2005 இல் பாகிஸ்தான் தொடருக்கு பிந்தைய நிலையில் தாதா இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த சூழலில் அவரைப்பற்றி டெலிகிராப் இதழில் வெளிவந்த Ramachandra Guha வின் கட்டுரை.
வங்காளிகள் வெகுகாலமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களாக, மற்ற பகுதிகளில் இருந்து எதோ ஒரு வகையில் விலக்கப்பட்டவர்களாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களாக தங்களை உணர்ந்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய ஆட்டம், அணித்தலைமையால் பல காலங்களாக வங்கம் சந்தித்த அவமானங்களுக்கு பெருமளவில் பழி தீர்த்திருக்கிறார் கங்குலி . கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட தலைநகரம், மறைக்கப்பட்ட நேதாஜியின் வரலாறு,மத்திய அரசு தரும் நிதியில் காட்டப்படும் பாரபட்சம் முதலிய பல்வேறு அவமானங்கள், வருடக்கணக்காக ஏறிக்கொண்டே போகும் ஏளனங்கள் என அனைத்தையும் கங்குலியின் சதங்கள், வெற்றிகள் அடித்து நொறுக்கி ஆறுதல் தருகிறது. அந்த வலிமிகுந்த நினைவுகள் அவரின் ஆட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.
கங்குலியின் ரசிகர்களுக்கு அவர் இப்படியொரு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு இருப்பது அவரின் மோசமான ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து உருவானது என்பதே இனிமையானதாக இருக்கிறது. கங்குலியை ஆஸ்திரேலியா அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு 1991 இல் தேர்வு செய்த பொழுது அவர் அரும்பு மீசை இளைஞனாக இருந்தார். அங்கே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி பெரிதாக ஜொலிக்காமல் போய் அணியை விட்டு நீக்கப்பட்டார். இன்னொரு போட்டியில் பன்னிரெண்டாவது வீரராக போனால் போகிறது என சேர்த்திருந்தார்கள். அவர் ட்ரேக்கள் தூக்குவது, தண்ணீர் பாட்டில்களை திறந்து கொடுப்பது ஆகியவற்றை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட போது ‘நான் பெஹலா எனும் பகுதியின் மகாராஜா’ என கம்பீரமாக அவமானத்தை மறைத்தபடி அவற்றை செய்ய மறுத்ததாக சொல்வார்கள்.
அந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கு பிறகு கங்குலி ரஞ்சி போட்டிகளுக்கு திரும்பினார். இரண்டு வருடங்கள் கழித்து டெல்லி கோட்லா மைதானத்தில் அவர் அற்புதமான கவர் டிரைவ்களால் அசத்தியதையும், அரை சதம் கடந்த பின்னர் மட்டையால் பந்தை வேகமாக திருப்பி அடிக்க முயன்று போல்ட் ஆனதையும் காண நேர்ந்தது. அவருடைய ஆக்ரோஷம் அவரின் திறமைகளுக்கு நியாயம் செய்யாமல் போகும் என்று தோன்றியது. அதையே தேர்வுக்குழு உறுப்பினர்களும் வெகுகாலம் எண்ணினார்கள்.
1996 இல் ஆச்சரியகரமாக கங்குலி இங்கிலாந்து அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது தேர்வுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்ய விரும்பவில்லை என்றும் ஜக்மோகன் டால்மியா அழுத்தம் கொடுத்ததாலே அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றும் முணுமுணுக்கப்பட்டது. அப்படி கிசுக்கப்பட்ட வதந்தி உண்மையென்றால் அந்த சலுகை எதிர்பாராத வெகுமதியை பெற்று தந்தது. கவுண்டி அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக ஆடினார். டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பொழுது இரண்டு சதங்கள் அடித்து கலக்கினார். அந்த தொடரில் அவருடன் இணைந்து வெகுநேரம் பேட் செய்த ராகுல் திராவிட் “ஆஃப்சைடில் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார் அவரின் பெயர் கங்குலி !” என்று அறிவித்தார். (இன்னொரு கடவுளும் இருந்தார் அவரின் பெயர் ஜாகிர் அப்பாஸ். அவர் ஆடிய காலத்தில் அதை திராவிட் பார்த்திருக்க வாய்ப்பில்லை )
அவர் எடுத்த ரன்கள்,அதை சேர்த்த விதம் ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான ஒரு வீரராக கங்குலியை நிலைநிறுத்தியது. ஆனால்,வெகுவிரைவில் அவர் ஒருநாள் போட்டிகளிலும் கலக்கி எடுத்தார். அவரும் சச்சினும் இணைந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் கலக்கி எடுத்த அந்த காலங்களில் ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் போட்டிகளில் ஆஃப் சைட்டின் கடவுள் லெக்சைடிலும் மிரட்டி எடுத்தார். உலகின் மிகப்பெரிய ஆடுகளங்களில் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிறகு எந்த ஒரு வீரரும் இப்படி அசட்டையாக பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதில்லை.
கங்குலியின் எல்லா சதங்களிலும் மிக முக்கியமானது என்று நான் கருதுவது ப்ரிஸ்பேனில் அடித்த 2003-04 சுற்றுப்பயணத்தில் அடித்த 144 ரன்கள் தான். ஏற்கனவே அதற்கு முந்தைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை துவம்சம் செய்திருந்த ஆஸ்திரேலியாவிடம் இந்த முறையும் சின்னாபின்னம் ஆவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அந்த போட்டியில் திராவிட் மற்றும் சச்சின் சீக்கிரம் நடையை கட்டியது போல கங்குலியும் ஆடியிருந்தால் அப்படித்தான் ஆகியிருக்கும். ஆனால், இரும்பு போன்ற உறுதியுடன் அன்றைக்கு கங்குலி ஆடினார். அவரின் இயல்பான ஆட்டம் அன்று வெளிப்படா விட்டாலும் அவர் ஆடிய ஆட்டம் மொத்தத்தில் பெரிய தாக்கத்தை உண்டு செய்து இந்திய அணிக்கு முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை தந்தது. அணி தொடர் முழுக்க போராடுவதற்கான உத்வேகத்தை அது தந்தது.
கங்குலியின் கிரிக்கெட் சாதனைகள் பெரும்பாலும் அவரின் பேட்டிங் சார்ந்தே இருக்கின்றன. ஆனால்,என்னைப்பொறுத்தவரை அவரின் மிக முக்கியமான பண்புநலன் அவர் எப்படி பந்து வீசுகிறார், எந்த மாதிரி பந்தை செலுத்துகிறார் என்பதில் இருக்கிறது எனக்கருதுகிறேன். வங்காளிகள் ஷுதே பேனர்ஜி காலத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சை அந்த அளவுக்கு ஆண்மை கொண்டதாக இல்லை என்றே இழிவாக கருதி வந்திருக்கிறார்கள். அவர்கள் புது பந்தை கச்சிதமாக, வேகமாக வீசி திணறடிக்கும் அற்புதமான கமல் பேனர்ஜி,மோண்டு பேனர்ஜியில் துவங்கி டி.எஸ்.முகர்ஜி,சமீர் சக்ரவர்த்தி,பருண் பர்மன்,சுப்ரதோ படேல் என்று அற்புதமான வரிசையை பரிசளித்தார்கள். சவுரவ் இந்த பாரம்பரியத்தை நன்கு உணர்ந்தவர். அதை தூக்கிப்பிடிப்பதையே அவர் விரும்புகிறார். அவர் உருவத்தில் பெரிய ஆள் இல்லை. ஆனால் வேகமாக பந்து வீச முயல்கிறார். கிரீஸ் நோக்கி இருபது சின்ன அடிகளில் ஓடி வந்து,கையை சூறாவளியாக சுழற்றி, மிதவேகத்துக்கு சற்றே குறைவாக பந்தை அவர் வீசுகிறார். அவர் உலகின் குடிமகன் போல பேட் செய்யலாம், ஆனால், ஒரு வங்காளியை போல அவர் பந்து வீசுகிறார். அவர் ஒரு வங்காளியாக அவரின் எண்ணற்ற சதங்களுக்கு நடுவே கல்கத்தா டெஸ்டில் 1998, ஆம் ஜவகல் ஸ்ரீநாத் அவர்களுடன் இணைந்து பந்து வீசிய தருணத்தில் எடுத்த இரண்டு விக்கெட்களை சாதனையாக நினைப்பார்.
வங்காளிகள் அவர்களின் ஒட்டுமொத்த சுயமரியாதைக்கு அவர் சேர்த்த பெருமைகளை பற்றி ஆனந்தப்படுகையில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். வரலாற்றாசிரியன் மற்றும் கிரிக்கெட் காதலருக்கு கங்குலியின் இன்றைய நிலை ( 2005 ) ஜவகர்லால் நேருவின் 1957 நிலையை ஞாபகப்படுத்துகிறது. அப்போது இரண்டாவது முறையாக அவர் தேர்தலில் வென்றிருந்தார். மக்களின் பேரன்புக்கு உரியவராக இருந்தார். கட்சி மற்றும் ஆட்சியில் உச்சத்தில் இருந்தார். சர்வதேச சமூகம் அவரை பெரிதும் மதித்தது. அவரின் அரசியல் விமர்சகர்கள் அவரின் வீழ்ச்சியை கணித்தார்கள். அவரின் பொறுமையின்மை,விமர்சனத்தை திறந்த மனதோடு எதிர்கொள்ளாதது,தனக்கு பிடித்தவர்களை,தன்னோடு இணக்கமாக இயங்குபவர்களை மட்டும் தேர்வு செய்வது என்று நேரு செயல்பட்டது ஆகியவற்றை அவர்கள் குறை சொன்னார்கள்.
கிரிக்கெட் வீரர்கள் பிரதமர்கள் இல்லை. கங்குலி நேருவும் இல்லை. இருந்தாலும் ஒற்றுமைகள் ஆச்சரியப்படுத்துகின்றன. கங்குலியும் தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை ஏற்கனவே முன்முடிவு செய்துவிட்ட, தனக்கு எதிரானவர்களிடம் இருந்தே வருவதாக பார்த்தார். அவர் தன்னுடைய சட்டையை (லார்ட்ஸ் மைதானத்தில் ஒருமுறை உண்மையான விருப்பத்தோடே) இழந்தார் இது ஒரு சர்வதேச கேப்டன் அடிக்கடி செய்யக்கூடாதது. அவரும் அவருக்கான கிருஷ்ண மேனன்களை கொண்டிருக்கிறார் ; அவர்களை நீக்கவோ,ஒழுங்குபடுத்தவோ இவரும் விரும்பவில்லை.
நேரு அடுத்த வருடமே ஒய்வு பெற்றிருந்தால் அவர் கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த ராஜதந்திரியாக நினைவுகூரப்பட்டு இருப்பார். கங்குலி பாகிஸ்தான் அணியை அவர்கள் மண்ணிலேயே சாய்த்த தொடருக்கு பின்னர் தலைமைப்பொறுப்பை விடுத்து இருந்தால் இந்தியாவின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக அவர் கேள்வியே இல்லாமல் விடை பெற்றிருப்பார். ஆனால்,அப்போது அப்படி விலக தான் மிகவும் இளைஞனாக இருப்பதாக அவர் உணர்ந்திருப்பார். இந்த கட்டுரை எழுதப்பட்ட கணத்தில் அவரே இந்தியாவை வழிநடத்த தலைசிறந்த தேர்வாக இருக்கிறார் (2005) கூடுதல் சுமையை திராவிட் தலையில் சுமத்துவதும் எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. (கேப்டன் பொறுப்பு சச்சின் எனும் அற்புதமான பேட்ஸ்மானுக்கு என்ன செய்தது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம் ). கங்குலி தன் மீதான விமர்சனங்களை இன்னமும் திறந்த மனதோடு அணுகலாம்,அவர் முப்பதுகளின் தவறான பக்கத்தில் இருப்பதால் இந்த தருணத்தில் தலைமைப்பொறுப்பை விடுத்து நகர்வது நல்லது. அவரின் வயது, அனுபவம், நிலைமை ஆகியவை அதையே கோருகிறது. மிகச்சரியான கணத்தில் இம்முடிவை எடுப்பது அவரை ‘கிரிக்கெட்டின் ராஜதந்திரி’ என்று உணரவைக்கும்.
தமிழில்: பூ.கொ.சரவணன்