#சுந்தரவனக்காடுகளின் நீர்முகங்கள் அழிகின்றன. சீனா, பெருவில் பாலைவனங்கள் பெருகிக்கொண்டே போகின்றன. ஆஸ்திரேலியா, டெக்ஸாஸ் முதலிய பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ மிகுகிறது. எல்லாவற்றையும் இணைக்கும் கண்ணி-பருவநிலை மாற்றம். #
#சுந்தரவனக்காடுகளில் புலிகளின் காலடித்தடங்கள் எங்கும் இருக்கும். ஆனால், புலி இருப்பது கண்ணுக்குத் தெரியாது. புலி நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது என்கிற உணர்வு அடிவயிற்றை அலற வைக்கும். புலி நாம் சுதாரிப்பதற்குள் பாயும். தப்பித்து ஓடலாம் என்று எண்ணுவதற்குள் சேறு நம்மைப் பிடித்து அழுத்தும். மரணம் நிச்சயம். பருவநிலை மாற்றம் சுந்தரவனக் காட்டின் புலிகளைப் போலத்தான். #
அமிதவ் கோஷ் புகழ்பெற்ற நாவலாசிரியர். அவருடைய நாவல் புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்ட சிறப்புடையது. அவரின் நாவல்களில் காணப்படும் உழைப்பு பிரமிக்க வைக்கும். தேர்ந்த வரலாற்று ஆசிரியரின் கூர்மையோடு களம் அமைக்கப்பட்டிருக்கும். பருவநிலை மாற்றம் குறித்துப் பல்வேறு கேள்விகளை, பார்வைகளைத் தரும் நூலாக ‘GREAT DERANGEMENT’ நூலை அமிதவ் எழுதியுள்ளார். நூலில் அவ்வப்பொழுது வரும் இலக்கியம் சார்ந்த உரையாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் நூலை சரளமாக வாசித்து விடலாம்.

உலகின் பழைய நகரங்கள் அநேகம் கடற்கரைக்கு வெகு அருகே கட்டப்படவில்லை. லண்டன், ஆம்ஸ்டெர்டாம், ஹாம்பர்க், ஸ்டாக்ஹோம் என நீளும் இந்த நகரங்கள் கடலில் இருந்து தள்ளியோ, அல்லது நகருக்கும் கடலுக்கும் இடையே கழிமுகங்கள், கழிமுகத்தெதிர் நிலம், விரிகுடாக்கள் பிரிக்கப்பட்டே கட்டப்பட்டன. கடலிடம் இருந்து தள்ளியிருக்க வேண்டும் என்கிற பாதுகாப்பு உணர்வு அது. கொச்சின், சூரத், டாக்கா முதலிய துறைமுகங்களும் அப்படியே எழுந்தன.
காலனிய ஆதிக்கம் மிகுந்து உலகம் முழுக்க ஏகாதிபத்தியம் பரவத்துவங்கிய பொழுது புதிய நகரங்கள் எழுந்தன. இந்த நகரங்கள் கடலுக்கு வெகு அருகில் கட்டப்பட்டன. அதிகாரத்தின் மையங்களாகக் கடலுக்கு அருகில் வீடு வைத்திருப்பது கருதப்பட்டது. வேகமாக விரைந்து சென்று பாதுகாப்பை உறுதி செய்வது, தேவையான பொருட்களைத் துரிதமாக அனுப்புவது, அதிகாரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இப்படிப்பட்ட புதிய நகரங்கள் எழுந்தன. மும்பை, சென்னை, நியூயார்க், சிங்கப்பூர், ஹாங்காங் என்று இந்தப் பட்டியல் பெரிது. இதற்கு என்ன என்கிறீர்களா? பேராபத்து சூழும் அபாயத்தில் இருக்கிறோம்.
பெரும்பாலும் புயல்கள் வங்காள விரிகுடாவில் தான் இதுவரை ஏற்பட்டு வந்தன. அரபிக்கடலில் இவை ஏற்படுவது அரிது. தற்போது எண்ணூறு கிலோமீட்டர் நீளமுள்ள ‘குறை முறைமை’ (FAULT SYSTEM) ஏற்பட்டுள்ளது. வளிமண்டல அறிவியல் துறை பேராசிரியராக உள்ள ஆடம் சோபல் தன்னுடைய ‘STORM SURGE’ புத்தகத்தில் உலகில் இதுவரை புயல்கள் உண்டாகாத பகுதிகளில் இனிமேல் புயல்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் என்று ஆதாரங்களை அடுக்குகிறார். ஒரு ஆய்வு அரபிக்கடலில் ஏற்படும் புயல்கள் 46% உயரும் அதே சமயம், வங்கக்கடலில் 31 % குறையும் என்கிறது. இதை உறுதிப்படுத்துவது போல முதல்முறையாக வரலாற்றில் 2015-ல் அரபிக்கடலில் உண்டான புயல்களின் எண்ணிக்கை வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்களை முந்தியிருக்கின்றது.

அரபிக்கடலோரம் பெரும் புயல் ஏற்பட்டால் என்னாகும்? 2005 இல் வலிமை குறைவான புயல் ஒன்று ஏற்பட்டது. மழை கொட்டி தீர்த்தது. 25 லட்சம் மும்பை வாசிகள் தண்ணீருக்குள் தத்தளித்தார்கள். இருபது லட்சம் பேர் எங்கும் நகர முடியாமல் மாட்டிக்கொண்டார்கள். ஒன்றரை லட்சம் மக்கள் இரண்டே ரயில் நிலையத்தில் அலைமோதினார்கள். பெரும் புயல்கள் பல ஏற்பட்டுச் சேதத்தை ஏற்படுத்த கூடிய மும்பையின் மக்கள் தொகை இரண்டு கோடி. கட்டிடங்கள் இங்கே கட்டுவது ஆபத்து என்று தெரிந்தும் பெருகிக்கொண்டே போகின்றன கட்டிடங்கள்.
சுலபமாக வெளியேற்றி விடலாம் என்பது கிழக்கு இந்தியாவில் சாத்தியமானதைப் போல மேற்கில் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. நியூ ஆர்லியன்ஸ், நியூயார்க் முதலிய நகரங்களைப் பெரும்புயல்கள் தாக்கிய பொழுது தாங்கள் கட்டிய கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியேற மறுத்தார்கள். மும்பையில் ஒரு பெரும்புயல் வந்து நகர் நீருக்குள் தத்தளித்தால் ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை, அறிவியல், பாதுகாப்பு மையங்கள் என்ன ஆகும்? த்ராம்பே அணு உலை கடலுக்கு அருகில் இருக்கிறது. ப்ரின்ஸ்டனில் பணிபுரியும் எம்.வி.ரமணா பெரும்புயல் ஏற்பட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்து போகும் என்றால், திரவ வடிவத்தில் இருக்கும் கதிரியக்க பொருள் கடலில் கலந்து பெரும் சேதத்தை விளைவிக்கும் என்கிறார்.
உலக வங்கியின் அறிக்கைப்படி பருவநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் இருக்கும் பெருநகரங்களில் இரண்டாவது இடத்தில கொல்கத்தா இருக்கிறது. சென்னை நகரம் புயல் ஏற்பட்ட பொழுது எப்படித் தத்தளித்தது என்பது நினைவில் இருக்கலாம். நம்முடைய கடந்த காலங்களில் இருந்து நாம் பாடங்கள் படிப்பதில்லை. ஹூக்ளிக்கு அருகில் மால்டா நதியின் கரையில் கேனிங் எனும் நகரத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். cyclone என்கிற பதத்தை உலகத்துக்குத் தந்த அறிஞர் பிட்டிங்க்டன் புயல் வரும் ஆபத்துள்ள பகுதி அது என்று எச்சரித்தார். அவரின் எச்சரிக்கையை மீறி நகரம் விறுவிறுவென எழுந்தது. நான்கே வருடத்தில் அவர் எதிர்பார்த்த அளவை விடக் குறைவான வீரியத்தோடு வந்த புயலுக்கே நகரம் நாசமானது. மொத்தமாக மூட்டை கட்டினார்கள் ஆங்கிலேயர். ஃபுக்குஷிமா கடலோரம் சுனாமியை அறிவிக்கும் கற்பலகைகள் முன்னோர்களால் நடப்பட்டு உள்ளன. சுனாமி வரும் பகுதி இங்கே எதுவும் கட்டவேண்டும் எனும் எச்சரிக்கை அது.
டிமோத்தி மிட்செல் எனும் கொலம்பியா பல்கலை பேராசிரியர் ஒரு மிக முக்கியமான அரசியலை கவனப்படுத்துகிறார். நிலக்கரி ஏராளமாக இருந்தும், அதனைவிட எண்ணெய் வளங்களைக் கொண்டு தங்களின் வளர்ச்சியைக் கட்டமைப்பதையே மேற்கு செய்தது. காரணங்கள்? நிலக்கரியை வெட்டி எடுப்பதில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு முக்கியப் பங்குண்டு. அதைக்கொண்டு செல்லவும், மேம்படுத்தவும் என்று பல்வேறு பணிகளில் தொழிலாளர்களுக்குத் தேவை உண்டு. எண்ணெய் எடுப்பதில் இத்தனை தொழிலாளர்கள் தேவையில்லை. குழாய்களில் எளிதாகக் கொண்டு போகவும் முடியும். இருபதுகளில் ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் எழுந்த தொழிலாளர் கிளர்ச்சியில் பெருமளவில் நிலக்கரித் தொழிலாளர்கள் பங்கு கொண்டதும் இந்த மாற்றத்தில் பங்கு வகித்தது.
பருவநிலை மாற்றம் சார்ந்த உரையாடல்கள் ஐரோப்பியாவை மையப்படுத்தியே உள்ளன. அதற்கு மாறாக, அவை ஆசியாவை மையப்படுத்தியே அமைய வேண்டும். நைஜ்ரியாவின் பரப்பளவில் கால் பங்கு கொண்ட இந்திய-வங்கதேச டெல்டாவில் இரண்டரை கோடி மக்கள் வசிக்கிறார்கள். இங்கே இதற்கு முன்னர் ஏற்பட்ட புயல்களில் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு மேல் இறந்த கதைகள் உண்டு. பாகிஸ்தானை நோக்கி ஓடும் சிந்து நதியை பெருமளவில் சுரண்டி கடல் நீர் அறுபத்தி கிலோ மீட்டர் உள்ளே புகுந்து 10 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாகிஸ்தானில் காணாமல் போனது. இந்தியாவின் பரப்பில் கால் பங்கே பயிரிடும் தகுதியோடு உள்ளது. 2 டிகிரி உலகின் வெப்பநிலை ஏறும் என்றால் உணவு உற்பத்தி பெருமளவில் குறைந்து விடும். உலகின் மக்கள் தொகையில் 47% பேர் தெற்காசியா, சீனா பகுதியில் வாழ்கிறார்கள். திபெத், இமயமலை ஆகிய இடங்களில் உள்ள பனிப்பாறைகளில் உள்ள நீரின் அளவில் மூன்றில் ஒரு பங்கு 2050-ல் தீர்ந்து விடும் என்று ஆய்வுகள் அதிர்ச்சி தருகின்றன. இதன் பொருள் ஜீவநதிகள் வற்றிப்போகும்.

பருவ நிலை மாற்றத்தில் மூன்று தரப்புக்கு முக்கியமான பங்குண்டு. பேரரசுகள், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம். நோமி க்ளெய்ன் முதலியோர் வாதிடுவதைப் போல முதலாளித்துவம் பருவநிலை மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும், அதுவும் பேரரசும் பருவநிலை மாற்றத்தை துரிதப்படுத்தின என்பது முற்றிலும் சரியில்லை. அவை சமயங்களில் முரண்பட்ட செயல்பாடுகளை மேற்கொண்டன. எப்படி?
நவீனத்துவம் என்பது என்னவோ மேற்கு கிழக்குக்கு அளித்த பரிசு போலப் பேசப்படுகிறது. வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்ரமணியம் சொல்வதைப்போல, ‘நவீனத்துவம் என்பது வைரஸ் போல மேற்கில் இருந்து கிழக்குக்குத் தொற்றிக்கொள்ளவில்லை. அது உலகம் முழுக்க, உய்த்து உணரும் வண்ணம் துண்டு துண்டாகப் பரவிக்கிடந்தது. ஐரோப்பாவுக்கு முன்னரே சீனாவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பதைக் கென்னத் போமேரன்ஸ் நிறுவுகிறார். அவை அணுகுவதற்கு உகந்த இடத்தில் இல்லை என்பதால் அதைத் தொடர்ந்து சீனர்கள் மேற்கொள்ளவில்லை. கால்குலஸ் ஐரோப்பியாவில் நிலை பெறுவது இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே கேரளாவின் கணிதப் பள்ளி அவற்றைக் கண்டறிந்து இருந்தன எனக் காத்திரமான ஆய்வுகள் சொல்கின்றன.
பர்மாவின் Yenanguang பகுதியில் எண்ணெய் உற்பத்தி அமெரிக்காவுக்கு முன்னரே பெருமளவில் நடந்ததையும், நாட்டிற்குப் பெரும் பொருளை அது ஈட்டித் தந்ததும் தெளிவாக இன்று தெரிகிறது. உலகின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பர்மாவிலேயே எழுந்தது. தாண்ட் ம்யுன்ட் எனும் வரலாற்று ஆசிரியர் பர்மாவை ஆங்கிலேயருக்கு முன் ஆண்ட அரசர்கள் தந்தி, நீராவி இயந்திரங்கள், உற்பத்தி தொழில்நுட்பங்கள் எனப் பல்வேறு முனைகளில் முன்னேற்றம் நோக்கி கொண்டு சென்றதை நிறுவுகிறார். தொடர்வண்டிகளைக் கூட ஏற்படுத்த முயன்றார்கள்.
இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் சிறப்பாக அசத்திக்கொண்டு இருந்தது. ஐரோப்பாவின் கப்பல்களுக்குக் கடும் சவாலை அவை தந்து கொண்டிருந்த சூழலில் ‘Registry act’ மூலம் 1815-ல் இந்தியாவின் கப்பல்களை ஏற்றுமதி செய்வதை மொத்தமாக நிறுத்தியது ஆங்கிலேய அரசு. சந்தை பொருளாதாரத்தைக் காப்பாற்ற ஆங்கிலேய அரசுக்கு ராணுவ, அரசியல் அதிகாரங்கள் பெருமளவில் உதவின. காலனிமயமாக்கப்பட்ட நாடுகளில் பொருளாதாரம் எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பீடுநடை போடாமல் பிரிட்டன் முதலிய காலனியாதிக்க நாடுகள் வளர்வது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் நிலக்கரி வளம் ஆங்கிலேயரின் வளர்ச்சிக்குப் பயன்பட்டது. இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இங்கு நிலவும் வறுமை, அநீதிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
ப்ரஸேனஜித் துவாரா காட்டுவதைப் போலச் சீனாவில் அதிவேக நுகர்வோடு கூடிய வளர்ச்சி தாவோ, கன்ஃபூசியஸ், புத்தர் ஆகியோரின் கருத்துக்களால் மட்டுப்பட்டது. இந்தியாவில் காந்தியின் கருத்துகள் நுகர்வுக்கு எதிரான கருத்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், கொரியா நாடுகள் மேற்கைப் போல மூலப்பொருள்களை அதிகமாக வீணாக்காமல் வளர்ச்சியடைந்தன என ஸுகிஹாரா நிறுவுகிறார். சீனாவின் ஒரு குழந்தை கொள்கையும் நுகர்வை குறைத்தது. ஆக, ஏகாதிபத்தியம் உலகத்தின் பருவநிலை மாற்ற வேகத்தைக் குறைத்தது எனலாம்.
ராய் ஸ்க்ரான்டன் வாதிடுவதைப் போல, “மக்கள் பெருமளவில் திரண்டு போராடினாலும் அரசுகள் கவலைப்படுவதில்லை. மக்களுக்கு உண்மையான அதிகார ஊற்றுகளில் கட்டுப்பாடு இல்லை. அவர்கள் அதிகாரத்தை உற்பத்தி செய்யவில்லை. அதை நுகரவே செய்கிறார்கள்.” மக்களுடைய வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலம் பருவநிலை மாற்றத்தை சரிசெய்ய முடியாது. அளவில்லாத நேர்மையோடு, தியாகத்தின் மூலம் நுகர்வை எதிர்கொண்டால் வெற்றி பெற முடியாது என்பதற்குக் காந்தியே சாட்சியாக நிற்கிறார்.
பருவநிலை மாற்றம் குறித்துப் பேசினால் அதை இடதுசாரி, சோசியலிஸ்ட்கள் ஆகியோரின் சதியாகப் பார்க்கும் போக்கு மேற்கில் உள்ளது. இன்னமும் பனிப்போரின் நீட்சியாக இதனைக் காண்பவர்கள் உண்டு. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பருவநிலை மாற்றமே பொய் என்று பிரச்சாரம் செய்வதற்குப் பெரும்பணம் தருகின்றன. ரூபர்ட் முர்டாக் முதலிய மீடியா முதலாளிகள் பருவநிலை மாற்றத்தின் நியாயத்தை, அவசரத்தை மழுங்கடிக்கிறார்கள்.
புதைபடிவ எரிபொருள்களைச் சீனா, இந்தியா ஆகியவை வேகமாகப் பயன்படுத்த ஆரம்பித்த கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியம் தரவேண்டியது இல்லை. வளர்ந்த நாடுகளின் மக்கள் வசதியாக வாழ்ந்து பழகியவர்கள். ஒருநாள் மின்சாரத் தடையே அவர்களை உலுக்கி விடும். வெப்பக்காற்றில் 43,000 பேர் ஐரோப்பாவில் ஒரு வருடத்தில் இறந்து போனார்கள். ரஸ்யாவில் 56,000 பேர். வசதியற்ற நிலைகளை ஆசிய மக்கள் இவர்களை விட வலிமையாக எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு இந்தச் சாவு எண்ணிக்கை ஒரு சான்று. மேலும், தனியாக வாழும் முதியவர்களின் மரணங்கள் வெப்பக்காற்றால் ஐரோப்பாவில் அதிகம். கூட்டாக வாழ்வது இன்னும் மிகுந்திருக்கும் வளரும் நாடுகளில் இது அரிது.
உலகத்தின் அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றில் யார் இருக்கிறார்கள் என்பதைப் புதைபடிவ எரிபொருள்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை வளர்ந்த நாடுகள் விடுக்காது. தங்களுடைய மக்களைச் சிரமப்படுத்தவும் அவை விரும்பாது. மூன்றாம் உலக நாடுகள் வறுமை, அநீதி, சமத்துவமின்மையில் வாடினாலும் பரவாயில்லை என்றே அவை இருக்கின்றன. இதை நேரடியாகச் சொல்லாமல், மாற்று எரிபொருள்களை நோக்கி நீங்கள் நகருங்கள் என்று தொழில்நுட்பத்தைத் தராமல் பாடம் எடுக்கிறார்கள்.
நிலக்கரி பயன்பாட்டில் இந்தியா அமெரிக்காவின் அளவில் .24 அளவே பயன்படுத்துகிறது. வளர்ந்து நாடுகளின் அளவில் .3 என்கிற அளவுக்கே பயன்படுத்துகிறது. எனினும், சமமான தட்டில் நாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல்கள் .கேட்கின்றன. அமெரிக்காவின் பென்டகன் தன்னுடைய அதிகபட்ச ஆய்வுகளைப் பருவநிலை மாற்றத்துக்கே செலவிடுகிறது. பசிபிக்கில் அதன் பாதுகாப்புக்கு பெரும் சவால் என்று பருவநிலை மாற்றத்தையே ராணுவம் கருதுகிறது. அமெரிக்காவின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் க்ளாப்பரின் வரிகளில், ‘பருவநிலை மாற்றம் உணவுச்சந்தைகளைச் சிதைக்கிறது. அரசை பலவீனப்படுத்தும். மக்கள் இடம்பெயர்வார்கள். வன்முறைகள், கலவரங்கள், போராட்டங்கள் ஏற்படும்.’

இவற்றை மேற்கின் அரசுகள் எப்படி எதிர்கொள்ளும்? கிறிஸ்டியன் பேரண்ட்டி ‘Politics of Armed lifeboat’ என்கிறார். எல்லைகளை ராணுவமயப்படுத்தி, இடப்பெயர்வை தடுத்து, தீவிரவாத தடுப்பு என்று அயல்நாட்டவரை வராமல் தடுப்பது, கண்காணிப்பை தீவிரப்படுத்துவது. பாரீஸ் ஒப்பந்தம் பருவநிலை மாற்றத்துக்கான தீர்வையோ, அதன் அநீதி, வறுமைக்கான மையம் அது என்பதையோ பேசவில்லை. இவற்றை நோக்கி உழைக்காமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போர் என்பது நாடகமாகவே இருக்கும் என்கிற அமிதவ் கோஷ் தீர்வாகப் பல்வேறு மத அமைப்புகள் தரும் அழுத்தம் முதலியவை அமையலாம் என்கிறார்.
பக்கங்கள்: 284
ஆசிரியர்: அமிதவ் கோஷ்
பென்குயின் வெளியீடு
விலை: 399