தமிழ்த்தாய் வாழ்த்து ‘மாநிலப் பாடலான’ வரலாறு.


‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின்  பாயிரத்தில் உள்ளது .  பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர்.  கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார்.    தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக  நூலிற்கு  ஆங்கிலம், தமிழ்  என்று  இரு  மொழிகளிலும்  முன்னுரை எழுதியுள்ளார்.   


தன்னுடைய  முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது”  என்று  வருந்துகிறார்.  

ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை


பாயிரத்தில்  ‘தமிழ் தெய்வ  வணக்கம்’ என்று  தமிழை  தெய்வமாக  போற்றிப் பரவுகிறார்.  கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில்  தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு  என்று பலவாறு  போற்றுகிறார். இப்பாடலில்  வழங்கி வரும் முதன்மையான கருத்துகள்  என்று சிலவற்றைப்  பேராசிரியர் கைலாசபதி  அடையாளப்படுத்துகிறார். அவை,

  (அ) இந்திய நாட்டில்  தெக்கணம்  திலகமாகத்  திகழும்  பகுதி. 

(ஆ) திராவிடம் முதன்மையான  சிறப்புமிக்கதாகும் 

(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும்  புகழும், பெருமையும் மிக்கது

(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை  போன்றது தமிழ்

(உ) தமிழே  திராவிட  மொழிகளுக்கு  தாய்

(ஊ) ஆரியம்  போல்  வழக்கழியாமல்  சீரிளமை  மிக்க  மொழியாகத்  தமிழ்  திகழ்கிறது 


“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்  எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்   கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்  உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”


‘நீராருங்  கடலுடுத்த’ எனும்  துவங்கும்  இப்பாடல்  முந்தைய தமிழ்  படைப்புகளில்  இருந்து பல வகைகளில்  வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில்  புதிய பாய்ச்சலுக்கு  அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின்  பார்வையில்  தமிழ்த்தேசியத்திற்கான  முன்னோடிப்  பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர்  பிரேர்னா  சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர்  நலனும்  கைகோர்க்கும்  இடம் என்கிறார். தமிழ்த்தாயின்  உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று  சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர்   சுமதி  ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார்   கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற  மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.

அவ்வரிகள்,  


வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள் 

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி 

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள

 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.


இப்பாடலுக்கு  பிறகே  தமிழைத் தாயாக, தெய்வமாக  போற்றிப்பரவுவது  பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக  போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில்  எண்ணற்ற  பாடல்கள்  தமிழன்னையை  போற்றி  பாடப்பட்டன. இவற்றுக்கான  முதல்  வித்து  ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’ ஆகும். 

நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்


கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய  மூன்றாம்     ஆண்டறிக்கையை  1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப்  பற்றி  பேசுகிறது:

பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’  என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை  ஆய்வாளர்  கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார். 

1913-ம் ஆண்டறிக்கை


இப்பாடல் படிகளை  கரந்தை  தமிழ்ச்சங்கத்தை  சேர்ந்த  உமாமகேசுவரனார்  பல நூறு  பிரதிகள்  அச்சிட்டு  கொண்டு  சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும்  பாடப்பட்டது. பல்வேறு  தமிழ்ச்சங்க  கூட்டங்களில்  இப்பாடல்  ஒலித்தது. தனித்தமிழ்  மாநாடுகளில்  தவறாமல்  இடம்பெற்றது.  .தனித்தமிழ் மாநாடுகள்,  பாடநூல்களில்  இடம்பெற்றது. தனிநாயகம்  அடிகள் “இப்பாடலின்  வரிகள் கடந்த  அறுபது  ஆண்டுகளாக  எதிரொலித்துக்  கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான  பாடல்  எனும்  அதன்  பெருமையை  விஞ்சும்  படைப்பு  எதுவுமில்லை”  என்று  1963-ல் புகழ்ந்தார். 

இப்பாடலை  தமிழக  அரசு  அனைவரும்  பாடும்வண்ணம்  வழிவகை  செய்ய  வேண்டும்  என்கிற  கோரிக்கைகள்  அறிஞர் அண்ணா  ஆட்சிக்காலத்தில்  வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா  இயற்கை  எய்திவிட, கலைஞர்  கருணாநிதி  அப்பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கரந்தைத்  தமிழ்ச்சங்க  விழாக்களிலேயே  முதல்  ஆறு  வரிகள்  மட்டுமே  பாடப்பட்டு  வந்தன  என்பதை  சுட்டிக்காட்டுகிறார் கரந்தை  ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான  விருதளிப்பு  விழாவில்  தமிழ்நாட்டின் வழிபாட்டுப்  பாடலாக   ‘நீராருங் கடலுடுத்த’ அமையும்  என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

புகைப்பட நன்றி: kalaignar.dmk.in

 பிற  மொழிகளை  தாழ்த்திப்  பேசும்  வரிகளைத்  தவிர்த்து  பாடலை  அமைத்துக்  கொண்டதாக  அவர் குறிப்பிட்டார். ஆரியம்  போல்  வழக்கழிந்து  முதலிய  வரிகளும்  சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத்  தமிழ்ச்சங்கத்தின்  வழக்கத்தை  அடியொற்றியே  இப்பாடல் வரிகள்  அமைந்திருப்பதையும் கவனத்தில்  கொள்ள  வேண்டியிருக்கிறது.  மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை  தமிழ்நாட்டின்  வழிபாட்டுப்  பாடலாக  ஆக்கிய  அரசாணையை  கூர்ந்து  நோக்கினால்  இன்னொன்றும்  புலப்படும்.

 ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை  எண்  1393-ல் தமிழ்நாடு  முழுமைக்கும்  பொதுவாக  வழிபாட்டுப்  பாடல்  அமையும்  வண்ணமே  ‘நீராருங்  கடலுடுத்த ‘  இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட  நம்பிக்கையோடு’  தொடர்புடையதாக    இல்லாத  வண்ணம்  இப்பாடல் இருக்குமாறு  அமைந்திருப்பதாகவும்  அரசாணையில்  சொல்லப்பட்டு  இருந்தது.  பல்வேறு  தமிழ்நாட்டு  நிகழ்ச்சிகளில்  இந்து  மதப்  பாடல்களும்,  வடமொழி,தெலுங்கு  பாடல்களும்  ஆதிக்கம்  செலுத்திக்கொண்டிருந்த  போது  இந்த  அறிவிப்பு அவற்றை  மாற்றியது. மேலும், பாயிரத்தில்  உள்ள  சிவனைப்பற்றிய  குறிப்பு இடம்பெறாமல்   போனதையும், ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’  ஆனது  ‘தமிழ்த்தாய்  வாழ்த்தாக’ மாறியதையும்  மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ்  அடையாளத்தை  முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது.  (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )


மேற்சொன்ன  அரசாணையை  ஒட்டி 23 நவம்பர்  1970-ல்  அரசாணை  ஒன்று  வெளியிடப்பட்டது.  அதில்  ‘நீராருங் கடலுடுத்த ….’  வழிபாட்டுப்பாடலாக  விழாக்களின்  துவக்கத்தில்  பாடப்பட  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி  நிறுவனங்கள், உள்ளாட்சி  அமைப்புகள்  நடத்தும் நிகழ்ச்சிகளில்  இப்பாடல்  மோகன  ராகத்தில், திஸ்ர  தாளத்தில்  இசைக்கப்பட  வேண்டும்  என்றும் கூறப்பட்டு  இருந்தது.

Memo no. 3584/70-4

காஞ்சி  மடாதிபதி  விஜேயந்திரர்  கலந்து   கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ இசைக்கப்பட்ட  போது  கண்மூடி அமர்ந்து  இருந்தார். இதனையடுத்து  கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில்  உள்ள காஞ்சி  மடத்தின் கிளையில்  நுழைந்தார். அதற்கு  மட  மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை  கண் இளங்கோ  மிரட்டியதாக  .  மடத்தின்  மேலாளர்  காவல் துறையில்  புகார்  அளித்து  இருந்தார்.  இது தொடர்பாக  தன்மீது  பதியப்பட்ட   முதல் தகவல்  அறிக்கையை ரத்து  செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை  கண்  இளங்கோ  நாடினார். 


இவ்வழக்கில்  நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்  மேற்குறிப்பிட்ட இரண்டு  அரசாணைகள்  1393,  3584/70-4  ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ வழிபாட்டுப்  பாடலாகவே  இந்த  அரசாணைகள்  வரையறுத்து  இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய்  வாழ்த்து  வழிபாட்டுப்பாடல், அது, கீதம்  அன்று”. என்று குறிப்பிட்டார்.  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படும்  போது   எழுந்து நிற்க  வேண்டும்  என்று எந்தச் சட்டமும், அரசாணையும்  இல்லை என்பதையும்  அத்தீர்ப்பில்  கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய்  வாழ்த்திற்கு  உச்சபட்ச  மரியாதையும், மதிப்பும்  தரவேண்டும். தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும்  போது  கூட்டத்தினர் எழுந்து நிற்பது  மரபாக  இருக்கிறது  என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில்  தான்  மரியாதை  செலுத்த வேண்டும் என்று   கேள்வி எழுப்பிக்கொள்ள  வேண்டும்.   பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும்  நாம் கொண்டாடும்  போது, ஒரே வழியில்  தான் மரியாதை செலுத்த  வேண்டும்  என்று வலியுறுத்துவது போலித்தனமானது.  …..  
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு  ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு  எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி  எளிய  வாழ்வினையே   வாழ்கிறார்.அவர்  வழிபாட்டில்   ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான  நிலையில் இருப்பார். தமிழ்த்தாய்  வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால்  சந்நியாசி  தியான  நிலையில் அமர்ந்து இருப்பது  நிச்சயம்  நியாயமானது. இந்த  நிகழ்வில், மடாதிபதி தியான  நிலையில்  அமர்ந்து  கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும்   செலுத்தும் விதமாகும்.”  என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி


இதனையடுத்து, தமிழ்நாடு  அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய்  வாழ்த்தின்  தோற்றம், வளர்ச்சி,  அதனை அரசு  நிகழ்ச்சிகளில்  விழாவின்  துவக்கத்தில்  பாடவேண்டும் என்று ஆணையிட்ட  அரசாணைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக  அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில்  அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு  அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள் உள்ளிட்ட பொது  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு  முன்பு தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாயம்  பாடப்பட  வேண்டும் என்றும், தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும் போது  அனைவரும்  தவறாமல் எழுந்து  நிற்க  வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல்  பாடப்படும்  போது  எழுந்து  நிற்பதில்  இருந்து மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணித்  தாய்மார்கள்  ஆகியோருக்கு விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

 சான்றுகள்/ உதவியவை :

1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm

2. மனோன்மணியம்  சுந்தரனாரின்  இன்னொரு  பக்கம் – பேராசிரியர்   அ  கா பெருமாள் 

3. நீராருங் கடலுடுத்த –  கரந்தை ஜெயக்குமார்

 4.   ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture  Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam

 5.  ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy 

6. தமிழ்நாடு அரசாணை  நிலை எண் 1393, பொதுத்  (அரசியல்) துறை, 17.06.1970

7. தமிழ்நாடு அரசாணை   எண் 3584/70-4, 23.11.1970 

8. தமிழ்நாடு  அரசாணை  நிலை  எண் 1037, 17.12.2021 

 9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296

10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy

11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy  Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725

12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123

13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021

தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன?


தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்

இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)

தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?

இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை,
பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும்,
இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.

(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )

தமிழில்: பூ.கொ.சரவணன்

பி.எஸ்.கிருஷ்ணன் – சமூக நீதி சாம்ராட்.


இப்படி சாம்ராட் என்று விளிக்கப்படுவதை  மக்களாட்சி, சமத்துவத்தில் ஆழமான பிடிப்புடைய பி.எஸ்.கிருஷ்ணன் ஏற்க மறுத்திருப்பார். என்றாலும், அவரின் பங்களிப்புகள், பணிகள் மகத்தானவை. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் செயலாளராகவும் சமூக நீதியை முன்னெடுப்பதில் அவர் பெரும் பங்காற்றினார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த பி.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய பதினோராவது வயதினில் ஆங்கில செய்தித்தாளில் இந்தியாவில் ஏழில் ஒருவர் தீண்டப்படாதவராக சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிற அம்பேத்கரின் அறிக்கையை படிக்கிறார். தீண்டாமை என்றால் என்ன என்று தந்தையிடம் கேட்டார். அது அநீதியானது என்பதை உயர்சாதியில் பிறந்த அவரின் தந்தை தெளிவுபடுத்தினார். மேலும், தீண்டாமை எனும் பெருங்கொடுமை எப்படி சமூகத்தில் பின்பற்றப்படுகிறது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, திருவிதாங்கூரில் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்தை சேர்ந்த கே.சுகுமாரன் நடத்தி வந்த ‘கேரளா கௌமுதி’ நாளிதழில் தீண்டாமைக்கு எதிரான பல்வேறு எழுத்துகள் கிருஷ்ணனின் சிந்தனையை ஆட்கொண்டன. ‘என் மதம் சுயமரியாதைக்கு அவமதிப்பாக திகழ்கிறது என்றால் நான் எந்த மதத்திற்கு மாற வேண்டும்?’ என்கிற கே.சுகுமாரனின் மாநாட்டு கூக்குரல் கேரளாவின் ஆலயக்கதவுகளை  அனைத்து சாதியினருக்கும் திறந்து விட்டது.

நாராயண குருவின் ‘ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்’ எனும் முழக்கம் கிருஷ்ணனின் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்தது.  கேரளவில் தலித் தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினருக்கு கல்விக்கூடங்களை திறந்துவிட வேண்டும் என்று நிகழ்த்திய போராட்டங்கள், அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகளும் அவரின் வாழ்க்கை பயணத்தின் ஒளிவிளக்குகளாக திகழ்ந்தன.

காஞ்சிபுரத்தின் பச்சையப்பா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த காலத்தில்  கிருஷ்ணன் குடிமைப்பணி தேர்வு எழுதினார். அவர் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வு பெற்றார். எந்த மாநிலத்தில் பணி வேண்டும் என்கிற விருப்பத்தை சொல்லுமாறு கேட்ட போது, ‘எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பி வையுங்கள். எம்மாநிலமும் என் மாநிலமே’ என்று அவர் உறுதிபடச் சொன்னார். (அன்றைய ஹைதராபாத்) ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.

நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர் என்று சமூகத்தில் உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக அயராது பாடுபட்டார். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த கிருஷ்ணன் மக்களின் மொழியில் உரையாடி அவர்களின் சிக்கல்களை அறிந்து கொண்டு உடனடியாக தீர்வு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதற்கு முந்தைய தேடல், ஆய்வு, வாசிப்பு, விதிகள், சட்டங்கள் குறித்த சளைக்காத உழைப்பு அவரிடம் இருந்தது. இதனைக்கொண்டு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என்று பல தளங்களில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார். அரசு நிலங்கள், ஊருக்கு பொதுவான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய போது ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை மீறி பகிர்ந்து கொடுத்தார். ஜமாபந்திகளை தலித்துகள் வாழும் பகுதிகளில் நடத்திய முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணன் சமத்துவத் தேரை சேரிக்கும் இழுத்து வந்தவர் என்றால் மிகையில்லை.

தன்னுடைய சாதியை யார் கேட்டாலும் சொல்ல மறுத்த கிருஷ்ணன், சாதி விதித்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்ததாக மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். அவரின் அரும்பணிகளை கண்ட அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் ‘நீங்கள் ஏன் உங்கள் சாதியை மறைக்கிறீர்கள். நீங்கள் உயர்சாதியில் பிறந்தவர். நீங்கள் அதனை மறைப்பதால் என்ன நன்மை விளையப்போகிறது?’ என்று கேட்டார். கிருஷ்ணன் தீர்க்கமாக, ‘ஐயா, நான் சாதியை மறைக்கவில்லை. சாதியை நிராகரிக்கிறேன்’ என்று பதிலுரைத்தார்.  நெகிழ்ந்து போன ஜெயில் சிங் ‘இறைவன் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்காக உழைக்கும் புத்தியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார்’ என வாழ்த்தினார்.

வர்ணமா? வர்க்கமா? எது இந்திய சமூகத்தில் முக்கியமாக எதிர்கொள்ள வேண்டிய சவால் என்கிற வினாவிற்கு இரண்டுமே தான் என்று அவர் கருதினார். ஏழ்மையும், சாதி ஒடுக்குமுறையும் இணைந்து பெரும்பாலும் பயணிப்பதை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் நில சீர்திருத்தம், நிலப்பகிர்வை தீவிரமாக வலியுறுத்தினார்.

கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஆளுநர்களை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு தலித்துகளுக்கு நிலப்பகிர்வை சாதிக்க முடியுமா என்று ஆய்வு செய்தது. பெரும்பாலான தலித்துகள் நிலமற்றவர்களாக, வறுமையில் சிக்குண்டவர்களாக இருப்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்த அக்குழு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போதுமான அளவு நிலமிருப்பதையும் சுட்டிக்காட்டியது. இதனை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் ‘கண்ணியமான வாழ்வு, பாதுகாப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நிலவுரிமை, கல்வி இரண்டும் அவசியமாகும். நீர்ப்பாசன வசதியுள்ள நிலமிருந்தால், பிள்ளைகளை படிக்க வைக்கும் பொருளாதார பலம் இருக்கும். போதுமான வருமானம் இல்லாமல் போனால், குடும்பத்தின் தேவைகளுக்காக பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டிய அவலம் ஏற்படும். பாசன வசதியுள்ள நிலத்தால் வருமானம் கிடைக்கும் என்றால் பிள்ளைகளை படிக்க அனுப்புவது இலகுவாக இருக்கும்.’ என்று பதிந்தார்.

பொருளாதார ஏற்றத்தை சாதிக்க பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்களில்  நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர்  இணைத்துக்கொள்வது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அளவில் நெடுங்காலமாக அமலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அப்பணியில் இணைச் செயலாளராக சீரிய பங்காற்றினார் பி.எஸ்.கிருஷ்ணன். பின்னர், வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்த போது மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும் பொறுப்பு செயலாளராக இவர் வசம் வந்து சேர்ந்தது. அப்பணியையும் செவ்வனே செய்தார். ஆந்திர பிரதேச அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்த போது பி.எஸ்.கிருஷ்ணனின் உதவியை நாடியது. சட்ட வரைவு, உருவாக்கம், அமலாக்கத்தை அவர் திறம்பட கையாண்டார். உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

புகைப்பட நன்றி: நீதிராஜன்

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது, ‘எத்தனை நாளைக்கு தான் இட ஒதுக்கீடு தொடரும்?’ என நெறியாளர் கேட்க, மூப்பினால் நடுங்கிக் கொண்டிருந்த நிலையிலும் உறுதியாக ‘சாதியின் பெயரால் அநீதிகள் இந்திய சமூகத்தில் நிகழ்த்தப்படுவது நிற்கும் நாள்வரை இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.’ என்று பதிலுரைத்தார்.
பட்டியலின சாதியினர், பழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் (தடுப்புச்) சட்டம் உருவாவதற்கு பின்னால் அவரின் பெரும் உழைப்பிருந்தது. அச்சட்டம் கால் நூற்றாண்டு கழித்து திருத்தப்பட்டதிலும் அவரின் முத்திரை இருந்தது. மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும்  தொழிலை தடை செய்வதோடு, அக்கொடுமையினால் உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்கும் சட்ட உருவாக்கத்திலும் பங்களித்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வலுவிழக்க வைத்த போது, அதனை சீர்செய்யும் சீராய்வு மனுவை வடிவமைப்பதில் எண்பது வயதை கடந்த நிலையிலும் பங்குபெற்றார்.

வேறொரு பேட்டியில், ‘இட ஒதுக்கீட்டை சிலர் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்று உயர்சாதியினர் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்களே?’ என்று வினவப்பட்ட போது, ‘அது உயர்சாதியினரின் பொய் பரப்புரை அன்றி வேறொன்றுமில்லை. அவர்களின் மனநிலை சாதிக்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களையே குறைசொல்வதாக இருக்கிறது. அம்மக்களுக்கு நிலம், கல்வியை தருவதில் முனைப்பாக ஈடுபட்டுவிட்டு பின்னர் இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களை குறை சொல்லுங்கள்’ என்றார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயலாளராக இருந்த காலத்தில் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை அறிந்துணர்ந்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்த்தார். பட்டியலின சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையங்களை அரசியலமைப்பு அந்தஸ்து கொண்டதாக மாற்றுவதற்கும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காரணம் ஆவார். 

புகைப்பட நன்றி: நீதிராஜன்

பி.எஸ்.கிருஷ்ணனுக்கு இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுக்கையில் இருந்தார். இட ஒதுக்கீட்டிற்கான வரையறைகளை சாமர்த்தியமாக பொருள் கொண்டு இட ஒதுக்கீட்டை பல மாணவர்களுக்கு மறுத்த அவலநிலை அவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில் சமூகநீதிக்கான சமருக்காக அவர் படுக்கையை விட்டு எழுந்தார். நடுங்கும் விரல்களோடு தானே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய மனுவை தட்டச்சு செய்து கொடுத்தார். அம்மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை காக்கப்பட்டு அவர்களின் குடிமைப்பணி இடங்களை பெறுவது உறுதி செய்யப்பட்டது.

பி.எஸ்.கிருஷ்ணன் எழுதி முடிக்காமல் போன இறுதிக் கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள், நீதி குறித்து கவலையோடு, ‘பட்டியலின சாதியினருக்கு கண்ணியமிக்க வாழ்வும், மரணமும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன’ என்று பதிவு செய்திருந்தார். எத்தனை நாளைக்கு இந்த அநீதி தொடரும் என்று ஆதங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் சட்டங்கள், செயல்பாடுகள், திட்டங்கள் என்று பலமுனைகளில் சாதி ஒழிப்பு, சமத்துவத்துக்கான போரினை முன்னெடுக்க தன்னுடைய இறுதிக் கட்டுரையில் அழைப்பு விடுத்தார். முடிக்கப்படாத அந்த மாபெரும் சாம்ராட்டின் கனவினை முன்னெடுத்து ஈடேற்றுவதே அவருக்கான புகழஞ்சலியாக இருக்கும்.

நூலினை வாங்க: சமூக நீதிக்கான அறப்போர் : https://www.amazon.in/gp/product/8194340705/ref=cx_skuctr_share?smid=A2FA8VKKREFM6M

பி.எஸ்.கிருஷ்ணன் பங்களிப்பில் உருவான சட்டங்கள்:
புத்த மதத்தில் இணைந்த தலித்துகளைப் பட்டியல் சாதியினர் என்று அங்கீகரிப்பதற்கான சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989) & திருத்தச் சட்டம் (2015),
மனித கழிவகற்றுவோரைப் பணியமர்த்தல் மற்றும் உலர்கழிப்பறைகள் கட்டுதல் தடுப்புச் சட்டம் (1993). மேற்சொன்ன சட்டத்தின் மேம்பட்ட வடிவாமான மறுவாழ்வுக்கான சட்டம் (2013)

எழுதிய நூல்கள்: Empowering Dalits for Empowering India- A Road Map
Social Exclusion and Justice in India
நினைவலைகள் : ‘சமூக நீதிக்கான அறப்போர் – பி.எஸ்.கிருஷ்ணன் : நலிந்தோர் நலனுக்கான ஓர் வாழ்வின் அர்ப்பணம்’

(இன்று பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்)

நன்றி: விகடன் இயர்புக் 2020

மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் அரிய பணிகள்


:
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’ என்கிற குறுநூலை எழுதியுள்ளார். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த பெ.சு நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். அவர் மொத்தமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவை 650 பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றின் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
தன்னுடைய மனோன்மணியம் நாடக நூலில் தன்னை, ‘அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்’ என்று அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்த்த பெ.சு. தன்னுடைய தமிழார்வத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து மாட்டுவண்டி ஏறி செங்கோட்டை அடைந்து அங்கிருந்து சென்னை வரை பயணம் செய்து தமிழறிஞர்களைக் கண்டு, அறிவுப்பசி ஆற்றிக்கொண்டார். அன்றைய சமஸ்தான மன்னரின் உதவியோடு லண்டனில் இருந்து ஆங்கில நூல்களை வரவைத்து வாசித்து இருக்கிறார்.

களக்காட்டில் இருந்து ஆலப்புழைக்குக் குடிபெயர்ந்த வேளாளர் குடும்பம் என்றாலும் தமிழையும், சைவத்தையும் பெ.சுவின் குடும்பம் மறக்கவில்லை. திருவிதாங்கூர் அரசர்களின் மொழி வெறுப்பற்ற தன்மை இதற்குக் காரணம் என்று ஆதாரங்களோடு கவனப்படுத்துகிறார் அ.கா.பெருமாள். பெ.சு வரலாறு, தத்துவம் பயின்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்றாலும் அப்படிப்பை அவர் முடிக்கவில்லை. பெ.சு. அவர்கள் திருநெல்வேலி ம.தி.தா. இந்துப்பள்ளியின் தலைமைப்பொறுப்பில் இருந்த போது தமிழை முறையாகக் கற்றதோடு, ஸ்ரீ கோடகநல்லூர் சுவாமிகளிடம் சித்தாந்த சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு தானே சுயமாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ளார். திருவனந்தபுரம் கல்லூரியில் பயின்ற போது தமிழ்த்துறைக்குப் புத்தகங்களை வாங்கியுள்ளார்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் தத்துவத்துறை பேராசிரியராக இருந்த முனைவர் ராபர்ட் ஹார்வி இங்கிலாந்து போக வேண்டி இருந்த போது தன்னுடைய இடத்திற்குப் பெ.சுவை பரிந்துரை செய்தார். 1878-1882 வரை தத்துவ ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மூன்றாண்டுகள் சமஸ்தான மன்னரால் பிறவகைச் சிரஸ்தார் என்னும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இது அரசு நிர்வாகம் தொடர்புடையது. இப்பணி காலத்தில் தான் பல்வேறு கோவில்களுக்குப் பயணம் செய்து, கல்வெட்டுகள், ஆவணங்களைப் பெ.சு. ஆய்வு செய்துள்ளார். 1885-1897 வரை ஹார்வியின் பரிந்துரையால் மகாராஜா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். நன்றி மறவாமல் தன்னுடைய வீட்டிற்கு ஹார்விபுரம் என்று பெயரிட்டதோடு, தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தை அவருக்கே சமர்ப்பித்தார்.

நாடகாசிரியர்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தமிழ் நாடகங்கள் எழுந்தன. தமிழகத்தில் அக்காலத்தில் 327 நாடகங்கள் வெளிவந்ததாக ஒரு ஆய்வுக்குறிப்புண்டு. பெ.சு இத்தகைய நாடகங்களைப் படித்துள்ளார். லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி கதையின் தழுவலாகத் தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தைப் பெ.சு எழுதினார். பெ.சுவின் நாடகம் எளிமை, விறுவிறுப்பு, அமைப்பிற்காகப் பரவலாகப் படிக்கப்பட்டது. இந்நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடு பெ.சு எழுதவில்லை, வாசிப்பின்பத்திற்காகவே அதனை இயற்றியதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

வெண்பா, கலிப்பா, குறள் வெண்செந்துறை, வஞ்சிப்பா என்று பல்வேறு பாவினங்கள் விரவிவர இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலை தத்துவப் பின்னணியோடு பெ.சு படைத்தார். ‘இல்லறம், துறவறம், பக்தி ஞானம் முதலிய மோட்ச சாதனங்கள்’ பாத்திரங்களின் மூலம் உருவகப்படுத்தி இந்நாடகம் அமைந்தது.

Image result for சுந்தரம் பிள்ளை ncbh
இந்நாடகத்தில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி’ என்கிற வரி நூலில் இடம்பெறுகிறது. ‘பத்துப்பாட்டில் மனம் பற்றியவர் பிற நூற்களைப் பற்றமாட்டார்’ என்று பெ.சு சிலிர்க்கிறார். மனோன்மணியம் நாடகம் பல்வேறு பல்கலைகழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புக்கு உரியது.

ஆய்வறிஞர்:
கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப் பெ.சு. படியெடுத்து உள்ளார். ஆங்கிலத்தில் பத்துப்பாட்டு, திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார். பத்துப்பாட்டின் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ.சு மொழிபெயர்த்துள்ளார்.

திருவிதாங்கூர் வரலாறு கட்டுரையில் கொல்லம் ஆண்டு என்கிற வழக்கம் எப்படி வந்தது என்பதைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்து புதியதொரு பார்வையை முன்வைக்கிறார். அக்கட்டுரையில் சமூக நோக்கோடும் பெ.சு எழுதியுள்ளார். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆரியப்பண்பாடும், ஆரியருக்கு முந்தைய திராவிடப்பண்பாடும் இணைந்தே உள்ளன என்கிற பெ.சு கன்னியாகுமரி முதல் பறவூர் வரை பயணிக்கும் ஒருவன் பழம் திராவிட மரபைக் காணமுடியும் என்கிறார். திருவிதாங்கூர் பகுதியின் வேணாட்டு மன்னர்களின் காலத்தைப் பெருமளவில் துல்லியமாக முதலில் கணித்தவர் பெ.சு. சம்பந்தர் காலம் கட்டுரையில் அவரின் காலத்தைச் சமூகச்சூழல், சமூக வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெ.சு கண்டறிந்துள்ளார். ஆதி சங்கரரின் நூல்கள், மத்தவிலாச பிரகசனம் ஆகியவற்றைக்கொண்டு சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். ராஜராஜன் காலமே நம்பியாண்டார் நம்பி காலம் என்றும் வாதிடுகிறார்.

ராமாயணத்தின் சாதி குறித்துக் கூர்ந்து நோக்கிய பெ.சு. அது குறித்து வெ.சு. முதலியாரிடம் பேசினார். அதைக்குறித்து எழுதவுள்ளதாகச் சொன்னாலும் அதற்குள் அமரரானார். ஆகவே, பெ.சுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறித்துக் கட்டுரை வரைந்தார் வெ.சு.முதலியார். ‘அதில் ராமாயணம் ஆரியச்சார்புடையது. ஆரியர் என்பவர் தமிழ் பிராமணர், வட இந்திய சாதியர் சிலரைக் குறிக்கும் சொல். ஆரியர் அல்லாத அநாரியர் தென்னிந்தியக் குடிகள் ஆவர்.’ என்றதோடு, ‘பெண்ணைச் சிறைப்பிடித்தும் ராவணன் கொல்லவில்லை, திராவிடப்பெண்ணான சூர்ப்பநகையை லட்சுமணன் துரோகம் செய்தவன். விபீஷணன் என்ற திராவிடன் துரோகம் செய்தவன்; அதற்காக ஆழ்வார் பட்டம் பெற்றவன். ஆரியர்கள் திராவிடர்களை இழிவானவர்கள் எனச் சொல்லி நம்பும்படி ஆக்கிவிட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

உரைநடையாசிரியர்:
உரைநடையில், ‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற ஒரே நூலை எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு. இதைக்குறித்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில். ‘….சுந்தரம்பிள்ளை தன் நூலில் தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்களைத் தந்திருக்கிறார். வடசொற்களை விலக்கும் கருத்தே இவரிடம் கிடையாது. தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டுவன செய்தவர்களில் சுந்தரம் பிள்ளை தலைசிறந்தவர்’ என்று புகழாரம் சூட்டுகிறார்.

கவிஞர்,கட்டுரையாசிரியர்:
பெ.சு. ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார். ஒரு நற்றாயின் புலம்பல் மணமாக வேண்டிய தினத்தன்று இறந்து போன மகள் குறித்து அரற்றும் அன்னையின் அழுகுரல். பொதுப்பள்ளி எழுச்சி தத்துவ நோக்கோடு அறியாமைத் துயிலில் இருந்து எழுப்பிய இறைவனை நோக்கி பாடப்பட்டது. அன்பின் அகநிலை விவிலியத்தின் புனித பவுல் கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் பெ.சு எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Hobbes, the father of English ethics’. ‘Bentham, The Juristic Moralist’, ‘A scene from A Tamil play’, H.T.Wills முதலிய கட்டுரைகள் எழுதினார்.

தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தின் துவக்கத்தில்’தமிழ் மொழியின் இலக்கியங்களை அழியாமல் பாதுகாத்த திருச் சி.வை.தாமதோரன் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் ஆகிய இருவரையும் வணங்குகிறேன். கல்வி, கேள்வி, அறிவு முதலியவற்றால் சிறியவனாகிய நான் மனோன்மணியம் என்னும் நாடகத்தைப் படித்திருக்கிறேன்.’ என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார். உ.வே.சா மனோன்மணியத்தைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்படைப்பில் குறைகள் உண்டு என்றதை பெ.சு அறிந்தார். கடிதம் எழுதி குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்கவும் செய்தார். மேலும், திருவிதாங்கூர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வருமாறு உ.வே.சாவிற்கு அன்போடு அழைப்பு விடுத்தார்.

தமிழக அரசு அவரின் தமிழ்த்தெய்வ வாழ்த்தை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கியது. அவரின் மூலப்பாடலில், ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை’ என்கிற வரி வடமொழி வெறி நிலவிவந்த காலத்தில் எதிர்க்குரலாக ஒலித்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் உருவான போது, நாஞ்சில்நாடு தமிழர்க்கு உரியது என்று தன்னுடைய மனோன்மணியம் நூலில் பெ.சுந்தரனார் குறிப்பிட்டு இருந்தது கவிமணி, ஜீவா, ம.பொ.சிவஞானம் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டு இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

நாற்பத்தி இரண்டு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பெ.சுந்தரனாருக்கு அஞ்சலியாக அவர் உ.வே.சாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளே அமையக்கூடும்: ‘நம்மனையார் தேகநிலையைக் கருதும்போது இருதலைக்கொள்ளியினுள் எறும்பு என்றே உண்மையாய் எண்ண வேண்டியதாக இருக்கிறது. உழைத்தால் சரீர உபாதை துணிபாக நிற்கிறது. உழைக்காவிட்டால் சரீரமிருந்து என்ன பயனென்ற சோகமும் அப்படியே ஏது செய்ய? கடவுள் இச்சைபோல நடக்கட்டும்’

மிக முக்கியமான ஆளுமையின் பன்முகத்தன்மையை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது அறிஞர் அ.கா.பெருமாளின் இக்குறுநூல்.

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் -அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள்: 82
விலை: 70

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?


எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

(“என்னால் எம்.ஜி.ஆராக ஆக முடியாது; ஆனால், எம்ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்” என்று அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் ஆட்சி உண்மையில் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இங்கே பிரசுரிக்கப்படுகிறது. பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ள ‘Image Trap’ நூலிலிருந்து எடுத்தாளப்படும் கட்டுரை இது. )

எம்.ஜி.ஆரின் மீது அடித்தட்டு வர்க்கம்கொண்ட அரசியல் பக்திக்கான காரணம் தன்னுடைய 11 வருடகால ஆட்சியில் அவர் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அல்ல என்பது புரியாத புதிராகும். அவருடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் எந்த முக்கியமான கட்டமைப்பு மாற்றமோ, ஏழைகளின் துயரங்கள் பெருமளவில் குறைவதோ நிகழவில்லை. தமிழ்நாடு அரசு எப்படித் தன்னுடைய நிதி மூலங்களைத் திரட்டியது, அவற்றை எப்படிச் செலவிட்டது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு, எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசு ஏழைகள் (மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்) மீது வரி போட்டுப் பணக்காரர்கள், கிராமப்புறச் செல்வந்தர்கள் பயன்பெறுமாறு செயல்பட்டது என்பதை விளக்குகிறது. (1)

ஏழைகளின் மீது சுமத்தப்பட்ட வரி

1975-85 வருடகாலத்தில் அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவிகிதம் விற்பனை வரியிலிருந்தே பெறப்பட்டது. இதில் பெரும்பான்மையான விற்பனை வரி நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் நுகர்வோர் பொருள்களான பருத்தி, இழைகள், மருந்துகள், பருப்பு வகைகள் தேயிலை, கரும்பு, மின்னணுப் பொருள்கள் மற்றும் சோப் மீதான வரிவிதிப்பு மூலமே பெறப்பட்டது. ஏழைகள் அதிலும் கொடிய வறுமைக்கு உள்ளான ஏழைகள் தங்களுடைய பயன்பாட்டை உணவு, அடிப்படைத் தேவைகளோடு நிறுத்திக்கொண்டதால் விற்பனை வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. 1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது. இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதற்கு நேர்மாறாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பணக்கார வர்க்கத்தினர் பெருமளவில் வரிவிதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிக்க அனுமதித்தது. நேரடி வரிகளான நில வரி, விவசாய வருமான வரி, நகர்ப்புற நில வரி முதலிய செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானமானது 1975-80 வருட காலத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் வெறும் 4.6 சதவிகிதம் மட்டுமே ஆகும். அடுத்த 1980-85 வருட காலத்தில் இந்த வரிகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் வெறும் 1.9 சதவிகிதத்துக்கு வீழ்ந்துவிட்டது. மேலும், 1960-65 வருட காலத்தில் நேரடி வரியின் மூலம் பெறப்பட்ட வரி வருமானமானது ஒட்டுமொத்த வரி வருமானத்தில் 15.5 சதவிகிதம் என்கிற பெரிய அளவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுச் செல்வந்தர்களின் சொத்துகளின் மீதும், வருமானத்தின் மீதும் நேரடி வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் செலுத்திய தாக்கம் வெகு சொற்பமானது.

… ஒட்டுமொத்த விவசாயத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் நேரடி வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே இக்காலத்தில் இருந்துவந்துள்ளது. உண்மையில் 1960களில் இருந்த 1.9 சதவிகிதத்திலிருந்து 1970களில் 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. விவசாய வருமானத்தின் மீதான நேரடி வரிவிதிப்பு முக்கியத்துவம் அற்றதாக மாறியது. விவசாய வருமானம் புதிய தொழில்நுட்பங்கள், பம்ப் செட்கள் வளர்ச்சியால் பெரிய விவசாயிகள் பலனடைந்த அக்காலத்தில் நேரடி வரிவிதிப்பு மேலும் குறையவே செய்தது. 1980களில் இந்தக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.

பணக்காரர்களுக்குப் பலன் தந்த ஆட்சி

எம்.ஜி.ஆர் ஆட்சி ஏழைகள் மீது வரிவிதித்து வாழ்ந்தது என்றால், அது பணக்காரர்களுக்குப் பலன் தந்தது, குறிப்பாக நிலவளம் மிகுந்த கிராமப்புறப் பணக்காரர்கள் பொதுச் செலவுகளின் மூலம் பலன் பெற்றார்கள். விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மானிய மின்சாரம் ஓர் எடுத்துக்காட்டாகும். விவசாயப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை எம்.ஜி.ஆர் அரசு 1979 வருடத்திலிருந்து படிப்படியாகக் குறைத்தது. இந்தப் பெரிய அளவிலான மானியத்தால் தமிழக மின்சார வாரியத்துக்கு ‘சராசரியாக 1980-85 காலத்தில் 150 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது. இதே காலத்தில் இந்த இழப்பீட்டு அளவு இரு மடங்கு அளவுக்கு அதிகரித்தது.’ இதேபோல, அரசு பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்திருந்த பொது நீர்ப்பாசன வசதிகளை மிகக் குறைந்த கட்டணங்களில் விவசாயத் துறை பயன்பாட்டுக்கு விட்டது.

ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயத் துறைக்கு மாநில அரசு வழங்கிய மானியம் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு வருடமும் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் போராட்ட அரசியலைத் தேவைப்படுகிறபோது பம்ப் செட் உரிமையாளர்களான பணக்கார விவசாயிகள் மேற்கொண்டார்கள். பலம் பொருந்திய அழுத்தக் குழுவாகத் திகழ்ந்த இவர்களுக்கே இந்தச் சலுகைகள் பெருமளவில் பயன் தந்தன.

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது என்று பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள். சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள். அஇஅதிமுக அரசின் முறையற்ற தனித்துவமான மதுக் கொள்கையானது தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ளும் டாஸ்மாக் அமைப்புக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களையே விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது. சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன. (2) லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. (3)

ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள்

பட்ஜெட் செயல்பாடுகளில் மட்டும் அஇஅதிமுக அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள் நின்றுவிடவில்லை. மற்ற கொள்கை சார்ந்த விஷயங்களிலும் ஏழை மக்களின் சிக்கல்களை அணுகுவதிலும் இரக்கமும் அறிவும் அற்றதாக அது நடந்துகொண்டது. 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது. (4) 1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது. (5)

இப்படி ஒருபக்கச் சார்பான பொருளாதாரக் குறுக்கீடுகளால் ஏற்பட்ட கட்டமைப்பு சார்ந்த விளைவுகள் கண்ணைக் கூசும் அளவுக்கு வெளிப்பட்டன. அதிகாரபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை. (6) மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது. 1972-73 & 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது. இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது. (7)

இப்படிப்பட்ட சமத்துவமின்மைகளோடு எண்ணற்ற மக்களை ஈர்க்கும் வகையில் 1982இல் பெருத்த ஆரவாரத்தோடு தொடங்கப்பட முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் முதலிய புகழ்பெற்ற பொருளாதாரத் திட்டங்களும் இணைந்தே இயங்கின.

ஜூலை 1982 முதல் பால்வாடி, நர்சரிகளில் பதிவு செய்துகொண்ட பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள இரண்டு வயதிலிருந்து இருக்கும் கிராமப்புறக் குழந்தைகள், பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளிக்குச் செல்லும் 38 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை என்கிற அளவில் வருடம் முழுக்கச் சத்துணவு வழங்கப்பட்டது. 56 லட்சம் பேர் திட்டம் தொடங்கப்பட்டபோது பங்கேற்றார்கள். செப்டம்பர் 1982இல் நகர்ப்புற குழந்தைகளுக்கும், மெட்ராஸ், மதுரை, கோவை பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 6.5 லட்சம் குழந்தைகள் இணைக்கப்பட்டார்கள். இரு மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே இருந்த கட்டமைப்பைக்கொண்டு மாதமொரு முறை பல்பொடி விநியோகிப்பட்டது.

… ஜனவரி 1983இல் முதியோர் ஓய்வுநிதி பெறுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள் இவர்களால் இன்னுமொரு 1.9 லட்சம் நபர்கள் கூடுதலாக இணைந்தார்கள். ஒரு வருடம் கழித்து முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் இலவச உணவு பெறத் தகுதி உடையவர்கள் ஆனார்கள். (8)

இதுவும், இதைப் போன்ற அளவில் சிறிய அரசியல் முதலீடுகளும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. அவை பொருளாதாரத்தின் கட்டமைப்பில் எந்த வகையான பெரிய மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. இவற்றுக்கான நிதி மூலங்கள் ஏழைகளிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தின் மூலமே சாத்தியமானது, இவை வருமானம், சொத்து ஆகியவற்றைப் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதில் மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தின.

சுருக்கமாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால், பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஒன்றாகும்.

அடிக் குறிப்புகள்:

1. இப்பகுதியின் விவரங்கள், வாசகங்கள் உட்படப் பெரும்பாலானவை எஸ்.குகன் (1988) தமிழ்நாட்டின் மாநில நிதிகள்: 1960-85: போக்குகள், கொள்கை பற்றிய மறுஆய்வு. செயற்தாள் 77, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்டல் ஸ்டடிஸ், மெட்ராஸ்.

2. இந்தியா டுடே, 31 மார்ச் 1989; அசைட் 15, மார்ச் 1989

3. அசைட் 15 மார்ச் 1989; அசைட் ஜூன் 16, 1988.

4. துக்ளக் 1 மார்ச் 1987

5. இந்தியன் எக்ஸ்பிரஸ், 3 பிப்ரவரி 1987

6. மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட்டல் ஸ்டடிஸ், 1988: 345

7. மேலே குறிப்பிட்டுள்ள அதே புத்தகம்

8. பார்பரா ஹாரிஸ், (1988) தென்னிந்தியாவில் உணவு, மதிய உணவு: உணவு, தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற உணவு பொருளாதாரத்தில் ஊட்டச்சத்துக் கொள்கை. விவாதத்தாள் 31, வளர்ச்சி ஆய்வுப்பள்ளி, கிழக்கு ஆங்க்லியா

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1958-2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துகளையும் தமிழகத்துக்கு வெளியே காத்திரமான முறையில் விரிவாக முன்வைத்தவர் இவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சினைகள், சாதியச் சிக்கல்கள், தமிழ்த் திரைப்படங்கள் எனப் பல துறைகளிலும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களிடம் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர். தமிழின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்தவர்.)

 

(இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய ‘Image Trap’ நூலின் தமிழாக்கமான ‘பிம்பச் சிறை’ நூலின் (பிரக்ஞை பதிப்பக வெளியீடு) இரண்டாம் அத்தியாயத்திலிருந்துவெளியிடப்படுகிறது. தமிழில்: பூ.கொ.சரவணன். )

தெற்கிலிருந்து ஒரு சூரியன்


தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூல் தொகுப்பை படித்து முடித்தேன். திராவிட இயக்கம் தேய்பிறை காலத்தில் இருக்கிற போது, அதன் கடந்த கால வரலாற்றை, சாதனைகளை ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு நூல் தொகுக்கப்பட்டு உள்ளது. சமயங்களில் கட்சி அறிக்கையோ என்கிற வியப்பு ஏற்பட்டாலும் பல இடங்களில் ஆசிரியர் குழுவின் உழைப்பு மெச்ச வைக்கிறது.

‘தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற தலைவர்கள் காலங்கள் செல்ல செல்ல கடுமையாக வெறுக்கப்படுவது நிகழும்’ என்கிற ராமச்சந்திர குஹாவின் வரிகள் கலைஞர் கருணாநிதிக்கும் பொருந்தும். வாரிசு அரசியல், ஊழல், ஈழப்போர் என அவரின் அரசியல் வாழ்வை இளைய தலைமுறை அடையாளம் காண்கிறது. அதேசமயம், அது மட்டும் தானா அவர்? திராவிட இயக்கம் திருடர்களின் இயக்கம் என்று ஒரு தரப்பு
சொல்லித்திரிவது எத்தனை உண்மை? இந்த நூல் நல்ல துவக்கப்புள்ளி. 

Image result for தெற்கிலிருந்து ஒரு சூரியன்

மாநில சுயாட்சி சார்ந்த கருணாநிதியின் முழக்கம் எப்படிப் பஞ்சாப், அசாம், கர்நாடகம் எனப் பலமுனைகளில் ஒலித்தது ஏன் அது இலங்கை வரை சென்றது என்கிற வரலாறு பலருக்கு தெரியாத ஒன்றாக இருக்கும். அதிகார பரவலாக்கம் கேட்பவர்களைத் தேச விரோதிகள் எனக் கருதிய தேசியத்தின் தேர்தல் அரசியல் உச்சகாலத்தில் எழுந்த ராஜ மன்னார் அறிக்கை ஏன் இன்றைக்கும் தேவைப்படுகிறது என நூலில் பல மாநில ஆளுமைகள் விளக்குகிறார்கள். மூன்றாவது பட்டியலை மாற்ற வேண்டும், பொதுப்பட்டியல் மத்திய அரசுக்கு மட்டும் அதிகாரம் தருவதாக அமையக்கூடாது, நிதி நிர்வாகம், பெரும்பான்மை அதிகார பங்கீடு எனப் பல முனைகளில் இக்குரல்கள் பேசுகின்றன. கூட்டணியாட்சி கூட்டாட்சி நோக்கிய பயணம் என இன்று அரசியல் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி முன்மொழிந்தார் என்பது ஆச்சரியம் தரலாம்.

பிரேர்ணா சிங், அமர்த்திய சென், யோகேந்திர யாதவ் முதலியோரின் கட்டுரைகள் தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் சாதனைகளைக் கணக்கில் கொள்கின்றன. யோகேந்திர யாதவ் பீகாரில் வெற்றி பெறாத சமூகநீதி ஏன் தமிழகத்தில் சிறப்பாக இயங்கியது என விளக்குகிறார். துணை தேசியம் எப்படி ஒற்றுமை, உள்ளடக்கிய வளர்ச்சியை ஒருங்கே சாதிக்கிறது எனும் பிரேர்ணா சிங்கின் கட்டுரை இரண்டு பக்கங்களில் முடிந்தாலும் முக்கியமான ஒன்று.

மே தினம் சார்ந்த விடுமுறை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், மத்திய அரசிற்கு முன்பே கூட்டுக்குடும்பச் சொத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது, நில உச்சவரம்பு சட்டத்தைச் செயல்படுத்தியது, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 33% இட ஒதுக்கீடு, தலித் மக்கள் நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தல் சட்டம் முதலிய சட்டரீதியான சாதனைகளை நீதிபதி சந்துரு அடுக்குகிறார்.

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அரிசியியல் எனும் கட்டுரையின் மூலம் வட்டிக்குப் பணம் வாங்கிச் சாப்பிட்ட வறுமையை விட்டுத் தமிழகத்தை வெளியே கொண்டு வரும் உணவு அரசியலை பொருளாதார மேதைகள், மத்திய அரசின் ஏளனங்களுக்கு இடையே தமிழகம் எப்படி முன்னெடுத்தது எனப் புரிய வைக்கிறார்.

நீர்ப்பாசன திட்டங்களைத் திராவிட இயக்கம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எனும் பரப்புரை ஆதாரங்களோடு முறியடிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை சார்ந்த சாதனைகளில் திராவிட அரசுகளின் தொலைநோக்கு கவனப்படுத்தப்பட்டு உள்ளது.

சித்திர ஓவியங்களின் மூலம் பரப்புரை புரிந்தது. இளைஞர்களை ஊடகம், மேடைப்பேச்சு, திரைப்படம், படிப்பகம் எனப் பல முனைகளில் அரசியல்படுத்திய திராவிட இயக்கம் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு அதை முன்னெடுப்பதில் காட்டிய சுணக்கம் நூலில் கவனம் பெறவில்லை.

சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எப்படிச் சட்டமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டும், மக்களுக்காகப் போராட வேண்டும், விவாதங்களுக்கு மெனக்கெட வேண்டும், கருத்துரிமையை மதிக்க வேண்டும் என்பதற்குக் கருணாநிதியின் சட்டசபை செயல்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் பாலபாடமாகத் திகழ கூடும். இடதுசாரி இயக்கங்களைப் போல அல்லாமல் தனிமனித உரிமைகளை மதிக்கும் வெளியை எப்போதும் திராவிட இயக்கம் கொண்டிருக்கும் என்கிற கருணாநிதியின் வாக்கு சாதிய சக்திகளின் முன்னால் மங்கி நிற்கிறது என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சாதிய கூர்முனையை முறிக்கத் திராவிட இயக்கம் தவறிவிட்டது, அதிகார போதை மக்களை விட்டு தள்ளி நிற்க வைக்கிறது முதலிய விமர்சனங்களைப் பால் சக்கரியா முன்வைக்கிறார். உயர்கல்வியைக் கூடுதல் வருமானம் ஈட்டும் மூலமாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றியதை சாடுகிறார் அனந்நகிருஷ்ணன். ஈழப்போரில் கருணாநிதியின் செயல்பாடு குறித்த விமர்சனம் ஓரிரு பத்திகளில் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. தலித் நலன்களில் பெரிய கவனமில்லாமல் இருக்கிறது என்கிற கேள்வியைக் கி.வீரமணி தடுமாற்றத்தோடு தான் எதிர்கொள்கிறார். ஊழல் குறித்த கேள்விகளை இந்தியாவில் எங்குத் தான் இல்லை, தண்டிக்கப்படுபவர்களின் சாதியப்பின்புலம் பெரிய பங்காற்றுகிறது எனக் கடப்பது இயக்கம் வலிமையோடு நீடித்திருப்பதற்கு உதவுவதாக அமையாது. குடும்ப அரசியல் எப்படித் திமுகவை வலுவிழக்க வைத்தது என்பது குறித்து ஸ்டாலினிடம் கேட்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி காத்திரமான ஒப்பீடுகளோ, கேள்விகளோ வேறெங்கும் இடம் பெறவில்லை. முதல்வரையும் அரசு ஊழியர் என்கிற வரையறைக்குள் 1973லேயே கொண்டு வந்த திமுக ஊழல் தடுப்பில் பெருமளவில் சுணங்கி இருப்பதைக் கவனத்தில் கொள்ள நூலில் பேசியவர்கள் தவறிவிட்டார்கள்.

முஸ்லிம்கள் காங்கிரஸ் ஆட்சியில் எப்படித் தமிழகத்திலும் மாற்றாந்தாய் மனோபாவத்தோடு அணுகப்பட்டார்கள், அது திமுக ஆட்சியில் தான் பெருமளவில் மாறியது என்பது மதவெறி தமிழகத்தில் தலையெடுக்காமல் இருப்பதற்கான காரணத்தைப் புலப்படுத்துகிறது. 

பெரியாரியமும், அம்பேத்கரியமும் இணைந்து பயணிக்க வேண்டிய தேவையைத் திருமாவளவன் பேசுகிறார். கருத்தொருமிப்பு அரசியல் என்பது தேர்தல் அரசியலில் தாராளவாதத்தை முன்னெடுக்க அவசியம் என ராஜன் குறை கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். திமுகத் தொண்டர்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட நேர்முகங்கள், புகைப்படங்கள் நூலில் உண்டு. அதேசமயம், விமர்சனங்கள் ஆங்காங்கே தூவிக்கிடந்தாலும் மு.கருணாநிதி என்கிற ஆளுமையின் எழுச்சி, இயக்கம், அரசியலை திராவிட இயக்கத்தின் தேவையோடு இணைத்து உணரவும், தமிழ் நிலத்தில் வேரூன்றிய திராவிட அரசியலை இன்னமும் கனிவோடு தற்காலத் தலைமுறை அணுகுவதற்கான திறப்பாக இத்தொகுப்பு அமையும். தெற்கிலிருந்து இந்தியாவின் சமகால வரலாற்றை, அரசியலை புரிந்து கொள்ள, ஆய்வு செய்ய ஊக்கமும், உற்சாகமும் தரும் திமுக மீது மென்மையான அணுகுமுறை கொண்ட முக்கியமான நூல் இது. 

Image result for தெற்கிலிருந்து ஒரு சூரியன்

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
208 பக்கங்கள்
200 ரூபாய்
தமிழ் திசை பதிப்பக வெளியீடு