‘Fullbright Scholar’  ஆனந்த் தட்சிணாமூர்த்தியின் கல்விக்கனவிற்கு கைகொடுங்கள் !


அனைவருக்கும்  அன்பு கலந்த வணக்கம், 

    உங்களிடம் ஒரு பேருதவியை  எதிர்நோக்கி எழுதுகிறேன். தமிழ்நாட்டில் புனைவு, அல்புனைவில் வெளிவரும் ஆக்கங்கள் அற்புதமானதாக இருந்தாலும் எப்போதும் ஒரு குறை உண்டு. அவை பிற மொழிகளிலோ, ஆங்கிலத்திலோ  முறையான  மொழியாக்கம், செம்மையாக்கம்  இல்லாததால் சென்று சேர்வதே இல்லை. இப்போது எதற்கு இதெல்லாம்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன்.

அமெரிக்க-இந்திய அரசுகள் இணைந்து  Fulbright-Nehru  Fellowship ஒன்றை உருவாக்கின. இதன் நோக்கம் ஒன்று தான். அமெரிக்காவின்  தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்தியாவை  சேர்ந்தவர்கள் மேற்படிப்பு  படிப்பதற்கான உதவியை நல்கும்  திட்டமாகும். பல்வேறு கட்டத்  தேர்வுகள், நேர்முகத்திற்கு  தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகள்  அமெரிக்காவில்  மேற்படிப்பு படிக்க அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு என்று J1 விசா வழங்கப்படும். இந்த விசா  சற்று வேறுபட்ட ஒன்று. இந்த விசாவில்  அமெரிக்கா  செல்லும் மாணவர்கள் படிப்பு  முடிந்ததும்   இந்தியாவிற்கு திரும்பி விடவேண்டும்.  கல்விக்காலம்  முடிந்த  பிறகு  அங்கே வேலை  பார்த்து கல்விக்கடன், செலவுகளை  ஈடுகட்டும்  வாய்ப்பு அறவே இல்லை. Fullbright Fellowship  கல்விக்காலம்  முடியும் வரை, குறிப்பிட்ட  உதவித்தொகையை  மாதாமாதம்  வழங்கும். இந்த உதவித்தொகை பாதி கல்விக்கட்டணத்திற்கு தான் போதுமானது. மீதமுள்ள தொகையை  கற்கப்போகும் மாணவரே திரட்ட வேண்டும். Inlaks Scholarship, JN Tata Endowment loan scholarship என்று  சிற்சில  உதவித்திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாருக்கும்  உதவுவதில்லை. 

இப்போது ஆனந்த் தட்சிணாமூர்த்தியை  சந்திப்போம். அவரின்  சொற்களிலேயே ,

“என் பெயர்  ஆனந்த் தட்சிணாமூர்த்தி.  நியூயார்க் பல்கலைக்கழகத்தின்,  ‘Centre for Publishing’ ஆனது  ‘Publishing: Digital and Print Media’ -ல் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. இக்கனவை  எட்டுவதற்கு இப்படிப்பிற்கு  செலுத்த  வேண்டிய  கட்டணமே தடையாக கண்முன்  நிற்கிறது. 

பெருமைமிகு Fulbright-Nehru  Fellowship எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தரப்படவுள்ள உதவித்தொகைமேற்படிப்பினை  முடிக்க  போதுமானதில்லை. பாதிக்கு பாதி கட்டணத்தை  கட்ட  முடியாத  நிலையில் உள்ளேன். இக்கட்டணத்தை  செலுத்த  உங்களின் மேலான உதவியை  நாடுகிறேன். 

பதிப்புத்துறையில்  மேற்படிப்பில் கால்பதிக்கப் போகும் முதல் Fullbright  Scholar  நானாகவே  இருப்பேன். பதிப்புத்துறையில்  புதியன விரும்பும் ஒருவனாக இக்கனவை  துரத்துகிறேன். 

அம்மாவை இளம்வயதிலேயே  பறிகொடுத்துவிட்ட  என்னை  என் அப்பா தான் தனியொருவராக  வளர்த்தெடுத்தார்.  அப்பா தமிழ்  இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். (சட்டம், பொருளாதாரம் என்று அவரின் கல்வித்தாகம்  விரிந்து கொண்டே இருந்தது ).  அப்பா, சங்க இலக்கியத்தை நிலாச்சோறுடன்   ஊட்டி வளர்த்தார். என்னை பகுத்தறிவாளனாக  வளர்த்தெடுத்தார். பக்தி இலக்கியத்தின் கவிதைகளை ஆழமாக  அறிந்துகொள்ள மட்டுமே ஆலயங்களை நோக்கி பயணித்தோம். தீவிர இலக்கிய கூட்டங்களின் வழியாக தமிழ் இலக்கியத்தில் மனதைப்  பறிகொடுத்தேன். பெரும்பாலான  மாணவர்களை  போல பொறியியல் படித்து முடித்தேன். இருந்தாலும் மனதெல்லாம் கலை, இலக்கியத்தை சுற்றியே சுழன்றது. 

‘Young India Fellowship’ (YIF) எனும்  இலக்கியம், வரலாறு  உள்ளிட்ட பல்கலை பயிற்சியினை வழங்கும் படிப்பினில்  இணைந்தேன். இப்படிப்பிற்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாணவர்களில் முழு  உதவித்தொகை பெற்ற  வெகு சிலரில் நானும் ஒருவன். அங்கே வழங்கப்பட்ட எழுத்துப்பயிற்சி, கடுமையான பாடம் சார்ந்த தேடல்கள் எழுதுவதற்கான  ஊக்கமாக அமைந்தது. தமிழிலக்கியத்தினை உலக அரங்கிற்கு  கொண்டு சேர்க்கும் என் கனவுகள் அங்கேயே துலக்கம்  பெற்றன. தயங்கி தயங்கி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த நான் நம்பிக்கை மிளிர பேசவும், எழுதவும் ஆரம்பித்தேன். என் வாழ்க்கையும், இலக்கும்  தெளிவானது. எனக்கான  திசை புலப்பட்டது. 

What have I done so far?

YIF-ல் வாசிப்பின் மீது தீராக்காதல்  பெருக்கெடுத்தது. பல்வேறு  எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை  சந்தித்தேன். எப்படி  மைய நீரோட்ட பதிப்பாளர்கள்  இந்திய மொழிகளில் வெளிவரும் ஆக்கங்களை கண்டும் காணாமல்  இருக்கிறார்கள் என்று கண்முன்னே பார்த்தேன். ராயல்டி என்று  சொற்பத்தொகை மட்டுமே படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவதை கண்டேன். மேற்கத்திய  நாடுகளில் எப்படி படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஏலம்  விடப்படுகின்றன, நம்ப முடியாத அளவுக்கு படைப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுவதையும்  அறிந்து கொள்ள முடிந்தது. பதிப்பாளரால் தான் பதிப்புத்துறையின்  போக்கை மாற்றி, உள்ளூர் மொழிகளில் இயங்கும் எழுத்தாளர்களை  உலகமெங்கும் கொண்டு சேர்க்க முடியும் என்று  புரிந்தது. 

இதே  காலகட்டத்தில் இதழியல், படைப்புகளை சந்தைப்படுத்தல், பலரிடம் படைப்புகளை சென்று சேர்த்தல்  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். இந்தியாவின்  முன்னணி இதழியலாளர்களில்  ஒருவரான   சேகர் குப்தாவுடன் இணைந்து ThePrint  எனும்  செய்தித்தளத்தை  வளர்த்தெடுப்பதில் ஈடுபட்டேன். அங்கே அரசியல் கட்டுரைகள், ஆளுமைகள்  குறித்த ஆக்கங்கள், நெடுங்கட்டுரைகள் ஆகியவற்றை  இடைவிடாமல்  எழுதினேன்.    

You can find all the articles under my byline here – https://theprint.in/author/aananth-daksnamurthy/

இப்பணிக்கு பிறகு, தமிழ்நாட்டின்  கலைப்படிப்புகளுக்காக உருவான முதல் தனியார் பல்கலைக்கழகத்தினை  வளர்த்தெடுப்பதில்  பங்காற்றினேன். தமிழ்நாடு அரசின் தொழிற்துறையில்  ‘ Content & brand communications’-னை  தலைமையேற்று  நடத்தினேன். 70 பக்க அளவில் வெளிவரும் தொழிற்துறையின்  காலாண்டிதழினை தொகுப்பது, எடிட் செய்வதில் ஈடுபட்டேன். முதலமைச்சரின் உரைக்கான  கருத்துகளை  வடிவமைப்பதிலும்  பங்காற்றினேன்.  

 
https://investingintamilnadu.com/DIGIGOV/TN-pages/enewsletters.jsp?pagedisp=static
 இவை போக  வெவ்வேறு ஆவணப்படங்களின் மொழியாக்கத்திலும்  ஈடுபட்டேன்.  My work for Race to Feed the World Docuseries

 CNA Insider docuseries-ல் வெளிவந்த  ‘Race to feed the world’ ஆசியாவின் உணவுப்பாதுகாப்பு குறித்து பேசுகிறது. 
https://www.channelnewsasia.com/watch/race-feed-world/question-space-1925316My work for The Longest Day Docuseries

‘The Longest Day’ எனும் ஆவணப்படம் பருவநிலை  மாற்றத்தினால்  ஆசியா  எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறது  என்பதை  விவசாயிகள், மக்கள் நலப்பணியாளர்கள், இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்கள்  ஆகியோரின்  குரல்களின் வழியாக ஆவணப்படுத்தியது. 

https://www.channelnewsasia.com/watch/longest-day/water-1463951

அண்மையில், அல்புனைவு தமிழ் நூலொன்றின் சில பகுதிகளை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம்  செய்தேன்.  தமிழ் இலக்கிய  ஆர்வலராக  இருந்ததில்  இருந்து பதிப்புத்துறையின்  ஆழ, அகலங்களை அறியும் இடத்திற்கு  வந்து நிற்கிறேன். 

என்னுடைய  கனவு அயலகத்திற்கும், தமிழகத்திற்கும் பாலம் அமைக்கும்  ஒன்றாகும். நம் நாட்டின்  எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்களை  அமெரிக்காவின்  புகழ் மிக்க  பதிப்புத்திட்டங்களுக்கு  அறிமுகப்படுத்துவது ஒரு கனவு.  உலகமெங்கும்  பரவிக்கிடக்கும் ஆகச்சிறந்த  சிந்தனைகள், திறன்கள்,  வளங்களை இந்திய மொழிகளுக்கான பதிப்புத்துறைக்குள் கொண்டு  சேர்ப்பது மற்றொரு கனவு.   இதனை இப்பட்டப்படிப்பு  சாத்தியப்படுத்தும்.  


மேற்படிப்புக்கு ஆகும் செலவு: 
 

NYUஇரண்டாண்டு படிப்பு 
முதலாண்டு (12 மாதங்கள் )இறுதியாண்டு  (10 மாதங்கள் )
tuition $42,462$44,797
கல்விக்கட்டணம் $2,346$2,475
காப்பீடு $3,845$4,056
விடுதிக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் $26,220$21,850
புத்தகங்கள் $1,200$1,000
மொத்தம் $76,073$74,178
Fulbright Award$39,995$44,056
பற்றாக்குறை $36,078$30,122

 
ஏறத்தாழ 66,190 $ பற்றாக்குறை  உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான  வாய்ப்பினை  வேண்டாம்  என்று  சொல்கிற மனநிலைக்கு வந்து விட்டேன். எனக்கான கல்விக்கான  வாசல் கதவுகளை  திறக்க  தமிழ்ச்சமூகம்  உதவும்  என்கிற நம்பிக்கையில்  உங்களிடம் உதவி கேட்கிறேன். நியூயார்க் பல்கலையில்  படிக்கும் வாய்ப்பினை பெறுவதற்கு  தாராளமாக  உதவிடுங்கள். 

Milaap தளத்தில்  ஆனந்தின் மேற்படிப்புக்கு உதவுவதற்காக சுட்டி:  https://milaap.org/fundraisers/support-aananth-daksnamurthy

 உங்களின்  நேரத்திற்கும், பேரன்பிற்கும் நன்றிகள், 
அன்புடன், ஆனந்த்  தட்சிணாமூர்த்தி 

வங்கிக்கணக்கு  விவரம்: 

Account holder name: Aananth D

Account number: 002001001623067

Bank name: City Union Bank

IFSC code: CIUB0000153

Swift Code: CIUBIN5M


மேலதிக விவரங்களுக்கு: 


 aananth95@gmail.com எனும் மின்னஞ்சல்  முகவரியில்  என்னைத் தொடர்பு  கொள்ளலாம்

வங்கிக்கடன் முதலியவற்றை  முயன்று  பார்க்கலாமே?:

என்  தந்தை  ஓய்வு பெற்ற  அரசு  ஊழியர். ஓய்வூதியத்தை  சார்ந்து  வாழும் அவரால் இவ்வளவு பெரிய தொகைக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. எப்படியாவது இந்த கட்டணத்தை கட்ட நான் முயன்று பார்த்து விட்டேன். வேறெந்த  வழியும் இல்லாத நிலையில் தான், உங்களின்  உதவியை வேண்டுகிறேன்.  

இப்படிப்பிற்கு பின்பு என்ன திட்டம் ? 

படிப்பு  முடிந்ததும், இந்தியாவிற்கு  திரும்பி இந்திய மொழிகளில்  பதிப்புத்துறையில் உடனடியாக இயக்குவேன். சிறிய அளவிலான பதிப்பகம்  ஒன்றை  துவங்கி  நடத்தும்  திட்டம் உள்ளது. வளர்ந்து வரும்  எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்  ஆகியோர் பயன்பெறும் வண்ணம் உள்ளுறை உதவித் திட்டங்களை  எடுத்து நடத்தும்  திட்டமும்  உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து ‘மாநிலப் பாடலான’ வரலாறு.


‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின்  பாயிரத்தில் உள்ளது .  பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர்.  கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார்.    தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக  நூலிற்கு  ஆங்கிலம், தமிழ்  என்று  இரு  மொழிகளிலும்  முன்னுரை எழுதியுள்ளார்.   


தன்னுடைய  முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது”  என்று  வருந்துகிறார்.  

ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை


பாயிரத்தில்  ‘தமிழ் தெய்வ  வணக்கம்’ என்று  தமிழை  தெய்வமாக  போற்றிப் பரவுகிறார்.  கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில்  தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு  என்று பலவாறு  போற்றுகிறார். இப்பாடலில்  வழங்கி வரும் முதன்மையான கருத்துகள்  என்று சிலவற்றைப்  பேராசிரியர் கைலாசபதி  அடையாளப்படுத்துகிறார். அவை,

  (அ) இந்திய நாட்டில்  தெக்கணம்  திலகமாகத்  திகழும்  பகுதி. 

(ஆ) திராவிடம் முதன்மையான  சிறப்புமிக்கதாகும் 

(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும்  புகழும், பெருமையும் மிக்கது

(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை  போன்றது தமிழ்

(உ) தமிழே  திராவிட  மொழிகளுக்கு  தாய்

(ஊ) ஆரியம்  போல்  வழக்கழியாமல்  சீரிளமை  மிக்க  மொழியாகத்  தமிழ்  திகழ்கிறது 


“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்  எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்   கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்  உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”


‘நீராருங்  கடலுடுத்த’ எனும்  துவங்கும்  இப்பாடல்  முந்தைய தமிழ்  படைப்புகளில்  இருந்து பல வகைகளில்  வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில்  புதிய பாய்ச்சலுக்கு  அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின்  பார்வையில்  தமிழ்த்தேசியத்திற்கான  முன்னோடிப்  பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர்  பிரேர்னா  சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர்  நலனும்  கைகோர்க்கும்  இடம் என்கிறார். தமிழ்த்தாயின்  உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று  சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர்   சுமதி  ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார்   கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற  மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.

அவ்வரிகள்,  


வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள் 

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி 

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள

 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.


இப்பாடலுக்கு  பிறகே  தமிழைத் தாயாக, தெய்வமாக  போற்றிப்பரவுவது  பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக  போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில்  எண்ணற்ற  பாடல்கள்  தமிழன்னையை  போற்றி  பாடப்பட்டன. இவற்றுக்கான  முதல்  வித்து  ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’ ஆகும். 

நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்


கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய  மூன்றாம்     ஆண்டறிக்கையை  1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப்  பற்றி  பேசுகிறது:

பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’  என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை  ஆய்வாளர்  கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார். 

1913-ம் ஆண்டறிக்கை


இப்பாடல் படிகளை  கரந்தை  தமிழ்ச்சங்கத்தை  சேர்ந்த  உமாமகேசுவரனார்  பல நூறு  பிரதிகள்  அச்சிட்டு  கொண்டு  சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும்  பாடப்பட்டது. பல்வேறு  தமிழ்ச்சங்க  கூட்டங்களில்  இப்பாடல்  ஒலித்தது. தனித்தமிழ்  மாநாடுகளில்  தவறாமல்  இடம்பெற்றது.  .தனித்தமிழ் மாநாடுகள்,  பாடநூல்களில்  இடம்பெற்றது. தனிநாயகம்  அடிகள் “இப்பாடலின்  வரிகள் கடந்த  அறுபது  ஆண்டுகளாக  எதிரொலித்துக்  கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான  பாடல்  எனும்  அதன்  பெருமையை  விஞ்சும்  படைப்பு  எதுவுமில்லை”  என்று  1963-ல் புகழ்ந்தார். 

இப்பாடலை  தமிழக  அரசு  அனைவரும்  பாடும்வண்ணம்  வழிவகை  செய்ய  வேண்டும்  என்கிற  கோரிக்கைகள்  அறிஞர் அண்ணா  ஆட்சிக்காலத்தில்  வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா  இயற்கை  எய்திவிட, கலைஞர்  கருணாநிதி  அப்பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கரந்தைத்  தமிழ்ச்சங்க  விழாக்களிலேயே  முதல்  ஆறு  வரிகள்  மட்டுமே  பாடப்பட்டு  வந்தன  என்பதை  சுட்டிக்காட்டுகிறார் கரந்தை  ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான  விருதளிப்பு  விழாவில்  தமிழ்நாட்டின் வழிபாட்டுப்  பாடலாக   ‘நீராருங் கடலுடுத்த’ அமையும்  என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

புகைப்பட நன்றி: kalaignar.dmk.in

 பிற  மொழிகளை  தாழ்த்திப்  பேசும்  வரிகளைத்  தவிர்த்து  பாடலை  அமைத்துக்  கொண்டதாக  அவர் குறிப்பிட்டார். ஆரியம்  போல்  வழக்கழிந்து  முதலிய  வரிகளும்  சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத்  தமிழ்ச்சங்கத்தின்  வழக்கத்தை  அடியொற்றியே  இப்பாடல் வரிகள்  அமைந்திருப்பதையும் கவனத்தில்  கொள்ள  வேண்டியிருக்கிறது.  மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை  தமிழ்நாட்டின்  வழிபாட்டுப்  பாடலாக  ஆக்கிய  அரசாணையை  கூர்ந்து  நோக்கினால்  இன்னொன்றும்  புலப்படும்.

 ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை  எண்  1393-ல் தமிழ்நாடு  முழுமைக்கும்  பொதுவாக  வழிபாட்டுப்  பாடல்  அமையும்  வண்ணமே  ‘நீராருங்  கடலுடுத்த ‘  இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட  நம்பிக்கையோடு’  தொடர்புடையதாக    இல்லாத  வண்ணம்  இப்பாடல் இருக்குமாறு  அமைந்திருப்பதாகவும்  அரசாணையில்  சொல்லப்பட்டு  இருந்தது.  பல்வேறு  தமிழ்நாட்டு  நிகழ்ச்சிகளில்  இந்து  மதப்  பாடல்களும்,  வடமொழி,தெலுங்கு  பாடல்களும்  ஆதிக்கம்  செலுத்திக்கொண்டிருந்த  போது  இந்த  அறிவிப்பு அவற்றை  மாற்றியது. மேலும், பாயிரத்தில்  உள்ள  சிவனைப்பற்றிய  குறிப்பு இடம்பெறாமல்   போனதையும், ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’  ஆனது  ‘தமிழ்த்தாய்  வாழ்த்தாக’ மாறியதையும்  மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ்  அடையாளத்தை  முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது.  (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )


மேற்சொன்ன  அரசாணையை  ஒட்டி 23 நவம்பர்  1970-ல்  அரசாணை  ஒன்று  வெளியிடப்பட்டது.  அதில்  ‘நீராருங் கடலுடுத்த ….’  வழிபாட்டுப்பாடலாக  விழாக்களின்  துவக்கத்தில்  பாடப்பட  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி  நிறுவனங்கள், உள்ளாட்சி  அமைப்புகள்  நடத்தும் நிகழ்ச்சிகளில்  இப்பாடல்  மோகன  ராகத்தில், திஸ்ர  தாளத்தில்  இசைக்கப்பட  வேண்டும்  என்றும் கூறப்பட்டு  இருந்தது.

Memo no. 3584/70-4

காஞ்சி  மடாதிபதி  விஜேயந்திரர்  கலந்து   கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ இசைக்கப்பட்ட  போது  கண்மூடி அமர்ந்து  இருந்தார். இதனையடுத்து  கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில்  உள்ள காஞ்சி  மடத்தின் கிளையில்  நுழைந்தார். அதற்கு  மட  மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை  கண் இளங்கோ  மிரட்டியதாக  .  மடத்தின்  மேலாளர்  காவல் துறையில்  புகார்  அளித்து  இருந்தார்.  இது தொடர்பாக  தன்மீது  பதியப்பட்ட   முதல் தகவல்  அறிக்கையை ரத்து  செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை  கண்  இளங்கோ  நாடினார். 


இவ்வழக்கில்  நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்  மேற்குறிப்பிட்ட இரண்டு  அரசாணைகள்  1393,  3584/70-4  ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ வழிபாட்டுப்  பாடலாகவே  இந்த  அரசாணைகள்  வரையறுத்து  இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய்  வாழ்த்து  வழிபாட்டுப்பாடல், அது, கீதம்  அன்று”. என்று குறிப்பிட்டார்.  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படும்  போது   எழுந்து நிற்க  வேண்டும்  என்று எந்தச் சட்டமும், அரசாணையும்  இல்லை என்பதையும்  அத்தீர்ப்பில்  கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய்  வாழ்த்திற்கு  உச்சபட்ச  மரியாதையும், மதிப்பும்  தரவேண்டும். தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும்  போது  கூட்டத்தினர் எழுந்து நிற்பது  மரபாக  இருக்கிறது  என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில்  தான்  மரியாதை  செலுத்த வேண்டும் என்று   கேள்வி எழுப்பிக்கொள்ள  வேண்டும்.   பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும்  நாம் கொண்டாடும்  போது, ஒரே வழியில்  தான் மரியாதை செலுத்த  வேண்டும்  என்று வலியுறுத்துவது போலித்தனமானது.  …..  
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு  ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு  எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி  எளிய  வாழ்வினையே   வாழ்கிறார்.அவர்  வழிபாட்டில்   ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான  நிலையில் இருப்பார். தமிழ்த்தாய்  வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால்  சந்நியாசி  தியான  நிலையில் அமர்ந்து இருப்பது  நிச்சயம்  நியாயமானது. இந்த  நிகழ்வில், மடாதிபதி தியான  நிலையில்  அமர்ந்து  கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும்   செலுத்தும் விதமாகும்.”  என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி


இதனையடுத்து, தமிழ்நாடு  அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய்  வாழ்த்தின்  தோற்றம், வளர்ச்சி,  அதனை அரசு  நிகழ்ச்சிகளில்  விழாவின்  துவக்கத்தில்  பாடவேண்டும் என்று ஆணையிட்ட  அரசாணைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக  அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில்  அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு  அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள் உள்ளிட்ட பொது  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு  முன்பு தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாயம்  பாடப்பட  வேண்டும் என்றும், தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும் போது  அனைவரும்  தவறாமல் எழுந்து  நிற்க  வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல்  பாடப்படும்  போது  எழுந்து  நிற்பதில்  இருந்து மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணித்  தாய்மார்கள்  ஆகியோருக்கு விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

 சான்றுகள்/ உதவியவை :

1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm

2. மனோன்மணியம்  சுந்தரனாரின்  இன்னொரு  பக்கம் – பேராசிரியர்   அ  கா பெருமாள் 

3. நீராருங் கடலுடுத்த –  கரந்தை ஜெயக்குமார்

 4.   ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture  Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam

 5.  ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy 

6. தமிழ்நாடு அரசாணை  நிலை எண் 1393, பொதுத்  (அரசியல்) துறை, 17.06.1970

7. தமிழ்நாடு அரசாணை   எண் 3584/70-4, 23.11.1970 

8. தமிழ்நாடு  அரசாணை  நிலை  எண் 1037, 17.12.2021 

 9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296

10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy

11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy  Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725

12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123

13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021

தமிழ் விருப்பப்பாடம் விடைத்தாள்கள், குறிப்புகள்


குடிமைப்பணித் தேர்வுக்கான தமிழ் விருப்பப்பாடத்திற்கான குறிப்புகள் இணையத்தில் அரிதாகவே கிடைக்கின்றன. தமிழ்க்கல்வி தளம் , tamilvu விதிவிலக்கு.

தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விடைத்தாள்கள் எப்படி பதில்களை எழுதலாம் என்பதைக் குறித்து ஓரளவிற்கு புரிதலை வழங்கும். இவை திசைகாட்டியே அன்றி, முற்றுமுடிவான ஆகச்சிறந்த விடைகளல்ல. இன்னமும் சிறப்பான விடைகளை எழுதவும், செறிவான குறிப்புகளைத் தேடிக்கண்டிடவும் இவை உதவுமென நம்புகிறேன். கையெழுத்து சற்று கிறுக்கலாக இருக்கும். பொறுத்தருள்க. தேர்விற்குத் தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். நன்றி!

https://drive.google.com/folderview?id=1eiYXSoc1WScTHkzTiu6cJTUwgUacnTsU

தமிழ்க்கல்வி தளத்தின் குறிப்புகள்:

✍UPSC தமிழ் விருப்ப பாடம்✍

🌾 அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு 🌾

🌾தமிழ் விருப்ப பாடத்திற்குத் தேவையான கட்டுரைகள்.🌾

https://www.tamilkalvi.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/

🌾 திரு. நாகு அய்யா அவர்களின் ஒலிப்பதிவு

தமிழ் தேர்வுத் தாள் ஒலிப்பதிவு

🌾CSE Mains- Tamil Optional Previous Year Question Papers

CSE Mains- Optional Previous Year Question Papers

👑முதன்மைத் தேர்வு👑

👑தமிழ்க் கல்வி👑

Tamilvu தளம்: http://www.tamilvu.org/ta/content/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

தமிழ் விருப்பப்பாடத்தை அணுகுவது எப்படி- உரை: https://m.soundcloud.com/user-894951643/preparing-for-upsc-literature-of-tamil-optional-without-fear (Headset அணிந்து கேட்கவும்)

கொரோனா காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள…


என்னுடைய ஆசிரியர் மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்கள் இல்லையென்கிற எண்ணம் வாட்டுகிறது. அவருடைய வகுப்புகளில் நான் நேரடியாகப் பயிலவில்லை என்றாலும், பயிற்சி மருத்துவர் காலத்திலிருந்து அவரோடு நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவருடைய வீட்டிற்குச் சென்று காரசாரமாக விவாதிப்பது வழக்கம். மதியம் சூடான அறுசுவை உணவு எல்லையற்ற அன்போடு மேடத்தால் பரிமாறப்படுகையில் கதகதப்புக் கவிந்திருப்பதாக உணர்வேன்.

சி.என்.டியிடம் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். கவனம் செலுத்தி படிப்பது, கற்றதை மனங்கொள்ளும் வகையில் கற்பிப்பது, நோயாளிகளை அக்கறையோடு கவனித்துக் கொள்வது, ஆகச்சிறந்த பராமரிப்பைத் தருவது எனப்பல. அவர் தவறெனக் கருதிய அணு ஆயுதம், அதிகார மையங்கள் என அனைத்தையும் தொடர்ந்து எதிர்த்து இயங்கினார். மேலும் உலகச் சுகாதார நிறுவனம் காசநோய்க்கு அறிவுறுத்திய DOT சிகிச்சை முறையையும் எதிர்த்தார். அவரின் இத்தகைய போராட்டங்களில் நானும் தோள் கொடுத்திருக்கிறேன். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை அருவருப்போடு ஒதுக்கி, அவர்களுக்குச் சிகிச்சை மறுக்கப்பட்ட காலத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்ளப் பெரும் மையமொன்றை இந்தியாவில் உருவாக்கினார். ஒவ்வொரு ஹெச்ஐவி நோயாளியையும் அரவணைத்து, ஆறுதல்படுத்துவார். அவர் அடிப்படையில் ஹெச்ஐவி நிபுணர் கிடையாது. ஹெச்ஐவியில் தேர்ச்சிமிக்க “சிறப்பு மருத்துவர்கள்” நோயாளிகளை வெறுத்தொதுக்கிய போது, தானே முயன்று ஹெச்ஐவி சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். அவர் நோயாளிகளைப் பரிசோதித்து, நோயை அறியும் பாங்கின் கச்சிதத்தை நான் இன்னும் எட்டவில்லை.

நான் திசைமாறி எதைஎதையோ பேசுகிறேன். மிகச்சிறந்த மருத்துவ மாணவராக அவர் எந்தத் துறையை வேண்டுமானாலும் மேற்படிப்புக்குத் தேர்வு செய்திருக்கலாம் (அப்போது பலரும் இருதயவியல் மருத்துவராக முண்டியடித்தார்கள்). ஆனால், இவரோ பல லட்சம் மக்களின் உயிர் குடித்துக்கொண்டிருந்த காசநோயினை எதிர்த்துப் போராட முடிவெடுத்தார். அப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் வண்ணம் நுரையீரல் மருத்துவம் பயின்றார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆகச்சிறந்த மருத்துவமனைகளுக்கு அவர் பணியாற்றப் போயிருக்கலாம். அவர் இந்தியாவிற்குத் திரும்ப வந்து, அரசு மருத்துவராக இயங்கினார்.

அவருக்கே காசநோய் ஏற்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ள நேர்ந்தது. ஒரு முறை கடுமையான காசநோய் தாக்குதலால் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். இப்படி அவருக்குக் காசநோய் வருவதைக் குறித்து அக்கறையோடு உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டினேன். தான் ஒப்புக்கொடுத்துக் கொண்ட சேவையில் இப்படிப்பட்ட ஆபத்துகள் இருக்குமென நன்றாகத்தெரியும் என ஒன்றும் நடக்காததைப் போலப் பேசினார். அவர் இத்தனைக்கும் பிறகும், தன் நோயாளிகளின் மீதான அக்கறையை விடுத்ததே இல்லை. அவர் மீண்டெழுந்து ஏழை காசநோயாளிகள்/ஹெச்ஐவி நோயாளிகளை அதே வேகத்தோடு கவனித்துக்கொண்டார். நோய்த்தொற்றுகள் அவரின் ஊக்கத்தைக் குலைக்க இயலவில்லை.

நான் ஏராளமான இளைய சி.என்.தெய்வநாயகங்களைக் காண்கிறேன். பெரும் தீரம், உத்வேகத்தோடு அவர்கள் கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராடுகிறார்கள். தங்களிடம் பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுப் பெண் மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கிறார்கள். இத்தனை இளைய சி.என்.டிக்களுக்கும் தலைவணங்குகிறேன். நாம் துவளாமல் போராடுவோம். உங்களின் பணியே நம் பெருஞ்சொத்து. இந்த உலகின் அத்தனை புதிய சி.என்.தெய்வநாயகங்களுக்கும் என் மனம்நிறைந்த வாழ்த்துகள். – மருத்துவர். அமலோற்பவநாதன் ஜோசப்

முதன்மைப் பதிவு: https://www.facebook.com/1486394836/posts/10216832061182282/?app=fbl

தமிழில்: பூ.கொ.சரவணன்.

சொல்லித்தீராத சுட்டி விகடன்  நினைவுகள் 


சுட்டி விகடன் ‘பிரிந்து செல்கிறார் ஸ்பைடர்மேன்’ என்கிற தலைப்போடு தன்னுடைய இறுதி அச்சிதழை வெளியிட்டுள்ளது. தமிழ் படிக்க ஆரம்பித்த காலத்தில் தங்கமலர், சுட்டி விகடன், கோகுலம், அம்புலி மாமா என்றே எங்களுடைய உலகம் செழித்து இருந்தது. அதுவும் சுட்டி விகடனின் கிரியேசன்ஸ் செய்வதற்காகவே அதனைப் போட்டி போட்டுகொண்டு வாங்குகிறவர்களாக நண்பர்கள் பலர் இருந்தோம்.

Image result for சுட்டி விகடன் 

வழ வழ தாளில் காமிக்ஸ், அறிவியல், கதைகள், பொது அறிவு என்று வண்ணங்களில் எங்கள் பால்யத்தை அது நிறைத்தது. அதில் எழுதிய பலரின் பெயரை தலைகீழாகத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இன்றுவரை சொல்ல இயலும். ‘மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்’ எழுதிய வள்ளி டீச்சர் யார்? அறிவியலை சுவாரசியமாகத் தரும் கார்த்திகா குமாரி அக்கா எப்படி இருப்பார்? கையளவு களஞ்சியம் எழுதித் தள்ளுகிற சங்கரச் சரவணன் சார் என்று ஒருவர் உண்மையாகவே இருக்கிறாரா? மின்னியைக் கொன்றுவிடு என்று மாதாமாதம் மாயக்கதை சொல்லும் ரமேஷ் வைத்யா யார் என்றே எனக்கான வினாக்கள் இருந்திருக்கின்றன. முதல்முறையாக வெற்றியின் பரவசமும், தோல்வியின் கசப்பும் ஒருங்கே விகடன் நடத்திய போட்டிகளிலேயே கிடைத்தன.

எப்படி எழுதுவது என்று எனக்குக் கல்லூரி வரும் வரை தெரியாது. ராகுல் காந்தி கல்லூரிக்கு வருகிறார், அவரோடு உரையாட வகுப்புவாரியாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவலை விகடன் வேல்ஸ் சாரிடம் சொன்னேன். அவர் அங்கே நடப்பதை கட்டுரையாக்கி தரச்சொன்னார். எதோ காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, இருபத்தி ஐந்து பக்கத்தில் நடந்ததைத் தள்ளாடுகிற மொழிநடையில் எழுதிக் கொடுத்தது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும். எனினும், என்னை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரைப் பக்கத்தில் ராகுல் காந்தி சந்திப்பு குறித்த கட்டுரை சுட்டி விகடனில் வெளிவந்தது. அச்சில் என் பெயரை வெகு நாட்களுக்குப் பின்னர்ப் பார்த்த அந்தப் பரவசத்தைச் சுட்டி விகடன் பல நூறு குழந்தைகளுக்கு இறுதி வரை பரிசளித்த வண்ணம் இருந்தது.

நான் எழுதப் பழகுவதற்குக் கற்றுத் தந்த கண்டிப்புகள் இல்லாத பள்ளியாகச் சுட்டி விகடனே இருந்தது. திரைப்படம், ஆளுமைகள், வரலாறு, விளையாட்டு, மொழியாக்கம் என்று எதையெல்லாம் செய்ய விரும்பினேனோ அத்தனையையும் செய் என்று ஊக்குவிக்கிற களமாகச் சுட்டி விகடன் இருந்தது. என் எழுத்துகளை ஒலிக்கோர்வையாக இரண்டாண்டுகள் ஒலிக்க விட்டு அழகு பார்த்த அன்னை மடியும் சுட்டி விகடனே. மேற்கோள்கள் வேண்டும், ஆளுமைகள் குறித்த சிறு குறிப்புகள் வேண்டும் என்று எதைக்கேட்டாலும் எழுதித் தருகிற ஒரே இதழாகச் சுட்டி விகடன் மட்டுமே இருந்தது. அதன் லேஅவுட்களில் கட்டப்பட்ட சிரத்தை பலரின் கண்களில் படாமல் போயிருக்கும். புதிது புதிதாகப் பல்வேறு முயற்சிகளை அது எடுத்த வண்ணம் இருந்தாலும் அச்சு விற்பனையும், லாப நோக்கமும் அதன் ஆயுளை முடித்து வைப்பது கசப்பைத் தருகிறது.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அதிலும் கணேசன் சார், யுவராஜன் சார், சரா அண்ணன், விஷ்ணுபுரம் சரவணன் அண்ணன் ஆகியோர் பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்து பார்த்தார்கள். FA பக்கங்கள் கல்வியோடு கூடிய கலகலப்பான வகுப்பறைக் கனவை நெருங்க முயற்சித்தது. பல்வேறு அரசுப்பள்ளிகளின் அன்புத் தோழனாகச் சுட்டி விகடன் இருந்தது என்பது மிகையில்லை. இன்றைய அதிவேக உலகத்தில் வளரிளம் பருவத்தினரை தமிழ் கொண்டு கட்டிப்போடுவதில் உள்ள சவால் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் ஒரு காலத்திற்குப் பிறகு செய்தித் தாள்களின் இணைப்பிதழ்கள், சிறிய குழுக்களின் முயற்சிகள் தவிர்த்துப் பெரிதாக எதுவும் மிஞ்சியிருக்கப் போவதில்லை என்பது பெருந்துயர்.

திடீரென்று எப்போதோ படித்த சுட்டி விகடனின் கதைகள் கனவுகளில் சிரிக்கும். குட்டன் பாட்ரிஸ் அக்லினாவை தேடிக்கொண்டு சமீபத்தில் யுவராஜன் சாரை அலைபேசியில் அழைத்தேன். அதனைத் தேடிக்கொண்டு போன பயணம் ஏறத்தாழ பத்தாண்டு காலச் சுட்டி விகடனின் பக்கங்களைப் புரட்ட வைத்தது. ஒரு ஆறு மணிநேரத்தை அரைக்கணம் போலத் தொலைக்கிற பயணத்தை அந்தத் தேடல் பரிசளித்தது. சார்லியும், சாக்லேட் பாக்டரியும் எனும் பாஸ்கர் சக்தி அண்ணனின் மொழியாக்கத்தின் எளிமையும், கொண்டாட்டமும் நாவின் நுனியில் தேங்கி நிற்கிறது. ஆயிஷா நடராசனின் அறிவியல் எழுத்து துவங்கி மருதன் அண்ணனின் புனைவு போன்ற வரலாற்று எழுத்துகள் வரை எல்லாமே இனி நினைவலைகள் மட்டும் தான்.

கோகுலம் நின்றுபோன சில மாதங்களுக்குள் சுட்டி விகடனும் விடைபெறுவது தமிழ் சார்ந்த குழந்தைகள் வாசிப்பின் பேரிழப்பு எனலாம். தொடுதிரைகள் மிகுந்துவிட்ட நம் காலத்தில் குழந்தைகளுக்குக் காணொளிகளும், வீடியோ கேம்சும் தரும் பரவசத்தை வாசிப்பின் மூலம் ஊட்ட முடியாமல் போகிறது என்பது கசப்பான உண்மை. தன்னுடைய எல்லைகளுக்குள் வாசிப்பின்பத்தை வாரி வழங்கிய இரு சிறுவர் சுடர்கள் அணைந்து போவது அரைப்பக்க அஞ்சலியாகக் கூட இல்லாமல் போகும் அவலத்துக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.
படபடப்பும், குறைகளும், அவசரமும் மிகுந்த ஒரு கிராமத்து சிறுவனை அடைகாத்து, அவனுக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்த பெரும் நம்பிக்கையின் மரணம் என்னென்னவோ செய்கிறது.

சுட்டி விகடனின் முகப்பு வாசகமாக இருந்த ‘உயிர்த்தமிழ் பயிர் செய்வோம்’ என்பதையே எம் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் முகப்பு வாசகமாகத் தேர்வு செய்தோம். உயிர்த்தமிழை பயிர் செய்யக் குழந்தைகளின் உலகை வாசிப்பால் நிறைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

சமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி


‘சமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி’ .
 
பெண்ணைத் தாண்டி வருவாயா?!’
நினைவுகள் எங்கெங்கோ அலைமோதி நிற்கின்றன. பெண்களைத் தாண்டுவது என்பதை விட, பெண்களோடு இணைந்து பயணிப்பதே சரியான சொல்லாடல் என எண்ணுகிறேன்.
 
பெண்ணியம் என்பதை அந்நியமான, அவதூறு செய்யும் சொல்லாகவே இங்கே பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்துவதைக் காண நேரிடுகிறது. பெண்ணியம் என்ன என்பதை ஆண்களே இங்கே வரித்துக் கொள்கிறோம். பெண்களின் குரல்களைக் கூடக் கேட்க விரும்பாத நாம், எப்படி நம் குழந்தைகளுக்கு நம்பிக்கை மிக்க எதிர்காலத்தைப் பரிசளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
 
பெண்ணியம் என்பது ஆண்களைப் பற்றியது அல்ல. அது ஆண்களை வெறுப்பதோ, அவர்களைத் துன்புறுத்துவதோ அல்ல. அது ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் அல்ல. அது ஆண்களின் கருத்துகளை மூடி மறைப்பதோ, அவர்களின் தேவைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே இல்லை. மேற்சொன்ன அநீதிகள் பெண்களுக்கு இழைக்கப்படாமல் இருப்பதற்கான தேடலும், பயணமுமே அது. பெண்ணியவாதிகள் ஏன் ஆண்களை வெறுக்கிறார்கள் என்று கேள்விகளைப் பல முறை யோசித்து இருக்கிறேன்.
 
பல்வேறு தருணங்களில் அது அவர்களின் வலியில் இருந்தும், தன்னைப்போன்ற இன்னொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்த எதையும் செய்ய முடியவில்லையே என்கிற ஆற்றாமையின் வெளிப்பாடு. மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதன் அடையாளம் அது. பெண்களின் பேசாத பேச்சுக்களை நாம் கேட்க முயன்று இருக்கிறோமா? பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் பெண்ணுக்கு தானே அதன் பெரும்பான்மை குற்றவுணர்ச்சியைத் தருகிறோம்? எதோ ஒரு பெண் காதலை ஏற்க மறுத்ததற்கு வெட்டிக் கொல்லப்பட்டால் ஏன் பெண்களைப் பார்த்து ஒழுங்கா இரு, பத்திரமாகப் போ என்று மட்டும் சொல்கிறோம். என் போன்ற ஆண் பிள்ளைகளை நோக்கி, ‘உன்னைப்போல ஒரு பையன்தான் இப்படிப் பண்ணினான். நீ அப்படிப் பண்ணாம இரு’ என்று சொல்ல நமக்கு வாய் வருவதே இல்லையே ஏன்?

Image may contain: 3 people, including பூ.கொ. சரவணன், people smiling, text

மீசை என்பது ஆண்மையின் அடையாளமாகப் பலரால் இங்கே பார்க்கப்படுகிறது. ஆண்மை என்பது என்ன முகத்தில் முறுக்கி விட்டுக்கொள்ளும் மீசையில் தான் வந்து விடுகிறதா என்ன ? பிள்ளையைப் பெற்று விட்டால் அவன் ஆண் மகன். இது இன்னுமொரு வரையறை. பெண்ணை அடக்கி வைத்திருந்தால் அவனும் ஆண் மகன். அப்படியே உடம்பின் தசைகளை முறுக்கி கலக்கினால் அவனும் ஆண்மை உள்ளவன். ஆண்மை என்பதை ஆணாதிக்கத்தின் அளவுகோலாகக் கொண்டிருக்கிறோம் இல்லையா நாம் ?
 
பொம்பிள பொண்ணு போல அழாதே/வெட்கப்படாதே/பயப்படாதே போன்ற பதங்கள் என் காதுகளில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அழுகை, வெட்கம், பயம் எல்லாம் மானுட உணர்ச்சிகள் தானே? அவற்றை ஏன் ஒரு பாலினத்தின் பண்பாக, இழிவான அடையாளங்களாக மாற்ற முனைகிறோம்? ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று வகுப்பறைகளைக் கூறு போட்டுக்கொண்டு இருக்கும் வரை புரிதலும், இணக்கமும் சாத்தியமே இல்லை.
 
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பணிக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை 10% அளவுக்கு வீழ்ந்து இருக்கிறது. வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்ளப் பெரும்பாலான சமயங்களில் ஆண்களாகிய நாம் முன்வருவதே இல்லை. நம்முடைய அழுக்கான ஆடைகள், உண்ட தட்டின் எச்சில் சுவடுகள், பெற்ற பிள்ளையின் கழிவுகள் அனைத்தும் பெண்களுக்கு உரியவை. குடும்பத்தலைவன் என்கிற பட்டம் மட்டும் ஆணுக்கு உரியவையா? இந்தியாவில் 90% க்கும் மேற்பட்ட குடும்பக் கட்டுப்பாடுகளைச் செய்து கொள்வது பெண்கள் தான். ஆண்கள் ஏன் அறுவை சிகிச்சை கத்தியின் சுவடு கூடப் படாமல் தள்ளி நின்று கொள்கிறோம்? பயமா? இல்லை, பொண்ணே பாத்துப்பா என்கிற விட்டேத்தி மனமா?
 
சமையல்கட்டு என்பது சமத்துவத்திற்கான ஆரம்பப் புள்ளி என்பதை என் தந்தையே புரிய வைத்தார். வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்வதால் ஒன்றும் ஆணுக்கு இழுக்கு வந்து விடுவதில்லை. அது ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான பண்பு என்கிற புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மையப்படுத்தியே நம்முடைய பார்வைகள், பிம்பங்கள் இருக்கின்றன. வன்புணர்வு, பாலியல் சீண்டல், சம சொத்துரிமை மறுப்பு, கற்பு எனும் கற்பிதம் கொண்டு கட்டுப்படுத்தல், கல்வி மறுப்பு, உரையாடல் துறப்பு என்று பல தளங்களில் பெண்களின் உரிமைகளை, நியாயங்களை மறுக்கிறோம். அவர்களின் கதைகளை, பக்கத்தை நெரிக்கிறோம். செவிமடுத்து கேட்க மறுக்கிறோம். இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் செய்கிறார்கள்.
 
பெண்ணை வர்ணிக்கையில் மீண்டும் மீண்டும் கலவிக்கான, புற அழகால் மட்டுமே எடைபோடப்பட வேண்டிய ஒருவராகப் பண்டைய இலக்கியங்கள் துவங்கி தற்காலப் பாடல்கள் வரை பலவும் பேசுகின்றன. பெண் என்றால் தெரியாத இடை, பாய்ந்தோடும் கண்கள், பெருத்த மார்பகம் எனக் கவிஞர்களின் கற்பனை மிக அதீதமாகக் குடி கொண்ட இடம் என்று பெண்ணின் உடலைச் சொல்லலாம். பெண்ணுடல் மீதான கவர்ச்சி ஒரு தரப்பு என்றால் பெண்ணுடல் வெறுப்பு பல்வேறு மதங்கள், பக்தி இயக்கங்களில் கலந்திருந்தன.
 
பெண்ணின் உணர்வுகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றால் அணுகுவது அரிதாகவே இருக்கிறது. பெண் மீதான வன்முறையின் மையம் ஆண் என்பவன் பெண்ணை ஆளப்பிறந்தவன் என்கிற எண்ணத்திலும், பொண்ணுன்னா போடணும் மச்சி என்கிற உசுப்பேற்றல்களிலும் ஒளிந்திருக்கிறது. ஒரு பெண்ணை அவளுடைய புற அழகைத் தாண்டி தரிசிக்க முடியாத ஆணின் தட்டையான பார்வை பெரிதாக மாறிவிடவில்லை.
 

Image may contain: 3 people, people smiling, text

பெண்களை அழகு சார்ந்து அணுகுவதும், பெண்ணியவாதிகள் என்றோ, பொண்ணுங்கனாவே இப்படித்தான் என்றோ வெறுப்பதும் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கிறது. பெண்ணை உடைமைப்பொருளாக மாற்றுகிறது. பொருளாதார, சமூக விடுதலையைப் பெண்கள் சாதிக்கும் இக்காலத்தில் இப்பார்வைகள் கேள்விக்கும், அக்னி பரீட்சைக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது.
 
பெண் விடுதலை பாலியல் சார்ந்தது மட்டுமல்ல அது சிந்தனை, பொருளாதாரம், செயல்பாடு சார்ந்த ஒன்று. அது சார்ந்து இயங்கும் பலர் மஞ்சள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. உண்மையான மானுட விடுதலை சாதியமைப்பு, ஆணாதிக்க, மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இயங்குவதிலும் இருக்கிறது. பெண்ணியம் என்பது பெண்களால், பெண்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக பள்ளி அல்ல. அது ஆண்களின் இருப்பையும், செயல்பாட்டையும் கோருவது.
 
பெண்கள், ஆண்கள் இருதரப்பிடமும் சொல்லிக்கொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும் பல்வேறு கதைகளும், நெகிழ்ச்சியான உணர்வுகளும், கண்ணீரும், கசப்பும் உண்டு. மீண்டும், மீண்டும் உரையாட மறுப்பது; கொண்டாடி தீர்ப்பது அல்லது வெறுத்து ஒதுக்குவது என்கிற இருமைகள் நம்முடைய உலகத்தை இருளடைய வைக்கின்றன. மனித உறவில், அதன் பிணக்குகளில், நாற்றத்தில், நறுமணத்தில் ஆணும், பெண்ணும் ஒருங்கே இணைவது, மனம் விட்டு பேசுவது இன்றைய தேவையும், நியாயமும் ஆகும். ஐயம், அசூயை நிறைந்த கண்களால் பெண்களின் உலகை அணுகும் ஆண்களும், அச்சம், வெறுப்பு மல்க ஆண்களின் உலகை சாடும் பெண்களும் கண்ணுக்குக் கண் பார்த்து உரையாட வேண்டிய காலம் இது
நன்றி புதிய தலைமுறை ஜனவரி 24 இதழ்

தமிழ்ப்பற்றும், மொழி அரசியலும்


பேராசியர் சுமதி ராமசுவாமி தமிழ்ப்பற்றின் நவீன வரலாற்றை ‘Passions of the tongue’ என்கிற தலைப்பில் எழுதினார். அந்நூலை மொழிபெயர்க்க முயன்று சில காரணங்களால் நின்று போனது. அந்நூலின் முன்னுரை மொழி அரசியலின் ஆழ அகலங்களை கண்முன் நிறுத்த முனைகிறது. வாசித்துப் பாருங்கள். ஆங்கில மூலத்தினை இங்கு படிக்கலாம்: https://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7&brand=ucpress
 
இல்லங்களுக்கு இடையில், மொழிகளுக்கு இடையில்:
 
மொழிப்பற்றைக் குறித்த இந்தப் புத்தகத்தை மொழிகளின் மீதான என் காதலைப் பற்றிய ஒரு வாக்குமூலத்தோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும். இன்னமும் நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்வதென்றால் எனக்கு எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் மீது மட்டும் தனித்த பற்றில்லை. புதுத் தில்லியில் பல்வேறு மொழிகள், லயம் மிக்க ஒலிக்குறிப்புகள் இவற்றால் சூழப்பட்ட வீட்டில் வளர்ந்தேன். மொழியியல் ரீதியாக என்னுடைய வீடு பலதரப்பட்ட மொழிகளின் சங்கமமாக இருந்தது. என்னுடைய வீடு தற்கால பாணியில் சொல்வது என்றால், மொழியளவில் மட்டுமேனும் நவநாகரீகப் பண்புடையதாகத் திகழ்ந்தது. என் தாய் தமிழ் பேசுவதைக் கேட்டபடி வளர்ந்தேன். வழக்கப்படி, தந்தையும் தமிழிலேயே பேசினார். என் தந்தை கன்னட மொழியில் சரளமாகத் தன்னுடைய உடன்பிறந்தவர்களோடு உரையாடுபவராக இருந்தார். பெங்களூரில் இருந்த அவரின் நிறுவனத்தைக் கன்னட மொழியைக் கொண்டே அவர் நிர்வகித்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு பிறந்து பெங்களூரில் வளர்ந்த என் தந்தை கன்னடத்திலேயே தான் கணக்குப் போடுவதாக, ஏன் கனவு கூடக் காண்பதாக வலியுறுத்தி சொல்வார். பெரும்பாலான பிராமணர்கள் வீட்டில் நடப்பதை போல, ஆறுவயது முதல் வீட்டில் இறை வழிபாட்டிற்காக எனக்குப் போதிக்கப்பட்ட மந்திரங்களின் மூலம் சம்ஸ்கிருத அறிமுகமும் கிட்டியது. பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் வளர்ந்த இளம் பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் நடப்பதை போல, நானும் ‘இந்திய கலாசாரத்தை’ காத்தபடியே, நவீனமானவளாக, மேற்கத்திய தாக்கம் கொண்டவளாக மாறவேண்டிய சுமைக்கு ஆளானேன்.
Image result for சுமதி ராமஸ்வாமி
 
ஏழு வயது இருக்கும் பொழுது, இந்திய பாரம்பரிய இசை வகைகளில் ஒன்றான கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டேன். இவ்வாறு தெலுங்கு மொழியின் ஒலிக்குறிப்புகளுக்கு அறிமுகப்படுதப்பட்ட நான் பொருள் புரியாமலே அப்பாடல்களைக் கற்றுக் கொண்டேன். இன்றுவரை என்னுடைய இசைத்தட்டுக்களில் தெலுங்கு பாடல்களை இழைய விட்டுக் கசிகிற கணங்கள் உண்டு. என்னுடைய பள்ளிக்கல்வியின் மொழியாகவும், தனிப்பட்ட வாசிப்பு இன்பத்தின் மூலமாகவும், குடும்பத்தினர், நண்பர்களோடு இயல்பாக உரையாடும் மொழியாகவும் இந்திய ஆங்கிலம் திகழ்ந்தது. டெல்லியின் கடைகளில் பேரம் பேசவும், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை ரசிக்கவும் இந்தி உதவியது. இந்திப் பாடல்கள், திரைப்படங்களைக் கண்டு களிப்பது முன்னைப் போல இல்லாவிட்டாலும் இன்னமும் தொடரவே செய்கிறது. இந்த இந்திப் படங்களைப் பார்த்ததும், டெல்லியின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்ததும் ஒரு பயனைத் தந்தது. இந்தி மொழி பேசுபவர்களோடு நெருங்கிய, இணக்கமான கடந்தகாலத் தொடர்பு கொண்ட உருது மொழியோடு அறிமுகத்தை என்னை அறியாமலே நான் பெற்றதை பின்னரே உணர்ந்தேன்.
 
ஆக, நான் புழங்கிய இந்த மொழிக் குடும்பத்தில் என்னுடைய ‘தாய் மொழியாக’ கருதப்பட்ட தமிழின் இடம் என்ன? தமிழைப் பள்ளியில் நான் கற்கவில்லை. எனக்குத் தமிழை வாசிக்கவும் தெரியாது. தமிழைப் பொது இடத்தில் பேசவோ, பிறர் பேசி கேட்கவோ இல்லை. வீட்டில் தமிழைத் தொடர்ந்து பயன்படுத்தினோம் என்றாலும் ஆங்கிலமும், இந்தியும் அவ்வப்பொழுது உள்ளே நுழைந்து கொள்ளும். தமிழ் குறித்து இன்றைக்குத் தேர்ந்த அறிவிருப்பதால் நாங்கள் வீட்டில் பேசிய தமிழ்மொழி பெருமளவுக்குச் சம்ஸ்கிருதமயமானதாக இருந்தது எனச் சொல்ல முடியும்.
Image may contain: 1 person
.
ஒற்றை மொழி ஆதிக்கம் செலுத்திய சுற்றுப்புறங்களில் பன்மொழி புலமை கொண்ட வினோத ஜந்துவாக நான் வளர்ந்ததாக உங்களுக்குத் தோன்றலாம். எனினும், இந்தியாவின் நகரப்புறங்களில் வாழும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இது போன்றே பல மொழிகளைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்துவதை உணர்வார்கள். பயன்படுத்துகிற மொழிகள் நபருக்கு, நபர் வேறுபடும் என்றாலும் பலமொழிகளை எதிர்கொள்ளும் அனுபவம் எல்லாருக்கும் உரியது என அழுத்திச் சொல்வேன். என்னுடைய பன்மொழித் திறன்கள் இந்திய துணைக்கண்டத்தில் பன்மொழிகளின் ஆழமான வரலாற்றின் பிரதிபலிப்பு எனலாம். இந்த வரலாறு இடம்பெயர்ந்து, வெவ்வேறு ஊர்களில் குடிபெயர்ந்த குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்திற்குள், வீட்டுக்குள் மட்டும் தங்களுடைய மொழியைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடாகும். தாறுமாறாக அமல்படுத்தப்பட்டாலும் தேசிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய குடிமகனையும் குறைந்த பட்சம் மூன்று மொழிகளை (தாய்மொழி/வட்டார மொழி, இந்தி, ஆங்கிலம்) கற்கவேண்டும் என எதிர்பார்ப்பதன் விளைவுமே எனக்குக் கிடைத்த இத்தனை மொழி அறிமுகம். எனினும், என்னுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் துல்லியமாகக் காட்டுவதைப் போல மொழிக்கொள்கை மூன்று மொழிகளை வளர்க்கும் என்கிற அரசின் நம்பிக்கைக்கு மாறாக வெவ்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டது.
 
அடுக்கிக்கொண்டே போகும் அந்தச் சிக்கல்களில் சில: எப்படித் தாய் மொழியை வரையறுப்பது? ஆங்கிலமும், இந்தியும் மரியாதை, வருமானம், அதிகாரம் ஆகியவற்றின் மொழிகளாகத் திகழும் சூழலில் எப்படித் தாய் மொழியை வளர்ப்பது? ஆங்கிலத்தைக் காலனிய மேற்கின் நீட்சியாகப் பார்க்கும் தேசியவாத சக்திகளை மீறி எப்படி வளர்த்து எடுப்பது? இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தி, ஒரு பகுதியின் மொழியை ஒட்டுமொத்த இந்தியாவின் மீது திணிக்கும் உள்நோக்கம் கொண்டது என்று எழுந்த எதிர்ப்புகளை எப்படித் தணிப்பது? இந்த மொழிப்போர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன என்பது நவீன இந்தியாவின் மொழிகளின் கலாசார அரசியல் குறித்த என் ஆர்வத்தைக் கூட்டின.
என்னைப்போன்ற வர்க்கம், ஜாதி, கல்விப் பின்புலத்தில் இருந்து எழும் இந்தியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி கொண்டவர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
 
என்னுடைய அதிகாரப் பூர்வ தாய்மொழியாகத் திகழ்ந்தாலும் தமிழானது நான் இயங்கிய மொழிப் பொருளாதாரத்தின் ஓரத்திலேயே இருந்தது. தமிழ் குறித்து ஆய்வு செய்ய என்னுடைய அறிவுசார் தேடல் திரும்பியதே ஆச்சரியம் தருகிற திருப்பமாகும். இந்தியும், ஆங்கிலமும் பேசும் என்னுடைய பள்ளியிலிருந்து நான் வீட்டிற்கு ஐந்தாவது படிக்கும் பொழுது வந்து சேர்ந்தேன். அப்பொழுது, “நாம்பலாம் தமிழா?” என என் அன்னையிடம் மழலைத் தமிழில் நான் கேட்ட தருணத்தில் தான் என்னுடைய வருங்கால அறிவுலகின் வளர்ச்சிக்கான விதைகள் ஊன்றப்பட்டதாக என்னுடைய அன்னை ஆணித்தரமாகப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். என் நினைவோ வேறொன்றைச் சுட்டுகிறது. மெட்ராஸில் இருந்த என்னுடைய பாட்டி ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்துக்கும் எழுதிய கடிதத்தைப் புரிந்து கொள்ளும் பதின்பருவத்து வேட்கையில் என்னுடைய தமிழ் சார்ந்த தேடல் துவங்கியது. ஆங்கிலம், தமிழ் கலந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் எனக்குப் புரிபடாத புதிராகவே இருந்தது. கடிதத்தின் துவக்கத்தில் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான
உடல்நலம் சார்ந்த விசாரிப்புகளுக்குப் பின்னர்த் தமிழ் மொழிக்கு மாறிவிடும். சுவாரசியம் மிகுந்த, குடும்ப ரகசியங்கள், மகிழ்ச்சிகள் என்று அமைந்த குடும்ப வாழ்க்கையின் முக்கியமான தகவல்கள் தமிழில் அமைந்திருக்கும். இது என்னுடைய மொழியறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. கவர்ச்சிமிகுந்த குடும்ப அரசியலின் கூறுகளை நான் புரிந்து கொள்ள முடியாதவாறு சாதுரியமாகத் தடுத்த மொழி அரசியலை தாண்டுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டேன். பதினைந்து வயதில் தமிழை எழுதக் கற்றுக் கொண்டேன். மெதுவாக, ஆனால், உறுதியாக நான் தமிழில் வாசிக்கப் பழகிக் கொண்டேன். என்னுடைய உடன்பிறந்தவர்களுக்கு ஆர்வமூட்டும் அந்தக் கடிதங்களைப் படித்துக் காட்டும் பணியை நானே செய்தேன். இன்றுவரை அவர்களுக்குத் தமிழைப் படிக்கத் தெரியாது.
 
நான் இப்பொழுது கோட்பாட்டு ரீதியாக விளக்கக் கூடிய மொழி அரசியலின் நேரடி அனுபவத்தை அப்பொழுதுதான் பெற்றேன். பல்வேறு மொழிகள் குடும்பத்திலோ, நாட்டிலோ பெருகுகையில் மொழி மூலங்களைப் பயன்படுத்தித் தங்களுக்கு நெருக்கமான அரசியலை அரசியலை தங்களுக்கு மட்டும் புரியும் மொழியில் மேற்கொள்வதன் மூலம் பரிச்சயம் இல்லாத மற்ற மொழிக்காரர்களை அந்நியப்படுத்தும் அரசியலின் அறிமுகம் வீட்டிலேயே கிட்டியது.
என்னுடைய இளங்கலை படிப்பை டெல்லி பல்கலையிலும், மேற்படிப்பை ஜவகர்லால் நேரு பல்கலையிலும் படிக்கையில் என் அறிவுசார் ஆர்வம் தமிழ் பேசும் இந்தியாவின் வரலாறுகள், பண்பாடுகள் மீது அதிகரித்தது. இந்தியாவின் தலைசிறந்த இரு பல்கலையிலும், மிகச் சிறந்த சில வரலாற்றாசிரியர்களுடன் வரலாற்றைக் கற்றேன். அது இன்றுவரை எனக்குப் பெருமளவில் உதவுகிறது. இந்தியத் தலைநகரில் இந்தியாவின் புவியியல், அரசியல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு போலத் தென்னிந்தியா சார்ந்த வரலாற்றுத் துறை ஆர்வம் பெருமளவில் இல்லாமல் இருந்தது என்னைச் சஞ்சலப்படுத்தியது. தமிழகத்தில் வலிமைமிகுந்த பிராமண எதிர்ப்பு இயக்கத்துக்குப் பின்னால், பிறப்பால் பிராமணப் பெண்ணான என்னுடய தமிழ் சார்ந்த ஆர்வத்தை எனது தாய்வீடாக நான் கருதிய தமிழ்நாடு வரவேற்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து என்னைப் பெனிசிலுவேனியா பல்கலையின் மானுடவியல் துறைக்கும், பின்னர்ப் பெர்க்லியில் உள்ள கலிபோர்னிய பல்கலையின் வரலாற்றுத் துறைக்கும் கொண்டு சென்றது. நான் தட்டுத்தடுமாறிய என் “தாய்மொழி”யை என் வீடு, தாய் ஆகியோரை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்த நாட்டில் முறையாகக் கற்றுக்கொண்டேன் என்பது தமிழுடனான என்னுடைய நம்பிக்கையற்ற காதலின் வரலாற்றுக்குப் பொருத்தமான முடிவாகும்.
 
நான் ஒரு மொழியைப்பேசி அதைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒற்றை அடையாளத்தோடு வளரவில்லை. பலதரப்பட்ட, சமயங்களில் முழுமையற்ற வெவ்வேறு சூழல்களில் நான் பயன்படுத்திக் கொள்ளும் வசதியான (சுமையான?) அடையாளங்களோடு வளர்ந்தேன். ஒருபுறம், இதனால் பல மொழிகளுக்கும், பல வீடுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டதாக அடிக்கடி மோசமாக உணர்ந்தேன். இதற்கு நேர்மாறாக, பல மொழிகள், பல இடங்கள், பல மனிதர்களிடையே இருத்தல் ஆகியவற்றின் ஆனந்தங்கள், சாத்தியங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றையும் சிறப்பாக அனுபவித்தேன். இந்த வாழ்க்கை எனக்குப் பெண்ணியத் தத்துவவியல் அறிஞர் ரோசி ப்ராய்டோட்டியின் கருத்தாக்கத்தை நினைவுபடுத்துகிறது.
 
இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த அவர் பிரெஞ்சு மொழியில் கல்வி கற்றார். இப்படிப்பட்ட பல்வேறு அடையாளங்கள் தாங்கிய வாழ்க்கையை அவர், ‘நாடோடி உணர்வு நிலை’ என்கிறார். இது என்னுடைய அடையாளங்களுக்கு இடையேயான வாழ்க்கையை எதிரொலிப்பது போல உள்ளது. 1994-ல் ‘Nomadic Subjects’ எனும் தனிக்கட்டுரையில் இப்படிப்பட்ட உணர்வுநிலை, ‘மையம், அது சார்ந்த குறிப்பிட்ட இடங்கள், குறிப்பிட்ட வகையான அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எனும் கருதுகோள்களை முழுமையாக மூழ்கடிக்கிற ஒன்றாக உள்ளது’ எனக் கருதுகிறார். மேலும், இந்த உணர்வுநிலை சமூகம் வரையறுத்து இருக்கும் சிந்தனை, செயல்பாடுகளோடு பொருந்திப் போவதை தன்னளவில் எதிர்க்கிறது, மேலும், ஒருவரை அடையாளப்படுத்தும் பெரும்பான்மை வழிமுறைகளின் ஆதிக்கத்தில் கரைந்துவிடாமல் தன்னை இந்த உணர்வுநிலை காத்துக் கொள்கிறது என்கிறார்.
 
நாடு கடத்தப்பட்ட, இடம் பெயர்ந்த மக்களின் உணர்வுநிலையில் காணப்படும் பிரிவு, இழப்பு, தாய்வீடு திரும்புதல் முதலிய உணர்வு நிலைகளுக்கு மாறாக, ஒரு நாடோடி தன்னுடைய உலகத்தோடு கொண்டிருக்கும் உறவானது, ரோசி ப்ராய்டோட்டியின் பார்வையில் ‘தோன்றி மறையும் பிணைப்பு’ மற்றும் ‘சுழற்சியில் அடிக்கடி தோன்றும்’ உறவாகும். இந்த நாடோடி பாணியானது, கடந்த காலத்தின் நிலை, பெருமிதம், ஒற்றைத்தன்மை ஆகியவற்றில் மனதை பறிகொடுத்து நிலைத்து நிற்பதில்லை. இந்த நாடோடித்தன்மை பன்மொழிப்புலமையோடு கைகோர்த்துப் பயணிக்கிறது. நிலையான அடையாளங்கள், தாய் மொழிகள் குறித்து ஆரோக்கியமான சந்தேகம் கொள்கிறது. நாடோடியான பன்மொழிப் புலமையாளர் பல்வேறு மொழி அடிப்படைகளிடம் மென்மையான நெருக்கம் கொண்டிருப்பதால் எந்த வகையான மொழி அல்லது இனத் தூய்மையை நாடுவதில்லையோ? என ரோசி ப்ராய்டோட்டி வினா எழுப்புகிறார். (Braidotti 1994: 8, 28).
 
இந்த ஆயிரம் ஆண்டுகளின் கேள்விகேட்கும் சிந்தனையின் முன்னுதாரணமான வடிவமாக நாடோடித்தன்மையைக் கருதும் ப்ராய்டோட்டி யின் எல்லாக் கருத்துக்களோடும் நான் ஒப்ப வேண்டியதில்லை. அவருடைய ஆர்வமூட்டும் பரிந்துரைகளின் தத்துவத் தாக்கங்கள் குறித்து நுண்ணாய்வு செய்யப்போவதில்லை. பின்காலனிய காலத்தில் பல்வேறு மொழிகள், வீடுகளுக்கு இடையே வாழும் நாடுகளைக் கடந்த நாடோடி மக்களின் வாழ்க்கை முடக்கிப்போடும் பயனற்றவைகளின் தொகுப்பாக அல்லாமல், பல முக்கியமான வாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகக் காண முடியும் என எனக்கு எச்சரித்த படைப்பாகவே காண்கிறேன். புதுப்பித்துக் கொள்ளும், மோசமாகிக் கொண்டே இருக்கும் தேசியம், பிரிவினைவாதம், இடப்பற்று சார்ந்த உணர்வுநிலைகள் மிகுந்த இந்த வரலாற்றின் குறிப்பிட்ட தருணத்தில் அவற்றைக் கவனத்தோடு அணுக இந்த நாடோடி உணர்வுநிலை உதவுகிறது. இதனால் ப்ராய்டோட்டி சொல்வதைப்போல ‘ஏற்படுத்தப்பட்ட பகுப்புகளிடையேவும், அனுபவத் தளங்களின் ஊடாகவும் சிந்திக்கவும், பயணிக்கவும் முடிகிற, எல்லைகளை மழுப்பி, பாலங்களை எரிக்காமல் செயல்படவும் முடிகிறது’ (1994: 4, 12).
 
கலாசார அடிப்படைகள், நம்பிக்கைகள் சார்ந்த கட்டமைப்புகள் அதிகாரம் மறுக்கப்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வலிமை பெறும் முக்கியமான வழிமுறைகளாக உள்ளன. பின்னோக்கி சொல்வதைச் சாராமாகக் கொண்ட இந்தக் கலாசார நம்பிக்கைகளுக்கு யார் அங்கீகாரம் தருவது என என்னுடைய நாடோடி உணர்வுநிலை கேள்வி கேட்கிறது. எந்தச் சூழல்களில் இது நிகழும்? மிக முக்கியமாக, ஏன், எப்படிக் கலாசாரச் சொத்துக்களான மொழி, மதம் அல்லது எல்லாவற்றை விடவும் புனிதமான உடமையாகக் கருதப்படும் தேசம் ஆகியவை மிகப்பெரும் உருவம் கொண்டதாக, அழியாத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன? இதன்மூலம் எப்படி இவை ஆட்கொள்பவர்களை ஆட்கொள்கின்றன?
(இந்நூலின் முதல் பக்கம்: )
figure
 
இந்தப் புத்தகமும், என்னுடைய வாழ்க்கையைப் போல நாடோடித் தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி இந்த நூல் உருவாக்கத்தில் பயன்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் கண்டங்கள், கலாசாரங்களைக் கடந்து செய்தேன். புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராசில் எழுதப்பட்டது, பிற பகுதிகள் அமெரிக்காவில் இருந்தாலும் மிகவும் வேறுபட்ட கலசார, அறிவார்ந்த இடங்களான பெர்க்லே, சிகாகோ, பிலடெல்பியா ஆகியவற்றில் எழுந்தன. என்னுடைய வாழ்வின் இந்திய பக்கங்கள் அமெரிக்க ஆய்வுப்புலத்தில் அரிதாகி வரும் என்னுடைய இருப்பில் ஒரு வேகத்தையும், வேட்கையையும் செலுத்துகின்றன. அதேசமயம், நான் பணியாற்றும் இடத்தில் நான் பெற்று இருக்கும் நிலையே பகுத்தாயும், மையமற்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய நாடோடி வாழ்க்கையை வசதியாகத் தொடர உதவுகிறது. வரலாற்றை எழுதுதல் என்பது சமீப வருடங்களில் நாட்டைப் பற்றி எழுதுவதோடு சிக்கலான செயல்பாடாகப் பிணைந்துள்ளது என்று பலமுறை சொல்லப்பட்டு விட்டது.
Image result for passions of the tongue
 
அதிகாரப்பூர்வ வரலாறுகள் பெரும்பாலும் நாடு என்கிற வெளிக்குள் இருந்தே எழுதப்பட்டுள்ளன. எனினும், இந்த வரலாற்று நூல் நாடுகளைக் கடந்து, மொழிகளை, இருப்பிடங்களைக் கடந்து பயணிக்கிறது. இதன் இறுதி உருவாக்கம் அது பேசும் மக்கள், அந்த மக்களைக் குடிகளாகக் கொண்ட நாடு ஆகியவற்றை விட்டு வெகுதூரம் தள்ளிய ஒரு இடத்திலேயே நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட படைப்பின் உள்ளடக்கத்தால் ஏற்படக்கூடிய வரவேற்பு, வாசிப்பு சார்ந்த சிக்கலான விளைவுகளை நான் அறிந்திருந்திருக்கிறேன். எனினும், சல்மான் ருஷ்டியுடன் இணைந்து ‘பகுத்தாய்வு சிந்தனை யின் நோக்கம் புதிய கோணங்களில் வரலாற்று உண்மைகளைத் திறந்து விடுவதும், கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளை நிலைகுலைப்பது’ என்றே சிந்திக்க விரும்புகிறேன். என்னுடைய நாட்டைவிட்டு நிகழ்ந்த நகர்வு, பகுத்தாயும் நாடோடி வாழ்க்கை எனக்கு உறுதியான வாய்ப்பை தருகிறது. இல்லையேல், ரூஷ்டி எள்ளல் ததும்பச் சொல்வதைப் போல, இப்படி எண்ணிக்கொள்வது தான் என்னுடைய பணியைச் செவ்வனே செய்ய உதவும்.
 
தமிழில் – பூ.கொ.சரவணன்

மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் அரிய பணிகள்


:
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’ என்கிற குறுநூலை எழுதியுள்ளார். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த பெ.சு நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். அவர் மொத்தமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவை 650 பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றின் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
தன்னுடைய மனோன்மணியம் நாடக நூலில் தன்னை, ‘அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்’ என்று அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்த்த பெ.சு. தன்னுடைய தமிழார்வத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து மாட்டுவண்டி ஏறி செங்கோட்டை அடைந்து அங்கிருந்து சென்னை வரை பயணம் செய்து தமிழறிஞர்களைக் கண்டு, அறிவுப்பசி ஆற்றிக்கொண்டார். அன்றைய சமஸ்தான மன்னரின் உதவியோடு லண்டனில் இருந்து ஆங்கில நூல்களை வரவைத்து வாசித்து இருக்கிறார்.

களக்காட்டில் இருந்து ஆலப்புழைக்குக் குடிபெயர்ந்த வேளாளர் குடும்பம் என்றாலும் தமிழையும், சைவத்தையும் பெ.சுவின் குடும்பம் மறக்கவில்லை. திருவிதாங்கூர் அரசர்களின் மொழி வெறுப்பற்ற தன்மை இதற்குக் காரணம் என்று ஆதாரங்களோடு கவனப்படுத்துகிறார் அ.கா.பெருமாள். பெ.சு வரலாறு, தத்துவம் பயின்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்றாலும் அப்படிப்பை அவர் முடிக்கவில்லை. பெ.சு. அவர்கள் திருநெல்வேலி ம.தி.தா. இந்துப்பள்ளியின் தலைமைப்பொறுப்பில் இருந்த போது தமிழை முறையாகக் கற்றதோடு, ஸ்ரீ கோடகநல்லூர் சுவாமிகளிடம் சித்தாந்த சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு தானே சுயமாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ளார். திருவனந்தபுரம் கல்லூரியில் பயின்ற போது தமிழ்த்துறைக்குப் புத்தகங்களை வாங்கியுள்ளார்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் தத்துவத்துறை பேராசிரியராக இருந்த முனைவர் ராபர்ட் ஹார்வி இங்கிலாந்து போக வேண்டி இருந்த போது தன்னுடைய இடத்திற்குப் பெ.சுவை பரிந்துரை செய்தார். 1878-1882 வரை தத்துவ ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மூன்றாண்டுகள் சமஸ்தான மன்னரால் பிறவகைச் சிரஸ்தார் என்னும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இது அரசு நிர்வாகம் தொடர்புடையது. இப்பணி காலத்தில் தான் பல்வேறு கோவில்களுக்குப் பயணம் செய்து, கல்வெட்டுகள், ஆவணங்களைப் பெ.சு. ஆய்வு செய்துள்ளார். 1885-1897 வரை ஹார்வியின் பரிந்துரையால் மகாராஜா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். நன்றி மறவாமல் தன்னுடைய வீட்டிற்கு ஹார்விபுரம் என்று பெயரிட்டதோடு, தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தை அவருக்கே சமர்ப்பித்தார்.

நாடகாசிரியர்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தமிழ் நாடகங்கள் எழுந்தன. தமிழகத்தில் அக்காலத்தில் 327 நாடகங்கள் வெளிவந்ததாக ஒரு ஆய்வுக்குறிப்புண்டு. பெ.சு இத்தகைய நாடகங்களைப் படித்துள்ளார். லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி கதையின் தழுவலாகத் தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தைப் பெ.சு எழுதினார். பெ.சுவின் நாடகம் எளிமை, விறுவிறுப்பு, அமைப்பிற்காகப் பரவலாகப் படிக்கப்பட்டது. இந்நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடு பெ.சு எழுதவில்லை, வாசிப்பின்பத்திற்காகவே அதனை இயற்றியதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

வெண்பா, கலிப்பா, குறள் வெண்செந்துறை, வஞ்சிப்பா என்று பல்வேறு பாவினங்கள் விரவிவர இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலை தத்துவப் பின்னணியோடு பெ.சு படைத்தார். ‘இல்லறம், துறவறம், பக்தி ஞானம் முதலிய மோட்ச சாதனங்கள்’ பாத்திரங்களின் மூலம் உருவகப்படுத்தி இந்நாடகம் அமைந்தது.

Image result for சுந்தரம் பிள்ளை ncbh
இந்நாடகத்தில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி’ என்கிற வரி நூலில் இடம்பெறுகிறது. ‘பத்துப்பாட்டில் மனம் பற்றியவர் பிற நூற்களைப் பற்றமாட்டார்’ என்று பெ.சு சிலிர்க்கிறார். மனோன்மணியம் நாடகம் பல்வேறு பல்கலைகழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புக்கு உரியது.

ஆய்வறிஞர்:
கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப் பெ.சு. படியெடுத்து உள்ளார். ஆங்கிலத்தில் பத்துப்பாட்டு, திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார். பத்துப்பாட்டின் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ.சு மொழிபெயர்த்துள்ளார்.

திருவிதாங்கூர் வரலாறு கட்டுரையில் கொல்லம் ஆண்டு என்கிற வழக்கம் எப்படி வந்தது என்பதைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்து புதியதொரு பார்வையை முன்வைக்கிறார். அக்கட்டுரையில் சமூக நோக்கோடும் பெ.சு எழுதியுள்ளார். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆரியப்பண்பாடும், ஆரியருக்கு முந்தைய திராவிடப்பண்பாடும் இணைந்தே உள்ளன என்கிற பெ.சு கன்னியாகுமரி முதல் பறவூர் வரை பயணிக்கும் ஒருவன் பழம் திராவிட மரபைக் காணமுடியும் என்கிறார். திருவிதாங்கூர் பகுதியின் வேணாட்டு மன்னர்களின் காலத்தைப் பெருமளவில் துல்லியமாக முதலில் கணித்தவர் பெ.சு. சம்பந்தர் காலம் கட்டுரையில் அவரின் காலத்தைச் சமூகச்சூழல், சமூக வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெ.சு கண்டறிந்துள்ளார். ஆதி சங்கரரின் நூல்கள், மத்தவிலாச பிரகசனம் ஆகியவற்றைக்கொண்டு சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். ராஜராஜன் காலமே நம்பியாண்டார் நம்பி காலம் என்றும் வாதிடுகிறார்.

ராமாயணத்தின் சாதி குறித்துக் கூர்ந்து நோக்கிய பெ.சு. அது குறித்து வெ.சு. முதலியாரிடம் பேசினார். அதைக்குறித்து எழுதவுள்ளதாகச் சொன்னாலும் அதற்குள் அமரரானார். ஆகவே, பெ.சுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறித்துக் கட்டுரை வரைந்தார் வெ.சு.முதலியார். ‘அதில் ராமாயணம் ஆரியச்சார்புடையது. ஆரியர் என்பவர் தமிழ் பிராமணர், வட இந்திய சாதியர் சிலரைக் குறிக்கும் சொல். ஆரியர் அல்லாத அநாரியர் தென்னிந்தியக் குடிகள் ஆவர்.’ என்றதோடு, ‘பெண்ணைச் சிறைப்பிடித்தும் ராவணன் கொல்லவில்லை, திராவிடப்பெண்ணான சூர்ப்பநகையை லட்சுமணன் துரோகம் செய்தவன். விபீஷணன் என்ற திராவிடன் துரோகம் செய்தவன்; அதற்காக ஆழ்வார் பட்டம் பெற்றவன். ஆரியர்கள் திராவிடர்களை இழிவானவர்கள் எனச் சொல்லி நம்பும்படி ஆக்கிவிட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

உரைநடையாசிரியர்:
உரைநடையில், ‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற ஒரே நூலை எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு. இதைக்குறித்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில். ‘….சுந்தரம்பிள்ளை தன் நூலில் தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்களைத் தந்திருக்கிறார். வடசொற்களை விலக்கும் கருத்தே இவரிடம் கிடையாது. தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டுவன செய்தவர்களில் சுந்தரம் பிள்ளை தலைசிறந்தவர்’ என்று புகழாரம் சூட்டுகிறார்.

கவிஞர்,கட்டுரையாசிரியர்:
பெ.சு. ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார். ஒரு நற்றாயின் புலம்பல் மணமாக வேண்டிய தினத்தன்று இறந்து போன மகள் குறித்து அரற்றும் அன்னையின் அழுகுரல். பொதுப்பள்ளி எழுச்சி தத்துவ நோக்கோடு அறியாமைத் துயிலில் இருந்து எழுப்பிய இறைவனை நோக்கி பாடப்பட்டது. அன்பின் அகநிலை விவிலியத்தின் புனித பவுல் கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் பெ.சு எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Hobbes, the father of English ethics’. ‘Bentham, The Juristic Moralist’, ‘A scene from A Tamil play’, H.T.Wills முதலிய கட்டுரைகள் எழுதினார்.

தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தின் துவக்கத்தில்’தமிழ் மொழியின் இலக்கியங்களை அழியாமல் பாதுகாத்த திருச் சி.வை.தாமதோரன் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் ஆகிய இருவரையும் வணங்குகிறேன். கல்வி, கேள்வி, அறிவு முதலியவற்றால் சிறியவனாகிய நான் மனோன்மணியம் என்னும் நாடகத்தைப் படித்திருக்கிறேன்.’ என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார். உ.வே.சா மனோன்மணியத்தைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்படைப்பில் குறைகள் உண்டு என்றதை பெ.சு அறிந்தார். கடிதம் எழுதி குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்கவும் செய்தார். மேலும், திருவிதாங்கூர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வருமாறு உ.வே.சாவிற்கு அன்போடு அழைப்பு விடுத்தார்.

தமிழக அரசு அவரின் தமிழ்த்தெய்வ வாழ்த்தை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கியது. அவரின் மூலப்பாடலில், ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை’ என்கிற வரி வடமொழி வெறி நிலவிவந்த காலத்தில் எதிர்க்குரலாக ஒலித்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் உருவான போது, நாஞ்சில்நாடு தமிழர்க்கு உரியது என்று தன்னுடைய மனோன்மணியம் நூலில் பெ.சுந்தரனார் குறிப்பிட்டு இருந்தது கவிமணி, ஜீவா, ம.பொ.சிவஞானம் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டு இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

நாற்பத்தி இரண்டு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பெ.சுந்தரனாருக்கு அஞ்சலியாக அவர் உ.வே.சாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளே அமையக்கூடும்: ‘நம்மனையார் தேகநிலையைக் கருதும்போது இருதலைக்கொள்ளியினுள் எறும்பு என்றே உண்மையாய் எண்ண வேண்டியதாக இருக்கிறது. உழைத்தால் சரீர உபாதை துணிபாக நிற்கிறது. உழைக்காவிட்டால் சரீரமிருந்து என்ன பயனென்ற சோகமும் அப்படியே ஏது செய்ய? கடவுள் இச்சைபோல நடக்கட்டும்’

மிக முக்கியமான ஆளுமையின் பன்முகத்தன்மையை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது அறிஞர் அ.கா.பெருமாளின் இக்குறுநூல்.

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் -அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள்: 82
விலை: 70

கோவிந்தப்பா வெங்கடசாமி எனும் கண்ணொளி காத்த செம்மல்!


கோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களுக்கு இது நூற்றாண்டு..இளம் வயதில் அவருடைய மூன்று ஒன்று விட்ட சகோதரிகள் பிரசவத்தின் போது இறந்து போயிருந்தார்கள். மகப்பேறு மருத்துவராக ஆகிவிட வேண்டும் என்கிற கனவு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற பிறகு, ராணுவத்தில் சேர்ந்து மகப்பேறு துறையில் மேற்படிப்பை படித்துக்கொண்டிருந்தார். கடுமையான மூட்டுவலி (rheumatoid arthritis) அவரைத் தாக்கியது. இரண்டாண்டுகள் எழவே முடியாத நிலைமை. அப்படி மீண்டு வந்த போது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாண்டுகள் படுத்த படுக்கையாக இருக்க வைத்த மூட்டுவலியால் இனிமேல் கத்தி பிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்கிற நிலைமை.

துவண்டு போக வேண்டிய நிலைமை. டாக்டர் வெங்கடசாமி மனந்தளர்கிற ஆளில்லை. நீண்ட நேரம் கருவிகளைப் பிடிக்க வேண்டிய தேவையில்லாத கண் மருத்துவராக முடிவு செய்தார். கண் மருத்துவம் பயின்று முடித்த பிறகு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். அது விடுதலைக்குப் பிந்தைய ஆரம்பக் காலம். ஒருவருக்குக் கண் பார்வை மங்கினாலோ, கண்புரை ஏற்பட்டாலோ கிட்டத்தட்ட அது நடைப்பிண நிலைமை தான். அழைத்துச்செல்லும் அளவுக்கு ஏழைகளுக்கு ஏற்ற மருத்துவமனைகள் கிடையாது. வீட்டில் கண்பார்வை தெரியாமல் ஒரு ஓரமாக முடங்கிட வேண்டும். சாப்பாட்டை எடுத்துப்போட்ட தர ஆளிருக்க மாட்டார்கள். இப்படிப் பலர் கண்பார்வை போனதற்குப் பிறகு சீக்கிரமே உடல் நலிந்து, இறந்து போவதை வெங்கடசுவாமி கண்ணுற்றார்.

(இனிமேல் டாக்டர் வெங்கடசாமியை, ‘டாக்டர் வி’ என்றே அழைப்போம். ) நம்மைத்தேடி வர முடியாத ஏழைகளைத் தேடிப்போவோம் என்று முடிவு கட்டிக்கொண்டார் டாக்டர் வி. அப்படித் துவங்கியது தான் இலவச கண் சிகிச்சை முகாம்கள். ஊர் ஊராகப் போய்ப் பல பேரின் பார்வையை மீட்டுத்தந்தார்கள். அப்படி ஓயாமல் உழைத்தும் கையளவு பேரையே காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர் வி கண்டுகொண்டார். விலை குறைவான அனைவருக்குமான கண் மருத்துவமனையைத் துவங்கினால் என்ன என்கிற எண்ணம் ஓய்வு பெற்ற ஐம்பத்தி எட்டு வயதில் உருவெடுத்தது.

ஹார்வார்டில் இருந்த தங்கை நாச்சியார், அவருடைய கணவரை தோள் கொடுக்க அழைத்தார். வங்கிகள், நண்பர்களிடம் கடன் கேட்டார்கள். ‘சேவை செய்வதற்கு இந்த வயதான காலத்தில் கடனா?’ என்று ஏளனம் செய்தார்கள். கைவிரித்தார்கள். வீட்டில் இருந்த நகைகளை, வீட்டை எல்லாம் அடமானம் வைத்து சில கருவிகளோடு சகோதரர் ஸ்ரீனிவாசன் வீட்டையே மருத்துவமனை ஆக்கி பதினொரு படுக்கைகளோடு பயணத்தைத் துவங்கினார்கள். கட்டணம் தரக்கூடிய நோயாளிகளிடம் பணம் பெற்று ஏழைகளுக்கு மிகக்குறைவான செலவில் மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்கள். சீக்கிரமே நாச்சியாரின் கணவரும், சகோதரியும் குழுவில் இணைந்து கொண்டார்கள். அரவிந்த் கண் மருத்துவமனை கிளை பரப்ப ஆரம்பித்தது.

அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் போயிருந்த போது மெக்டொனால்ட் உணவகங்களை டாக்டர் வி கண்டார். அவருக்குள் அமெரிக்கப் பெருநிறுவனங்களின் பாய்ச்சல் ஒரு கேள்வியை எழுப்பியது. “மெக்டொனால்ட் பல கோடி பர்கர்களை விற்றுத் தீர்க்கிறது. கோககோலா பல கோடி குளிர்பானங்களை விற்பனை செய்கிறது. இவர்களால் முடியும் என்றால் என்னால் சில லட்சம் கண் பார்வை அறுவை சிகிச்சைகளைச் சாதிக்க முடியாதா?”. மெக்டொனால்ட்டின் ‘assembly line’ முறையை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார்.

ஒரே அறையில் வரிசையாகப் பல்வேறு மருத்துவர்கள் கண் நோயாளிக்குச் சிகிச்சை தந்தார்கள். கண் என்பது உள்ளே இருக்கும் உறுப்பு என்பதால் நோய் தொற்றுக்கான வாய்ப்புக் குறைவு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு சுகாதாரமான நடைமுறைகளோடு அதி விரைவாக அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்தார்கள். ஆண்டுக்கு நானூறு அறுவை சிகிச்சைகள் வரை செய்து கொண்டிருந்த மருத்துவர் இதனால் இரண்டாயிரம் அறுவை சிகிச்சைகள் வரை செய்வது சாத்தியமானது.

Image result for venkataswamy

இன்னொரு முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டது. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் மட்டுமே செவிலியர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்கிற நடைமுறையை மாற்றினார்கள். பத்தாவது முடித்திருந்தால் போதும். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நேர்முகம் நடத்தி பயிற்சிக்கு சேர்த்துக்கொள்வார்கள். இரண்டாண்டுகள் தீவிர பயிற்சிக்கு பிறகு ‘நடைமுறை அறிவு’ மிக்கச் செவிலியர்கள் தயார். இவர்களுக்குக் கை நிறையச் சம்பளம் தர முடியாது என்றாலும் கிடைக்கிற நிறைவு சொற்களில் அடங்காதது. ‘கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியை விட வேலை நிறைய, சம்பளம் கம்மி தான். ஆனா பஸ்ல போறப்ப எல்லாரும் அடையாளம் கண்டுப்பாங்க. அவ்ளோ மரியாதை கிடைக்கும். அன்பை பொழிவாங்க. எழுந்து நின்னு உக்காருமானு சொல்வாங்க. வேறென்ன வேணும்’ என்று பேராசிரியர் சி.கே.பிரகலாத்திடம் ஒரு செவிலியர் தெரிவித்தார்.

அடிப்படையான சோதனைகள், கவனிப்புகள் ஆகியவற்றைச் செவிலியர் வேகமாக முடித்து விடுவார்கள். பின்னர்த் துரிதமாக மருத்துவர்கள் இயங்கி அறுவை சிகிச்சையை முடிப்பார்கள். தற்சார்புள்ள நிறுவனமாக அரவிந்த் கண் மருத்துவமனை திகழ்கிறது. கையுறை, கருவிகள், மருந்துகள் என்று கிட்டத்தட்ட அனைத்துமே தானே தயாரித்துக் கொள்கிறது. 30% பணமுள்ள நோயாளிகளிடம் இருந்து பெறும் பணத்தைக் கொண்டு மிச்சமுள்ள சிகிச்சைகளை இலவசமாகவோ, மிகவும் மலிவாகவோ செய்ய முடிகிறது.

எடுத்துக்காட்டாகக் கண் அறுவை சிகிச்சைக்குப் பின்னர்ப் பொருத்தப்படும் Intraocular lens. இதன் விலை சில ஆயிரங்களில் இருந்தது. சில தொண்டு நிறுவனங்கள் கை கொடுத்தன. தானே தயாரித்து இருநூறு ரூபாயில் நோயாளிகளுக்குச் சிறந்த தரத்தோடு அரவிந்த் கண் மருத்துவமனை தர ஆரம்பித்தது.இன்றைக்கு மிகக்குறைந்த விலையில் இந்த லென்ஸ்கள் உலகின் 160 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் டாக்டர் வியின் வழியாக இருந்தது. வருகையாளர் அறை, மருத்துவர் அறைகள், வரவேற்பு அறை ஆகிய அனைத்தும் மிக எளிமையாக இருக்கும். ஆடம்பர அலங்காரங்கள் அறவே கிடையாது. ஆனால், மருத்துவச் சேவையில் துளியும் சமரசம் இல்லை. நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த தேவையான லாபத்தையும் தொடர்ந்து ஈட்டிக்கொண்டே இருக்கிறது.

‘கண்ணொளியின் மூலம் மக்களைப் பசி, பயம், வறுமையில் இருந்து விடுவிக்க இயலும். உடம்பை உறுதி செய்து, சிந்தனை, ஆத்மாவை முழுமையடைய வைக்க இயலும். கண் பார்வை மக்களின் சிந்தனை, செயல்பாட்டை உயர்த்த வல்லது’ என்றொரு பேட்டியில் நம்பிக்கை நிறையப் பேசினார் டாக்டர் வி. அவரின் விழி வேள்விக்காக இறுதி வரை அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்தியாவில் கண் சிகிச்சை தேவைப்படுபவர்களில் 10% பேரே மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். மீதமுள்ளவர்களைக் கொண்டுவரும் கனவுப்பயணத்தைத் தொடர்ந்திட இன்னும் ஆயிரமாயிரம் அரவிந்த் கண் மருத்துவமனைகளும், சில நூறு டாக்டர் விக்களும் தேவை.

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?


எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

(“என்னால் எம்.ஜி.ஆராக ஆக முடியாது; ஆனால், எம்ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்” என்று அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் ஆட்சி உண்மையில் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இங்கே பிரசுரிக்கப்படுகிறது. பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ள ‘Image Trap’ நூலிலிருந்து எடுத்தாளப்படும் கட்டுரை இது. )

எம்.ஜி.ஆரின் மீது அடித்தட்டு வர்க்கம்கொண்ட அரசியல் பக்திக்கான காரணம் தன்னுடைய 11 வருடகால ஆட்சியில் அவர் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அல்ல என்பது புரியாத புதிராகும். அவருடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் எந்த முக்கியமான கட்டமைப்பு மாற்றமோ, ஏழைகளின் துயரங்கள் பெருமளவில் குறைவதோ நிகழவில்லை. தமிழ்நாடு அரசு எப்படித் தன்னுடைய நிதி மூலங்களைத் திரட்டியது, அவற்றை எப்படிச் செலவிட்டது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு, எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசு ஏழைகள் (மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்) மீது வரி போட்டுப் பணக்காரர்கள், கிராமப்புறச் செல்வந்தர்கள் பயன்பெறுமாறு செயல்பட்டது என்பதை விளக்குகிறது. (1)

ஏழைகளின் மீது சுமத்தப்பட்ட வரி

1975-85 வருடகாலத்தில் அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவிகிதம் விற்பனை வரியிலிருந்தே பெறப்பட்டது. இதில் பெரும்பான்மையான விற்பனை வரி நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் நுகர்வோர் பொருள்களான பருத்தி, இழைகள், மருந்துகள், பருப்பு வகைகள் தேயிலை, கரும்பு, மின்னணுப் பொருள்கள் மற்றும் சோப் மீதான வரிவிதிப்பு மூலமே பெறப்பட்டது. ஏழைகள் அதிலும் கொடிய வறுமைக்கு உள்ளான ஏழைகள் தங்களுடைய பயன்பாட்டை உணவு, அடிப்படைத் தேவைகளோடு நிறுத்திக்கொண்டதால் விற்பனை வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. 1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது. இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதற்கு நேர்மாறாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பணக்கார வர்க்கத்தினர் பெருமளவில் வரிவிதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிக்க அனுமதித்தது. நேரடி வரிகளான நில வரி, விவசாய வருமான வரி, நகர்ப்புற நில வரி முதலிய செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானமானது 1975-80 வருட காலத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் வெறும் 4.6 சதவிகிதம் மட்டுமே ஆகும். அடுத்த 1980-85 வருட காலத்தில் இந்த வரிகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் வெறும் 1.9 சதவிகிதத்துக்கு வீழ்ந்துவிட்டது. மேலும், 1960-65 வருட காலத்தில் நேரடி வரியின் மூலம் பெறப்பட்ட வரி வருமானமானது ஒட்டுமொத்த வரி வருமானத்தில் 15.5 சதவிகிதம் என்கிற பெரிய அளவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுச் செல்வந்தர்களின் சொத்துகளின் மீதும், வருமானத்தின் மீதும் நேரடி வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் செலுத்திய தாக்கம் வெகு சொற்பமானது.

… ஒட்டுமொத்த விவசாயத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் நேரடி வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே இக்காலத்தில் இருந்துவந்துள்ளது. உண்மையில் 1960களில் இருந்த 1.9 சதவிகிதத்திலிருந்து 1970களில் 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. விவசாய வருமானத்தின் மீதான நேரடி வரிவிதிப்பு முக்கியத்துவம் அற்றதாக மாறியது. விவசாய வருமானம் புதிய தொழில்நுட்பங்கள், பம்ப் செட்கள் வளர்ச்சியால் பெரிய விவசாயிகள் பலனடைந்த அக்காலத்தில் நேரடி வரிவிதிப்பு மேலும் குறையவே செய்தது. 1980களில் இந்தக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.

பணக்காரர்களுக்குப் பலன் தந்த ஆட்சி

எம்.ஜி.ஆர் ஆட்சி ஏழைகள் மீது வரிவிதித்து வாழ்ந்தது என்றால், அது பணக்காரர்களுக்குப் பலன் தந்தது, குறிப்பாக நிலவளம் மிகுந்த கிராமப்புறப் பணக்காரர்கள் பொதுச் செலவுகளின் மூலம் பலன் பெற்றார்கள். விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மானிய மின்சாரம் ஓர் எடுத்துக்காட்டாகும். விவசாயப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை எம்.ஜி.ஆர் அரசு 1979 வருடத்திலிருந்து படிப்படியாகக் குறைத்தது. இந்தப் பெரிய அளவிலான மானியத்தால் தமிழக மின்சார வாரியத்துக்கு ‘சராசரியாக 1980-85 காலத்தில் 150 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது. இதே காலத்தில் இந்த இழப்பீட்டு அளவு இரு மடங்கு அளவுக்கு அதிகரித்தது.’ இதேபோல, அரசு பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்திருந்த பொது நீர்ப்பாசன வசதிகளை மிகக் குறைந்த கட்டணங்களில் விவசாயத் துறை பயன்பாட்டுக்கு விட்டது.

ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயத் துறைக்கு மாநில அரசு வழங்கிய மானியம் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு வருடமும் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் போராட்ட அரசியலைத் தேவைப்படுகிறபோது பம்ப் செட் உரிமையாளர்களான பணக்கார விவசாயிகள் மேற்கொண்டார்கள். பலம் பொருந்திய அழுத்தக் குழுவாகத் திகழ்ந்த இவர்களுக்கே இந்தச் சலுகைகள் பெருமளவில் பயன் தந்தன.

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது என்று பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள். சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள். அஇஅதிமுக அரசின் முறையற்ற தனித்துவமான மதுக் கொள்கையானது தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ளும் டாஸ்மாக் அமைப்புக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களையே விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது. சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன. (2) லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. (3)

ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள்

பட்ஜெட் செயல்பாடுகளில் மட்டும் அஇஅதிமுக அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள் நின்றுவிடவில்லை. மற்ற கொள்கை சார்ந்த விஷயங்களிலும் ஏழை மக்களின் சிக்கல்களை அணுகுவதிலும் இரக்கமும் அறிவும் அற்றதாக அது நடந்துகொண்டது. 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது. (4) 1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது. (5)

இப்படி ஒருபக்கச் சார்பான பொருளாதாரக் குறுக்கீடுகளால் ஏற்பட்ட கட்டமைப்பு சார்ந்த விளைவுகள் கண்ணைக் கூசும் அளவுக்கு வெளிப்பட்டன. அதிகாரபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை. (6) மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது. 1972-73 & 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது. இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது. (7)

இப்படிப்பட்ட சமத்துவமின்மைகளோடு எண்ணற்ற மக்களை ஈர்க்கும் வகையில் 1982இல் பெருத்த ஆரவாரத்தோடு தொடங்கப்பட முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் முதலிய புகழ்பெற்ற பொருளாதாரத் திட்டங்களும் இணைந்தே இயங்கின.

ஜூலை 1982 முதல் பால்வாடி, நர்சரிகளில் பதிவு செய்துகொண்ட பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள இரண்டு வயதிலிருந்து இருக்கும் கிராமப்புறக் குழந்தைகள், பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளிக்குச் செல்லும் 38 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை என்கிற அளவில் வருடம் முழுக்கச் சத்துணவு வழங்கப்பட்டது. 56 லட்சம் பேர் திட்டம் தொடங்கப்பட்டபோது பங்கேற்றார்கள். செப்டம்பர் 1982இல் நகர்ப்புற குழந்தைகளுக்கும், மெட்ராஸ், மதுரை, கோவை பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 6.5 லட்சம் குழந்தைகள் இணைக்கப்பட்டார்கள். இரு மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே இருந்த கட்டமைப்பைக்கொண்டு மாதமொரு முறை பல்பொடி விநியோகிப்பட்டது.

… ஜனவரி 1983இல் முதியோர் ஓய்வுநிதி பெறுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள் இவர்களால் இன்னுமொரு 1.9 லட்சம் நபர்கள் கூடுதலாக இணைந்தார்கள். ஒரு வருடம் கழித்து முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் இலவச உணவு பெறத் தகுதி உடையவர்கள் ஆனார்கள். (8)

இதுவும், இதைப் போன்ற அளவில் சிறிய அரசியல் முதலீடுகளும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. அவை பொருளாதாரத்தின் கட்டமைப்பில் எந்த வகையான பெரிய மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. இவற்றுக்கான நிதி மூலங்கள் ஏழைகளிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தின் மூலமே சாத்தியமானது, இவை வருமானம், சொத்து ஆகியவற்றைப் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதில் மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தின.

சுருக்கமாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால், பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஒன்றாகும்.

அடிக் குறிப்புகள்:

1. இப்பகுதியின் விவரங்கள், வாசகங்கள் உட்படப் பெரும்பாலானவை எஸ்.குகன் (1988) தமிழ்நாட்டின் மாநில நிதிகள்: 1960-85: போக்குகள், கொள்கை பற்றிய மறுஆய்வு. செயற்தாள் 77, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்டல் ஸ்டடிஸ், மெட்ராஸ்.

2. இந்தியா டுடே, 31 மார்ச் 1989; அசைட் 15, மார்ச் 1989

3. அசைட் 15 மார்ச் 1989; அசைட் ஜூன் 16, 1988.

4. துக்ளக் 1 மார்ச் 1987

5. இந்தியன் எக்ஸ்பிரஸ், 3 பிப்ரவரி 1987

6. மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட்டல் ஸ்டடிஸ், 1988: 345

7. மேலே குறிப்பிட்டுள்ள அதே புத்தகம்

8. பார்பரா ஹாரிஸ், (1988) தென்னிந்தியாவில் உணவு, மதிய உணவு: உணவு, தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற உணவு பொருளாதாரத்தில் ஊட்டச்சத்துக் கொள்கை. விவாதத்தாள் 31, வளர்ச்சி ஆய்வுப்பள்ளி, கிழக்கு ஆங்க்லியா

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1958-2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துகளையும் தமிழகத்துக்கு வெளியே காத்திரமான முறையில் விரிவாக முன்வைத்தவர் இவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சினைகள், சாதியச் சிக்கல்கள், தமிழ்த் திரைப்படங்கள் எனப் பல துறைகளிலும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களிடம் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர். தமிழின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்தவர்.)

 

(இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய ‘Image Trap’ நூலின் தமிழாக்கமான ‘பிம்பச் சிறை’ நூலின் (பிரக்ஞை பதிப்பக வெளியீடு) இரண்டாம் அத்தியாயத்திலிருந்துவெளியிடப்படுகிறது. தமிழில்: பூ.கொ.சரவணன். )