பேராசிரியர் கெயில் ஆம்வேட் அவர்கள் 1971-ல் EPW-ல் எழுதிய கட்டுரையை Critical Quest பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது. இக்கட்டுரை புலே குறித்து கவனப்படுத்துபவை முக்கியமான வாதங்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் களமாடிய மற்ற சமூக சீர்திருத்தவாதிகளின் வரிசையில் புலே அவர்களை வைத்து பார்க்க கூடாது. அவரின் சிந்தனைகள், பார்வைகள், ஆர்வங்கள் அக்காலத்தில் இயங்கிய மேல்சாதி சமூக சீர்திருத்தவாதிகளிடம் இருந்து முற்றாக வேறுபட்டதாக இருந்தது. உயர்சாதியினரின் ‘தேசிய புரட்சி’ என்பது மேட்டுக்குடி, உயர்சாதி பாரம்பரியத்தை தேசியம் என்று இணைத்து கொண்டு முன்னிறுத்தியது. இதற்கு மாறாக விவசாயிகளின் நலன், சாதி ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக புரட்சியை ஜோதிபாய் புலே முன்மொழிந்தார்.
இந்தியாவின் இந்து கலாசாரம், சாதி அமைப்பை பிராமணியத்தை சார்ந்திருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய மரபில் நீக்கமற கலந்து விட்ட சாதி அமைப்பு, மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை வேரறுக்க கனவு கண்ட வகையில் புலே அவர்களே இந்திய மறுமலர்ச்சியின் முதன்மையான ஆளுமையாக கொண்டாடப்பட வேண்டும். அவரின் சிந்தனைகளே இந்தியாவின் சமூக புரட்சிக்கான முதல் எதிர்க்குரல்.
புலே எந்த அளவுக்கு தீர்க்கமான பார்வை கொண்டிருந்தார் என்பதை ஒரே ஒரு எடுத்துக்காட்டின் மூலம் உணரவைக்கலாம். அவரின் எழுத்துக்களில் ‘இந்து’ என்கிற பதத்தை அவர் பயன்படுத்துவதே இல்லை. இந்து கலாசாரத்தின் பகுதியாக தன்னை கருதிக்கொண்டு தன்னுடைய வாதங்களை முன்வைக்காமல் ஒட்டுமொத்த மரபையும் பகுத்தறிவு, சமத்துவ தராசுகளில் நிறுத்தி பார்த்து கூராய்வு செய்தார் புலே. இதனால் அவர் கள நிலைமை உணராத ஒருவர் என்று எண்ணிவிடக் கூடாது. அவர் எளிய மக்களின் மொழியிலேயே பேசினார். அவர்களின் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தை குவித்தார். அவர் சமூகத்திற்கு வெளியே நின்றபடி கனவுலகில் உலவிக்கொண்டு உரையாடவில்லை. பிரமாணிய கலாசார மரபிற்கு வெளியே இருந்து தன்னுடைய போரை முன்னெடுத்தார்.
ஒட்டுமொத்த சாதி அமைப்பும், அடக்குமுறை நிரம்பியிருக்கும் குடும்ப அமைப்பும் சமத்துவத்திற்கு எதிரானது. ஆகவே அவற்றை நிராகரிக்க வேண்டும். ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளும், மத பாரம்பரியங்களும் பகுத்தறிவோடு நோக்கப்படுகையில் தூக்கி எறியப்பட வேண்டியவை. மத எழுத்துக்களை ஏற்க வேண்டியதில்லை. அவற்றின் அதிகார அரசியலை துடைத்து எறிய வேண்டும். புலேவின் பார்வையில் இந்து மத நூல்கள் எல்லாம் கடந்த கால இந்திய வரலாறு குறித்து மிகக் குறைந்த புரிதலை தரும் கர்ண பரம்பரை கதைகள். அதைத்தாண்டி அவற்றால் பயன் எதுவும் இல்லை. அவை மக்களின் மனங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஆரியர்கள், பிராமணர்கள் திணித்தவை.
இப்படி பிராமணிய மரபை முற்றாக நிராகரித்த புலே அதன் இடத்தில் புரட்சிகர கலாசாரம் ஒன்றை முன்மொழிந்தார். அதனை சர்வஜனிக் சத்திய தர்மம் என்று அழைத்தார். (சமூகத்தின் உண்மையான தர்மம்). இந்த தர்மம் ஆனது அனைவருக்கும் ஆனது. சமூகத்தின் அற அடிப்படை வாய்மை, பகுத்தறிவில் பிணைந்திருக்க வேண்டும். தன்னுடைய மக்கள் அனைவரையும் சமமாக நடத்தாமல், பிரித்து அணுகும் மரபு அருவருப்பானது. சமத்துவத்தை விரும்புவனே நமக்கான இறைவனாக இருக்க இயலும். ஆகவே, இறைவனுக்கும், நமக்கும் இடையே தரகர்/அர்ச்சகர் தேவை கிடையாது.

புலேவை கிறிஸ்துவ மிஷனரிக்களின் கைக்கூலி என்று வசைபாடினார்கள். ஆனால், அவர் உயர்சாதி சமூக சீர்திருத்தவாதிகள் அளவுக்கு கூட இயேசு குறித்து அக்கறை காட்டவில்லை. அவர் கிறிஸ்துவ மதத்திற்கும் மாறவில்லை. மதம் குறித்த மரபான கேள்விகளில் அவர் தன் மனதை செலுத்தவில்லை. புலேவின் காலத்தில் பிராமணர் அல்லாத மராத்தி சமூகத்தில், குன்பிக்கள் எனும் நிலத்தை உழுபவர்களும், மராத்தாக்கள் என்பது அவர்களை சுரண்டுபவர்கள், அடக்கி ஆள்பவர்களையும் குறித்தது. இத்தகைய மராத்தாக்களை தெறிக்கும் அங்கதத்தோடு புலே எள்ளி நகையாடுகிறார்.
கடைக்கோடி மனிதனையே சமூகத்தின் மையமாக மாற்ற வேண்டும் என்று புலே வாதிட்டார். அவர் குலம்கிரி நூலில் பிராமணிய மரபு சமத்துவத்திற்கு எதிரானது என்று கூர்மையாக பேசுகிறார். சமூகத்தில் பிராமணிய கலாசாரம் மிகக் கடையவர்கள் என்று கருதிய தீண்டப்படாதோர், பெண்கள் குறித்தே புலே அக்கறை செலுத்தினார் என்பது விபத்தில்லை. அவரின் சிந்தனை எதோ அரவணைப்புவாதம் கொண்ட மேல்தட்டு பார்வையில்லை. விவசாய தொழிலாளர்கள், தீண்டப்படாதோர் ஆகிய இருவரையும் பிராமணிய அடிமைத்தனத்தில் சிக்கி பாடுபடுபவர்களாக அவர் கருதினார். அவரின் சத்தியசோதக் இயக்கம் அவரின் காலத்திற்கு பிறகு அவரை பின்பற்றியவர்களாக சொல்லிக்கொண்டவர்கள் தங்களை சாதி இந்துக்கள் என்று அழைத்து கொண்ட காலத்தில் தான் தலித்துகளின் எழுச்சி அம்பேத்கரின் வழிகாட்டுதலில் வேறு திசையில் தீவிரமாக பயணித்தது எனலாம்.
புலே பெண் விடுதலையை தன்னுடைய மூச்சாக கொண்டிருந்தார். அவரின் தோள் சேர்ந்து பணியாற்றியவர் கிருஷ்ணராவ் பாலேகர் . பெண் விடுதலையை ஆதரித்து ஆண்-பெண் வேறுபாடுகளை விமர்சித்து தாராபாய் ஷிண்டே எழுதிய நூலை கூர்மையாக பாலேகர் தாக்கி எழுதினார். தன்னுடைய தளபதி என்று கூட பார்க்காமல் அவரின் விமர்சனத்தை கடுமையாக புலே தாக்கி எழுதினார். அத்தாக்குதல் பிராமணர்கள் மீதான அவரின் எழுத்தை விட கோபத்தோடு வெளிப்பட்டது.பாலேகர் பண்டைய, அடக்குமுறையின் உருவமாக திகழ்கிற குடும்ப முறையின் குரலாக வெளிப்படுகிறார், வீட்டோடு பெண் கட்டிப்போட பட்டுள்ளார். கணவன்-மனைவி உறவானது புதிய பாதையில் சமத்துவம் மிக்கதாக பயணிக்க வேண்டும் என்று எழுதினார் புலே. இந்த கருத்து மோதல்களை தாண்டி தன்னுடைய மரணம் வரை புலேவின் இயக்கத்தில் பங்காற்றினார் பாலேகர் என்பது கவனத்துக்கு உரியது. குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை சமூக சமத்துவம் என்பது சாத்தியமே இல்லை என்று புலே தெளிவாக உணர்ந்திருந்தார்.
ஆரியர்களும், ஆரியர் அல்லாதோரும்:
ஒரு முழுமையான கருத்தியல் என்பது அடிப்படை விழுமியங்கள் கொண்டதாக மட்டும் தேங்கி விடாது. அது சமூகத்தின் தற்கால நிலை குறித்து அக்கறை காட்டி, அதனை மாற்ற முனையும். அதையே புலேவும் செய்தார். எப்படி சாதி அமைப்பு தோன்றியது என்பது குறித்து தன்னுடைய கருதுகோளை புலே முன்வைத்தார். புலேவின் பார்வையில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் நலன்கள் என்பதை சமரசப்படுத்தி கொள்ள வாய்ப்பே இல்லை. ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். புலே ‘பிராமண வெறுப்பு’ கொண்டிருந்தார் என்பது , சுரண்டிக்கொண்டிருந்த முதலாளிகள் மீது மார்க்சியர்கள் வெறுப்பு கொண்டிருந்தது என்பதை ஒத்ததே ஆகும் என்கிறார் கெயில் ஆம்வேட்.
புலேவின் ஆரியர் அல்லாதோர் குறித்த கருத்துகள் கலாசார, இன கூறுகளில் தான் கவனம் செலுத்தியது. பொருளாதார, அரசியல் கூறுகள் பெரிதாக கவனித்தில் கொலப்படவில்லை. அவர் காலத்தில் காலனியத்தின் பொருளாதார போக்குகள், அரசியல் தீர்வுகள் குறித்து அறிவது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனவேதான், அவரின் அக்கறை கலாசார, இன விஷயங்களில் நிலைபெற்றது. சாதி அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இருந்த பிராமணர்கள் அறிவை தங்களின் தனிச்சொத்தாக ஆக்கி கொண்டார்கள். இவர்களை அந்நியர்கள், படை எடுத்து வந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்று புலே கருதினார். இவர்கள் சாதி அமைப்பை கொண்டு இம்மண்ணின் பூர்வ குடிகளை அடிமைப்படுத்தி விட்டார்கள். இவர்களிடம் தேங்கியிருக்கும் அதிகாரம், அறிவு அனைவர்க்கும் உரியதாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.
எது தேசிய கலாசாரம் என்கிற கேள்வி எழுந்த போது மேல்சாதியினர், மேல்தட்டு வர்க்கத்தினர் பிரிட்டிஷார் இந்தியா என வரையறுத்ததை இந்தியா என்று ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் கலாசாரம் என்பது இந்து கலாசாரம். அது வேத காலத்தில் ஆரிய மக்களின் படைப்பில் எழுந்தது என்றார்கள். இந்த மரபின் பிரிக்க முடியாத பண்பாக வர்ணாசிரம தர்மத்தை கருதினார்கள். ஆரியர் அல்லாதோர், இஸ்லாமியர், பழங்குடியினர், கீழ் சாதியினர், விவசாயிகள் ஆகியோரின் மரபுகளை இழிவான ஒன்றாக கருதினார்கள், தரம் தாழ்த்தி அணுகினார்கள்.
ஆரிய இனம் குறித்த கருதுகோள்கள் ஜெர்மனியில் ஒப்பீட்டு ஆய்வாளர்களின் மத்தியில் தோன்றியதை, இந்துக்களும்-பிரிட்டிஷாரும் ரத்த உறவுகள் கொண்டவர்கள் என்று மாக்ஸ் முல்லர் பிரபலப்படுத்துவதில் போய் நின்றது. இதை அப்படியே எடுத்துக்கொண்டு, ஆரிய இனம், கலாசாரமே உயர்ந்தது, உன்னதமானது. அதன் ஆன்மீக பண்பை மேற்கின் இந்தோ ஐரோப்பியர்கள் தொலைத்து விட்டார்கள் என்றார்கள். காட்டுமிராண்டிகளாக இருந்த ஆரியர் அல்லாதோர் ஆரிய பண்பாட்டின் காற்று பட்டே பண்பட்டார்கள். பிளந்து கிடந்த இந்திய சமூகத்தை சாதியே பிணைத்து என்பது அவர்களின் பார்வை. மேற்கின் பகுத்தறிவு சாதி அமைப்பை கேள்வி கேட்டது என்றால், மேற்கின் இனவெறி சாதி அமைப்பிற்கு வலிமை சேர்த்தது.
இரு பிறப்பாளர்கள் ஆன பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோர் மட்டுமே ஆரியர்கள் என அழைக்கப்பட்டார்கள். சூத்திரர்கள், தீண்டப்படாதோர், பழங்குடியினர் ஆரியர் அல்லாதோரின் வழித்தோன்றல்கள் எனப்பட்டார்கள். ஆரிய இனம் என்கிற கருதுகோளை அப்படியே ஏற்காத தயானந்தர் முதலியோர் கூட திராவிடர்கள், சூத்திரர்கள், பழங்குடியினர், இஸ்லாமியர் ஆகியோர் கலாசார, அற, அறிவுக்கூறுகளில் ஆரியர்களை விட கீழானவர்கள் என்றே கருதினார்கள். திலகர் இப்படி எழுதினார்:
ஆரியர்கள் வட துருவத்தில் இருந்து புதிய நிலங்களை தேடி நிலநடுக்கோட்டை நோக்கி பயணித்தார்கள். ஆரியர் அல்லாத இனங்களை ஆரியர்கள் வென்றது, கொன்றது, செரித்துக் கொண்டது ஆகியவை ஆரியர்களே உயர்ந்த, அவசியமான இனம் என்பதை வெளிப்படுத்துகிறது
இந்திய தேசியத்தின் அடிப்படையாக ஆரிய, வடமொழி மரபை முன்னிறுத்தியதன் மூலம் மேல்சாதி இந்துக்களின் குரல், கலாசாரமே வலுப்படுத்தப்பட்டது. வங்க அறிவுஜீவிகள் காளியை தங்களுடைய போராட்ட அடையாளமாக முன்னிறுத்தி வெகுமக்கள் மரபுகளை தூற்றினார்கள். திலகர் சித்பவன பிராமணர்களின் தெய்வமான கணபதியை சுற்றி இந்து தேசியத்தை பின்னினார். சிவாஜியை தனதாக்கி கொண்ட திலகர் அவரை பிராமணர்களின் பேச்சின் கேட்டு ஆண்டவராக, இஸ்லாமியர்களின் எதிரியாக முன்னிறுத்தினார். காந்தியின் ராம ராஜ்யம் இந்தியாவில் பெருமளவில் கவனம் பெற்றாலும், தமிழ் மண்ணில் திராவிடர்களை கொன்றொழித்த ஆரியனாக இராமன் அணுகப்பட்டான். சம்புகன் என்கிற சூத்திர பிள்ளை பிராமண நெறியை பின்பற்ற முயன்றதற்காக கொன்ற ஆதிக்க சாதி வெறி கொண்ட ஒருவனாக இராமன் பெரும்பான்மை மகாராஷ்டிர மக்களுக்கு திகழ்ந்ததை கெயில் ஆம்வேட் சுட்டிக்காட்டுகிறார்.
ஆரிய கலாசாரமே உயர்ந்தது. அந்த இனம் தந்த பங்களிப்பே வேதங்கள், வர்ணாசிரமம் என்கிற வாதத்தை மகாத்மா புலே நேருக்கு நேர் எதிர்கொண்டார். எதை பண்டைய நாகரிகத்தின் துவக்கம் என்று வாதிட்டார்களோ அதனையே அடிமை முறையின் துவக்கம் என்று சாடினார் புலே. பிரிட்டிஷார், இஸ்லாமிய ஆட்சி அந்நியர் ஆட்சி என்பதை தாண்டி அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்த ‘இரானி-ஆரிய-பட்’கள் குறிப்பாக பிராமணர்கள் அந்நியர்களே. உயர்சாதியினர், பழமைவாத மதம், வேதங்கள், புராணங்கள் முதலிய அனைத்தும் மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல, அவை இந்த நிலத்திற்கு அந்நியமானவை. அவை ஆதிக்கத்தின் ஆயுதங்கள்.
புராணங்கள் புலேவின் சிந்தனையில் மறுவாசிப்புக்கு ஆட்பட்டன. தசாவதாரம் மண்ணின் மைந்தர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்திய கதைகள் என்று புலே நிறுவினார். நரசிம்ம அவதாரம் ஒரு அப்பாவி இளவரசனின் மனதை நஞ்சாக்கி தன்னுடைய தந்தையையே கொல்லத்தூண்டிய கதை என்றார். உச்சமாக வாமன அவதாரம் இம்மண்ணின் எளியவர்கள், விவசாயிகள் ஆகியோரின் தலைவரான பலியை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் ஆவணம் என்று புலே கருத்துரைத்தார். பலி வந்திட இன்பம் பெருகும் என்கிற மகாராஷ்டிரா பழமொழியும் இந்த வாசிப்பும் ஒன்றிணைந்து கொண்டன. இதனால் மதத்தை நோக்கி மக்களை புலே திருப்பினார் என்று தவறாக எண்ணிக்கொள்ள கூடாது.
பிராமணியத்தின் கதையாடலை வேறொரு கதையாடலின் மூலம் எதிர்கொள்ளும் எதிர்ச்செயல்பாடே இது. மேலும், கீழ் சாதியினரின் தெய்வங்களான காண்டோபா, ஜோதிபா, மார்த்தாண்ட், கல்பாஹிரி ஆகியோரை நெகிழ்வான பார்வையோடு அணுகிய அவர் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட தெய்வங்களை புறந்தள்ளினார்.
புலேவின் காலத்திற்கு பிறகு இந்த ஆரியர் அல்லாதோர் அடையாளத்தை சூத்திரர்கள் ஆகிய பெரும்பான்மை மராத்தியர்கள் புறந்தள்ளினார்கள். இந்து தேசிய ஒற்றுமைக்கு இனப்போர் என்கிற கருத்தாக்கம் தடையாக இருந்தது ஒருபுறம், இடைநிலை சாதியினர் இருபதாம் நூற்றாண்டில் தங்களை சத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். புலேவும் சத்திரியர்கள் பூர்வகுடிகள் என்று எழுதினார். ஆனால், அவர் அந்த அடையாளத்தை உயர்த்திப்பிடிக்கவில்லை. இவர்களோ ஆரியர்களின் வழித்தோன்றல்கள் ஆகிய சத்திரியர்கள் என்று அறிவித்துக்கொண்டார்கள். அடிமைத்தனம், சூத்திரர்கள், ஆரியர் அல்லாதோர் முதலியவை திமுகவின் இனவாத கருத்துகள் என்கிற வட இந்தியாவின் குரலையே இவர்களும் வழிமொழிந்தார்கள் என்று கெயில் ஆம்வேட் கவனப்படுத்துகிறார்.
புலே வெறுமனே மகாராஷ்டிராவோடு தன்னுடைய மாற்று அரசியலை குறுக்கிக்கொண்டவர் இல்லை. அதற்கு மாறாக குலம்கிரி நூலை அமெரிக்காவில் அரங்கேறிக்கொண்டிருந்த அடிமை முறை ஒழிப்பிற்கு அர்ப்பணித்தார் என்பது அவரின் உலகளாவிய பார்வையை காட்டுகிறது. பண்ணையார்கள், செல்வந்தர்கள், மேல்சாதியினர் ஆகியோரின் பக்கம் நிற்காமல் கீழ்சாதியினர், விவசாயிகள், பழங்குடியினர் பக்கம் குரல் கொடுத்து புலே தனித்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார். அவரின் கருதுகோள் சாதி அமைப்பை இந்தியாவிற்கு அந்நியமானது என்று தாக்கி, ஒரு ‘ஜனநாயகமயமான தேசிய கலாசாரத்திற்கு’ ஆன அடிப்படையை தந்தது. அதன் மீது சமத்துவ கோபுரத்தை அவரின் வழித்தோன்றல்கள் கட்டி எழுப்பாமல் போனாலும் அடித்தளம் வலுவாகவே இருக்கிறது என்கிறார் ஆம்வேட்.
புலேவின் பொருளாதார, சமூக தடுமாற்றங்கள்:
புலே அறிவுச்சுடராக எழுந்த காலத்தில் பிராமணர் அல்லாதோரில் இருந்து மாற்றுச்சிந்தனையை முன்வைப்பவர்களே பெரிதாக எழுந்திருக்கவில்லை. அப்படி புலே போன்றவர்கள் எழுந்தாலும் நுண்மையான மாற்று கலாசார கருத்தாக்கத்தை ஆழமாக, நுண்மையாக வைக்க காலம் கைகூடியிருக்கவில்லை. கடைக்கோடி மக்களோடு உடனடி உரையாடல் மேற்கொண்டு அவர்களை முன்னோக்கி அழைத்து செல்வதே அவசரத்தேவை என்கிற ரீதியில் தன்னுடைய ‘சர்வஜனிக் சத்திய தர்மம்’ நூலில் புலே எழுதுகிறார். எனினும், அவரின் எழுத்துகள் விவசாயக்கூலிகளின் வறுமையை பேசியது. கவிதையும், பரப்புரையும் இணைந்து கொண்டு பிரச்சினைகளின் வேர்களை, அவற்றுக்கான தீர்வுகளை கவனப்படுத்தியது.
இந்தியாவின் மேல்சாதி அறிவுஜீவிகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இந்தியர்கள் சுரண்டப்படுவதாக சொன்ன போது, புலே மிகச்சரியாக இந்திய விவசாயி பிரமாண மேட்டுக்குடியினர், காலனிய ஆட்சியாளர்கள் என்று இருதரப்பாலும் சுரண்டப்படுவதை கவனப்படுத்தினார். தொழில்மயமாக்கல் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்கும் என்ற காலத்தில் விவசாயத்தின் பிரச்சினைகள், உழுபவர்கள் எதிர்கொள்ளும் பாடுகள் குறித்து புலே பேசினார்.
புலே ஆங்கிலேயரை எதிர்த்த மேல்சாதி அறிவுஜீவிகளை போலவே ஆங்கிலேய ஆட்சியை விமர்சனப்பார்வையோடு அணுகினார். இந்தியாவின் வளங்களை சுரண்டிக்கொண்டு போவதையும், தேசத்தை வறுமையில் உழலவிட்டு, உள்ளூர் கலைகள், தொழில்களை நசிய விட்டதையும் கவனத்தில் கொண்டார். ஆங்கிலேய அதிகார வர்க்கத்தை சாடிய அவர், அந்த அதிகாரத்தை கீழ்நிலையில் சுவைத்து, சுரண்டுபவர்களாக பிராமணர்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டார். மேல்சாதியினர் ஆங்கிலேயரை மட்டும் தாக்கிய போது, ஆங்கிலேயரின் ஆட்சியின் கனிகளை சுவைக்கும் மேல்சாதியினரையும் இணைத்து புலே சாடினார். ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பான்மையை மேல்சாதியினர் தங்களுடைய கல்விக்கு பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் வறுமையில், வேதனையில் உழல்வதை கவனப்படுத்தினார் புலே.
புலே மார்க்சியர்களை போல விவசாயிகள், தொழிலாளிகளுக்குள் நிலவிய வர்க்க பேதங்களை கருத்தில் கொள்ளவில்லை. தொழிற்சாலைகளில் பாடுபடும் தொழிலாளர்கள் குறித்தும் அவர் பேசவில்லை. அவரின் காலத்தில் பொருளாதார புரட்சி முதலிய சிந்தனைகள் வளர்ந்திருக்கவில்லை தொழில்மயமாக்கம் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்த்து விடாது, விவசாயத்தில் அக்கறை காட்ட வேண்டும். நீர்நிலைகள் விரிவாக்கம், அறிவியல் முறையில் கால்நடை வளர்ப்பு, மண் பாதுகாப்பு திட்டங்கள் என்று புலேவின் கனவுகள் விரிந்தன. நவீன தொழில்நுட்பங்கள் கிராமங்களை வந்தடைய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஆனால், அவர் விவசாயத்தில் பலன்கள் விளைந்தாலும் அதையும் ஒரு மேட்டுக்குடி கைப்பற்றிக்கொள்ளும் என்பதை கருத்தில் கொள்ள தவறினார்.
வைஸ்ராய் வருகைக்கு ஆயிரம் ரூபாயை வாரி இறைப்பதை எதிர்க்கிறவராக இருந்தாலும், புலே ஆங்கிலேயரிடம் அடித்தட்டு மக்களின் கல்வி, முன்னேற்றத்துக்காக உதவி கேட்டு நின்றார். தங்களுக்கான அடிமை பாபுக்களை உருவாக்கி வேலை வாங்கிக்கொண்டிருந்த ஆங்கிலேயரிடமே கல்வியின் கதவுகளை திறக்க உதவுங்கள் என்று புலே கேட்க நேர்ந்தது. அதற்கான மனமும், நிதி ஒதுக்கீடும் ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை. மேலே இருந்து மேற்கொள்ளப்படும் முன்னேற்ற செயல்பாடுகள் பலன் தராது என்று தெளிவாக பேசிய புலே, அனைவர்க்கும் கல்வியை வழங்க வேண்டும் என்று கோரினார்.
புலே வட்டன், குல்கர்னி முதலிய சாதி முறையை கட்டிக்காக்கும் முறைகளை ஒழிப்பது, அப்பதவிகளை அனைவர்க்கும் திறந்து விடுவது ஆகியவற்றுக்கு தீவிரமாக குரல் கொடுத்தார். பல தார மணம், குழந்தை திருமணம், விபசாரம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவும் முழங்கினார்.

புலே சமூக மாற்றத்துக்காக ஆங்கிலேயரை நம்பியிருந்தது அவரின் போதாமை. அவர் பிராமணர் அல்லாதோர் அதிகார பீடங்களை கைப்பற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் நிகழும் என்று நம்பினார். பிராமணர்களின் மக்கள் தொகைக்கு ஏற்பவே அவர்களுக்கு அதிகாரத்தில் இடம் தரப்பட வேண்டும் என்று அவர் எழுதினார். இது முடிவல்ல, துவக்கம் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. புலே பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை சமூக மாற்றத்துக்கான கருவியாக மாற்றிக் காட்டினார். அதே வேளையில் அவருக்கு பின் வந்தவர்கள் அதனை பொருளாதார, அரசியல் தளங்களில் மாற்று சக்தியாக மாற்ற தவறி விட்டார்கள். ஆங்கிலேய அரசு சமூக மாற்றத்துக்கு தயாராக இல்லை, மேல்சாதி தேசியவாதிகள் போராட்டங்கள் கைமீறிப் போகாமல் பார்த்து கொண்டார்கள் (வரி கொடாத போராட்டம், குத்தகை மறுப்பு போராட்டமாக மாற அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு). அதிகாரத்தின் கனிகளை பிராமணர் அல்லாதோர் சுவைத்தார்கள், ஆனால், கிராமங்களின் ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் சமப்படுத்தவில்லை.
குல்கர்னி முதலிய இடங்களை தாங்களும் பங்கிட்டு கொண்டார்கள், கிராம வழிபாட்டு உரிமைகளை பெற்றார்கள். ஆனால், பாட்டீல் மாநாடுகளுக்கு ஆதரவி தந்து கொண்டே, மகர்களை அடிமைப்படுத்தும் வட்டன் முறையை அம்பேத்கர் எதிர்த்த போது அவருக்கு ஆதரவு தர மறுத்தார்கள்.
ஆண்-பெண், பல்வேறு சாதியினர், கிராமம்-குடும்பம் என்று பல தளங்களில் மாற்றமும், சமத்துவமும் ஏற்பட வேண்டும் என்கிற புலேவின் கனவு புறந்தள்ளப்பட்டது. புரட்சிகர மனப்பான்மை கொண்ட சத்திய சோதக் சமாஜ இளைஞர்கள் தங்களுடைய மூத்தவர்கள் அதிகாரத்தை பிடித்து கொண்டிருப்பதை கண்டார்கள். அவர்கள் அந்நிய ஆட்சியில் இருந்து உடைத்து வெளியேறும் விடுதலை போராட்டத்தை விட்டு முன்னோடிகள் விலகியிருப்பதாக எண்ணிக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்தார்கள். புலேவின் சமூகப் புரட்சி கனவு அப்படியே இருக்கிறது.
புலே ஆரியர் அல்லாதோர் கருத்தாக்கத்தை கூர்மையாக, செறிவாக முன்வைத்தார். ஆரிய இனத்தவர்கள் வெள்ளையர்களோடு தொடர்புடையவர்கள் எனப்பட்ட காலத்தில் ஆரியர் அல்லாதோரை கறுப்பின மக்களை தொடர்புபடுத்தி கொண்டு சமத்துவக்குரலை அவர் எழுப்பினார். உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி குழுவினரை அதிகாரத்தை விட்டு அகற்றினாலே ஒடுக்கப்படும் மக்கள் முன்னேற முடியும் என்கிற சிந்தனையை முதலில் முன்மொழிந்தவர் என்கிற வகையில் இந்திய சமூக சிந்தனை மரபில் புலே மிக முக்கியமான இடத்தை பெறுகிறார்.
Jotirao Phule and The ideology of Social Revolution in India- Gail Omvedt
Critical Quest
பக்கங்கள் நாற்பது
விலை 30