‘மருத்துவர்கள் யார்? தங்களுக்குத் தெரியவே தெரியாத மனிதர்களுக்கு ஓரளவுக்குத் தங்களுக்குத் தெரிந்த மருந்துகளைப் பரிந்துரைப்பவர்கள், ஓரளவுக்குத் தங்களுக்குத் தெரிந்த மனிதர்களின் வியாதிகளைக் குணப்படுத்துபவர்கள்.’ –வால்ட்டர்.
‘The Laws of Medicine’ எனும் சித்தார்த்த முகர்ஜியின் TED உரையில் அடிப்படையில் அமைந்த நூலை வாசித்து முடித்தேன். பொறியியல் பட்டதாரியான நான் எழுதும் இந்நூல் அறிமுகம் மருத்துவத் துறை சார்ந்தது என்பதால் சற்றுக் கடினமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், சுவாரசியமான பல கருத்துக்களைச் சித்தார்த்த முன்வைக்கிறார்.
மருத்துவம் குறித்துப் பல்வேறு தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. தகவல்களுக்குப் பஞ்சமில்லாத காலத்தில் ஒரு பெரிய சவால் மருத்துவர்களுக்கு இருக்கிறது. எக்கச்சக்க தகவல்கள் என்பதில் இல்லை சவால். போதுமான தகவல்கள் இல்லாத பொழுது என்ன செய்வது என்பதுதான் சவால். உறுதியாகத் தெரிந்த, கச்சிதமான, முடிவுகட்டப்பட்ட புத்தகங்கள் தரும் அறிவையும், உறுதியற்ற, கச்சிதமற்ற, புரிந்துகொள்ள முடியாத, மாறிக்கொண்டே இருக்கும் மருத்துவப் பட்டறிவையும் கச்சிதமாக எப்படிக் கலப்பது என்பது ஒவ்வொரு மருத்துவ மாணவனுக்குமான சவால்.
மருத்துவம் என்பது மிகவும் வளர்ந்த துறை என்று பரவலாகச் சொல்ல கேட்டிருக்கலாம். லூயிஸ் தாமஸ் எனும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் முப்பதுகளில் பட்டம் பெற்ற மருத்துவர் ஒரு மருத்துவம் குறித்த நூலை எழுதினார். அந்நூலில் மருத்துவத்தை ‘YOUNGEST SCIENCE’ என்று அவர் அழைத்தார்.
காரணம் மிக எளிமையானது. மருத்துவம் ஆனது இயற்பியல், வேதியியல் போலப் பன்னெடுங்காலமாக நன்றாக வளர்ந்த துறை இல்லை. இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர்வரை மருத்துவம் அடைந்த வளர்ச்சிகளை மூன்று P-க்களில் அடக்கி விடலாம். PLACEBO, PALLIATION, PLUMBING.
PLACEBO எனப்படுபவை மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு டானிக் தருவது, நோஞ்சானாக இருப்பவர்களுக்குச் சர்வ ரோக நிவாரணி என்று ஒரே மருந்தை தருவது. இதன் மூலம் மனதில் நோய் குணமாகி விடும் என்கிற நம்பிக்கையை உண்டு செய்து நோயாளியை குணப்படுத்த முயன்றது முதல் வகை.
Palliation எனும் இரண்டாவது வகையில் மார்பைன், கோகைன், கஞ்சா முதலிய வஸ்துக்களைக் கொடுத்து வலி, அரிப்பு ஆகியவற்றைப் போக்கடிப்பது.
Plumbing எனும் மூன்றாவது பகுப்பில் மலமிளக்கிகள், பேதி மருந்துகள், எனிமாக்கள், வாந்தி எடுக்க வைப்பவை ஆகியவையும் இதில் அடங்கும். மலச்சிக்கலை எதிர்கொள்ள, நஞ்சை எடுக்க இவை பயன்பட்டன.
இப்படிப்பட்ட மருத்துவத் தலையீடுகள் நோயாளிகளின் துயரத்தை, நோயை தீர்ப்பதில் பெரும்பாலும் தோல்வியே கண்டன, அதனால், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய வில்லியம் ஆஸ்லரும், அவரின் சகாக்கள், மாணவர்கள் ஆகியோர் நோய்களைக் கண்டறிவது, பகுப்பது, வரையறுப்பது, கவனிப்பது ஆகியவற்றில் ஈடுபட்டார்கள். ஆஸ்லர் பால்டிமோரில் நோயாளிகளை அனுமதித்து அவர்களுக்கு எந்தச் சிகிச்சையும் தராமல் அவர்களைக் கவனித்தார். சிகிச்சை என்று ஒன்று அவர்கள் வசம் இல்லை என்பதே அதற்கு முதன்மையான காரணம். இதயம், நுரையீரல் எப்படி இயங்குகிறது, உயரம், எடை, உறுப்புகளின் செயல்பாடு எனப் பலவற்றைக் கூர்மையாகக் கவனித்துக் குறிப்புகள் எடுத்தார்கள். ஹிப்போகிரேட்ஸ் உறுதிமொழியின் சூளுரையான, ‘முதலில் தீங்கு எதுவும் செய்யாதே’ என்பதை மாற்றி, ‘முதலில் எதுவும் செய்யாதே’ என்று இயங்கினார்கள்.
இந்தக் கவனிப்பு மருத்துவத் துறையை மாற்றிப்போட்டது. நீரிழிவு நோயின் காரணம் உடம்பால் ஒழுங்காகச் சர்க்கரையை உடலில் சேமிக்க முடியாததால் ஏற்படுகிறது எனப் புரிந்தது. இன்ப்ளுயன்சாவுக்குப் பிறகு ஸ்ட்ரேப்டோகாக்கல் பாக்டீரியா உண்டு செய்யும் நிமோனியா வருவது கண்டறியப்பட்டது. ப்ளூவில் இருந்து குணமாகும் நோயாளிகள் விட்டு விட்டு வரும் காய்ச்சல், ரத்தம் சுரக்கும் இருமல் கொண்டிருப்பார்கள் என்பதும், இலையுதிர் கால இலைகள் மீது மனிதன் நடப்பதைப் பொண்ட சத்தத்தை நுரையீரல் எழுப்பும் என்று உணர்ந்தார்கள்.
இந்தக் கவனிப்புகள் மிகவும் இளமையான மருத்துவத் துறையை மாற்றி அமைத்தன என லூயிஸ் தாமஸ் குறிப்பிட்டார். இதயம் ஏன் செயல்படவில்லை என்று புரிந்ததும் நாளங்களைச் சீர் செய்து காப்பது நடந்தது. ஸ்ட்ரேப்டோகாக்கல் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சிலர் அதிலிருந்து மீள்வது அவர்களின் உடம்பின் நோய் எதிர்ப்பால் என்கிற புரிதல் உண்டானதும் அவர்களின் உடம்பில் இருந்து பெறப்பட்ட திரவமான சீரம் நோயாளிகளின் உடம்பில் செலுத்தப்பட்டு உயிர்கள் காக்கப்பட்டன. இப்படிப்பட்ட அண்மைக்காலத்தில் நவீனமான மருத்துவத் துறைக்கு என்று தன்னுடைய அனுபவத்தில் இருந்து சில மருத்துவச் சட்டங்களைச் சித்தார்த்தா முன்வைக்கிறார்.
ஆழமான உள்ளுணர்வின் குரலுக்குச் செவிமடுங்கள். பரிசோதனைகள் சறுக்கிவிடக்கூடும்:
Baye’s Theorem என்று கணிதத்தில் ஒரு நிகழ்தகவு (probability) பல்வேறு காரணிகளால் மாறுபடும் என விளக்கம் உண்டு. புரியாதது போல இருக்கிறதா? ஒன்றுமில்லை. ஒரு நாணயத்தைத் திருவிழாவில் கடைக்காரன் சுண்டுகிறான். ஒன்று, இரண்டு என்று பன்னிரண்டு முறை சுண்டுகிற பொழுதும் தலையே விழுகிறது. நிகழ்தகவை அறிந்த எவரும், அடுத்த முறை நாணயத்தைச் சுண்டும் பொழுது பூ விழுமா எனக் கேட்டால், ‘பாதிக்கு பாதி வாய்ப்பு’ என்பார்கள். ஆனால், ஒரு குழந்தையைக் கேட்டால், ‘ஐயே! அவன் ஏமாத்துறான்’ என்று சரியாகச் சொல்லிவிடும். ஒரு நிகழ்வை தீர்மானிக்கும் வெவ்வேறு காரணிகள் குறித்த கவனம் தேவை என்பதே நாம் பெறவேண்டிய பாடம்.’
‘உலகம் முழுக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் நோய் இல்லாத ஒருவருக்கு நோய் இருக்கிறது என்றும், நோய்த்தொற்றுக் கொண்ட ஒருவருக்கு நோய் இல்லை என்றும் முடிவுகள் வரும் வாய்ப்புகள் பல உண்டு. ஆய்வு செய்வதற்கான காலமும், ஆற்றலும் குறிப்பிட்ட அளவே இருப்பதால் மீண்டும், மீண்டும் பரிசோதனைகள் செய்து மட்டுமே எல்லாவற்றையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி விட முடியாது.
ஒரு எடுத்துக்காட்டைக் காண்போம்: நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் புற்றுநோய் மருத்துவர் சோதித்தார். . சோதனைகள் முடிந்ததாகச் சொல்லிவிட்டு இயல்பாக அந்தப் பெண்மணியோடு கதைத்தார். அப்பொழுது மருந்து எழுதும் தாளில் “இன்னைக்குத் தேதி பத்து தானே” என்றபடி தவறாகத் தேதியை எழுதினார். அப்பெண்மணி சிரித்துக் கொண்டே அவரைத் திருத்தினார். கடைசியாகத் தோழிகளோடு எப்பொழுது வெளியே போனார் என்று கேட்டார். அவரின் கையெழுத்து மாறியிருக்கிறதா? அவர் ஒரே காலில் ரெண்டு சாக்ஸ் அணிந்திருக்கிறாரா? முதலிய தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டுவிட்டு அனுப்பி வைத்தார்.
அவர் அப்பெண்ணுக்கு மனப்பிறழ்வு, தூக்கமின்மை, படபடப்பு, பாலியல் செயல்திறன் குறைபாடு, நரம்பு இயக்க்த்தடை (neuropathy) முதலியவை இருக்கின்றனவா என்பதை இந்தக் கேள்விகள், கவனிப்புகள் மூலம் அவர் அறிந்து கொண்டார். இது தொடர்ந்து வெகுகாலம் நோயாளிகளைக் கவனிப்பதன் மூலமும், தன்னைக் கூர்மைப்படுத்திக் கொள்வதன் மூலமுமே சாத்தியம் ஆனது. ஓயாமல் பரிசோதனைகளை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காமல், மருத்துவர்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது முதல் சட்டம்.
சட்டம் 2:
இயல்பான நோயாளிகள் விதிகளைக் கற்பிக்கிறார்கள், வினோதமான நோயாளிகள் சட்டங்களைக் கற்பிக்கிறார்கள்:
மீண்டும் ஒரு கதை. பூமியை சூரியன், கோள்கள் முதலியவை சுற்றுவதாகத் தாலமி சொன்னதை வெகுகாலம் உலகம் அப்படியே நம்பியது. அவர் காலத்தில் கோபர்னிக்கஸ்எனும் அறிஞர் பூமி முதலிய கோள்கள் சூரியனை சுற்றுகின்றன என்று விளக்கினார். அவற்றின் சுற்றுப்பாதை வட்டவடிவில் இருந்ததாக அவர் சொன்னார். ஆனால், அவர் சொன்னது பொய்யோ என்று கருதும் வண்ணம் பெரும் சிக்கல்கள் எழுந்தன. அவரின் விதியைக் கொண்டு கிரகங்கள் எப்பொழுது எங்கிருக்கும் எனக் கணக்கிட்டால் அது சரியாகத் தவறானது. இவர் சொன்னது சுத்த கதை என்று இழுத்து மூடிவிட்டார்கள்.
டைகோ பூமியை சுற்றி சூரியன் சுற்றுவதாகவும், சூரியனை மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் ஒரு கலப்பு மாதிரியை முன்மொழிந்தார்.
அந்த மாதிரி உண்மையா எனத் தெரிய வேண்டும் இல்லையா? அதைக் கணக்கிட்டு உறுதிப்படுத்தும் வேலையைத் தன்னுடைய மாணவன் கெப்ளரிடம் தந்தார். அவரின் விதி எல்லாக் கோள்களின் இடத்தையும் சரியாகச் சொன்னது. அவ்வளவுதான் வெற்றி எனக் கொக்கரிப்பதற்குச் செவ்வாய் மட்டும் தடையாக நின்றது. இந்தக் கிரகம் மட்டும் முன்னாடி பயணித்துவிட்டு திடீரென்று ரிவர்ஸ் கியர் போட்டு பின்னோக்கி பயணித்தது. அது எதோ விதிவிலக்கு என்று கெப்ளர் விட்டிருக்கலாம். பல வருடங்கள் அந்தச் சிக்கலோடு மல்லு கட்டினார். மேலும், நாற்பதுக்கும் மேற்பட்ட மாதிரிகளை முயன்று பார்த்தார். இறுதியில் எல்லாக் கோள்களும் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன என்று அவர் கண்டறிந்தார். மேலும், செவ்வாய் பூமிக்கு அருகில் இருப்பதால் எப்படி இரண்டு வெவ்வேறு வேகமாகப் பயணிக்கும் தொடர்வண்டிகள் சந்திக்கிற பொழுது இன்னொரு தொடர்வண்டி பின்னோக்கி நகர்வதைப் போலத் தோன்றுமோ அப்படிச் செவ்வாய் பூமிக்கு அருகே வரும் பொழுது தோன்றுகிறது எனக் கண்டறிந்தார். விதிவிலக்கு என விலக்கப்பட்டிருக்க வேண்டியது தான் புதிய திறப்புகளைச் சாத்தியப்படுத்தியது.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், சில குழந்தைகள் எல்லாரை விட்டு விலகி, தனிமையில் இருப்பவர்களாக, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருப்பதையும், செய்ததையே திரும்பச் செய்யும் பண்போடு இருப்பதையும் மருத்துவர்கள் கண்டார்கள். இதை ஆட்டிசம் எனப் பெயரிட்டார்கள். ஏன் குழந்தைகளுக்கு இந்தக் கற்றல் குறைபாடு ஏற்படுகிறது எனத் தீவிரமாக ஆய்வுகளில் ஈடுபட்டார்கள்.
அம்மா சிடுமூஞ்சியாக இருந்தால் பிள்ளை இப்படி ஆகிறது என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதை உறுதிப்படுத்துவது போலவே ஆட்டிசம் கொண்டிருந்த பிள்ளைகளின் அம்மாக்கள் கடுகடுவென்று இருந்தார்கள் என ஆய்வுகள் காட்டின. இதனால் இந்த அம்மாக்களைப் பிள்ளைகளிடம் இருந்து தனிமைப்படுத்தி மாற்றவேண்டும், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து மீட்க வேண்டும் என்று வழிமுறைகளை ஜோராக அமல்படுத்தினார்கள்.
இப்படியே கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகள் ஓடின. ஓரிரு கேள்விகள் மட்டும் இந்த அம்மாவால் ஆட்டிசம் ஏற்படுகிறது எனும் விதியை மீறுவதாக இருந்தன. ஆட்டிசம் தலைமுறைகள், தலைமுறைகளாகத் தொடர்ந்தது. ஒரு பரம்பரையின் எல்லா அம்மாக்களுமா கருணை இல்லாதவர்களாக இருப்பார்கள்? அதே போல வயதான காலத்தில் பிள்ளை பெறும் தந்தைகளின் மகன்கள் ஆட்டிசத்தால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த விதிமீறல்கள் குறித்து ஆராயப் போனால் மனிதனின் ஜீன்கள் தான் இவற்றுக்குக் காரணம் என்பதும், ஆட்டிசத்தை உண்டாக்கும் ஜீன்கள் பல்வேறு தலைமுறைகளின் வழியாகக் கடத்தப்படுவது புலனானது. அந்தச் சிடுமூஞ்சி அம்மா கதை? அது காரணம் அல்ல. மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே எனும் அதிர்ச்சியின் விளைவு அது என்று புரிந்தது. அதற்குள் கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஓடிவிட்டன.
இதில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய சட்டம் இதுதான். இன்னமும் மருத்துவத் துறையில் பல்வேறு விஷயங்கள் தெளிவாகவில்லை. தொடர்ந்து ஆய்வுகளும், தேடலும் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கேன்சரை சில வேகமாக வளரும் ஜீன்கள் உண்டாக்குகின்றன எனத் தெரியும். அவற்றைத் தடைப்படுத்தும் கச்சிதமான மருந்துகளைப் பயன்படுத்தியும் ஏன் கேன்சர் வேகமாகப் பரவுகிறது? டைப் 2 நீரிழிவு நோய் இன்சுலின் தரும் சிக்னலை ஒழுங்காக உள்வாங்காத திசுக்களால் ஏற்படுகிறது என்றால், இன்சுலினை ஒழுங்காகத் தந்தும் ஏன் அந்த நோயின் கூறுகள் முழுமையாக நீங்க மறுக்கிறது? பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பெரும்பாலும் கேன்சர் ஏற்படுவதில்லை? இப்படிப் பல்வேறு கேள்விகள் கொட்டிக் கிடக்கின்றன.
புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுச் சோதனைகளில் வெற்றிகரமாகச் செயல்படும். எனினும், அவை களத்தில் சோதிக்கப்படும் பொழுது சிலரிடம் முற்றாக வேலை செய்யாது. சிலரிடம் அபாரமாக வேலை செய்யும். முற்றாக வேலை செய்யாத இடங்களைக் கொண்டு இப்படிப்பட்ட சூழலை, ‘மரணத்தின் பள்ளத்தாக்கு’ என வர்ணிப்பார்கள். சிலர் மட்டும் பிழைப்பது எதோ அரிதிலும் அரிதான ஒன்று, குருட்டு அதிர்ஷ்டம் என்றெல்லாம் மருத்துவர்கள் அழைத்தார்கள். எனினும், ஸோலிட் எனும் மருத்துவ ஆய்வாளர் இதை நம்ப மறுத்தார்.
சிறுநீர்ப்பையில் புற்றுநோய் தொற்றுக் கொண்ட நாற்பத்தி நான்கு நபர்களை எடுத்துக்கொண்டார்கள். EVEROLIMUS எனும் மருந்தை அவர்களுக்குக் கொடுத்து பார்த்தார்கள். பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்தப் பயனையும் அது தரவில்லை. எனினும், சில நோயாளிகள் மட்டும் அதிசயிக்கத்தக்க வகையில் குணமானார்கள். TSC1 என்கிற குறிப்பிட்ட ஜீன் மட்டும் இந்த நோயாளிகளில் மாற்றம் அடைந்திருந்தது. இப்படிப்பட்ட மாற்றமே அவர்களைச் சிகிச்சையில் முன்னேற்றத்தை காண உதவியது எனத் தெரிய வந்தது. இப்படி, விதிமீறல்களாக இருப்பவர்களைக் குறித்து இன்னமும் ஆழமாக ஆய்வது புதிய புரிதல்களை, மருத்துவத்தை மேம்படுத்துவதைச் சாதிக்கும். கார்ல் பாப்பர் சொல்வதைப் போல, ‘எந்தவொரு அறிவியல் தேற்றமும் அது தவறு என நிருபிக்கப்படுவதற்கான சாத்தியத்தைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கிறது.’ மருத்துவ உண்மைகளும் தான்!
3.) சட்டம் மூன்று: எந்த ஒரு கச்சிதமான ஆய்வுக்கும் இணையாகக் கச்சிதமான மனச்சாய்வு கொண்ட மனிதர்கள் இருப்பார்கள்:
மருத்துவர்களும் மனிதர்கள் தானே? அவர்களின் மனச்சாய்வுக்கு ஏற்ப முடிவுகள் மாறுபட்டு சமூகத்தையே புரட்டிப்போட கூடும். அப்படிப்பட்ட ஒரு கதை தான் HALSTED எனும் மருத்துவரின் மனச்சாய்வால் ஏற்பட்டது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் செல் பகுதிகளை மருத்துவர்கள் அகற்றுவது வழக்கமாக இருந்தது. முழுமையாக அந்தச் செல் பகுதிகளை அகற்றாமல் பாதிக்கப்பட்ட மார்பகப் பகுதிகளை மட்டும் வெட்டி எடுப்பது வழக்கமாக இருந்தது. இப்படி விடுவது அசுத்தமானது, முழுமையாக வெட்டி எடுக்காமல் விட்டதால் தான் பெண்களுக்கு மீண்டும் கேன்சர் வருகிறது என்றார் HALSTED. அவர் சொல்வது நியாயம் போலத் தோன்றினாலும், உண்மை வேறாக இருந்தது. கேன்சர் செல்களை அகற்றிய பின்பு, மீண்டும் கேன்சர் ஏற்பட்டதற்குக் காரணம் பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட செல்களை முழுமையாக அகற்றாமல் போனது அல்ல. கேன்சர் வேறு பகுதிகளுக்கு முன்னமே நகர்ந்திருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கவில்லை.
HALSTED இந்த அறுவை சிகிச்சையையே சுத்தமில்லாத ஒன்று என்று
மனச்சாய்வு கொண்டவராக இருந்ததால் மார்பகம், கை, தோள்பட்டை, நெஞ்சுப்பகுதி ஆகியவற்றின் தசைகளையும் துண்டித்துத் தள்ளினார். இந்தச் செயல்பாடு மீண்டும் கேன்சர் வராமல் தடுக்கும் என்று நம்பப்பட்டது. இதை அப்படியே மருத்துவ உலகம் கேள்விகள் கேட்காமல், ‘புரட்சிகரமான செயல்முறை’ என்றதால் வாரியணைத்துக் கொண்டது. நாற்பது வருடங்கள் கழித்துப் பார்க்கையில் இந்த அறுவை சிகிச்சையால் கேன்சர் மட்டுப்படவே இல்லை என்பதும், நிலைமை மோசமாக மட்டுமே மாறியது என்றும் புலப்பட்டது. அதற்குள் ஒன்றரை லட்சம் பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டு இருந்தனர்.
இப்படிச் சித்தார்த்தா முகர்ஜி தன்னுடைய உரையை முடிக்கிறார்: ‘
“உடம்பில் மணக்கும் ப்ளீச்சிங் மணம், சாராய மணத்தைத் துடையுங்கள். மருத்துவமனையின் இருக்கைகள். வார்ட் எண்கள், பளபளக்கும் கிரானைட் தளங்கள் ஆகியவற்றை மறந்துவிடுங்கள், உடல் அளவில் நீல உடை தரித்த அந்த நோயாளி அனுபவிக்கும் சொல்லொண்ணா துயரங்களை, அதைக் குணப்படுத்த முயலும் மருத்துவரின் முகத்தை ஒரு கணம் மறந்திடுங்கள். சுத்தமான அறிவையும், உண்மையான அறிவையும் பிணைக்கும் ஒரு துறையில் நீங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். மிக இளமையான அறிவியல் மிகவும் மனிதம் மிகுந்த அறிவியல் துறையும் ஆகும். நாம் செய்கிற மிக அழகான, தாங்குவதற்குக் கடினமான பணி இந்தப் பிணைப்பை தொடர்வதே ஆகும்.
THE LAWS of MEDICINES
SIDDHARTHA MUKHERJEE
TED எழுபது பக்கங்கள்
299 ரூபாய்