பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்
(“என்னால் எம்.ஜி.ஆராக ஆக முடியாது; ஆனால், எம்ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்” என்று அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் ஆட்சி உண்மையில் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இங்கே பிரசுரிக்கப்படுகிறது. பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ள ‘Image Trap’ நூலிலிருந்து எடுத்தாளப்படும் கட்டுரை இது. )
எம்.ஜி.ஆரின் மீது அடித்தட்டு வர்க்கம்கொண்ட அரசியல் பக்திக்கான காரணம் தன்னுடைய 11 வருடகால ஆட்சியில் அவர் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அல்ல என்பது புரியாத புதிராகும். அவருடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் எந்த முக்கியமான கட்டமைப்பு மாற்றமோ, ஏழைகளின் துயரங்கள் பெருமளவில் குறைவதோ நிகழவில்லை. தமிழ்நாடு அரசு எப்படித் தன்னுடைய நிதி மூலங்களைத் திரட்டியது, அவற்றை எப்படிச் செலவிட்டது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு, எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசு ஏழைகள் (மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்) மீது வரி போட்டுப் பணக்காரர்கள், கிராமப்புறச் செல்வந்தர்கள் பயன்பெறுமாறு செயல்பட்டது என்பதை விளக்குகிறது. (1)
ஏழைகளின் மீது சுமத்தப்பட்ட வரி
1975-85 வருடகாலத்தில் அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவிகிதம் விற்பனை வரியிலிருந்தே பெறப்பட்டது. இதில் பெரும்பான்மையான விற்பனை வரி நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் நுகர்வோர் பொருள்களான பருத்தி, இழைகள், மருந்துகள், பருப்பு வகைகள் தேயிலை, கரும்பு, மின்னணுப் பொருள்கள் மற்றும் சோப் மீதான வரிவிதிப்பு மூலமே பெறப்பட்டது. ஏழைகள் அதிலும் கொடிய வறுமைக்கு உள்ளான ஏழைகள் தங்களுடைய பயன்பாட்டை உணவு, அடிப்படைத் தேவைகளோடு நிறுத்திக்கொண்டதால் விற்பனை வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. 1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது. இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.
இதற்கு நேர்மாறாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பணக்கார வர்க்கத்தினர் பெருமளவில் வரிவிதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிக்க அனுமதித்தது. நேரடி வரிகளான நில வரி, விவசாய வருமான வரி, நகர்ப்புற நில வரி முதலிய செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானமானது 1975-80 வருட காலத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் வெறும் 4.6 சதவிகிதம் மட்டுமே ஆகும். அடுத்த 1980-85 வருட காலத்தில் இந்த வரிகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் வெறும் 1.9 சதவிகிதத்துக்கு வீழ்ந்துவிட்டது. மேலும், 1960-65 வருட காலத்தில் நேரடி வரியின் மூலம் பெறப்பட்ட வரி வருமானமானது ஒட்டுமொத்த வரி வருமானத்தில் 15.5 சதவிகிதம் என்கிற பெரிய அளவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுச் செல்வந்தர்களின் சொத்துகளின் மீதும், வருமானத்தின் மீதும் நேரடி வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் செலுத்திய தாக்கம் வெகு சொற்பமானது.
… ஒட்டுமொத்த விவசாயத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் நேரடி வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே இக்காலத்தில் இருந்துவந்துள்ளது. உண்மையில் 1960களில் இருந்த 1.9 சதவிகிதத்திலிருந்து 1970களில் 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. விவசாய வருமானத்தின் மீதான நேரடி வரிவிதிப்பு முக்கியத்துவம் அற்றதாக மாறியது. விவசாய வருமானம் புதிய தொழில்நுட்பங்கள், பம்ப் செட்கள் வளர்ச்சியால் பெரிய விவசாயிகள் பலனடைந்த அக்காலத்தில் நேரடி வரிவிதிப்பு மேலும் குறையவே செய்தது. 1980களில் இந்தக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.

பணக்காரர்களுக்குப் பலன் தந்த ஆட்சி
எம்.ஜி.ஆர் ஆட்சி ஏழைகள் மீது வரிவிதித்து வாழ்ந்தது என்றால், அது பணக்காரர்களுக்குப் பலன் தந்தது, குறிப்பாக நிலவளம் மிகுந்த கிராமப்புறப் பணக்காரர்கள் பொதுச் செலவுகளின் மூலம் பலன் பெற்றார்கள். விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மானிய மின்சாரம் ஓர் எடுத்துக்காட்டாகும். விவசாயப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை எம்.ஜி.ஆர் அரசு 1979 வருடத்திலிருந்து படிப்படியாகக் குறைத்தது. இந்தப் பெரிய அளவிலான மானியத்தால் தமிழக மின்சார வாரியத்துக்கு ‘சராசரியாக 1980-85 காலத்தில் 150 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது. இதே காலத்தில் இந்த இழப்பீட்டு அளவு இரு மடங்கு அளவுக்கு அதிகரித்தது.’ இதேபோல, அரசு பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்திருந்த பொது நீர்ப்பாசன வசதிகளை மிகக் குறைந்த கட்டணங்களில் விவசாயத் துறை பயன்பாட்டுக்கு விட்டது.
ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயத் துறைக்கு மாநில அரசு வழங்கிய மானியம் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு வருடமும் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் போராட்ட அரசியலைத் தேவைப்படுகிறபோது பம்ப் செட் உரிமையாளர்களான பணக்கார விவசாயிகள் மேற்கொண்டார்கள். பலம் பொருந்திய அழுத்தக் குழுவாகத் திகழ்ந்த இவர்களுக்கே இந்தச் சலுகைகள் பெருமளவில் பயன் தந்தன.
எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது என்று பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள். சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள். அஇஅதிமுக அரசின் முறையற்ற தனித்துவமான மதுக் கொள்கையானது தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ளும் டாஸ்மாக் அமைப்புக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களையே விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது. சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன. (2) லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. (3)
ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள்
பட்ஜெட் செயல்பாடுகளில் மட்டும் அஇஅதிமுக அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள் நின்றுவிடவில்லை. மற்ற கொள்கை சார்ந்த விஷயங்களிலும் ஏழை மக்களின் சிக்கல்களை அணுகுவதிலும் இரக்கமும் அறிவும் அற்றதாக அது நடந்துகொண்டது. 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது. (4) 1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது. (5)
இப்படி ஒருபக்கச் சார்பான பொருளாதாரக் குறுக்கீடுகளால் ஏற்பட்ட கட்டமைப்பு சார்ந்த விளைவுகள் கண்ணைக் கூசும் அளவுக்கு வெளிப்பட்டன. அதிகாரபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை. (6) மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது. 1972-73 & 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது. இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது. (7)

இப்படிப்பட்ட சமத்துவமின்மைகளோடு எண்ணற்ற மக்களை ஈர்க்கும் வகையில் 1982இல் பெருத்த ஆரவாரத்தோடு தொடங்கப்பட முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் முதலிய புகழ்பெற்ற பொருளாதாரத் திட்டங்களும் இணைந்தே இயங்கின.
ஜூலை 1982 முதல் பால்வாடி, நர்சரிகளில் பதிவு செய்துகொண்ட பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள இரண்டு வயதிலிருந்து இருக்கும் கிராமப்புறக் குழந்தைகள், பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளிக்குச் செல்லும் 38 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை என்கிற அளவில் வருடம் முழுக்கச் சத்துணவு வழங்கப்பட்டது. 56 லட்சம் பேர் திட்டம் தொடங்கப்பட்டபோது பங்கேற்றார்கள். செப்டம்பர் 1982இல் நகர்ப்புற குழந்தைகளுக்கும், மெட்ராஸ், மதுரை, கோவை பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 6.5 லட்சம் குழந்தைகள் இணைக்கப்பட்டார்கள். இரு மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே இருந்த கட்டமைப்பைக்கொண்டு மாதமொரு முறை பல்பொடி விநியோகிப்பட்டது.
… ஜனவரி 1983இல் முதியோர் ஓய்வுநிதி பெறுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள் இவர்களால் இன்னுமொரு 1.9 லட்சம் நபர்கள் கூடுதலாக இணைந்தார்கள். ஒரு வருடம் கழித்து முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் இலவச உணவு பெறத் தகுதி உடையவர்கள் ஆனார்கள். (8)
இதுவும், இதைப் போன்ற அளவில் சிறிய அரசியல் முதலீடுகளும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. அவை பொருளாதாரத்தின் கட்டமைப்பில் எந்த வகையான பெரிய மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. இவற்றுக்கான நிதி மூலங்கள் ஏழைகளிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தின் மூலமே சாத்தியமானது, இவை வருமானம், சொத்து ஆகியவற்றைப் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதில் மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தின.
சுருக்கமாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால், பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஒன்றாகும்.
அடிக் குறிப்புகள்:
1. இப்பகுதியின் விவரங்கள், வாசகங்கள் உட்படப் பெரும்பாலானவை எஸ்.குகன் (1988) தமிழ்நாட்டின் மாநில நிதிகள்: 1960-85: போக்குகள், கொள்கை பற்றிய மறுஆய்வு. செயற்தாள் 77, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்டல் ஸ்டடிஸ், மெட்ராஸ்.
2. இந்தியா டுடே, 31 மார்ச் 1989; அசைட் 15, மார்ச் 1989
3. அசைட் 15 மார்ச் 1989; அசைட் ஜூன் 16, 1988.
4. துக்ளக் 1 மார்ச் 1987
5. இந்தியன் எக்ஸ்பிரஸ், 3 பிப்ரவரி 1987
6. மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட்டல் ஸ்டடிஸ், 1988: 345
7. மேலே குறிப்பிட்டுள்ள அதே புத்தகம்
8. பார்பரா ஹாரிஸ், (1988) தென்னிந்தியாவில் உணவு, மதிய உணவு: உணவு, தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற உணவு பொருளாதாரத்தில் ஊட்டச்சத்துக் கொள்கை. விவாதத்தாள் 31, வளர்ச்சி ஆய்வுப்பள்ளி, கிழக்கு ஆங்க்லியா
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1958-2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துகளையும் தமிழகத்துக்கு வெளியே காத்திரமான முறையில் விரிவாக முன்வைத்தவர் இவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சினைகள், சாதியச் சிக்கல்கள், தமிழ்த் திரைப்படங்கள் எனப் பல துறைகளிலும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களிடம் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர். தமிழின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்தவர்.)
(இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய ‘Image Trap’ நூலின் தமிழாக்கமான ‘பிம்பச் சிறை’ நூலின் (பிரக்ஞை பதிப்பக வெளியீடு) இரண்டாம் அத்தியாயத்திலிருந்துவெளியிடப்படுகிறது. தமிழில்: பூ.கொ.சரவணன். )
