



பாரத மாதாவை காக்க தவப்புதல்வர்கள் பலர் களம் புகுந்திருக்கிறார்கள். இந்தியா என்கிற பாரதம் என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. இந்தத் தேசம் அப்பாவா, அம்மாவா என்றெல்லாம் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. பரதர் ஆண்ட பாரதக் கண்டம் தான் பாரதம் என்றால் எப்படிப் பரதர் திடீரென்று அம்மா பாரதத் தாய் ஆனார்?
இந்திய தேசம் பல்வேறு மக்களால், பல்வேறு மொழி, இன, மத வேறுபாடுகள் கொண்டவர்களால் ஆனது. இவர்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்புச் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. அவர்கள் குறிப்பிட்ட கோஷம் எழுப்பித் தான் தன்னுடைய தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று விடுதலைப் போராட்ட காலத்தில் போராட்ட முன்னணியில் நின்ற காங்கிரஸ் கேட்கவில்லை.
இன்குலாப் ஜிந்தாபாத் என்பது பகத் சிங் தந்த கோஷம். வந்தே மாதரம் பங்கிம் சந்திர சாட்டர்ஜி தந்த இந்துத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்ட கோஷம். அதைக் காங்கிரஸ் இயக்கம் மென்மைப்படுத்தித் தேசத்தின் பாடலாக விடுதலைக்குப் பின்னர் மாற்றியது. ஜெய் ஹிந்த் போஸ் தன்னுடைய படையில் முழங்கிய முழக்கம். கேள்வி இதுதான்! எதைக் கொண்டு என்னுடைய தேசபக்தியை வெளிப்படுத்துவது? தாய் மண்ணே வணக்கம் என்கிற ரஹ்மானின் இசையைக் கொண்டு கூடச் செய்யலாம். அல்லது மேலே இருக்கும் முறைகளிலும் செய்யலாம்.
ஒரு தேசத்தின் குடிமகனாக அந்தத் தேசத்தைக் குறித்துப் பெருமைப்படவும், சிறுமைப்படவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அவர் விரும்பினால் தேசத்தை விரும்புவதாகவும், இந்தத் தேசத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் இருப்பதாகச் சொல்லவும் இடமுள்ளது. அது அவரின் பார்வை. இதைச் சொல்லாவிட்டால்,’நீ தேசபக்தன் இல்லை!’ என்று சொல்ல இவர்களுக்கு யார் தேசபக்திக்கான உரிமையைக் கைமாற்றம் செய்தது? விடுதலைப் போரில் இவர்களின் முன்னோடிகள் செய்த பங்களிப்பு என்ன? தேசக்கொடியை காலில் போட்டு எரித்த பொழுதெல்லாம் இந்தத் தேசபக்தி எங்கே போய் ஒளிந்து கொண்டது?
முக்கியமாக என் தேசத்தை அன்னையாகப் பார்த்துதான் நேசிக்க வேண்டும் என்றில்லை. என் தேசத்தை மக்களால் ஆன பெருந்திரளாக நான் பார்க்கலாம். ஜனநாயகத்தின் விளைநிலமாகப் பெருமிதப்படலாம். ஆதிக்கத்தின் அடைக்கலமாக, சமூக ஏற்றத்தாழ்வுகளின் உச்சமாக இந்தத் தேசம் அருவருப்பையும் தரலாம். இரண்டும் கலந்த உணர்வும் உண்டாகலாம். அதற்காக ‘நீ தேசபக்தனா?’ என்று சான்றிதழ் கேட்பது எப்படிச் சரி? ஒரு மத நம்பிக்கை கொண்டவர்கள் அதனோடு இணைந்து தேசத்தை நேசிக்க முடியாதா என்ன? கட்டாயப்படுத்தி வருவதல்ல தேசபக்தி!
தேசபக்தி என்கிற பெயரில் ஆதிக்க வெறியை இப்பொழுது வேட்டை நாயாக ஏவி விடலாம். அதன் வெறுப்புக் கங்குகள் கடுமையான பிளவுகளைக் கொண்ட சமூகத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கவலை ஆள்பவர்களுக்குக் கொஞ்சமேனும் இருக்க வேண்டும். ஜெய் ஹிந்த் என்று இளைஞர்களைச் சொல்லவைத்து வென்றுவிட்டதாக நிதி அமைச்சர் உற்சாகப்படுகிறார். அந்த மூன்று இளைஞர்களைக் கட்டாயப்படுத்தி விட்டோம். இந்தியாவின் தாராளவாதத்தின், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எண்ணற்ற இளைஞர்களுக்கு என்ன எடுத்துக்காட்டை முன்மொழிகிறோம். மூன்று இளைஞர்களைக் கூடக் கட்டாயப்படுத்தித் தான் இந்த அரசியல்வாதிகளால் ஆள முடிகிறது என்கிற பாடத்தையா? பாரத மாதா கீ ஜே என்று சொல்லாதவர்கள் இந்தியாவை விட்டுப் போகட்டும் என்கிறார் மகாராஷ்டிரா முதல்வர். தண்ணீர் பஞ்சத்தால் பல மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் மாநிலத்தில், பசியால், வறுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் மாநிலத்தில், பெண்களுக்குக் கோயில் நுழைவு மறுக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதை விடத் தேசத்துரோகம் வேறென்ன இருக்கும் எனத் தெரியவில்லை. கோஷம் தான் கேடு!
மும்பை கப்பற்படை புரட்சியின் பொழுது சில மும்பைவாலாக்களை ஜெய் ஹிந்த் சொல்லச் சொல்லி வீரர்கள் கட்டாயப்படுத்தியதை அறிந்த காந்தி ஹரிஜன் இதழில் 3.6. 1946-ல் ‘ஒரே ஒரு தனி நபரை ஜெய் ஹிந்த் என்று முழக்கமிட சொல்லி கட்டாயப்படுத்துவது கூடத் தீனக்குரல் எழுப்ப வாய்ப்பற்ற லட்சக்கணக்கான மக்களைக் கொண்ட இந்திய தேசத்தின் சுயராஜ்யத்தின் சவப்பெட்டியில் செலுத்தப்படும் இறுதி ஆணி அது.’ என்று கடுமையாகச் சாடினார். எழுபது வருடங்கள் கழித்தும் காந்தி சொன்னது சரியாகவே இருக்கிறது.
வந்தே மாதரம் எனும் எழுச்சி கீதத்தை இயற்றியவர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா ஆவார். (சாட்டர்ஜி என்றும் குறிப்பர்; ஆங்கிலேயருக்கு வாயில் சட்டோபாத்யாயா,பண்டோபாத்யாயா முதலியவை நுழையாததால் சாட்டர்ஜி,பானர்ஜி என அழைக்க ஆரம்பித்தார்கள்).
துணை ஆட்சியராக ஆங்கிலேய ஆட்சியில் வேலை பார்த்த பங்கிம் சந்திரர் அப்பொழுது வங்க இலக்கியத்தில் ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரால் ஏற்பட்ட புது எழுச்சியால் ஈர்க்கப்பட்டார். பெரும்பாலான வங்க நூல்கள் வடமொழியின் பாடல்கள், கதைகளின் மொழிபெயர்ப்பாக இருந்த காலத்தில் புத்தம் புதுப் படைப்புகளை வங்கமொழியில் அவர் எழுதினார்.
அதிகாரியாக இருந்த காலத்தில் பார்த்த விஷயங்களைத் தன்னுடைய ஆரம்பகட்ட நாவல்களில் காட்சிப்படுத்தினார். பங்களாதர்ஷன் என்கிற இதழில் பலருக்கும் எழுத வாய்ப்பளித்தார். வங்கத்தில் ஏற்பட்ட இந்து மதத்திற்கு எழுச்சி உண்டாக்கும் வேலைகளில் தானும் இணைய வேண்டும் என்று 1880 களில் இருந்து அது சார்ந்த நோக்கத்தில் நாவல்களை எழுதினார்.
வங்கத்தில் இஸ்லாம் வாளால் பெரும்பாலும் பரவவில்லை என்ற பொழுதும், இந்து-முஸ்லீம்கள் எதிரிகள் என்பது போல நாவல்களைக் கட்டமைத்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்பது சாத்தியமில்லை என்று நம்பிய அவர் இந்து கலாசாரம், மறுமலர்ச்சி என்று கருதிக்கொண்டு இந்து மன்னர்கள் இஸ்லாமிய மன்னர்களை வெல்வது போன்ற கதைகளை நாவல்களில் முன்னிறுத்தினார்.
வரலாற்று நோக்கில் இல்லாமல் கற்பனையான அம்சங்களை உண்மை போல ராஜ்சிங்கா, சீத்தாராம், மிருணாளினி நாவல்களில் எழுதினார்.
ஆங்கிலேய அரசில் அதிகாரியாக இருந்த பொழுது பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த சன்யாசி புரட்சியைக் கொண்டு ஆனந்த மடம் நாவலை கட்டமைத்தார். அடுத்தடுத்த பதிப்புகளில் மேலே இருந்த அதிகாரிகளுக்கு அஞ்சி ஆங்கிலேயருக்கு எதிரான குறிப்புகளை நீக்கிவிட்டு, இஸ்லாமியர்கள் மட்டுமே வில்லன்கள் போலவும், அவர்கள் மீது நடந்த தாக்குதல்கள், போராட்டம் ஆகியன நூலில் பிரதானமாக மாறின. இதில் தான் வந்தே மாதரம் பாடல் இடம்பிடித்தது.
இப்படி அந்த நூலின் ஐந்தாவது பதிப்பில் எழுதினார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ”உண்மையான மதம் முப்பத்தி முக்கோடி தேவர்களை வழிபடுவதில் உள்ளது. இந்து மதம் அறிவைக்கொண்டுள்ளது. ஆங்கிலேயர்கள் நல்ல ஆசிரியர்கள். ஆகவே, நாம் ஆங்கிலேய ஆட்சி நிலைப்பதற்கும், அது உடையாமல் இருப்பதற்கும் துணை புரியவேண்டும். அவர்கள் ஆட்சியில் தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். புத்திசாலிகளே! நம்முடைய மதத்தைப் பரப்ப உதவிகரமாக இருக்கும் அவர்களை எதிர்த்து போரிடுவதை நிறுத்திவிடுங்கள்.” என்று எழுதினார்.
காங்கிரஸ் கூட்டத்தில் 1896 இல் தாகூர் இப்பாடலை பாடினார்; காமா இந்திய தேசியக்கொடியை வடிவமைத்த பொழுது நடுவே வந்தே மாதரம் எனும் வரிகள் இடம் பெறுமாறு செய்தார்.
வங்கப்பிரிவினை ஏற்பட்ட பொழுது மக்கள் ஹூக்ளி நதியில் மூழ்கியபடி கூட்டம் கூட்டமாக உணர்ச்சி பெருக்கோடு வந்தே மாதரம் பாடலை ஒரு சேர பாடினார்கள். அப்பாடலை பாட ஆங்கிலேய அரசு தடைவிதித்தது. இப்பாடலின் முதல் இரண்டு பத்திகளில் சிக்கலில்லை; அதற்கடுத்த பத்தியில் இந்திய திருநாட்டைத் துர்கையோடு ஒப்பிட்டு பாடல் இயற்றப்பட்டதால் எல்லாரும் ஏற்கும் பாடலாக இது மாறுவதைத் தடை செய்தது. 1908இல் நடந்த முஸ்லீம் மாநாட்டில் இப்பாடலை பாட கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
1923-ம் ஆண்டுக் காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், விஷ்ணு திகம்பர் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட முயன்றார். அப்போது, காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவராக இருந்த மௌலானா முஹம்மது அலி, இந்தப் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது, அதனால் இந்தப் பாடலைப் பாட அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார். தாகூர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் உருவ வழிபாட்டைக் கொண்டிராத பிற மதத்தவர் இப்பாடலால் புண்படுவர் என எச்சரித்தார். காந்தியும் எல்லாருக்குமான தேசம் இந்தியா என உறுதியாகச் சொன்னார். தேசிய கீதமாக ஜன கண மன ஆனது. வந்தே மாதரம் தேசியப்பாடலாக முதல் இரு பத்திகளோடு ஏற்கப்பட்டது. பி பி சி நடத்திய கருத்துகணிப்பில் உலகின் தலைசிறந்த பாடல்களில் இரண்டாம் இடத்தை இப்பாடல் வென்றது. வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணே வணக்கம் எனப்பொருள்.
அப்பாடலின் முதல் இரு பத்திகளின் மொழிபெயர்ப்பு
அன்னையே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப்பச்சை வயல்களின் மாட்சிமை
தாங்கிய எங்கள் தாயே
உன்னை வணங்குகிறோம்
வெண்மதியின் ஒளிபொழிந்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
நிறைந்த எங்கள் தாயே
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
உன்னை வணங்குகிறோம்.