‘CEG’ எனும் பிராண்டை மீட்க பெயரை மாற்றினால் போதுமா?


கிண்டி பொறியியல் கல்லூரி என்பது தான் காந்தி மண்டபத்தில் அமைந்திருக்கும் தமிழகத்தின் முதன்மையான பொறியியல் கல்லூரியின் அதிகாரப்பூர்வ பெயர். அண்ணா யூனிவர்சிட்டி என்றால் தான் பலருக்கு தெரியும். அண்ணா பல்கலை என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் எழுந்த ஒன்று. நில அளவையியல் பள்ளியாக எங்கள் கல்லூரி எழுந்து இருநூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்தக் கல்லூரியை சுயாட்சி மிக்கக் கல்லூரியாக மாற்றவேண்டும் என்று இப்பொழுது குரல் எழுந்திருக்கிறது. அதாவது அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துத் தனியாகக் கிண்டி பொறியியல் கல்லூரி என்று அறியப்பட வேண்டும். அண்ணா பல்கலை என்று நாற்பதாயிரம் பிற மாணவர்களோடு பொதுவாக அறியப்படுவதால் தங்களின் திறமை புலப்படுவதில்லை  என்பதே இந்தக் கோரிக்கையின் சாராம்சம். காண்க: https://www.change.org/p/save-the-identity-of-college-of-engineering-guindy-ceg-a-national-heritage-pride-of-tn

கிண்டி பொறியியல் கல்லூரியின் வரலாறு அற்புதமானது. கொஞ்சம் இதனைப் பாருங்கள்: http://www.vikatan.com/news/article.php?module=news&aid=28445 இப்பொழுது மேலே செல்வோம்.


எல்லாருக்கும் அண்ணா பல்கலை என்றே தெரிகிறது., கிண்டி பொறியியல் கல்லூரி என்றால் தெரியவில்லை என்பது இவர்களின் ஆதங்கம். ஒரு கல்லூரியின் தரம் என்பது பிராண்ட் என்பதால் நிர்ணயிக்கப்படுகிறது. சரிதான். கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் திறன், அவர்களின் படைப்பாக்கம் ஆகியவையும் கல்லூரியின் பெயரைத் தீர்மானிக்கிறது.  தனியாக அண்ணா பல்கலையின் முதல் நான்கு கல்லூரிகள் ஒரே பல்கலையாக இயங்கிய காலம் உண்டு. அப்பொழுது சம்பளம் கூடக் கொடுக்க முடியாமல், கவுன்சிலிங் பணத்தில் கல்லூரியை ஓட்டிய கதைகள் உண்டு.

சுயாட்சி என்பதன் பொருள் இங்கே கல்லூரி தனியாகப் பெயர் பெற வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். அண்ணா பல்கலையின் தலைமை பீடமாகப் பல்வேறு சலுகைகளை, பயன்களைக் கல்லூரி பெற்றிருக்கிறது. பல்வேறு முக்கியமான விஷயங்கள், முடிவுகள் கல்லூரியின் வசதிக்கு ஏற்ப எடுக்கப்படுகின்றன. இது தனிக் கல்லூரியாகப் போனால் கண்டிப்பாகப் பறிபோகும்,
கல்லூரியின் தரமும், பெயரும் காணாமல் போனதற்கு அண்ணா பல்கலை என்கிற பெயர் மாற்றம் காரணமில்லை. கல்லூரியில் நேர்மையின்றி நடைபெறும் ஆசிரியர் தேர்வு, மிகக் கொடுமையான முறைகளில் நடைபெறும் தேர்வு மோசடிகள், சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் சேர்க்கைகள் ஆகியவை கல்லூரியில் அளவுக்கு அதிகமான மாணவர்களை, தரம் குறைந்த கல்வியை வழங்குகிறது. கட்டமைப்பு என்பதில் விடுதிகளில் அளவுக்கு மிஞ்சி மாணவர்களை தங்கவைப்பதும் நடக்கிறது. அதே சமயம் இன்னொரு புறம், வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களுக்கு சிறப்பான விடுதி வசதியை தரவும் முடிகிறது. எப்படி இந்த முரண்பாடு?  இது சார்ந்து பேசாமல், பாரம்பரியம், பெயர் மாற்றம் என்று பேசுவது எந்தளவுக்கு ஆழமான சிந்தனை எனத் தெரியவில்லை.

கிண்டி பொறியியல் கல்லூரியின் முகப்பும், அது இருக்கும் இடமும் தான் அண்ணா பல்கலை என்பது பலருக்கும் அடையாளம். ஜனநாயகமயமாக மாறாமல், உள்சீர்திருத்தங்களைப் பேசாமல் தனியான பெயர் வேண்டும் என்று ஆசைப்படுவது சரிதான். ஆனால், கல்லூரிக்கு அதனால் என்னென்ன பயன்கள் உண்டாகும்? நிதிக்கு என்ன செய்வோம்? தேர்வுத் தாள்கள் வெளியே திருத்தலுக்குப் போகும். இன்னும் எண்ணற்ற சிக்கல்கள். பொறியியல் கலந்தாய்வு இங்கே நிச்சயம் நடக்காது. எல்லாம் ஒரு பற்றும், பெருமையும் தான் என்கிறீர்களா? கல்லூரி யோசிக்கவும் கற்றுத் தந்திருக்கிறது. யோசிப்போமா?

பொறியியல் கவுன்சிலிங்-முழு வழிகாட்டி !


பொறியியல் கவுன்சிலிங் வழிகாட்டி படித்துவிட்டு பகிருங்கள் :

பொறியியல் கவுன்சிலிங் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் . மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக்கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே,முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள்.

 

இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடம்  காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். :

* மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்.

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்துவிடுங்கள்.

* அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்புக் கடிதத்தை காட்டி, ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். நீங்கள் எஸ்.சி. அல்லது எஸ்.டி. மாணவராக இருந்தால், ரூ.1000 கட்டினால் போதுமானது. இதைக்கட்டியதும் ஒரு ரசீதை எண்ணோடு தருவார்கள்.

* நீங்கள் அங்கிருக்கும் டிஸ்ப்ளே அரங்கில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து பெரிய திரைகளில் வந்து கொண்டிருக்கும். அதைப் பார்த்து, அதற்கேற்ப கல்லூரிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.

* முன்னதாகவே, குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளை, அதுவும் அவற்றுக்கான எண்ணோடு (விண்ணப்பம் பெற்றபொழுது கொடுக்கப்பட்ட புத்தகத்தில் அந்த எண் இருக்கும்) குறித்துக்கொண்டு வாருங்கள்.

* உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு முன்னமே நீங்கள் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். மாணவர் உடன் ஒரே ஒரு நபர் (பெற்றோர் அல்லது காப்பாளர்) மட்டுமே கூட செல்ல இயலும்.

* உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் காத்திருப்பீர்கள். உங்களிடம் ஒரு சிறிய படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் பெயர், விண்ணப்ப எண் முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து வைத்திருங்கள். மூன்று கல்லூரிகளும் கேட்கப்பட்டு இருக்கும். அதை கவுன்சிலிங் அறைக்குள் போனபிறகு பூர்த்தி செய்து கொள்ளலாம்.

* உங்களை உள்ளே அழைத்ததும் கவுன்சிலிங் அறைக்குள் செல்லலாம். முதலில் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். ஒரிஜினல்களை காட்ட வேண்டும்; சரிப்பார்த்து முடிந்ததும் ஒரிஜினல்களை கட்டாயம் வாங்கிக்கொள்ளுங்கள்.

* அதற்குப் பிறகு கணினி முன் போய் உட்காருவீர்கள். துறை அல்லது கல்லூரி சொன்னால் அதில் காலியாக உள்ள இடங்களை சொல்வார்கள். இப்படி மூன்று

சாய்ஸ்களை நீங்கள் தரவேண்டும். (கல்லூரி பெயரில் கவனமாக இருங்கள். ஒரே பெயரில் எண்ணற்ற கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரி குறியீட்டு எண் இங்குதான் பயன்படும்).

* நீங்கள் கேட்ட துறை இருக்கிறது என்றால் பச்சை விளக்கு எரியும். நீங்கள் அத்துறையை எடுத்து கொள்ளலாம். சிவப்பு எரிந்தால் அத்துறை இடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன என்று அர்த்தம். ஒருவேளை மஞ்சள் எரிந்தால் உங்களுக்கு முன்னர் இருக்கும் மாணவர் எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப உங்களுக்கு அவ்விடம் கிடைக்கலாம். அதுவரை காத்திருங்கள் என்று அர்த்தம்.

* கல்லூரியை தெரிவு செய்ததும், உங்களிடம் அந்தக் கல்லூரிதானா என்று வழிகாட்டும் நபர் உறுதி செய்துவிட்டு உங்களை மேலே அனுப்புவார். அங்கே உங்களுக்கு அந்தக் கல்லூரி கிடைத்ததற்கான உத்தரவை தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். கூடவே நீங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்ட வேண்டிய மீத தொகைக்கான வங்கி சலானை தருவார்கள். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு ஏற்ப மீதிப் பணத்தை கட்ட வேண்டும். இவ்வளவுதான் கவுன்சிலிங்.

பின்குறிப்புகள்:

* ஒரு வேளை அழைப்புக் கடிதம் வராமல் போயிருந்தாலும் சிக்கலில்லை. உங்கள் கவுன்சிலிங் நாள் என்று என்று அறிந்துகொண்டு ஒரு மணி நேரம் முன்னரே வந்துவிடுங்கள். என்கொயரி பிரிவுக்கு போய் உங்கள் விண்ணப்ப எண்ணை சொன்னால் உங்களுக்கான அழைப்பு கடிதத்தை தந்து விடுவார்கள்.

* குறிப்பிட்ட தினத்தன்று கவுன்சிலிங் வரமுடியாமல் போனால், அடுத்த செஷனில் கலந்துகொள்ள முடியும். எனினும் அப்பொழுது உள்ள இடங்களில் இருந்தே தெரிவு செய்ய முடியும்.

* முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்கும் இந்த கவுன்சிலிங்கில் சீட் வாங்கித் தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் நம்பவே நம்பாதீர்கள். உங்களின் மதிப்பெண்ணுக்கு உரிய சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

* முறையான அங்கீகாரம்!

* காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.

* பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.

* கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.

* படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.

* பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.

* நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!

தகவல் அறியும் உரிமைச்சட்டம்-எளியவர்களின் ஆயுதம்


தகவலறியும் உரிமைச்சட்டம் எனும் பரக்கத் அலி அவர்களின் புத்தகத்தை வாசித்து முடித்தேன். ஒரு ஜனநாயக அரசாங்கம் என்பது ஒளிவு மறைவு இல்லாமல் இயங்க வேண்டும். அதன் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டும் அப்படி இருந்தாலே எண்ணற்ற தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும். உலகின் முதல் தகவலறியும் சட்டம் ஸ்வீடனில் தான் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அங்கே ஹேட்ஸ் எனும் கட்சி ஆட்சியில் இருந்த பொழுது ஆட்சி நிர்வாகத்தை இரும்புத்திரை போல வைத்துக்கொண்டு இருந்தார்கள். அதை நீக்குவோம் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்த கேப்ஸ் கட்சி கொண்டு வந்ததே இச்சட்டம். 

ஆங்கிலேய அரசு இந்தியாவில் எண்பது வருடங்களுக்கு முன்னர் ரகசியங்கள் பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. அரசின் நிர்வாக அமைப்புகள் இருட்டுக்குள் ஒளிந்து கொண்டன. இதை மாற்றும் முன்னெடுப்பு நிகழ எழுபது ஆண்டுகள் ஆகியிருக்கிறது நமக்கு என்பது அரசியல்வாதிகளின் சாமர்த்தியத்தை காட்டும். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உங்களுக்கான உரிமைகள்,சலுகைகள்,நலத்திட்டங்கள் ஆகியவற்றை பெற இயலும். வெறும் பத்து ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி உங்களின் பெயர் முகவரியை கொடுத்து பொது தகவல் அதிகாரியிடம் கேள்விகள் கேட்க வேண்டும். 

உதாரணமாக உங்களுக்கு ரேஷன் கார்ட் விண்ணப்பித்தும் வரவில்லை என்றால் ரேஷன் கொடுக்கும் விதிமுறைகள்,எப்படி கொடுக்கப்பட்கிறது என்பது மாதிரியான கேள்விகளை தொடுத்துவிட்டு உங்களின் பெயரை குறிப்பிட்டு இவருக்கான ரேஷன் கார்ட் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று கேட்க வேண்டும். உங்கள் பெயரைக்குறிப்பிட்டே கேட்பது நல்லது. ஏன் என்றோ நான் என்றோ இருக்கிற வினாக்களை நிராகரிக்கிற போக்கு அதிகமாக இருக்கிறது. இப்படி தகவல்கள் தர தாமதமானால் தகவல் தராத அதிகாரியின் சம்பளத்தில் இருந்தே அபராதம் வரும் என்பதால் ஒழுங்காக தகவல் தருவார்கள். அப்படி லஞ்சம் எதிர்பார்த்து உங்களின் அட்டை வழங்கப்படாமல் உடனே அட்டையை கொடுத்து விடுவார்கள். 

ராஜஸ்தானில் அருணா ராயின் அமைப்பு தொழிலாளர்களுக்கு இருபத்தி இரண்டு ரூபாய் சம்பளத்துக்கு பதினொரு ரூபாய் மட்டும் கொடுக்கப்பட்டதை கேள்வி கேட்ட பொழுது ஒழுங்காக வேலை செய்யாததால் பிடித்தம் செய்தோம் என்றார்கள். பதிவேடுகளின் தகவல்களை கேட்ட பொழுது ஒழுங்கான சம்பளம் கிடைத்திருக்கிறது. ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட வீடுகளை அரசியல் வாதிகள் அள்ளிக்கொண்ட ஆதர்ஷ் ஊழல்,சமூக சேவகர்கள் ஆன அரசியல்வாதிகள்,ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உறவினர்கள் பெற்ற வீட்டு வசதி வாரிய வீடுகள்,அசாம் ரேஷன் ஊழல் என்று இதனால் வெளியே வந்த ஊழல்கள் ஏராளம். 

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மகன்களுக்கு விதியை மீறி இடங்களை அண்ணா பல்கலையில் இடங்களை சில வழக்குகளில் தப்பிக்க விட்டதற்காக கொடுத்த பொழுது அதைசார்ந்து கேள்விகள் கேட்டதும் மிரட்டல்கள் வந்திருக்கின்றன அந்த நபருக்கு. அவர் அந்த விண்ணப்பத்தை rti சட்ட பயன்படுத்தும் செயல்பாட்டாளர்களின் யாஹூ தளத்தில் வெளியிட தகவல்கள் வீடுநோக்கி வந்திருக்கின்றன. ஐ.ஐ.டி யில் அட்மிசன்களில் நடக்கும் ஊழலைத்தெரிந்து கொள்ள சேர்க்கப்படும் பிள்ளைகள் அவர்களின் மதிப்பெண்கள் எப்படி சேர்த்தார்கள் என்பன பற்றிய கேள்விகளை கேட்ட பொழுது சிடியை தராமல் பல்லாயிரம பக்க ஆவணத்தை தந்து எஸ்கேப் ஆக பார்த்து உள்ளார்கள். காவல் நிலையத்துக்குள் நுழைந்து எல்லா ஆவணங்களையும் ஒரு குடிமகன் சரிபார்க்கும் அற்புதத்தை,சாலையை ஒழுங்காக போட்டிருக்கிறேன் என்று ஒப்பந்தாரர் சொல்கிற மாயத்தை எல்லாம் இதே சட்டம் செய்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளின் வருமான வரிக்கணக்கை கேட்ட பொழுது ஒருவரும் பதிலே சொல்லவில்லை. அதெல்லாம் ஊருக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று வேறு காமெடி செய்த்திருக்கிறார்கள். இந்தியாவின் நீதித்துறையின் சொத்துக்கணக்குகள் தெரிய வேண்டும் என்று கேட்ட பொழுது டெல்லி உயர்நீதிமன்றம் வரை நடந்து சொத்துக்கணக்கை காட்ட மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் அடம்பிடித்து இருக்கிறது. ஆனாலும்,சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எல்லா கோர்டுகளும் சொன்னது ஆறுதல். தமிழகத்தில் இன்னமும் இந்த சட்டம் வேகமாக செயல்படுத்தப்பட வேண்டும். தகவல் கையேடு ஒழுங்காக பதிப்பிக்கபடுவதில்லை. 

மனைவியிடம் சம்பளத்தை ஒழுங்காக தராமல் சின்ன வீடு வைத்துகொண்டு இருந்த மனிதர் இதே சட்டத்தில் மாட்டியதும்,கூடுதலாக கொடுக்கப்பட்ட பல்லாயிரம் ரூபாய் வரிப்பணத்தை ஆவணங்கள் கேட்பதன் மூலம் மீட்ட எளிய மனிதரும்,உள்துறை,நிதித்துறை என்று துறைகளை அதிரவைத்த விண்ணப்பங்கள் என்று இந்த நூல் முழுக்க சுவாரசியங்கள் ஏராளம். எல்லாவற்றையும் விட எப்படி தகவலறியும் உரிமைச்சட்டத்தை எல்லாரும் பயன்படுத்தலாம் என்று விரல் பிடித்து சொல்லும் நூல் இது அவசியம் வாங்கவேண்டிய நூல்  

பக்கங்கள் : 192
ஆசிரியர் : Barakath Ali
விலை : 85
விகடன் பிரசுரம்