இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட நம்பிக்கையோடு’ தொடர்புடையதாக இல்லாத வண்ணம் இப்பாடல் இருக்குமாறு அமைந்திருப்பதாகவும் அரசாணையில் சொல்லப்பட்டு இருந்தது. பல்வேறு தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளில் இந்து மதப் பாடல்களும், வடமொழி,தெலுங்கு பாடல்களும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த போது இந்த அறிவிப்பு அவற்றை மாற்றியது. மேலும், பாயிரத்தில் உள்ள சிவனைப்பற்றிய குறிப்பு இடம்பெறாமல் போனதையும், ‘தமிழ்த்தெய்வ வணக்கம்’ ஆனது ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ மாறியதையும் மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )
மேற்சொன்ன அரசாணையை ஒட்டி 23 நவம்பர் 1970-ல் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ வழிபாட்டுப்பாடலாக விழாக்களின் துவக்கத்தில் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்பாடல் மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் இசைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
Memo no. 3584/70-4
காஞ்சி மடாதிபதி விஜேயந்திரர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்ட போது கண்மூடி அமர்ந்து இருந்தார். இதனையடுத்து கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி மடத்தின் கிளையில் நுழைந்தார். அதற்கு மட மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை கண் இளங்கோ மிரட்டியதாக . மடத்தின் மேலாளர் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக தன்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை கண் இளங்கோ நாடினார்.
இவ்வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்குறிப்பிட்ட இரண்டு அரசாணைகள் 1393, 3584/70-4 ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ வழிபாட்டுப் பாடலாகவே இந்த அரசாணைகள் வரையறுத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய் வாழ்த்து வழிபாட்டுப்பாடல், அது, கீதம் அன்று”. என்று குறிப்பிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தச் சட்டமும், அரசாணையும் இல்லை என்பதையும் அத்தீர்ப்பில் கவனப்படுத்தினார்.
மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உச்சபட்ச மரியாதையும், மதிப்பும் தரவேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது கூட்டத்தினர் எழுந்து நிற்பது மரபாக இருக்கிறது என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில் தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும். பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் நாம் கொண்டாடும் போது, ஒரே வழியில் தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது போலித்தனமானது. ….. ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி எளிய வாழ்வினையே வாழ்கிறார்.அவர் வழிபாட்டில் ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான நிலையில் இருப்பார். தமிழ்த்தாய் வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால் சந்நியாசி தியான நிலையில் அமர்ந்து இருப்பது நிச்சயம் நியாயமானது. இந்த நிகழ்வில், மடாதிபதி தியான நிலையில் அமர்ந்து கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும் செலுத்தும் விதமாகும்.” என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்தின் தோற்றம், வளர்ச்சி, அதனை அரசு நிகழ்ச்சிகளில் விழாவின் துவக்கத்தில் பாடவேண்டும் என்று ஆணையிட்ட அரசாணைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு விலக்கும் வழங்கப்பட்டுள்ளது.
என்னுடைய அத்தையின் வீட்டை தீயிட்டு கொளுத்தினார்கள். இரண்டாக மடிக்கப்பட்ட ஐந்து பவுண்ட் தாளைப் போல மண்டியிட்டு தொலைக்காட்சிகளில் வரும் பெண்களைப்போல நான் தேம்பி அழுதேன். என்னைக் காதலித்தவனை அழைத்தேன் அவன் என் ‘குரலை’ ஆற்றுப்படுத்த முயன்றான்.
நான் ஹலோ என்றேன்
அவன் வார்ஷன், ஏன் இப்படியிருக்கிறாய், என்னாயிற்று எனக் கேட்டான். நான் பிரார்த்தித்து கொண்டிருந்தேன்
என் பிரார்த்தனைகள் இப்படி இருந்தன;
அன்புள்ள ஆண்டவரே
நான் இரு தேசங்களில் இருந்து வருகிறேன்.
ஒன்று தாகமாய் இருக்கிறது
இன்னொன்று தீப்பற்றி எரிகிறது
இரண்டிற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. அன்றிரவு
என் மடியில் உலக வரைபடத்தை ஏந்திக்கொண்டேன்
மொத்த உலகத்தின் மீதும் என் விரல்களால் நீவிவிட்டு
சன்னமாக
எங்கேனும் வலிக்கிறதா என வினவினேன்அது இவ்வாறு பதிலளித்தது
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும். – Warsan Shire.தமிழில்: பூ.கொ.சரவணன்
சொற்களில் கவனமாயிருங்கள்,
அதிசய சொற்களிலும் கூட,
ஆச்சரிய சொற்களுக்காக நம்மால் இயன்றதையெல்லாம் புரிகிறோம்,
அவை பூச்சிகள் போல மொய்க்கின்றன,
ஆனால், கொட்டாமல் முத்தமொன்றை ஈந்துவிட்டு அகல்கின்றன.
அவை விரல்கள் அளவுக்கு நல்லவையாகவும் இருக்கக் கூடும்.
நீங்கள் நம்பிக்கையோடு அமரக்கூடிய பாறையாகவும் சொற்கள் திகழலாம்.
அவை மலர்களாகவும், காயங்களாகவும் இருக்கலாம்.
எனினும், நான் சொற்களைக் காதலிக்கிறேன்.
அவை மேற்கூரையிலிருந்து தரை சேரும் புறாக்களாக இருக்கலாம்.
அவை என் மடியில் வீற்றிருக்கும் ஆறு புனித ஆரஞ்சு கனிகள்.
அவை மரங்கள், வேனலின் கால்கள்,
வெய்யோன், அவனின் ஒளிரும் முகம்.
இருந்தாலும், அவை அடிக்கடி என்னைக் கைவிடுகின்றன.
நான் சொல்ல விரும்புபவை தீராமல் என்னுள்ளே இருக்கின்றன,
அத்தனை கதைகள், உருவங்கள், சொலவடைகள்,
ஆனால், சொற்கள் போதுமானதாக இருப்பதேயில்லை,
பிழையானவை என்னை முத்தமிடுகின்றன,
சமயங்களில் கழுகைப் போல வான் ஏகுகிறேன்,
சிறுகுருவியின் சிறகுகளுடன்,
ஆனால், சொற்களின் மீது அக்கறையோடு கனிவாய் இருக்கிறேன்.
சொற்களையும், முட்டைகளையும் கவனமாகக் கையாளவேண்டும்.
அவை உடைந்தால் மீண்டும் உயிர்த்தெழுப்பவே முடியாதவை. – Anne Sexton
சாவித்திரிபாய் புலே (1831-97) அவருடைய புரட்சிகரமான கணவருக்கு இணையாக போராடினார், அல்லல்பட்டார். சாதி, பாலின பாகுபாடு மிக்க புறக்கணிப்பால் அவரின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஜோதிபாயின் மனைவி என்பதை தாண்டி அவர் குறித்து அறிவுலகம் பெரிதாக பேசுவதில்லை. நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கு கல்வி என்கிற புரட்சிகர சிந்தனையை மொழிந்தவர். பெண் விடுதலையின் நாயகி. கட்டிப்போடும் கவிதையின் முன்னோடி. சாதி, ஆணாதிக்க சக்திகளை நேருக்கு நேராக எதிர்கொண்ட தீரமிக்க மக்கள் தலைவர். அவருக்கு என்று உரிய தனித்துவமான அடையாளங்களும், சாதனைகளும் பல. நவீன இந்தியாவின் வரலாற்றில் சாவித்திரிபாய் புலே என்கிற பேராளுமையின் பெயரை உச்சரிக்க மறுக்கிற மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் அறிவு உற்பத்தி எவ்வளவு ஈவிரக்கமற்றது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சாவித்திரிபாய் அவர்களின் வாழ்க்கை,போராட்டம் மராத்தியர் அல்லாத மக்களையும் சென்றடைய வேண்டும்.’ – வரலாற்று ஆய்வாளர் பிரஜ் ரஞ்சன் மணி
சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .. மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் .ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்குக் கல்வி பயிற்றுவித்தார் .
இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்குத் தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய் அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகச் சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர் அதைச்சொல்லி புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார் இவர் .
தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்
1852ல் இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.
‘தி பூனா அப்சர்வர்’ இதழ் மே 29, 1852 அன்று இப்படி எழுதியது: “அரசுப்பள்ளியில் படிக்கும் ஆண் பிள்ளைகளை போல பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் ஜோதிராவ் பள்ளியில் பயில்கிறார்கள். இதற்கு காரணம், அரசுப்பள்ளியை விட இங்கே கல்வி மிக உயர்ந்த தரத்தோடு இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தாள் இப்பள்ளியில் மாணவிகள் அரசுப்பள்ளி ஆண்களை விட தாங்கள் அறிவு மிக்கவர்கள் என புரிய வைப்பார்கள். வருகிற தேர்வில் அவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெறக்கூடும். அரசு ஏதேனும் செய்யாவிட்டால் இந்த பெண்கள் ஆண்களை விட கல்வியில் சிறந்து ஒளிர்வதை கண்டு நாம் வெட்கத்தில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்”.
தீண்டப்படாத குழந்தைகள் பள்ளிகளில் சேருவதால் ஆதிக்க சாதி குழந்தைகள் பள்ளியை விட்டு நிற்கும் சூழல் நிலவி வந்த காலம் அது. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு என்று பள்ளிகளை நடத்திய புலே இணையருக்கு பணத்தட்டுப்பாடு இன்னமும் பெரிதாக இருந்தது. அவர்கள் பள்ளியை சேர்ந்த அறங்காவலர் ஒருவர் எழுதிய கடிதம் நிலையையும், சாவித்திரிபாயின் ஆளுமையையும் ஒருங்கே புலப்படுத்துகிறது
“ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிற அளவுக்கு நிலைமை நன்றாக இல்லை. கூடுதல் சம்பளம் தரும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் போகிறார்கள்…பெண்களின் கல்விக்காக இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாவித்திரிபாய் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டார். எந்த சம்பளமும் பெற்றுக்கொள்ளாமல் அவர் பணியாற்றுகிறார். தகவல்களும், அறிவும் பரப்பப்படும் போது பெண் கல்வியின் நன்மைகளை மக்கள் முழுமையாக விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். ”
1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக
உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும்
முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட
என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.
ஆணின் பாலியல் வன்புணர்வுக்கும், வன்முறைக்கும் ஆளாகி கர்ப்பவதி ஆன ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளச் சென்றாள். அவளை ஜோதிபாய் புலே மீட்டு வந்தார். அந்தப் பெண்ணைத் தன்னுடைய வீட்டில் அனுமதிக்கச் சாவித்திரிபாய் எந்த எதிர்ப்பும் சொல்லாததோடு அவளுக்குப் பிறந்த குழந்தையைத் தன் மகன் போலவே வளர்த்து மருத்துவர் ஆக்கினார். இப்படிக் கைவிடப்பட்ட பெண்களைக் காப்பதற்கும், அவர்களின் பிரசவத்தைக் கவனிக்கவும் ‘பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா’ எனும் இல்லத்தைத் துவக்கினார்..
1855-ல் அவரின் பதினொரு வயது மாணவி முக்தாபாய் ‘தியானோதயா’வில் எழுதிய ‘மங்குகள், மகர்களின் துக்கம்’ என்கிற கட்டுரையே சாவித்திரிபாய் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதைத் தெளிவாக்கும்
‘ஓ! இறைவனே எது எங்களின் மதம் என்று சொல்! ஓ இறைவனே! எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி. ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை விட்டு கெட்டு ஒழியட்டும். எங்களின் மனதிற்குள் இப்படிப்பட்ட இழிந்த மதம் எப்பொழுதும் நுழையாமல் இருக்கட்டும்..மங்குகள், மகர்கள், ஏன் பிராமணர்கள் என்று அனைவரையும் படைத்தவன் ஒருவனே! அவனே என்னை அறிவால் நிறைத்து எழுத வைக்கின்றான்… ஓ! மகர்களே! மங்குகளே! நீங்கள் ஏழ்மையிலும், நோயிலும் வாடுகிறீர்கள். அறிவெனும் மருந்து மட்டுமே உங்களைக் குணப்படுத்தவும், ஆற்றவும் முடியும்’
24 செப்டம்பர் 1873-ல் துவங்கப்பட்ட சத்தியசோதக் சமாஜத்தில் சாவித்திரிபாய் முக்கிய பங்காற்றினார். இந்த அமைப்பு புரோகிதர், வரதட்சணை இல்லாமல் திருமணங்களை முன்னின்று நடத்தியது. சமாஜத்தின் முதல் அறிக்கையில் சாவித்திரிபாய் தான் இத்தகைய மதச்சடங்குகள் ஒழித்த புரட்சிகரமான திருமணத்திற்கு காரணம் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்கக் கடுமையான ப்ளேக் சட்டங்களைப் போட்டுப் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து
ராணுவத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை
ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.
தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படி ஊருக்கு வெளிப்புறம் மகர் குடியிருப்பில் வசித்து வந்த பாண்டுரங் பாபாஜி கெய்க்வாட்டின் பத்து வயது சிறுவன் காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்தச் சிறுவன் பிழைத்துக்கொண்டான். வாழ்க்கையையே சேவையால் நிறைத்த அவரை ‘இந்தியக்கல்வியின் தாய்’ என்று போற்றுகிறோம். .
சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை,சமூகம்,வரலாறு,கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன அவரின் கவிதை கீழே :
போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,சோராமல் உழை-ஞானத்தை,செல்வத்தைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய்க் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக
பிராமண நூல்களை வேகமாகத் தூக்கி எறிக !
:
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’ என்கிற குறுநூலை எழுதியுள்ளார். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த பெ.சு நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். அவர் மொத்தமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவை 650 பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றின் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
தன்னுடைய மனோன்மணியம் நாடக நூலில் தன்னை, ‘அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்’ என்று அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்த்த பெ.சு. தன்னுடைய தமிழார்வத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து மாட்டுவண்டி ஏறி செங்கோட்டை அடைந்து அங்கிருந்து சென்னை வரை பயணம் செய்து தமிழறிஞர்களைக் கண்டு, அறிவுப்பசி ஆற்றிக்கொண்டார். அன்றைய சமஸ்தான மன்னரின் உதவியோடு லண்டனில் இருந்து ஆங்கில நூல்களை வரவைத்து வாசித்து இருக்கிறார்.
களக்காட்டில் இருந்து ஆலப்புழைக்குக் குடிபெயர்ந்த வேளாளர் குடும்பம் என்றாலும் தமிழையும், சைவத்தையும் பெ.சுவின் குடும்பம் மறக்கவில்லை. திருவிதாங்கூர் அரசர்களின் மொழி வெறுப்பற்ற தன்மை இதற்குக் காரணம் என்று ஆதாரங்களோடு கவனப்படுத்துகிறார் அ.கா.பெருமாள். பெ.சு வரலாறு, தத்துவம் பயின்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்றாலும் அப்படிப்பை அவர் முடிக்கவில்லை. பெ.சு. அவர்கள் திருநெல்வேலி ம.தி.தா. இந்துப்பள்ளியின் தலைமைப்பொறுப்பில் இருந்த போது தமிழை முறையாகக் கற்றதோடு, ஸ்ரீ கோடகநல்லூர் சுவாமிகளிடம் சித்தாந்த சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு தானே சுயமாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ளார். திருவனந்தபுரம் கல்லூரியில் பயின்ற போது தமிழ்த்துறைக்குப் புத்தகங்களை வாங்கியுள்ளார்.
திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் தத்துவத்துறை பேராசிரியராக இருந்த முனைவர் ராபர்ட் ஹார்வி இங்கிலாந்து போக வேண்டி இருந்த போது தன்னுடைய இடத்திற்குப் பெ.சுவை பரிந்துரை செய்தார். 1878-1882 வரை தத்துவ ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மூன்றாண்டுகள் சமஸ்தான மன்னரால் பிறவகைச் சிரஸ்தார் என்னும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இது அரசு நிர்வாகம் தொடர்புடையது. இப்பணி காலத்தில் தான் பல்வேறு கோவில்களுக்குப் பயணம் செய்து, கல்வெட்டுகள், ஆவணங்களைப் பெ.சு. ஆய்வு செய்துள்ளார். 1885-1897 வரை ஹார்வியின் பரிந்துரையால் மகாராஜா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். நன்றி மறவாமல் தன்னுடைய வீட்டிற்கு ஹார்விபுரம் என்று பெயரிட்டதோடு, தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தை அவருக்கே சமர்ப்பித்தார்.
நாடகாசிரியர்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தமிழ் நாடகங்கள் எழுந்தன. தமிழகத்தில் அக்காலத்தில் 327 நாடகங்கள் வெளிவந்ததாக ஒரு ஆய்வுக்குறிப்புண்டு. பெ.சு இத்தகைய நாடகங்களைப் படித்துள்ளார். லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி கதையின் தழுவலாகத் தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தைப் பெ.சு எழுதினார். பெ.சுவின் நாடகம் எளிமை, விறுவிறுப்பு, அமைப்பிற்காகப் பரவலாகப் படிக்கப்பட்டது. இந்நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடு பெ.சு எழுதவில்லை, வாசிப்பின்பத்திற்காகவே அதனை இயற்றியதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
வெண்பா, கலிப்பா, குறள் வெண்செந்துறை, வஞ்சிப்பா என்று பல்வேறு பாவினங்கள் விரவிவர இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலை தத்துவப் பின்னணியோடு பெ.சு படைத்தார். ‘இல்லறம், துறவறம், பக்தி ஞானம் முதலிய மோட்ச சாதனங்கள்’ பாத்திரங்களின் மூலம் உருவகப்படுத்தி இந்நாடகம் அமைந்தது.
இந்நாடகத்தில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி’ என்கிற வரி நூலில் இடம்பெறுகிறது. ‘பத்துப்பாட்டில் மனம் பற்றியவர் பிற நூற்களைப் பற்றமாட்டார்’ என்று பெ.சு சிலிர்க்கிறார். மனோன்மணியம் நாடகம் பல்வேறு பல்கலைகழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புக்கு உரியது.
ஆய்வறிஞர்:
கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப் பெ.சு. படியெடுத்து உள்ளார். ஆங்கிலத்தில் பத்துப்பாட்டு, திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார். பத்துப்பாட்டின் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ.சு மொழிபெயர்த்துள்ளார்.
திருவிதாங்கூர் வரலாறு கட்டுரையில் கொல்லம் ஆண்டு என்கிற வழக்கம் எப்படி வந்தது என்பதைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்து புதியதொரு பார்வையை முன்வைக்கிறார். அக்கட்டுரையில் சமூக நோக்கோடும் பெ.சு எழுதியுள்ளார். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆரியப்பண்பாடும், ஆரியருக்கு முந்தைய திராவிடப்பண்பாடும் இணைந்தே உள்ளன என்கிற பெ.சு கன்னியாகுமரி முதல் பறவூர் வரை பயணிக்கும் ஒருவன் பழம் திராவிட மரபைக் காணமுடியும் என்கிறார். திருவிதாங்கூர் பகுதியின் வேணாட்டு மன்னர்களின் காலத்தைப் பெருமளவில் துல்லியமாக முதலில் கணித்தவர் பெ.சு. சம்பந்தர் காலம் கட்டுரையில் அவரின் காலத்தைச் சமூகச்சூழல், சமூக வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெ.சு கண்டறிந்துள்ளார். ஆதி சங்கரரின் நூல்கள், மத்தவிலாச பிரகசனம் ஆகியவற்றைக்கொண்டு சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். ராஜராஜன் காலமே நம்பியாண்டார் நம்பி காலம் என்றும் வாதிடுகிறார்.
ராமாயணத்தின் சாதி குறித்துக் கூர்ந்து நோக்கிய பெ.சு. அது குறித்து வெ.சு. முதலியாரிடம் பேசினார். அதைக்குறித்து எழுதவுள்ளதாகச் சொன்னாலும் அதற்குள் அமரரானார். ஆகவே, பெ.சுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறித்துக் கட்டுரை வரைந்தார் வெ.சு.முதலியார். ‘அதில் ராமாயணம் ஆரியச்சார்புடையது. ஆரியர் என்பவர் தமிழ் பிராமணர், வட இந்திய சாதியர் சிலரைக் குறிக்கும் சொல். ஆரியர் அல்லாத அநாரியர் தென்னிந்தியக் குடிகள் ஆவர்.’ என்றதோடு, ‘பெண்ணைச் சிறைப்பிடித்தும் ராவணன் கொல்லவில்லை, திராவிடப்பெண்ணான சூர்ப்பநகையை லட்சுமணன் துரோகம் செய்தவன். விபீஷணன் என்ற திராவிடன் துரோகம் செய்தவன்; அதற்காக ஆழ்வார் பட்டம் பெற்றவன். ஆரியர்கள் திராவிடர்களை இழிவானவர்கள் எனச் சொல்லி நம்பும்படி ஆக்கிவிட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.
உரைநடையாசிரியர்:
உரைநடையில், ‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற ஒரே நூலை எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு. இதைக்குறித்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில். ‘….சுந்தரம்பிள்ளை தன் நூலில் தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்களைத் தந்திருக்கிறார். வடசொற்களை விலக்கும் கருத்தே இவரிடம் கிடையாது. தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டுவன செய்தவர்களில் சுந்தரம் பிள்ளை தலைசிறந்தவர்’ என்று புகழாரம் சூட்டுகிறார்.
கவிஞர்,கட்டுரையாசிரியர்:
பெ.சு. ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார். ஒரு நற்றாயின் புலம்பல் மணமாக வேண்டிய தினத்தன்று இறந்து போன மகள் குறித்து அரற்றும் அன்னையின் அழுகுரல். பொதுப்பள்ளி எழுச்சி தத்துவ நோக்கோடு அறியாமைத் துயிலில் இருந்து எழுப்பிய இறைவனை நோக்கி பாடப்பட்டது. அன்பின் அகநிலை விவிலியத்தின் புனித பவுல் கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் பெ.சு எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Hobbes, the father of English ethics’. ‘Bentham, The Juristic Moralist’, ‘A scene from A Tamil play’, H.T.Wills முதலிய கட்டுரைகள் எழுதினார்.
தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தின் துவக்கத்தில்’தமிழ் மொழியின் இலக்கியங்களை அழியாமல் பாதுகாத்த திருச் சி.வை.தாமதோரன் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் ஆகிய இருவரையும் வணங்குகிறேன். கல்வி, கேள்வி, அறிவு முதலியவற்றால் சிறியவனாகிய நான் மனோன்மணியம் என்னும் நாடகத்தைப் படித்திருக்கிறேன்.’ என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார். உ.வே.சா மனோன்மணியத்தைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்படைப்பில் குறைகள் உண்டு என்றதை பெ.சு அறிந்தார். கடிதம் எழுதி குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்கவும் செய்தார். மேலும், திருவிதாங்கூர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வருமாறு உ.வே.சாவிற்கு அன்போடு அழைப்பு விடுத்தார்.
தமிழக அரசு அவரின் தமிழ்த்தெய்வ வாழ்த்தை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கியது. அவரின் மூலப்பாடலில், ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை’ என்கிற வரி வடமொழி வெறி நிலவிவந்த காலத்தில் எதிர்க்குரலாக ஒலித்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் உருவான போது, நாஞ்சில்நாடு தமிழர்க்கு உரியது என்று தன்னுடைய மனோன்மணியம் நூலில் பெ.சுந்தரனார் குறிப்பிட்டு இருந்தது கவிமணி, ஜீவா, ம.பொ.சிவஞானம் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டு இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.
நாற்பத்தி இரண்டு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பெ.சுந்தரனாருக்கு அஞ்சலியாக அவர் உ.வே.சாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளே அமையக்கூடும்: ‘நம்மனையார் தேகநிலையைக் கருதும்போது இருதலைக்கொள்ளியினுள் எறும்பு என்றே உண்மையாய் எண்ண வேண்டியதாக இருக்கிறது. உழைத்தால் சரீர உபாதை துணிபாக நிற்கிறது. உழைக்காவிட்டால் சரீரமிருந்து என்ன பயனென்ற சோகமும் அப்படியே ஏது செய்ய? கடவுள் இச்சைபோல நடக்கட்டும்’
மிக முக்கியமான ஆளுமையின் பன்முகத்தன்மையை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது அறிஞர் அ.கா.பெருமாளின் இக்குறுநூல்.
மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் -அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள்: 82
விலை: 70
‘தலித் இலக்கியம் என்பது பழிவாங்கல் இலக்கியம் அல்ல. அது வெறுப்பைப் பரப்பவில்லை. அது மானுட மேன்மையை, மனிதகுல விடுதலையை வளர்த்தெடுக்கிறது. ஆகவே. தலித் இலக்கியம் வரலாற்றுத் தேவை’ – 1973ல் பாபுராவ் பாகுல்.
பாபுராவ் பாகுல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு போர் மகாராஷ்டிராவில் உச்சம் பெறத்துவங்கிய காலத்தில் பிறந்தார். அவர் வாழ்ந்த மாதுங்கா காலனியில் சாக்கடை நீர் தேங்கி நிற்கும். ஒதுங்க கூட இல்லாமல் மக்கள் நெருக்கிக்கொண்டு வாழவேண்டிய அளவுக்கு இடப்பற்றாக்குறை. அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத கொடிய அவநம்பிக்கை தரும் வாழ்க்கை. இருளும், நிச்சயமின்மையும் மட்டுமே அம்பேத்கரின் இயக்க அலுவலகமும், இடதுசாரிகளின் தொடர்பும் பாபுராவ் பாகுலை இலக்கியப் பெருநெருப்பாக உருமாற்றின.
தலித் மக்கள், குரலற்றவர்கள், பெண்கள், வேசிகள், குற்றவாளிகள் எனப் பலரின் அக உலகையும், சாதியும், வன்மமும் தரும் பதைபதைப்பும் அவரின் எழுத்துக்களில் இலக்கியமாகின. அவருடைய ‘When I Hid My Caste’ என்கிற மராத்தி சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை படித்து முடித்தேன். அவரின் ஆரம்பக் காலக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. நுண்மையான விவரிப்புகள், உரையாடல்கள் வழியாக மாந்தர்களைக் கண்முன் நிறுத்துவது, அவ்வப்போது எழுத்தில் இழையும் அமைதி பலவற்றைக் கடத்துவது என்று ஒரு தனித்த அனுபவமாக இந்தக் கதைகளோடு வாழ முடிந்தது.
தசரா கொண்டாட்டத்தின் போது எருமை வேட்டை ஒன்று நிகழ்கிறது. அதில் அத்தனை போராட்டம், வேதனை, உயிரிழப்பும் தலித்துகளுக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வெற்றியும், மாலையும் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவருக்குப் போய்ச் சேருகிறது. Sacrifice என்று தலைப்பிடப்பட்ட இக்கதையைத் தமிழில் பலி என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகளில் மனுவை நோக்கி எதிர்க்குரல்கள் எழுப்பப்படுகின்றன. அவையே தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளாக அமைவது விபத்தில்லை. ‘என் சாதியை மறைத்துக் கொண்ட போது’ கதையின் நாயகன் கவிஞன். ‘தீண்டப்படாதவன் என்கிறீர்கள். சூரியன் தீண்டப்படாதவன். அக்னியும் தீண்டப்படாதவன்’ என்று அவன் பெருக்கெடுத்துப் பேசுகிறான். தன்னுடைய சாதியை மறைத்துக்கொண்டு வாழ்கிறார். அவரின் சாதி தெரியவருகிற போது, அடித்துத் துவைக்கிறார்கள். துளிக்கண்ணீர் சொட்டவில்லை. அவருடைய நிலையைப் பார்த்து, இழைக்கப்படும் அநீதியால் உறைந்து போய் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பெண்ணின் கண்ணீர் துளிகள் அவர் பாதங்களைத் தொடுகின்றன. மனுதானே என்னை அடிக்கிறான் என்று நாயகன் எண்ணிக்கொண்டு அழாமல் நிற்கிறான். சொல்லாமல் பலவற்றைச் சொல்கிற தருணம் அது.
போஹடா என்கிற பண்டிகையின் போது தானே நரசிம்ம வேடம் பூண்டு தாண்டவம் புரிவேன் என்று மகர் ஒருவர் கேட்கிறார். பல நூறு ரூபாய் தொகை தேவைப்படும் என்கிறார்கள். ஏலம் நடக்கிறது. அந்த இளைஞரே ஏலத்தில் வெற்றி பெறுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்தாண்டு முதல் இந்த விழாவே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது. அடையாளங்களுக்குள் சமத்துவத்துக்கான தேடல் எப்படி முடிகிறது என்பதை முகத்தில் அறையாமல் அறைந்து சொல்கிறது.
பாலியல் தொழில் புரிய நேரிடும் மராட்டா சாதியை சேர்ந்த பெண் மீது அளவற்ற அன்பை ஒரு இளைஞன் பொழிகிறான். வினாக்கள் இல்லாமல் அவளோடு உடன் நிற்கிறான். திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவன் கேட்கிற போது, ‘நீ என்ன சாதி’ என்று நாயகி கேட்கிறாள். ‘நான் அன்பை தானே அளவில்லாமல் தந்தேன். கேட்ட போதெல்லாம் எந்த வினாக்களும் இன்றிப் பணம் தந்தேன். என்னுடைய செயல்களைக் கொண்டு என்னை அறிய முனையாமல் என் சாதியை ஏன் தேடுகிறாய்?’ என்று வேதனையோடு கேட்டு அந்நாயகன் மறைகிறான். சாதியின் கொடுவாள் தீண்டலில் மரிக்கும் அன்பு தான் எத்தனை எத்தனை?
தேவதாசியாகச் சமூகத்தால் மாற்றப்படும் தலித் பெண்கள் குறித்து ஆதிக்கச் சாதிப் பெண்கள் கூட அக்கறை செலுத்த மறுப்பதை ‘இருளின் கைதிகள்’ கதை இயல்பாகச் சொல்லிச்செல்கிறது. பாலினத்தை விடச் சாதி அரசியலே வெல்கிறது என்பதன் சாட்சியம் அக்கதை. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் உருவத்தின் குறைகளுக்காகக் கொடுமைப்படுத்தப்படும் பெண்ணின் வலியை, கண்ணீரை, துயரை ‘pesuk’ என்கிற கதையில் மயக்கும் கதை சொல்லல் முறையில் கடத்தப்படுகிறது.
துளி கூட இரக்கம், அன்பு மறுக்கப்பட்டு பாலியல் தொழிலாளியாக வாழத்ததலைப்பட்ட பெண். அவளின் மகன், பிணந்தின்னியாக சுற்றும் ஆண்கள், ஊற்றெடுக்கும் தாய்மை, பின்னி எடுக்கும் உடற்பிணி, இறுதி வரை சமூகம் கேட்க மறுக்கும் அவளின் அழுகுரல் உலுக்கி எடுக்கிறது.
மலமள்ளும் தொழில் செய்ய மறுத்து கல்வியைப் பற்றிக்கொள்ள முயலும் நாயகனின் கதையான ‘revolt’ இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை. நாயகன் கல்லூரி போய்ப் படிக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறான். குடும்பத்தைக் காப்பாற்ற மலம் அள்ளப்போ என்று அப்பாவும், அம்மாவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.
“நான் ஏன் மலம் அள்ள வேண்டும்? என் படிப்பை விட்டுவிட்டு இந்த ஊரின் அழுக்கை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டுமா? இவர்களின் கழிசடைகளை என் தலையில் தூக்கி சும்மக்க வேண்டுமா/ இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றால் என்னை ஏன் படிக்க வைத்தீர்கள்? என் இதயத்தில் விடுதலை, அறிவு, மானுடச்சுடர்களை ஏன் பற்றி எரிய வைத்தீர்கள்” என்று கதறுகிறான்.
“எங்கே ஒரு மலம் அள்ளுபவனின் மகனே மலம் அள்ள வேண்டும் என்று எங்கே விதித்து இருக்கிறது?” எனக்கேட்கிறான்.
“நம்முடைய வறுமையில் விதித்து இருக்கிறது. நம்முடைய தர்மத்தில் விதித்து இருக்கிறது. நம் நாட்டில் விதித்து இருக்கிறது” என்கிறார் அம்மா.
“எது தர்மம்? ஒரு மனிதனை நொறுக்கிப்போட்டு, அவனை மிருகமாக மாற்றுவதுதான் தர்மமா? மனிதனை மறந்து வெறும் சிலைகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாட்டின் தர்மம் தானே இது? இந்தத் தர்மத்திற்கு நான் கட்டுப்பட மாட்டேன். வறுமை, கொடுமை ஆகியவற்றை மட்டுமே தரும் இந்தத் தர்மத்தை நிராகரிக்கிறேன்…”என்கிறான்
“என் விரல்களை உடையுங்கள். என் கரங்களை முறித்துப் போடுங்கள். என் உடலை கிழித்துப் போடுங்கள். நான் இந்த வேலையைச் செய்ய மாட்டேன் ” என்கிற கதறல் கண்டுகொள்ளப்படாமல் அவன் மலம் அள்ள அனுப்பப்படுகிறான்.
அங்கே இவனுக்கும், இன்னொரு தலித்துக்கும் சண்டை முற்றுகிறது. அடித்துப் புரள்கிறார்கள். ஊரின் மலத்தையே அள்ளும் இவர்களின் துயரம் தட்டிப்போன உடம்பை தொடக்கூட விரும்பாமல் ஊரே தள்ளி நிற்கிறது. மனு சிரித்தபடி நிற்கிறான்.
சாதியை மறைத்துக் கொண்ட போது நமக்குள் இறுகிப்போயிருக்கும் சாதிய வன்மத்தை, கேடுகளை உலுக்குகிறது. கதைகளின் மூலம் கசடுகளைக் கடக்கத் தூண்டுகிறது.
நீ எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறாய்.
எதிர்பார்ப்பில்லாமல் அன்பை பொழிவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள நீ பிறப்பெடுக்கவில்லை. நீ அளவில்லாத அன்பிலே அல்லவா பிறந்தாய். அங்கேயே நீ திரும்பச் செல்வாய்
பிறகு ஏன் இங்குப் பிறந்தாய்?
தனிநபர் மீது தன்னிகரிலா அன்பு பொழிவதை கற்க பிறந்தாய்
உலக அன்பை உணர்ந்திட வந்தாய்
சிக்கல்கள் மிகுந்த பேரன்பை பற்றிக் கற்றிட வந்தாய்
பைத்தியக்கார பேரன்பை பற்றி அறிய பிறந்தாய்
உடைந்த காதலை உய்த்து அறிய உயிர் பெற்றாய்
முழுமையாகப் பிரியத்தைப் பருகிட வந்தாய்
தெய்வீகம் ததும்பும் அற்புதம் அது
அன்பினுள் நயத்தோடு தடுமாறிக்கொண்டே வாழ்வாய்
அத்தனை பேரன்பையும் குழப்பங்கள் விளைவித்து விரித்துரைப்பாய்
நீ கச்சிதமாகக் காதல் புரிய இங்கு வரவில்லை. நீ் கச்சிதமானவளே/னே
இங்கு மனிதனாக மாறி அழகாகக் காதல் புரிக. பிழைகளால்
சிறக்கட்டும் நின் பிரியம்.
காதலின் நினைவுகள் ஏந்தி கசிந்துருகி மீண்டெழுக
ஆனால், எதிர்பார்ப்புகளற்ற காதல் என்கிற கட்டுக்கதையை என்னிடம் சொல்லாதே
உண்மையைச் சொல்லவா? காதல் அலங்காரச்சொற்கள் நாடி அலைவதில்லை
அதற்குப் புகழ்மாலைகள் தேவையில்லை
கச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டும் என்பதில்லை
அது உன் காதலை கட்டுடைத்து காட்டு என்கிறது
அத்தனை பிரியத்தையும் பொழியச்சொல்கிறது
இந்தக் கணத்தில் மட்டும் வாழ்ந்தபடி, முழுமையாகக் காதல் செய்க எனக்கேட்கிறது
காதல் என்ன சொல்கிறது தெரியுமா?
காதலிப்பவளே/காதலிப்பவனே!
நீ ஜொலித்திடு, பறந்திடு.
நீ புன்னகை. நீ அழு.
காயப்படு, மீண்டு வா. விழுந்திடு, எழுந்து நில்.
ஆடிக்களித்திடு, உழைத்திடு.
நீ நீயாகவே வாழ்ந்திடு.
நீ நீயாகவே மரித்திடுக.
‘என்ன இருந்தாலும் பெத்து, தூக்கி வளர்த்த அப்பா அம்மாவோட கனவுலாம் கொல்ற பிள்ளை என்ன பிள்ளையோ’ என்கிற வகையான சாடல்கள் கண்ணில் படுகின்றன.
ஒரு மொழிபெயர்ப்பு பதிலாகட்டும்:
உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால், அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கி பயணிப்பதில்லை
கடந்தகாலத்தில் சுணங்கி கிடப்பதுமில்லை
உங்கள் குழந்தைகள் எனும் உயிருள்ள அம்புகளை ஏவும் விற்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
வில்லாளி முடிவுகளற்ற பாதையில் குறிவைத்து
முழுவலிமையோடு வில்லான உங்களை வளைக்கிறான்
அவன் அம்புகள் அதிவேகமாய், அளவற்ற தொலைவுகள் பயணிக்கலாம்
விற்பெருவீரனின் கர வளைப்பினில் உங்கள் ஆனந்தம் ஆர்ப்பரிக்கட்டும்
பாய்கிற அம்பை விரும்புகிற அவன்
பதறாத வில்லையும் விரும்புகிறான். – கலீல் ஜிப்ரான்
ஒரு கரத்தை பிடித்திருப்பதற்கும், ஒரு ஆன்மாவை சங்கிலியிட்டு சிறையிடுவதற்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டை வெகுசீக்கிரம் நீ கற்றுக்கொள்வாய்
காதல் என்பது தோள் சாய்ந்து கொள்வதற்கானது இல்லை என நீ கற்றுக்கொள்வாய்
உடனிருப்பதே உன்னதப் பாதுகாப்பு அன்றென நீ கற்றுக்கொள்வாய்
நீ கற்றுக்கொள்ள ஆரம்பிப்பாய்
முத்தங்கள் முறியாத உடன்படிக்கைகள் அல்ல என
பரிசுகள் வாக்குறுதிகள் அல்ல
தலைநிமிர்ந்து, கண்கள் விரித்து உன் தோல்விகளை ஏந்திக்கொள்வாய்
ஒரு பெண்ணின் நயத்தோடு நீ கற்றுக்கொள்வாய்
மழலையைப் போல மடைதிறந்து அழமாட்டாய்
நாளைய பொழுது என்னாகுமோ எனத்தெரியாது என்பதால்
உயரத்தில் பறக்கையிலே உடைந்து விழுவது வருங்காலத்தின் வழக்கமென்பதால்
இன்றைக்கான சாலைகளை மட்டுமே போட கற்றுக்கொள்வாய்
சில காலத்திற்குப் பின் நீ கற்றுக்கொள்வாய் …
கதகதப்பான சூரிய ஒளியும் பெருக்கெடுத்தால் சுட்டெரிக்கும்
நறுமலர்கள் நல்லவர்கள் கொண்டுவந்து நீட்டுவார்கள் என நம்பாமல்
உன் பூங்காவனத்தைப் பயிரிட்டு , உன் ஆன்மாவை அலங்கரி
உன்னால் தாங்கிக்கொள்ள முடியும் எனக் கற்றுக்கொள்வாய் …
நீ வலிமையானவள்/ன் என
உனக்கு உண்மையாகவே மதிப்பிருப்பதாக…
நீ கற்றுக்கொள்வாய், கற்றுக்கொண்டே இருப்பாய்
ஒவ்வொரு பிரிவிலும் நீ கற்றுக்கொள்வாய். – போர்ஹெஸ்