சாவித்திரிபாய் பூலே – கல்விக்கண் திறந்த ஆளுமை


சாவித்திரிபாய் பூலேவின் 125 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்பில் இருந்து..

‘வணக்கம். நலமா? என் பெயர் சாவித்திரிபாய் பூலே. என் கதையைச் சொல்கிறேன். இது பல்லாயிரம் பெண்களின் கதை.

என்னுடைய ஊர் சத்தாரா. இப்பகுதியின் அரசர் மூன்றாம் பேஷ்வா பாஜிராவ். ஊர் முழுக்கக் கட்டுப்பாடுகள். கல்வி என்பது பிராமணர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெண்கள் நிலைமை மோசம். குழந்தையாக இருக்கும் போதே திருமணம். கணவர் இறந்தால் மொட்டையடித்து ஒதுக்கிவிடுவார்கள். நெருப்பில் தள்ளும் வழக்கமும் உண்டு. படிப்பெல்லாம் சுத்தம். நாங்கள் படித்தால் உருப்பட மாட்டோம் எனச்சொன்னார்கள். ஊரில் பலருக்கும் கடிதம் எழுதுவோம் என்றார்கள். படிக்கிற பெண்ணுடைய கணவரின் சாப்பாட்டில் புழுக்கள் நெளியும். சீக்கிரம் அவர் செத்துடுவார் என்றுகூடச் சொல்வார்கள். நான் சிரித்துக்கொள்கிறேன். எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

அதை விடுங்கள். என்னுடைய ஊருக்கு போவோம். என்னுடையது விவசாயக் குடும்பம். நான் குளிர்மிகுந்த ஜனவரி மாதத்தில் பிறந்தேன். இளம் வயதில் பள்ளிக்கூடத்தைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. 9 வயதில் ஜோதிபாய்யோடு திருமணம். புனேவிற்குக் குடிபெயர்ந்தேன்.

அவர் மிஷனரி பள்ளிகளில் கல்வி பயின்றார். எனக்கும் எழுத, படிக்க உதவினார். பல்வேறு கதைகள், அனுபவங்கள். ஒருநாள் பிராமணர் வீட்டுக் கல்யாணம். போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். ‘நாமல்லாம் சூத்திரனுங்களாம். தீட்டாயிடுச்சாம். விரட்டிவிட்டுட்டாங்க’ எனப் புலம்பினார். எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என அவருக்குக் கனவு. சாதிப்பாகுபாடுகள் படிப்பாலும், விழிப்புணர்வாலும் தான் ஒழியும். நான் மேலும் படித்தேன். ஜோதிபாய் உடனிருந்தார், உற்சாகப்படுத்தினார். அவருடைய நண்பர்களும் பாடம் சொல்லிக்கொடுத்தனர். எனக்குப் படிப்பது சுகமானதாக இருந்தது. இன்னமும் கற்க வேண்டுமென ஆசையாக இருந்தது. ஃபராரி, மிட்செல் எனும் இரண்டு ஆங்கிலேய ஆசிரியைகள் அன்போடு உதவினார்கள். நான் படித்ததைப் பலருக்கும் சொல்லித்தரும் நேரம் எப்போது வரும்?

ஜோதிபாய் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். ஒரே எதிர்ப்பு. பள்ளிக்கூடத்திற்கு வெளியே ‘ஒழிஞ்சு போங்க’னு கோஷம் போடுவார்கள். என் மாமனாரை தூண்டி விட்டார்கள். ‘நீ எக்கேடோ கெட்டுப்போ. இவளை ஏன் படிக்க வைக்கிறே’ எனக்கேட்டார். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நடுத்தெரு என்றார். நானும், ஜோதிபாயும் நடுத்தெருவை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்குள் கல்விக்கனல் எரிகிறது. அது ஒரு வீட்டிற்குள்ளேயே அணைந்து விடலாமா? ஆகாது.

எங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஒரே ஆசிரியரையும் மிரட்டினார்கள். வேறு வழியில்லை. என்னையே பாடம் நடத்தச் சொன்னார் ஜோதிபாய். பள்ளிக்கு நடந்து போவேன். என் மீது சாணி, அழுகிய காய்கறிகளை வீசுவார்கள். சில நாட்கள் வெற்றிலைப் போட்ட எச்சில் கூடப் பரிசாகக் கிடைத்தது. முதலில் பயமாக இருந்தது. பள்ளியின் பெண் குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பயமெல்லாம் பாசத்தின் முன் பறந்தது. அழுக்குகளை வீசியவர்களிடம் சொன்னேன், “என்னுடைய தங்கைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்போகிறேன். இந்தக் குப்பைகள் எல்லாம் எனக்கான வாழ்த்து மலர்கள். இறைவன் உங்களை ரட்சிக்கட்டும்’.

என் அண்ணன் என்னைக் கடிந்து கொண்டான். ஏன் இந்த வேண்டாத வேலை என்றான். நான் சொன்னேன்,
“படிக்காமல் இருப்பது முழு மிருகத்தனம். அறிவைப் பெறுவதாலே பிராமணர்கள் மேல்நிலையில் உள்ளார்கள். கல்வியும், அறிவும் அற்புதமானது. கற்றவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் எனப்பட்டாலும் அவரே உயர்ந்தவர். நாங்கள் தீண்டப்படாதோர் கற்க வேண்டும் என உழைக்கிறோம். அதன்வழியே விடுதலை கிட்டும். என் கணவர் பிராமணர்களை எதிர்த்துக்கொண்டு ஏன் தீண்டப்படாதவர்களுக்குக் கற்பிக்கிறார்? அவர்களும் சமமான மனிதர்கள். மானமிகு வாழ்க்கை எல்லாருக்கும் ஆனது. அதற்குக் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே நானும் கற்பிக்கிறேன். இதிலென்ன தவறு ? நாங்கள் சிறுமிகள், பெண்கள், மகர்கள், மங்குகள் என அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்போம்’ என்றேன்.

ஆரம்பத்தில் பெரிதாகப் பெண்கள் படிக்ற வரவில்லை. இத்தனைக்கும் எங்கள் பள்ளியே இந்தியர்கள் நடத்தும் முதல் பெண்கள் பள்ளி. நானும், ஜோதிபாயும் ஊர் ஊராகச் சுற்றினோம். படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பரிசுப்பணம் தந்தோம். கிராமம், கிராமமாகப் படிப்பின் அவசியம், நன்மைகளை எடுத்துச் சொன்னோம். கல்வியோடு விளையாட்டுகள், கலைகளைப் பேரன்போடு பகிர்ந்தோம். கூட்டம் பெருகியது.

9 ஆசிரியர்கள், 132 மாணவர்கள், 3 பள்ளிகள். அது கனவின் தொடக்கம். 1851, 1852 காலத்தில் தேர்வுகளை நடத்தினோம். கிட்டத்தட்ட திருவிழா தான். பெண்கள் படித்து, தேர்வில் அசத்துவதைப் பார்க்க 3,000 பேர் கூட்டம். அலையில் எழும் சூரியனாய் எங்கள் பெண்கள் மின்னினார்கள்.

‘பூனா அப்சர்வர்’ எனும் பத்திரிகை 1852 -ல் என்ன எழுதியது? ‘ஜோதிபாய்- சாவித்திரிபாயின் பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களை விடப் பத்து மடங்கு அதிகப் பெண்கள் படிக்கிறார்கள். மிக உயர்ந்த கல்வித்தரம். விரைவில் இப்பெண்கள் பெரும் சாதனைகள் புரிவார்கள்’. 50 க்கும் மேற்பட்ட பெண்கள், அனைவருக்குமான பள்ளிகளை நடத்தினோம்.

எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஜோதிபாயை இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘குழந்தை பிறக்கலைனா பொண்ணு தான் மலடியா? ஆம்பிள கிட்டயும் பிரச்சனை இருக்கலாமே. பிள்ளை பொறக்கலைனு பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனுக்கு எப்படியிருக்கும்? என்னால சாவித்திரியை விட்டுட்டு இருக்க முடியாது’ என்றார்.

பல கைம்பெண்கள் நிலைமை கண்ணீரை வரவைத்தது. சொந்தக்கார ஆண்கள் வதைத்தார்கள். பரிதாபமாகக் கைம்பெண்கள் கர்ப்பமானார்கள். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களைக் காப்பாற்றினோம். 1853-ல் அப்பெண்களை அரவணைக்க இல்லம் துவங்கினோம்.

கையால் நெய்த ஆடைகளை அணிவது வழக்கம். அவை எளிமையான, ஆனால், கம்பீரமான ஆடைகள். இல்லத்தரசிகளுக்கு ஆடை நெய்யக் கற்றுக்கொடுத்தேன். பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் அமைப்பைத் துவங்கினேன். மாமியார், மருமகள், அம்மா, மகள் என அனைவரும் வந்தனர். ஒன்றாக அமர்ந்து சொந்தக்காலில் நிற்கப் பழகினோம்.

கைவிடப்பட்ட கைம்பெண் ஒருவரின் மகனை தத்தெடுத்துக் கொண்டோம். யஷ்வந்த் எனப் பெயரிட்டு வளர்த்தோம். மருத்துவம் படித்தபின் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குச் சேவை செய்தான் யஷ்வந்த்.

கண்முன் இன்னொரு அநீதி தெரிந்தது. கணவன் இறந்ததும் கைம்பெண்களுக்கு மொட்டையடித்தார்கள். மனைவி இறந்தால் கணவனுக்கு மொட்டையடிக்கிறோமா? ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்தக் கொடுமை? சவரம் செய்பவர்களை நாடினோம். வேலை நிறுத்தம் செய்யக் கோரினோம். கூடுதல் கூலி வேண்டியோ, சலுகைகள் நாடியோ அல்ல. கைம்பெண்களின் சமத்துவம் நாடி போராட்டம் நிகழ்ந்தது. சவரக்கத்திகள் ஓய்வெடுத்தன. பல கைம்பெண்களின் கண்ணீர் காணாமல் போனது. அந்தச் சவரத்தொழிலாளர்களை நினைக்கும் போதே பெருமிதம் பூக்கிறது.

1877-ம் ஆண்டு. பெரும் பஞ்சம். மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள். விலங்குகள் இறந்து தரையில் விழுந்தன. பெரும் உணவுப்பஞ்சம். மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள். ஆறு, குட்டை, குளம் எல்லாம் வற்றின. தவித்த வாய்க்கு தண்ணீரில்லை. மரங்களில் இலையே தென்படவில்லை. வறண்ட நிலம் பாளம், பாளமாய்ப் பிளந்தது. விஷப்பழங்களை உண்டார்கள், சிலர் சிறுநீரை குடித்தார்கள். மக்கள் உணவுக்காக, தண்ணீருக்காக அழுதார்கள், பின், பரிதாபமாக இறந்தார்கள்.

நாங்கள் கிராமம், கிராமமாகச் சுற்றினோம். இயன்றவரை நீரும், சோறும் தந்தோம். கந்துவட்டிக்கார கொடுமைகளைத் தட்டிக்கேட்டோம். ஏழைப்பிள்ளைகள் தங்கவும், கற்கவும் 52 விடுதியோடு கூடிய பள்ளிகள் திறந்தோம்.

1890-ல் ஜோதிபாய் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஆணும், பெண்ணும் சமம் எனும் தாமஸ் பெய்னின் ‘Rights of Man’ னின் வரிகளை ஜோதிபாய்ச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை எண்ணிக்கொண்டு நானே அவரின் உடலுக்குத் தீமூட்டினேன்.

1897 பெரும் பிளேக் நோய். லட்சக்கணக்கான மரணங்கள். மருத்துவர்கள் சாதி பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் யாருமின்றி இறந்தார்கள். நானும், யஷ்வந்தும் அசரவில்லை. எங்கள் சத்தியசோதக் அமைப்பினரோடு உழைத்தோம். மருத்துவமனைகள் நடத்தினோம். உயிரைப் பணயம் வைத்து போராடினோம். பிளேக் நோயுற்ற மகர் சிறுவன் ஒருவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நானே தொட்டுத் தூக்கினேன். அவன் உயிரை காப்பாற்றி விட்டோம். களைப்பாக இருக்கிறது. பிறிதொரு நாள் இன்னமும் சொல்கிறேன். ‘

சாவித்திரிபாய் பிளேக் நோய்க்கு எதிரான போரின் போதே வீர மரணம் எய்தினார். ‘கல்வித்தாய்’, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ எனும் பல்வேறு பெருமைகளுக்கு உரியவர். ‘மாசற்ற ரத்தினங்களின் பெருங்கடல்’ எனும் கவிதை நூல் இயற்றினார். அவரின் கவிதை ஒன்று:

உனக்கு நீயே துணை, ஓயாமல் உழை.
கல்வியும், பொருளும் கொண்டு சேர்.
அறிவிழந்தால் அனைத்தும் அழியும்.
கல்விச்செல்வமின்றிக் கால்நடை விலங்கு நாம்.
சோம்பி அமராதே, எழு, கல்வி கற்றிடுக.
ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் துயர்துடை.
கற்கும் பொன் வாய்ப்பினை பற்றிக்கொள்.
ஆகவே, கற்றிடுக, சாதிச்சங்கிலிகளை உடைத்தெறிக.
பிராமணர்களின் புனித நூல்களை வேகமாகத் தூக்கியெறிக.

தமிழ்த்தாய் வாழ்த்து ‘மாநிலப் பாடலான’ வரலாறு.


‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின்  பாயிரத்தில் உள்ளது .  பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர்.  கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார்.    தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக  நூலிற்கு  ஆங்கிலம், தமிழ்  என்று  இரு  மொழிகளிலும்  முன்னுரை எழுதியுள்ளார்.   


தன்னுடைய  முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது”  என்று  வருந்துகிறார்.  

ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை


பாயிரத்தில்  ‘தமிழ் தெய்வ  வணக்கம்’ என்று  தமிழை  தெய்வமாக  போற்றிப் பரவுகிறார்.  கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில்  தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு  என்று பலவாறு  போற்றுகிறார். இப்பாடலில்  வழங்கி வரும் முதன்மையான கருத்துகள்  என்று சிலவற்றைப்  பேராசிரியர் கைலாசபதி  அடையாளப்படுத்துகிறார். அவை,

  (அ) இந்திய நாட்டில்  தெக்கணம்  திலகமாகத்  திகழும்  பகுதி. 

(ஆ) திராவிடம் முதன்மையான  சிறப்புமிக்கதாகும் 

(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும்  புகழும், பெருமையும் மிக்கது

(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை  போன்றது தமிழ்

(உ) தமிழே  திராவிட  மொழிகளுக்கு  தாய்

(ஊ) ஆரியம்  போல்  வழக்கழியாமல்  சீரிளமை  மிக்க  மொழியாகத்  தமிழ்  திகழ்கிறது 


“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்  எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்   கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்  உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”


‘நீராருங்  கடலுடுத்த’ எனும்  துவங்கும்  இப்பாடல்  முந்தைய தமிழ்  படைப்புகளில்  இருந்து பல வகைகளில்  வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில்  புதிய பாய்ச்சலுக்கு  அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின்  பார்வையில்  தமிழ்த்தேசியத்திற்கான  முன்னோடிப்  பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர்  பிரேர்னா  சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர்  நலனும்  கைகோர்க்கும்  இடம் என்கிறார். தமிழ்த்தாயின்  உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று  சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர்   சுமதி  ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார்   கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற  மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.

அவ்வரிகள்,  


வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள் 

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி 

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள

 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.


இப்பாடலுக்கு  பிறகே  தமிழைத் தாயாக, தெய்வமாக  போற்றிப்பரவுவது  பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக  போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில்  எண்ணற்ற  பாடல்கள்  தமிழன்னையை  போற்றி  பாடப்பட்டன. இவற்றுக்கான  முதல்  வித்து  ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’ ஆகும். 

நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்


கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய  மூன்றாம்     ஆண்டறிக்கையை  1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப்  பற்றி  பேசுகிறது:

பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’  என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை  ஆய்வாளர்  கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார். 

1913-ம் ஆண்டறிக்கை


இப்பாடல் படிகளை  கரந்தை  தமிழ்ச்சங்கத்தை  சேர்ந்த  உமாமகேசுவரனார்  பல நூறு  பிரதிகள்  அச்சிட்டு  கொண்டு  சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும்  பாடப்பட்டது. பல்வேறு  தமிழ்ச்சங்க  கூட்டங்களில்  இப்பாடல்  ஒலித்தது. தனித்தமிழ்  மாநாடுகளில்  தவறாமல்  இடம்பெற்றது.  .தனித்தமிழ் மாநாடுகள்,  பாடநூல்களில்  இடம்பெற்றது. தனிநாயகம்  அடிகள் “இப்பாடலின்  வரிகள் கடந்த  அறுபது  ஆண்டுகளாக  எதிரொலித்துக்  கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான  பாடல்  எனும்  அதன்  பெருமையை  விஞ்சும்  படைப்பு  எதுவுமில்லை”  என்று  1963-ல் புகழ்ந்தார். 

இப்பாடலை  தமிழக  அரசு  அனைவரும்  பாடும்வண்ணம்  வழிவகை  செய்ய  வேண்டும்  என்கிற  கோரிக்கைகள்  அறிஞர் அண்ணா  ஆட்சிக்காலத்தில்  வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா  இயற்கை  எய்திவிட, கலைஞர்  கருணாநிதி  அப்பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கரந்தைத்  தமிழ்ச்சங்க  விழாக்களிலேயே  முதல்  ஆறு  வரிகள்  மட்டுமே  பாடப்பட்டு  வந்தன  என்பதை  சுட்டிக்காட்டுகிறார் கரந்தை  ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான  விருதளிப்பு  விழாவில்  தமிழ்நாட்டின் வழிபாட்டுப்  பாடலாக   ‘நீராருங் கடலுடுத்த’ அமையும்  என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

புகைப்பட நன்றி: kalaignar.dmk.in

 பிற  மொழிகளை  தாழ்த்திப்  பேசும்  வரிகளைத்  தவிர்த்து  பாடலை  அமைத்துக்  கொண்டதாக  அவர் குறிப்பிட்டார். ஆரியம்  போல்  வழக்கழிந்து  முதலிய  வரிகளும்  சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத்  தமிழ்ச்சங்கத்தின்  வழக்கத்தை  அடியொற்றியே  இப்பாடல் வரிகள்  அமைந்திருப்பதையும் கவனத்தில்  கொள்ள  வேண்டியிருக்கிறது.  மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை  தமிழ்நாட்டின்  வழிபாட்டுப்  பாடலாக  ஆக்கிய  அரசாணையை  கூர்ந்து  நோக்கினால்  இன்னொன்றும்  புலப்படும்.

 ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை  எண்  1393-ல் தமிழ்நாடு  முழுமைக்கும்  பொதுவாக  வழிபாட்டுப்  பாடல்  அமையும்  வண்ணமே  ‘நீராருங்  கடலுடுத்த ‘  இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட  நம்பிக்கையோடு’  தொடர்புடையதாக    இல்லாத  வண்ணம்  இப்பாடல் இருக்குமாறு  அமைந்திருப்பதாகவும்  அரசாணையில்  சொல்லப்பட்டு  இருந்தது.  பல்வேறு  தமிழ்நாட்டு  நிகழ்ச்சிகளில்  இந்து  மதப்  பாடல்களும்,  வடமொழி,தெலுங்கு  பாடல்களும்  ஆதிக்கம்  செலுத்திக்கொண்டிருந்த  போது  இந்த  அறிவிப்பு அவற்றை  மாற்றியது. மேலும், பாயிரத்தில்  உள்ள  சிவனைப்பற்றிய  குறிப்பு இடம்பெறாமல்   போனதையும், ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’  ஆனது  ‘தமிழ்த்தாய்  வாழ்த்தாக’ மாறியதையும்  மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ்  அடையாளத்தை  முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது.  (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )


மேற்சொன்ன  அரசாணையை  ஒட்டி 23 நவம்பர்  1970-ல்  அரசாணை  ஒன்று  வெளியிடப்பட்டது.  அதில்  ‘நீராருங் கடலுடுத்த ….’  வழிபாட்டுப்பாடலாக  விழாக்களின்  துவக்கத்தில்  பாடப்பட  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி  நிறுவனங்கள், உள்ளாட்சி  அமைப்புகள்  நடத்தும் நிகழ்ச்சிகளில்  இப்பாடல்  மோகன  ராகத்தில், திஸ்ர  தாளத்தில்  இசைக்கப்பட  வேண்டும்  என்றும் கூறப்பட்டு  இருந்தது.

Memo no. 3584/70-4

காஞ்சி  மடாதிபதி  விஜேயந்திரர்  கலந்து   கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ இசைக்கப்பட்ட  போது  கண்மூடி அமர்ந்து  இருந்தார். இதனையடுத்து  கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில்  உள்ள காஞ்சி  மடத்தின் கிளையில்  நுழைந்தார். அதற்கு  மட  மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை  கண் இளங்கோ  மிரட்டியதாக  .  மடத்தின்  மேலாளர்  காவல் துறையில்  புகார்  அளித்து  இருந்தார்.  இது தொடர்பாக  தன்மீது  பதியப்பட்ட   முதல் தகவல்  அறிக்கையை ரத்து  செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை  கண்  இளங்கோ  நாடினார். 


இவ்வழக்கில்  நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்  மேற்குறிப்பிட்ட இரண்டு  அரசாணைகள்  1393,  3584/70-4  ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ வழிபாட்டுப்  பாடலாகவே  இந்த  அரசாணைகள்  வரையறுத்து  இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய்  வாழ்த்து  வழிபாட்டுப்பாடல், அது, கீதம்  அன்று”. என்று குறிப்பிட்டார்.  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படும்  போது   எழுந்து நிற்க  வேண்டும்  என்று எந்தச் சட்டமும், அரசாணையும்  இல்லை என்பதையும்  அத்தீர்ப்பில்  கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய்  வாழ்த்திற்கு  உச்சபட்ச  மரியாதையும், மதிப்பும்  தரவேண்டும். தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும்  போது  கூட்டத்தினர் எழுந்து நிற்பது  மரபாக  இருக்கிறது  என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில்  தான்  மரியாதை  செலுத்த வேண்டும் என்று   கேள்வி எழுப்பிக்கொள்ள  வேண்டும்.   பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும்  நாம் கொண்டாடும்  போது, ஒரே வழியில்  தான் மரியாதை செலுத்த  வேண்டும்  என்று வலியுறுத்துவது போலித்தனமானது.  …..  
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு  ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு  எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி  எளிய  வாழ்வினையே   வாழ்கிறார்.அவர்  வழிபாட்டில்   ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான  நிலையில் இருப்பார். தமிழ்த்தாய்  வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால்  சந்நியாசி  தியான  நிலையில் அமர்ந்து இருப்பது  நிச்சயம்  நியாயமானது. இந்த  நிகழ்வில், மடாதிபதி தியான  நிலையில்  அமர்ந்து  கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும்   செலுத்தும் விதமாகும்.”  என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி


இதனையடுத்து, தமிழ்நாடு  அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய்  வாழ்த்தின்  தோற்றம், வளர்ச்சி,  அதனை அரசு  நிகழ்ச்சிகளில்  விழாவின்  துவக்கத்தில்  பாடவேண்டும் என்று ஆணையிட்ட  அரசாணைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக  அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில்  அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு  அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள் உள்ளிட்ட பொது  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு  முன்பு தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாயம்  பாடப்பட  வேண்டும் என்றும், தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும் போது  அனைவரும்  தவறாமல் எழுந்து  நிற்க  வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல்  பாடப்படும்  போது  எழுந்து  நிற்பதில்  இருந்து மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணித்  தாய்மார்கள்  ஆகியோருக்கு விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

 சான்றுகள்/ உதவியவை :

1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm

2. மனோன்மணியம்  சுந்தரனாரின்  இன்னொரு  பக்கம் – பேராசிரியர்   அ  கா பெருமாள் 

3. நீராருங் கடலுடுத்த –  கரந்தை ஜெயக்குமார்

 4.   ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture  Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam

 5.  ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy 

6. தமிழ்நாடு அரசாணை  நிலை எண் 1393, பொதுத்  (அரசியல்) துறை, 17.06.1970

7. தமிழ்நாடு அரசாணை   எண் 3584/70-4, 23.11.1970 

8. தமிழ்நாடு  அரசாணை  நிலை  எண் 1037, 17.12.2021 

 9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296

10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy

11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy  Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725

12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123

13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021

‘ஜெய் பீம்’ இதழிற்காக அண்ணல் அம்பேத்கர் வழங்கிய செய்தி


தந்தை என்.சிவராஜ் அவர்கள் ஆசிரியராக நடத்திய ‘ஜெய் பீம்’ இதழ் ஏப்ரல் 13 1946ல்   பாபாசாகேப் அம்பேத்கரின் அண்ணலின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. பாபாசாகேப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கீழ்கண்ட சிறப்புச்செய்தியை வழங்கினார் :


என்னுடைய 55-வது பிறந்த நாளையொட்டிய சிறப்பிதழிற்கு நான் பங்களித்து என் கருத்துகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டீர்கள். வெளிநாடுகளில் மக்கள் தங்களுடைய இறைத்தூதர்களின் பிறந்தநாட்களையே கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கெடுவாய்ப்பாக, இந்தியாவில் மட்டுமே இறைத்தூதர்களுக்கு நிகராக அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப்படுகின்றன. இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பது பரிதாபகரமானது. தனிப்பட்ட முறையில் என் பிறந்த நாளை கொண்டாடுவது எனக்கு உவப்புடைய ஒன்றல்ல. உச்சபட்ச ஜனநாயகவாதியான நான், நாயக வழிபாடானது ஜனநாயகத்திற்குப் பெருங்கேடு விளைவிக்கிறது எனக்கருதுகிறேன். ஒரு தகுதிமிக்கத் தலைவன் மீது நேசம், அன்பு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றைச் செலுத்துவது ஏற்புடைய ஒன்றுதான். அதுவே அத்தலைவனுக்கும் அவர் தொண்டர்களுக்கும் போதுமானது. ஆனால், தலைவர்களை வழிபடுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. அது இருதரப்பினரின் ஒழுக்கச்சிதைவிற்கு வழிவகுக்கும். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். எப்போது ஒரு அரசியல் தலைவரை இறைத்தூதர்களுக்கு நிகராக முன்னிறுத்துகிறோமோ, அப்போது அவர் இறைத்தூதரைப் போல நடந்து கொண்டு தன்னைப் பின்பற்றுபவர்களுக்குச் செய்தி வழங்க வேண்டும்.

புகைப்பட நன்றி : அம்பேத்கர் அம்பேத் தளம்


நான் உங்களுக்கு என்ன செய்தியை வழங்குவது? அதற்குகுப் பதிலாக ஒரு கிரேக்க புராணக் கதையைச் சொல்லி அதன் நீதியை தங்களுக்குச் சுட்டிக்காட்ட முனைகிறேன். ஹோமர் கிரேக்க இறைவி டெமிடருக்கு இயற்றிய பாடலில் இக்கதை காணக்கிடைக்கிறது. டெமிடர் தன்னுடைய மகளைத் தேடி கேலியோஸ் மன்னனின் அவைக்கு வருகிறார். எளிய செவிலித்தாய் உருவத்தில் வந்திருந்த இறைவியை யாராலும் கண்டுகொள்ள இயலவில்லை. இராணி மெட்டோநிய்ரா அண்மையில் தான் பெற்றெடுத்திருந்த பச்சிளம் குழந்தை டெமோஃபூனை (பிற்காலத்தில் ட்ரைப்ட்டோலமஸ் என அறியப்பட்டவன்) டெமிடரிடம் வளர்த்தெடுக்கக் கொடுக்கிறார்.மொத்த மாளிகையும் உறங்கிய பிறகு, ஒவ்வொரு இரவும், தொட்டிலில் இருந்து மழலையை வாரியெடுத்து, மின்னுகிற தீக்கங்குகளால் ஆன படுக்கையில் கிடத்தி வந்தார். பார்ப்பதற்குக் கொடூரமானதாகத் தோன்றினாலும், உண்மையில் அக்குழந்தையை தெய்வத்தன்மை உடையவனாக ஆக்கும் பேரன்பு, வேட்கையினால் தான் டெமிடர் அப்படிச் செய்தார். தீக்கங்கின் வெம்மையில் சிக்கி படாதபாடுபட்ட மழலை டெமோஃபூன் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று வளர்ந்து வந்தான். படிபடிப்படியாகச் சற்று தெய்வத்தன்மையும், சற்று கட்டுரமும், சற்று நம்புதற்கரிய மகிமையோடும் அவன் வளர்த்தெடுக்கப்பட்டான்.

இராணி மெட்டோநிய்ரா மாலை வேளை ஒன்றில் பரபரப்புடன் சோதனை நடக்கும் அவ்வறையின் கதவை திறந்து, தேவையற்ற அச்சத்தால் உந்தப்பட்டு வளர்ப்புத்தாயை தள்ளிவிட்டு, பேராளுமையாக மாறிக்கொண்டிருந்த குழந்தையைத் தீக்கங்குகளிலான தொட்டிலில் இருந்து மீட்கிறார். குழந்தை காப்பாற்றப்பட்டாலும் அதன் பேராளுமையையும், தெய்வத்தன்மையையும் இழக்கிறது.


இக்கதை நமக்கு என்ன நீதியைக் கூறுகிறது? என்னைப் பொருத்தவரை , வாழ்வினில் மேன்மையை இன்னல்களையும் தியாகங்களையும் சந்தித்தால் மட்டுமே எட்டமுடியும் எனக்கற்பிக்கிறது. மானுடப்பண்போ, தெய்வத்தன்மையோ அக்னிப்பரீட்சைக்கு ஆளாகாமல் கிட்டுவதில்லை. நெருப்புப் பரிசுத்தப்படுத்துகிறது, உரமேற்றுகிறது. அதேபோல் தான் போராட்டங்களும், துயரங்களும் வலிமை கூட்டும். ஒடுக்கப்பட்ட எந்த மனிதனும் போராட்டங்களும் இன்னல்களும் இன்றி மேன்மையை அடைய இயலாது. அவன் தன் சுகதுக்கங்களையும், தற்போதைய உடனடித் தேவைகளையும் தியாகம் செய்தால்தான் ஓர் நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும். விவிலியத்தின் மொழியில் சொல்வதென்றால் வாழ்வின் ஓட்டப்பந்தயத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர். ஏன்? அதற்கான காரணம் தெள்ளத்தெளிவானது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கைப்பந்தயத்தில் நிகழ்காலத்தின் இன்பங்களை எதிர்காலத்தேவைகளுக்காகத் தியாகம் செய்யும் தைரியமோ, மன உறுதியோ இல்லாததால் மேன்மையை எட்ட இயலவில்லை.


இக்கதையில் உள்ளதைவிட மேலான,உயர்ந்த அறிவுரை உள்ளதா? எனக்குத் தெரிந்தவரை இதுவே தீண்டப்படாதவர்களுக்கு வழங்கும் சிறந்த, உகந்த அறிவுரையாகும். அவர்களின் போராட்டங்கள், அவர்களின் வேதனைகளை அறிந்தே உள்ளேன். விடுதலைக்கான அவர்களின் போராட்டத்தில் என்னைவிடப் பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என நன்கறிவேன். இத்தனைக்குப் பிறகும், அவர்களுக்கு வழங்க என்னிடம் ஒரே செய்தி தான் உள்ளது. என்னுடைய செய்தி இதுதான்: போராடுங்கள், இன்னமும் போராடுங்கள், தியாகம் செய்யுங்கள், இன்னமும் தியாகம் புரியுங்கள். தியாகங்களுக்கும், துயரங்களுக்கும் துவளாத போராட்டங்கள், இடையறாத போராட்டங்கள் மட்டுமேவிடுதலை அளிக்கும். வேறெதுவும் நமக்கான விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை.

தீண்டப்படாதவர்கள் ஒன்றுபட்டு எழுந்து,எதிர்க்கத் துணிய வேண்டும். தாங்கள் ஒப்புக்கொடுத்திருக்கும் அரும்பணியின் புனிதத்தை உணர்ந்து , உத்வேகத்தோடு ஒருங்கே உறுதிபூண்டு தங்களின் இலக்கை அடைய முயலவேண்டும். அவர்கள் காரியத்தின் மகத்துவத்தையும் உன்னத நோக்கத்தையும் மனதில் நிறுத்தி பிரார்த்தனையாக இதனைக் கூட்டாக உச்சரிக்க வேண்டும் :


தங்களோடு பிறந்தவர்களை வளர்ப்பதற்கான கடமைக்காகக் களம் கண்டு உயிர்வாழ்பவர்கள் பேறு பெற்றோர். தங்கள் காலத்தின் மலர்களை, உடல்,பொருள், ஆவியின் வலிமையை, தீரத்தை எல்லாம் தங்களின் அடிமைத்தளையை அறுக்க அர்ப்பணித்தவர்கள் பேறு பெற்றொர். நன்மை வரட்டும், தீமை வரட்டும், கோடை சுடட்டும், கடுங்குளிர் வாட்டட்டும், புகழ் பெருகினாலும், அவமானங்கள் அடைந்தாலும் தீண்டப்படாதவர்கள் தங்களுடைய ஆண்மையை மீட்கும் வரை துவளமாட்டோம் என உறுதியோடு உழைப்பவர்கள் பேறுபெற்றோர்”

தமிழில்: பூ.கொ.சரவணன்

மகத்தான மகத் போராட்ட வரலாறு – கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா


மகத் சத்தியாகிரகம் அம்பேத்கரால் மார்ச் 20 அன்று 1927-ல் நிகழ்த்தப்பட்டது. அதைப்பற்றி பேராசிரியர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ நூலில் காணப்படும் பக்கங்கள் உங்கள் வாசிப்புக்காக:

மார்ச் 1927-ல் ஒரு மாநாட்டை அம்பேத்கர் மகத்தில் கூட்டினார். இந்த மாநாட்டிற்குத் தலித் அல்லாத தலைவர்கள் ஆதரவு நல்கினார்கள். காயஸ்தரான எஸ்.திப்னிஸ், பூனாவில் பிராமணரல்லதோர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரும், அம்பேத்கர் வழக்கேற்று நடத்தியவருமான கே.எம்.ஜெத்தே ஆகியோர் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தந்தார்கள். மகத்தில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை சமஸ்கிருதமயமாக்கலின் இலட்சியங்களை நோக்கிய பயணமாக இருந்தது:

‘நாம் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் முன்னேற்றத்தை எட்ட மூன்று கட்ட சுத்திகரிப்பிற்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நடத்தையின் பொதுவான தொனியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், நம்முடைய உச்சரிப்பை செம்மைப்படுத்த வேண்டும், நம்முடைய சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இந்தக் கணத்தில் இருந்து நீங்கள் அழுகிப்போன இறைச்சியை உண்பதை துறப்பீர்கள் என்று உறுதி பூணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’

இதற்குப் பிறகு அம்பேத்கர் ஒரு ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசிய மேடையில் துவங்கிய அந்த ஊர்வலம், சவுதார் குளத்தில் முடிந்தது. தண்ணீர் மூலமான அந்தக் கிணறு எழுத்தளவில் தீண்டப்படாத மக்களுக்குத் திறந்திருந்தது. ஆனால், அந்தக் குளத்தைப் பயன்படுத்த தீண்டப்படாத மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காந்தி தண்டி யாத்திரையின் போது உப்பை கையில் எடுத்ததைப் போல, சாதி தடையை உடைத்ததன் அடையாளமாக, கம்பீரமாக அம்பேத்கர் குளத்தில் இருந்து நீரை எடுத்து பருகினார். இந்த அத்துமீறல் தங்களை உசுப்பேற்றுகிற செயல் என்று கருதிய உள்ளூர் உயர் சாதி இந்துக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டம் நடந்த இடத்திற்குத் திரும்பிக்கொண்டு இருந்த போது தாக்கினார்கள்.

அடுத்தடுத்த நாட்கள், வாரங்களில் மகத்தின் உயர் சாதியினர் தீண்டப்படாத மக்களைச் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆட்படுத்தினார்கள். சமயங்களில் அவர்களை வேலையை விட்டு நீக்குவது, உழுது கொண்டிருந்த நிலத்தை விட்டு வெளியேற்றுவது ஆகிய செயல்களிலும் ஈடுபட்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆகஸ்ட் 4,1927 அன்று மகத் நகராட்சி மூன்றாண்டுகளுக்கு முன்னால் சவுதார் குளத்தைத் தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்கிற தன்னுடைய 1924-ம் ஆண்டு உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டது. அம்பேத்கர் இரண்டாவது கூட்டத்தைக் கூட்டினார். இதில் ஒரு புதிய வகையான போராட்டம் உருப்பெற்றது. இந்த இரண்டாவது மகத் மாநாடு டிசம்பர் 1927-ல் நடைபெற்றது. அம்பேத்கரின் பேச்சு சாதி அமைப்பை அக்குவேர், ஆணிவேராக அறுத்தெறிய அறைகூவல் விடுத்தது. அவர் பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை நினைவுகூர்ந்தார். மகத் மாநாட்டை, மூன்றாவது எஸ்டேட் பிரெஞ்சு புரட்சியை ஒட்டுமொத்தமாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘Etats Generaux de Versailles’ நிகழ்வோடு ஒப்பிட்டார்.

‘துவக்கத்திலேயே நான் உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். இந்தச் சவுதார் குளத்தில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பதற்காகக் கலைந்து செல்லவில்லை. இப்போது அந்தக் குளத்திற்குள் நாங்க நுழைய விரும்புவதற்கு ஒரே காரணம் தான் உண்டு…நாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள் என்று நிரூபிக்க விரும்புகிறோம் […] இந்த மாநாட்டைக் கூட்டியதன் மூலம் இந்த மண்ணில் சமத்துவச் சகாப்தத்தைத் துவக்கி வைத்துள்ளோம். தீண்டாமையை அகற்றுவது, அனைத்து சாதியினரும் கலந்து உணவுண்ணும் சமபந்தி ஆகியவை மட்டுமே நமக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்டிவிடாது. நீதிமன்றங்கள், ராணுவம், காவல்துறை, வியாபாரம் முதலிய அனைத்து சேவைத்துறைகளும் நமக்குத் திறந்து விடப்பட வேண்டும் […] இந்து மதம் சமத்துவம், சாதிய ஒழிப்பு ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளின் மீது மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.’

இந்தப் பேச்சை தொடர்ந்து மனித உரிமை அறிக்கை, மனிதர்களுக்கான பிரிக்க முடியாத சமத்துவத்தை ஆதரிக்கும் தீர்மானம் ஆகியவை கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் இன்னும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் இந்து சமூகத்தின் உட்பாகுபாடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரே மக்கள் குழுவாக இணைய வேண்டும் என்றது. இரண்டாவது தீர்மானம் அர்ச்சகர் தொழிலை அனைத்து சாதியினருக்கும் உரியதாக ஆக்க வேண்டும் என்றது. இறுதியாக, பல்வேறு பேச்சாளர்களும் மனுஸ்மிருதியை கடுமையாகத் தாக்கினார்கள். அந்நூலின் ஒரு பிரதி மேடையின் முன்னால் இருந்து பீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. மனுஸ்மிருதியை ஒரு தலித் துறவி கம்பீரமாக எரித்தார்.

அடுத்த நாள், சவுதார் குளத்திற்குள் இலவச நுழைவை பெறுவதற்கான சத்தியாகிரகத்தை அம்பேத்கர் துவங்கினார். அதில் நான்காயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். சவுதார் குளம் தனியார் சொத்து என்று சொல்லி மேல்சாதி இந்துக்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தார்கள். ஆகவே, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வரும்வரை அமைதியாகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், அம்பேத்கர் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு, நீர்நிலையைச் சுற்றி ஒரு ஊர்வலத்தை நடத்தினார். இந்த அணுகுமுறை இப்படிப்பட்ட சூழல்களில் வருங்காலத்தில் அவர் பின்பற்றப்போகும் யுக்தியை ஒத்திருந்தது. அந்த யுக்தியானது பிரச்சினைகளை வீதிகளில் தீர்த்துக் கொள்வதை விட, நீதிமன்றத்திடம் அவற்றை ஒப்புக்கொடுப்பதே ஆகும். இது சட்டத்தை முழுமையாகச் சார்ந்திருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்கிற அம்பேத்கரின் பாணியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அம்பேத்கரின் நிலைப்பாடு சரியென்று நீதிமன்றங்கள் 1937-ல் தீர்ப்பளிக்கும்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

நூலினை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=sr_1_1?s=digital-text&ie=UTF8&qid=1553070070&sr=8-1&keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

டி.என்.சேஷன் – வாழ்வும், பணியும்


டி.என்.சேஷன் 10-11-2019 ல் காலமானார். கேரளாவின் திருநெல்லை நகரில் பிறந்த சேஷன் பொறியியல் படிக்கிற அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்தும் அண்ணனின் வழியில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்  என்று  உறுதி பூண்டார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார்.  காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற அவர் அப்பணிக்கு செல்லாமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் மதுரை ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது போராட்டங்களை மிக கடுமையாக அவர் அடக்கினார் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும் முதல்வர் பக்தவச்சலம் அதற்கு செவி சாய்க்கவில்லை.  பின்னாளில் சேஷனின் நினைவலைகள் கோவிந்தன் குட்டி எழுத்தில் நூலான போது, ‘மதுரை ஆட்சியராக இருந்த காலத்தில்  கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அண்ணா சி.ஐ.ஏ கைக்கூலி என்று எனக்கு தெரிய வந்தது. அவர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அவர் முன்னின்று நடத்தினார்’ என்கிற தொனியில் பேசியிருந்தார். இத்தகைய கூற்றுக்கு சேஷன் எந்த ஆதாரத்தையும் தரவில்லை. நூல் வெளிவருவதற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியாக மேற்சொன்ன கருத்து இதழ்களில் வெளிவந்தது. திமுக, அஇஅதிமுக ஆகியவை அவர் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தன.

திரிபுரா தலைமை செயலாளர், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவரும், இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் டெல்லியில் இருந்து அதனை கண்காணித்தவர்களில் ஒருவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ப.ஸ்ரீ.இராகவன்  அண்ணா குறித்த சேஷனின் கூற்று ‘அபாண்டமான குற்றச்சாட்டு, ஒன்று, அறிந்து சொல்லிய பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வீண் வம்பு பேசுகிறவர்கள் இவர் காதில் போட்ட வதந்தியாக இருக்க வேண்டும்.  அல்லது வேறெதாவது மறைமுக உள்நோக்கத்தில் பிறந்த குசும்பாக இருக்க வேண்டும்’ என்று ‘நேரு முதல் நேற்று வரை’ நூலில் பதிவு செய்கிறார். 

புகைப்பட நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சேஷனின் நூலிற்கு  நீதிமன்றங்கள் தடை விதித்தன. ப.ஸ்ரீ.ராகவன் சேஷனின் அண்ணா பற்றிய கருத்துக்கு வெளியிட்ட மறுப்பு அறிக்கை குறித்து சேஷன் அமைதி காக்கவே செய்தார். நூல் வெளிவந்த போது அண்ணா குறித்த பகுதிகளை அவர் நீக்கியிருந்தார்.

சேஷன் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் செயலலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் போபார்ஸ் பீரங்கி வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது பாதுகாப்புத் துறை செயலாளராக சேஷன் திகழ்ந்தார். போபர்ஸ் ஆயுத பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று அடித்து பேசினார். இது அவரை கேபினட் செயலாளராக ஆக்கி அழகு பார்க்கும் அளவுக்கு ராஜீவ் காந்தியின் நம்பிக்கையை பெற்றுத்தந்தது. வி.பி.சிங் பிரதமர் ஆனதும் சேஷனை திட்ட கமிஷன் உறுப்பினராக கட்டம் கட்டினார்.

அடுத்து சந்திரசேகர் பிரதமர் ஆன போது சுப்பிரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக இருந்தார். ஹார்வர்டில் சேஷன் படித்த போது அங்கு பணியாற்றிய சுவாமி சேஷனை தலைமை தேர்தல் ஆணையராக ஆக்க பரிந்துரைத்தார்.  அடுத்த ஆறு ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராக சேஷன் நிகழ்த்தியது இந்திய ஜனநாயகத்தின் போக்கையே மாற்றியது. தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் குறித்ததை போல தேர்தல் ஆணையத்தின் வரலாற்றை சேஷனுக்கு முன், சேஷனுக்கு பின் என்று பகுக்கலாம் என்கிற அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கியிருந்தது. சேஷன் அதற்கு முன்பு தேர்தலை எப்போதும் நடத்திய முன் அனுபவம் கொண்டவரில்லை. ‘சற்றும் தாமதமோ, குறைபாடோ இல்லாமல் இயங்க வேண்டும்’ என்று மட்டும் முடிவு செய்து கொண்டதாக பின்னாளில் தெரிவித்தார். முதல் வேலையாக தேர்தல் காலங்களில் நடக்கும் குற்றங்களை பட்டியலிட்டார். அவற்றின் எண்ணிக்கையே நூறுக்கு மேலே நீண்டது. அடுத்தது மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்த முனைந்தார்.

மாதிரி நடத்தை விதிகள் தேர்தல் காலத்தில் அமலுக்கு வருபவை. அவை சட்டங்கள் இல்லை என்றாலும் அவற்றை பொதுவாக பின்பற்ற வேண்டும் என்பது எழுதப்படாத உடன்படிக்கை. கேரளாவில் அறுபதுகளில் குடிமைச் சமூகத்தின் முயற்சியால் நடத்தை விதிகள் முதல்முறை உருப்பெற்றன. அவை அவசர நிலை அட்டூழியங்களுக்கு பிறகு புதிய, வலுவான வடிவத்தில் அனைத்து கட்சிகளால் வடிவைமைக்கப்பட்டன. எனினும், நடைமுறையில் அவை அரிதாகவே பின்பற்றப்பட்டன.

சேஷன் எங்கே சிக்கல் என்று பார்த்தார். தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மீது முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்திற்கே வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அதற்குண்டு என்று அவர் கேட்டார். சிலர் முரண்டுபிடித்தார்கள், சிலர் நீதிமன்ற படியேறினார்கள். சேஷன் உறுதியாக நின்றார்.  தேர்தலை நிறுத்தி வைக்கும், தள்ளிப்போடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு என்கிற சவுக்கை எடுத்துக் கொண்டார்.  சரத் பவார் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலத்தில் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் காலத்தில் எல்லைமீறும் அதிகாரிகளை வகையாக கவனித்து கொள்வதாக பொதுவெளியில் மிரட்டல் விடுத்தது இருந்தார். வாக்கு எண்ணிக்கையை நடத்த மாட்டேன் என்று சேஷன் தொடை தட்டியதும் பவார் இறங்கி வந்தார்.

தேர்தலில் ஆள் மாறாட்டங்கள், கள்ள வாக்குகள் மலிந்திருந்த காலம் அது. புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அட்டை வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கேட்டார் சேஷன். பதினெட்டு மாதங்கள் அரசாங்கம் சட்டை செய்யாமல் இருந்தது. சேஷன் ஒன்றே ஒன்றுதான் சொன்னார், ‘ஜனவரி 1,1995 முதல் புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்த தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தாது. அவ்வளவே!’. அலறியடித்து கொண்டு இயந்திரம் இயங்கியது.  உச்சநீதிமன்றம், வாக்குரிமை என்பது குடிமக்களின் உள்ளார்ந்த உரிமை, அவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை என்கிற காரணத்துக்காக தேர்தல்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று தீர்ப்பு எழுதியது. எனினும், சேஷன் ஓய்வு பெறுவதற்குள் இருபது லட்சம் அடையாள அட்டைகள் புழக்கத்திற்கு வந்திருந்தன.

அடுத்தது வாரி இறைக்கப்படும் பணம். தண்ணீர் போல தேர்தல் காலத்தில் பணம் செலவிடப்பட்டு கொண்டிருந்தது. எல்லா கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் வரவு, செலவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேஷன் உத்தரவு போட்டார். பூச்சாண்டி காட்டுகிறார் என்றே பலர் அசட்டையாக இருந்தார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்கிற முறையை அறிமுகப்படுத்தினார். தேர்தல் செலவுகள் 1991 நாடாளுமன்ற தேர்தலின் போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. கணக்குகளை ஒழுங்காக தாக்கல் செய்திருக்காத 1,488 வேட்பாளர்களை சேஷன் மூன்றாண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77 அவருக்கு கைகொடுத்து இருந்தது. வேட்பாளர்களின் செலவுக்கு கட்டுப்பாடுகளையும் வெற்றிகரமாக விதித்தார். 

அதோடு நிற்காமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிற காலத்தை மாற்றியமைக்க முடிவு செய்தார். சேஷனின் வருகைக்கு முன்புவரை தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது பொதுவாக தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பே நிகழும். அதற்கு பதிலாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் நாளில் இருந்தே விதிகள் நடைமுறைக்கு வரும் என்று தடாலடி காட்டினார். 

அடுத்தது சுவர்களை ஆக்கிரமித்து கொள்ளும் தேர்தல் சின்னங்கள், விளம்பரங்கள், காதை கிழிக்கும் ஒலிப்பெருக்கிகள் பக்கம் கவனம் திரும்பியது. காங்கிரஸ் கட்சி பெருமளவில் பிளவுண்டு சின்னங்கள் சார்ந்து பல்வேறு மோதல்கள் வெடித்த காலத்தில் அதனை விசாரிக்கும் பொருட்டு சின்னங்கள் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் 1968 -ல் இருந்து பயன்படுத்த ஆரம்பித்து இருந்தது. அதனை தனக்கு ஏற்றார் போல் வசதியாக பொருள் கொண்ட சேஷன்  அனுமதி இல்லாத ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டன. கிராமங்கள், நகரங்களில் முறையே இரவு 11 மணி, 10 மணியோடு பரப்புரை முடிந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டினார்.  ஒரு படி மேலே போய், பொது இடங்களில் தேர்தல் விளம்பரங்கள் என்பதே இருக்க கூடாது என்று உத்தரவிட்டதோடு, முடிந்தால் தனியார் வீடுகளில் தேர்தல் காலத்தில் விளம்பரங்கள் செய்பவர்கள் முடிந்தபிறகு தாங்களே வெள்ளையடித்து தரவேண்டும் என்றும் கண்டிப்பு காட்டினார். தேர்தலின் வண்ணமய பொழுதுகள், பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் பறிபோகிறதே என்று சிலர் சேஷனிடம் குறைபட்டுக் கொண்டார்கள். ‘பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் வேண்டுமென்றால் திரையரங்குக்கு போய் உட்காருங்கள். தேர்தல் தான் கிடைத்ததா?’ என்று அவர் பதிலளித்தார்.

சேஷன் கையில் தேர்தல் நிறுத்த ஆயுதம் சிக்கிக்கொண்டு படாத பாடு பட்டது என்றால் மிகையில்லை. வி.பி.சிங் கட்சியின் கோட்டைகளாக திகழ்ந்த பகுதிகளில் அவர் தேர்தலை உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி சேஷன் நிறுத்தினார் என்பதை பேராசிரியர்  கிறிஸ்தோஃப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுகிறார். பஞ்சாபின் கல்கா இடைத்தேர்தலின் போது சாலைகளை அடைப்பது, வாகனங்களை மொத்தமாக தடை செய்வது என்று சேஷன் எல்லை மீறினார். மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது என்று செய்தித்தாள்கள் கவனப்படுத்தின. பஞ்சாபில் வாக்குப்பதிவிற்கு நடக்க சில மணி நேரங்களே இருந்த போது தடாலடியாக சேஷன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தலை  நிறுத்த ஆளுநர் மனம் நொந்து பதவியை விட்டு விலகினார்.

தேர்தல் சமயத்தில் சாதி, மதம் என்றோ, இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்றோ வாக்குறுதிகள் தருவது கூடாது, அதன் மூலம் வாக்காளர்களை ஈர்த்தால் தேர்தலை ரத்து செய்வேன், வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று சேஷன் கண்டிப்பு காட்டினார். இது தேர்தல் அரசியலுக்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு வகையில் எதிரானது கூட. தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்காமல் எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என்று பேராசிரியர் கில்மார்ட்டின் வினா எழுப்புகிறார். இத்தகைய சேஷனின் அணுகுமுறைக்கு அவர் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருந்த பார்வையும் ஒரு காரணம் . ‘இந்தியாவின் இருநூறு அரசியல் தலைவர்கள் – மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று இவர்களில் எத்தனை பெற தனிப்பட்ட அல்லது கொள்கை ரீதியான ஊசலாட்டங்களில் தெளிவு பெற அணுக முடியும்? ஒருவரைக்கூட அணுக முடியாது…. இவர்கள் எல்லாம் சித்திரக்குள்ளர்கள்’ என்று சேஷன் எழுதினார்.

சேஷன் இப்படி மனம் போன போக்கில் தேர்தல்களை   நிறுத்திக் கொண்டிருந்தது இடதுசாரிகளை கடுப்பேற்றியது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். தனக்கு உதவிகரமாக இருப்பார் என்று தப்புக்கணக்கு போட்ட நரசிம்ம ராவ் சேஷனை காப்பாற்றினார். சேஷன் மகனுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஆளுநரின் செயலால் தேர்தலை நிறுத்தினார். பீகார் தான் சேஷனின் சோதனையின் உச்சம். வன்முறை, படுகொலைகள், பூத் கைப்பற்றல்களுக்கு பெயர் பெற்ற அந்த மாநிலத்தில் 650 கம்பெனி துணை ராணுவப்படையை இறக்கினார். நான்கு கட்டங்களாக தேர்தலை நடத்தினார். அதற்கு பிறகும் நான்கு முறை தேர்தலை தள்ளி வைத்தார். இந்த புள்ளிவிவரம் எவ்வளவு காலம் எடுத்தது என்கிற தெளிவைத் தரலாம்: தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 8, 1994 -ல் செய்யப்பட்டது. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்தது மார்ச் 28, 1995.
சேஷனின் தீவிரமான முயற்சிகளால் வன்முறைகள் பெருமளவில் தேர்தலில் குறைந்தன. உத்திர பிரதேசத்தில் 1991 பூத் கைப்பற்றல்கள் 873, 1993-ல் இந்த எண்ணிக்கை 255 ஆக குறைந்திருந்தது. 1996 பொதுத் தேர்தலில் 1500 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தியா முழுக்க அனுப்பப்பட்டார்கள். மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் முறையே 59,000 பேர் , 1,25,000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். மத்திய பிரதேசத்தில் மட்டும்   87,000 வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. பூத் கைப்பற்றல்கள் இந்திய அளவில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2614 ஆக இருந்தது இப்போது 1056 ஆக குறைந்திருந்தது. தேர்தல் வன்முறைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை 272-ல் இருந்து ஏழே வருடத்தில் 60 ஆக குறைந்திருந்தது.

சேஷன் தேர்தலில் வாக்களிக்க தைரியத்தோடு வரலாம் என்கிற நம்பிக்கையை தன்னுடைய நடவடிக்கைகளால் தந்ததால் வன்முறை சூழல், மதப்பிணக்குகள் என்று பல தரப்பட்ட சவால்களுக்கு இடையேவும் உத்திர பிரதேசத்தில் 1993-ல் வாக்களித்தவர்களின் அளவு 10% அளவு உயர்ந்தது. இதனை ‘சேஷன் விளைவு’ என்று பேராசிரியர் கிறிஸ்தோப் ஜாப்ரிலா புகழ்கிறார். தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்தலில் அச்சமில்லாமல் வாக்களிக்க இந்நடவடிக்கைகள் உதவின என்கிறார்.

சேஷன் தேர்தல் பரப்புரையில் விதிமுறைகளை மீறியதாக சொல்லி இரண்டு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று நரசிம்ம ராவிடம் அழுத்தம் கொடுத்தார். பல்வேறு வகைகளில் அவரின் செயல்பாடுகள் அரசுக்கு தலைவலி கொடுப்பதாக இருந்தன. சேஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்னும் இரண்டு தேர்தல் ஆணையர்களை அரசு நியமித்தது. ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட நியமனம் ஒன்றை முன்னெடுத்தவர் சேஷன். இப்போது தன்னுடைய கழுத்திலேயே கத்தி வைக்கப்பட்ட போது அவர் உச்சநீதிமன்ற படியேறினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டே மத்திய அரசு அவர்களை நியமித்து இருந்தது. நீதிமன்றம் அரசின் முடிவுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை என்றாலும் சேஷன் இரு ஆணையர்களுக்கும் எந்த பணியையும் ஒதுக்க வெகுகாலம் மறுத்து சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். நீதிமன்றம் ‘தன்னுடைய சொந்த பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்தி கொள்ள முனைகிறார்’ என்கிற அளவுக்கு காட்டம் காட்டிய பிறகே இறங்கி வந்தார். மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒரே அளவு அதிகாரம் படைத்தவர்கள், முரண்பாடுகள் வரும் போது பெரும்பான்மை வாக்கின் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

சேஷன் தன்னுடைய பதவிக்காலம் முடிந்ததும் குடியரசு தலைவர் தேர்தலில் சுயேட்சையாக நின்றார். அவர் சிவசேனா, பாஜக கட்சிகளிடம் ஆதரவு கோரினார். பால் தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரினார். ‘சாதி, மத, ஊழல் வேறுபாடுகளை கடந்த ஒருவரே ஜனாதிபதி ஆகவேண்டும்’ என்று அவருக்கு ஆதரவு நல்குவதாக சிவசேனா அறிவித்தது. ஐ.கே.குஜ்ரால் சிவசேனையின் இந்த முடிவு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்கோத்ராவிடம் கேட்டார், ‘அது வேறொன்றுமில்லை. ஒரு தலித் குடியரசுத் தலைவர் ஆகிவிடக்கூடாது என்பதே சிவசேனாவின் எண்ணம்’ என்றார். இதனை தன்னுடைய சுய சரிதையில் குஜ்ரால் பதிவு செய்துள்ளார். கே.ஆர்.நாராயணன் அந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். மனசாட்சியின் படி வாக்களியுங்கள் என்று குரல் கொடுத்த சேஷன் 5% வாக்குகளை மட்டும் பெற்று டெபாசிட்டை இழந்தார். வெகு சீக்கிரமே காந்தி நகரில் அத்வானியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நின்று சேஷன் இரண்டு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று தோற்றுப்போனார்.

‘உங்களுடைய சிறகுகளை அரசு வெட்டி எறிந்து விடும் போல் இருக்கிறதே?’ என்று சேஷனை பார்த்து கேட்டதும் இப்படி பதில் சொன்னார், ‘நான் அப்போதும் நெருப்புக் கோழியை போல மின்னல் வேகத்தில் இலக்கு நோக்கி ஓடுவேன்’. தேர்தல்களில் தோற்றவர் என்றாலும், தேர்தல் அரசியலில் கடைக்கோடி குடிமக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பெரும் முயற்சியை முன்னெடுத்த அரிய அதிகாரி என்று அவர் நினைவுகூரப்படுவார்.

சான்றுகள்:
1) One day’s sultan:T.N. Seshan and Indian democracy-David Gilmartin


2) The Great March of Democracy Edited  by S.Y.Quraishi
3) https://www.indiatoday.in/india/story/tn-seshan-no-nonsense-man-tn-seshan-cleaned-up-india-electoral-system-1617702-2019-11
4) Elections Model Code of Conduct: A Reference Handbook – K.C.Saha
5) A Tumultuous and Glorious Seventy Years – T.N.Seshan
6) T.N.Seshan – An intimate Story – Konark Publishers
7) நேரு முதல் நேற்று வரை – ப.ஸ்ரீ.இராகவன் 
8) T.N. Seshan CEC Vs Union of India & Ors, 14, July 1995
9) Matters of Discretion- An Autobiography- I.K.Gujral
10)https://www.thequint.com/voices/blogs/tn-seshan-a-life-of-integrity-dedicated-to-public-service
11) https://www.business-standard.com/article/beyond-business/-the-more-you-kick-me-112051

12) https://www.thehindu.com/todays-paper/tp-national/the-man-who-cleaned-up-the-indian-electoral-system/article29940502.ece

பி.எஸ்.கிருஷ்ணன் – சமூக நீதி சாம்ராட்.


இப்படி சாம்ராட் என்று விளிக்கப்படுவதை  மக்களாட்சி, சமத்துவத்தில் ஆழமான பிடிப்புடைய பி.எஸ்.கிருஷ்ணன் ஏற்க மறுத்திருப்பார். என்றாலும், அவரின் பங்களிப்புகள், பணிகள் மகத்தானவை. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் செயலாளராகவும் சமூக நீதியை முன்னெடுப்பதில் அவர் பெரும் பங்காற்றினார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த பி.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய பதினோராவது வயதினில் ஆங்கில செய்தித்தாளில் இந்தியாவில் ஏழில் ஒருவர் தீண்டப்படாதவராக சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிற அம்பேத்கரின் அறிக்கையை படிக்கிறார். தீண்டாமை என்றால் என்ன என்று தந்தையிடம் கேட்டார். அது அநீதியானது என்பதை உயர்சாதியில் பிறந்த அவரின் தந்தை தெளிவுபடுத்தினார். மேலும், தீண்டாமை எனும் பெருங்கொடுமை எப்படி சமூகத்தில் பின்பற்றப்படுகிறது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, திருவிதாங்கூரில் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்தை சேர்ந்த கே.சுகுமாரன் நடத்தி வந்த ‘கேரளா கௌமுதி’ நாளிதழில் தீண்டாமைக்கு எதிரான பல்வேறு எழுத்துகள் கிருஷ்ணனின் சிந்தனையை ஆட்கொண்டன. ‘என் மதம் சுயமரியாதைக்கு அவமதிப்பாக திகழ்கிறது என்றால் நான் எந்த மதத்திற்கு மாற வேண்டும்?’ என்கிற கே.சுகுமாரனின் மாநாட்டு கூக்குரல் கேரளாவின் ஆலயக்கதவுகளை  அனைத்து சாதியினருக்கும் திறந்து விட்டது.

நாராயண குருவின் ‘ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்’ எனும் முழக்கம் கிருஷ்ணனின் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்தது.  கேரளவில் தலித் தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினருக்கு கல்விக்கூடங்களை திறந்துவிட வேண்டும் என்று நிகழ்த்திய போராட்டங்கள், அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகளும் அவரின் வாழ்க்கை பயணத்தின் ஒளிவிளக்குகளாக திகழ்ந்தன.

காஞ்சிபுரத்தின் பச்சையப்பா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த காலத்தில்  கிருஷ்ணன் குடிமைப்பணி தேர்வு எழுதினார். அவர் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வு பெற்றார். எந்த மாநிலத்தில் பணி வேண்டும் என்கிற விருப்பத்தை சொல்லுமாறு கேட்ட போது, ‘எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பி வையுங்கள். எம்மாநிலமும் என் மாநிலமே’ என்று அவர் உறுதிபடச் சொன்னார். (அன்றைய ஹைதராபாத்) ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.

நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர் என்று சமூகத்தில் உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக அயராது பாடுபட்டார். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த கிருஷ்ணன் மக்களின் மொழியில் உரையாடி அவர்களின் சிக்கல்களை அறிந்து கொண்டு உடனடியாக தீர்வு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதற்கு முந்தைய தேடல், ஆய்வு, வாசிப்பு, விதிகள், சட்டங்கள் குறித்த சளைக்காத உழைப்பு அவரிடம் இருந்தது. இதனைக்கொண்டு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என்று பல தளங்களில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார். அரசு நிலங்கள், ஊருக்கு பொதுவான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய போது ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை மீறி பகிர்ந்து கொடுத்தார். ஜமாபந்திகளை தலித்துகள் வாழும் பகுதிகளில் நடத்திய முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணன் சமத்துவத் தேரை சேரிக்கும் இழுத்து வந்தவர் என்றால் மிகையில்லை.

தன்னுடைய சாதியை யார் கேட்டாலும் சொல்ல மறுத்த கிருஷ்ணன், சாதி விதித்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்ததாக மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். அவரின் அரும்பணிகளை கண்ட அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் ‘நீங்கள் ஏன் உங்கள் சாதியை மறைக்கிறீர்கள். நீங்கள் உயர்சாதியில் பிறந்தவர். நீங்கள் அதனை மறைப்பதால் என்ன நன்மை விளையப்போகிறது?’ என்று கேட்டார். கிருஷ்ணன் தீர்க்கமாக, ‘ஐயா, நான் சாதியை மறைக்கவில்லை. சாதியை நிராகரிக்கிறேன்’ என்று பதிலுரைத்தார்.  நெகிழ்ந்து போன ஜெயில் சிங் ‘இறைவன் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்காக உழைக்கும் புத்தியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார்’ என வாழ்த்தினார்.

வர்ணமா? வர்க்கமா? எது இந்திய சமூகத்தில் முக்கியமாக எதிர்கொள்ள வேண்டிய சவால் என்கிற வினாவிற்கு இரண்டுமே தான் என்று அவர் கருதினார். ஏழ்மையும், சாதி ஒடுக்குமுறையும் இணைந்து பெரும்பாலும் பயணிப்பதை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் நில சீர்திருத்தம், நிலப்பகிர்வை தீவிரமாக வலியுறுத்தினார்.

கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஆளுநர்களை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு தலித்துகளுக்கு நிலப்பகிர்வை சாதிக்க முடியுமா என்று ஆய்வு செய்தது. பெரும்பாலான தலித்துகள் நிலமற்றவர்களாக, வறுமையில் சிக்குண்டவர்களாக இருப்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்த அக்குழு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போதுமான அளவு நிலமிருப்பதையும் சுட்டிக்காட்டியது. இதனை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் ‘கண்ணியமான வாழ்வு, பாதுகாப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நிலவுரிமை, கல்வி இரண்டும் அவசியமாகும். நீர்ப்பாசன வசதியுள்ள நிலமிருந்தால், பிள்ளைகளை படிக்க வைக்கும் பொருளாதார பலம் இருக்கும். போதுமான வருமானம் இல்லாமல் போனால், குடும்பத்தின் தேவைகளுக்காக பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டிய அவலம் ஏற்படும். பாசன வசதியுள்ள நிலத்தால் வருமானம் கிடைக்கும் என்றால் பிள்ளைகளை படிக்க அனுப்புவது இலகுவாக இருக்கும்.’ என்று பதிந்தார்.

பொருளாதார ஏற்றத்தை சாதிக்க பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்களில்  நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர்  இணைத்துக்கொள்வது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அளவில் நெடுங்காலமாக அமலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அப்பணியில் இணைச் செயலாளராக சீரிய பங்காற்றினார் பி.எஸ்.கிருஷ்ணன். பின்னர், வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்த போது மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும் பொறுப்பு செயலாளராக இவர் வசம் வந்து சேர்ந்தது. அப்பணியையும் செவ்வனே செய்தார். ஆந்திர பிரதேச அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்த போது பி.எஸ்.கிருஷ்ணனின் உதவியை நாடியது. சட்ட வரைவு, உருவாக்கம், அமலாக்கத்தை அவர் திறம்பட கையாண்டார். உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

புகைப்பட நன்றி: நீதிராஜன்

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது, ‘எத்தனை நாளைக்கு தான் இட ஒதுக்கீடு தொடரும்?’ என நெறியாளர் கேட்க, மூப்பினால் நடுங்கிக் கொண்டிருந்த நிலையிலும் உறுதியாக ‘சாதியின் பெயரால் அநீதிகள் இந்திய சமூகத்தில் நிகழ்த்தப்படுவது நிற்கும் நாள்வரை இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.’ என்று பதிலுரைத்தார்.
பட்டியலின சாதியினர், பழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் (தடுப்புச்) சட்டம் உருவாவதற்கு பின்னால் அவரின் பெரும் உழைப்பிருந்தது. அச்சட்டம் கால் நூற்றாண்டு கழித்து திருத்தப்பட்டதிலும் அவரின் முத்திரை இருந்தது. மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும்  தொழிலை தடை செய்வதோடு, அக்கொடுமையினால் உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்கும் சட்ட உருவாக்கத்திலும் பங்களித்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வலுவிழக்க வைத்த போது, அதனை சீர்செய்யும் சீராய்வு மனுவை வடிவமைப்பதில் எண்பது வயதை கடந்த நிலையிலும் பங்குபெற்றார்.

வேறொரு பேட்டியில், ‘இட ஒதுக்கீட்டை சிலர் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்று உயர்சாதியினர் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்களே?’ என்று வினவப்பட்ட போது, ‘அது உயர்சாதியினரின் பொய் பரப்புரை அன்றி வேறொன்றுமில்லை. அவர்களின் மனநிலை சாதிக்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களையே குறைசொல்வதாக இருக்கிறது. அம்மக்களுக்கு நிலம், கல்வியை தருவதில் முனைப்பாக ஈடுபட்டுவிட்டு பின்னர் இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களை குறை சொல்லுங்கள்’ என்றார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயலாளராக இருந்த காலத்தில் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை அறிந்துணர்ந்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்த்தார். பட்டியலின சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையங்களை அரசியலமைப்பு அந்தஸ்து கொண்டதாக மாற்றுவதற்கும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காரணம் ஆவார். 

புகைப்பட நன்றி: நீதிராஜன்

பி.எஸ்.கிருஷ்ணனுக்கு இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுக்கையில் இருந்தார். இட ஒதுக்கீட்டிற்கான வரையறைகளை சாமர்த்தியமாக பொருள் கொண்டு இட ஒதுக்கீட்டை பல மாணவர்களுக்கு மறுத்த அவலநிலை அவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில் சமூகநீதிக்கான சமருக்காக அவர் படுக்கையை விட்டு எழுந்தார். நடுங்கும் விரல்களோடு தானே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய மனுவை தட்டச்சு செய்து கொடுத்தார். அம்மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை காக்கப்பட்டு அவர்களின் குடிமைப்பணி இடங்களை பெறுவது உறுதி செய்யப்பட்டது.

பி.எஸ்.கிருஷ்ணன் எழுதி முடிக்காமல் போன இறுதிக் கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள், நீதி குறித்து கவலையோடு, ‘பட்டியலின சாதியினருக்கு கண்ணியமிக்க வாழ்வும், மரணமும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன’ என்று பதிவு செய்திருந்தார். எத்தனை நாளைக்கு இந்த அநீதி தொடரும் என்று ஆதங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் சட்டங்கள், செயல்பாடுகள், திட்டங்கள் என்று பலமுனைகளில் சாதி ஒழிப்பு, சமத்துவத்துக்கான போரினை முன்னெடுக்க தன்னுடைய இறுதிக் கட்டுரையில் அழைப்பு விடுத்தார். முடிக்கப்படாத அந்த மாபெரும் சாம்ராட்டின் கனவினை முன்னெடுத்து ஈடேற்றுவதே அவருக்கான புகழஞ்சலியாக இருக்கும்.

நூலினை வாங்க: சமூக நீதிக்கான அறப்போர் : https://www.amazon.in/gp/product/8194340705/ref=cx_skuctr_share?smid=A2FA8VKKREFM6M

பி.எஸ்.கிருஷ்ணன் பங்களிப்பில் உருவான சட்டங்கள்:
புத்த மதத்தில் இணைந்த தலித்துகளைப் பட்டியல் சாதியினர் என்று அங்கீகரிப்பதற்கான சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989) & திருத்தச் சட்டம் (2015),
மனித கழிவகற்றுவோரைப் பணியமர்த்தல் மற்றும் உலர்கழிப்பறைகள் கட்டுதல் தடுப்புச் சட்டம் (1993). மேற்சொன்ன சட்டத்தின் மேம்பட்ட வடிவாமான மறுவாழ்வுக்கான சட்டம் (2013)

எழுதிய நூல்கள்: Empowering Dalits for Empowering India- A Road Map
Social Exclusion and Justice in India
நினைவலைகள் : ‘சமூக நீதிக்கான அறப்போர் – பி.எஸ்.கிருஷ்ணன் : நலிந்தோர் நலனுக்கான ஓர் வாழ்வின் அர்ப்பணம்’

(இன்று பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்)

நன்றி: விகடன் இயர்புக் 2020

தனிப்பட்ட நீட் வெற்றிகளை கொண்டாடாமல் விமர்சிக்கலாமா?


ஜீவித் குமார் அவர்களின் நீட் வெற்றி பெருமைக்குரியது. வாழ்த்தும், பேரன்பும். எளிய பின்னணி கொண்ட அரசுப்பள்ளி மாணவர் மருத்துவராகும் தருணம் மகிழ்ச்சிக்குரியது.

இப்போது சிலவற்றைத் தெளிவாக உரையாடுவோம். குடிமைப்பணித் தேர்வில் முதலிடத்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் பெறுகிற போது கொண்டாடித் தீர்ப்போம். அது நிச்சயம் கொண்டாட்டத்திற்கு உரியது. ஊக்கமும், உத்வேகமும் தருவது. ஆனால், முதல் 50 அல்லது 500 இடங்களைப் பார்த்தால் மேற்சொன்ன பிரிவுகள்/பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வெகு சொற்பமான இடங்களையே பிடித்திருப்பார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிப்பட்ட நபரின் வெற்றியை இந்த சிக்கலான பின்புலத்தில் பொருத்திப்பேச வேண்டும். அந்த சமூகமே முன்னேறிவிட்டது, எதற்கு இட ஒதுக்கீடு என ஒரு தரப்பு பேசும். இன்னொரு தரப்பு முயன்றால் வெல்ல முடியும், தாழ்வு மனப்பான்மை விட்டொழியுங்கள் என உத்வேக சொற்பொழிவு ஆற்றும்.

கள உண்மை என்ன? எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்தார்கள்? நீட் வருகைக்கு முன்னால் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது ஒற்றை இலக்கத்திற்கு மாறியிருக்கிறது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மேற்சொன்ன மாணவர் ஓராண்டு தனியார் மையத்தில் பயிற்சி பெற்றே வென்றிருக்கிறார். அவருக்கான பயிற்சிச் செலவை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு மருத்துவர் கனவுமிக்க ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ன?

நீட் தேர்வில் வெற்றி பெறுவதும், அரசு/தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. ப்ளஸ் 2 வில் வெற்றி பெற்றேன். எம்.எம்.சி.யில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. மேலும், ஒப்பீட்டளவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் தனியார் கல்லூரியில் சேருவது கடினம். நீட் வருகைக்குப் பின்னர் இன்னமும் கட்டணங்கள் எகிறியிருக்கின்றன.

நீட் வருகைக்குப் பின்னால் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் மருத்துவக்கல்லூரிகளில் விழுந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதிய, கோச்சிங் பெற்ற, ஆண் மாணவர்களே அதிகமாக வெல்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கூட மருத்துவக்கல்லூரி வாசல்களை மிதிக்க முடியவில்லை. 7.5% இட ஒதுக்கீட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

தனிப்பட்ட வெற்றிகள் பாராட்டுக்குரியவை. அது அடிப்படையான சிக்கல்கள், பிரச்சனைகள், முரண்பாடுகளில் இருந்து திசை திருப்பும் செயல்பாடாக மாறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பிருந்த நிலை கச்சிதமான ஒன்றில்லை. நீட் இன்னமும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. அதை சீர்செய்ய கொண்டாட்டங்களைத் தாண்டிய செயல்பாடு, உரையாடல் தேவை.

காந்தியும், மதச்சார்பின்மையும்


காந்தியும், மதச்சார்பின்மையும் – அனில் நௌரியா

(மதச்சார்பின்மை என்கிற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலதுசாரிகள் குரல் எழுப்பிக்கொண்டுள்ள சூழலில், காந்திக்கும் மதச்சார்பின்மைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இக்கட்டுரையை அவசியம் வாசியுங்கள்… )

மதச்சார்பின்மை என்கிற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா, ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே
உபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாகப் புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் மார்ச் 1931 ல் வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. மதச்சார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்தத் தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின்
எழுத்துக்கள் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாகக் காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தைப் பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார். மே 6, 1933 இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்.

மேலும் நவம்பர் 1933 இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார்.

ஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள் முன் உரையாற்றினார். அப்போது “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் சட்டசபை போன்ற மதச்சார்பற்ற அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் )

ஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையைப் பற்றிக் காந்தி பேசுகிற பொழுது இப்படிச் சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொதுப் பயன்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது ? மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையைப் பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத / நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பின்மைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும்.

இதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது.

”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நிதி ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடிமகன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்தப் புரவலும் ஆங்கில அரசு செய்தது போலத் தராது என்றும் சொன்னார். இந்தப் புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது

இந்தச் சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான்
பாடுபட்டதாகக் காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்துத் தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில்
எல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க இயலும்.” என்றார்

நவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லாக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்தத் தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார்.

குருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தைக் கொண்டு சோமநாதர் ஆலயத்தைப் புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : “நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின் தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அக்காலச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்தப் புரிந்துணர்வு 1969க்கு பின்னர்
கண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன.

காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ நன்கு கட்டமைப்பக்பட்ட, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்குச் சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம், வழிகாட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்தப் பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “

காந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது. அவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம் பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளைப் பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய நாட்குறிப்புகளில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். இந்தியா மதச்சார்பின்மையைத் தன் பண்பாகக் கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும், இந்திய தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் காந்தி, நேரு இருவரும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். இதனை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாகப் பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய
பிராந்திய தேசியத்தைக் காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. ஒத்துச்செல்லும் கருத்துகளை விட முரண்பாடுகள் ஆழமாக இருந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேருவும் இணைந்து வெகுகாலம் ஒன்றாகச் செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை காந்தி பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்திக் காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த ஹிந்துத்துவ சக்திகள் இதை முக்கியப்பணியாகச் செய்தன. இப்படிக் காந்தி,நேரு இருவரையும் பிரித்துக் காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாகக் காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்துக் கருத்தியல் ரீதியாகத் தாக்கமுடியும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்தக் காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதைப் பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூடத் தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்காலக் கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் இரு நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

(இக்கட்டுரை அனில் நௌரியாவின் Gandhi on secular law and state எனும்
கட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது )

புகைப்படம்: மதக்கலவரத்தால் சிதறுண்ட பீகார் மாநில வீடொன்றில் காந்தி

நன்றி: நவ்ஜீவன் அறக்கட்டளை

தமிழில்: பூ.கொ. சரவணன்

தலித் விடுதலையை சீர்குலைத்த பூனா ஒப்பந்தம்: 


பூனா ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று.


தனித்தொகுதி முறையை அம்பேத்கர் வென்றெடுத்த நிலையில், உண்ணாவிரதம் இருந்து காந்தி அதனைத் தட்டிப் பறித்தார். இதைக்குறித்து ஓரிரு கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணம். முதலாவதாக ரோஹித் வெமுலாவின் மரணத்தை அடுத்து சோயப் தானியல் எழுதிய கட்டுரையில் இருந்து தனித்தொகுதி முறை, தற்போதைய தேர்தல் முறை குறித்த பத்திகள் மட்டும் வாசிப்புக்காக:

தேர்தல் முறை குறித்த அம்பேத்கரின் விமர்சனம்: … அம்பேத்கர் காலம் தொடங்கித் தலித் இயக்கமானது தேர்தலில் தலித்துகளுக்கு இடங்களை ஒதுக்கும் முறையானது பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்த வண்ணம் உள்ளது.

1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பு சட்ட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அம்பேத்கர் தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள். காங்கிரசின் தலைவரான காந்தி இதனை எதிர்த்தார். இதற்கு மாறாக, சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று எதிர்த்தார் (தற்போதைய முறையின் முன்னோடி). இதைக்குறித்து, 1955-ல் அம்பேத்கர் பேசிய போது, அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையானது “இந்துக்களுக்கு அடிமையாக இருக்கும், சுதந்திரத்திறமற்ற ஆட்களையே” தலித் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் என்று நேரடியாகச் சாடினார். 

காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், அம்பேத்கர் வேறு வழியின்றி ஒப்புக்குள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அவர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி, தலித் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அம்பேத்கருக்கு ஒரே ஒரு சிறிய சலுகையாக, முதல்கட்டத் தேர்தலில் ஒவ்வொரு தலித் தொகுதியிலும் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முதல் கட்டத் தேர்தலில் வெற்றி பெறும் நான்கு வேட்பாளர்களுக்கு இறுதியாக அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பார்கள். 

அம்பேத்கர் சரியாகக் கணித்ததைப் போலவே, இத்தகைய கூட்டு வாக்களிப்பு முறை அவருடைய கட்சிக்கு பேரிடராகவும், காங்கிரசிற்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சின் தலைமைப் பொறுப்பில் முழுக்க முழுக்க மேல்சாதியினரே ஆதிக்கம் செலுத்தினாலும் இத்தகைய கூட்டுத் தொகுதி முறை அதற்கே பயனளித்தது. பூனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற 1937-ம் ஆண்டுத் தேர்தலில் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிப் பெற்றது. அம்பேத்கர் தோற்றுவித்து இருந்த விடுதலை தொழிலாளர் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்து நடந்த 1946 தேர்தலில் காங்கிரசின் வெற்றியும், அம்பேத்கரின் தோல்வியும் இன்னமும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகளில் 123 இடங்களில் வெற்றிப் பெற்றது. அம்பேத்கரின் கட்சி இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது,

”மோசடியான பிரதிநிதித்துவ முறை’:

இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பேத்கரை கடுமையாகக் கோபப்படுத்தியது. கூட்டு வாக்களிப்பு முறையே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அம்பேத்கர் குற்றஞ்சாட்டினார். 1946 -ம் ஆண்டுத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களித்த நிலையில், தன்னுடைய கட்சி 26% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 29% வாக்குகளையும் பெற்றதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். ஆனால், அனைத்து சாதிகளும் வாக்களித்த இறுதித் தேர்தல் முடிவுகளில் அறுபது மடங்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆகவே, இந்தத் தேர்தலில் இறுதியாக வென்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உண்மையான தலித் பிரதிநிதிகள் இல்லையென்று அம்பேத்கர் வாதிட்டார். 1946-ம் ஆண்டின் இறுதியில் அம்பேத்கர் இப்படிப் பேசினார்:

‘பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்கு எப்போதும் சட்டமன்றத்தில் போராடக்கூடிய நம்பகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பட்டியல் சாதியினரே தேர்ந்தெடுப்பதைத் தனித்தொகுதி முறை மட்டுமே உறுதி செய்யும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ஒழித்துக் கட்ட முயன்றால் அவற்றை எதிர்க்கவும் தனித்தொகுதிகள் தேவைப்படுகின்றன. வெவ்வேறு மாகாணங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறவைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை, பட்டியல் சாதியினரின் வலிகளை வலிமையாகக் கொட்டித் தீர்ப்பதற்காக ஒரே ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கூடக் கொண்டுவரவில்லை […] இப்படிப்பட்ட பட்டியல் சாதி உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்புகிற மோசடிக்கு பதிலாகப் பட்டியல் சாதியினருக்குச் சட்டமன்றத்தில் இடமே தராமல் இருந்துவிடலாம்’

இத்தகைய கவலை அம்பேத்கரை மட்டுமே அரித்துக் கொண்டிருக்கவில்லை. ஆய்வாளர்கள் ஆலிவர் மென்டெல்சொஹ்ன் & மரிக்கா விக்ஸியன்யாண்ட் ஆகிய இருவரும் எம்.சி.ராஜா அவர்களை ‘விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய தீண்டப்படாதவர்களில் இருந்து எழுந்த அரசியல்வாதி’ என்று வர்ணிக்கிறார்கள். அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “காங்கிரஸ் தலைமையில் கூட்டு வாக்களிப்பு முறையால் சாதி இந்துக்களோடு இணைந்து கொண்டு நுழைகிற தலித்துகள், எங்களுக்கு அரணாக இருப்பதைவிட, சாதி இந்துக்களின் தலைமையில் எங்களுடைய சுதந்திரத்தை அழிக்கவும், எங்கள் கழுத்துகளை வெட்டி சாய்க்கவும் காங்கிரசிற்குத் துணை போகிறார்கள் என்று எண்ணுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்’ என்று கசப்போடு எழுதினார்.

விடுதலைக்குப் பிறகு:

விடுதலைக்குப் பிறகு தலித்துகளுக்குத் தனித்தொகுதி என்கிற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. முதலாவதாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறைய பிரிவினைக்கு அடிகோலிய முதன்மையான காரணம் என்று பரவலாகக் கருதப்பட்டது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. பிரிவினை ஏற்படாமல் போயிருந்தாலும் தன்னுடைய இருபதாண்டு கால நிலைப்பாட்டைக் காங்கிரஸ் மாற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம். உண்மையில், இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்குப் பூனா ஒப்பந்தத்தில் தரப்பட்டிருந்த உரிமைகளை இன்னமும் குறைத்தது. முந்தைய முறையில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்றிருந்ததை அடியோடு கைகழுவியது. செய்வதறியாமல் திகைத்து நின்ற அம்பேத்கர், கடைசி முயற்சியாகத் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் குறைந்தபட்சம் 35% தலித் ஓட்டுக்களையாவது பெற வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவந்தார்.

இதன்மூலம், தலித் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சமுகத்தின் உண்மையான பிரதிநிதிகளாகத் திகழ்வதை உறுதி செய்ய முடியும் என்று கருதினார். வல்லபாய் படேல் அதனை முழுமையாக நிராகரித்தார். “இதனை நான் எதிர்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? பெரும்பான்மையான இந்துக்கள் உங்களுடைய (தலித்துகளின்) நலத்தையே நாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே செல்ல முடியும்? அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதை மறந்து விடுங்கள்…இத்தகைய தாழ்வு மனப்பான்மையைத் தாங்கிக் கொண்டு இருந்தால், அவர்களால் சமூகத்திற்குச் சேவையாற்ற முடியாது.”

விடுதலை இந்தியாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் அம்பேத்கரின் கட்சி இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையானது பேரிடராக மாறியது என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலித் நலன்களை முன்னிறுத்தவில்லை என்பது ஒரு புறம். மறுபுறம், இத்தகைய தொகுதி ஒதுக்கீட்டு முறையால், பிற சமூகக் குழுக்களோடு தலித்துகளால் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்ள இயலாமல் போனது. 1955-ல் அம்பேத்கரின் கட்சியானது தலித்துகளுக்கு என்று தொகுதிகளைத் தேர்தல்களில் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.

அம்பேத்கரின் கருத்து 1932-ல் புறக்கணிக்கப்பட்டதைப் போன்று, 1955-லும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்டது. இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அப்படியே தொடர்கிறது. தலித்துகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கிளர்ந்து எழும் “உயர் சாதி” குழுக்கள் நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்குத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சட்டை செய்வதே இல்லை. இந்த முறை அதிகார அமைப்பினில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது. இதனால், இம்முறை “மோசடியான பிரதிநிதித்துவம்” என்று தெளிவாகிறது. கிறிஸ்தோப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுவதைப் போல, விடுதலையடைந்த காலத்தில், “தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலித் அல்லாதோர் வாக்குகளைக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதில் தேர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது”. இம்முறையைப் பாரதி ஜனதா கட்சி தற்போது கைக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச தலித் எம்பிக்களைக் கொண்டுள்ள கட்சியாக அது திகழ்ந்தாலும், ரோஹித் வெமுலாவின் தற்கொலையைப் போன்ற பெரும் தலித் துயரத்தை எதிர்கொள்வது எப்படி என்று புரியாமல் அக்கட்சி திகைத்து நிற்கிறது.

மூலம்:  https://scroll.in/article/802377/despite-having-40-dalit-mps-why-has-the-bjp-ignored-dalit-complaints-dr-ambedkar-has-the-answer

தமிழில்: பூ.கொ.சரவணன்

புரட்சியாளர் அம்பேத்கர் – ஒரு சகாப்தம்


அண்ணல் அம்பேத்கர் குறித்த இந்த அண்ணன் யுகபாரதியின் இப்பாடலை எத்தனை முறை காலையில் இருந்து கேட்டிருப்பேன் என்று தெரியாது. திட்டமிட்டு விடுதலை இந்தியாவில் பாபாசாகேபின் பெயர் புறக்கணிக்கப்பட்டது என்று உறுதிபடச் சொல்லலாம்.

‘இனி இவருக்கு வெல்வதற்கு உலகங்கள் இல்லை.’ என்று பேராசிரியர் பாக்ஸ்வெல் தன்னுடைய செயலாளருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்த அதே வேளையில், படிப்பதற்குப் பணம் கிடைக்குமா என்று தெரியாமல் லண்டனிற்குள் அவர் இறங்கியிருந்தார் என்பது எத்தனை நகை முரண்.

மூன்றாவது முனைவர் பட்ட ஆய்வினை BONN பல்கலையில் செய்ய அவர் கடிதத்தை சரளமான ஜெர்மன் மொழியில் எழுதியிருந்ததைப் பார்த்த போது மனம் எங்கெங்கோ அலைந்தது. பள்ளியில் பிறப்பின் அடிப்படையில் சம்ஸ்கிருதம் மறுக்கப்பட்ட அந்தச் சிறுவனின் கனவுக்கடல் எல்லையற்றதாகப் பிரபஞ்சமாகப் பாய்ந்த வண்ணம் இருந்தது.

கல்வி, அதிகாரம், பொருள் சேர்ப்பது, ஆயுதம் ஏந்துவது என்று அனைத்தும் மறுக்கப்பட்ட சமூகங்களை தட்டியெழுப்ப தான் கற்றவற்றை எல்லாம் அவர் செலுத்தினார். சாதியின் ஆணிவேரான பிராமணியக் கருத்தியலுக்கு எதிராக அவர் போர் முரசம் கொட்டிய போது அவருக்கு வயது 25!

பம்பாய் நீதிமன்றத்தில் உடன் யாரும் உணவருந்த இல்லாமல் தனியே அவர் தவித்திருந்த காலங்களில் கூட எளியவர்களின் பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எளியவர்கள், இழப்பீடு இல்லாமல் நீக்கப்பட்ட தொழிலாளிகள், கருத்துரிமை நெரிக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள், ‘தேசவிரோதி’ என முத்திரை குத்திய காங்கிரஸ் இயக்கத்தினர் என்று அனைவருக்காகவும் போராடினார். பெரும்பணமும் , தனிப்பட்ட அதிகாரமும் தரும் உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பை நிஜாம் வழங்கியபோது ‘சுதந்திரமான அம்மனிதர்’ ஏற்க மறுத்தார்.

பல நூறு வழக்கறிஞர்களையும், பட்டதாரிகளையும் அவர் நிர்மாணித்த சித்தார்த், மிலிந்த் கல்லூரிகள் உருவாக்கின. ‘கற்பி’ என்பதன் பொருள் தான் கற்றுத் தேர்வதில் முடிவதில்லை. சமூகத்தைத் தட்டியெழுப்ப நம்மை ஒப்புக்கொடுப்பதே பெரும் கனவு என்கிற சமூக, அரசியல் ஜனநாயகத்துக்கான பெரும் வழியை அவர் போட்டுக் கொடுத்தார்.

அவர் கண்ட சமத்துவக் கனவு என்பது பொருளாதாரத் தளத்தையும் ஆட்டிப்பார்த்தது. பிரிவினை நெருங்கி கொண்டிருந்த காலத்தில் அவர் இயற்றியளித்த ‘அரசும், சிறுபான்மையினரும்’ எனும் மாதிரி அரசியலமைப்புச் சட்டம் ஒரு புரட்சிகர ஆவணம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம்,நிலம் என்று அனைத்திற்குமான உரிமை கடைக்கோடி மனிதருக்கும் உரியது எனும் புரட்சிகரச் சமத்துவக் கனவு அது. வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டாம்,மேற்சொன்ன உரிமைகள் யாவும் அடிப்படை உரிமைகளாகத் திகழ வேண்டும் எனும் பெரும் கனவு அவருக்கு இருந்தது. அந்த லட்சியத் தாகத்திற்கு அரசியலமைப்பு சட்ட உருவாக்க குழுவினர் ஈடுகொடுக்கவில்லை என்பது துயரமான ஒன்று.

சாதியை அழித்தொழிக்கவும், ‘அறநெறி, பகுத்தறிவை’ கொல்லும் மதக்கருத்தியலை தகர்க்கவும் அவர் அறிவு வெடிமருந்தினை நமக்கு நல்கினார். பெண்களின் சொத்துரிமை, தத்தெடுப்பு உரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். அவரின் கனவுச் சட்ட வரைவினில் பரம்பரை சொத்தில் சம உரிமை, தத்தெடுப்பதில் ஆண்களுக்கு இணையான இடம், விவகாரத்தில் முறையான ஜீவனாம்சம், கணவன் இறந்த பின்பு சொத்தில் உரிமை என்று பெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டு இருந்தது. ‘இந்து மதத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு’ என்று அலறினார்கள். குடியரசுத் தலைவர் முதல் காங்கிரஸ் கொறடா வரை தடுத்தார்கள். ‘இந்த மசோதாவிற்கு ஏன் நேரம் தரவேண்டும்’ என்று படேல் வினவினார்.

அண்ணல் நொந்து பதவி விலகினார். அவருக்குப் பதவி துய்ப்பதற்கான ஒன்றல்ல. அது சமூக-பொருளாதார-அரசு சமத்துவத்தைச் சாதிப்பதற்கான கருவிகளில் ஒன்று. அது சாத்தியமில்லை என்ற போது, பட்டியல் சாதியினரின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரசினை குற்றஞ்சாட்டினார். நேருவின் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமைகள் வழங்காமல், அவர்களுக்கான ஆணையத்தை அமைத்து இட ஒதுக்கீடு வழங்காமல் போனதையும் சாடினார்.

இந்து மதத்தில் தான் நிகழ்த்தவிருந்த ஆகச் சிறந்த சீர்திருத்தத்தைக் கொன்றதை குறித்து அரற்றினார். சமூகப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு சட்டங்கள் இயற்ற முடியாமல் போனது ‘சாணிக் குவியல்களின் மீது கோட்டைகளைக் கட்டுவது தான்’. சனாதன கோட்டைகளை தகர்க்கும், எல்லா மனிதருக்கும் எல்லா வகையிலும் சம மதிப்புக்கான தேடலுக்கான அறிவு, அற வெளிச்சத்தை, அடிமைத்தன்மை அற்ற விழிப்புணர்வை நல்கும் பாபாசாகேப் வாழ்வினை திரையில் பார்க்க காத்திருக்கிறேன்.

அவரின் வாழ்க்கை எத்தனை அறிவு பூர்வமாக அணுகினாலும் உணர்ச்சிவசப்பட வைப்பது. அவமானம், ஏளனம், வஞ்சகம் சூழ்ந்த வாழ்வினில் புரட்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்ட அந்நாயகனின் வாழ்வினை திரையினில் தொடராக பார்ப்பது பலரையும் அவர் வாழ்வினை நோக்கி இழுத்து வரும். அண்ணன் யுகபாரதியின் வரிகளில் பாபசாகேப் கண்முன் நிற்கிறார். தட்டியெழுப்புகிறார். குரலற்றவர்களின் தலைவரின் கிளர்ச்சியும், சுயமரியாதையும் மிக்க வாழ்வோடு பயணிப்போம்,
‘உச்சத்திலே ஒரு சூரியன்

நீ ஊமை சனங்களின் காவலன்

சட்டத்தின் சட்டைக்கு நூலைக் கொடுத்தவன்

சண்டைக்கும் சாதிக்கும் பாலைத் தெளித்தவன்

காணொலி வடிவத்தில் : https://m.facebook.com/story.php?story_fbid=3697740023578982&id=100000290612233&anchor_composer=false

ஏன் அம்பேத்கர் புரட்சியாளர் என அழைக்கப்படுகிறார்: https://m.facebook.com/story.php?story_fbid=5072034132822335&id=315331651825964&fs=0&focus_composer=0

ஜெய் பீம் !