எது மகத்தான அஞ்சலி?


ஒரு மகத்தான எழுத்தாளன் இறக்கின்ற பொழுது அரசு துக்க தினம் அனுசரிக்காமல் போனதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. கர்நாடகத்தில் மூன்று நாட்கள் அனந்தமூர்த்திக்குத் துக்கம் அனுசரித்தார்கள் என்று பொங்குகிற நாம் இந்தச் சமூகத்தில் எழுத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டாடுகிறோம்? பைரப்பாவின் நாவல்கள் கர்நாடகாவில் வந்த முதல் நாளே விற்றுத் தீர்ந்து அடுத்தப் பதிப்புக்கு அடுத்த நாளே தயாராகிறார்கள்.

நம்மில் பாதி மக்கள்தொகை கொண்ட கேரளாவின் மலையாள மனோரமா செய்தித்தாளின் விற்பனை மட்டுமே முப்பது லட்சம் பிரதிகள்.. தமிழகத்தின் டாப் மூன்று செய்தித்தாள்களையும் கூட்டினால் தான் அவ்வளவு பிரதிகளைத் தொடமுடியும். பல வருடங்களாக நூலகங்களில் புத்தகக் கொள்முதல் என்பது நடப்பதே இல்லை. ஒரு பெரிய நூலகத்தைச் சத்தமேயில்லாமல் சாகடித்துக்கொண்டிருக்கிறோம். உறுப்பினர் அட்டையில்லாமல் உள்ளேயே வைத்து அழகு பார்க்க புத்தகங்கள் என்ன நகைக்கடை பொம்மையா?

எத்தனை கல்லூரிகளில் பாடப்புத்தகங்களைத் தாண்டிய நூல்களை விற்கும் கடைகள் உண்டு? அப்படியே இருந்தாலும் அதில் எத்தனை பேர் வாங்கப்போகிறோம்? எழுத்தாளனை கடவுள் போல எல்லாம் கொண்டாட வேண்டாம், சமூகத்தின் சிந்தனைப் போக்கை மாற்றத்தை உண்டு செய்வதற்காக அவனை நினைத்துப் பார்க்கிறோமா?

கல்லூரிகளுக்குப் போனால் செய்தித்தாளை எத்தனை பேர் தொடுகிறீர்கள் என்று கேட்டால் எண்ணி பத்து பேர் கையைத்தூக்கினால் அதிகம். கடைசிப் பக்கம் கிரிக்கெட் செய்தி, இல்லையென்றால் இணைப்பில் வரும் சினிமாச் செய்தி இதுதானா சமூகம்? ‘மக்கள் கேட்பதைத்தான் தருகிறோம்’ என்று ஒரு பக்கம் ஊடகமும், ‘எல்லார் படிப்பதைத் தான் நானும் படிக்கிறேன்.’ என்று இன்னொரு பக்கம் நாமும் மந்தை கோஷம் போடுவோம்.

சென்னையின், உங்கள் ஊரின் முக்கியமான நூலகங்கள் எதுவென்று தெரியுமா? முக்கியமான சாப்பாட்டுக்கடைகளும், துணிக்கடைகளும், மால்களும் எங்கு இருக்கின்றது என்று நமக்குத்தெரியாமல் போன நாள் உண்டா? ஒவ்வொரு டிவி நிகழ்ச்சியிலும் நடிகர்கள் என்ன சாப்பிட்டார்கள், எங்கே கடலை போட்டார்கள், எங்கெங்கு சுற்றினார்கள், யாருடன் நட்போடு இருக்கிறார்கள் என்று கேட்பவர்கள், ‘என்ன நல்ல புத்தகம் படித்தீர்கள்’ என்று கேட்கலாமே? ‘நம்ம தலை என்னமோ சொல்லுது! வாங்கிப்படிப்போம்’ என்றாவது வாங்கிப் படிப்பார்கள். பிரபலமான டாக் ஷோக்களில் புத்தக அறிமுகம் ஒன்றை செய்யலாம். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதும். காலையில் ராசிபலன், சமையல் வரிசையில் நிகழ்த்தப்படும் நீண்ட புத்தக அறிமுகத்தைக் கண்டாலே தெறித்து ஓடுவான் கடைக்கோடி மனிதன்.

கல்யாணம் என்றால் இளைஞர்களுக்கு என்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது எனக் கேட்டுப் பாருங்கள், ‘கடுப்பு, ஹனிமூன், மேட்டர், சமையல், அலுப்பு, கட்டுப்பாடு’ இப்படி எதெதையோ சொல்வார்கள். பலர் கிளர்ச்சியோடு அதற்குத் தயாராவார்கள். பெண் கருவுற்று இருக்கும் பொழுதும், பிள்ளை பிறந்த பின்னும் எப்படிப் பார்த்துக்கொள்வது, எப்படி நடந்து கொள்வது என்று சொல்லித்தருகிறோமா? பணத்தைக் கட்டி சேர்த்துவிடு, அதோடு உன் பாடு முடிந்தது..என்றல்லவா எண்ணம் வளர்ந்திருக்கிறது. குழந்தைகள் கார்ட்டூன் சேனல்களிலும், வீடியோ கேம்களிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்று குறைபடும் நீங்கள் அவர்களுக்குக் கதைப்புத்தகங்களை வாங்கித் தந்திருக்கிரீர்களா? ஒரு நூலகத்தில் கொண்டு போய் அழகான நூல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்களா? நீங்களே படித்துக் காண்பித்துக் கண்கள் விரிய அவர்களுக்குக் கதைகள் சொல்லிதர முயற்சித்து உள்ளீர்களா?

ஒரு எழுத்தாளனை ஒரு நாள் துக்க தினம் அனுசரித்தோ, அரசு மரியாதை செய்தோ சடங்காய் நினைவுகூர்வதற்குக் கேட்பது இருக்கட்டும். எத்தனை எழுத்தாளர்களைத் தேடியிருக்கிறோம். மின் வடிவில் பல புத்தகங்கள் வந்த பின்பு எவ்வளவு தேடித் படித்திருக்கிறோம்? கடவுள், தனிமனித வழிபாடு ஆகியவற்றை எதிர்த்த தலைவர்களையே கடவுளாக்கி. தனிமனித வழிபாடு செய்வதில் பழகிப்போன நாம் போகவேண்டிய தூரம் பெரிது. காரையும், பைக்கையும் விறுவிறுவென ஓட்டும் நீங்கள் அதைக் கொஞ்சம் திருப்பிப் புத்தகக்கடைகள் பக்கமும் எட்டிப்பாருங்கள். மகத்தான, பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை வாங்கிப் படியுங்கள். பரிசளியுங்கள், விமர்சியுங்கள், நண்பர்களோடு வாட்ஸ்ஆப்பில், சமூக வலைதளத்தில் பகிருங்கள். இதைவிட வேறென்ன பெரிய அஞ்சலி இருக்க முடியும்?