சிரியாவும், புதுயுக நாத்திகர்களும்


சிரியாவும், புதுயுக நாத்திகர்களும்- ஆர்.வி.சுரேஷ்.
புது யுக நாத்திகர்ளுக்கும், பெரியார், மார்க்ஸ் போன்ற நாத்திகர்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. பெரியார், மார்க்ஸ் முதலானோர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிணங்களைப் பயன்படுத்தித் தங்களுடைய நாத்திக கருத்துக்களை, மதம் குறித்த விமர்சனங்களை அவர்கள் பரப்பவில்லை. ‘Pray for Syria’ என்று ஹாஸ்டேக் பரவுவவதை பல்வேறு மீம்களின் மூலம் புது யுக நாத்திகர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். எங்கும் நிறைந்திருப்பதாக ஆத்திகர்கள் சொல்லிகொள்ளும் கடவுளின் இயலாமையைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். இல்லாத ஒருவரிடம் மன்றாடுவதால் என்ன பயன் என்று நகைக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால், புது யுக நாத்திகர்கள் பிணங்களைக் கொண்டு தங்களுடைய கருத்துக்களைப் பரப்ப முயல்வது கண்ணியமற்ற செயலாகும். இச்செயல் மக்களை அழித்தொழித்த அநியாயத்தை விட அநீதியானது ஆகும். இது வீழ்ந்து போன உயிர்களுடைய மானுட மேன்மையை அபகரிக்கிறது. இந்தப் புது யுக நாத்திகர்களைப் பொறுத்தவரை தங்களுடைய கருத்துககளைப் பரப்பும் கருவிகளாக மட்டுமே உயிரிழந்த மக்கள் மாறுகிறார்கள். இதனால் தானோ என்னவோ, எல்லா நாத்திகர்களும் கருணை மிக்கவர்களாகவோ, மனிதநேயர்களாகவோ (அவர்கள் இப்படித்தான் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்) இருக்க வேண்டியதில்லை எனக் கருத வேண்டியிருக்கிறது. இந்த இரக்கமற்ற வெறியர்கள் தங்களுடைய தட்டையான நாத்திகத்தைத் தங்களுடைய பெற்றோர்கள், உடன்பிறந்தோர், உறவினர்கள் பிணங்களைக் கொண்டு பரப்புவார்களா என வியக்கிறேன். இந்தப் புது யுக நாத்திகவாதிகளும் கூடத் தேவை ஏற்படுகிற போது தங்களுடைய வாழ்க்கையிலும், வீடுகளிலும் மதச் சடங்குகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம்.
இந்த இடத்தில் தான் தங்களை அறிவுமிக்கவர்களாகக் கருதிக்கொள்ளும் போலியான இக்கூட்டத்திடம் இருந்து மார்க்ஸ், பெரியார் முதலானோர் முரண்படுகிறார்கள். மார்க்ஸ், ‘மத அவலமானது ஒரே வேளையில் உண்மையான அவலத்தின் வெளிப்பாடாகவும், அந்த உண்மையான அவலத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் திகழ்கிறது. மதம் ஒடுக்கப்பட்ட மனிதனின் ஏக்கப்பெருமூச்சாக, இதயமற்ற உலகத்தின் இதயமாக, ஆன்ம உயிர்ப்பற்ற சூழல்களின் ஆன்மாவாக உள்ளது. அது வெகுமக்களின் அபின்.’ என்றார். பெரியாரும் புது யுக நாத்திகவாதிகளிடம் இருந்து வேறுபடுகிறார். தனக்கு உண்மையான அன்போடு விபூதியை வழங்கிய உற்ற தோழரின் நேசத்தை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட மூடத்தனமான மத வழக்கங்களை அயராது எதிர்த்து களமாடிய பெரியார், விபூதியை தன்னுடைய நெற்றியில் பூசிக்கொள்ளத் துளியும் தயங்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களான மார்க்ஸ், பெரியாரின் கருத்துக்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிணங்களைக் கொண்டு நாத்திகத்தைப் பரப்பும் ஈவிரக்கமற்ற பரப்புரைகளை நான் கண்டதில்லை.
இப்படிப்பட்ட சூழல்களில், ஒரு அரசியல் கருத்தை கட்டி எழுப்பவதே கொடூரமான செயலாகத் தோன்றுகிறது. இவர்கள் உண்மையில் ஆதரவற்ற இறந்து போன அம்மக்களின் இறப்புக் குறித்துக் கவலைப்படுகிறார்களா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. எப்போது சாவார்கள், எப்போது பரப்புரையைத் தீவிரமாக மேற்கொள்ள முடியும் என்று இவர்கள் காத்து கொண்டிருந்ததைப் போல இருக்கிறது. இவர்களுக்கு நசுக்கப்பட்ட ஆன்மாக்களை விட, தங்களுடைய நாத்திக பரப்புரையே முக்கியமானதாக இருக்கிறது போல. ஒருவருக்கு உண்மையாகவே சிரியாவில் இறந்து போயிருக்கும் மக்கள் குறித்து அக்கறை இருக்கும் என்றால், தங்களுடைய ஒட்டுமொத்த கோபத்தையும், விமர்சனத்தையும் அதற்குக் காரணமான சக்திகளின் மீது தானே தொடுக்க வேண்டும்? ஏதேனும் அதிசயம் நடந்து அம்மக்கள் காப்பாற்றப்பட மாட்டார்களா என நெக்குருகி பிரார்த்திப்பவர்களைக் குத்தி கிழிக்க மாட்டார்கள். மனிதனின் இயலாமையின், காயங்களின் படைப்பு தானே இறைவன்? தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கட்டுப்படுத்த முடியாத ஆற்றாமையில் தானே கடவுளை மனிதன் உருவாக்கினான்? துளியும் அதிகாரமற்ற இறைநம்பிக்கை உள்ள இம்மக்களின் ஹாஷ்டேக்குகள் சிரியாவின் மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற உளமார்ந்த ஏக்கத்தின் வெளிப்பாடே அன்றி, தங்களுடைய இறைநம்பிக்கையைப் பரப்புவது அவர்களின் நோக்கமில்லை. இதைக்கூடப் பகுத்து உணர முடியாத அறிவால் என்ன பயன்? ஆத்திகர்களின் இந்த இறைஞ்சல்களுக்குப் பின்னால் இருப்பது அன்பும், அக்கறையும் மட்டுமே. அதனை அவர்கள் கொட்டித்தீர்ப்பதை நாம் தடுக்கக் கூடாது.
இந்தக் கொந்தளிப்பான தருணத்தில் இப்படி நடந்து கொள்வது சரியானது இல்லை. இந்த அணுகுமுறை துளியும் இரக்கமற்ற ஒன்றாகும். இவற்றை எல்லாம் இந்தப் புது யுக நாத்திகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று எண்ணிக்கொண்டு, தங்களுடைய வாய்ப்புகளால் ஆன வசந்த மாளிகையில் இருந்து கொண்டு அனைத்தையும் அணுகுவது சரியல்ல. ஒருவேளை இவைதான் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கின்றனவோ என்னவோ – Suresh RV
தமிழில்: பூ.கொ.சரவணன்

நீயா நானாவும், நீங்களும், சமூகமும்!


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருப்பது இயல்பான ஒன்று. குடிப்பது உடல்நலத்துக்குத் தீங்கானது என்பது ஒரு பார்வை. அது எங்களுடைய தனிப்பட்ட உரிமை என்கிறவர்களுக்கு ஒரு பார்வை இருக்கிறது. குடிக்காமல் இருப்பது, கற்பு ஆகியவை பெண்களுக்கு மட்டுமே உரிய ஒரு விஷயம் என்கிற பார்வையை ஆண்கள் முன்வைக்கிற பொழுது அதற்கு எதிரான கருத்தை யாரேனும் சொல்வதில் என்ன சிக்கல்? வயது வந்த அவர்களுக்கே தங்களுக்கு எது தேவை, எது சரி, தவறு எனத் தெரியும். அதைப்பற்றித் தனக்கு இருக்கும் கருத்தை ஒரு பெண் சொன்னால். அவருடைய குடும்பம், குணம், பெண்மைத்தன்மை, சொந்த வாழ்க்கை என்று உங்களுக்கு உரிமையில்லாத வெளிகளைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான கருத்துக்களைத் தூக்கி வீசுகிறீர்கள்?

நீங்கள் பெண்ணியம் என்று இதைச் சொல்லி தாக்குவது இருக்கட்டும். ஒரு மனிதனாகப் பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வேண்டும், அல்லது அவர்களைச் சமமாக மதிக்க வேண்டும் என்று எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா? ஒரு ஆண் இதைப்போலக் குடிப்பதை பற்றிக் கருத்து சொன்னாலோ, ‘நான் எனக்குப் பிடிச்சாப்ல ட்ரஸ் போடுவேன். தோணுனா குடிப்பேன்.’ என்றாலோ உடனே அவரை ‘அவன் ஆம்பிள்ளைடா! அப்படி இப்படித்தான் இருப்பாங்க’ எனக்கொண்டாடுவதும், பெண் ஒரு கருத்தை சொன்னால் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதும் ஆகிய இரண்டுமே தவறான அணுகுமுறையே.

யாரும் குடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதே சமயம், அதைக் கட்டுப்படுத்துவதைச் செய்யவும் எனக்கோ, அரசு அல்லாத அமைப்புகளுக்கோ உரிமையில்லை என்றே நினைக்கிறேன். பொதுவெளியில் தனக்கான மணமகன் எப்படியிருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்த பெண்கள் திறந்த மனதோடு ஒரு பேட்டியை தந்தார்கள். அழகாக, என் பேச்சு கேட்பவராக, பொறுமையானவராக இருக்க வேண்டும் என்று அந்த ஆசைகள் நீண்டன. அதைப் பேசிய மதிக்கத்தக்க அந்தப் பெண்கள் மீது இணைய வெளியில் நடந்த தாக்குதல்கள் அளவிட முடியாதவை. ஆணுக்கு தன்னுடைய வாழ்க்கைத் துணை எப்படியிருக்க வேண்டும் என்கிற பார்வை இருப்பதைப் போல ஏன் பெண்ணுக்கு இருக்கிற பொழுது வரிந்து கட்டிக்கொண்டு வந்து ‘கலாசாரத்தை’க் காக்கிறீர்கள்?

பெண்களின் மீது அக்கறை என்கிற பெயரில் அவர்களின் ஆடை முதல் கருத்துக்கள் வரை அனைத்தையும் தணிக்கை செய்யும் நீங்கள் உங்கள் குடும்ப வெளியில் எந்தளவுக்குப் பெண்களைப் பேச விடுவீர்கள், அவர்கள் கருத்துக்களுக்கு மரியாதை தருகிறீர்கள் என்று யோசித்துக்கொள்ளுங்கள். smile emoticon உங்கள் தாக்குதல்கள் இன்னமும் பேசவே யோசிக்கிற பல பெண்களை முடக்கிவிடும் என்று எண்ணினால் ஏமாந்து போவீர்கள். இந்தப் பதிவைச் சார்ந்து என்னுடைய சுய ஒழுக்கத்தைப் பற்றிக் கருத்துக்கள் உங்களுக்கு உருவாகும் என்றால் நான் நீங்கள் கருத்துக்களைக் கவனிப்பவர் இல்லையென்று அறுதியிட்டு சொல்வேன். நன்றி!

தயாநிதி கொண்டு வந்த 66A! ஆடித்தீர்த்த அரசியல்வாதிகள்… – 360° பார்வை


தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66A பிரிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சொல்லி அதை நீக்கியிருக்கிறது உச்சநீதி மன்றம். அப்படி என்னதான் இந்த சட்டத்தில் பிரச்சனை என்கிறீர்களா?

2008-ல் இந்த சட்டப்பிரிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த பொழுது அதை அப்படியே ஆதரித்த இன்னொரு நல்ல கட்சி எது தெரியுமா? பாஜக தான்..

இணையத்தில் நீங்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள பயன்படுத்தும் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக காயப்படுத்துவதாக இருந்தால் உங்களை சிறைக்கு அனுப்பலாம் என்பதே அச்சட்டம். இந்தச் சட்டத்தில் அச்சுறுத்துகிற, கடுப்பை உண்டாக்குகிற இணையப் பதிவுகளுக்கு எல்லாம் கம்பி எண்ண வைக்கலாம் என்றது தான் அரசியல்வாதிகள், காவல்துறை ஆகியோருக்கு கொண்டாட்டமாக போய்விட்டது.
ஒரு பத்து நிகழ்வுகளை எடுத்துக்காட்டினால் போதும்:

1. பால்தாக்கரே மரண ஊர்வலத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்டதைப் பற்றி ஷாஹீன் தாதா, ரேணு ஸ்ரீனிவாசன் என்று இரு பெண்கள் “பலபேர் ஒவ்வொரு நாளும் இறக்கிறார்கள். உலகம் நகர்கிறது. ஒரு அரசியல்வாதி இறந்து போனதும் ஊரே ஸ்தம்பித்து விட்டது. நாம் இன்றைக்கு விடுதலையாக இருப்பதற்கு காரணமாக பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தியிருக்கிறோமா?. மரியாதை தானாக வரவேண்டும். அது கட்டாயத்தில் வரக்கூடாது. இன்றைக்கு மக்கள் திரளாக கூடியதற்கு காரணம் மரியாதை அல்ல! பயமே!.” என முகநூலில் பதிவிட்டார்கள். இதற்கு கைது!

2. ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகபத்ரா மம்தா பானர்ஜி பற்றிய கேலிச்சித்திரங்களை பார்வர்ட் செய்ததற்கு கைது செய்யப்பட்டார். “நீங்கள் இதனால் காயப்பட்டீர்களா?” என்று அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்து கலக்கியது காவல்துறை

3. அசீம் திரிவேதி வெவ்வேறு கார்ட்டூன்களின் மூலம் இந்திய அரசை காட்டமாக விமர்சித்ததற்கு கைது செய்யப்பட்டார். தேசிய சின்னங்களை தவறாக கார்ட்டூனில் பயன்படுத்தி பிரிவினைவாதத்தை தூண்டினார் (?!) என்றும் அவர் கைதுக்கு உள்ளானார்.

4. வங்கதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் ட்வீட்டரில் மத உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் எழுதினார் என்று இஸ்லாமிய மதகுரு ஒருவரின் புகாரின் பெயரில் முதல் தகவல் அறிக்கை அவர் மீது இதே பிரிவின் கீழ் பதியப்பட்டது.

5. கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜேஷ் பிரதமர் மோடி பற்றி காயப்படுத்தும் வகையில் கமென்ட் செய்ததற்காக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவரின் புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்.

6. ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் ஊழல்வாதி என்று இந்தியா ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் அப்பொழுதைய ஆர்வலரும், தற்போது ஆம் ஆத்மியின் புதுவை பொதுச்செயலாளரும் ஆன  ரவி சீனிவாசன் ட்வீட் செய்ய கார்த்திக் சிதம்பரத்தின் மின்னஞ்சல் புகாரில்  அவரையும் இதே சட்டத்தில் ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.

7. ஆசம்கான் எனும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உத்திர பிரதேசத்தின் நகர்ப்புற வளர்ச்சியின் அமைச்சரைப் பற்றி காயப்படுத்தும் வகையில் பதிவு போட்டதற்காக ஒரு பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டு பதினான்கு நாள் நீதிமன்றக்காவலில் வைத்தார்கள். ஆசம்கான் வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவதில் விற்பன்னர். தன்னுடைய எருமை மாடுகளைத் தேட காவல்துறையை பயன்படுத்தும் பெரும்புள்ளி என்று ஏனோ சொல்லாமல் இருக்க முடியவில்லை.

8. உபியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மதநம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் காட்சிப்படம் போட்டது, கமென்ட் செய்தது ஆகியவற்றுக்காக கைதுசெய்யப்பட்டு நாற்பது நாள் சிறைத்தண்டனைக்கு உள்ளானார்கள்.
9. கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பினராயி விஜயனின் ஆடம்பர மேன்ஷன் என்றொரு படத்தை மின்னஞ்சலில் பார்வர்ட் செய்ததற்காக இரண்டு கேரள இளைஞர்கள் கார்த்திக், மனோஜ் கைது செய்யப்பட்டார்கள்

10. தங்களுடைய க்ரூப்பில் அரசியல்வாதிகள் பற்றி காயப்படுத்தும் வகையில் பதிவு போட்ட மாயன்க் ஷர்மா, கே.வி.ராவ் எனும் ஏர் இந்தியா பணியாளர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவர், உபி முதல்வர் ஆகியோர் பற்றி ஆட்சேபகரமான படத்தைப் போட்ட வாரனாசி சுற்றுலா அதிகாரி என்று பலரையும் சிறைக்கு அனுப்பினார்கள். குறுக்கெழுத்து போட்டியில் NaMo என்கிற மோடியின் பட்டப்பெயரை விடையாக வைத்ததற்காக எல்லாம் திரிசூரில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர் ஆகியோர் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்தார்கள்.
சண்டிகரில் மட்டும் இரண்டு ஆண்டுகளில் எழுபத்தி ஐந்து வழக்குகள் இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப்பில் சீக்கியத் தலைவரை கிண்டலடித்தற்கு கூட வழக்கு! மம்தாவின் மேற்கு வங்கத்தில் மட்டும் நூறு வழக்குகள். உத்திர பிரதேசத்தில் நாற்பத்தி ஆறு மாவட்டங்களில் இரண்டு வருடங்களில் நானூறு வழக்குகளை பதிந்திருக்கிறார்கள்.

உண்மையில் முதலில் இயற்றப்பட்ட ஐ.டி. சட்டத்தில் இந்த உட்பிரிவே இல்லை. இந்த சட்டம் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் தான். பின்னர் இது ஆ.ராசா தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஆய்வதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் ஒரு உறுப்பினர் தற்போது இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்திருப்பதை வரவேற்று இருக்கும் ரவிசங்கர் பிரசாத். ப.சிதம்பரமும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இருக்கிறார். அவரின் மகன் இந்த சட்டத்தின் கீழ்தான் புகார் கொடுத்தார் என்பதை மறந்து விடுங்கள்.

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 19(1) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக தருகிறது. அடுத்த உட்பிரிவான
19(2) கருத்துரிமையின் மீது தேவையான கட்டுப்பாடுகளை பொது ஒழுங்கு, நாகரீகம், அவதூறு கிளப்புதல் போன்ற தருணங்களில் விதிக்கலாம் என்கிறது.
அரசு இரண்டாவது உட்பிரிவை காட்டித்தான் இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்த முயன்றது. இணையத்தின் கருத்துரிமையை கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது என்றால் எப்படி அந்த கட்டுப்பாடு பொது ஒழுங்கை காப்பாற்றும் என்று நிரூபிக்க வேண்டும் என்றது. சட்டப் பிரிவு 69A வின் கீழ் ஆன்லைன் தளங்களை ப்ளாக் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இதையும் நீக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அதற்கு ஒப்ப உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் ஒரு தளத்தை அரசு முடக்கினால் அதற்கு எழுத்துப் பூர்வமாக நியாயமான காரணங்களை பதிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.


79 வது உட்பிரிவில் இந்த பதிவுகள் இடப்படும் ஆன்லைன் தளங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ட்வீட்டரில் எதோ வன்முறையைத் தூண்டும் வகையில் ஒன்றை ஒருவர் எழுதிவிட்டால் அதற்காக ட்வீட்டரின் அதிகாரிகளை கைது செய்ய முடியாது. ஆனால், அதிலும் ஒரு செக் இருக்கிறது. 79(3) ன் படி ஒரு சட்டத்துக்கு புறம்பான கருத்தோ, படமோ ஆன்லைனில் இருக்கும் என்கிற தகவல் தளத்துக்கு கிடைத்ததும் அது செயல்பட வேண்டும். அதுவும் ஒன்றரை நாட்களுக்குள் செயல்படாவிட்டால் சட்டம் தன்னுடைய கடமையை செய்யும். இந்த தகவல் என்கிற வார்த்தையை உச்ச நீதிமன்றம் விரித்து பொருள் கொண்டிருக்கிறது. அரசோ, நீதிமன்ற ஆணையோ சம்பந்தப்பட்ட தளத்துக்கு வழங்கப்படுவதையே தகவல் என்பதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதனால் போகிற போக்கில் தளத்தின் மீது நடவடிக்கை எடுப்பது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொழுது காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்கள் என்று சகலரும் இதனை ஏற்றுக்கொண்டு ஓட்டு போட்டார்கள். மூன்றே மூன்று எம்.பி.க்கள் மட்டுமே இதற்கு எதிராக குரல் கொடுத்தார்கள். இப்பொழுது என்னமோ தாங்கள் எல்லாம் கருத்து சுதந்திரத்தை காக்கவே வந்தவர்கள் போல இரு கட்சியினரும் அறிக்கைகள் விட்டுக்கொள்கிறார்கள்.
ஸ்ரேயா சிங்கால் என்கிற இருபத்தி நான்கு வயது சட்டக்கல்லூரி மாணவி தான் இந்த சட்டப்பிரிவுக்கு எதிரான முதல் வழக்கைப் பதிந்தார். அவரோடு எண்ணற்ற குடிமக்கள் நீதிமன்றத்தை நாடியதற்கு பொருள் ஏற்பட்டு இருக்கிறது.


மக்களின் கருத்துரிமையை காக்க வேண்டிய நாடாளுமன்றத்தின் அங்கமான எம்.பி.க்கள் விமர்சனங்களை பொறுக்க முடியாமல் பொது மக்களை அச்சுறுத்த இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே கசப்பான உண்மை. ஆனால், ‘என்னைக்கூட விட்டு வைக்காதீர்கள் சங்கர்!” என்று கருத்துரிமையை மதித்து ஒரு மாதிரியை உருவாக்கிய நேருவிய தாராளவாதத்தை நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.