இந்தியாவை எதிர்பார்த்தல் பாகம்-2


சேகர் குப்தா நூலின் அறிமுகத்தின் இரண்டாவது பகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வீழ்ச்சி, மோடியின் எழுச்சி, அன்னா ஹசாரே முதல் ஆம் ஆத்மி வரையிலான பகுதிகளைக் காண்போம்.

இந்திராவின் காலத்தில் இடதுசாரிகளும், இடதுசாரிப் பார்வையும் இந்தியாவின் தொழில்துறையை, நாட்டைப் பாதித்தது என்பது குறித்துக் கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கிறார். 97 சதவிகித வருமான வரியும், 31 சதவிகித பண வீக்கமும் தான் இடதுசாரிகளின் சாதனை என்று போட்டு துவைக்கிறார். எமெர்ஜென்சியின் பொழுது இந்திராவின் பக்கம் மூச்சே விடாமல் நின்ற வரலாறும் இவர்களுக்கு உண்டல்லவா என்று நியாயமான கேள்வியை எழுப்புகிறார்.

இரண்டாவது ஆட்சிக்காலத்தில் எப்படிக் காங்கிரஸ் தன்னுடைய சீரான நிர்வாகத்தை இழந்தது என்பதற்குப் பல்வேறு உதாரணங்கள் தருகிறார். ஆர்டில்லரி துப்பாக்கிகளை 23 வருடங்களாக வாங்காமல் இருப்பதையும். கையெழுத்து கூட இல்லாமல் சிபிஐ இயக்குனர் வழங்கிய ஆயுத விற்பனையாளர்கள் குறித்த துண்டுச்சீட்டு புகாரை வைத்துக்கொண்டு ஆயுத கொள்முதலையே மறந்திருப்பதையும் சாடுகிறார். மன்மோகன் சிங்கை 39/3 என்கிற நிலையில் களமிறங்கும் திராவிட் என்று குறிப்பிடுகிறார். ஒரு நாளைக்குப் பதினெட்டு மணிநேரம் உழைத்தும், அவரின் அலுவலகத்துக்கு உண்மையான அதிகாரங்கள் இல்லாததால் அவரின் செயல்பாடுகள் வீணாகப் போய்விட்டன. வாஜ்பேயி வலுமிகுந்த பிரதமர் அலுவலகத்தை வைத்துக்கொண்டு ஆறு மணிநேரம் மட்டுமே உழைக்க வேண்டியிருந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்.

பிரதமர் அலுவலகத்தின் சீர்திருத்தங்களைச் சோனியா காந்தி தலைமையிலான சட்டத்துக்குப் புறம்பான தேசிய ஆலோசனை குழு தடுத்தது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் அரசுக்கு எதிரான பார்வையையே எப்பொழுதும் கொண்ட தீர்வுகள் அற்ற சமூகச் சேவகர்கள் குழு ஆகியோர் அடங்கிய இக்குழு அரசை முடக்கிப் போடுவதில் முக்கியப் பணியாற்றியது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனின் பேட்டி கண்ட அனுபவத்தைக் குப்தா சொல்வதில், ‘ஐயோ! ஐயோ’ என்கிற கடுப்பு மிகுந்த நகைச்சுவை மிளிர்கிறது. காந்தியை கோட்சே கொல்லவில்லை, நேரு தான் பின்னால் இருந்து சுட்டார். அப்பொழுது தான் அவர் பிரதமராகத் தொடரமுடியும் என்பதே காரணம். இதற்கு ஆதாரம் ஒரு ஆந்திர பிரதேச அதிகாரியி நினைவலைகளில் உள்ளது. அவரின் பெயரும், புத்தகத்தின் பெயரும் மறந்துவிட்டது என்று சுதர்சன் காமெடி செய்கிறார். உச்சபட்சமாகப் பாபர் மசூதியை கரசேவகர்கள் இடிக்கவில்லை, உள்ளே இருந்து குண்டு வைத்துக் காங்கிரஸ் தான் தகர்த்தது என்ற தருணத்தில் சேகர் குப்தா தலையில் அடித்துக்கொண்டாரா தெரியவில்லை.

முதலீட்டு கமிஷனின் தலைவராக இருந்த ரத்தன் டாடா நிரந்தரத் தொடர்புகளுக்காக நீரா ராடியாவை நாடவேண்டி இருந்தது என்றால் அரசும், முதலாளிகளும் எப்படித் தொடர்பற்றுக் கிடக்கிறார்கள் எனப் புலனாகிறது என்று கவலைகொள்கிறார். ரகுராம் ராஜன் தன்னுடைய ‘FAULTLINES’ நூலில் இந்தியாவின் புதிய கோடீஸ்வரர்கள் ஐடி, உற்பத்தி துறைகளில் இருந்து வராமல் அரசை அதிகமாக வளைக்கும் வாய்ப்புள்ள, அரசியல்வாதிகள் செல்வாக்கு செலுத்தும் கட்டுமானம், ரியல் எஸ்டேட், சுரங்கத்துறை ஆகியவற்றில் இருந்து வருவதைச் சுட்டி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, தெளிவான சட்ட அமலாக்கம் என்று பல முனைகளில் இயங்க வேண்டியதன் தேவையை அழுத்திப் பதிகிறார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கடன் தள்ளுபடி தான் காங்கிரசுக்கு வெற்றியை வாங்கித் தந்தது என்றால் கொடிய வறுமை மிக்கப் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏன் எண்பத்தி ஆறு இடங்களில் 19 இடங்களைக் காங்கிரஸ் வென்றது என்றும், BIMARU மாநிலங்களில் 48/208 என்று மட்டுமே காங்கிரஸ் ஏன் வெல்லமுடிந்தது என்றும் கேள்விகள் எழுப்புகிறார். வன உரிமைகள் சட்டம் தான் வெற்றியை தந்தது என்றால் பழங்குடியினரின் நாற்பத்தி ஏழு தொகுதிகளில் ஏன் 19-ல் மட்டும் காங்கிரஸ் வென்றது? நகர்ப்புறங்களே காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியை தந்ததை அவர் சுட்டிக்காட்டி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்று அறிவுறுத்துகிறார்.

இஸ்லாமியர்கள் எப்பொழுதும் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் கருதுவதை ஏற்க முடியாது. பாஜக தன்னுடைய மந்திர், மோடி, இந்துத்வா ஆகியவற்றைக் கைக்கொள்ளாமல் வளர்ச்சியை முன்னிறுத்தியே பீகார் சட்டசபை தேர்தலில் 91/102 எனக் கலக்கியதை சுட்டிக்காட்டுகிறார். சமச்சீரான வளர்ச்சி அற்புதங்களைச் செய்யக்கூடும்.

மன்மோகன் சிங் என்கிற நைட்வாட்ச்மேன் விக்கெட் விழாமல் ஆடிவிட்டு, பின்னர் முக்கிய மட்டையாளராகத் தாங்கள் கருதும் ராகுல் காந்தியை களமிறக்கலாம் என்று காங்கிரஸ் எண்ணுவது எப்பொழுதும் சாத்தியமாகாது என்று சரியாகக் கணிக்கிறார். எஸ்.எம்.கிருஷ்ணாவை ஆளுநர் ஆக்குங்கள், இந்தி பகுதியில் இருந்து எந்தப் பெருந்தலையும் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் இருக்கவில்லை என்பதை ஷீலா தீட்சித்தை கொண்டுவந்து சரி செய்யுங்கள், ராஜ்ய சபாவில் தொடர்ந்து நான்கு முறை பதவி பெற்றுக்கொண்டிருக்கும் குழப்பத்துக்கும், ஜால்ராவுக்கும் பெயர் போனவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர் சொன்னதை எதையாவது காங்கிரஸ் கேட்டிருக்கலாம்.

ராபர்ட் ப்ளாக்வெல் என்கிற அமெரிக்கத் தூதர் சொன்ன கதையை அமைச்சர்கள் செயல்படாமல் போய் அவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டஅதிகாரிகள் குறித்து விளக்க சொல்கிறார். பொது மருத்துவர்களைப் போன்ற அதிகாரிகள் அடுத்த நாள் சிறப்பு மருத்துவர் வரும்வரை முதலுதவியே தரவேண்டும், சிறப்பு மருத்துவர் ஒளிந்துகொண்டால் நோயாளி பொது மருத்துவரிடமே மாட்டிக்கொள்ள வேண்டியது தான் என்று கிண்டலடிக்கிறார்.

இந்திய வங்கித்துறை ஐந்து லட்சம் கோடியை எரிசக்தி துறையில்முடக்கிவிட்டு மீட்கமுடியாமல் இருப்பதையும், இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை வெட்டி எடுக்கப் போடப்பட்ட தொடர் தடைகளால் ஒரு லட்சம் கோடி எஃகு உற்பத்தி முடங்கியதையும், ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற ஒழுங்கான கொள்கை தெளிவில்லாத ஆட்களால் மூன்று லட்சம் கோடி பணம் தொலைதொடர்பு துறையில் கடனாக இருப்பதையும், பத்து லட்சம் கோடி கடன்களை அரசின் மெத்தனமான கொள்கையால் வங்கிகள் இழக்க கூடிய நிலை நிலவுவதையும் குட்டிக்காட்டுகிறார்.

தேசிய ஊரக நலத்திட்டத்தில் பல கோடி ஊழலுக்குக் காரணமான குஷ்வாகா எனும் பிஎஸ்பி அமைச்சரை பாஜக கட்சியில் சேர்த்துக் கொண்டதை சுட்டிக்காட்டி பெரிய திட்டங்கள் இல்லாமல் திணறுகிறது என்று கருதுவதாகச் சொல்கிறார். அமித் ஷா பெரிய வெற்றியை பெற்றுத்தர மாட்டார் என்றும் அடித்துப் பேசுகிறார்.

கூட்டாட்சி தத்துவத்தில் பெருமளவு நம்பிக்கை கொண்ட வாஜ்பேயி எல்லா மாநில முதல்வர்களையும் கொள்கைகள் சார்ந்து ஒன்றாக அமரவைத்து பேச முயன்று தோற்றதை சொல்லி காங்கிரஸ் தலைமையிலான அரசு மாநிலங்களை மதிப்பதை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ராபர்ட் வதேராவை காக்க காங்கிரஸ் முயல்வதை அத்தனை அங்கதத்தோடு சேகர் குப்தா சாடுவதைக் கட்டுரையாக வாசிக்கவேண்டும்.

நிர்பயா வன்புணர்வு நிகழ்ந்த பொழுது கண்ணீரோடு கூடிய பல்லாயிரம் மக்களிடம் பேச ஏன் ஒரு அமைச்சரோ, எம்பியோ, முதல்வரோ எட்டிப்பார்க்காத அளவுக்கு மக்களிடம் இருந்து ஏன் காங்கிரஸ் துண்டித்துக்கொண்டது என்று கேட்கிறார். கோபக்கார மக்களையும், காவல்துறையையும் சந்திக்கவிட்டுவிட்டுச் சுகமாக வேடிக்கை பார்ப்பதுதான் ஒரு அரசின் கடமையா என்று சாட்டையைச் சுழற்றுகிறார்.

இந்தியாவின் முக்கியமான ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு ஏன் ஆட்சிப்பணி அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும்? தொழில்துறையைச் சார்ந்தவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் என்று பலரும் உள்ளே வருவது சிறப்பான நிர்வாகத்தைத் தரும். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த பொழுது மக்களை மின்சாரம், தண்ணீர், தானியம், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு உண்மையான விலையைச் செலுத்த வைப்பது தான் பெரிய சவால் என்றதையும் அதை ஓரளவுக்கு அவர் செயல்படுத்தியதையும் பாராட்டுகிறார். குடும்ப ஆட்சியாகப் போய்விட்ட காங்கிரஸ் அதற்கு எதிராக வளர்ந்த ஆந்திர சந்திரபாபு நாயுடு குடும்பம், தமிழகக் கருணாநிதி குடும்பம், மகாராஷ்டிராவின் தாக்கரே குடும்பம், மேகலாவியின் சங்மா குடும்பம், பஞ்சாபின் பாதல் குடும்பம், பீகாரின் லாலு குடும்பம், உபியின் முலாயம் யாதவ் குடும்பம், கர்நாடகத்தின் கவுடாக்கள் என்று குடும்ப அரசியலை எதிர்கொள்ளாமல் நின்றதும், உட்கட்சி ஜனநாயகத்தை வளர்க்காமல் போனதும் அதன் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்று படம்பிடிக்கிறார்.

சஞ்சய் தத்துக்காகக் கட்ஜூ முதல் கடைக்கோடி ஹிந்தி ரசிகன் வரை களம் புகுந்து ஆதரவு தருவதை அடித்துத் துவைக்கிறார். சிறைகளில் ஜாமீன் கட்ட முடியாமல் பல்வேறு அடித்தட்டு மக்கள் வாடுகிறார்கள், சந்தேகத்தின் பெயரில் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் அடைக்கப்பட்டு அநியாயமாகத் துன்புறுகிறார்கள், தலித்கள் கொடுமைக்குச் சிறைகளில் உள்ளாகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் இல்லாத கரிசனம் குற்றவாளி என ஏற்றுக்கொள்ளப்பட்ட சஞ்சய் தத்துக்கு மட்டும் ஏன் என வினவுகிறார். ஷைனி அகுஜா தன்னுடைய பணிப்பெண்ணை வன்புணர்வு செய்து சிறைமீண்டு வந்து படத்தில் நடிக்கிற பொழுது வராத அருவருப்பு டெல்லி வழக்கின் பொழுது மட்டும் வருவது நம்முடைய மந்தைத்தனத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று விமர்சிக்கிறார்.

மாவோயிஸ்ட்கள் எதிர்ப்பில் அரசு மெத்தனமாக, ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் செயல்படுவதே 76 துணை ராணுவ வீரர்கள் இறக்க காரணம் என்று குறிப்பிடுகிற குப்தா, துணை ராணுவத்தினர் இறக்கிற பொழுது ராணுவத்தினர் இறக்கிற பொழுது எழுகிற உணர்ச்சி எழும்புவது இல்லையே ஏன் என வினவுகிறார். சீருடைகள் நம்முடைய சீற்றத்தை தீர்மானிக்கின்றனவா? எனக் கேட்பதோடு, பினாயக் சென் மீதான வழக்கும், அதன் தீர்ப்பும் தவறானவை என்றாலும் அவரை அரசின் திட்டமிடல் குழு ஒன்றில் நியமிப்பது ராணுவத்தினருக்கு என்ன செய்தியை சொல்லும் என்கிறார். ஹர்ஷ் மந்தர் எனும் தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினர் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகியாக ராமகிருஷ்ணா எனும் மாவோயிஸ்ட் தலைவரின் மனைவி இருந்ததைச் சுட்டிக்காட்டி அரசு தன்னுடைய போரில் குழம்பியிருக்கிறது, மாவோயிஸ்ட்கள் அதனை உணர்ந்து அடிக்கிறார்கள் என முடிக்கிறார்.

பாஜக எப்படி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக எதிர்க்கட்சியாக இருந்தது என்று அடுக்குகிறார். பாகிஸ்தானுடன் சமாதானமாகப் பேச்சு வார்த்தை நடத்த முயன்ற காங்கிரசை கோழை என்று கத்துகிற பாஜக, வாஜ்பேயி பாகிஸ்தான் உருவாக அடித்தளமிட்ட லாகூர் தீர்மானம் போடப்பட்ட இடத்தில் நின்றபடி, பாகிஸ்தான் என்கிற நாடு அமைதியும், வளமும் பெற்று சிறக்க வேண்டும் என்ற பொழுது ஆர்.எஸ்.எஸ். முதல் பாஜக வரை அமைதியாகவே இருந்தன என்று சுட்டிக்காட்டுகிறார். பொதுத்துறையின் செயல்படாத பிரிவுகளைத் தனியாருக்கு விற்பதை வீரியமாக அருண் ஷோரி செய்தார், இப்பொழுது காங்கிரஸ் செய்ய முனைகிற பொழுது ஓலம் எழுகிறது. GST எனும் இந்தியாவின் பொருளாதரத்தை மாற்றக்கூடிய சட்டத்தை மோடி ஆசீர்வாதத்தோடு எதிர்ப்பது நடக்கிறது. அணு குண்டு வெடித்த பாஜக அரசு அணு ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது ஏன் என்று வினவுகிறார்.

இஸ்ரத் ஜகான் மரணத்தை வெறும் முஸ்லீம் இந்து பிரச்சனையாகக் காங்கிரஸ் கட்டமைத்து தவறான அரசியலை முன்னெடுக்கிறது என்கிற குப்தா, பஞ்சாபில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளக் கடத்தலுக்குக் கடத்தல், கொலைக்குக் கொலை என்று அஜித் தோவல், கே.பி.எஸ்.கில் அடித்து நொறுக்கி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதை நினைவுபடுத்துகிறார். நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் என்கவுண்டரில் சந்தேகத்தின் பெயரில் அப்பொழுது கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் காலத்தில் நிறைய என்கவுண்டர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஏன் காஷ்மீரிலும் நடந்திருக்கின்றன. அவற்றின் அயோக்கியத்தையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் அல்லவா என்று கேட்கிறார்.

திரிபுராவில் எண்பத்தி எட்டில் TNV எனும் தீவிரவாத அமைப்பு தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு 91 வங்காளிகளைக் கொன்றது, சீர்குலைவுற்ற பகுதி சட்டம் போட்டுக் கடுமையாகச் செயல்படுவது போல ராஜீவ் காந்தி அரசு காட்டிக்கொண்டது. தேர்தலில் அரிதிலும் அரிதாகக் காங்கிரஸ் வென்றது. பின்னர் அந்த அமைப்பின் தலைவருக்கு மன்னிப்பும், மறுவாழ்வும் தந்த நாடகம் என்ன? என்று அதிரவைக்கிறார். மொத்தத்தில், குஜாரத் முதல் படுகொலையும் இல்லை, இறுதியும் இல்லை. பாராளுமன்றத்துக்குப் பதில் சொல்லும் அமைப்பாக உளவுத் துறையை மாற்றாமல் சத்தங்கள் மட்டும் போடும் அரசியல் தீர்வுகளைத் தராது என்று முடிக்கிறார்.

2009-10 வரை ஒரளவுக்குச் சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த எஃகு உற்பத்தி ஐமுகூட்டணியின் இறுதிக்காலத்தில் பெரும் சிக்கலுக்கு உள்ளானதையும், இறுதி மூன்று வருடங்கள் பல மில்லியன் டன் இரும்புத்தாது, நிலக்கரி இறக்குமதி அதிகரித்து இருப்பதையும்,பாக்சைட் தனிமம் பெருமளவில் இருந்தும் அலுமினிய இறக்குமதி நோக்கித் தள்ளப்படும் நிலையில் இருப்பதைச் சொல்லி, தின்ஷா படேல் எனும் சுரங்கத்துறை அமைச்சர் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டு இருப்பதையும் காட்டுகிறார்.

ராகுல் காந்தி சிறைத்தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனே பதவி இழக்கிறார்கள் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற அவசரச்சட்டம் கொண்டுவந்த பொழுது அதை எதிர்த்து தடுத்தார். A.P.வெங்கடேஸ்வரன் எனும் அயலுறவுத் துறை செயலாளர் சொன்ன தகவலும், ராஜீவ் காந்தி சொன்ன தகவலும் மாறுபடுகிறது என்று ஒரு பாகிஸ்தானிய நிருபர் கேள்வி கேட்டதும் அங்கேயே அவரை அப்பதவியை விட்டு நீக்கம் செய்தார் அவசரக்கோல ராஜீவ். வெங்கடேஸ்வரன் இன்னமும் நான்கு வருடம் பதவிக்காலம் இருந்தும் தன்மானத்தோடு ஒட்டுமொத்தமாக அரசுப்பணியை விட்டு விலகினார். அதுபோல மன்மோகன் செய்வாரா என்று சீண்டுகிறார் சேகர் குப்தா.

கூட்டணி தர்மத்துக்காக ராஜாவின் ஊழலையும், தொடர்ந்து தவறுகள் செய்தும் தட்டிக்கேட்காமல் விட்ட கல்மாடி காமன்வெல்த்தில் களவாடியதும், ஆதர்ஷ் ஊழலை அரசு சரிவர முதலிலேயே தடுக்காததும் அதன் பெயரைக் கெடுத்தன என்கிறார் குப்தா. அதோடு, BSNL நல்ல வளர்ச்சியில் இருந்த பொழுது அதைப் பங்குச்சந்தையில் இறக்காமல் விட்டு ஊழலை மலிய வைத்து விட்டாகிற்று.

மன்மோகன் எப்பொழுதும் திராவிட் போல அமைதியாக இருப்பதே அவர் குணம், ஹர்ஷ் மேத்தா ஊழலில் அவருக்குப் பங்கிருக்கிறதா என்று கேள்வி எழுந்த பொழுது, ‘எது நீங்கள் தொடங்கும் புள்ளி என்பதைப் பொறுத்தது’ என்றே அவர் பதில் சொன்னார். பங்குச்சந்தை வீழ்ந்து கொண்டிருந்த பொழுது நான் நிம்மதியாக உறங்குவது இதனால் கெடாது என்று அவரால் சொல்லமுடிந்தது.

லோக்பால் உச்சநீதிமன்றம் துவங்கி சகலரையும் கேள்விகேட்கும் அமைப்பாகப் பார்ப்பது சர்வாதிகாரம் இல்லையா எனக்கேட்கிறார். எங்கும் எப்பொழுதும் நீதிபதியின் அனுமதி இல்லாமல் நுழைந்து சோதனை செய்யும் உரிமையைத் தானே AFSPA எனும் கொடுஞ்சட்டமும் கொண்டிருக்கிறது? நேர்மைக்காகப் போராடுவதாகச் சொல்லும் அர்விந்த் கேஜ்ரிவால் ஒன்பது லட்ச ரூபாயை பணிக்காலத்தில் வேறு வேலைக்குப் போனதற்குச் செலுத்த வேண்டியிருந்தது. அதைத் தரமாட்டேன் என்று இழுத்து பிடித்து நின்றது எப்படி நேர்மையாகும்? பூஷண் தந்தை-மகன் இணையருக்கு மாயாவதி எளியோருக்கு வழங்கப்படும் வீட்டை வெகுமதி போல வழங்கிய பொழுது, தந்தார், எடுத்துக்கொண்டோம் என்றது எவ்வளவு கயமைத்தனமானது? தான் பெற்ற அரசு விருதைக் கொண்டு டிக்கெட்டில் சலுகை பெற்றுக்கொண்டு, முழுத்தொகையைத் தன்னுடைய புரவலர்களிடம் கிரண் பேடி பெற்றது ஊழல் இல்லையா? இவர்களா ஊழலை எதிர்க்க வந்துவிட்டார்கள் என்று பொரிகிறார்.

நீதிபதிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் தவிர்த்து அளவில்லாத நேர்மை கொண்ட ஆட்கள் ஆறு பேரை தேர்வு செய்வோம் என்பது முன்னைய இரு பிரிவில் நேர்மைக் குறைவு உண்டு, அங்கே பெரும்பாலும் நேர்மையானவர்களே இல்லை என்கிற தொனியை அல்லவா தருகிறது என்று கேட்கும் குப்தா, தனக்கான அங்கத்தினரை தேர்வு செய்ய இளம் நீதிபதிகளைப் பயன்படுத்திக்கொள்வதும், லோக்பால் ஆட்களைப் பதவியை விட்டு அனுப்புகிற பொழுது ஐந்து மூத்த நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் என்று குழப்ப சட்டமாக லோக்பால் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டுகிறார்.

புரட்சி என்பது ஒரு சட்டத்தின் மூலம் நடப்பதில்லை. இடதுசாரிகளை ஆட்சியைவிட்டு மோசமான நிர்வாகத்துக்காக எண்பத்தி நான்கு சதவிகிதம் மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்து அனுப்பிவைத்ததையும், மாவோயிஸ்ட்கள் மிகுந்த பகுதியில் PCAPA எனும் தீவிர இடதுசாரிகள் ஆதரவு கட்சியின் வேட்பாளரை ஜார்கிராம் எனும் தொகுதியில் எண்பத்தி சதவிகித வாக்காளர்கள் நிராகரித்து மம்தா கட்சி நபரை தேர்ந்தெடுத்ததைச் சுட்டிக்காட்டும் குப்தா தெற்கு டெல்லி, தெற்கு மும்பையில் முறையே நாற்பத்தி மூன்று, நாற்பத்தி எட்டுச் சதவிகிதம் மக்கள் மட்டுமே ஓட்டளித்து உள்ளார்கள். ஜனநாயகத்தின் அடிப்படையையே நம்பாமல் ஒரு சர்வாதிகிற லோக்பால் தீர்வுகள் தந்துவிடும் என்று இவர்கள் நம்புவது வேடிக்கையானது என்கிறார்.

விபி சிங் ராஜீவ் காந்தியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த பொழுது,செந்த் எனும் ஓட்டைப் போட்டு வீட்டுக்குள் திருடன் நுழைவதை போல ராஜீவ் திருடிவிட்டார். உங்களின் வரியில் தான் அரசு இயங்குகிறது என்று சொல்லிவிட்டு, தீப்பெட்டியை கையில் எடுத்து இந்த இருபத்தி ஐந்து பைசா தீப்பெட்டியில் ஐந்து காசு அரசு எடுத்து உங்களுக்குப் பள்ளி,. சாலைகள் தருகிறது. ஆயுதங்களும் வாங்குகிறது. அந்த உங்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது எனப் புரியவைத்து காங்கிரசுக்கு எதிரான அலையை உண்டு செய்தார். அப்படிப்பட்ட தலைவர்கள் குறைந்து போன இடத்தையே ஆதிக்க மனோபாவம் மிக்க அன்னா ஹசாரே போன்ற ஆட்கள் கைப்பற்றிக்கொண்டதாகச் சேகர் குப்தா சொல்கிறார்.

ஷாந்தி பூஷன் ‘மதுகோடா, ஆ.ராசா போன்றவர்கள் பிரதமர் பதவிக்கு வராமல் லோக்பால் தடுக்கும் என்கிறார். அவரின் பார்வையில் பழங்குடியினர், தலித்துகள் பலரும் ஊழல்மயமானவர்கள் என்கிற மத்தியவர்க்க பார்வையே இருக்கிறது. இவர்கள் தான் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்., இவர்களின் பிரதிநிதிகளுக்கு இடம் மட்டும் தந்தால் போதுமா? அவர்களின் மீதான மேல்தட்டுப் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் எப்படித் தீர்வுகள் சாத்தியம். இந்தியா ஒன்றும் சிங்கப்பூர் இல்லை ஒரு வடிவம் எல்லாவற்றுக்கும் தீர்வாக, இங்கே பலதரப்பட்ட சிக்கல்கள், மக்கள், சவால்கள் உள்ளன. அவற்றை உணராமல் பேசுவது தவறாகும். பங்காரு லக்ஷ்மன் எனும் தலித்தும், திலீப் சிங் ஜுடியோ எனும் ராஜபுத்திரரும் ஊழல் வழக்கில் சிக்கி பாஜகவில் பதவி இழந்தார்கள். ஆதிக்கச் சாதியினரான ஜூடியோ மீண்டும் அரசியலில் ஒங்க முடிந்தது. லக்ஷ்மன் காணமல் போனார். சச்சார் அறிக்கை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மிக அதிகமாக நிறைந்திருக்கும் இடம் சிறைச்சாலைகள் என்று சொல்கிறது. ஊழல் வழக்கில் பெரும்பாலும் இடைநிலை சாதியினர், தலித்துகள் மாட்டுவதற்கு அவர்கள் மட்டுமே தவறு செய்கிறார்கள் என்பது காரணமா? நிச்சயம் இல்லை. இங்கே ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிரான பார்வை வேரூன்றி இருக்கின்றது என்பதே காரணம் என்று நெத்தியடி அடிக்கிறார். இந்த மக்கள் ஆதிக்க ஜாதியினர் முன்னின்று நடத்தும் அன்னா ஹசாரே இயக்கம் போன்றவற்றைச் சந்தேகத்தோடு பார்ப்பது தவறொன்றும் இல்லை என்கிறார் சேகர் குப்தா.

சேகர் குப்தாவின் எழுத்துக்களின் மீதான விமர்சனங்களுக்குச் செல்லலாம். இவரின் மிகப்பெரிய பலம் எனப் பலர் நினைக்கும் அவரின் வாதத்திறமையே அவரின் நடுநிலைமையைக் குலைக்கிறது. ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறார் என்றால் தன்னுடைய பார்வை என்னவோ அதை மட்டுமே நிறுவும் அவர் இன்னொரு தரப்பின் நியாயத்தை மறந்தும் பதியமாட்டார். நரசிம்ம ராவ் இடிப்பின் பொழுது பூஜையில் அமர்ந்தார், அது முடியும்வரை எழவில்லை என்கிற செய்தியை காலுக்குள் நசுக்கிவிடுவார். ரிலையன்ஸ் நிறுவனம், ப.சிதம்பரம் இருவரின் மீதும் தனிக்கரிசனம் அவருக்கு உண்டு என்கிற குற்றச்சாட்டு உண்மைதானோ என்று எண்ணும் வகையிலேயே கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

நேருவின் காலத்தில் அரசு வலதுசாரிகளைக் கட்சியை விட்டு திட்டமிட்டு அகற்றியதே பொருளாதார மந்தநிலைக்குக் காரணம் என்று சொல்கிற சேகர் குப்தா அந்த வளதுசாரிகளில் பலரும் ஊழல்மயமாக, மதவாதிகளாக இருந்ததை மறந்தும் சொல்லமாட்டார். நேருவின் காலத்தில் யாரும் பெரும்பாலும் மாற்றுப் பொருளாதார மாற்றைத் தீவிரமாக முன்வைத்துச் செயல்படுத்திக் காண்பிக்கவில்லை என்பதும், அவர் விரும்புகிற ஜகதீஷ் பகவதி முதலிய பொருளாதார வல்லுனர்களே நேருவின் காலத்தில் இந்திய பொருளாதாரம் சிறப்பாகவே இருந்தது என்று சான்றிதழ் தருவதைக் குப்தா கணக்கில் கொள்ளமாட்டார். இடதுசாரிகளை விமர்சிக்கவேண்டும் என்று வந்த பிறகு நேருவில் இருந்தே துவங்குவதே தானே சரியாக இருக்க முடியும்? தரவுகளாவது, இன்னொரு பக்கம் தர்க்கங்களாவது..

கட்ஜூ செய்தி நிறுவனங்களை முறைப்படுத்த முயன்றதை சாடவந்த குப்தா தன்னுடைய இதழை மட்டுமே செய்தித் துறையின் முகம் என்பது போலப் பேசுகிறார். அதில் புரையோடிப் போயிருக்கும் ஊழல்கள், தவறுகள், செம்மையான ஒழுங்குமுறைக்கான தேவைகள் குறித்து மூச்சுகூட விடவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனம் ‘crony capitalism’-ல் முன்னணி நபர் எனத்தெரிந்தும் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை விமர்சனமாக இல்லை. ஏன் ரிலையன்ஸ் அப்படிச் செய்தது என்று ஒரு தேர்ந்த மக்கள்தொடர்பு அலுவலர் போலவே சேகர் குப்தா ஆதரித்து எழுதிச்செல்கிறார். ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு சிக்கலில் எப்படி விலைகளை அநியாயமாகக் கூட்டி கொள்ளை லாபம் பார்க்கப்பார்த்தது என்பது குறித்துக் கள்ள மவுனம், ஆனால், அதே நிறுவனத்தின் தொழில் பாதிக்கப்பட்டால் கதறுகிறார். அம்பானிக்காக ஐயோ அதானியை மோடி கண்டுகொள்கிறாரே எனப் புலம்புகிறார். பழங்குடியின மக்கள் எப்படிக் கனிமங்களை வெட்டியெடுக்கும் துறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களின் மறுவாழ்வு எப்படிச் சாத்தியமில்லாமல் போகிறது என்றும் பேச மறந்த சேகர் குப்தா சுரங்கப்பணியில் ஈடுபடும் நிறுவனங்களின் கவலையைப் பிரதிபலிப்பதை கச்சிதமாகச் செய்கிறார்.

அத்வானி பொய்யே சொல்லாதவர் என்பதில் துவங்கி பாஜகவின் மூத்த தலைவர்கள் பல வருடங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் பேசியதில்லை என்று அநியாயத்துக்குப் பொய் சொல்கிறார். ப.சிதம்பரம் நேர்மையின் உச்சம் என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறார். FCRA எனும் கொடிய சட்டத்துக்குக் காரணமான ப.சிதம்பரத்தை எந்த இடத்திலும் சாடாமல் அதை விமர்சித்தவரின் கருத்தை மட்டும் போகிற போக்கில் பதிகிற வாதத்திறமையைச் சேகர் குப்தாவிடம் கண்டு அசந்து போவீர்கள்.

இந்திய அரசாங்கத்தின் வன்முறைகள், அது நிகழ்த்திய நிறுவனக்கொலைகள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் வகையில் ‘அப்படித்தான் அரசு ஜீவித்திருக்கும்!’ என்கிற தொனியில் அப்பட்டமாகப் பேச சேகர் குப்தாவால் மட்டுமே முடியும். நீரா ராடியா டேப்புகளில் சம்பந்தப்பட்ட பர்கா தத்தைப் பற்றி விமர்சனங்கள் எதுவுமில்லை. தற்போது அவருடன் இணைந்து ஒரு நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறார் சேகர் குப்தா. ஆர்.ஆர்.எஸ். அமைப்பில் தன்னுடைய இளமைக் காலத்தில் இயங்கிய சேகர் குப்தா ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், பாஜகவையும் தனித்துக் காண்பிக்கிற பணியை அவ்வப்பொழுது கஷ்டப்பட்டுச் செய்கிறார். மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, VHP-ஐ விலக்கி வைத்தவர் என்று சொல்கிற அவரின் வாதம் கண்முன்னாலேயே சரிவதை கண்டுகொண்டு தான் இருப்பார்.

சேகர் குப்தாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்டே இந்த வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவையே அவரின் சிறந்த கட்டுரைகள் என்று அவர் எண்ணுவது அவரின் மனவோட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ‘அரசை வழிபடும் அறிவுஜீவி’ என்று சேகர் குப்தாவை சொல்லலாம் என்றாலும் அதற்கான நியாயங்கள் அவரிடம் இருப்பதே அவரின் வாதங்களோடு சமயங்களில் முரண்பட நேர்ந்தாலும் ரசிக்க வைக்கிறது.

— withShekhar Gupta and N.r narayanamurthy infosys.

 

இந்தியாவை எதிர்பார்த்தல்! பாகம் -1


சேகர் குப்தா இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராக பதினெட்டு வருடங்கள் கோலோச்சியவர். தீர்க்கமான இதழியலுக்கு பெயர் போன அவர் ‘NATIONAL INTEREST’ என்கிற பெயரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தி ஒன்றை தொடர்ந்து எழுதி வருகிறார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மட்டும் ‘ANTICIPATING INDIA’ என்கிற பெயரில் தொகுக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரைகளின் சாரமாக இந்த நூல் அறிமுகம் அமையும். இரண்டு பகுதிகளாக அமையும் இந்த நூல் அறிமுகத்தின் முதல் பாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எழுச்சி, முதல் ஆட்சிக்காலம் ஆகியவைக் குறித்து மட்டும் காண்போம்.
சேகர் குப்தாவின் முன்னுரையே ஒரு சுவாரசியமான நாவலை நினைவுபடுத்துகிறது. தான் மெத்த தெரிந்த மேதாவி என்கிற தொனியில் எழுதுபவர்களுக்கு நடுவே அரசியல்வாதிகளிடம் தான் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டே தன்னுடைய முன்னுரையை அவர் துவங்குகிறார்.

இந்தியாவின் அரசியலின் போக்கை எப்படி ஒருவர் புரிந்துகொள்வது அல்லது விளக்குவது? ராஜீவின் ஊழல்மயமான காங்கிரசை ஆட்சியை விட்டு விலக்கி வைக்க இடதுசாரிகள், பாஜக இருவரும் வி.பி,சிங்குக்கு ஆதரவு தந்தார்கள். ஆனால், அதே இடதுசாரிகள் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து பாஜகவை ஆட்சியை விட்டு தள்ளி வைத்தார்கள். தேவகவுடா, குஜ்ரால் பிரதமர்கள் ஆவது இதனால் சாத்தியமானது. காங்கிரஸ் ஆட்சிக்கு வர இடதுசாரிகள் அடுத்து உதவினார்கள். அதே இடதுசாரிகள் அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறாமல் இருக்க பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார்கள். தலைசுற்றும் இந்தியாவின் அரசியல் ஆடுகளத்தில் பார்வையாளனாக இருந்து ரசிப்பதே சிறந்தது. எதுவும், எப்பொழுதும் மாறும் என்கிற புரிதல் தேவை. பல்வேறு காரணிகள் தொடர்ந்து செயல்படுவதால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்கிற அதிர்ச்சி கொள்ளாத மனம் மட்டுமே தேவை.

குமாரசாமி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து முதல்வர் ஆனதை சந்தர்ப்பவாதம் இல்லையா? என ஆசிரியர் கேட்க, ‘என் தந்தை மத்தியில் பிரதமர் ஆகி மாநிலத்தில் ஆட்சியை, கட்சியை இழந்தார். மாநிலத்தில் பலமாக இருந்துகொண்டு தான் மத்தியை பற்றி கவலைகொள்ள வேண்டும்.’ என்று அவர் சொன்னபொழுது ஒரு புதிய பாடம் புலப்பட்டது.

யார் ஜாதி பார்க்கிறார் என்று சொல்கிறவர்களுக்கும். இந்து மதத்தில் மட்டுமே ஜாதி உண்டு என்பவர்களுக்கும் இந்தியாவின் ஜனாதிபதியான கியானி ஜெயில் சிங்கின் கதை ஒன்று போதும். சேகர் குப்தாவிடம் பஞ்சாபின் முதல்வர்களாக ஜாட் ஜாதியை சேர்ந்த சீக்கியர்கள் மட்டுமே ஆகமுடியும், ராம்கார்ஹியா எனும் தச்சர் பிரிவை சேர்ந்த ஜெயில் சிங் இந்திராவால் பஞ்சாப் முதல்வர் ஆனார். ‘எனக்கு பின் நான் யாரும் ஜாட் பிரிவைத் தாண்டி பஞ்சாபின் முதல்வராக முடியும் என்று எண்ணவில்லை.’ என அவர் சொல்லி நாற்பது வருடங்கள் ஆகப்போகிறது. ஏழு பஞ்சாப் முதல்வர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். எல்லாரும் ஜாட் சமூகத்தினர் மட்டுமே.

வாஜ்பேயி உடன் தான் மேற்கொண்ட முதல் சந்திப்பை விவரிக்கிற பொழுது அவர் எத்தகைய ஜனநாயக பண்பு கொண்டவர் என்பது புலப்படுகிறது. வடகிழக்கு பற்றி அங்கே பத்திரிக்கையாளராக களத்தில் பணியாற்றிய ஆசிரியரை பேசவிட்டு வாஜ்பேயி கேட்டதை, ‘எல்லாம் எனக்குத் தெரியும்!’ என்று சர்வாதிகார போக்கில் பேசிய ஆர்.ஆர்.எஸ். தலைவர் சுதர்சனுடன் ஒப்பிடுகிறார்.

நரசிம்ம ராவ் என்றாலே பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர் என்கிற பிம்பம் நம்முடைய மனதில் பதிந்துவிட்ட சூழலில் அவரின் வெவ்வேறு முக்கியமான பக்கங்களை சேகர் குப்தா முன்வைக்கிறார். நரசிம்ம ராவ் காலத்தில் இந்தியா அணுகுண்டு வெடிப்பை மேற்கொள்ள முயன்று அமெரிக்காவிடம் மாட்டிக்கொண்டதாக பரவலாக சொல்லப்படுகையில் சேகர் குப்தா அது அமெரிக்காவிடம் வேண்டுமென்றே மாட்டிக்கொண்டு, ‘இனிமேல் இவர்கள் செய்ய மாட்டார்கள்!’ என்கிற போலி நம்பிக்கையை விதைக்க முயன்ற ராவின் ராஜதந்திரம் என்று அடித்துச் சொல்கிறார்.

நரசிம்ம ராவ் அறுபதாண்டு பொதுவாழ்க்கையில் இருந்த நிலையில் இந்தியாவின் பிரதமரான பொழுது பாபர் மசூதி இடிப்பை அவரே வழிவிட்டு செய்தார் என்று நமக்கு சொல்லப்படுகிறது. அத்வானி, வாஜ்பேயி முதலிய பாஜக தலைவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்த லிபரான் கமிஷன் ராவை விடுவித்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

 
‘தான் அதிகமாக அத்வானியை நம்பிவிட்டதாக’ ராவ் குப்தாவிடம் புலம்புகிறார். மேலும், ‘ஏன் ராணுவம் கரசேவகர்களை சுடச்சொல்லி உத்தரவிடவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘அவர்கள் ராம் ராம் என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். ராணுவத்தில் சிலரும் ராம், ராம் என்று முணுமுணுத்துக்கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டு ராணுவத்தை தாக்கியிருந்தால் அதில் ஏற்பட்ட தீ நாட்டையே அழித்திருக்கும்!’ என்று ராவ் சொல்கிறார். மேலும், ராவ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டாலும் அவை அனைத்திலும் இருந்து அவர் விடுதலை பெற்றார். அதைக் குறித்து கேட்டதற்கு, தன்னுடன் இருந்தவர்கள் கொள்ளையடித்ததை தான் வேடிக்கை பார்த்ததை சூசகமாக, ‘நான் முட்டையைத் திருடினேன் என்றும், நான் கோழியைத் திருடினேன் என்றும் வெவ்வேறு சாரார் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நான் திருடன் என்பதில் மட்டும் அவர்களுக்கு சந்தேகமில்லை!’ என்று சொல்லியிருக்கிறார்.


சீனாவுக்குப் பயணம் போய்விட்டு வந்த காங்கிரசின் தலைவர் சீதாராம் கேசரியிடம் ‘எப்படி இருந்தது சீனா?’ எனக் கேட்டதற்கு, ‘அவர் நம்மூர் பஸ் டிரைவர்கள் போலத்தான். இண்டிக்கேட்டரை இடது பக்கம் போட்டுவிட்டு, வலதுபக்கம் பொருளாதாரத்தில் போய்க்கொண்டே இருக்கிறார்கள்!’ என்றார். மாதவராவ் சிந்தியா இந்தியாவின் பிரதமர் ஆகக்கூடுமா என்கிற கேள்விக்கு, ‘ஒரு விமான விபத்துக்காக அவர் பதவியைத் துறந்தார். அதுவே அவசரமான செயல். அதற்கடுத்து அதைப் பயன்படுத்திக் கொண்டு நாடகமாடி இருக்க வேண்டும், அவர் ஒருவாரம் குடும்பத்தோடு சுற்றுலா போய்விட்டார். இவரெல்லாம் தேறமாட்டார்!’ என்றிருக்கிறார் சீதாராம் கேசரி.

கருணாநிதியை ‘தங்களை பிரிவினைவாதி என்று சித்தரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’என்று கேட்ட பொழுது, ‘நான் பிரிவினைவாதியாக சித்தரிக்கப்படவில்லை, நான் பிரிவினைவாதியாக இருந்தவன் தான்; இந்தியா மேற்கொண்ட 62, 65, 71 போர்கள் இந்தியக்குடியரசுக்கு வெளியே சிறிய தேசமாக இறையாண்மையோடு இருக்க முடியாது என்று உணர்ந்துகொண்டதன் விளைவே இது!’ என்று பதில் தந்திருக்கிறார்.

12 ஆகஸ்ட் 1990 அன்று ருச்சிகா கிர்ஹோத்ரா என்கிற பதினான்கு வயது சிறுமி டென்னிஸ் விளையாட போன பொழுது ஹரியானா டென்னிஸ் சங்கத் தலைவரும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான ரத்தோர் அப்பெண்ணை மானபங்கபடுத்தி இருக்கிறான். அதை வெளிப்படையாக அப்பெண் சொன்னதும் முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படாமல் அவளின் சகோதரன் மீது ஆறு வாகனத் திருட்டு வழக்குகள் பதியப்பட்டது. (அனைத்திலும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.) அப்பெண்ணின் குடும்பமும், அவளும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி பதினேழு வயதில் அவள் தற்கொலை செய்துகொண்டாள். அந்த அதிகாரியின் மீது சுண்டு விரலைக் கூட பதிக்காத அரசின் செயல்பாட்டை கடுமையாக சேகர் குப்தா விமர்சிக்கிறார்.

ஐ.பி.எஸ் அதிகாரி கே.பி.எஸ்.கில் மீது மானபங்க வழக்கை ரூபன் தியோல் பஜாஜ் தொடர்ந்த பொழுது பொங்கிய போராளிகள் ஒரு நகர்ப்புறத்தை சேர்ந்த பெண்ணுக்கு குரல் கொடுக்காமல் போய் அவள் இறந்தாள் என்று மனசாட்சியை உலுக்குகிறார். பத்து வருடங்கள் கழித்து ரத்தோர் மீது சிபிஐ மானபங்கப்படுத்தியதற்காக மட்டும் வழக்கு பதிவு செய்து, இன்னுமொரு பத்து வருடங்கள் கழித்து சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தது. தற்கொலைக்கு தூண்டியது என்று எந்த வழக்கும் பதியப்படவில்லை.

அசோம் கண பரிஷத் கல்லூரி மாணவர்களின் இயக்கமாக, அசாமிகளின் சுயாட்சிக்கான இயக்கமாக வங்காளிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக உருவானது. அரசின் அடக்குமுறைகளை வெற்றிகரமாக அவர்கள் எதிர்கொண்டார்கள். தேர்தல்களை புறக்கணித்தார்கள். ஊரடங்கு உத்தரவு என்பதை கேலிக்கு உள்ளாக்கினார்கள். ஆனால், அவர்கள் ஆட்சி செய்த ஐந்து வருடத்தில் ஊழல் மட்டுமே மூச்சானது. நிர்வாகம் என்கிற ஒன்றையே மறந்தார்கள். மாநிலக்கட்சிகளே சிறந்த உள்ளூர் நிர்வாகத்தை பெரும்பாலும் தந்துகொண்டிருக்கும் சூழலில் இப்படிப்பட்ட கட்சிகள் மரிப்பதும் நன்மைக்கே என்கிறார்.

உத்திர பிரதேசத்தை விடுதலைக்குப் பின்னால் பிரிக்க முயன்ற பொழுத, ஜி.பி.பந்த் அதை மறுத்து சொன்ன காரணம் வேடிக்கையானது, ‘கிழக்கில் ராமனின் பிறப்பிடமான அயோத்தியும், மேற்கில் கிருஷ்ணரின் மதுராவும் இருக்கிறது. எப்படி இதைப் பிரிப்பது?’. காங்கிரசின் அதிகார மையங்கள் அங்கிருந்தே பெரும்பாலும் வந்தார்கள், நேரு, இந்திரா ஆகியோரை முன்னிறுத்தி ஒட்டுமொத்த இடங்களையும் அள்ளிவிடவே காங்கிரஸ் இப்படி செயல்பட்டது. அங்கே ஓரளவுக்கு நொய்டா மட்டுமே வளர்ந்திருக்கிறது. காரணம், அங்கே தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வசிக்கிறார்கள். கூடவே, டெல்லிக்கு அருகில் இருக்கின்றது அது. பூர்வாஞ்சல், ரோஹில்கன்ட்., பந்தல்கன்ட், அவாத் என்று பிரித்து தொலைத்தால் ஆவது அங்கே வளர்ச்சி ஓரளவுக்கு எட்டிப்பார்க்கும்.

மோடியை கோத்ரா கலவரங்கள் சார்ந்து குத்திக் கிழிக்கிறார், ‘ஐம்பது வயதில் இருக்கும் உங்களுக்கு ஒரு பேரன் இருக்கவேண்டும்.. அவன் குஜராத் கலவரங்களின் பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தாத்தா?’ என்று கேட்பதில் இருந்து உங்களின் பிரம்மச்சரியம் காத்திருக்கிறது. ‘கலவரங்களின் பொழுது காவல்துறை, அரசு செயல்பட்டது எனக்கு முழுத்திருப்தி, வன்முறை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி.’ என்று நீங்கள் சொன்னதற்கும், ‘பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்.’ என சீக்கிய படுகொலைகளின் பொழுது ராஜீவ் சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேள்வி எழுப்புகிறார்.

எண்பத்தி மூன்றாம் வருடம் அசாமின் நெல்லியில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் உட்பட 3,300 அப்பாவி மக்கள் அவர்கள் வங்காளிகள் என்கிற ஒரே காரணத்துக்காக அசாம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். உட்பகுதியில் நடந்த அந்த படுகொலையை CRPF-ன் பாதி பிரிவை மட்டும் கொண்டு பெருமளவில் தடுத்த H.B,N.அப்பா என்கிற தலைமைக் காவலர் ‘ஐயோ நான் இன்னமும் முன்னரே வந்திருந்தால் இன்னம் சில ஆயிரம் பேரைக் காப்பாற்றியிருக்கலாமே!’ எனக்கண்ணீர் வடித்தார். வெறும் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று வாழ்க்கை முடிந்த போன அவருக்கு இருந்த உறுத்தல் ஏன் மோடிக்கு இல்லை என்று கேட்கிறார் குப்தா.

‘ராஜதர்மத்தை இழந்துவிட்டார் மோடி’ என்று முழங்கிய வாஜ்பேயி மோடியை பதவியைவிட்டு நீக்கியிருக்க வேண்டும். அத்வானியின் அழுத்தத்துக்கு அடங்கி அவர் அதைச் செய்யவில்லை. அது சிறுபான்மையினரை அவருக்கு எதிராக திருப்பிவிட்டது என்கிறார் ஆசிரியர்.

சிலைகளைக் கொண்டு நடக்கும் அரசியலைக் கடுமையாக சாடுகிறார். சவார்க்கருக்கு படம் கூடாது என்று பொங்கிய காங்கிரஸ் ஏன் இந்திரா காலத்தில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது? பாஜகவின் பசு எதிர்ப்பு அரசியலுக்கு அச்சாரம் போட்டதே காங்கிரஸ் தான். காங்கிரஸ் இன்னமும் நேரு, காந்தியின் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்க பார்க்கிறது. எப்பொழுதோ இருந்ததாக நம்பப்படும் ராமர், கிருஷ்ணர் பெயரால் பாஜக ஒட்டுக் கேட்கிறது. மாயாவதி அம்பேத்கரின் பெயராலும், முலாயம் சிங் லோஹியாவின் பெயராலும்,. ஜெயலலிதா எம்ஜிஆரின் பெயராலும் ஆட்சியைப் பிடிக்க முனைகிறார்கள். எதிர்காலத்தை எப்படி கட்டமைப்போம் என்று சொல்லியோ, தொலைநோக்கை கொண்டோ, தங்களின் செயல்பாட்டை கொண்டோ ஓட்டுக் கேட்கும் தைரியம் ஏன் வரவில்லை என்று வினவுகிறார்.

குஜராத்திலும், காஷ்மீரிலும் முதுகெலும்போடு தேர்தல் நடத்திய ஜே.எம்.லிங்டோவை ‘ஜேம்ஸ் மைக்கேல்’ லிங்டோ என்று மதச்சாயம் பூசி அவதூறு செய்யப்பார்த்தார் மோடி. ஐந்தே தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி அதில் தன்னுடைய கட்சி தோற்றதால், ஓட்டு அளிப்பதை வாக்குச் சீட்டில் தான் செய்யவேண்டும் என்கிற பழைய வரியைக் கொண்டு தேர்தல் ஆணையத்தை மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தாமல் சிலகாலம் தடுத்தார் ராஜீவ். பி.ஜே.ராவ் எனும் தேர்தல் ஆணையர் லாலூவுக்கு அஞ்சாமல் தேர்தலை நேர்மையாக நடத்திக் காட்டினார். அவர் வாங்கிய சம்பளம் 12,000 ரூபாய்! சேசன் தேர்தல் ஆணையம் எவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என்று காட்டினாலும், அவரே பின்னர் ஜனாதிபதி பதவி, ராஜ்ய சபா சீட் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு வழிமாறிப் போனார்.

2004 தேர்தலில் பாஜக தோற்றதற்கு காரணமாக விவசாயத்தை கண்டுகொள்ளாதது, அடித்தட்டு மக்களுக்கு எட்டு சதவிகித வளர்ச்சியே திருப்தி தந்துவிடும் என்று நம்பியது, குறைந்த வட்டி வீட்டுக்கடன்கள், மலிவான தொலைபேசி இணைப்புகள் நாட்டை நம் பக்கம் ஈர்க்கும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள் என்கிறார் குப்தா.

அதேசமயம் வேறு சில வாதங்களை முன்வைக்கிறார்: ஏழைகள்
காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்றால் ஏன் ஒரிசாவில் மீண்டும் பாஜக கூட்டணி பெருவெற்றி பெற்றது? கிராமப்புற மக்கள் ஐடி புரட்சிக்கு எதிராக கிளர்ந்தார்கள் என்றால் ஏன் ஆந்திராவில் மட்டும் அப்படி ஆனது? கர்நாடகாவில் பாஜக நல்ல வெற்றியை ஈட்டியுள்ளதே? சீரற்ற ஆட்சி நிர்வாகம், சொரணையில்லாத அரசியல், கேவலமான வாழ்க்கை நிலை ஆகியவற்றால் மாற்றி ஓட்டுப் போட்டார்கள் என்றால் ஏன் லாலுவும், முலாயமும் தொகுதிகளை அள்ளினார்கள்? கிராமப்புறங்களில் தான் பாஜக தோற்றதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. உண்மையில் நகரங்களில் தான் அது துடைத்து எறியப்பட்டது. கிராமங்களில் முன்னர் இருந்த நிலையையே அது பெரும்பாலும் பெற்றது. நகர்ப்புற இடங்கள் அந்த கூட்டணிக்கு 51-ல் இருந்து 21 ஆக குறைந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 16-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது.

தரகர், விவசாயி யாரேனும் ஒருவரை திருப்திப்படுத்தினால் போதும் என்கிற பார்வையே பாஜகவுக்கு இருந்தது. தரகர்,விவசாயி இருவரையும் திருப்திபடுத்துவதே சமச்சீரான வளர்ச்சி. அமர்த்தியா சென் ‘அடிப்படைக் கல்வியை பரவலாக்கி, பொது மருத்துவ நலச்சேவையை மக்களுக்கு சிறப்பாக வழங்கி, நிலச்சீர்திருத்தங்கள் நடந்து, குறுங்கடன்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எளிமையாக, நியாயமாக கிடைத்திருந்தால் இப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.’ என்கிறார்.

இடதுசாரிகள் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் பொழுது காங்கிரசுக்கு தங்களின் ஆதரவை விளக்கிக் கொண்டதை கடுமையாக சாடுகிறார் சேகர் குப்தா. இடதுசாரிகள் மத்திய அரசில் பங்கேற்ற பொழுது நிர்வகிக்கப்பட்ட விலை முறைமையை (APM) நீக்கியதையும், பொதுத் துறையில் அரசு பங்குகளை விற்கும் கமிட்டியை முதன்முதலில் அவர்கள் காலத்திலேயே துவங்கியதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தேவ கவுடா ஆட்சியில் சிதம்பரம் சீர்திருத்தங்கள் நிறைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த பொழுது அமைதி காத்தவர்கள், லாலு தனியார் துறையை ரயில்வே கண்டெயினர் துறையில் கொண்டு வந்த பொழுது எதிர்க்காதவர்கள், அதையே காங்கிரஸ் செய்தால் கத்தியிருப்பார்கள். BHEL பங்குகளில் பத்து சதவிகிதத்தை விற்க அரசு முனைந்த பொழுது எதிர்த்த இடதுசாரிகள் அதுவே NTPC எனும் இன்னொரு நவரத்னா நிறுவனத்தில் பங்குகளை விற்ற பொழுது அமைதி காத்தது ஏன் என்று துளைத்து எடுக்கிறார். அறுபது எம்பிக்களை வைத்து கொண்டு ஆட்சியை நிர்மாணிக்கும் போக்கு சர்வாதிகாரமானது என்று பாய்கிறார்.

நம்முடைய நகரங்கள் பெரும்பாலும் வளர்ச்சியிலும், திட்டமிடுதலிலும் பின்தங்கியிருப்பதை சுட்டிக்\காட்டி அமெரிக்காவில் பல்வேறு முக்கியமான நகரங்கள் அந்தந்த மாநிலத்தின் தலைநகராக இல்லாததைப் போல இந்தியாவிலும் செய்யலாம் என்று ஆலோசனை தருகிறார். நடுத்தர வர்க்கம் மின்சாரம், சமையல் எரிவாயு, தண்ணீர் என்று அனைத்திலும் மானியத்தையும், தரத்தையும் இணைத்தே எதிர்பார்ப்பது மேலும், மேலும் நிதிப் பற்றாக்குறையை அதிகமாக்கவே செய்யும் என்று எச்சரிக்கையும் உண்டு.

டெல்லியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனம் காட்டிய அரசின் போக்குக்கு பின்னால் இருக்கும் அரசியலை தோலுரிக்கிறார். ஒளிவுமறைவற்ற நில ஆவணங்கள், தெளிவான சொத்து வரிகள், சொத்து சார் சட்டங்களை சீர்திருத்தல் ஆகியவற்றை செய்யாமல் அரசுகள் காலம் கடத்துகின்றன. காரணம் இப்படிப்பட்ட சூழலில் அரசியல்வாதிகளையே மக்கள் நாடவேண்டி இருக்கும், தேவையானதை பெற்றுக்கொண்டு செய்வதை அவர்கள் செய்வார்கள். அதேபோல் ஓட்டுக்கள் பறிபோகும் என்கிற வாதத்தை பதினெட்டாயிரம் குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் என்று வைத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் ஐந்து ஓட்டு என்றாலும் ஒரு லட்சம் ஓட்டைத் தொடாத பொழுது அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. பலர் அரசின் நேர்மையான போக்குக்கு வாக்களிப்பார்கள் என்று உத்வேகம் தருகிறார்.

கல்வி அமைச்சரின் வீட்டின் முன்னால் கேந்திரிய வித்யாலயாவில் இடம் வேண்டி பலர் நிற்கும் காட்சியை கண்முன் ஓடவிட்டு, நாம் வருடத்துக்கு மிக மிக குறைவான மேற்படிப்பு முடித்த மருத்துவர்களையே உருவாக்குகிறோம். போதாது என்று கலைசார்ந்த கல்லூரியில் ஒரு தத்துவத்தை மட்டுமே சார்ந்து, புதிய சிந்தனைகளை வரவேற்காத போக்கு நிலவுவதையும் காணமுடிகிறது. தேவை மிக அதிகமாக இருக்க சத்தற்ற கல்வி நிறுவனங்களை, சீரழியும் நிலையில் கல்வியின் போக்கை வைத்திருப்பது இந்தியாவின் பெருங்கனவுகளுக்கு உகந்தது அல்ல என்பது அவரின் அச்சம்,.

வடகிழக்கு பகுதி வேறுபட்ட பகுதி என்பதை உணர்ந்த நேரு அங்கே பரந்த அறிவைக் கொண்டிருந்த மானுடவியல் அறிஞர் வெர்ரியர் எல்வினை நம்பினார். அவரின் வழிகாட்டுதலில் இந்தியாவின் மைய நீரோட்டத்தோடு வேகமாக வடகிழக்கு மக்களை இணைக்காமல் பொறுமையாகவே அரசு இயங்கியது. இதை ‘மெதுவாக வேகப்படுத்தல்’ என்று நேரு அழைத்தார். இவை நல்ல நோக்கத்தோடு துவங்கப்பட்டாலும் ILPS முதலிய கட்டுப்பாடுகளின் மூலம் வளர்ச்சியை மழுங்கடித்து விட்டன. இந்திய பழங்குடியின ஆட்சிப் பணி தந்த தேர்ந்த அதிகாரிகள் போன்ற சிற்சில நன்மைகள் உண்டு,ஆனால். கிறிஸ்துவ மிஷனரிக்கள் பலமாக வேரூன்றிய பகுதிகளில் நவீன கல்வி, சிந்தனைகள் புகுந்தன. அப்படியிருந்தா மிசோரம், நாகலாந்து சிறப்பாக வளர்ச்சியடைந்தது. மற்ற பகுதிகள் குறிப்பாக அருணாசல பிரதேசம் பின்தங்கியது. சாலைகள், கட்டுமானம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை நலம் உயர்த்துதல் என்று நாம் போகவேண்டிய தூரம் பெரிது.

இந்தியா முழுமையான ஜனநாயகம் இல்லை என்பதைப் போல பாகிஸ்தான் முழுமையான சர்வாதிகார நாடில்லை என்கிற சுவராசியமான வாதத்தை முன்வைக்கிறார். எப்படி இந்தியாவில் எல்லா அமைப்புகளும் முழுமையாக சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்லமுடியாதோ அது போல பாகிஸ்தானில் பத்திரிக்கைகளின் செயல்பாட்டை நிறுத்தவோ, நீதிமன்றங்கள் அவ்வப்பொழுது தங்களின் சுயாட்சி போக்கை காட்டவோ, மக்களுக்கு எல்லா உரிமைகளையும் மறுக்கும் சர்வாதிகாரமோ பாகிஸ்தானில் எப்பொழுதும் சாத்தியப்படவில்லை. இந்தியாவில் நிர்வாகம் சரியில்லை என்பதற்காக ராணுவத்திடம் ஆட்சியை கொடுக்கலாம் என்பவர்கள் பாகிஸ்தானையே பாடமாக எடுத்துக்கொள்ளலாம். ஆயுதங்களை மக்கள் கையில் கொடுத்தால் தீர்வு வந்துவிடும் என்பதை விட பயங்கரமான யோசனையும் இருக்க முடியாது. தென் ஆப்ரிக்காவில் அப்படி செய்ய முயன்று மக்கள் தனித்த தீவுகளாக வீட்டுக்குள்ளேயே பயத்தில் முடங்கிக் கிடப்பதே நடந்தது. உள்ளே இருந்தே மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே சரி.

பெருத்த சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர், சமூக சேவகர்கள் தேர்தல் அரசியலில் குதிக்கிறார்கள். ஆனால். மக்கள் அவர்களுக்கு ஓட்டளிப்பதில்லை. அவர்களை உணர்ந்து கொள்ள மக்களுக்கு திறனில்லை என்கிற வாதத்தை எதிர்கொள்கிறார் சேகர் குப்தா. மக்களை நோக்கி வருவதாக சொல்லிக்கொள்ளும் இந்த போராளிகள் பல்வேறு குறைகள் இருந்தாலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி முறையை முற்றாக நிராகரிக்கிறார்கள். அதோடு நில்லாமல், அந்த கட்சிகள் பரவலாக இருக்கும் தேர்தல் முறையில் பங்கேற்று அந்த முறையையே மாற்றப் போவதாக வெற்றுக்கூச்சல்கள் போடுகிறார்கள். பலரையும் அனுசரித்து, தேர்தல் அரசியலை மதித்து,. கட்சி என்கிற கோட்பாட்டை முற்றும் ஒழித்து விடலாம் என்று கனவுகாணாமல் கள யதார்த்தம் உணரும் வரை விடிவில்லை.

எப்படி ஊடுருவல்கள், மாவோயிஸ்ட்கள் ஆகியோரை சமாளிப்பது என்று சேகர் குப்தா முந்தைய எடுத்துக்காட்டுகளை சொல்கிறார். மிசோரமில் ஜனவரி பதிமூன்று அன்று நாற்பது வருடங்களுக்கு முன்னால் மிசோ போராளிகள் நுழைந்து ஒட்டுமொத்த போலீஸ் தலைமையகத்தை அழித்தார்கள். இந்திரா இன்னமும் கடுமையான ஜி.எஸ்.ரன்தாவாவை அனுப்பி வைத்தார்.மிசோரம் காவற்படையை பழங்குடியினரை கொண்டு அவர் உருவாக்கினார். கடும் பதிலடி தரப்பட்டது. இ.எஸ்..பார்த்தசாரதி எனும் கமிஷனர் அசாமில் கொல்லப்பட்டார். குறுக்கு வழியில் ஹிதேஸ்வர் சைக்கியாவை அசாம் முதல்வர் ஆக்கினார் இந்திரா. இரும்புக்கரத்தோடு சிறப்பான நிர்வாகத்தை அவர் சாத்தியப்படுத்தினார். இந்த இரண்டு தருணங்களின் உச்சத்தை ராஜீவ் அமைதி உடன்படிக்கையாக மாற்றிக்கொண்டார்.

இந்த போராட்டங்கள் ஆரம்பத்தில் எண்ணற்ற இழப்பை இருதரப்புக்கும் தருகிறது. போகப்போக அரசை எதிர்த்து போரிட முடியாது, அரசு வலிமையானது என்று அவர்கள் உணர நேரிடுகிறது. அதே சமயம், அரசு மாவோயிஸ்ட்கள் போர் செய்வது வீண் என்கிற உணர்வை உண்டாக்க களத்திலும். நிர்வாகத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். அமைதியை தன் பக்கம் கையோங்கி இருக்கும் சூழலில் அரசு தரவேண்டும். இல்லையேல் அதை பலவீனத்தின் அடையாளமாக பல்வேறு சமயங்களில் காணக்கூடும்.

இந்தியா பொறுமையான அரசு என்று சப்பை கட்டு கட்டுகிறவர்கள், அறுபதில் நேரு நாகாக்களை வான்படையை கொண்டு தாக்கியதை மறக்கலாம். இந்திரா கருவூலத்தை மிசோக்கள் கைப்பற்ற முனைந்த பொழுது விமானத்தாக்குதல் நடத்த வைத்தார். படேல் ஹைதரபாத் மீது ராணுவத்தை ஏவிவிட்டு அதை ‘காவல்துறை செயல்பாடு’ என அழைத்தார். கோவா மீது முப்படைகளையும் அனுப்பினாலும் நேரு அதே பாணியில் ‘காவல்துறை நடவடிக்கை’ என்றே அழைத்தார். வலிய அரசுகள் தான் பிழைக்கும் என்கிறார் சேகர் குப்தா.

கர்நாடக நீதிபதி சைலேந்திர குமார் தன்னுடைய சொத்துக்களை வெளியிட்ட நிலையில் அப்படிப்பட்ட ஒளிவுமறைவற்ற தன்மை ஏன் மற்ற நீதிபதிகளிடம் இல்லை என்று வினவுகிறார். எல்லாரின் நேர்மையை சோதிக்கும் நீதித்துறையும் அந்த கட்டத்துக்குள் வரவேண்டும் அல்லவா? அகமதி எனும் நீதிபதி யூனியன் கார்பைட் வழக்கு ஆண்டர்சன் தப்பிக்கும் வகையில் வலுவற்றது ஆக்கினார் என்கிற குற்றச்சாட்டை பொதுவெளியில் சட்ட அமைச்சர் மொய்லி வைத்தார். மேலும் சபர்வால் எனும் உச்சநீதிமன்ற நீதிபதியை மனித உரிமைகள் தலைவராக அவரைப்பற்றி செய்தித்தாள்களில் தவறான செய்திகள் அடிபட்டன என்று சொல்லி மத்திய அரசு ஒன்றரை வருடம் தலைவர் பதவியை காலியாக வைத்திருந்ததை சுட்டிக்காட்டி நீதித்துறையும், அரசும் மோதிக்கொள்வது தவறான எண்ணங்களை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்.

ANTICIPATING INDIA
PAGES: 516
HARPER COLLINS
SHEKHAR GUPTA
PRICE: 799

கூட்டணி கூத்துக்களின் வரலாறு!


இந்தியாவில் கூட்டணி அரசியல் என்கிற அறிமுக நூலை வாசித்து முடித்தேன். கூட்டணி ஆட்சிகள் மத்தியில் நிலையற்ற ஆட்சியைத் தருகின்றன என்றும், அவை நிர்வாகத்தைச் சீர்குலைக்கின்றன எனவும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. இந்த நூல் கூட்டணி அரசியலின் நீள,அகலங்களைத் தொட்டுக்காட்டுகிறது.

விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கட்சியாகவே இருந்தது. அதைவிட்டு ஏழைகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் அன்னியப்பட்டு நிற்கிறார்கள் என்பதை உணர்ந்த காந்தி வானவில் கூட்டமைப்பை போலக் காங்கிரசை உருவாக்கினார். பலதரப்பட்டவர்கள் காங்கிரசில் இருந்தபடியே இயங்க முடியும் என்கிற சூழலை விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் இயக்கம் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தது. காந்தி, நேரு ஆகியோர் தேசியம் என்கிற சொல்லாடலை அதிகமாகவோ, அழுத்தியோ சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் ஐரோப்பிய பாணியில் இந்தியா என்கிற தேசத்தை ஒற்றைப்படையான தேசியத்தைக் கொண்டு கட்டமைத்து விடமுடியாது என்கிற புரிதல் இருந்ததே ஆகும்.

இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திலும் பல்வேறு தரப்பினரின் விருப்பங்கள், கவலைகள், கோரிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் எழுந்தது..
கூட்டாட்சி என்பது வெறுமனே அதிகார அதிகரிப்பு என்பதை மட்டும் இலக்காகக் கொண்டு அமைகின்றனவா, அல்லது கருத்தியல் காரணங்களும் உண்டா என்று இந்திய அளவில் பார்த்தால் சிக்கலான ஒரு பதிலே கிடைக்கிறது. சோசியலிச பாதையில் சென்றதாகச் சொல்லிக்கொண்ட காங்கிரஸ் இடதுசாரிகளோடு தன்னை இணைத்துக் காட்டிக்கொண்டதில்லை என்பதையும், இந்துத்வா என்று கோஷமிட்டாலும் ஆட்சியமைக்கக் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் அதனைத் தள்ளிவைக்கப் பாஜக தயங்கியதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இடதுசாரிகள் மட்டும் மேற்கு வங்கத்தில் மார்க்சியம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இணைந்திருந்தார்கள் எனலாம்.

ராம் மனோகர் லோகியா தான் காங்கிரசுக்கு எதிரான பலரையும் இணைத்துக் கொள்ளும் கூட்டணியை அமைக்க அடித்தளமிட்டார். எப்படி இடதுசாரிகளான சோசியலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் ஆகியோரோடு ஜனசங்கத்தினர் இணைந்து பணியாற்ற முடியும் என்கிற வினா எழுப்பப்பட்ட பொழுது, ‘தீவிர இடதுசாரியான கிருஷ்ண மேனன், தீவிர வலதுசாரியான எஸ்.கே.பாட்டீல் ஆகிய இருவரும் ஒரே காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கின்ற பொழுது இது ஏன் சாத்தியப்படக்கூடாது?’ என்று அவர் வினவினார்.

லோகியாவின் முயற்சிகள் பலனைத் தந்தன. 67-க்கு பிந்தைய தேர்தல்கள் காங்கிரஸ் பல்வேறு மக்களின் விருப்பங்களைப் பெரும்பாலும் பிரதிபலிக்கும் கட்சி என்கிற இடத்தை இழந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டின. அந்தாண்டு மிகவும் மெல்லிய பெரும்பான்மையை மத்தியில் காங்கிரஸ் பெற்றது என்றாலும் ஒன்பது மாநிலங்களில் ஆட்சியை இழந்திருந்தது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்த ஆட்சிகள் நிலைக்கவில்லை என்பது தனிக்கதை.

லோகியாவின் அடியொற்றி ஜெயபிரகாஷ் நாராயணன் ஆண் பெண் சமத்துவம், நிற, ஜாதி ரீதியான வேறுபாட்டை ஒழித்தல், அழிவைத் தரும் ஆயுதங்கள் எதிர்ப்பு, காலனியாதிக்கம்,. அந்நிய ஆட்சி எதிர்ப்பு முதலிய ஏழு கொள்கைகளைக் கொண்டு சப்தக்ரந்தி என்கிற பெயரில் தன்னுடைய செயல்திட்டத்தை முன்மொழிந்தார். நெருக்கடி நிலைக்குப் பின்னர்ப் பல்வேறு தரப்பினரும் இந்திரா எதிர்ப்பு என்கிற புள்ளியிலும், ஜனநாயக மீட்பு ஆகியவற்றுக்காகவும் ஜனதா கட்சியின் கீழ் ஒன்றுசேர்ந்தார்கள். ஆட்சி அமைத்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். ஜனதா கட்சி இரண்டிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்கிற சிக்கலில் ஆட்சியை மொரார்ஜி தேசாய் இழக்க நேரிட்டது.

வி.பி.சிங் காலத்தில் ஒருபுறம் இடதுசாரிகள், இன்னொருபக்கம் பாஜக ஆகிய இருவரும் வெளியில் இருந்து ஆதரவு தர அவர் ஆட்சியமைத்தார். அடுத்துக் காங்கிரஸ் ஆதரவில் தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர் ஆனார்கள். இந்த இரண்டு ஆட்சிகளும் காங்கிரசின் ஆதரவு விலக்கலால் கவிழ்ந்தன. பல்வேறு கட்சியினரை இணைத்துக் கொண்டு பாஜக தன்னுடைய தீவிர வலதுசாரி முகத்தைத் துறந்து தேர்தலை எதிர்கொண்டு வென்றது. அடுத்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் இடதுசாரிகளின் ‘மதவெறி சக்திகளை’ ஆட்சிக்கு வராமல் தடுக்கும் இலக்கால் காங்கிரஸ் ஆட்சிக்கட்டில் ஏறியது. அடுத்தத் தேர்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணியினர் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெற்றது நிகழ்ந்தது.


1967 தேர்தலில் தான் எண்ணற்ற கூட்டணி ஆட்சிகள் மாநில அளவில் சாத்தியமானது. தமிழகத்தில் மட்டும் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றதால் கூட்டணி ஆட்சி இங்கே ஏற்படவில்லை. முக்கியமான சில மாநிலங்களில் எப்படிக் கூட்டணி ஆட்சி இயங்கியது என்று காண்பது சுவையாக இருக்கக்கூடும்.

மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி என்கிற பெயரில் சிபிஐ(எம்) கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியமைத்தார்கள். சிபிஐ, பார்வர்ட் ப்ளாக், புரட்சிகரச் சோசியலிச கட்சி ஆகியவற்றோடு காங்கிரஸ் கட்சியை விட்டு விளங்கி பங்ளா கட்சியைத் துவக்கிய எம்.எல்.ஏக்கள் என்று கலவையான கூட்டணியாக அந்த ஆட்சி இருந்தது. அஜோய் முகர்ஜி தலைமையிலான அரசு சிறப்பான நீர்ப்பாசனம், நிலப்பகிர்வு, கல்லூரிகளில் இடப்பெருக்கம், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்தல் என்று பல தளங்களில் சிறப்பாக இயங்கினாலும் எண்ணற்ற உட்கட்சி பூசல்களும், கூட்டணிப் பிளவுகளும் இருந்தன. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பிரிந்து போய்ப் பி.சி.கோஷ் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைத்தார். மூன்றே மாதத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது.

உத்திர பிரதேசம்:
காங்கிரசின் வீழ்ச்சியைச் சோசியலிஸ்ட்கள், ஜனசங்கத்தினர் இங்கே பயன்படுத்திக்கொண்டனர். ஆனால், அறுதிப்பெரும்பான்மைக்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஒத்துவராதே எனத் தயங்கினாலும் பீகாரில் இடதுசாரிகள், ஜனசங்கம் இணைந்து மகாமாயா பிரசாத் சிங்கை முதல்வர் ஆக்கியதைப் போல உத்திர பிரதேசத்தில் காலம் கனிந்தது.

காங்கிரசை பிளவுபடுத்திக் கொண்டு ஜன் காங்கிரஸ் என்கிற கட்சியைத் துவங்கிய சரண் சிங் அதனோடு ஜனசங்கம், சம்யுக்தா சோசியலிச கட்சி, சுதந்திரா, இடதுசாரிகள், ஜனநாயக கட்சி, சுயேட்சைகள் என்று அனைவரையும் இணைத்து சம்யுக்தா வித்யாக் தளம் என்கிற பெயரில் கூட்டணி அமைத்தார். உத்திர பிரதேசத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் ஆனார். கூட்டணி என்பதன் உண்மையான பொருள் இங்கேதான் வெளிப்பட்டது. பிற கட்சியினரையும் ஆட்சியில் இணைத்துக்கொண்டதோடு, அக்கட்சியின் தலைவர்களே யார் அமைச்சராக வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையையும் தந்தார்.

19 அம்ச குறைந்தபட்ச செயல்திட்டத்தை அறிவித்தார்கள். நில வரியை நீக்குவது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், உணவு தானியங்கள், நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது என்று பட்டியல் நீண்டது. நில வரியை நீக்க வேண்டும் என்கிற லோகியாவின் அழுதத்தை நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று சரண் சிங் ஏற்க மறுத்தார். அதனோடு இந்துத்வா அரசியலை முன்னெடுப்பதாக ஜனசங்கத்தைக் கூட்டணியின் பிறகட்சியினர் விமர்சித்தார்கள். எல்லாமும் முட்டிக்கொண்டு சரண்சிங்கின் ஆட்சி சீக்கிரமே கவிழ்ந்தது.

 

மத்திய பிரதேசம்:
மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் மூன்று வெவ்வேறு வடிவங்களில் கூட்டணி ஆட்சிகள் ஏற்பட்டு ஐந்தாண்டை இங்கே நிறைவு செய்தன. முதல் இரண்டும் சம்யுக்தா வித்யாக் தளம் தலைமையிலும், மூன்றாவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாக அமைந்தது.

ஹரியானா:
இடைநிலை சாதியினர் குறிப்பிடத்தகுந்த சக்தியாக மாறிவருகிறார்கள் என்பதன் அடையாளமாக ஹரியானாவின் அரசியல் போக்கு இருந்தது. பகத் தயாள் சர்மா, ராவ் பிரேந்திர சிங் என்கிற இரு கோஷ்டியாகக் காங்கிரஸ் பிரிந்து கிடந்தது. இருவரும் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள். சர்மா முதல்வராக ஆன அடுத்த நாளே தன்னுடைய ஆதரவாளர்கள் பலர் தோற்க அவரே காரணம் என்று கறுவிக்கொண்டு பதினான்கு எம்.எல்.ஏக்களோடு கட்சியைவிட்டு வெளியேறினார் பிரேந்திர சிங். ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தது.

காங்கிரஸ் கட்சியில் ஜாட் வகுப்பை சேர்ந்த பன்சி லால் சர்மாவுக்குப் பதிலாகக் கட்சியின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். பன்சி லால் ஆதரவோடு சர்மா காங்கிரஸ் தலைவராகவாது ஆகலாம் எனப் பார்த்தார். அதற்கும் வழியில்லை எனக் கைவிரித்தார் பன்சிலால். ஆதிக்க ஜாதியினர், இடைநிலை ஜாதியினர் இருவரையும் இணைத்துக் கூட்டணி அமைத்த பன்சிலால் முதல்வர் ஆனார். அவருக்கு ஜனசங்கம் வெளியில் இருந்து ஆதரவு தந்தது.

கேரளா:
கேரளாவில் முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஈழவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், நாயர்கள் என்று நான்கு பிரிவினரும் குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியோடு இருந்தார்கள். சிபிஐ, முஸ்லீம் லீக் ஆகியோரோடு கூட்டணி அமைத்து அறுபத்தி எழில் நம்பூதிர்பாட் ஆட்சி நடத்தினார். கூட்டுக் கலந்தாலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பங்கள், பல்வேறு கட்சிகளின் விருப்பங்கள், சமூகக் குழுக்களின் விருப்பங்கள் மோதிக்கொள்ளச் சிக்கலானது.ஒரு பல்கலையை முஸ்லீம்கள் அதிகமுள்ள கோழிகோடில் முஸ்லீம் லீக் பெற்றதோடு, தனியான மாவட்டமாக முஸ்லீம்கள் அதிகமுள்ள மலப்புரத்தை பெற்றது. இதை அயோக்கியமான அரசியல் என்று சிபிஐ விமர்சித்தது.

நிர்வாகம் என்பதில் கவனம் செலுத்த முடியாத அளவுக்குச் சீர்கேடும், சண்டையும் ஊழலும் பெருகிற்று. ஊழல்வாதிகளான அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று நம்பூதிரிபாட்டுக்கு அழுத்தம் தந்தது முஸ்லீம் லீக். ‘முடியாது, வேண்டுமென்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து கொள்ளுங்கள்!’ என நம்பூதிரிபாட் சொன்னதைச் செய்து காண்பித்தார்கள் எதிர்க்கட்சிகள். ஏழு கட்சிகளோடு கூட்டணி அமைத்து அடுத்தத் தேர்தலை அவர் சந்தித்தார் என்றாலும் ஏற்கனவே சிறப்பாக ஆட்சி செய்த வரலாற்றைக் கொண்டிருந்த உள்ளூர் காங்கிரஸ் கட்சி 111 இடங்களில் வென்று அசத்தியது.

எண்பதுகளில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுமே முறைய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி என்கிற பெயரில் கூட்டணிகள் அமைத்து தேர்தலை கேரளாவில் எதிர்கொண்டன. இன்னுமொரு முக்கியமான விஷயம் எண்பதுகளில் இருந்து மதவாத கட்சி என்று சொல்லி முஸ்லீம் லீகை தன்னுடைய கூட்டணியில் சேர்க்க மார்க்சிஸ்ட் கட்சி மறுத்துவிட்டது.

இந்த 67-70 வரையிலான காலத்தில் இந்தியாவில் சுமார் எண்ணூறு எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவினார்கள். அவர்களில் 155 பேர் அமைச்சர்களாக ஆனார்கள் என்பது எப்படிப்பட்ட கொதிப்பான அரசியல் களமாக இக்காலம் இருந்தது என்பதைக் காட்டும். எப்படியேனும் பதவியில் இருக்கவேண்டும் என்று தாவிக்கொண்டே இருக்கும் ஆட்களைக் குறிக்க ‘ஆயா ராம், காயா ராம்’ என்கிற நையாண்டி சொல்லாடல் உண்டானது.

மூன்றாவது அணி:
பாஜகவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து அமைத்த மாற்று அணியை மூன்றாவது அணி என்று குறிக்கலாம். எண்பத்தி எட்டில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் தேசிய முன்னணி என்கிற பெயரில் ஒன்று சேர்ந்தன. இந்த முன்னணி மூன்று படிகளில் வளர்ச்சி அடைந்தது என்கிறார் பிபன் சந்திரா. முதல் கட்டத்தில் இடது, வலது என்று அல்லாமல் ‘சென்டர்’ வகையைச் சேர்ந்த காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டணிக்குள் வந்தன. அதற்குப் பிறகு இடதுசாரிகள் அல்லாத கட்சிகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.

பாஜக, இடதுசாரிகளோடு தேர்தல் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொண்டதோடு, பாஜகவோடு எண்பத்தி ஐந்து சதவிகித இடங்களில் நேரடிப் போட்டியை தேசிய முன்னணியினர் தவிர்த்தார்கள். அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போனாலும் இடது, வலது என்று இருதரப்பின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, வாராவாரம் இருசாராரையும் சந்தித்து ஆட்சியை நடத்தினார் வி.பி.சிங். பாஜகவை தேசிய முன்னணிக்குள் கொண்டு வராதது, இடதுசாரிகள், பாஜக இரண்டையும் அமைச்சரவையில் சேர்க்காதது ஆகியன வி.பி.சிங் செய்த தவறுகள் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னாளில் தெரிவித்தார். தேவி லாலின் மகன் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுப் பதவி துறக்க அவரும் ராஜினாமா செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. சந்திரசேகர் தனக்கு ஆட்சிக்கட்டில் வந்து சேராதா என ஏங்கினார். அத்வானியின் ரத யாத்திரை வி.பி.சிங்கின் ஆட்சியை முடித்துவைத்தது.

வி.பி.சிங் கூட்டணியினர் யாரையும் கலந்தாலோசிக்காமல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினார். அதற்குப் பின் வெவ்வேறு கணக்குகள் இருந்தன. ஆதிக்க ஜாதியினரே அதிகாரப் புள்ளிகளாக இருக்கும் காங்கிரஸ், பாஜக இரண்டும் மண்டல் கமிஷனை விரும்பாவிட்டாலும் அப்பட்டமாக எதிர்க்க மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். இந்துத்வா அரசியலை முன்னெடுத்து சொல்லும் அத்வானியை எதிர்கொள்வது, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அள்ளுவது, கிராமவாசிகள்-நகரவாசிகள் என்கிற அரசியலை கலவரமாக்க முயன்றுகொண்டிருந்த தேவிலாலின் திட்டத்தைப் பிசுபிசுக்க வைப்பது ஆகியவே அக்கணக்குகள்.

மேலும், ஆதிக்க ஜாதியினர் வசமிருக்கும் ஜனநாயக மையங்களின் கட்டுப்பாட்டை நகர்த்தும் பணியைச் செய்யும் காலம் வந்துவிட்டது என்றும் வி.பி.சிங்குக்குத் தெரியும். தேசிய அளவிலான எழுச்சி என்று சொல்லாவிட்டாலும் அது பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் இடைநிலை ஜாதியினரை வலுப்படுத்தியதோடு ஆட்சிப்பீடம் நோக்கி செலுத்தியது. மேலும், தேசிய வளர்ச்சி கவுன்சில், அனைத்து மாநில கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டன.

ஆறு வருடத்துக்குப் பிறகு மீண்டும் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டதாகச் சொல்லிக்கொண்ட ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அதிகம் பிரபலமாக இல்லாத தேவ கவுடாவை பிரதமர் ஆக்கியது அக்கூட்டணி. காங்கிரசின் அழுத்தமும் காரணம். இடதுசாரிகள் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்கும் பொருட்டுப் பெரும்பாலும் எதிர்த்துவந்த காங்கிரசுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தந்தார்கள்.

அடுத்தத் தேர்தலில் அதுவரை தன்னோடு கருத்தியல் ரீதியாக ஒத்துப்போன சிவசேனா முதலிய கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்பதில் இருந்து இறங்கி வந்து திமுக, தெலுங்கு தேசம் முதலிய பல்வேறு கட்சிகளோடு கூட்டணி அமைத்த பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. எந்தச் சிக்கலுமில்லாமல் ஆட்சி நடக்கத் தன்னுடைய தீவிர இந்துத்வ கொள்கைகளை அக்கட்சி ஓரமாக வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் ஒத்துழைத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய வழிகோலியது.

குஜராத் படுகொலைகளுக்குப் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆறு வருடங்களுக்கு முன்னர்ப் பஞ்ச்மாரியில் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற தன்னுடைய தீர்மானத்தைத் தூக்கி வீசிவிட்டு கூட்டணி ஆட்சிக்கு தயார் என அறிவித்தது காங்கிரஸ். அதிமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை முறிந்து திமுகவோடு அது கைகோர்த்தது. ஆந்திராவில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்ததோடு, தமிழகத்தில் கிடைத்த முழு வெற்றி காங்கிரசை இடதுசாரிகளின் மதவெறி சக்தி எதிர்ப்புக் கொள்கையால் கிடைத்த ஆதரவு ஆட்சிக்கட்டில் ஏற்றியது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரிகள் ஆதரவை விளக்கிக் கொள்ளக் காரணமானாலும், நல்ல ஒரு ஆட்சியைத் தருவதற்கு இடதுசாரிகளின் மேற்பார்வை, ஆலோசனைகள், வழிகாட்டுதல் ஆகியன பயன்பட்டன.

அடுத்தத் தேர்தலில் தன்னுடைய பாரம்பரிய ஓட்டு வங்கியான நடுத்தர வர்க்கத்தினர், ஆதிக்க ஜாதியினர், நகர்ப்புற மக்கள் ஆகியோரிடம் தன்னுடைய செல்வாக்கை பாஜக காக்கத் தவறியது, ஏற்கனவே சிறப்பாக ஆட்சி செய்த ஐந்து வருடங்கள் ஆகியன காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தன. இடதுசாரிகள் தான் பலத்த அடி வாங்கியிருந்தார்கள். கூட்டணி ஆட்சி தான் இனிமேல் இந்தியாவின் தலைவிதி என்று கருதப்பட்ட சூழலில் வளர்ச்சி, புது நம்பிக்கை, மிதவாத மதவாதம் ஆகியவற்றை இணைத்து மோடி தனிப்பெரும்பான்மையை முப்பது வருடங்கள் கழித்துப் பெற்றுக் காட்டினார். கூட்டணி அரசியல் இன்னமும் புரிபடாத புதிர்தான்!

இந்தக் கூட்டணி ஆட்சிகள் முழுக்க இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவை என்கிற வாதம் சரியல்ல. காங்கிரஸ் பல்வேறு மொழியினர், ஜாதியினர் ஆகியோரின் அச்சங்கள், தேவைகள் குறித்துப் பெரிதாகச் செவிமடுக்காத சூழலில் தான் பிராந்தியக் கட்சிகள் செல்வாக்கு பெற்றன. கூட்டாட்சி தத்துவம் இவற்றால் பெருமளவில் பலம் பெற்றது என்பதும், 356 சட்டப்பிரிவு கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது குறைந்ததும், பிரிவினைவாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் நிர்வாகத்தில் செம்மையாக ஈடுபடும் ஜனநாயக பரவலும் சாத்தியமானது என்பதிலேயே இந்தியா மாதிரியான பன்முகத்தன்மையும், வேறுபாடுகளும் நிரம்பிய நாட்டுக்கு கூட்டணி ஆட்சியின் அவசியத்தை, தேவையை உணரலாம்.

ஆசிரியர்: BIDYUT CHAKRABARTY
OUP வெளியீடு
விலை: 295
பக்கங்கள்: 214

மதம், அரசியல், வன்முறை- இந்துத்வா!


ராம் புனியானி அவர்கள் தொகுத்த ‘religion,power and violence’ என்கிற நூலை வாசித்து முடித்தேன். இந்துத்வ அரசியல் தன்னை எவ்வாறு சமகாலத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல் இது. சோவியத் ரஷ்யா இருந்தவரை அதனை எதிரியாகக் காட்டி அமெரிக்கா உலக அரசியலில் இயங்கியது. அதன் வீழ்ச்சிக்குப் பிறகு எண்ணெய் வளமிகுந்த நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடரவும், உலகில் தன்னுடைய இருப்பைஉறுதிப்படுத்திக்கொள்ளவும் வசதியாக அதற்கு ‘இஸ்லாம் மீதான போர்’ என்பது பயன்பட்டது. இஸ்லாம் மதமே வன்முறைமயமானது போன்ற வாதங்களும், இஸ்லாமில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் என்கிற பார்வையும் முன்வைக்கப்பட்ட சூழலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அந்நியர்கள் அவர்கள் ஆதிக்க இனமான இந்துக்களுக்கு அடங்கியே நடக்க வேண்டும் என்று இந்துத்துவாவின் முழக்கம் இன்னமும் வலுப்பெற்றது.

இந்து மதத்தைப் பொறுத்தவரை மைய சனாதன மதம் சாய்பாபாவை பார்ப்பனமயமாக்கியது, பழங்குடியினர் தெய்வமான பூரி ஜெகன்னாதரையும் தனதாக்கிக் கொண்டது. சிறு தெய்வங்களைப் பெருதெய்வங்களாகவோ, அல்லது காணடிக்கவோ செய்தது. பக்தி இயக்கம் வடமொழியின் ஆதிக்கத்தில் இருந்து விலக்கி பக்தியை மக்களின் மொழிகளான தமிழ், அவாதி, மராத்தி ஆகியவற்றில் பரப்பியது. பிராமணிய எதிர்ப்பும் அதன் பேசுபொருளானது. ஒரே தெய்வம் உண்டு என்று அவை முழங்கின; இஸ்லாமிலும் இந்தியாவைப்
பொறுத்தவரை சூபிக்கள் இந்த மண்ணின் கலாசாரக் கூறுகளை உள்வாங்கி இஸ்லாமை பரப்பினார்கள். ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை அழிப்பு என்பவற்றை முன்னிறுத்தி பக்தி இயக்கங்கள் தோன்றினாலும் உயிர்க்கொலையின்மை, ஒரே கடவுள் மீதான நம்பிக்கை என்று தங்களை அறியாமலே அவை காலப்போக்கில் சனாதன தர்மத்தை வலுப்படுத்தின.

நேருவிய சோசியலிசம் மக்களின் வறுமையைப் போக்க பெருமளவில் தவறிய நிலையில் அதற்கு மாற்றான பொருளாதார முறையைக் காங்கிரசோ, இடதுசாரிகளோ முன்வைக்கவில்லை. காங்கிரசில் இருந்த எஸ்.கே.பாட்டீல் அப்படியொரு யோசனையை முன்னெடுத்த போதும், அடுத்து வந்த தேர்தலில் அவர் தோற்றுப்போனதால் அது சாத்தியமாகாமல் நின்று போனது. இடதுசாரிகள் தங்களுக்கான அரசியல் தருணங்களைக் கோட்டை விட்டார்கள். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அவர்கள் பெருமளவில் அரசுக்கு ஆதரவு தந்தார்கள், அல்லது மவுனம் சாதித்தார்கள். விடுதலை இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் போராட்டமான ரயில்வே ஊழியர் போராட்டம் இடதுசாரிகள் நடத்தியதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்,

ஜனசங்கம் மட்டுமே மதக்கலவரங்களுக்குக் காரணம் என்று ஒற்றைப்படையாக முடித்துவிட முடியாது. பிவாண்டி, சூரத், பீகார் ஷெரிப் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் காங்கிரஸ் அரசுகளின் கைங்கரியம் உண்டு என்பது தான் உண்மை. உச்சபட்சமாக இந்திராவின் படுகொலையின் பின்னர்ச் சீக்கியர்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது. ஒரு மாற்றுப் பொருளாதாரத்தை முன்வைக்காதது, காங்கிரசின் போலி மதச்சார்பின்மை ஆகியவை இந்துத்துவ அரசியலை வளர்த்தெடுக்கக் களம் அமைத்துக் கொடுத்தன.

இஸ்லாம் வாளால் தான் இந்தியாவில் பரவியது என்று வலதுசாரிகள் தொடர்ந்து சொல்கிறார்கள். இந்து ஆலயங்களை அவர்கள் மதக்காரணங்களுக்காக அழித்தார்கள் என்று மட்டுமே அழுத்திச் சொல்லும் அவர்கள் அதில் பெரும்பாலும் கொள்ளையிடும் எண்ணமும், அரசியல் காரணங்களும் முந்தியிருந்தன என்பதை மறைக்கிறார்கள். காஷ்மீரின் அரசன் ஹர்ஷர், பர்மர் அரசனான சுபவர்மன் ஆகியோர் எண்ணற்ற இந்து, சமண ஆலயங்களை அழித்தது சொல்லப்படுவதில்லை. சிவாஜியின் கப்பற்படையில் முக்கியத் தளபதிகளான தௌலத் கான், சித்தி மிஸ்ரி, அவரின் அயலுறவு செயலர் முல்லா ஹைதர் என்று பலரும் இஸ்லாமியர்கள் என்பது சொல்லப்படாது. இந்துக்கள் இஸ்லாமியர்களால் பெருமளவில் மதமாற்றப்பட்டார்கள் என்கிற வாதத்தை நிருபிக்கும் புள்ளிவிவரங்கள் இல்லை, மாறாக இஸ்லாமியர்களின் ஆட்சி என்று பொதுவாகச் சொல்லப்படும் சுல்தானிய, முகலாய ஆட்சிக்குப் பின்னரே வெள்ளையர் காலத்தில் தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகியது. தென்னகத்தில் இஸ்லாம் வியபாரத்தாலும், வடக்கில் சூபிக்களாலும் பெருமளவில் பரவியது.

இஸ்லாம் ஒற்றைப்படையான மதம் என்றும், அதில் எந்தப் பன்முகத்தன்மையும் இல்லையென்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. உள்ளூர் அரேபிய (இஸ்லாமுக்கு முந்தைய) கலாசாரங்களான சுன்னத், பழங்குடியின மரபுகள் சேர்க்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தேவதைகள், தீய ஆவிகள் ஆகிய மைய இஸ்லாமின் நம்பிக்கைக்கு மாறான கூறுகள் அந்தந்த பகுதிகளில் இணைந்து கொண்டன. ஆங்கிலேயர் தங்களின் இனமே உயர்ந்தது என்கிற போக்கில் வாதங்களைக் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மூலம் வைத்த பொழுது அதை எதிர்க்க ஒற்றைப்படையான இந்து மதத்தை உயர்ஜாதி குறிப்பாகப் பார்ப்பன அறிவுஜீவிகள் முன்னிறுத்தினார்கள். ஜேம்ஸ் மில் வரையறுத்த மதங்களின் அடிப்படையில் வரலாற்றைப் பிரித்துப் பார்க்கும் போக்கை உள்வாங்கிக் கொண்டார்கள். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பண்பாடுகள் நிராகரிப்புக்கு உள்ளாகின.

இந்துமதம் என்பது ஒற்றைப்படையானதாகச் சமைக்கப்படும் வேலைகள் துவங்கின.
சூபி பிரிவு பௌத்தம், வேதாந்தம், யோகம் ஆகியவற்றின் பண்புகளை உள்வாங்கிக் கொண்டது. கபீர் பந்தி எனும் கபீரின் பிரிவு இந்து-முஸ்லீம்களை ஒன்று சேர்த்தது. சூபி துறவிகளான பிர்களை வழிபடுவதும் ஏற்பட்டது. இஸ்மாயிலிஸ் எனும் இஸ்லாமின் பிரிவு இந்து மதத்தின் பல்வேறு கூறுகளைத் தனதாக்கி கொண்டது. அதன் கோஜா பிரிவு ஓம் என்பதற்கு இணையாக அலி என்பதைக் குறிப்பிட்டது. கல்கி அவதாரம் அரேபியாவில் தோன்றியது என்றும் அறிவித்தது. குரானை அதர்வ வேதத்தோடு ஒப்பிடுவதும், நபிகளை மகாதேவருடனும், அலியை விஷ்ணுவுடனும் ஒப்பிடுவதும் அந்தப் பிரிவின் வழக்கமாக இருந்தது.

வங்கத்தில் சூபிக்களும், வைணவ பக்தி இயக்கத்தினரும் ஜாதியை எதிர்த்தார்கள். மலாதார் பாசு எனும் காயஸ்த வகுப்பை சேர்ந்த கவிஞரை பர்பக் எனும் சுல்தான் ஸ்ரீ கிருஷ்ணவிஜயா நூலை எழுத ஆதரித்தார். ஈட்டன் எனும் வரலாற்று அறிஞர் இஸ்லாம் கான் எனும் முகலாய ஆளுநர் வங்கத்து இந்துக்களை மதமாற்றுவதை அனுமதிக்கவில்லை என நிறுவுகிறார். சத்யா பிர், மானிக் பிர் முதலிய துறவிகள் இரண்டு மதத்தவராலும் வங்கத்தில் வழிபடப்படுகிறார்கள். சுந்தரவனக்காடுகளில் பான் பீபி எனும் தெய்வம் இஸ்லாமியர், இந்துக்கள் இருவருக்கும் உரியவர். இஸ்லாமியர்கள் அந்தத் தெய்வத்துக்கு மூலிகை கிரீடம், பின்னப்பட்ட முடி, கழுத்து சங்கிலி, குர்தா, பைஜாமாக்கள் அணிவிக்கிறார்கள். இந்துக்களின் இடத்தில் அவள் கிரீடம், பிற ஆபரணங்கள் அணிந்து காணப்படுகிறாள். வடக்கு வங்காளத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் இருவரும் கங்கை மாதாவை மீன்பிடிக்கப் போகையில் வழிபடுகிறார்கள். தக்ஷிண ரே என்கிற வனதெய்வமும் இருவரின் பொது வழிபாட்டுக்கு உரியது. சௌதி அரேபியாவின் இஸ்லாமியர்களைப் போல் அல்லாமல் மணிப்புரி இஸ்லாமியர்கள் பெற்றோரின் உடன் பிறந்தவரின் மகன்/மகளை மணக்கும் வழக்கமில்லை, கேரளாவின் மாப்பிள்ளைமார்கள் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்களைப் போல் இல்லாமல் தாய்வழி மரபையே பின்பற்றுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.-ம், விடுதலைப் போராட்டமும்:
இந்திய விடுதலைப் போரில் பங்காற்றியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்லிக்கொள்கிற வகையில் அது பெரிதாக எதனையும் செய்யவில்லை என்பதோடு, ஆங்கிலேயருக்கு ஆதரவான போக்கையே பெரும்பாலும் எடுத்துள்ளது என்பதும் கசப்பான உண்மை. ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். தலைவராக விடுதலைப் போரில் பங்காற்றினார் என்று சொன்னாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்குகொண்ட அவர் காந்தியின் வழிகாட்டுதலுக்கு மாறாக வக்கீல் வைத்து வாதாடி சீக்கிரமே சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

உப்புச் சத்தியாகிரகத்தில் பங்குகொண்ட பொழுது அங்கே சிறைக்குள் போய் அமைப்புக்கு ஆள் திரட்டவே அவ்வாறு சிறை புகுந்ததாக அவர் எழுதியுள்ளார். மற்ற எந்தப் புள்ளியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான சுவடுகள் எதுவுமில்லை. காங்கிரஸ் கட்சியை முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த செயல்படுகிற ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்று குற்றஞ்சாட்டிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்தப் பிரிவினையைத் தூண்டிவிட்டு குளிர் காய்ந்த ஆங்கிலேயரை எதுவுமே விமர்சிக்கவில்லை என்பதும், கிறிஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறிய இந்நாட்டு மக்களை அந்நியர்கள் என்று கூறிவிட்டு, அவர்களை விட அதிக அந்நியமும், அயோக்கியத்தனமும் மிகுந்த ஆங்கிலேயருக்குச் சலாம் போட்ட சரித்திரம் ஆர்.எஸ்.எஸ். எனும் அற்புத அமைப்பினுடையது.

பட்டியல் ஜாதியினர், பெண்கள்,பழங்குடியினர் ஆகிய விளிம்புநிலை மக்கள் சார்ந்து ஆர்.எஸ்.எஸ். செயல்படும் விதம் இன்னொரு அதிர்ச்சி அத்தியாயம். பட்டியல் ஜாதியினரை அம்பேத்கர் நவீன மனு என்றும், இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தில் இணைந்தவர் என்று சொல்லியும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் பயன்படுத்திக்கொள்கின்றனர். குஜராத் படுகொலைகளில் பழங்குடியினர், தலித்துகள் ஈடுபடுத்தப்பட்டது இதற்கு ஒரு ஆதாரம். ரக்ஷாபந்தன், ராமநவமி முதலிய விழாக்கள் தலித் குடியிருப்புகளில் கொண்டாடுவது, ஜெய் பீம் என்று சொல்லி பாடம் நடத்த ஆரம்பித்து இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தோடு முடிப்பது இவர்களின் பாணி.

அது ஏன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் எழுந்தது என்கிற கேள்வி எழலாம். இதற்கு ஆய்வாளர் பிரளய் கானுங்கோ பதில் தருகிறார்,’ மகாராஷ்டிராவில் படித்த ஆதிக்கச் சாதியினரில் (பார்ப்பனர் என்று வாசிக்க) நான்கில் ஒருவர் இங்கேயே இருந்தார்கள். இங்கே இருந்து ஹிதவாதா, மகாராஷ்டிரா முதலிய இதழ்கள் வெளிவந்தன. பல கல்விநிலையங்கள் இருந்தன. இடைநிலை சாதியினர் எழுச்சி பெற்றதால் போன்ஸ்லே முதலிய அரசர்களிடம் உயர் பதவிகளில் இருந்த பிராமணர்கள் எப்படியேனும் தங்களின் இடத்தை மீட்க விரும்பினார்கள். அம்பேத்கர் தலைமையில் பட்டியல் ஜாதியினர் திரண்டதும்

அவர்களின் செயல்வேகத்தை அதிகப்படுத்தியது’.
பழங்குடியினரை கிறிஸ்துவ மத மாற்றத்தில் இருந்து தாய்மதத்தை நோக்கி திருப்பி வனாஞ்சல் என்கிற பெயரில் களம் புகுந்தன சங்க பரிவாரங்கள். ஜார்கண்டில் உள்ள பலமு மாவட்டத்தில் இருந்தே அயோத்தியின் கரசேவைக்கு அதிகபட்ச பழங்குடியினர் அனுப்பட்டார்கள் என்கிற செய்தியை வாசிக்கிற பொழுது காலாட்படையாக அப்பாவிகள் எப்படி வலைவிரித்துச் சிக்கவைக்கப்படுகிறார்கள் என்கிற வேதனையே ஏற்படுகிறது.

பாரதமாதா, கவ்மாதா, கங்காமாதா என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்டு நிகழ்த்திய விழாக்கள் தந்த உந்துதலில் தான் பாஜக கரசேவையில் ஈடுபட்டது. மேலும், குஜராத் ஜில்லா பரிஷத் தேர்தலில் 27% இடங்களை மட்டுமே வென்றதால் தான் முஸ்லீம் மீதான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் விளைவாகக் குஜராத்தில் பெரும் வெற்றியை பாஜக பெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கிறிஸ்துவர் என்பதால் அதைக்கொண்டும் கிறிஸ்துவ வெளிநாட்டு சக்திகள் இந்தியாவைக் கைப்பற்ற முயல்கின்றன என்று பிரச்சாரம் செய்தன இந்துத்வா அமைப்புகள்.

பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்து, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. அறுபதாயிரம் பெண்களைக் கும்ப மேளாவில் ஆண்கள் விட்டுவிட்டுப் போனது நடந்தது. முட்டா என்கிற பெயரில் தற்காலிக திருமணங்களை இஸ்லாமிய குருமார்கள் நடத்துகிறார்கள். சதி முறையை ஆதரிக்கும் உலக அமைப்பின் தலைமையகம் சிக்காகோவில் உள்ளது. பொதுச் சிவில் சட்டம் என்பதில் இஸ்லாமியப் பெண்களை இணைக்காமல் அவர்களுக்கான சமத்துவத்தை அடிப்படைவாதிகள் தொடர்ந்து மறுக்கிறார்கள். பர்தா அணியும் வழக்கமில்லாத காஷ்மீர் பெண்கள் அவற்றை அணியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதை மீறிய மூன்று பெண்களை ரஜுவ்ரி மாவட்டத்தில் சுட்டுக்கொண்டார்கள். லஷ்கர் இத் தொய்பா அமைப்புக் காஷ்மீரில் பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்று அறைகூவல் விடுத்தது.

தலித்துகளுக்கு எதிரான பார்வையையே தன்னகத்தே இந்துத்வா கொண்டுள்ளது. அகிலப் பாரதிய வித்யா பரிஷத் எனும் பரிவார அமைப்பு குரு சபைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இடத்தைப் பெற வேண்டும், பிராமணிய சமூக அமைப்பு ஏற்பட வேண்டும், ஏழைகளுக்கு ஓட்டுரிமை கூடாது, மேல்தட்டினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும், சிறுபான்மையினர் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு ‘அற்புதமான’ கனவுகளை முன்வைத்தது. திலகர் காலத்தில் இருந்து சித்பவன பிரமணர்கள் பெஷ்வாக்கள் காலத்தில் தலித்துகளைக் கழுத்தில் துடைப்பத்தோடு, சட்டியோடும் அலையவிட்ட கொடிய காலத்தை நோக்கி திருப்பவே பேராவல் கொண்டார்கள். தாங்களே உயர்ந்த இனம் என்கிற இனப்பெருமையை வேறு திலகர் முன்வைத்தார். பூரி சங்கர மடத்தின் மடாதிபதி, மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பழங்குடியினர், தலித்துகள் மலிவான விலையில் கோயில்களைக் கட்டி அங்கே வழிபட வேண்டும், மற்ற இந்துக்களோடு மண உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்று பேசினாலும் அது யாருக்கான வளர்ச்சியாக இந்துத்வா கனவு காண்கிறது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

தொடர்ந்து பொதுச் சிவில் சட்டம் குறித்துப் பேசும் பலரும் இஸ்லாமியர் இடையே நடக்கும் பலதார திருமணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைச் சரி செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிற அதே சமயம் வேறு சில கவலைதரும் தகவல்களையும் கணக்கில் கொள்ளவேண்டி இருக்கிறது. இந்தியாவில் அதிக இருதார திருமணங்கள் இந்துக்களிடையே காணப்படுகிறது. இருதார திருமணங்கள் செய்த ஆண்கள் சரளா முட்கல், ப்ரியா பாலா முதலிய வழக்குகளில் ஹோமம், சப்தபடி முதலிய பிராமணிய திருமணச் சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் இரண்டாவது திருமணம் திருமணமே அல்ல என்று கச்சிதமாகக் கணவன்மார்களை நீதிமன்றம் விடுவித்தது.

ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் தர கோர்ட் உத்தரவிட்டும் ராஜீவ் காந்தி இஸ்லாமிய சட்டத்தை மீண்டும் பழமைக்குக் கொண்டு செல்லும் வகையில் சட்டம் இயற்றினார். ஆனால், தற்போதைய தீர்ப்புகள் அந்தச் சட்டத்தை இஸ்லாமிய பெண்களுக்குச் சாதகமாகக் கோர்ட் பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.

இஸ்லாமியர்கள் கல்வி கற்பது என்றாலே நமக்கு மதராஸாக்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. ஆனால், ஷா வாலியுல்லா, சையது அகமது கான், தியோபந்திக்கள், அலிகார் பல்கலைக் கழகம், ஜமியா மிலியா இஸ்லாமியா என்று பல்வேறு நபர்கள், அமைப்புகள் இஸ்லாமியர்களிடையே கல்வியைக் கொண்டு சேர்க்க பாடுபட்டார்கள்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ள முப்பதுக்கு முந்தைய காலத்தில் மெட்ராஸ், வங்காளம் ஆகிய பகுதிகளில் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் அதிகச் சதவிகிதத்தில் கல்வி பெற்றுள்ளது புலனாகிறது. காரன்வாலிஸ் நிரந்தர நில சீர்திருத்தம் கொண்டுவந்து பல இந்துக்களை ஜமீன்தார்கள் ஆக்கி இஸ்லாமியர்களை வேலை இழக்க செய்தார். பாரசீகம் பெற்றிருந்த அதிகாரப்பூர்வ இடம் ஆங்கிலத்துக்கு வழங்கப்பட்ட பின்பு பல இஸ்லாமியர்கள் பணி இழந்தார்கள். விடுதலைக்கு முன்னால் பல்வேறு நிதி வளம் மிக்க, கல்வி அறிவு பெற்ற இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் சென்று சேர்ந்ததும் நடந்தது. இங்கே இந்தியாவில் இயங்கிய இஸ்லாமிய கல்வி இயக்கங்கள் மேல்தட்டு இஸ்லாமியர்ளான அஷ்ரப்களையே பெருமளவில் குறிவைத்தது. இன்றைக்கு ஒரு வலுவான தலைமை, மத்திய வர்க்கம் இல்லாமல் இஸ்லாமியர்கள் கல்வியில் பெருமளவில் பின்தங்கியிருக்கிறார்கள்.

தனிகா சர்க்காரின் ஆய்வுகள் பெண்கள் எவ்வாறு பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்க் கலவரங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பெருமளவில் இந்துத்வ அமைப்பினரால் ஈடுபடுத்தப்பட்டனர் என்று காட்டுகிறது. அம்பேத்கரின் மண்ணான மகாராஷ்ட்ராவில் தலித் தலைவர்களே ஜீவன்சக்தி-பீம்சக்தி என்று சொல்லி இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்துள்ளார்கள்.
பல்வேறு பேராசிரியர்கள் எழுதியிருக்கும் இந்த நூல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆனதால் சில பகுதிகள் தேவைப்படததாகத் தோன்றலாம். மற்றபடி முக்கியமான ஒரு தொகுப்பு.
விலை: 380
SAGE PUBLICATIONS
RELIGION,POWER AND VIOLENCE-Expression of politics in contemporary times
Edited by: Ram Punyani

தலித்துகளின் போலிக்காவலரான இந்துத்வம்


Fascinating Hindutva நூலை வாசித்து முடித்தேன். எந்த இந்து மதத்தினுள் தலித்துகள் ஒடுக்கப்பட்டும்,பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளானார்களோ அதே இந்து மதத்தின் அடையாளங்கள் நீங்கள்,அதன் பாதுகாவலர்களே தாங்கள் தான் என்று சொல்லி அவர்களின் ஓட்டுக்களை கவர பி.ஜே.பி. நடத்தும் சாமர்த்திய அரசியலை கள ஆய்வு,நேர்முகங்கள்,அவர்களின் தேர்தல் பிராசார யுக்திகள் ஆகியவற்றின் மூலம் அற்புதமாக இந்நூல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

90 களின் ஆரம்பத்தில் ராமரை முன்னிறுத்தி தன்னுடைய தேர்தல் அரசியலை பி.ஜே.பி. கட்டமைத்தது. அப்பொழுது தொலைக்காட்சியில் ஓடிய ராமாயணம் சீரியல் பெரிய உத்வேகத்தை அந்த அரசியலுக்கு தந்தது. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் உயர் ஜாதியினர் இணைந்து கிச்சடி சாப்பிடும் நிகழ்வுகள்,அவர்களுக்கென்று சிறப்பு பள்ளிகள் என்று அவர்களை தங்களோடு இணைக்கும் முயற்சிகளை பி.ஜே.பி. செய்தது. ஆனால்,ஆதிக்க ஜாதியினர் அவர்களை தங்களோடு இணைத்து கொள்ள மனம் ஒப்பாதது மற்றும் ராம ஜென்ம பூமி அரசியலின் நீர்ப்பு ஆகியன பி.ஜே.பி.யின் பாணியை மாற்றிக்கொள்ள வைத்தது. 

மாயாவதி செருப்பால் பிராமணர்களை அடிப்போம் என்று சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்ததை விடுத்து,அவர்கள் நம்மை முன்னடத்தி செல்லும் யானைகள் போன்றவர்கள் என்று தன்னுடைய அரசியல் அமைப்புக்குள் அவர்களை இணைத்து கொண்டார். பி.ஜே.பி. உள்ளுக்குள் வாருங்கள் என்றது எடுபடாமல் போகவே ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தது. பழங்காலத்தில் இந்து மதத்தை காக்கவும்,இந்தியாவை தாக்கிய இஸ்லாமியர்களை எதிர்த்து போரிடுகிற வேலையையும் செய்தவர்கள் நீங்களே ! என்று ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் கதைப்பாடல்கள் மூலமும்,வரலாற்றை திரித்தலின் மூலமும் அரசியல் செய்ய ஆரம்பித்தது. 

இஸ்லாமிய அரசர்கள் மற்றும் தலித்துகள் சில புள்ளிகளில் சண்டையிட வேண்டிய சூழல் இருந்திருந்தாலும் பெரும்பாலும் அமைதயாகவே அவர்களுக்கிடையே ஆன வாழ்க்கை இருந்திருக்கிறது. அதை குலைக்கும் வகையில் விஷம பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. ராஜ ஹரி சந்திராவின் நாடகத்தோடு லைலா மஜ்னு நாடகமும்,ஷிரி பர்ஹத் நடந்து கொண்டிருந்த ஊர்களில் அவையெல்லாம் இஸ்லாமிய நாடகங்கள் என்று அவ்வூர் ஆர்.எஸ்.எஸ். தலைகள் நோ சொல்லிவிட்டார்கள். 

சுகல்தேவ் என்கிற அரசன் கொள்ளைக்காரனாகவும் அவனிடம் இருந்து மக்களை காப்பற்றியவரான காஜி மியானை வில்லன் போல சித்தரித்து சுகல்தேவை நாயகன் ஆக்கி மக்களை ஏமாற்றுகிற வேலையை செய்வதோடு நில்லாமல் காஜி மியான் தர்காவுக்கு தொழுநோய் குணமாகிறது என்று போய்க்கொண்டு இருந்த இந்துக்களையும் தடுத்து நிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அனுமானை வணங்கிவிட்டே மல்யுத்தம் சொல்லித்தருகிற பண்பை இஸ்லாமிய மற்றும் இந்து மல்யுத்த வீரர்கள் வைத்திருப்பதை மறைத்து அனுமன் மற்றும் வானர சேனைகள் தலித்துகள் தான் ! அவர்கள் மூலமே ராமன் வென்றான் என்றொரு கதை ஒரு பக்கம் என்றால்,நிஷாத் வகுப்பை சேர்ந்த குகன்,கட்டைவிரல் கொடுத்த ஏகலைவன் மகாபாரதம் இயற்றிய வியாசர்,ராமாயணம் எழுதிய வால்மீகி,ஐம்பதாயிரம் முஷாகர்கள் இருக்கும் வகுப்பை சேர்ந்ததாக சொல்லப்படும் சபரி ஆகிய அனைவரும் இந்து மதத்தை காத்த தலித்துகள். ஆகவே,நீங்கள் எங்களுடன் இணைந்து விடுங்கள் என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள். 

அம்பேத்கரை நவீன மனு என்று புகழ்ந்து அவர் எதிர்த்த இந்துத்வத்துக்குள் அவரையும் இணைத்ததோடு நில்லாமல்,பிராம்மணியத்தை தீவிரமாக எதிர்த்த புலே உங்களை மதம் மாற சொல்லவில்லை என்பதிலேயே அவரும் இந்து மதக்காவலர் என்று உணர்ந்து கொள்ளுங்கள் என்பதாகட்டும்,புத்தர் மகா விஷ்ணுவின் அவதாரம் எதற்கு மதம் மாறிக்கொண்டு என்றும் பரப்புரைகள் நிகழ்கிறது. மதம் மாறினால் இட ஒதுக்கீடு தராதீர்கள் என்று அத்வானி முழங்குவதை இந்த பின்னணியோடு இணைத்தே பார்க்க வேண்டும். 

தலித்துகள் என்கிற பதத்தையே உபயோகிக்க பெரும்பாலும் மறுக்கிற இந்த காவி நபர்கள் இஸ்லாமியர்கள் வஞ்சித்த மக்கள் தலித்துகள் என்கிற அர்த்தத்தில் வஞ்சித்கள் என்கிற பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் போகிற பொழுது அந்தந்த பகுதி ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக இருக்கும் புராண கதாபாத்திரத்தை இந்து மதத்தின் காவலர் என்று சொல்லி ஓட்டுக்களை கவர முயற்சிக்கிற அரசியல் பாணி இன்னமும் தொடர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை மைய சமூக நீரோட்டத்தில் இணைக்க முயற்சிகள் எடுக்காமல் அவர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்யப்பார்க்கும் இந்துத்வாவின் தமிழக முகங்களும் அதையே செய்வதை நீங்கள் கவனிக்கலாம். அவசியம் படிக்க வேண்டிய சிறிய நூல் 

ஆசிரியர் : பத்ரி நாராயண் 
sage வெளியீடு 
பக்கங்கள் : 216 
விலை : 425

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் !


விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர்.எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார் மனிதர்;கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை பிடிக்க முடியாததால் பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார்.இந்திராவின் மறைவுக்கு பிந்திய
ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார்,அம்பானிக்களை நோண்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை
கொண்டு விசாரித்தார்.

காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். .போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.

தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின் நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார் ; காஷ்மீரை இன்னமும் ரத்தம் தோய்ந்த பூமியாக அவரின் செயல்கள் ஆக்கின.

இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். தன் நிலத்தில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுத்த அவர் மண்டல் கமிஷனின் பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன
.சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார்.

ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது , மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். தபோவனத்து முனிவர் போல வாழ்ந்த அவர் இதே நவம்பர் 26 அன்று  ஐந்து வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார்