அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’


‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்


‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்.

‘நீ வேதங்களுக்கு முன்பே இங்கிருந்தாய்’

 

நீ வேதம் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய்

இறைவன் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய்

அச்சுறுத்தும் பொருள்சார் உலகினை

பெருவலியோடும், பதற்றத்தோடும் பார்த்துக்கொண்டே இருந்தாய்

உன் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்தாய்

அந்தத் துதிகள் வேத வரிகள் ஆகின

நீயே எல்லாத் தெய்வங்களின் பிறப்பையும் கொண்டாடி, அவர்களுக்குப் பெயரிட்டாய் …. ‘

-பாபுராவ் பாகுல்

‘தலித் இலக்கியம் என்பது பழிவாங்கல் இலக்கியம் அல்ல. அது வெறுப்பைப் பரப்பவில்லை. அது மானுட மேன்மையை, மனிதகுல விடுதலையை வளர்த்தெடுக்கிறது. ஆகவே. தலித் இலக்கியம் வரலாற்றுத் தேவை’ – 1973ல் பாபுராவ் பாகுல்.

பாபுராவ் பாகுல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு போர் மகாராஷ்டிராவில் உச்சம் பெறத்துவங்கிய காலத்தில் பிறந்தார். அவர் வாழ்ந்த மாதுங்கா காலனியில் சாக்கடை நீர் தேங்கி நிற்கும். ஒதுங்க கூட இல்லாமல் மக்கள் நெருக்கிக்கொண்டு வாழவேண்டிய அளவுக்கு இடப்பற்றாக்குறை. அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத கொடிய அவநம்பிக்கை தரும் வாழ்க்கை. இருளும், நிச்சயமின்மையும் மட்டுமே அம்பேத்கரின் இயக்க அலுவலகமும், இடதுசாரிகளின் தொடர்பும் பாபுராவ் பாகுலை இலக்கியப் பெருநெருப்பாக உருமாற்றின.

தலித் மக்கள், குரலற்றவர்கள், பெண்கள், வேசிகள், குற்றவாளிகள் எனப் பலரின் அக உலகையும், சாதியும், வன்மமும் தரும் பதைபதைப்பும் அவரின் எழுத்துக்களில் இலக்கியமாகின. அவருடைய ‘When I Hid My Caste’ என்கிற மராத்தி சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை படித்து முடித்தேன். அவரின் ஆரம்பக் காலக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. நுண்மையான விவரிப்புகள், உரையாடல்கள் வழியாக மாந்தர்களைக் கண்முன் நிறுத்துவது, அவ்வப்போது எழுத்தில் இழையும் அமைதி பலவற்றைக் கடத்துவது என்று ஒரு தனித்த அனுபவமாக இந்தக் கதைகளோடு வாழ முடிந்தது.

தசரா கொண்டாட்டத்தின் போது எருமை வேட்டை ஒன்று நிகழ்கிறது. அதில் அத்தனை போராட்டம், வேதனை, உயிரிழப்பும் தலித்துகளுக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வெற்றியும், மாலையும் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவருக்குப் போய்ச் சேருகிறது. Sacrifice என்று தலைப்பிடப்பட்ட இக்கதையைத் தமிழில் பலி என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகளில் மனுவை நோக்கி எதிர்க்குரல்கள் எழுப்பப்படுகின்றன. அவையே தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளாக அமைவது விபத்தில்லை. ‘என் சாதியை மறைத்துக் கொண்ட போது’ கதையின் நாயகன் கவிஞன். ‘தீண்டப்படாதவன் என்கிறீர்கள். சூரியன் தீண்டப்படாதவன். அக்னியும் தீண்டப்படாதவன்’ என்று அவன் பெருக்கெடுத்துப் பேசுகிறான். தன்னுடைய சாதியை மறைத்துக்கொண்டு வாழ்கிறார். அவரின் சாதி தெரியவருகிற போது, அடித்துத் துவைக்கிறார்கள். துளிக்கண்ணீர் சொட்டவில்லை. அவருடைய நிலையைப் பார்த்து, இழைக்கப்படும் அநீதியால் உறைந்து போய் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பெண்ணின் கண்ணீர் துளிகள் அவர் பாதங்களைத் தொடுகின்றன. மனுதானே என்னை அடிக்கிறான் என்று நாயகன் எண்ணிக்கொண்டு அழாமல் நிற்கிறான். சொல்லாமல் பலவற்றைச் சொல்கிற தருணம் அது.

போஹடா என்கிற பண்டிகையின் போது தானே நரசிம்ம வேடம் பூண்டு தாண்டவம் புரிவேன் என்று மகர் ஒருவர் கேட்கிறார். பல நூறு ரூபாய் தொகை தேவைப்படும் என்கிறார்கள். ஏலம் நடக்கிறது. அந்த இளைஞரே ஏலத்தில் வெற்றி பெறுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்தாண்டு முதல் இந்த விழாவே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது. அடையாளங்களுக்குள் சமத்துவத்துக்கான தேடல் எப்படி முடிகிறது என்பதை முகத்தில் அறையாமல் அறைந்து சொல்கிறது.

பாலியல் தொழில் புரிய நேரிடும் மராட்டா சாதியை சேர்ந்த பெண் மீது அளவற்ற அன்பை ஒரு இளைஞன் பொழிகிறான். வினாக்கள் இல்லாமல் அவளோடு உடன் நிற்கிறான். திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவன் கேட்கிற போது, ‘நீ என்ன சாதி’ என்று நாயகி கேட்கிறாள். ‘நான் அன்பை தானே அளவில்லாமல் தந்தேன். கேட்ட போதெல்லாம் எந்த வினாக்களும் இன்றிப் பணம் தந்தேன். என்னுடைய செயல்களைக் கொண்டு என்னை அறிய முனையாமல் என் சாதியை ஏன் தேடுகிறாய்?’ என்று வேதனையோடு கேட்டு அந்நாயகன் மறைகிறான். சாதியின் கொடுவாள் தீண்டலில் மரிக்கும் அன்பு தான் எத்தனை எத்தனை?

தேவதாசியாகச் சமூகத்தால் மாற்றப்படும் தலித் பெண்கள் குறித்து ஆதிக்கச் சாதிப் பெண்கள் கூட அக்கறை செலுத்த மறுப்பதை ‘இருளின் கைதிகள்’ கதை இயல்பாகச் சொல்லிச்செல்கிறது. பாலினத்தை விடச் சாதி அரசியலே வெல்கிறது என்பதன் சாட்சியம் அக்கதை. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் உருவத்தின் குறைகளுக்காகக் கொடுமைப்படுத்தப்படும் பெண்ணின் வலியை, கண்ணீரை, துயரை ‘pesuk’ என்கிற கதையில் மயக்கும் கதை சொல்லல் முறையில் கடத்தப்படுகிறது.

துளி கூட இரக்கம், அன்பு மறுக்கப்பட்டு பாலியல் தொழிலாளியாக வாழத்ததலைப்பட்ட  பெண். அவளின் மகன், பிணந்தின்னியாக சுற்றும் ஆண்கள், ஊற்றெடுக்கும் தாய்மை, பின்னி எடுக்கும் உடற்பிணி, இறுதி வரை சமூகம் கேட்க மறுக்கும் அவளின் அழுகுரல் உலுக்கி எடுக்கிறது.

மலமள்ளும் தொழில் செய்ய மறுத்து கல்வியைப் பற்றிக்கொள்ள முயலும் நாயகனின் கதையான ‘revolt’ இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை. நாயகன் கல்லூரி போய்ப் படிக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறான். குடும்பத்தைக் காப்பாற்ற மலம் அள்ளப்போ என்று அப்பாவும், அம்மாவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

“நான் ஏன் மலம் அள்ள வேண்டும்? என் படிப்பை விட்டுவிட்டு இந்த ஊரின் அழுக்கை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டுமா? இவர்களின் கழிசடைகளை என் தலையில் தூக்கி சும்மக்க வேண்டுமா/ இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றால் என்னை ஏன் படிக்க வைத்தீர்கள்? என் இதயத்தில் விடுதலை, அறிவு, மானுடச்சுடர்களை ஏன் பற்றி எரிய வைத்தீர்கள்” என்று கதறுகிறான்.

“எங்கே ஒரு மலம் அள்ளுபவனின் மகனே மலம் அள்ள வேண்டும் என்று எங்கே விதித்து இருக்கிறது?” எனக்கேட்கிறான்.

“நம்முடைய வறுமையில் விதித்து இருக்கிறது. நம்முடைய தர்மத்தில் விதித்து இருக்கிறது. நம் நாட்டில் விதித்து இருக்கிறது” என்கிறார் அம்மா.

“எது தர்மம்? ஒரு மனிதனை நொறுக்கிப்போட்டு, அவனை மிருகமாக மாற்றுவதுதான் தர்மமா? மனிதனை மறந்து வெறும் சிலைகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாட்டின் தர்மம் தானே இது? இந்தத் தர்மத்திற்கு நான் கட்டுப்பட மாட்டேன். வறுமை, கொடுமை ஆகியவற்றை மட்டுமே தரும் இந்தத் தர்மத்தை நிராகரிக்கிறேன்…”என்கிறான்

“என் விரல்களை உடையுங்கள். என் கரங்களை முறித்துப் போடுங்கள். என் உடலை கிழித்துப் போடுங்கள். நான் இந்த வேலையைச் செய்ய மாட்டேன் ” என்கிற கதறல் கண்டுகொள்ளப்படாமல் அவன் மலம் அள்ள அனுப்பப்படுகிறான்.

அங்கே இவனுக்கும், இன்னொரு தலித்துக்கும் சண்டை முற்றுகிறது. அடித்துப் புரள்கிறார்கள். ஊரின் மலத்தையே அள்ளும் இவர்களின் துயரம் தட்டிப்போன உடம்பை தொடக்கூட விரும்பாமல் ஊரே தள்ளி நிற்கிறது. மனு சிரித்தபடி நிற்கிறான்.

சாதியை மறைத்துக் கொண்ட போது நமக்குள் இறுகிப்போயிருக்கும் சாதிய வன்மத்தை, கேடுகளை உலுக்குகிறது. கதைகளின் மூலம் கசடுகளைக் கடக்கத் தூண்டுகிறது.

When I Hid My Caste, Baburao Bagul

ஆங்கிலத்தில்: ஜெர்ரி பின்ட்டோ

Speaking Tiger Books.

மெய்ப்பொய்கை – பேசப்படாத பாலியல் பெண்களின் துயரம்!


ருச்சிரா குப்தா தொகுத்த ‘River Of Flesh’நூலை வாசித்து  முடித்தேன். இந்நூல் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும், அதில் ஈடுபடும் பெண்களின் உலகத்தைப் பன்னிரெண்டு மொழிகளில் வெளிவந்த 21 சிறுகதைகளின் மூலம் கண்முன் நிறுத்துகிறது. முன்னுரையில் பேராசிரியர் ருச்சிரா எழுப்பும் கேள்விகள் மனதை உலுக்குபவை. பாலியல் தொழில் என்பது கல்லூரி பெண்கள் நுகர்வு வெறிக்காக மேற்கொள்வது என்றும், அதுவும் ரத்தத்தை உறிஞ்சும் தொழில்கள், கொடுமைக்கார திருமணங்கள் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு தரவும் பாலியல் தொழில் பயன்படுகிறது என்கிற தொனியில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், கள நிலவரம் வேறானது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அடிப்படைத்தேவைகளுக்கே அல்லாடுகிறார்கள். கடனில் சிக்கி இறுதிவரை வெளிவர முடியாமலே இறந்து போகிற பெண்கள் பலர். ஆனால், அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர்கள், உறவுக்காரர்கள் பெரும்பணம் ஈட்டுகிறார்கள். 9-13 வயதுக்குள் பெண்கள் இதற்குள் தள்ளப்படுகிறார்கள். கண்ணில் ரத்தம் வரவைக்கும் முறைகளைக்கொண்டு அவர்களைப் பருவம் எய்த வைக்கிறார்கள். அடித்தும், பட்டினி போட்டும், போதை மருந்துகள் கொடுத்தும் அவர்கள் காலத்துக்கும் பாலியல் தொழிலேயெ உழல வைக்கப்படுகிறார்கள்.

தூக்கமின்மை, உடற்பிணி அவர்களைப் பிடுங்கி தின்கிறது. சமீபத்திய ஆய்வுகள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையால் ஏற்படும் உடல், மனரீதியான பாதிப்புகள் போர்க்களத்தில் வீரர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை விட மோசமானவை என நிறுவுகின்றன. இவர்களின் உலகை வெவ்வேறு சிறுகதைகளின் மூலம் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளும் முயற்சியே இத்தொகுப்பு என்கிறார் ருச்சிரா குப்தா.

கமலா தாஸின் கதையில் பலதரப்பட்ட பெண்களும், ஆண்களும்,குழந்தைகளும் நடமாடுகிறார்கள். பாலியல் வேட்கை மிகுந்த ஆணுக்குள் எட்டிப்பார்க்கும் தந்தையின் பிரியம் சில வரிகளில் கடத்தப்படுகிறது. மோகத்தின் வெம்மையில் போலி வாக்குறுதி தந்து பெண்ணின் மனதை உருக்குலைக்கும் இளைஞன் ஒருவன் கடந்து வந்த பல முகங்களை நினைவுபடுத்துகிறான். 

Image may contain: text

பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் தாய்மார்களின் பதைபதைக்க வைக்கும் வாழ்க்கையை இரு கதைகள் கண்முன் நிறுத்துகின்றன. அதிலும் நாயனா அட்டர்கரின் கொங்கனி கதையில் குழந்தை காலடியில் அழுது கொண்டிருக்க, ஆடவன் ஒருவன் அக்குழந்தையின் அன்னையோடு புணர்ந்தபடி இருக்கிறான். அவனின் மோகத்திற்கும், குழந்தையின் கதறலுக்கும் இடையே தவிக்கும் அந்தத் தாயை போல எத்தனை அன்னைகள்?

ஆண் வெறுப்பு மட்டுமே கதைகளின் மையமில்லை. அப்பெண்களின் உலகின் அன்பும், கனிவும், தயக்கங்களும், துயர்களும் அழகியலோடு கடத்தப்படும் கதைகள் அநேகம். பிபூதிபுஷன் பண்டோபாத்தியாயா கதையில் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் சூழல் எந்தப் பரப்புரையும் இல்லாமல் புரிய வைக்கப்படுகிறது. ஒரு பிராமணச் சிறுவனுக்கு அன்போடு தீண்டாமைக்கும், சாதி கட்டுப்பாடுகளுக்கும் பயந்து கொண்டே தின்பண்டங்கள் கொடுத்து அன்பை பொழியும் பெண்கள் நெகிழ வைக்கிறார்கள். முப்பது வருடங்கள் கழித்து அவர்களைச் சந்திக்கும் கணத்தை இப்படிக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்:

‘எனக்கு ஞாபகம் இருக்கு. அந்தப் பைத்தியக்கார வாண்டு பிராமணப் பையன் தானே நீ. எப்படி வளந்துட்டே? அம்மா அப்பாலாம் உயிரோட இருக்காங்களா?’
‘யாரும் உயிரோட இல்லை’
‘எத்தனை பசங்க’
‘அஞ்சு பேரு’
‘உட்காரு ஐயா. இங்கே உக்காரு. இந்தா வந்துடறேன்.’

அந்தப் பெண் திரும்புகையில் என்ன தந்தாள், அவனின் முகம் மறந்து போயிருந்தாலும் பேரன்பை எப்படிப் பத்திரப்படுத்தித் தந்தாள் என்பவை எல்லாம் அற்புத கணங்கள்.

மான்டோவின் கதையில் வரும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்ணின் கெஞ்சலும், அவள் தலைக்கு மேலே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் நூறு மெழுகுவர்த்தி வெளிச்சமும் பரிதாபத்தைக் கோரவில்லை. தூக்கம் தொலைத்து தரகர்களுக்குப் பணம் ஈட்டித்தரும் அடிமையாக மாற்றப்பட்டாலும் தன்னைப் பார்த்து யாரும் இரக்கப்படுவதற்கு அவள் அனுமதிக்கவில்லை. தூக்கத்திற்காக, நிம்மதிக்காக அலையும் அவள் கதையின் இறுதியில் செய்யும் செயலும், கொள்ளும் பேருறக்கமும் அதிர வைக்கும்.

கமலேஸ்வரின் இந்தி கதையில் வருகிற நாயகி தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய மருத்துவச் செலவுகளுக்காக வாங்கிய கடனை எப்படியாவது அடைத்து விடுவது என உறுதியோடு இருக்கிறாள். உயிரை எடுக்கும் வலியிலும் தன்னை நாடிவரும் தோழனுக்கு இன்பம் தர முயலும் அவளின் கரிசனம் கலங்க வைக்கிறது. அக்கதையின் இவ்வரிகள் எத்தனை ஆழமானவை?:

ஆயிரம் ஆண்கள் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால், தன்னுடைய மிச்ச வாழ்க்கை முழுக்க அடைக்கலம் தரும் நிழலுடையவர்களாக அவர்கள் யாரும் இருக்கவில்லை.

அவளுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் கடன் வாங்கினாள், ஆனால், அங்கேயும் நம்பிக்கை இல்லை. என்றோ ஒருநாள் காணாமல் போகப்போகும் அவர்களை எப்படி அவளால் நம்ப முடியும்? முதுமை அவளைத் தீண்டியதும் ஆண்கள் அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அவர்களின் குழந்தைகள் வளர்ந்ததும் அவளிடம் வருவதை நிறுத்திக்கொள்வார்கள்….அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கடன் கொடுத்தவர்கள் அவளைக் காண வருவது தான். 

Image result for river of flesh
ருச்சிரா குப்தா, படம் நன்றி: http://speakingtigerbooks.com/books/river-of-flesh-and-other-stories-the-prostituted-women-in-indian-short-fiction/

பிரேம் சந்தின் கதையின் கவித்துவமும், அதில் நிரம்பி வழியும் பேரன்பும், வன்மமும் சொற்களில் அடங்காதவை. ஆண் தன்னுடைய தாபங்களுக்கு ஏற்ப பெண்களை நாடுவது போல, அவனுடைய காதலியும் நாடினால் என்னாகும் எனத் துரிதமாக விவரிக்கும் இக்கதையில் நின்று தரிசிப்பதற்குள் காட்சிகள் கடந்து விடுகின்றன.

குர்அதுல்ஐன் ஹைதரின் கதை முழுக்கப் பழம்பெருமை மிக்க ஒரு பெண்ணே நிறைந்திருக்கிறாள். கதையின் இறுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் இறை நம்பிக்கையுள்ள பெண்ணின் குரல் அத்தனை வலிமிக்கதாக ஒலிக்கிறது:

நம்முடைய செயல்கள் எல்லாம் நியாயத் தீர்ப்பு நாளில் நம்மைப் படைத்தவனால் தீர்ப்பளிக்கப்படும். இந்த மும்பையில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள், எல்லா வகையான விஷயங்கள் இங்கேயும் நடக்கின்றன. …குரானை ஓதி நியாயத்தீர்ப்பு நாளில் எங்களுக்குக் கருணை காட்ட பிரார்த்தனை செய்.

சித்திக் ஆலமின் கதை மாய யதார்த்தவாத பாணியில் பயணித்துக் கிளர்ச்சியாக வாசிப்பு அனுபவத்தைப் பரிசளிக்கிறது. இஸ்மத் சுக்தாயின் கதையில் வரும் நாயகி லஜ்ஜோ கொண்டாட்டத்தின் திரு உரு. அவள் விதிகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டள்ளவள். அவளின் கசடுகளை விட அவளின் விடுதலையும், இன்ப நாட்டமும், குறும்புமே நம்மை நிறைக்கிறது. திருமணத் தளை அவளைக் கட்டிப்போட முயல்கையில் அவள் புரிபவை சுவையானவை. வெறும் ஒப்பாரித்தன்மையோடு தான் அவர்களின் வாழ்க்கை அணுகப்படும் என்கிற பொதுப்பார்வையை உடைத்துப்போடும் மகத்தான உருது சிறுகதை அது.

நபேந்து கோஷின் கதையின் இறுதி வரிகள் பெண்களின் நம்பிக்கையைத் தங்களின் வேட்கைகளுக்காகப் பலியிடும் ஆண்களின் உலகையும், பெண்ணின் வாழ்க்கையையும் சில வரிகளில் நம்முன் நிறுத்தி நகர்கிறது:

அவனைச் சைய்யா சுலபமாக மறக்க மாட்டாள். தீன்காரி தாஸ் என்கிற பல்ராம் சௌத்ரி அவளை அர்ஜுனனாக மயங்கினான். அந்த மயக்கம் அவள் வயிற்றினில் நாளும் வளர்கிறது. அது அவள் கருப்பையை விட்டு வெளிவந்த பின்பும் நாளும் வளரும். அது வளர்ந்து கொண்டே இருக்கும், அவளுடைய இறுதி மூச்சுவரை அவளின் ஆன்மாவை கடித்துக் குதறிக்கொண்டே இருக்கும். பல்ராம் சைய்யாவை மறந்தாலும், அவளால் அவனை மறக்கவே முடியாது.

மனிஷா குல்ஷரேஷ்தாவின் கதை மகன், தாய் ஆகிய இருவரின் குரல்களில் ஒலிக்கிறது. அவனைப் பெற்று, தனியாளாகத் துரோகத்தின் நிழலில் வளர்த்த அன்னையைப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவள் என்பதால் அம்மா என்று அழைக்க மறுத்து மகன் தான் கண்டதை விவரிக்கிறான். அன்னையின் குரல் அவனுக்கு உண்மையைச் சொல்ல மறுக்கிறது. அவனுடைய கேள்விகளுக்கும், முன்முடிவான போலி அறத்துக்கும் அவளின் ஆன்மா அடிபணிய மறுக்கிறது. இக்கதையின் ரகசியத்தை விடவும் அதன் நெருக்கமும், நேர்மையும் மொழிபெயர்ப்பிலும் அப்படியே கடத்தப்பட்டு இருக்கிறது.

மாதுரிமா சின்ஹாவின் கதை நெஞ்சில் அறம் இன்றி, போலித்தன்மை மிக்க மனிதர்கள் பிரியத்தின் சிறு நிழலையாவது கண்டு விட மாட்டோமா எனக் கொடிய வாழ்க்கைக்கு இடையே பரிதவிக்கும் பாலியல் தொழிலில் சிக்குண்டு நிற்கும் பெண்களை ‘மோசமானவர்கள்’ என்கிற அபத்தத்தை எளிய கதையமைப்பில் சாடி செல்கிறார்.

கடிதங்களால் ஆன இரு கதைகள் தொகுப்பை அலங்கரிக்கின்றன. புரியாத மொழியில் இருவரும் எழுதிக்கொள்ளும் கடிதங்களை வாசித்து, பேரன்பை சுவாசித்து, மீண்டும் அவற்றை எழுதியவர்களே எடுத்துச் செல்லும் வலி கண்களைக் கசிய வைக்கிறது. தந்தையின் காதலியை தேடிச்செல்லும் மகளுக்குக் கிடைக்கும் அன்னையின் வாசனை நம் நாசியையும் நிறைக்கிறது.

கிஷன் சந்தரின் கதை பிரிவினை காலத்தில் ஒரு பாலியல் தொழிலாளி ஜின்னா, நேரு இருவருக்கும் எழுதும் கடிதமாக நீள்கிறது. மத வெறி எப்படி இளம் சிறுமிகளின், பெண்களின், குடும்பங்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போடுகிறது என்பதை விட அந்தப் பாலியல் தொழிலாளியின் கடிதத்தின் இரு பத்திகள் சூடுபவை. அவற்றோடு நம்மை உலுக்கும், இன்னமும் கரிசனத்தோடு, கவலையோடு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்களை அணுகும் இந்தச் சிறுகதை தொகுப்பின் அறிமுகத்தை முடிக்கலாம்:

“கொடுமைக்கார முஸ்லீம்கள் பேலாவின் அம்மாவுடைய மார்பகங்களை அறுத்து எறிந்தார்கள். ஒரு அன்னையின் மார்பகங்கள் தன்னுடைய பிள்ளை இந்துவா,முஸ்லீமா, சீக்கியனா, யூதனா எனப்பார்க்காமல் பசி தீர்க்க பாலூட்டுகிறது. உலகத்தின் அகன்ற பரப்பினில் படைப்பின் புதிய அத்தியாயத்தை அது கொண்டு வருகிறது. இந்தப் பால் கசியும் மார்பகங்களை அல்லா உ அக்பர் என உச்சரிக்கும் மக்களே வெட்டினார்கள். அறியாமை அவர்களின் ஆன்மாவை கருத்த நஞ்சால் நிறைத்து விட்டது. நான் புனித குரானை வாசித்து இருக்கிறேன். பேலாவின் பெற்றோருக்கு ராவல்பிண்டியில் நிகழ்த்தப்பட்டவற்றை இஸ்லாம் ஒன்றும் கற்பிக்கவில்லை என எனக்குத் தெரியும். அது மனிதமும் இல்லை, பகைமையும் இல்லை, பழிவாங்கலும் இல்லை. அது மிருகத்தனமான, கோழைத்தனமான, கொடூரமிகுந்த, சாத்தானை ஒத்த செயல். அது இருளின் நெஞ்சத்தில் இருந்து வெளிப்பட்டுக் கடைசிக் கீற்று நம்பிக்கையையும் கறைப்படுத்தி விட்டது.’
———————————————————————————————————-
ரெஹனா, மர்ஜானா, சூசன் பேகம் அவர்களின் தந்தையின் பிணத்தின் முன்னால் ஒவ்வொருவராக வன்புணர்வு செய்யப்பட்டார்கள். தங்களுக்குத் தாலாட்டு பாடிய, கண்ணியம், பக்தி, வெட்கத்தோடு தங்கள் முன் தலைகுனிந்து நடந்த அம்மாக்களை, சகோதரிகளை வன்புணர்வு செய்தார்கள் அந்த ஆண்கள்.

இந்து மதத்தின் புனிதம் பறிபோனது. அதன் அறங்கள், நம்பிக்கைகள் அழிக்கப்பட்டன. இப்போது அமைதி மட்டுமே நிலவுகிறது. க்ராந்த் சாஹிபின் ஒவ்வொரு வரியும் அவமானப்பட்டு இருக்கிறது. கீதையின் ஒவ்வொரு வரியும் காயப்பட்டு இருக்கிறது. அஜந்தாவின் கலையழகு குறித்து என்னிடம் யார் பேச முடியும்? அசோகரின் எழுத்துக்கள் குறித்து யார் என்னிடம் சொல்ல முடியும்? எல்லோராவின் சிற்பி குறித்து யார் கீதமிசைக்க முடியும். அந்த ஆதரவற்ற பட்டுல் சிறுமியின் கடித்துக் குதறப்பட்ட உதடுகளில், மிருகங்கள்,அரக்கர்களின் பல்தடங்கள் இருக்கும் அவளின் கரங்களில் உங்கள் அஜந்தாவின் மரணம் தெரிகிறது, உங்கள் எல்லோராவின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, உங்கள் நாகரீக சமூகம் பிண ஆடை போர்த்திக்கொண்டு நகர்கிறது…

அவர்களை என் தொழிலுக்குள் நான் தள்ளமுடியும். ஆனால், ராவல்பிண்டியும், ஜலந்தரும் அவர்களுக்குப் புரிந்ததை நான் செய்ய மாட்டேன். 

Image result for மெய்ப்பொய்கை

River Of Flesh
தொகுப்பாசிரியர்: ருச்சிரா குப்தா
Speaking Tiger
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350

(இத்தொகுப்பின் ஒரு முக்கியமான குறை பல்வேறு மொழிகளின் சொற்களுக்கு பொருள் இறுதியில் கூட தரப்படவில்லை. இது வாசிப்பை சமயங்களில் தடைப்படுத்துகிறது. இந்நூல் தமிழில் மெய்ப்பொய்கை என்கிற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. நான் ஆங்கிலத்திலேயே நூலை வாசித்தேன். )