‘அம்பேத்கரும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கமும்’ – கிறிஸ்தோஃபி ஜாப்ரிலா’


‘நல்ல உயரம், கட்டுகோப்பான உடல், கரிய நிறம். லாவகமாகவும், துரிதமாகவும் இயங்கும் மூளைக்குச் சொந்தக்காரர். அவர் அறிவின் பேருரு. வெளியே கரடுமுரடாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மானுடம் மிகைத்த பண்பாளர். இன்னல்கள் இடைவிடாது துரத்தினாலும், எப்போதும் வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடுக்காத தீரம் மிக்கவர். ஒரு காலத்தில் சமூகத்தில் மேல்தட்டினர் வாழும் பகுதியில் அவர் கீழ்சாதி என்பதால் தங்க கூட இடம் தரப்படவில்லை. அவரின் மனவுறுதியின் தீரம் அவரை மகத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்றது.’ (ஹரி ஷரண் சப்ரா (தொகுப்பாசிரியர்) Opposition in the Parliament, Delhi, New Publishers, 1952, பக்கம் 142)

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பத்தி ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு பிராமண எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இது அப்போது அம்பேத்கர் தன்னுடைய அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருந்தார் என்பதைத் தெளிவாக நிறுவுகிறது. இப்படிப்பட்ட அங்கீகாரம் அம்பேத்கருக்கு கிடைத்தற்கு அவர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புக்கு உரிய ‘வரைவுக்குழு’வின் தலைவராக அம்பேத்கர் திகழ்ந்ததும் காரணம். அந்த வரைவுக்குழுவில் சட்ட நிபுணரான அம்பேத்கர் உன்னதமான உச்சத்தை எட்டினார். அதுவே அம்பேத்கரின் வாழ்வின் பெருமைமிகு காலமாகும். இறுக்கமான சூட், டை, வட்ட வடிவிலான கண்ணாடி, கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி, கையில் அரசியலமைப்புச் சட்டம் என்கிற அம்பேத்கரின் உருவமே பொதுமக்களின் மனக்கண்ணில் இன்றும் அகலாமல் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இப்படி அம்பேத்கரை சிலையாகச் செதுக்குவதும் வழக்கமானது. 1

தீண்டப்படாத சாதியை சேர்ந்த ஒருவர் தேசிய அரசியலில் மாபெரும் தாக்கம் செலுத்துகிற நிலையை அடைந்தார் என்பதே உயர் சாதி இந்துக்களிடமிருந்து கசப்பான விமர்சனங்களை ஊற்றெடுக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார் என்பதையே நிராகரிக்கிற அளவிற்குச் சிலர் சென்றார்கள்.

அம்பேத்கர் ‘போலி மனுவா’?

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவிற்கு அம்பேத்கர் நியமிக்கப்பட்டதால், அவருக்கு ‘நவீன மனு’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது. இப்பட்டம் மனுநீதியை இயற்றிய புரதான மனுவை நினைவுபடுத்தியது. மனுநீதியை 1927-ல் நடைபெற்ற மகத் சத்தியாகிரகத்தின் போது அம்பேத்கர் எரித்தார் என்பதை நினைவுகூர்ந்தால் இந்தப்பட்டம் வேடிக்கையான ஒன்றாகத் தெரியும்.
அம்பேத்கர் குறித்த தன்னுடைய குற்றப்பத்திரிகையில் அருண் ஷோரி, அம்பேத்கரை ‘போலி மனு’ என்று முத்திரை குத்துகிறார். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் பல்வேறு துணை குழுக்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளைச் செப்பனிடும் பொறுப்பு மட்டுமே வரைவுக்குழுவிற்கு இருந்தது. வரைவுக்குழுவின் பரிந்துரைகளையும் கூட அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முழு அமர்வு விவாதித்தே முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தவில்லை என்பது அருண் ஷோரியின் வாதம். மேலும் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. அக்கட்சியினருக்குள் தான் ஒவ்வொரு சட்டப்பிரிவின் முக்கியமான அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன என்பது அருண் ஷோரியின் வாதம்.2 அம்பேத்கர் துணை குழுக்கள், வரைவு குழு, முழு அமர்வு ஆகிய பல இடங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் தோற்கிற பக்கமே இருந்தார் என்று ஷோரி வாதிடுகிறார். அருண் ஷோரியின் இக்கருத்துகள் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன என்பதே என்னுடைய வாதமாகும். காங்கிரஸ் தலைவர்கள் முன்னரே பேசி வைத்துக்கொண்டு சில சட்டப்பிரிவுகளை வேகமாக நிறைவேற்ற முயன்றார்கள் என்று அம்பேத்கர் அவ்வப்போது குறைபட்டுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கர் மற்றவர்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளை வெறுமனே செப்பனிடுவதொடு மட்டும் நின்றுவிடவில்லை. 3

அருண் ஷோரி அம்பேத்கரை சித்தரிக்கும் விதத்தில் இருந்து அறிஞர்கள் ஹெச்.எஸ்.வர்மா, நீதா வர்மா முற்றிலும் முரண்படுகிறார்கள். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவரின் ஆட்சி நிர்வாகத்திறனும், அரசியல் தாக்கமும் தான் காரணம் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.4 அம்பேத்கரை வரைவுக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் காரணமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 1946-ல் சபையில் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அம்பேத்கரின் தலையீடு பலரையும் கவர்ந்தது. நேரு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன் அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களைப் பட்டியலிட்டார். சபையின் இன்னொரு உறுப்பினராக ஜெயகர் ஒரு பிரச்சினையை எழுப்பினார் பாகிஸ்தானா, இந்தியாவா என்று இன்னமும் ஊசலாடிக்கொண்டிருந்த முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் சபையில் இணைவதா, வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலையில் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார் ஜெயகர். அடுத்து எழுந்த அம்பேத்கர், மிகவும் அற்புதமானதொரு ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரை நடுநிலைமையோடு திகழ்ந்ததோடு, அம்பேத்கருக்கு இருந்த கச்சிதமான, ஆழ்ந்த சட்ட அறிவையும் புலப்படுத்தியது. அம்பேத்கர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமரசத்தீர்வை முன்வைத்தார். ஆகவே, அம்பேத்கரின் திறமையினால் தான் அவரை அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமித்தார்கள் என்று வர்மாக்கள் வாதிடுகிறார்கள்.

அடுத்ததாக, நாம் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இக்குழு அடிப்படையான சட்டங்களை இயற்றுகிற பணியில் ஈடுபடவில்லை. பல்வேறு துணைக்குழுக்கள் பரிந்துரைத்த சட்டப்பிரிவுகளை, செம்மைப்படுத்தி, செப்பனிட்டு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன்னால் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பே வரைவுக்குழுவுக்கு உரியது. சபையானது பல்வேறு வரைவுகளை வாசிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் சட்டப்பிரிவுகள் குறித்து நிகழ்ந்த விவாதங்களை நெறிப்படுத்தி, வழிநடத்தும் பணியில் வரைவுக்குழுவின் உறுப்பினர்கள், அதிலும் அடிக்கடி அம்பேத்கரே ஈடுபட்டார். மேலும், அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் வரைவுக்குழுவின் உறுப்பினராகவும், பதினைந்து குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினராகவும் திகழ்ந்த வெகு சில உறுப்பினர்களில் அம்பேத்கரும் ஒருவர்.5 ஆகவே, அம்பேத்கரால் அனைத்து சட்டப்பிரிவுகள் சார்ந்து நடைபெற்ற விவாதங்களையும் கவனிக்க முடிந்தது. சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவுகள் சார்ந்த விவாதங்களையும் கூர்ந்து நோக்க முடிந்தது.

பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் வரைவுக்குழுவின் தலைவர் என்கிற முறையில் அம்பேத்கருக்கும், குழுக்களின் செயலாளராகத் திகழ்ந்த எஸ்.என்.முகர்ஜிக்கும் (இவருக்கு இறுதியாக அம்பேத்கர் நெகிழவைக்கும் புகழாரத்தைச் சூட்டினார்) அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் சட்டப்பிரிவுகளைத் திருத்தியமைப்பதோடு,பல சட்டப்பிரிவுகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிற போது அவற்றைப் பல்வேறு குழுக்களிடம் இருந்து பெறுகிற பொறுப்பும் இருவருக்கும் உரியதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே இல்லை. இதனால், இந்தத் திருத்தியமைக்கும் பணிச்சுமைகள் பெரும்பாலும் அம்பேத்கரின் தோளிலேயே விழுந்தன. இந்த வரைவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி நவம்பர் 1948-ல் சபையின் முன்னால் இப்படிப் பேசினார்:

‘நீங்கள் வரைவுக்குழுவிற்கு நியமித்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் பதவியை விட்டு விலகியதால், அந்த இடத்துக்கு வேறொரு நபரை நியமனம் செய்தீர்கள். ஒரு உறுப்பினர் காலமானார். அவரின் இடம் நிரப்பப்படவில்லை. இன்னொரு உறுப்பினரோ அமெரிக்காவில் இருந்தார். அவரின் இடத்திற்கும் யாரும் கொண்டுவரப்படவில்லை. இன்னொரு நபரோ அரசாங்க அலுவல்களில் மும்முரமாக மூழ்கிவிட்டார். ஓரிரு உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து வெகுதூரம் தள்ளியிருந்தார்கள். அவர்களின் உடல்நலக்குறைவால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் ஒட்டுமொத்த பொறுப்பும் டாக்டர்.அம்பேத்கரின் தலைமேல் விழுந்தது. இப்பணியை மெச்சத்தக்க வகையில் சிறப்பாகச் செய்து முடித்திருக்கும் டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.’ 6
அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதவில்லை என்றாலும், அதன் உருவாக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் அவரின் கைவண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அவர் குழுக்களின் பரிந்துரைகளைத் திருத்தியமைப்பதோடு நிம்மதியடையவில்லை. சபையின் முழு அமர்வில் கலந்து கொண்டு, பொறி பறக்கும் விவாதங்களில் சட்டப்பிரிவின் ஒரு வரைவு ஏன் மற்றொன்றை விட மேம்பட்டது என விளக்கினார். விவாதங்களின் போக்கையே தொடர்ந்து திசைமாற்றும் பணியிலும் அவர் அயராது ஈடுபட்டார். ஆகவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார். இதுவே, ஏன் அருண் ஷோரி அவர் மீது இத்தனை வன்மமிகுந்த விமர்சனங்களை வைக்கிறார் என்பதை விளக்குகிறது. அருண் ஷோரியின் இன்னொரு வாதமான, காந்திய சிந்தனைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார் என்பதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது.

காந்தியை பழிதீர்த்த மேற்கத்திய ஜனநாயகவாதி:

அம்பேத்கர் இளவயதில் வெளிநாட்டில் படித்த போது தான் உள்வாங்கிக்கொண்ட விழுமியங்களையும், அரசியல் மாதிரிகளையும் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் நியாயப்படுத்தினார். அவர் தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டப்பிரிவில், இந்தியாவைச் ‘சோசியலிஸ்ட்’ என அறிவிப்பதில் துவங்கி, இந்திய குடியரசை முழுவதும் மாற்றியமைக்க முயன்ற இடதுசாரிகளை அம்பேத்கர் எதிர்த்தார். அப்படி, இந்தியக்குடியரசை சோசியலிஸ்ட் என்று அறிவித்து விட்டால், ‘அது ஜனநாயகத்தை எளிதாக அழித்துவிடும்’ என்று அவர் எண்ணினார்.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே எது மிகச்சிறந்த சமூக அமைப்பு என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை, அவர் நவம்பர் 19, 1948 அன்று கீழ்கண்டவாறு விளக்கினார்:

‘ நாம் நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசியல் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். எந்த வகையிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவும் தொடர்ந்து சர்வாதிகாரத்தோடு கோலோச்ச கூடாது என்கிற காரணத்துக்காகவே அரசியல் ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம். நாம் அரசியல் ஜனநாயகத்தை நிறுவி விட்டோம் என்பதால், லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்… […] [இப்போது], பொருளாதார ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு மக்கள் பல்வேறு வழிகளைக் கைக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். தனி உரிமை கோட்பாடே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று சிலர் நம்புகிறார்கள்; வேறு சிலரோ சோசியலிச அரசே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று கருதுகிறார்கள்; இன்னும் சிலர், கம்யூனிச சிந்தனைகளே மிகக் கச்சிதமான பொருளாதார ஜனநாயக வடிவம் என்று எண்ணுகிறார்கள் […] [இப்படிப்பட்ட சூழல்களில்] வழிகாட்டு நெறிமுறைகளில் நாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி திட்டமிட்டே இறுக்கமானதாக, நிலையானதாக எழுதப்படவில்லை. பல்வேறு வகையான சிந்தனைகள் கொண்ட பல்வேறு மக்களுக்குப் போதுமான இடத்தை வழங்கியுள்ளோம். லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தை அடைய அவரவரும் அவர்களின் சொந்த வழியில் முயற்சிக்கலாம். அவர்களின் வழியே பொருளாதார ஜனநாயகத்தை எட்டுவதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்று பொதுமக்களை நம்பவைக்க அவர்கள் முயலட்டும்.’8

இந்த வாதத்திற்குத் தன்னை உளமார ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக, இயற்கை வளங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அவர் எதிர்த்தார். அந்தச் சட்டத்திருத்தம் வாக்களிப்பிற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் எத்தகைய அறரீதியான வல்லமை மிக்கவராக திகழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.9 அம்பேத்கர் தாராளவாத ஜனநாயகத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. எப்போதும், வரைவுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட சட்ட வடிவத்தை நியாயப்படுத்துவதையே அம்பேத்கர் செய்வார். ஆனால், ஒருமுறை அவ்வாறு சட்ட வடிவத்தைத் தாக்கல் செய்த போது, அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்று முழு அமர்வை கேட்டுக்கொண்டார். அவர் தாக்கல் செய்த சட்டவடிவத்தைத் திருத்தி, அரசு நிர்வாக அதிகாரத்தையும் , நீதித்துறையையும் முழுமையாகப் பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.10 சில உறுப்பினர்கள், அரசின் அதிகாரத்துக்கு ஆதரவாக வாதிடுவதாகச் சொல்லிக்கொண்டு, நீதித்துறையின் மிகக்கடுமையான கட்டுப்பாடு அரசை பலவீனப்படுத்தும் என்றார்கள். நிற்க கூட நேரமின்றிப் பிரதமராக பல்வேறு பொறுப்புகளோடு இயங்கிக்கொண்டு இருந்த நேரு கூட, அம்பேத்கரின் சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் பொருட்டு விவாதத்தில் கலந்து கொண்டார்.11 இதன் விளைவாக, அம்பேத்கரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, இந்த முழுமையான அதிகாரப் பிரிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் சட்டப்பிரிவு 50 ஆனது. பிரிட்டிஷ் நீதித்துறையின் தாக்கத்தில் ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்தி இருப்பதை அம்பேத்கர் பின்னர் நியாயப்படுத்திப் பேசினார்.12 அதிகாரங்களைப் பிரித்து வைப்பது, எந்த வகையிலும் அரசை பலவீனப்படுத்தி விடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

கூட்டாட்சி முறையினால் ஏற்படும் அதீதமான அதிகாரப்பரவலாக்கம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிக்கும் என்பதால் அம்பேத்கர் வலிமைமிக்க மத்திய அரசையே ஆதரித்தார். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்குக் கூடுதலான சுயாட்சி கிடைத்தால், தீண்டாமை ஒழிப்பை கட்டாயமாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரி அமல்படுத்தாமல் போகக்கூடும் என்று வாதிட்டார்.13 காந்தியவாதிகள் கிராமத்தில் இருந்து துவங்கி எல்லா மட்டத்திலும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டிருந்தார்கள். இதனால், அதிகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற முடிவு, இயல்பாகவே காந்தியின் ஆதரவாளர்களைக் காயப்படுத்தியது. மிகவும் தீவிரமான காந்தியவாதிகளின் பரிந்துரைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார், அல்லது அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தினார். இவ்வாறு அம்பேத்கர், மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரைப் பழிதீர்த்துக் கொண்டார்.

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத உபயோகப்படுத்திய எழுத்துக்கள் பெரும்பாலும் காந்திய பார்வை கொண்டவையாக இருக்கவில்லை. நேரு கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் குறித்த தீர்மானத்தில் மகாத்மா காந்தியின் தாக்கம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தென்பட்டது. பல்வேறு குழுக்கள், துணைக்குழுக்களின் அறிக்கைகள் (இவற்றில் முக்கியமான குழுக்கள், துணைக்குழுக்களுக்கு நேரு, படேல் தலைமை தாங்கினார்கள்) காந்தி குறித்து மூச்சே விடவில்லை. இவற்றால் மட்டுமே, நவம்பர் 1948-ல் அம்பேத்கர் சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தில் காந்தியத்தின் முத்திரை இல்லாமல் போனது என்பதற்கு இல்லை. அம்பேத்கர் தாக்கல் செய்த சட்ட வடிவத்தில், மலைப்பை ஏற்படுத்தும் வகையில் 315 சட்டப்பிரிவுகள் இருந்தன. இதனால் தான், அம்பேத்கர் அப்பட்டமான நிறைவோடு, ‘உலகத்தின் வேறு எந்த அரசியலமைப்பு சட்டமும் இத்தனை பெரிதில்லை.’ என்றார்.14 அதற்குப் பின்னர், அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தில் கிராமங்களுக்கு இடமில்லை என்கிற காந்தியவாதிகளின் விமர்சனத்தைக் கீழ்கண்டவாறு தவிடுபொடியாக்கினார்:

‘வரைவு அரசியலமைப்பு சட்டத்தின் மீது வைக்கப்படும் இன்னுமொரு குற்றச்சாட்டு உண்டு. அது பண்டைய இந்திய ஆட்சியமைப்பை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பண்டைய இந்து அரசை மாதிரியாகக் கொண்டு உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். மேற்கின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னமும் தீவிரமான காந்தியப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மத்திய, மாநில அரசுகளும் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான கிராம அரசுகள் மட்டும் இருந்தால் போதுமானது. அறிவார்ந்த இந்தியர்கள் கிராம சமூகத்தின் மீது கொண்டிருக்கும் காதல் பரிதாபப்படும்படியாக இல்லாவிடினும், அளவில்லாததாக இருக்கிறது. […] கிராமம் என்னவாக இருக்கிறது? உள்ளூர் பெருமிதம் ஊற்றெடுக்கும் சாக்கடையாக, அறியாமை, குறுகிய மனப்பான்மை, வகுப்புவாதத்தின் கிடங்காக அல்லவா இருக்கிறது. வரைவு அரசியலமைப்புச் சட்டம் கிராமத்தை தூக்கி எறிந்துவிட்டு, தன்னுடைய அடிப்படையாகத் தனிமனிதனை ஏற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.’15

தமிழில்: பூ.கொ.சரவணன்

(இப்பகுதிகள் ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ எனும் மொழியாக்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நூலை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=mp_s_a_1_1?keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&qid=1574734728&sprefix=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87&sr=8-1#mediaMatrix_secondary_view_div_1574734735906)

தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன?


தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்

இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)

தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?

இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை,
பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும்,
இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.

(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )

தமிழில்: பூ.கொ.சரவணன்

காந்தியும், மதச்சார்பின்மையும்


காந்தியும், மதச்சார்பின்மையும் – அனில் நௌரியா

(மதச்சார்பின்மை என்கிற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலதுசாரிகள் குரல் எழுப்பிக்கொண்டுள்ள சூழலில், காந்திக்கும் மதச்சார்பின்மைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இக்கட்டுரையை அவசியம் வாசியுங்கள்… )

மதச்சார்பின்மை என்கிற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா, ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே
உபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாகப் புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் மார்ச் 1931 ல் வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. மதச்சார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்தத் தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின்
எழுத்துக்கள் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாகக் காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தைப் பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார். மே 6, 1933 இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்.

மேலும் நவம்பர் 1933 இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார்.

ஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள் முன் உரையாற்றினார். அப்போது “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் சட்டசபை போன்ற மதச்சார்பற்ற அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் )

ஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையைப் பற்றிக் காந்தி பேசுகிற பொழுது இப்படிச் சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொதுப் பயன்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது ? மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையைப் பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத / நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பின்மைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும்.

இதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது.

”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நிதி ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடிமகன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்தப் புரவலும் ஆங்கில அரசு செய்தது போலத் தராது என்றும் சொன்னார். இந்தப் புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது

இந்தச் சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான்
பாடுபட்டதாகக் காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்துத் தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில்
எல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க இயலும்.” என்றார்

நவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லாக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்தத் தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார்.

குருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தைக் கொண்டு சோமநாதர் ஆலயத்தைப் புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : “நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின் தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அக்காலச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்தப் புரிந்துணர்வு 1969க்கு பின்னர்
கண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன.

காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ நன்கு கட்டமைப்பக்பட்ட, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்குச் சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம், வழிகாட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்தப் பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “

காந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது. அவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம் பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளைப் பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய நாட்குறிப்புகளில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். இந்தியா மதச்சார்பின்மையைத் தன் பண்பாகக் கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும், இந்திய தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் காந்தி, நேரு இருவரும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். இதனை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாகப் பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய
பிராந்திய தேசியத்தைக் காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. ஒத்துச்செல்லும் கருத்துகளை விட முரண்பாடுகள் ஆழமாக இருந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேருவும் இணைந்து வெகுகாலம் ஒன்றாகச் செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை காந்தி பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்திக் காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த ஹிந்துத்துவ சக்திகள் இதை முக்கியப்பணியாகச் செய்தன. இப்படிக் காந்தி,நேரு இருவரையும் பிரித்துக் காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாகக் காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்துக் கருத்தியல் ரீதியாகத் தாக்கமுடியும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்தக் காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதைப் பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூடத் தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்காலக் கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் இரு நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

(இக்கட்டுரை அனில் நௌரியாவின் Gandhi on secular law and state எனும்
கட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது )

புகைப்படம்: மதக்கலவரத்தால் சிதறுண்ட பீகார் மாநில வீடொன்றில் காந்தி

நன்றி: நவ்ஜீவன் அறக்கட்டளை

தமிழில்: பூ.கொ. சரவணன்

தலித் விடுதலையை சீர்குலைத்த பூனா ஒப்பந்தம்: 


பூனா ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று.


தனித்தொகுதி முறையை அம்பேத்கர் வென்றெடுத்த நிலையில், உண்ணாவிரதம் இருந்து காந்தி அதனைத் தட்டிப் பறித்தார். இதைக்குறித்து ஓரிரு கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணம். முதலாவதாக ரோஹித் வெமுலாவின் மரணத்தை அடுத்து சோயப் தானியல் எழுதிய கட்டுரையில் இருந்து தனித்தொகுதி முறை, தற்போதைய தேர்தல் முறை குறித்த பத்திகள் மட்டும் வாசிப்புக்காக:

தேர்தல் முறை குறித்த அம்பேத்கரின் விமர்சனம்: … அம்பேத்கர் காலம் தொடங்கித் தலித் இயக்கமானது தேர்தலில் தலித்துகளுக்கு இடங்களை ஒதுக்கும் முறையானது பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்த வண்ணம் உள்ளது.

1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பு சட்ட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அம்பேத்கர் தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள். காங்கிரசின் தலைவரான காந்தி இதனை எதிர்த்தார். இதற்கு மாறாக, சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று எதிர்த்தார் (தற்போதைய முறையின் முன்னோடி). இதைக்குறித்து, 1955-ல் அம்பேத்கர் பேசிய போது, அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையானது “இந்துக்களுக்கு அடிமையாக இருக்கும், சுதந்திரத்திறமற்ற ஆட்களையே” தலித் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் என்று நேரடியாகச் சாடினார். 

காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், அம்பேத்கர் வேறு வழியின்றி ஒப்புக்குள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அவர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி, தலித் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அம்பேத்கருக்கு ஒரே ஒரு சிறிய சலுகையாக, முதல்கட்டத் தேர்தலில் ஒவ்வொரு தலித் தொகுதியிலும் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முதல் கட்டத் தேர்தலில் வெற்றி பெறும் நான்கு வேட்பாளர்களுக்கு இறுதியாக அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பார்கள். 

அம்பேத்கர் சரியாகக் கணித்ததைப் போலவே, இத்தகைய கூட்டு வாக்களிப்பு முறை அவருடைய கட்சிக்கு பேரிடராகவும், காங்கிரசிற்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சின் தலைமைப் பொறுப்பில் முழுக்க முழுக்க மேல்சாதியினரே ஆதிக்கம் செலுத்தினாலும் இத்தகைய கூட்டுத் தொகுதி முறை அதற்கே பயனளித்தது. பூனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற 1937-ம் ஆண்டுத் தேர்தலில் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிப் பெற்றது. அம்பேத்கர் தோற்றுவித்து இருந்த விடுதலை தொழிலாளர் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்து நடந்த 1946 தேர்தலில் காங்கிரசின் வெற்றியும், அம்பேத்கரின் தோல்வியும் இன்னமும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகளில் 123 இடங்களில் வெற்றிப் பெற்றது. அம்பேத்கரின் கட்சி இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது,

”மோசடியான பிரதிநிதித்துவ முறை’:

இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பேத்கரை கடுமையாகக் கோபப்படுத்தியது. கூட்டு வாக்களிப்பு முறையே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அம்பேத்கர் குற்றஞ்சாட்டினார். 1946 -ம் ஆண்டுத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களித்த நிலையில், தன்னுடைய கட்சி 26% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 29% வாக்குகளையும் பெற்றதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். ஆனால், அனைத்து சாதிகளும் வாக்களித்த இறுதித் தேர்தல் முடிவுகளில் அறுபது மடங்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆகவே, இந்தத் தேர்தலில் இறுதியாக வென்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உண்மையான தலித் பிரதிநிதிகள் இல்லையென்று அம்பேத்கர் வாதிட்டார். 1946-ம் ஆண்டின் இறுதியில் அம்பேத்கர் இப்படிப் பேசினார்:

‘பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்கு எப்போதும் சட்டமன்றத்தில் போராடக்கூடிய நம்பகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பட்டியல் சாதியினரே தேர்ந்தெடுப்பதைத் தனித்தொகுதி முறை மட்டுமே உறுதி செய்யும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ஒழித்துக் கட்ட முயன்றால் அவற்றை எதிர்க்கவும் தனித்தொகுதிகள் தேவைப்படுகின்றன. வெவ்வேறு மாகாணங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறவைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை, பட்டியல் சாதியினரின் வலிகளை வலிமையாகக் கொட்டித் தீர்ப்பதற்காக ஒரே ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கூடக் கொண்டுவரவில்லை […] இப்படிப்பட்ட பட்டியல் சாதி உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்புகிற மோசடிக்கு பதிலாகப் பட்டியல் சாதியினருக்குச் சட்டமன்றத்தில் இடமே தராமல் இருந்துவிடலாம்’

இத்தகைய கவலை அம்பேத்கரை மட்டுமே அரித்துக் கொண்டிருக்கவில்லை. ஆய்வாளர்கள் ஆலிவர் மென்டெல்சொஹ்ன் & மரிக்கா விக்ஸியன்யாண்ட் ஆகிய இருவரும் எம்.சி.ராஜா அவர்களை ‘விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய தீண்டப்படாதவர்களில் இருந்து எழுந்த அரசியல்வாதி’ என்று வர்ணிக்கிறார்கள். அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “காங்கிரஸ் தலைமையில் கூட்டு வாக்களிப்பு முறையால் சாதி இந்துக்களோடு இணைந்து கொண்டு நுழைகிற தலித்துகள், எங்களுக்கு அரணாக இருப்பதைவிட, சாதி இந்துக்களின் தலைமையில் எங்களுடைய சுதந்திரத்தை அழிக்கவும், எங்கள் கழுத்துகளை வெட்டி சாய்க்கவும் காங்கிரசிற்குத் துணை போகிறார்கள் என்று எண்ணுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்’ என்று கசப்போடு எழுதினார்.

விடுதலைக்குப் பிறகு:

விடுதலைக்குப் பிறகு தலித்துகளுக்குத் தனித்தொகுதி என்கிற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. முதலாவதாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறைய பிரிவினைக்கு அடிகோலிய முதன்மையான காரணம் என்று பரவலாகக் கருதப்பட்டது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. பிரிவினை ஏற்படாமல் போயிருந்தாலும் தன்னுடைய இருபதாண்டு கால நிலைப்பாட்டைக் காங்கிரஸ் மாற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம். உண்மையில், இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்குப் பூனா ஒப்பந்தத்தில் தரப்பட்டிருந்த உரிமைகளை இன்னமும் குறைத்தது. முந்தைய முறையில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்றிருந்ததை அடியோடு கைகழுவியது. செய்வதறியாமல் திகைத்து நின்ற அம்பேத்கர், கடைசி முயற்சியாகத் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் குறைந்தபட்சம் 35% தலித் ஓட்டுக்களையாவது பெற வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவந்தார்.

இதன்மூலம், தலித் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சமுகத்தின் உண்மையான பிரதிநிதிகளாகத் திகழ்வதை உறுதி செய்ய முடியும் என்று கருதினார். வல்லபாய் படேல் அதனை முழுமையாக நிராகரித்தார். “இதனை நான் எதிர்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? பெரும்பான்மையான இந்துக்கள் உங்களுடைய (தலித்துகளின்) நலத்தையே நாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே செல்ல முடியும்? அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதை மறந்து விடுங்கள்…இத்தகைய தாழ்வு மனப்பான்மையைத் தாங்கிக் கொண்டு இருந்தால், அவர்களால் சமூகத்திற்குச் சேவையாற்ற முடியாது.”

விடுதலை இந்தியாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் அம்பேத்கரின் கட்சி இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையானது பேரிடராக மாறியது என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலித் நலன்களை முன்னிறுத்தவில்லை என்பது ஒரு புறம். மறுபுறம், இத்தகைய தொகுதி ஒதுக்கீட்டு முறையால், பிற சமூகக் குழுக்களோடு தலித்துகளால் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்ள இயலாமல் போனது. 1955-ல் அம்பேத்கரின் கட்சியானது தலித்துகளுக்கு என்று தொகுதிகளைத் தேர்தல்களில் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.

அம்பேத்கரின் கருத்து 1932-ல் புறக்கணிக்கப்பட்டதைப் போன்று, 1955-லும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்டது. இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அப்படியே தொடர்கிறது. தலித்துகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கிளர்ந்து எழும் “உயர் சாதி” குழுக்கள் நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்குத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சட்டை செய்வதே இல்லை. இந்த முறை அதிகார அமைப்பினில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது. இதனால், இம்முறை “மோசடியான பிரதிநிதித்துவம்” என்று தெளிவாகிறது. கிறிஸ்தோப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுவதைப் போல, விடுதலையடைந்த காலத்தில், “தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலித் அல்லாதோர் வாக்குகளைக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதில் தேர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது”. இம்முறையைப் பாரதி ஜனதா கட்சி தற்போது கைக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச தலித் எம்பிக்களைக் கொண்டுள்ள கட்சியாக அது திகழ்ந்தாலும், ரோஹித் வெமுலாவின் தற்கொலையைப் போன்ற பெரும் தலித் துயரத்தை எதிர்கொள்வது எப்படி என்று புரியாமல் அக்கட்சி திகைத்து நிற்கிறது.

மூலம்:  https://scroll.in/article/802377/despite-having-40-dalit-mps-why-has-the-bjp-ignored-dalit-complaints-dr-ambedkar-has-the-answer

தமிழில்: பூ.கொ.சரவணன்

காந்தியார் சாந்தியடைய : நூல் அறிமுகம்


2009-ம் ஆண்டின் இறுதி கணங்கள் அவை. வெறுப்பும், அசூயையும், சென்னை மாநகர் தந்த பதற்றமும் என்னை விழுங்கி கொண்டிருந்த படப்படப்பான கணங்கள் அவை. காந்தியை ஏதேதோ காரணங்களுக்காக வெறுக்கப் பழகியிருந்தேன். அவர் குறித்து ஒரு வார்த்தை நல்லதாகக் கேட்டாலும், கடுமையான மொழியை, பதட்டம் நிறைந்த விமர்சனங்களை, கண்மூடித்தனமான காழ்ப்பை கொட்டிய காலம். ஊருக்கு போக வேண்டிய சூழலில் கன்னிமாரா நூலகத்தில் இருந்து காந்தியார் சாந்தியடைய எனும் நூலை எடுத்துக் கொண்டேன். நூலின் தலைப்பில் ‘தடை செய்யப்பட்ட எழுத்தும், காலமும்’ என்கிற தலைப்பு இருந்தது ஈர்ப்புக்குக் காரணம்.

பேருந்தில் ஏறிக்கொண்டேன். உட்கார இடமில்லை. நடக்கிற பாதையில் கால் வலிக்க உட்கார்ந்து விட்டேன். அப்படியே தூங்கி விடலாம் என்று கூடத் தோன்றியது. மருவத்தூர் வரும் வரையில் ஓட்டுவோம் என்று பைக்குள் கைவிட்டு எடுத்ததும் இந்த நூல்தான் கையில் கிடைத்தது. கொஞ்ச நேரம் படிப்போம் என்று கையில் எடுத்து உட்கார்ந்தேன்.
மெதுவாகவே வாசிக்கிற பழக்கம் கொண்ட நான், நான்கு மணிநேர பேருந்து பயணம் முழுக்க அந்த நூலில் மூழ்கிப்போனேன். அந்த எழுத்து நடை, வரலாற்றை நெருக்கமாகக் கண் முன் நிறுத்தும் மொழி, காந்தியோடு வகுப்புவாத களத்துக்கு அழைத்துப் போகும் நூல் பகுப்பு எல்லாமே அசரடித்தன.

காந்தி ஒழிக்கப்பட வேண்டிய சக்தி என்று பெரியார் தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், காந்தியின் படுகொலைக்கு அடுத்து, பெரியார் உணர்ச்சிவசப்பட்டார். இருந்தது ஆரிய காந்தி, இறந்தது நம் காந்தி என்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிற்குக் காந்திஸ்தான் என்று பெயரிட வேண்டும் என்று கூட வலியுறுத்தினார். எந்தக் காந்தி ஒழிய வேண்டும் என்று ஓயாமல் இயங்கினாரோ, அதே காந்திக்கு திராவிட இயக்கத்தின் சார்பாக இரங்கல் கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடத்தப்பட்டன. ‘காந்தியார் சாந்தியடைய’ என்கிற பன்னிரெண்டு பக்க நூலை ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதினார். மதவாதிகளை மிகக்கூர்மையாக எதிர்கொண்ட அந்த நூல் தடை செய்யப்பட்டதோடு, நூல் ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத்தைக் கட்டத்தவறினால் கடுங்காவல் தண்டனைக் காலம் கூட்டப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. சிறையில் அவருக்கும், நூலை வெளியிட்டவர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. அது திராவிட நாட்டில் அட்டைப்படமாக வெளிவந்தது.

இந்தப் பதட்டமும், எதிர்ப்பும் மிகுந்த பிரிவினை, காந்தி படுகொலை காலத்தை இந்துஸ்தான், பாகிஸ்தான், காந்திஸ்தான் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு நூல் அலசுகிறது. ஒரே ஒரு நூல், மனதில் அப்பிக்கிடந்த அத்தனை வெறுப்பையும் அடித்துக் கொண்டு போகக்கூடும் என்பதைக் கண்டடைந்த நாள் அது. நீங்களும் மதவாதத்தைக் காந்தி எதிர்த்த அந்த மகத்தான வரலாற்றை, அதில் திராவிட இயக்கமும் கைகோர்த்துக் கொண்ட காலத்தைப் படித்துணருங்கள். நூல் வெகு காலத்திற்குப் பிறகு மறு பதிப்புக் கண்டிருக்கிறது.

https://www.commonfolks.in/books/d/gandhiyar-saanthiyadaiya-parisal

பக்கம் 158 விலை 160
காந்தியார் சாந்தியடைய
ப.திருமாவேலன்
நூலை பெற 9382853646/8778696612

இந்தியா என்கிற கருத்தாக்கம்


ஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.

அரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும். 

Image result for சுனில் கில்னானி

மேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது? ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும். 

(பேராசிரியர் சுனில் கில்நானி)

Image result for சுனில் கில்னானி
இந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள்? இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.

நானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும். 

Image result for இந்தியா என்கிற கருத்தாக்கம்

கைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிரமாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது?

இந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும். 

இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
தமிழில்: அக்களூர் ரவி
சந்தியா பதிப்பகம்
380 பக்கங்கள்
315 ரூபாய்

 

கருத்துரிமை நெரிப்பின் கலங்க வைக்கும் வரலாறு – 2



ஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:
இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்?:
ஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொன்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.

Image result for republic of rhetoric
Lady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.
        அதே சமயம், உச்சநீதிமன்றம் தேவிதாஸ் ராமச்சந்திர துலிஜாபுர்கர் வழக்கில் காந்தி முதலிய தேசத்தலைவர்கள் குறித்து ஆபாசமாக எழுத கூடாது என்று தீர்ப்பு எழுதியது.  அவீக் சர்க்கார் தன்னுடைய செய்தித்தாளில் போரிஸ் பெக்கர் தன்னுடைய காதலியோடு நிற்கும் அரை நிர்வாண படத்தை நிறவெறிக்கு எதிரான அடையாளமாக வெளியிட்டார். அதை ஆபாசம் என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஒரு படைப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டே அது ஆபாச உணர்வுகளைத் தூண்டுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதியதன் மூலம் உச்சநீதிமன்றம் ஹிக்லின் சோதனையில் இருந்து ஓரளவிற்கு நகர்ந்து வந்தது.
Image result for boris becker aveek sarkar
   குஷ்பு கற்பு சார்ந்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,’காம உணர்ச்சியை, மோக சிந்தனைகளைத் தூண்டிவிடுவது ஆபாசமானது. அவர் பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய எதையும் சொல்லிவிடவில்லை….திருமணம் என்பது சமூக அமைப்பு தான். எனினும், இந்தியாவில் பல்வேறு பூர்வகுடிகள் திருமண அமைப்புக்கு வெளியே உடலுறவு கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ என்று விவரித்துக் குஷ்பு பேசியது ஆபாசமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
Image result for khusboo and supreme court
ராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.

        கேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.

Image result for contempt of court india

நேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:
எல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

            இது நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக நேரு மீது வழக்கு போட யோசிக்கப்பட்டது. நேருவே அதற்குள் விவியன் போஸ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவும் நேரு ஒப்பினார். நேருவின் மன்னிப்பு ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பிரிவுபாசார விழாவில் நேரு கலந்து கொண்டார். டால்மியா-ஜெயின் நிறுவனங்கள் மீதான விசாரணை பொறுப்பை விவியன் போஸிடமே நேரு ஒப்படைத்தார்.
மான நஷ்ட வழக்கு:
இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .
நக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்கர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

Image result for nakheeran rajagopal auto shankar

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

         மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டப்பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னணியில் ‘ரங்கீலா ரசூல்’ எனும் பிரசுரம் இருந்தது. வண்ணமயமான நபிகள் என்கிற பொருள் தரும் இந்த நூல் நபிகள் நாயகத்தின் அக வாழ்வு சார்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது. இது பண்டித சமுபதியால் எழுதப்பட்டது. இதைத் தடை செய்யக்கோரி தலிப் சிங் என்கிற நீதிபதி முன் வழக்குச் சென்றது. அந்நூல் மோசமானது என்றாலும் அது பகை, வெறுப்பை வளர்க்கவில்லை என்று தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருக்கிற சட்டமானது இறந்து போன மதத்தலைவர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும், வரலாற்று பார்வையுள்ள நூல்களும் இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்தினால் வராமல் போகும் என்று தீர்ப்பு எழுதினார். பல்வேறு கலவரங்கள் அந்நூலால் வெடித்தன.
Image result for rangeela rasool           

               ரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.

இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

விடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா?:
பல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

பெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:
‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.

          ஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் காயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

Image result for periyar  ramayana

அதே சமயம், பரகூர் ராமச்சந்திரப்பா வழக்கில் நீதிமன்றம் பசவர் குறித்த ஆசிரியரின் கருத்துக்களுக்காக நூலை தடை செய்ததோடு, ‘மிகப்பெரிய மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பலவீனமான மக்களின் மனங்கள் காயப்படாமல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கவனமும், கரிசனமும் வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. பல்வேறு புத்தகத் தடைகளை, திரைப்படத் தணிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது. 

பத்திரிகைகளின் கழுத்தை நெரித்தல்:
இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.

Continue reading

கருத்துரிமை நெரிப்பின் கலங்கவைக்கும் வரலாறு-ஒன்று!


காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா கருத்துரிமையைக் காப்பதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் ஆய்வு செய்கிறது. கௌதம் பாட்டியாவின் கருத்துரிமை குறித்த நூல் அரசியல், சமூகச் சூழ்நிலைகளைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விமர்சனத்துக்கு இடையே இந்நூல் அந்த இடைவெளியை பெருமளவில் நிரப்புகிறது.
இந்திய விடுதலை மன்னர்கள், ஆதிக்கச் சாதியினர், நிலச்சுவான்தார் ஆகியோரின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதை ஓரளவுக்குச் செய்தது. இந்தச் சாதனை ஆங்கிலேயர் காலத்து அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தது. கருத்துரிமை சார்ந்து அப்படிச் சொல்ல முடியாது என்பதை இந்தியாவின் கருத்துரிமை சார்ந்த சட்டங்கள், கட்டுப்பாடுகள் உணர்த்துகின்றன. அரசியலமைப்பு சட்ட விவாதங்களில் ஹனுமந்தையா சொன்னதைப் போல, ‘நாம் வீணை, சிதார் இசைக்கு ஆசைப்பட்டோம். ஆங்கிலேயே வாத்தியக்குழுவின் இசை தான் கிட்டியுள்ளது’. அபினவ் இந்த நூலில் நிரூபிப்பதை போலச் சமயங்களில் ஆங்கிலேயரின் சட்டங்களை விடக் கடுமையான கட்டுப்பாடுகளை விடுதலைக்குப் பிந்தைய சட்டங்கள் விதித்து இருக்கின்றன. 

தேசத்துரோக சட்டத்தின் திகில் வரலாறு:
மெக்காலே இந்திய குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய போது தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவையும் உருவாக்கினார். எனினும், குற்றவியல் சட்டம் 1860-ல் நடைமுறைக்கு வந்த போது வரைவில் இருந்த தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவான 113 அமலுக்கு வரவில்லை. பத்தாண்டுகள் கழித்தே அந்தச் சட்டத்தைச் சீரமைத்து சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தில் தேசத்துரோக சட்டத்தின் எல்லைகள் பெரிது என்றாலும், நடைமுறையில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. மெக்காலே அரசின் மீது ‘disaffection’ காட்டினால் ஒருவர் மீது இச்சட்டத்தைப் பாய்ச்சலாம் என்று வரையறுத்து இருந்தார். அரசின் மீது நல்ல நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் இதில் வராது என்பது அவரின் பார்வையாக இருந்தது. பர்னேஸ் பீகாக் என்கிற சட்டத்துறை வல்லுநர் வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதாகக் கருத்துகள் இருந்தால் மட்டுமே தேசத்துரோக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாற்றியமைத்தார். அவரின் சட்டம் பிரிட்டனின் தேசத்துரோக சட்டத்தை ஒத்திருந்தது. ஆனால், ஸ்டீவன் என்கிறவர் உருவாக்கிய இறுதி வடிவத்தில் சட்டம் கடுமையானதாக ஆக்கப்பட்டது. அப்போது இஸ்லாமிய வாகாபிக்கள் கிறிஸ்துவர்களான ஆங்கிலேயருக்கு எதிராகப் புனிதப்போரை நடத்தக்கூடும் என்கிற அச்சத்தில் இச்சட்டம் தேவைப்படுவதாக அறிவித்தார்.
உடலுறவுக்கான விருப்ப வயதை பத்தில் இருந்து பன்னிரெண்டுக்கு உயர்த்திய ஆங்கிலேய அரசின் நடவடிக்கையை விமர்சித்துப் பங்கோபாசி என்கிற செய்தித்தாள் எழுதிய கட்டுரைகள் சார்ந்தே முதல் தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டது. எனினும், இந்த வழக்கு சீக்கிரமே விலக்கி கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என்கிற அச்சத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம், இந்து தேசியவாதியான திலகர் மீது பாய்ச்சப்பட்டது. திலகரின் சிவாஜி குறித்த உரை மக்களைத் தூண்டிவிடுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில் ஜூரி தீர்ப்பளிக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் ஜூரி ஒரு மனதாகத் தீர்ப்பு வழங்கினாலே இரண்டாண்டு தண்டனை. இந்தியாவிலோ அதற்கு மாறாகப் பெரும்பான்மை போதும். கூடுதலாக, நாடு கடத்தல் இந்தியர்களுக்குத் தண்டனை. இந்தியர் அல்லாத ஐரோப்பியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மட்டுமே. இதனால் திலகர் மீது சுமத்தப்பட்ட ராஜதுரோக குற்றங்களில் இந்திய உறுப்பினர்கள் அவரைத் தண்டிப்பதை எதிர்த்து வாக்களித்தாலும் பெரும்பான்மை ஆங்கிலேய உறுப்பினர்களின் வாக்குகளால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், திலகர் மராத்தி மொழியில் எழுதிய கட்டுரைகள் படிப்பறிவு இல்லாத, முட்டாள் மக்களுக்காக எழுதப்பட்டது. அவை வாசித்துக் காட்டப்பட்டு அவர்களைத் தவறான பாதையில் செலுத்துகிறது என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருதிப்பகுதிக்குள் மெக்காலேவின் குறுகலான குற்றங்களை மட்டுமே தண்டிக்கும் ராஜதுரோக சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தண்டனையை வழங்கின. இதை அடுத்து, தேசத்துரோக சட்டத்தை விரிவாக்கி ‘அரசு மீதான வெறுப்பு, அவமதிப்பு, பகை’ ஆகியவற்றை வளர்ப்பதையும் தேசத்துரோக குற்றம் என வரையறுத்துச் சட்டம் 1898-ல் அமலுக்கு வந்தது. காந்தி மீது இச்சட்டம் பயன்படுத்தப்பட்ட போது வரலாற்றில் முதன்முறையாக அந்தச் சட்டத்தின்படி தான் குற்றவாளி என்று காந்தி ஏற்றுக்கொண்டு அதிரவைத்தார். வன்முறைக்குத் தூண்டாத வரை அரசுக்கு எதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்துவது குற்றமில்லை என்றும், தான் தோன்றித்தனமான ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களின் தலை மீது இறங்க தயாராக் இருக்கும் வாளே இச்சட்டம் என்று கடுமையாகக் காந்தி சாடினார்.
Gwyer என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டினால் மட்டுமே இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உலகப்போர் சமயத்தில் தீர்ப்பு எழுதினார். மஜூம்தார் என்கிற சட்டசபை உறுப்பினர் நாற்பத்தி ஒன்றில் டாக்காவில் மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது எனத் தொடரப்பட்ட வழக்கில் இப்படி அவர் தீர்ப்பு எழுதினார். அரசாங்கங்களின் கர்வத்தைக் காயப்படுத்துகிற கருத்துக்களுக்கு மருந்து போட்டுக்கொள்ள இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றார். ஆனால், அவரின் கருத்தை பலேராவ் வழக்கில் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சில் ஏற்க மறுத்தது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஆயுள்தண்டனை தேசத்துரோக குற்றத்துக்கு விதிக்கப்பட்டது. 1974-ல் கைது உத்தரவு இல்லாமலே தேசத்துரோக குற்றங்களுக்குக் கைது செய்யலாம் என்று இந்திரா காந்தி அரசால் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
Image result for republic of rhetoric
கருத்துரிமை காவலர் கே.எம்.முன்ஷி:
கே.எம்.முன்ஷியை கிரான்வில் ஆஸ்டின் உரிமைகளை மட்டுப்படுத்துகிற செயலில் ஈடுபட்டவர் என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரோடு இணைத்து குறிப்பிடுகிறார். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது என்பதை அபினவ் சந்திரசூட் நிறுவுகிறார். கே.எம்.முன்ஷி பத்திரிக்கைகளை முன் தணிக்கை செய்கிற பணியில் உலகப்போர் சமயத்தில் ஈடுபட்டிருந்தார். அவரே கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் வரைவை தயாரித்த குழுவின் தலைவராக இருந்தார். அதில், பொது அமைதி, நன்னெறி, தேசத்துரோகம், ஆபாசம், அவதூறு, தெய்வ நிந்தனை என்று பல்வேறு கருத்துரிமையை மறுக்கும் பிரிவுகள் அடுக்கப்பட்டன. கே.டி.ஷா, ‘ஒரு வலது கை தந்ததை மூன்று, நான்கு இடது கைகள் பறித்துக் கொள்வதைப் போல’ இது இருப்பதாகக் குறைபட்டார். அம்பேத்கர் இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திப் பேசினார். டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் கருத்துரிமை கட்டுப்பாடுகள் அற்றதாக இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

அம்பேத்கர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பேச்சுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். வகுப்புவாத வெறியை தூண்டிவிடும் பேச்சு கருத்துரிமையின் கீழ் வரக்கூடாது என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் வாதிட்டார். இது அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் என்று கவலை தெரிவித்தார் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. கே.எம்.முன்ஷி வன்முறையைத் தூண்டிவிடாத பேச்சை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றார். தெளிவாக, ஆபத்தை விளைவிக்கும் பேச்சுக்களையே கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். அவரின் வாதங்களால் அம்பேத்கர், அல்லாடி ஆகியோரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தேசத்துரோகம் சார்ந்த பேச்சுக்களையும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் பிரிவுக்குள் கொண்டுவருவதையும் முன்ஷி நீக்க திருத்தம் கொண்டு வந்தார். அது ஏற்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு முடிவு செய்தது. நீதிபதிகள் காலனிய ஆட்சிக்கு நன்றியோடு இருந்துவிட்டு இன்னமும் பதவியில் தொடர்கிறார்கள், அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு என்று பி.தாஸ் என்கிற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று முடிவு செய்யப்பட்டது. நியாயமான கட்டுப்படுகளையே கருத்துரிமைக்கு விதிக்க வேண்டும் என்கிற பார்கவாவின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.

முதல் சட்ட திருத்தத்துக்கு வழி வகுத்த பிரசாத், முகர்ஜி:
கருத்துரிமைக்குக் கட்டுப்பாடுகள் ஓரளவுக்கே விதிக்கப்படுவதை அரசியலமைப்பு சட்ட குழுவின் விவாதங்கள் உறுதி செய்தாலும் சீக்கிரமே சிக்கல்கள் எழுந்தன. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு வெறுப்பைத் தூண்டும், வகுப்பு வாதத்தை வளர்க்கும் பேச்சுக்களை, எழுத்துக்களைத் தடை செய்ய அரசுகள் முயன்ற போது அது கருத்துரிமைக்கு எதிரானது என நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. ரொமேஷ் தாப்பர் என்கிற இடதுசாரியின் ‘CrossRoads’ செய்தித்தாள், ப்ரிஜ் பூஷன் என்கிற வலதுசாரியின் ‘Organiser’ செய்தித்தாள்களை அரசு கட்டுப்படுத்தியது. அவை கருத்துரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இருக்கும் மதச் சிறுபான்மையினரின் நலனை காக்க லியாகத் அலிகான் உடன் நேரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது சார்ந்தும் பிரிவினை, காஷ்மீர் சிக்கல்கள் சார்ந்தும் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி கடுமையாகப் பேசினார். பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று தொடர்ந்து பேசினார். இது படேல், நேரு ஆகியோரை கவலைக்கு உள்ளாக்கியது.

இன்னமும் மோசமாக, சார்ஜூ பிரசாத் என்கிற நீதிபதி, சங்க்ராம் என்கிற துண்டு பிரசுரத்தில், ‘நான் ரத்தவெறிக் கொண்ட காளி…. நான் தாகம் கொண்டிருக்கிறேன், எனக்குப் புரட்சி வேண்டும், போராட்டத்தின் மீது நம்பிக்கை வேண்டும்., அநீதியின் சங்கிலிகளைக் கிழித்து, கிழித்து எறியுங்கள்.’ என்று எழுதப்பட்டதை எதிர்த்துத் தொடர்ப்பட்ட வழக்கில், ‘கொலை செய்யத் தூண்டினாலும் அதுவும் கருத்துரிமை. அதற்கான தண்டனையைத் தூண்டியவர் அனுபவிக்க வேண்டும், ஆனால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியாது’ எனத் தீர்ப்பு தர அதிர்ந்து போனது அரசு. முதல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் ‘பொது அமைதி’, ‘அயல்நாடுகளோடு நட்புறவு’, ‘குற்றத்துக்குத் தூண்டுவது’ ஆகியன சார்ந்து கருத்துரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று திருத்தும் கொண்டு வந்தார். அயல்நாடுகளோடு நட்புறவை ஒரு தனிக் குடிமகனின் கருத்துகள் சீர்குலைக்குமா என்று நஸ்ரூதின் ஷா என்கிற உறுப்பினர் ஆச்சரியப்பட்டார்.

நியாயமான கட்டுப்பாடுகள் (reasonable restrictions) விதிக்கப்பட வேண்டும் என்கிற திருத்தத்தை அம்பேத்கர் கொண்டு வந்ததை உள்துறை அமைச்சர் ராஜாஜி பெரும் விவாதத்திற்குப் பிறகே ஏற்றுக்கொண்டார். குற்றத்துக்குத் தூண்டுவது என்கிற பிரிவு இருக்க வேண்டுமா என்கிற விவாதம் எழுந்த போது, ‘மதுவிலக்கு இருக்கும் ஊரில் மற்றவர்கள் கால்சட்டை பையில் சாராயம் சுமந்து செல்ல தூண்டுவது குற்றமில்லையா?’ என்று கேட்டார் ராஜாஜி. அம்பேத்கர், ‘வயல்களுக்கும், விறகு பொறுக்கக் காடுகளுக்கும் பட்டியலின சாதியினர் போகக்கூடாது எனச் சமூக விலக்கை சாதி இந்துக்கள் விதித்தால் அவற்றை ஏற்க முடியாது.’ என்று வாதிட்டார். பிளிட்ஸ் இதழில் கரஞ்சியா இந்தச் சட்ட திருத்தத்தைக் கருப்பு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்தை வன்புணர்வு செய்வது என்றெல்லாம் சாடினார். சட்டதிருத்தங்கள் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.
எதிர்ப்புக்குரியவற்றைப் பதிப்பிப்பது சார்ந்து 1951, 1971-ல் நேரு, இந்திரா அரசுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன. இவை காலனிய சட்டத்தை விடக் கடுமையாகப் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின என்கிறார் சந்திரசூட். எவ்வளவு முன்பணத்தை அச்சகம் செலுத்த வேண்டும் என்கிற வரையறையை விதிக்காமல் இந்தச் சட்டங்கள் அதை அரசை தீர்மானிக்க விட்டன, ஆங்கிலேயர் காலத்தில் வரையறை விதிக்கப்பட்டு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

திமுகவை பிரிவினை முழக்கத்தைக் கைவிட வைத்த சட்ட திருத்தம்:
திமுக அறுபதுகள் வரை திராவிட நாடு/தமிழ்நாடு கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்தது. சீனப்போர், நாகா, பஞ்சாப் பிரிவினை முழக்கங்கள் எல்லாம் சேர்ந்து கொள்ளப் பதினாறாவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் ‘தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை’ சார்ந்து கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம் என்கிற சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்ட சீர்திருத்தத்தைச் செய்யுமாறு சி.பி.ராமசுவாமி ஐயர், காமராஜர் முதலியோர் அடங்கிய தேசிய ஒற்றுமை கமிட்டி பரிந்துரை செய்தது. மேலும், பதவி ஏற்றுக்கொள்ளும் சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையைக் காக்கும் வகையில் இயங்குவேன் என்று உறுதிமொழி ஏற்பதும் கட்டாயமானது. நீதிபதிகளும் இவ்வாறு பதவி பிரமாணம் எடுக்க வேண்டியது கட்டாயமானது. இதன்மூலம் நீதிபதிகள் பிரிவினையை ஆதரிக்கும் பேச்சுகளைக் காப்பாற்ற முடியாமல் தடுக்கப்பட்டது. நரசிம்ம ரெட்டி எனும் உறுப்பினர் முந்தைய தேர்தலில் திமுகத் தந்த கடும் எதிர்ப்பை தாங்க முடியாமல் காங்கிரஸ் அதைப் பழிவாங்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார். சட்ட அமைச்சர் சென் நாகா, பஞ்சாப் பிரிவினை, தெற்கின் போராட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். பூபேஷ் குப்தா என்கிற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அப்போது அமலில் இருந்த அவசரநிலை சட்டத்தைச் சுட்டிக்காட்டி கருத்துரிமை உறைந்து போயிருக்கும் காலத்தில் அது குறித்து விவாதிக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார். மக்களவையில் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அண்ணா ஏழு திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தது கணக்கில் கொள்ளப்படவில்லை என்றார். மாநிலங்களவையில் அண்ணா மட்டுமே சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார். செழியன் சட்டத்தை எதிர்த்துப் பேசுகையில்:

‘தயவு செய்து எங்களோடு வாதிடுங்கள், போட்டி போடுங்கள், எங்களைச் சம்மதிக்க வையுங்கள். நாங்கள் மாறவே மாட்டோம் என்று தெரிந்தால் எங்களை விட்டுவிடுங்கள், மக்களிடம் போய் அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். இதை நீங்கள் செய்தால் தான், அது உண்மையான ஜனநாயகம். வேறு ஏதேனும் செய்வீர்கள் என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகம் இல்லை. அது வேறொன்று.’

என்றார்.
Image result for anna with era sezhiyan
         மேலும் அமெரிக்க உச்சநீதிமன்றம், ‘கருத்துக்களைக் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பது என்பது கல்லறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒற்றுமையை மட்டுமே சாதிக்கிறது.’ என்று அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசினார் செழியன். ஹெச்.என்.முகர்ஜி இறையாண்மை, ஒற்றுமை முதலிய வார்த்தைகள் தெளிவாக இல்லை, அவற்றைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்று கவலை தெரிவித்தார். காமத் ஸ்காட்டிஷ் ஹோம் ரூல் கட்சியைப் போல வன்முறையைத் தூண்டாமல் பிரிவினை பேசி, தேர்தலில் பங்கு கொண்டால் ஏற்பதில் ஒன்றும் தவறில்லை என்றார். வடக்கிற்கும், தெற்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் கோப்ரகடே, பிபுதேந்திர மிஸ்ரா முதலியோர் சுட்டிக்காட்டி பேசினார்கள்.

(ஆபாசம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்ற அவமதிப்பு குறித்த கருத்துரிமை விவாதங்கள் நாளை விரிவாக பேசப்படும்)


……………………………

தேசியம்-ஒரு உரையாடல்


#விடுதலை தினத்தைப் புறக்கணிக்க வேண்டும், இது கருப்பு தினம் என்றெல்லாம் பகிர்கிறார்கள். அரசுக்கும், தேசத்திற்கும் வேறுபாடு உண்டு. அது முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிய நாடு இது. இதன் பெருமைகளும், சிறுமைகளும் நமக்குரியவை. ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ எனக் கேட்டார் வரலாற்றாசிரியர் முகுல் கேசவன். நம் அனைவருக்குமான கேள்வி அது.#
 
இப்படியொரு பதிவை விடுதலை திருநாள் அன்று எழுதினேன். இந்தியா ஒரு நாடா? இந்தத் தேசியத்தை ஏற்கனவே பெரும்பான்மைவாதமாக மாற்றிவிட்டார்கள், பின் என்ன செய்வது? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள். இவற்றுக்கு முழுமையாகச் சில பத்திகளில் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. எனினும், வரலாற்று ஆசிரியர்கள் முகுல் கேசவன், ஸ்ரீநாத் ராகவன், அரசியல் அறிஞர் சுனில் கில்னானி ஆகியோரின் வாதங்களை இணைத்து எழுதுகிறேன். த. பெனடிக்ட் ஆண்டர்சன் தேசியம் குறித்துச் செய்த ஆய்வுகள், முன்வைத்த கருத்துக்கள் தேசியம் என்பதே தீங்கானது என்கிற பார்வையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. பதிவை நீள வைத்துவிடும் என்பதால் அது இன்னொரு நாள். ற்காலம் குறித்து நான் விரிவாக எழுத முடியாது என்றாலும், இந்தப் பதிவின் மூலம் தேசியம் குறித்த அசூயை குறைந்து, அதில் நமக்கான பங்கை, உரிமையை உணர்ந்து உரையாடுவதன் அவசியம் புரியும் என நம்புகிறேன்
 
தற்போதைய இந்தியா எக்காலத்திலும் ஒரே தேசமாக இருந்தது கிடையாது என்பது பலரின் வாதம். முழுக்க உண்மை. இந்தியாவை அரசியல் அறிஞர்கள் ‘உருவாகி கொண்டிருக்கும் தேசம் ‘ என்பார்கள். தேசியம் என்பது பன்னெடுங்காலமாக இருப்பது என்கிற வாதத்தை நவீன அரசியல் அறிவியல் ஏற்பது இல்லை. வரலாற்று ஆசிரியர்களும் அதனோடு ஒப்புகிறார்கள். தேசியங்கள் என்பவை கட்டமைக்கப்படுபவை. ஐரோப்பாவின் தேசியங்கள் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நாடு என்கிற ரீதியில் கட்டமைக்கப்பட்டன. மாஜினி. கரிபால்டி, பிஸ்மார்க் எனப் பல்வேறு ஆளுமைகள் ஐரோப்பாவில் உருவாக்கிய தேசியங்கள் வேற்றுமைகளைத் துடைத்து எறிந்து விட்டு, ஒற்றைப்படையாக மக்களை ஒன்று சேர்க்க முயன்றன.
 
1878-ல் டெல்லியில் லிட்டனால் தர்பார் கூட்டப்பட்டது. அதில் பல்வேறு சுதேச சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டார்கள். இந்தியா என்கிற வனவிலங்கு சரணாலயத்தின் பல்வேறு விலங்குகளும் அங்கே இருந்தன என்று முகுல் கேசவன் குறிப்பிடுகிறார். இதே பாணியில், ஆனால் , ஆங்கிலேயருக்கு வந்தனம் என்று சொல்லாத ஒரு இந்திய வனவிலங்கு கூட்டத்தைக் காங்கிரஸ் நடத்த முயன்றது. காங்கிரசில் ஆதிக்க ஜாதியினரே ஆரம்பக் காலங்களில் நிரம்பி இருந்தார்கள். அது தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் என அழைத்துக் கொண்டது. இந்தியாவுக்கே பேசுகிறேன் என்று எப்படி நிரூபிப்பது? நோவாவின் கதை தெரியும் இல்லையா? உலகை இறைவன் அழிக்க எண்ணிய போது, ஒரு பெரிய கப்பலை படைத்து அதில் ஒவ்வொரு உயிரினத்தின் ஜோடிகளை மட்டும் ஏற்றுக்கொண்டார் நோவா என்கிறது விவிலியம். அப்படி இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பிய காங்கிரஸ், எல்லாரையும் பெயரளவில் ஆவது தன்னுடைய உறுப்பினராக ஆக்கிக்கொண்டது. இப்படி நோவாவின் மிதவையைப் போல அனைவரையும் உள்ளடக்கக் காங்கிரசின் தேசியம் முயன்றது. இதையே முகுல் கேசவன், ‘Noah’s Ark of Nationalism’ என்கிறார்.
Image result for முகுல் கேசவன்
 
இந்தத் தேசியம் எல்லாருக்குமான தேசியம் இல்லை என்பது உண்மை. ஒரு குடையின் கீழ் எல்லா இனங்கள், மொழியினரையும் கொண்டு வர இது முயன்றது. இந்தக் குடையில் ஒதுங்க முடியாது என்று வெவ்வேறு தரப்பினர் குரல் கொடுத்தார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், தலித்துகள் என்று பலரும் தங்களுடைய தேசியம் இதுவல்ல என்று எண்ணினார்கள், போராடினார்கள்.
 
காங்கிரசின் இந்தத் தேசியத்தை எப்படி வர்ணிப்பது? இதை முகுல் கேசவன், ‘சந்தர்ப்பவாதம், திட்டமிடல், லட்சியவாதம் ஆகியவற்றின் கலவை. ஆங்கிலக் காதல் கொண்ட மக்கள் வருடத்திற்கு ஒருமுறை கூடிய படித்த மேல்தட்டினர் ஆரம்பக் காலத்தில் சமைத்த தேசியம்.’ என்கிறார். இந்தத் தேசியம் அடுத்தக் கட்டத்துக்குத் தாதாபாய் நவ்ரோஜி, ஆர்.சி.தத் முதலியோரால் நகர்ந்தது. இந்தியா என்கிற எங்கள் கனவில் அனைவருக்கும் இடம் என்று மட்டும் சொன்னால் போதுமா? ஆங்கிலேய அரசை எதிர்ப்பது எப்படி? எல்லா இந்தியர்களையும் ஒரே மதம் என்று சொல்லி சேர்க்க முடியாது. அனைவருக்கும் பொதுவான வரலாறு என்று ஒன்றில்லை. மொழி ரீதியாகவும் ஐரோப்பாவை போல ஒன்று திரட்ட முடியாது. தலை சுற்றியிருக்கும் இல்லையா?
 
மொழி, மதம், வர்க்கம் என்றெல்லாம் கிளம்பினால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்குப் புரிந்தது. எல்லா இந்தியர்களையும் பாதிக்கும் ஒன்றை முன்னிறுத்த எண்ணினார்கள். இஸ்லாமிய வியாபாரிகள், ஜாட் விவசாயிகள், பார்சி முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்று அனைவரையும் பாதித்தது காலனியம். ஆங்கிலேய அரசு எப்படித் தன்னுடைய காலனிய ஆட்சியின் மூலம் சுரண்டுகிறது என்பதை எடுத்துரைத்தும், பரப்புரை செய்தும் மக்களை ஒன்று திரட்டினார்கள். காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தைப் பேசியதே அன்றிக் கலாசார தேசியத்தைப் பேசவில்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள் ஆகிய அனைவர்க்கும் அது குரல் கொடுத்தது. வரி விதிப்பு, கட்டணங்கள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் என்று பலவற்றைச் சாடி மக்களை ஒன்று சேர்த்தது.
 
காங்கிரஸ் கனவு கண்ட இந்திய தேசியத்தை இந்துத்வர்கள் மேற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பார்கள். ஆனால், காங்கிரஸ் கனவு கண்ட, பெருமளவில் சாதித்த இந்திய தேசியம் அசலானது. அதற்கு முன் எங்கும் முன்மாதிரி இல்லாதது. ஆச்சரியம் தருவது. இந்துத்வமே உண்மையில் ஐரோப்பிய தேசியத்தின் இறக்குமதி ஆகும். இந்திய தேசியம் ஏன் வளர்ந்தது? அது யாரையும் நீ தேசியவாதி என நிரூபிக்கச் சொல்லவில்லை. ‘தேசபக்தன் என நிரூபிக்க வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தாமலே வளர்ந்த அற்புதம் அது.’ என்பார் சுனில் கில்னானி. எளிமையாகச் சொல்வது என்றால், எது ‘Idea of India?’, ‘No idea/Not one idea’. செக் தேசியவாதி ஜான் மஸர்யக் தேசியம் என்பதில் தேசமே உச்சமான அரசியல் விழுமியம் என்றார். ஆனால், எண்ணற்ற இந்திய தேசியவாதிகள் தேசம் உச்சமான அரசியல் விழுமியம் என்று பேச மறுத்தார்கள். தேசியம் என்கிற வார்த்தையை வரையறை செய்யாமல் காங்கிரஸ் சாமர்த்தியமாக நடந்து கொண்டது.
Image result for srinath raghavan mukul kesavan
 
இந்தத் தேசியம் இஸ்லாமியர்களை இணைத்துக் கொள்ள விடுதலைக்கு முன்னர்த் தவறியது. அது ஆதிக்க ஜாதியினர் பெரும்பாலும் கோலோச்சும் ஒன்றாக இருந்தது. எனினும், இவற்றைத் தாண்டி இந்தத் தேசியம் இந்தியாவை விடுதலைக்குப் பிறகு மதச்சார்பற்ற தேசமாகக் கட்டமைத்தது. தாராளவாதம் மிகுந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைப் பரிசளித்தது. இட ஒதுக்கீடு, சமத்துவம், அனைவருக்கும் வாக்குரிமை என்று பலவற்றை அது கட்டமைத்தது. காங்கிரசின் தேசியத்தின் ஆதிக்க ஜாதி பண்பு, பல்வேறு தரப்பின் கவலைகளைக் கவனிக்காமல் இருந்தது, அதன் போதாமைகளைத் தாண்டி இந்தச் சாதனைகளை அது செய்தது. பல தரப்பையும் ஓரளவுக்காவது அது இணைப்பதை சாதித்தது.
 
ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தின் மூலம் மக்களைத் திரட்டிய காங்கிரஸ் அவர்கள் நாட்டை விட்டு விலகியதும் சவால்களை எதிர்கொண்டது. மக்களை ஒன்றிணைத்த ஆங்கிலேய எதிர்ப்பு விடுதலையோடு முடிந்து போயிருந்தது. எல்லா மக்களுக்கும் பயன் தரும் ஆரம்பக்கல்வியைப் பற்றியோ, விவசாயிகளுக்கு உதவக்கூடிய நில சீர்திருத்தங்கள் குறித்தோ காங்கிரஸ் கவலை கொள்ளவில்லை. அதன் கனவுகள் மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதாக இருந்தது. சோட்டு ராம், சரண் சிங் முதலியோர் எப்படி இந்தியா நகர்ப்புற இந்தியா, கிராமங்களின் இந்தியா என்று பிளவுபட்டு நிற்கிறது எனச் சுட்டிக்காட்டி போராடினார்கள்.
 
ராம் மனோகர் லோகியா, பெரியார் ஆகியோர் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோருக்கு குரல் கொடுத்தார்கள். லோகியா பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கனவு கண்டார்.
எமெர்ஜென்சி இந்துத்துவர்களை அரசியல் மையத்துக்குக் கொண்டு வந்தது. அந்தப் பிளவுபடுத்தும் தேசியத்திற்கான மாற்றான காங்கிரஸ் தேசியம் நேருவுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் அரித்துக்கொண்டே போனது. முகுல் கேசவன் வரியில் சொல்வது என்றால், முன்னையது பட்டவர்த்தனமாக மதவாதம் போற்றுவது, காங்கிரஸோ சமயம், சந்தர்ப்பம் பார்த்து மதவாதத்தைப் பற்றிக்கொள்வது.
Image result for periyar lohia
 
இவற்றுக்கு மாற்றாக எழுந்திருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள் குரல்கள் வடக்கில் வெற்றி பெறவேவில்லை. ஸ்ரீநாத் ராகவன் தெற்கில் காங்கிரஸ், பாஜக அல்லாத வெற்றியை திமுக, அதிமுகச் சாதித்ததன் காரணம் அவை ஆட்சியில் இருந்த போது மக்கள் நலனுக்குத் தங்களால் ஆனதை செய்து காட்டியும் உள்ளன, இது வடக்கில் நிகழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
 
காங்கிரஸ் கனவு கண்ட தேசியம் தன்னிடம் பதில் இல்லாத கேள்விகளைத் தள்ளிப்போட்டது. எது தேசிய மொழி என்கிற கேள்விக்கு விடுதலைக்கு முன்னால் இந்துஸ்தானி மொழி என்றது தேசியம். அதுவும் பாரசீக, தேவநாகரி வரிவடிவங்கள் என இரண்டிலும் இடம்பெறும் என வாக்குத் தந்தது. விடுதலைக்குப் பின்னால் பிரிவினையைக் காரணம் காட்டி பாரசீக வரிவடிவத்தைக் கைவிட்டது. அதோடு நில்லாமல் உருது மொழியைக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. இந்தியை பின்னர் வந்தவர்கள் திணிப்பதற்கான வேர்கள் சமரசம் என்கிற பெயரில் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஊன்றப்பட்டன.
Image result for symbols of indian nationalism'
தேசிய கொடி கிட்டத்தட்ட விடுதலைக்குப் போராடிய காங்கிரசின் கொடி. அதில் அசோக சக்கரத்தை பதித்து அதற்குப் புதுப் பொருள் தரப்பட்டது. தேசிய கீதத்தை பெரும்பான்மைவாதிகள்
விடுதலைக்கு முன்னர்க் கடுமையாக எதிர்த்தார்கள். விடுதலைப்போரில் அவர்களுக்குத் தொடர்பே இல்லை. எனினும், இன்று தேசியத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். அவர்களின் பிளவுபடுத்தும் கனவுகளை நிராகரித்த தலைவர்களை உரிமை கொண்டாடுகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய கனவுகளின் மீது எழுந்த தேசியத்தை ஒற்றைப்படையான பார்வை தனதாக்க பார்க்கிறது. போதுமான அளவில் இல்லை என்றாலும், தன்னளவில் அனைவரையும் இணைத்துக் கொள்ள முயன்ற தேசியம் குறித்துப் பேசுவோர் இல்லை. இப்போது முகுல் கேசவனின் வரிகளை மீண்டும் படியுங்கள், ‘ ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ தேசியத்தைப் பெரும்பான்மைவாதத்தோடு தொடர்புபடுத்திகொள்வதால் நிகழ்வது அதுவே தேசியம் என அங்கீகரிப்பது தான்!
 
உதவியவை:
 
Secular Common Sense
 
Mukul Kesavan’s writings on Nationalism
 
Idea of India
 

பெரியார் – நூல்கள், கட்டுரைகள், புத்தகங்கள்


 பெரியாரின் பிறந்தநாள் இன்று.
தமிழகத்தின் சமூக, அரசியல் பரப்பை மாற்றிப்போட்ட தந்தை பெரியார் எனும் பேராளுமையை புரிந்து கொள்ள, அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தாக்கம் குறித்து உணர இந்த பட்டியல் உதவும். இதில் மின்னூல்கள், ஆங்கில கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என அனைத்தும் அடக்கம்.

*பெரியாரைப் புரிந்துகொள்வோம்*
Image may contain: 1 person, sitting
*Understanding Periyar*

————————–

*நூல்கள்*

பெரியார் இன்றும் என்றும் – விடியல்
https://goo.gl/jrKQRT

பெரியார்: சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா – விடியல்
https://goo.gl/gKbDoS

பெரியார் – அ.மார்க்ஸ்
https://goo.gl/pGHfyU

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு – http://dvkperiyar.com/?page_id=17544

பெரியார் மின்னூல்கள் பெருந்தொகுப்பு:http://dvkperiyar.com/?page_id=17518

இதில் சில நூல்களின் சுட்டிகள் கிடைக்கும்
https://goo.gl/KuyrRA

————————–

*எளிய அறிமுகத்திற்கு சில கட்டுரைகள்*

பெரியார் என்றொரு கலகக்காரர் – கே.ஏ. அப்பாஸ்
https://goo.gl/m1f3Ci

ஏனெனில், அவர் பெரியார்! – ப.திருமாவேலன்
https://goo.gl/x23CQ8

பெரியார் எனும் கல்வியாளர்! – பூ. மணிமாறன்
https://goo.gl/fkH6V5

பெரியார் களஞ்சியம் – https://goo.gl/JZFP6C

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! (Translation of Sunil Khilnani’s ‘Sniper Of Sacred Cows’)
https://goo.gl/BKDYfX

Sniper Of Sacred Cows – Sunil Khilnani
https://goo.gl/bg5zEj

‘Periyar was against Brahminism, not Brahmins’ – Gnana Rajasekharan IAS
https://goo.gl/RGdujg

Why Periyar would have led today’s ‘anti-nationals’ – Manu S Pillai
https://goo.gl/JboJq9

Ambedkar and Periyar’s intellectual comradeship – V. Geetha
https://goo.gl/3vRHRE

A Lesson from Periyar on the Tension Between Elections and Social Transformation – A.R. Venkatachalapathy
https://goo.gl/oFjgsu

Footprints Of The Original ‘Anti-Nationals’ – A.R. Venkatachalapathy
https://goo.gl/5QhTZ9

Iconoclast, Or Lost Idol? – S. Anand
https://goo.gl/rBgKN4

*Interview with S.V. Rajadurai and V. Geetha:*

Part 1: Periyar’s ideals and today’s Tamil Nadu
https://goo.gl/mKowXz

Part 2: Periyar and Dalits
https://goo.gl/r684rn

Part 3: Ambedkar and Gandhi in Periyar’s mind
https://goo.gl/QdDLKX

———————————–

*பரந்துபட்ட புரிதலுக்கு*

காந்தியின் மறைவு குறித்து பெரியார்
http://on.fb.me/1eOPGj5

பெரியார் – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
http://on.fb.me/19xGD97

சினிமா, நாடகம் – பெரியார்
http://on.fb.me/16sdQ3w

பெரியார் – ஜெயகாந்தன்
http://on.fb.me/1cSbvS1

Periyar on the Constitution
http://on.fb.me/19xMefv

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
http://on.fb.me/1b8vE2V

குடிஅரசு தொகுப்பு 1925- 1938
http://bit.ly/1cKzbJ4

பெரியார் களஞ்சியம் பெரியார் சிந்தனைகள்
http://bit.ly/14SBkMY

பெரியார் – போஸ்
http://on.fb.me/1ackNaq

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்
http://on.fb.me/14n5wwe

பெரியாரின் மரண சாசனம்
http://on.fb.me/1b8vE2V

பெரியார்: கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்
http://on.fb.me/14IGbfx

காமராசர் – பெரியார்
http://on.fb.me/16VAq2T

பெரியார் பெயர் வந்தது எப்படி?
http://on.fb.me/1cUfzBk

பெரியார் பிற மதங்களை விமர்சிக்கவில்லையா?
http://on.fb.me/15lCcFU

புத்தர் – பெரியார்
http://on.fb.me/17TJVwL

குருகுலப் போராட்டம்
http://on.fb.me/12cB9uT

நேரு – பெரியார் கார்ட்டூன்
http://on.fb.me/17TKczA

சூத்திரர்கள்
http://on.fb.me/1eRmRm1

இலங்கை உபன்யாசம் குடி அரசு 20.11.1932
http://on.fb.me/14Y2WQX

வன்னியர் சங்க மாநாட்டில் பெரியார்
http://on.fb.me/16ZZ9TH

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
http://on.fb.me/16CXsx9

சாதி ஒழிப்புக்கு பெரியார் தரும் திட்டங்கள்
http://on.fb.me/1cUh9UQ

பட்டியல் சாதி – பெரியார்
http://on.fb.me/17Y5XhJ

Ambedkar’s Resignation
http://on.fb.me/16WQM9w

பெரியாரும் – மதுவிலக்கும்
http://on.fb.me/13UzJD9

கீழவெண்மணி
http://on.fb.me/1dxmUFL

முதுகுளத்தூர் கலவரம் – பெரியார்
http://on.fb.me/13UAnjT

விநாயகர்சதுர்த்தி – பெரியார்
http://on.fb.me/1atyG5m

பறைச்சி-ரவிக்கை
http://on.fb.me/15QEbaa

மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்குதல்
http://on.fb.me/15odTsq

காந்தியின் கடவுள்
http://on.fb.me/18Rx5Vx

இந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்
http://on.fb.me/18myzTN

ஜகதீச சந்திரபோஸ் காந்தியின் விரோதியா?
http://on.fb.me/18myBLl

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
http://on.fb.me/18RxKpU