‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின் பாயிரத்தில் உள்ளது . பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர். கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார். தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக நூலிற்கு ஆங்கிலம், தமிழ் என்று இரு மொழிகளிலும் முன்னுரை எழுதியுள்ளார்.

தன்னுடைய முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது” என்று வருந்துகிறார்.

பாயிரத்தில் ‘தமிழ் தெய்வ வணக்கம்’ என்று தமிழை தெய்வமாக போற்றிப் பரவுகிறார். கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில் தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு என்று பலவாறு போற்றுகிறார். இப்பாடலில் வழங்கி வரும் முதன்மையான கருத்துகள் என்று சிலவற்றைப் பேராசிரியர் கைலாசபதி அடையாளப்படுத்துகிறார். அவை,
(அ) இந்திய நாட்டில் தெக்கணம் திலகமாகத் திகழும் பகுதி.
(ஆ) திராவிடம் முதன்மையான சிறப்புமிக்கதாகும்
(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும் புகழும், பெருமையும் மிக்கது
(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை போன்றது தமிழ்
(உ) தமிழே திராவிட மொழிகளுக்கு தாய்
(ஊ) ஆரியம் போல் வழக்கழியாமல் சீரிளமை மிக்க மொழியாகத் தமிழ் திகழ்கிறது
“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”
‘நீராருங் கடலுடுத்த’ எனும் துவங்கும் இப்பாடல் முந்தைய தமிழ் படைப்புகளில் இருந்து பல வகைகளில் வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில் புதிய பாய்ச்சலுக்கு அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின் பார்வையில் தமிழ்த்தேசியத்திற்கான முன்னோடிப் பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர் பிரேர்னா சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர் நலனும் கைகோர்க்கும் இடம் என்கிறார். தமிழ்த்தாயின் உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர் சுமதி ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார் கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.
அவ்வரிகள்,
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.“
இப்பாடலுக்கு பிறகே தமிழைத் தாயாக, தெய்வமாக போற்றிப்பரவுவது பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற பாடல்கள் தமிழன்னையை போற்றி பாடப்பட்டன. இவற்றுக்கான முதல் வித்து ‘தமிழ்த்தெய்வ வணக்கம்’ ஆகும்.

கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய மூன்றாம் ஆண்டறிக்கையை 1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப் பற்றி பேசுகிறது:
‘பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’ என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை ஆய்வாளர் கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார்.

இப்பாடல் படிகளை கரந்தை தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த உமாமகேசுவரனார் பல நூறு பிரதிகள் அச்சிட்டு கொண்டு சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும் பாடப்பட்டது. பல்வேறு தமிழ்ச்சங்க கூட்டங்களில் இப்பாடல் ஒலித்தது. தனித்தமிழ் மாநாடுகளில் தவறாமல் இடம்பெற்றது. .தனித்தமிழ் மாநாடுகள், பாடநூல்களில் இடம்பெற்றது. தனிநாயகம் அடிகள் “இப்பாடலின் வரிகள் கடந்த அறுபது ஆண்டுகளாக எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான பாடல் எனும் அதன் பெருமையை விஞ்சும் படைப்பு எதுவுமில்லை” என்று 1963-ல் புகழ்ந்தார்.
இப்பாடலை தமிழக அரசு அனைவரும் பாடும்வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் அறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா இயற்கை எய்திவிட, கலைஞர் கருணாநிதி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
கரந்தைத் தமிழ்ச்சங்க விழாக்களிலேயே முதல் ஆறு வரிகள் மட்டுமே பாடப்பட்டு வந்தன என்பதை சுட்டிக்காட்டுகிறார் கரந்தை ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான விருதளிப்பு விழாவில் தமிழ்நாட்டின் வழிபாட்டுப் பாடலாக ‘நீராருங் கடலுடுத்த’ அமையும் என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

பிற மொழிகளை தாழ்த்திப் பேசும் வரிகளைத் தவிர்த்து பாடலை அமைத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். ஆரியம் போல் வழக்கழிந்து முதலிய வரிகளும் சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வழக்கத்தை அடியொற்றியே இப்பாடல் வரிகள் அமைந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை தமிழ்நாட்டின் வழிபாட்டுப் பாடலாக ஆக்கிய அரசாணையை கூர்ந்து நோக்கினால் இன்னொன்றும் புலப்படும்.
ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 1393-ல் தமிழ்நாடு முழுமைக்கும் பொதுவாக வழிபாட்டுப் பாடல் அமையும் வண்ணமே ‘நீராருங் கடலுடுத்த ‘ இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட நம்பிக்கையோடு’ தொடர்புடையதாக இல்லாத வண்ணம் இப்பாடல் இருக்குமாறு அமைந்திருப்பதாகவும் அரசாணையில் சொல்லப்பட்டு இருந்தது. பல்வேறு தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளில் இந்து மதப் பாடல்களும், வடமொழி,தெலுங்கு பாடல்களும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த போது இந்த அறிவிப்பு அவற்றை மாற்றியது. மேலும், பாயிரத்தில் உள்ள சிவனைப்பற்றிய குறிப்பு இடம்பெறாமல் போனதையும், ‘தமிழ்த்தெய்வ வணக்கம்’ ஆனது ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ மாறியதையும் மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )
மேற்சொன்ன அரசாணையை ஒட்டி 23 நவம்பர் 1970-ல் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ வழிபாட்டுப்பாடலாக விழாக்களின் துவக்கத்தில் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்பாடல் மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் இசைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

காஞ்சி மடாதிபதி விஜேயந்திரர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்ட போது கண்மூடி அமர்ந்து இருந்தார். இதனையடுத்து கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி மடத்தின் கிளையில் நுழைந்தார். அதற்கு மட மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை கண் இளங்கோ மிரட்டியதாக . மடத்தின் மேலாளர் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக தன்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை கண் இளங்கோ நாடினார்.
இவ்வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்குறிப்பிட்ட இரண்டு அரசாணைகள் 1393, 3584/70-4 ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ வழிபாட்டுப் பாடலாகவே இந்த அரசாணைகள் வரையறுத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய் வாழ்த்து வழிபாட்டுப்பாடல், அது, கீதம் அன்று”. என்று குறிப்பிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தச் சட்டமும், அரசாணையும் இல்லை என்பதையும் அத்தீர்ப்பில் கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உச்சபட்ச மரியாதையும், மதிப்பும் தரவேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது கூட்டத்தினர் எழுந்து நிற்பது மரபாக இருக்கிறது என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில் தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும். பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் நாம் கொண்டாடும் போது, ஒரே வழியில் தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது போலித்தனமானது. …..
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி எளிய வாழ்வினையே வாழ்கிறார்.அவர் வழிபாட்டில் ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான நிலையில் இருப்பார். தமிழ்த்தாய் வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால் சந்நியாசி தியான நிலையில் அமர்ந்து இருப்பது நிச்சயம் நியாயமானது. இந்த நிகழ்வில், மடாதிபதி தியான நிலையில் அமர்ந்து கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும் செலுத்தும் விதமாகும்.” என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்தின் தோற்றம், வளர்ச்சி, அதனை அரசு நிகழ்ச்சிகளில் விழாவின் துவக்கத்தில் பாடவேண்டும் என்று ஆணையிட்ட அரசாணைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு விலக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சான்றுகள்/ உதவியவை :
1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm
2. மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் – பேராசிரியர் அ கா பெருமாள்
3. நீராருங் கடலுடுத்த – கரந்தை ஜெயக்குமார்
4. ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam
5. ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy
6. தமிழ்நாடு அரசாணை நிலை எண் 1393, பொதுத் (அரசியல்) துறை, 17.06.1970
7. தமிழ்நாடு அரசாணை எண் 3584/70-4, 23.11.1970
8. தமிழ்நாடு அரசாணை நிலை எண் 1037, 17.12.2021
9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296
10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy
11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725
12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123
13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021