இப்போதே என் அருகில் இரு


இப்போதே என் அருகில் இரு,
என்னை வதைப்பவனே, என் காதலே, என் அருகில் இரு
இரவு கீழிறங்கும் இந்த வேளையில் அருகில் இரு
சூரிய அஸ்தமனத்தின் வெட்டுக்காயங்களைப் பருகியபடி இருள் படர்கிறது
அதன் கரங்களில் வாசனைத் தைலங்கள், அதன் வைர ஈட்டிகள் 
அது புலம்பல்களின் அழுகையோடு வருகையில்,
அது பாடல்களின் புன்னகையோடு வருகை புரிகையில்,
அதன் ஒவ்வொரு அடியிலும், வேதனையின் நீலச்சாம்பல் கொலுசுகள் கலகலக்கையில்
தங்கள் ஆழமான மறைவிடங்களில்
இதயங்கள் இன்னுமொரு முறை நம்ப ஆரம்பிக்கையில்,
இதயங்கள் தங்களுடைய கண்காணிப்பை துவங்குகையில்,
சட்டைப்பைக்குள் கரங்கள் சப்தமற்று மறைந்து கிடக்கையில்
நெஞ்சுருக முயன்று பார்த்தாலும், அமைதியாகாத
ஆற்றுப்படுத்த முடியாத குழந்தைகளைப் போலச் சிணுங்கல்கள் எழுப்பியபடி
ஒயின் ஊற்றப்படுகையில்
நீ செய்ய நினைப்பவை எதையுமே செய்ய முடியாமல் தவிக்கையில்
எதுவுமே பயனற்று நிற்கையில்
இரவு கீழிறங்கும் இந்தக் கணத்தில்
தன்னுடைய சோக முகத்தை இழுத்தபடி, இரங்கல் ஆடை அணிந்து இரவு வருகையில்
என் அருகே இரு
என்னை வதைப்பவனே, என் காதலே, என் அருகில் இரு – Faiz Ahmed Faiz 
ஆங்கிலத்தில் : Naomi Lazard
தமிழில்: பூ.கொ. சரவணன்

Image may contain: 2 people

Advertisements

ஒரு மாநகர் விட்டு நீங்குதல்


ஒரு மாநகர் விட்டு நீங்குகையில்
அங்கே சேர்த்த பிரியங்களைச் சிதற நேரிடுகிறது
அனல் காற்றோடு வரவேற்று சாரலோடு வழியனுப்புகையில் மழை வெயில் தகிக்கிறது
நகர மறுத்த சாலை வாகனங்களின் இடையே கண்டடைந்த தேவதைகள் யாரும் கையசைத்ததில்லை
மொழிகள் நாடி விரைகையில் மவுனங்களால் ஒரு மாநகர் விடை கொடுக்கிறது
நீர் அற்ற நாட்களில் கிராமத்து குழாயடியாய் குறுகி நின்றது அப்பெருநகரம்
கண்ணாமூச்சி சிறுவர்கள் அற்றதொரு வெயில் காலத்தில் பொழிகின்றன பெயரற்ற சாபங்கள்
பேரிரைச்சல்களிடையே முத்தமிடும் காதலர்களின் கண்களைச் சந்திக்க முடியாத
பிரியம் நீத்த இளைஞனாய்
அடுத்த மாநகரின் மரணம் நோக்கி நடக்கிறான் அவன்

பேரழகிகள் உலகம்


பேரழகிகள் நிரம்பிய உலகில்
குதிப்பது எளிதல்ல

அவர்கள் சில சமயம் அழுவார்கள்
சொல்லாத சொற்களில் வாழ்வின் கதைகளை
பாடம் பண்ணிக்குமைவார்கள்

வாளேந்தி வருபவர்களை
கனிவால் கையறு நிலைக்கு தள்ளுவார்கள்

உருண்டோடும் கண்ணீரில் உலகுக்கே அழுவார்கள்

எல்லாருக்கும் கவலைப்பட்டு
சிலருக்காக உழைத்து
ஊருக்காக அன்பு செய்து
பேருக்காக வாழ்ந்து

சுருக்கங்கள் தேக்கி
கதைகளின் முள்நீக்கி
வெறித்த பார்வை ஒன்றைப்பார்க்கும்
அத்தனை பேரழகிகளுக்கும் சொல்வதற்கு
ஆயிரம் கதைகள் உண்டு

சமையல் கட்டு,
அலுவலக ஒப்பனை அறை,
பேருந்து இருக்கைகள்
படுக்கையறை
என்றே வரையறுக்கப்பட்ட
பேரழகிகள் உலகத்தை
தப்பியும் எட்டாத
தாளாத வெம்மை சுடும்
அவர்கள்
வியர்வைத்துளிகள்
தெறித்த இடமெங்கும்
கருகி உதிர்கின்றன கதைகளின் சுவடுகள்
கொஞ்சம் கரிசனத்தோடு

கடவுளின் மரணமும், சாத்தானின் ஆசியும்


ஒரு கரம் கூட வேண்டாம்
திருப்பிக்கொள்ளும் முகங்களின் கரங்கள் நாடி நின்றது போதும்
ஒரு ஆறுதலை மறுதலிப்பது எளிது
உற்றவர் அகன்றதும் உருளும் நீர்த்துளி விழுவதற்குள்
நடக்கப்பழகுவது நலம்
பிரியங்கள் பச்சாதாபமாகத் தெரிவதற்குள் ஒரு தற்கொலைக் கடிதம் முடித்துவிடு
கடித முடிவில் பெயர் எழுதுவதற்குள் கணம் கணமாய்ச் சாவதற்கு ஆயத்தம் ஆகு
நடுக்கங்கள் தலைதட்டி சிரிக்கையில் பூனைக்குட்டியிடம் பொங்கி அழு
நக்கியபடி நகரும் அந்தப் பிராணியின் கண்களில் ஒளிரும் காலம் ஒரு வாதை
திறக்கப்படாத குறுஞ்செய்தியை அழிப்பதாகத் தனிமைகள் தீர்ப்பது இருப்பதில்லை
வசந்தகாலங்கள் வருகையிலும் வெம்மைகள் விரித்தாடும் பள்ளத்தாக்கின் முனையில் அமர்ந்தபடி கதைத்து முடி
ஒரு கரம் கூட வேண்டாம்
ஒரு கடவுளின் மரணம் கடப்பதற்குள் சாத்தானின் ஆசிகளைப் பொறுக்கியபடி அடுத்தப் பிரிவிற்கு, விடை கொடுத்தலுக்கு விண்ணப்பம் எழுது

மரணகால மயக்கங்கள்


Funeral Blues:
எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள் ,தொலைபேசிகளை துண்டித்து விடுங்கள்
கொழுப்பு மிகுந்த எலும்புத்துண்டை வீசி நாய் குரைப்பதை நிறுத்துங்கள்
பியானோக்களை,மேளங்களை அமைதிப்படுத்துங்கள்
சவப்பெட்டியை கொண்டுவாருங்கள் ; துக்கம் கொண்டாடுபவர்கள் வரட்டும்

தலைக்கு மேலே விமானங்கள் வட்டமிட்டு முனகட்டும்
வானில் “அவர் இறந்துவிட்டார் !” என்கிற வரியை கிறுக்கட்டும்
புறாக்களின் வெள்ளை கழுத்தில் அலங்காரத்துணிகள் சுற்றப்படட்டும்
போக்குவரத்து காவலதிகாரிகள் கருப்பு பஞ்சு கையுறைகள் அணியட்டும்

அவனே என்னுடைய கிழக்கு,என்னுடைய தெற்கு,என்னுடைய வடக்கு மற்றும் மேற்கு
என் வேலை வாரமும்,ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வெடுக்கட்டும்
என் மதியம்,என் நள்ளிரவு,என் பேச்சு,என் பாடல் ;
நான் என் காதல் இறுதிவரை இருக்கும் என்றிருந்தேன் ; நான் தவறிழைத்து விட்டேன்

நட்சத்திரங்கள் இப்பொழுது தேவையில்லை ; அவை எல்லாவற்றையும் வெளியே அள்ளி வீசுங்கள்
நிலவை மூட்டை கட்டி அனுப்புங்கள் ; சூரியனை சுக்குநூறாக்குங்கள்
பெருங்கடலை ஊற்றி விடுங்கள்,காடுகளை கழித்து விடுங்கள்
ஏனெனில், இவை எதுவும் இக்கணத்தின் பெருந்துயரை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. – W. H. Auden

இது சான்றிதழ்களின் காலம்


ஒவ்வொரு தெருவிலும், உரையாடலிலும் ஒவ்வொன்று கிடைக்கும்
தேசபக்திக்கு ஒன்று
தேசவிரோதிக்கு இன்னொன்று
பக்கத்து நாட்டுக்கு போக மற்றொன்று
குரல் கொடுக்க சில
கேள்விகள் கேட்டால் சில
மாநில முதல்வராக மற்றொன்று
சாலையில் சத்தம் எழுப்பினால் இன்னொன்று
வந்தேறி பட்டயம் சூட்ட பலபேர் வருவார்கள்
அடர்சிவப்பாய் ரத்தம் இருப்பவர்களே ‘செந்தமிழர்கள்’ என்பார்கள்
அடர் என்பது அண்ணனின் விழுதுகள் எனவும் சொல்வார்கள்
இனத்துரோகி பட்டம் இனாமாக இன்முகத்தோடு தருவார்கள்
குழப்பங்களை கேட்டால் குயுக்தி என்று குமைவார்கள்
கொடுமைகள் பேசினால் கொடும்பாவிகள் கனவுகளில் எரிப்பார்கள்
கேள்விகள் கேட்டால் அடிவருடி என அழகாய் அழைப்பார்கள்
வீட்டில் மாட்டிக்கொள்ள இடமில்லாமல் ஆளை மறைக்கும் அளவுக்கு சான்றிதழ்கள்

பின்குறிப்பு:
கண்ணை மூடு, கருத்துகள் சொன்னால் கேள்விகளால் போர் தொடு
கண்டவனை கருத்தால் சுடு, கடக்கிறவனை எல்லாம் கடுப்போடு அளவெடு
சான்றிதழ் பணிக்கு சரியானவன் நீ தான். – பூ.கொ.சரவணன்

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள்


உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள் தனிமையை நாடி எங்கோ வெறித்துப் பார்க்கும் விழிகளோடு, நினைவுகளிலும், படபடப்பிலும் அவள் தொலைந்திருப்பாள். எல்லாக் குழப்பங்களையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள முடியாமல், இதயத்தின் துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல், “நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்பாள். அவள் போராட்டக்குணத்தை இழந்துவிடவில்லை, பயனற்ற ஒன்றுக்கு போராடுவதையே அவள் நிறுத்திவிட்டாள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என அவளிடம் சொல்லாதீர்கள். அது மாறவே மாறாது என்கிற அளவிற்கு அவள் அதனோடு போராடி ஓய்ந்து விட்டாள். அதற்கு மாறாக, ஒவ்வொன்றாகச் சரி செய்ய அவளுக்கு உதவுங்கள். இதுவும் கடந்து போகும் என ஆறுதல் சொல்லாமல் கடக்க உதவுங்கள். அவளுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, எனினும், அதைக்குறித்து அவள் வருந்தவில்லை.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவள் உடைந்து போயிருக்கலாம். எனினும், அவள் வலிமையோடு எழுந்து நிற்பாள். கானல் நீராகிப் போன கனவுகள் அவளை வாட்டினாலும் எப்படி வாழ்வது என்றும், இதயம் காயப்பட்டுக் கண்ணீர் வடித்தாலும் எப்படி அன்பு செய்வது என்று அவள் கற்பிப்பாள். எப்படி அச்சமில்லாமல் இருப்பது என்று நரகத்துக்குச் சென்று திரும்பிய அவள் கற்பிப்பாள். அவளை அச்சப்படுத்தக் கூடியது எதுவுமில்லை. உங்களுக்கு எப்பொழுதும் கைகொடுக்கும் உங்கள் மீது நீங்கள் வைக்க வேண்டிய நம்பிக்கையை அவள் புலப்படுத்துவாள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். புதிராகப் பரவசப்படுத்தும் அவளை விடுவிக்க முயன்று மகிழ்ச்சியைச் சுவைப்பீர்கள். எனினும், அவளை உங்களால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாது. அவளைப் புரிந்து கொள்ள முயலாதீர்கள். அவளுக்கே அவளைப்பற்றிய புரிதல் இல்லாத பொழுது உங்களால் எப்படி அவளைப் புரிந்து கொள்ள முடியும்? தன்னுடைய வாழ்வின் போராட்டங்களை மனதின் பக்கங்களில் எழுதிச் செல்லும் திறந்த புத்தகம் அவள். அவளின் வாழ்வின் இறுதிக்கணம் வரை நீளும் அந்தப் புத்தகத்தை நீங்கள் ஒரு கணமும் வாசிக்காமல் இருக்க முடியாது. அவளின் கொடுங்கனவுகளில் இருந்து பேய்க்கதைகளையும், வலிகளில் இருந்து கவிதைகளையும் அவள் படைப்பாள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவளை யாரும் ஏற்றுக்கொள்ளவோ, அன்பு செய்யவோ தேவையில்லை. அவளை யாரும் காப்பாற்றவும் வேண்டியதில்லை. அவளின் நினைவு நரகத்தின் பூதங்களை ஊற்றெடுக்கும் மனதின் குழப்பங்களில் உயிரூட்டி உலவ விடுகிறாள். அந்தப் பூதங்களை விரட்டாதீர்கள். அவை மனிதர்களைப் போல ஆபத்தானவை அல்ல. அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு, அவளின் மனவெளியில் ஒரு நடை போங்கள். அவளின் கலைப்பண்பால் மாற்றப்பட்டுவிட்ட உலகின் மகத்தான இடத்தைக் காண்பீர்கள். அவளின் பிணைந்த நினைவுகள் கொடிகள் போலக் கூடிச்சிரிக்கும், படபடப்பு மரங்கள் அவளின் தலையில் வேர்விட்டிருக்கும், நம்ப முடியாத இடங்களில் நம்பிக்கை மலர்கள் பூத்துக் குலுங்கும். அவளின் நம்பிக்கையின்மை தழைக்கும் மண்ணில் ஆங்காங்கே தன்னம்பிக்கை, அன்பு விதைகள் தூவிக் கிடக்கும். கருணை நதி பாய்ந்து ஓடும். பிரபஞ்சத்தைப் போல அழகும், முடிவற்றதாகவும் அவளின் இதயம் இருப்பதை மேலும் அவளின் மனவெளியின் பரப்பில் நடமாடுகையில் கண்டு பிரமிப்பீர்கள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவள் பெரிதாக எதுவும் கேட்க மாட்டாள். எதிர்பார்ப்புகள் பிரிவில் முடியும் என அவள் அறிவாள். அவளைக் காயப்படுத்தி விடுவோமோ என அஞ்ச வேண்டியதில்லை. அவளுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைத் தெரியாமல் மீற நேரிடுமோ எனக் கவலை கொள்ள வேண்டியதில்லை. வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றே அவள் எதிர்பார்க்க மாட்டாள். மனிதர்கள் வாழ்க்கைக்குள் வருவது விட்டு விலகத்தான் என அறிந்திருப்பதால் அவள் மிக மோசமானவற்றுக்கும் தயாராகவே இருக்கிறாள். இந்தப் பாதையில் அடிக்கடி பயணத்திருப்பதால் அவள் தொலைந்து விடமாட்டாள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். உலகம் உங்களுக்கு அளித்த காயங்களை அவள் ஆற்றுவாள். உங்களின் இதயத்தின் உடைந்த துண்டுகளையும், அவளின் இதயத்தின் உடைந்த துண்டுகளையும் இணைத்து ஒரு அழகிய ஓவியத்தை வரைவாள். அது பிகாசோவின் தூரிகையையும் தோற்கடித்து, அவளின் வெற்றிக் குவியலின் மகத்தான நினைவு பரிசாகும்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். ஒரு நாள் அவள் மீண்டு வருகையில், இதுவரை கண்டிராத அற்புதத்தைக் காண்பீர்கள். கடந்த காலம் கடந்து பீனிக்ஸ் போல எழும் அவள், கதிரவனைப் போல முழுமையான புகழில் ஒளிர்வாள். உலகை நம்பிக்கையோடு எதிர்கொள்வாள். நீங்கள் இருவரும் இணைந்து உலகை மாற்றலாம், குறைந்தபட்சம் ஒரு உடைந்த இதயத்தை மீட்கலாம்.
– Pramitha Nair

570409e3cf9f1b7c5453829d6fed6323.jpeg
மூலம்: http://theanonymouswriter.com/of…/date-a-girl-who-is-broken/

(மொழிபெயர்ப்பு: பூ.கொ.சரவணன்)