இப்படி சாம்ராட் என்று விளிக்கப்படுவதை மக்களாட்சி, சமத்துவத்தில் ஆழமான பிடிப்புடைய பி.எஸ்.கிருஷ்ணன் ஏற்க மறுத்திருப்பார். என்றாலும், அவரின் பங்களிப்புகள், பணிகள் மகத்தானவை. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் செயலாளராகவும் சமூக நீதியை முன்னெடுப்பதில் அவர் பெரும் பங்காற்றினார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த பி.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய பதினோராவது வயதினில் ஆங்கில செய்தித்தாளில் இந்தியாவில் ஏழில் ஒருவர் தீண்டப்படாதவராக சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிற அம்பேத்கரின் அறிக்கையை படிக்கிறார். தீண்டாமை என்றால் என்ன என்று தந்தையிடம் கேட்டார். அது அநீதியானது என்பதை உயர்சாதியில் பிறந்த அவரின் தந்தை தெளிவுபடுத்தினார். மேலும், தீண்டாமை எனும் பெருங்கொடுமை எப்படி சமூகத்தில் பின்பற்றப்படுகிறது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, திருவிதாங்கூரில் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்தை சேர்ந்த கே.சுகுமாரன் நடத்தி வந்த ‘கேரளா கௌமுதி’ நாளிதழில் தீண்டாமைக்கு எதிரான பல்வேறு எழுத்துகள் கிருஷ்ணனின் சிந்தனையை ஆட்கொண்டன. ‘என் மதம் சுயமரியாதைக்கு அவமதிப்பாக திகழ்கிறது என்றால் நான் எந்த மதத்திற்கு மாற வேண்டும்?’ என்கிற கே.சுகுமாரனின் மாநாட்டு கூக்குரல் கேரளாவின் ஆலயக்கதவுகளை அனைத்து சாதியினருக்கும் திறந்து விட்டது.
நாராயண குருவின் ‘ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்’ எனும் முழக்கம் கிருஷ்ணனின் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்தது. கேரளவில் தலித் தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினருக்கு கல்விக்கூடங்களை திறந்துவிட வேண்டும் என்று நிகழ்த்திய போராட்டங்கள், அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகளும் அவரின் வாழ்க்கை பயணத்தின் ஒளிவிளக்குகளாக திகழ்ந்தன.

காஞ்சிபுரத்தின் பச்சையப்பா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த காலத்தில் கிருஷ்ணன் குடிமைப்பணி தேர்வு எழுதினார். அவர் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வு பெற்றார். எந்த மாநிலத்தில் பணி வேண்டும் என்கிற விருப்பத்தை சொல்லுமாறு கேட்ட போது, ‘எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பி வையுங்கள். எம்மாநிலமும் என் மாநிலமே’ என்று அவர் உறுதிபடச் சொன்னார். (அன்றைய ஹைதராபாத்) ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர் என்று சமூகத்தில் உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக அயராது பாடுபட்டார். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த கிருஷ்ணன் மக்களின் மொழியில் உரையாடி அவர்களின் சிக்கல்களை அறிந்து கொண்டு உடனடியாக தீர்வு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதற்கு முந்தைய தேடல், ஆய்வு, வாசிப்பு, விதிகள், சட்டங்கள் குறித்த சளைக்காத உழைப்பு அவரிடம் இருந்தது. இதனைக்கொண்டு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என்று பல தளங்களில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார். அரசு நிலங்கள், ஊருக்கு பொதுவான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய போது ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை மீறி பகிர்ந்து கொடுத்தார். ஜமாபந்திகளை தலித்துகள் வாழும் பகுதிகளில் நடத்திய முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணன் சமத்துவத் தேரை சேரிக்கும் இழுத்து வந்தவர் என்றால் மிகையில்லை.
தன்னுடைய சாதியை யார் கேட்டாலும் சொல்ல மறுத்த கிருஷ்ணன், சாதி விதித்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்ததாக மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். அவரின் அரும்பணிகளை கண்ட அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் ‘நீங்கள் ஏன் உங்கள் சாதியை மறைக்கிறீர்கள். நீங்கள் உயர்சாதியில் பிறந்தவர். நீங்கள் அதனை மறைப்பதால் என்ன நன்மை விளையப்போகிறது?’ என்று கேட்டார். கிருஷ்ணன் தீர்க்கமாக, ‘ஐயா, நான் சாதியை மறைக்கவில்லை. சாதியை நிராகரிக்கிறேன்’ என்று பதிலுரைத்தார். நெகிழ்ந்து போன ஜெயில் சிங் ‘இறைவன் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்காக உழைக்கும் புத்தியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார்’ என வாழ்த்தினார்.
வர்ணமா? வர்க்கமா? எது இந்திய சமூகத்தில் முக்கியமாக எதிர்கொள்ள வேண்டிய சவால் என்கிற வினாவிற்கு இரண்டுமே தான் என்று அவர் கருதினார். ஏழ்மையும், சாதி ஒடுக்குமுறையும் இணைந்து பெரும்பாலும் பயணிப்பதை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் நில சீர்திருத்தம், நிலப்பகிர்வை தீவிரமாக வலியுறுத்தினார்.
கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஆளுநர்களை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு தலித்துகளுக்கு நிலப்பகிர்வை சாதிக்க முடியுமா என்று ஆய்வு செய்தது. பெரும்பாலான தலித்துகள் நிலமற்றவர்களாக, வறுமையில் சிக்குண்டவர்களாக இருப்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்த அக்குழு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போதுமான அளவு நிலமிருப்பதையும் சுட்டிக்காட்டியது. இதனை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் ‘கண்ணியமான வாழ்வு, பாதுகாப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நிலவுரிமை, கல்வி இரண்டும் அவசியமாகும். நீர்ப்பாசன வசதியுள்ள நிலமிருந்தால், பிள்ளைகளை படிக்க வைக்கும் பொருளாதார பலம் இருக்கும். போதுமான வருமானம் இல்லாமல் போனால், குடும்பத்தின் தேவைகளுக்காக பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டிய அவலம் ஏற்படும். பாசன வசதியுள்ள நிலத்தால் வருமானம் கிடைக்கும் என்றால் பிள்ளைகளை படிக்க அனுப்புவது இலகுவாக இருக்கும்.’ என்று பதிந்தார்.
பொருளாதார ஏற்றத்தை சாதிக்க பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்களில் நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர் இணைத்துக்கொள்வது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அளவில் நெடுங்காலமாக அமலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அப்பணியில் இணைச் செயலாளராக சீரிய பங்காற்றினார் பி.எஸ்.கிருஷ்ணன். பின்னர், வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்த போது மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும் பொறுப்பு செயலாளராக இவர் வசம் வந்து சேர்ந்தது. அப்பணியையும் செவ்வனே செய்தார். ஆந்திர பிரதேச அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்த போது பி.எஸ்.கிருஷ்ணனின் உதவியை நாடியது. சட்ட வரைவு, உருவாக்கம், அமலாக்கத்தை அவர் திறம்பட கையாண்டார். உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது, ‘எத்தனை நாளைக்கு தான் இட ஒதுக்கீடு தொடரும்?’ என நெறியாளர் கேட்க, மூப்பினால் நடுங்கிக் கொண்டிருந்த நிலையிலும் உறுதியாக ‘சாதியின் பெயரால் அநீதிகள் இந்திய சமூகத்தில் நிகழ்த்தப்படுவது நிற்கும் நாள்வரை இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.’ என்று பதிலுரைத்தார்.
பட்டியலின சாதியினர், பழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் (தடுப்புச்) சட்டம் உருவாவதற்கு பின்னால் அவரின் பெரும் உழைப்பிருந்தது. அச்சட்டம் கால் நூற்றாண்டு கழித்து திருத்தப்பட்டதிலும் அவரின் முத்திரை இருந்தது. மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்வதோடு, அக்கொடுமையினால் உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்கும் சட்ட உருவாக்கத்திலும் பங்களித்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வலுவிழக்க வைத்த போது, அதனை சீர்செய்யும் சீராய்வு மனுவை வடிவமைப்பதில் எண்பது வயதை கடந்த நிலையிலும் பங்குபெற்றார்.
வேறொரு பேட்டியில், ‘இட ஒதுக்கீட்டை சிலர் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்று உயர்சாதியினர் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்களே?’ என்று வினவப்பட்ட போது, ‘அது உயர்சாதியினரின் பொய் பரப்புரை அன்றி வேறொன்றுமில்லை. அவர்களின் மனநிலை சாதிக்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களையே குறைசொல்வதாக இருக்கிறது. அம்மக்களுக்கு நிலம், கல்வியை தருவதில் முனைப்பாக ஈடுபட்டுவிட்டு பின்னர் இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களை குறை சொல்லுங்கள்’ என்றார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயலாளராக இருந்த காலத்தில் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை அறிந்துணர்ந்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்த்தார். பட்டியலின சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையங்களை அரசியலமைப்பு அந்தஸ்து கொண்டதாக மாற்றுவதற்கும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காரணம் ஆவார்.

பி.எஸ்.கிருஷ்ணனுக்கு இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுக்கையில் இருந்தார். இட ஒதுக்கீட்டிற்கான வரையறைகளை சாமர்த்தியமாக பொருள் கொண்டு இட ஒதுக்கீட்டை பல மாணவர்களுக்கு மறுத்த அவலநிலை அவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில் சமூகநீதிக்கான சமருக்காக அவர் படுக்கையை விட்டு எழுந்தார். நடுங்கும் விரல்களோடு தானே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய மனுவை தட்டச்சு செய்து கொடுத்தார். அம்மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை காக்கப்பட்டு அவர்களின் குடிமைப்பணி இடங்களை பெறுவது உறுதி செய்யப்பட்டது.
பி.எஸ்.கிருஷ்ணன் எழுதி முடிக்காமல் போன இறுதிக் கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள், நீதி குறித்து கவலையோடு, ‘பட்டியலின சாதியினருக்கு கண்ணியமிக்க வாழ்வும், மரணமும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன’ என்று பதிவு செய்திருந்தார். எத்தனை நாளைக்கு இந்த அநீதி தொடரும் என்று ஆதங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் சட்டங்கள், செயல்பாடுகள், திட்டங்கள் என்று பலமுனைகளில் சாதி ஒழிப்பு, சமத்துவத்துக்கான போரினை முன்னெடுக்க தன்னுடைய இறுதிக் கட்டுரையில் அழைப்பு விடுத்தார். முடிக்கப்படாத அந்த மாபெரும் சாம்ராட்டின் கனவினை முன்னெடுத்து ஈடேற்றுவதே அவருக்கான புகழஞ்சலியாக இருக்கும்.

பி.எஸ்.கிருஷ்ணன் பங்களிப்பில் உருவான சட்டங்கள்:
புத்த மதத்தில் இணைந்த தலித்துகளைப் பட்டியல் சாதியினர் என்று அங்கீகரிப்பதற்கான சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989) & திருத்தச் சட்டம் (2015),
மனித கழிவகற்றுவோரைப் பணியமர்த்தல் மற்றும் உலர்கழிப்பறைகள் கட்டுதல் தடுப்புச் சட்டம் (1993). மேற்சொன்ன சட்டத்தின் மேம்பட்ட வடிவாமான மறுவாழ்வுக்கான சட்டம் (2013)
எழுதிய நூல்கள்: Empowering Dalits for Empowering India- A Road Map
Social Exclusion and Justice in India
நினைவலைகள் : ‘சமூக நீதிக்கான அறப்போர் – பி.எஸ்.கிருஷ்ணன் : நலிந்தோர் நலனுக்கான ஓர் வாழ்வின் அர்ப்பணம்’
(இன்று பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்)
நன்றி: விகடன் இயர்புக் 2020