‘Jhund’ – சுவர்களைத் தகர்த்தெறியும் கலை


நாகராஜ் மஞ்சுளேவின் ‘Jhund’ திரைப்படத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். நாக்பூரின் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை ‘கால்பந்து’ எப்படி மாற்றுகிறது என்கிற ஒரு வரிக்கதையாக இப்படத்தை கடந்துவிட முடியாது. அமிதாப் பச்சன் பேராசிரியர் விஜய் வேடத்தில் இன்னுமொரு  ‘மீட்பர்’ வந்து ஈடேற்றும் படமும் அல்ல. இவற்றைத்தாண்டிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை நுண்மையான திரைமொழியில் நாகராஜ் தருகிறார். 


இப்படத்தின் உச்சத்தருணம் ‘தோற்கப்பிறந்தவர்கள்’ பெரும் வெற்றியைப் பெறுவதாக இல்லை. அது முதல் பாதியிலேயே நிகழ்ந்து விடுகிறது. அதற்கடுத்து வறுமை, அநீதி, சாதி, சமூகப்புறக்கணிப்பு, அரசாங்க ஒதுக்கல், ஏளனம் ஆகியவற்றால் ஆன சுவர்களைக் கடந்தேறும் பயணமே பல்வகை கதைகளால் கண் நிறைக்கிறது. அசலான மனிதர்கள் அவர்களாகவே திரையில் மின்னுகிறார்கள்.  கொண்டாட்டமும், கழிவிரக்கம் கோராத கம்பீரமும் அவர்களின் தொனி, பண்பு, வாழ்வினில் ஒளிர்கிறது. 


ஆவணப்படங்களாக, புள்ளிவிவரங்களாக மட்டுமே கடக்கக்கூடிய ஆதிக்க சாதி, ‘படித்த’, ‘மேம்பட்ட’ பொதுபுத்தியிடம் இப்பெருங்கூட்டம் யாசகம் எந்த மறுக்கிறது. இருக்கிறானா, செத்தானா என கவலைப்படாமல் ஆவண ஆதாரங்களில் மட்டுமே குடிமக்களை அளவிடும் அதிகார வர்க்கத்தை எள்ளி நகையாடியபடியே எதிர்கொள்கிறது. ‘உங்களின் பாரதம் கம்பிகளால், அநீதிகளால், புறக்கணிப்புகளால் ஆனது. எங்களுடையதே அசலான, உண்மையான திறமைமிக்க பாரதம். ‘ என நரம்புபுடைக்க வீரவசனங்கள் இல்லாமலே கடத்தப்படுகிறது. ‘நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என அத்தனை அழகியலோடு, நெகிழ வைக்கும் தருணங்களின் வழியே நெக்குருக வைக்கிறார்கள். 


இத்திரைப்படம் நாம் பொதுவாக பார்க்கும் விளையாட்டுப் படங்களில் இருநது வேறுபட்டது. நாமும் பாபாசாகேப்பின் நீல வண்ணம் மின்னும் நாக்பூர் மண்ணிற்கு பயணமாகிறோம். பதைபதைப்பில் பங்குகொள்கிறோம். வண்ண உடை அணிந்து போர்க்களத்தில் விழாக்கோலம் பூணுகையில் சிரித்து இணைகிறோம். ‘என் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருந்தாலும் நான் யாருடைய பரிதாபத்துக்குரியவனாக இருக்க விரும்பவில்லை’ எனும் அண்ணல் அம்பேத்கரின் வரிகள் திரைக்காவியமாக மாறுகிறது. கழிசடைகள் அல்ல கனவுக்காட்டாறு நாங்கள எனும் கனவு அனுபவம். சென்னையில் ‘Inox’ ல் மட்டும் subtitles உடன் காணக்கிடைக்கிறது. தவறாமல் பாருங்கள். 

அப்பாக்களால் அழாமல் இருக்கிறது உலகம்


இந்த கட்டுரையை எப்படி தொடங்குவது என சத்தியமாக எனக்கு எந்த திட்டமும் இல்லை !பல நாளாக தூரிகையை தீண்டாமல் பைத்தியம் பிடித்து கிடந்த வான்காவின் உள்ளப்பெருக்கை கொட்டுவதற்கு அவர் அண்ணன் வாய்த்ததுபோல எனக்கு வாய்த்தவர் என் அப்பா.அவரினை பற்றி ஒரு தெளிவான பிம்பம் தருவது அல்ல என் நோக்கம்.என் தந்தை எனக்குள் உருவாக்கிய மாற்றங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு சின்ன பகிர்வே இது 

 

என் ஊர் பொன்பத்தி எனும் குக்கிராமம்;என் அப்பாவின் பெயர் பூங்காவனம்.அவர் அடிப்படையில் ஒரு பி.காம் பட்டதாரி.நான் முக உருவில் அவரின் அச்சுப்பிரதி .ஆனால் குணத்தில் அவரை மாதிரி இரண்டு முனைகளின் உச்சமாக சத்தியமாக என்னால் முடியாது.அவரை மாதிரி தெருவில் போக்கிரித்தனம் பண்ணிய ஆள் ஒரு காலத்தில் கிடையாது ,ஹாக்கி விளையாட போன இடங்களில் அவரும் அவர் கூட்டாளிகளும் உடைத்த மண்டைகளின் எண்ணிக்கை ஏராளம் !ஆனால் ஊர் பக்கம் போனால் அவரை மாதிரி ஒரு நல்ல பையன் இல்லை என சொல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இவருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்,வீட்டை விட்டு இவரை என் பாட்டி வெளியேறச்சொன்ன பொழுதும் சரி,இருந்த கொஞ்ச நிலத்தை பிரிப்பதில் இவருக்கு பாரபட்சம் காட்டிய பொழுதும் சரி மனிதர் முகத்திலோ,மனதிலோ எந்த வகையான சலனமோ,எதிர் வினையோ ஏற்பட்டது இல்லை !”அப்பா அம்மாவை எதிர்த்து பேசி என்னடா பண்ணப்போறோம் ?!” என கேள்வி கேட்டு விட்டு நடையைக்கட்டி விடுவார் 

 

சரி இது தான் இப்படி என்றால்,இவரின் கல்வி வரலாறு இன்னமும் சுவாரசியமானது ,அவர் சார்ந்த சமுகத்தில் பிள்ளைகளை படிக்க செலவு செய்ய மறுத்த நிலையில் சொந்தமாக மூட்டை தூக்கி படித்து பி.காம்.பட்டம் பெற்றார்.ஆனால் விதியின் வன்னகையோ என்னவோ ,அன்றைக்கு சுமை தூக்க ஆரம்பித்த என் தந்தை இன்று வரை அந்த சுமை தூக்கலை விட முடியவில்லை.இப்பொழுதும் எண்பது கிலோ சிலிண்டரை என் அப்பா  தோளில் தூக்கும் பொழுது நெஞ்சம் கனக்கும்,ஒரு ஸ்டவ் மெக்கானிக்காக தன் வாழ்வை கட்டமைத்து கொண்டார்.அவரின் தோற்றம் இப்படி தான் !ஒரு காக்கி உடை ,நெற்றி நிறைய விபூதி,எல்லாருக்கும் தாரளமாக பொங்கும் சிரிப்பு,இன்னமும் மாற்றிக்கொள்ளாத டி.வி.எஸ். பிப்டி செருப்பே அணிய மறுத்து விடுகிற கால்கள்,எல்லாவற்றிற்கும் மேலாக யாரையும் புண்படுத்தாத சொற்கள்.

மனிதின் அன்றாட அலுவல்களை  சொல்கிறேன் கேளுங்கள் !அம்மாவிற்கு உடல் நலம் முடியாது ஆதலால் மனிதர் காலையில் தானே எழுந்து எல்லா வேலையையும் முடித்து விடுவார் !அவர் எழுந்து இருக்கும் பொழுது அனேகமாக மணி மூன்று இருக்கும்.என் அப்பாவின் சமையல் தனி ரகம்,எல்லா உணவும் நாக்கை தொட்டு விடா விட்டாலும்,அவர் எனக்கு பிடிக்கும் என்று இரவே ஊற வைத்து சமைத்து  தரும் உருளைக்கிழங்கு பொரியல்,பிள்ளை அடுத்த போட்டிக்கு கிளம்பி விடுவனோ என்கிற அவசரத்தில் அவரின் அமுது போன்ற வியர்வை கலந்து சமைக்கிற முருங்கைக்கீரை சாம்பார் எல்லாமே நாவோடு இன்னமும் வாழ்பவை.லா.சா.ராவின் பாற்கடலில் வரும் நார்த்தங்காய் ஊறுகாயை விட எல்லாருக்காகவும் தன்னை கரைத்துக்கொண்ட ஜீவன் என் அப்பா !இது முடிந்து எப்படியும் இருப்பது துணிகளையாவது தினமும் கிணற்றடிக்கு கொண்டு போய் தோய்த்து விட்டு வருவார் ,போகும் பொழுது மறக்காமல் தான் நாய் பிள்ளைகளுக்கு தனி சாப்பாடு வேறு சமைத்து விட்டுப்போவார்.கூடவே நான்கு  பிஸ்கட்  பாக்கெட்கள் அவரின் வண்டியோடு பயணம் போகும் அவை தெருவில் காத்து இருக்கும் அவரின் மற்றும் சில நாய் சகாக்களுக்கு!

 

இதோடு வீட்டு வேலை முடிந்தது என்றால் அவர் அடுப்பை சீர் செய்ய  எடுத்துக்கொள்ளும்  மெனக்கிடல் எனக்கு “தாள் கண்டார் தாளே கண்டார் !”என்கிற வரிகளை அலையடிக்க செய்கிறது.நிச்சயமாக அவ்வளவு அழகியல் இருக்கும் அவரின் வேலையில்,அவர் ஒரு அடுப்பை தன் பிள்ளைபோல தடவி,அதன் துருவை பல காலம் தொடாத வயலினை இசைக்கலைஞன் தொடுவது போல பொறுமையாக தொட்டு ,அதன் சிக்கலை அம்மாவை போல விசாரித்து அதை சரி செய்து கொடுக்கும் பொழுது நம் கண் முன்னே அந்த அடுப்பு புதிதாக பிறந்து இருக்கும் ,அவ்வளவு ஒரு நேர்த்திக்காரர் அவர்.இதற்கு நடுவில் பல மண்டபங்களுக்கு சிலிண்டர் சுமந்து  போய் போடுவார்,என்னை வகுப்புகளில் ஆரம்ப காலங்களில் சரியாக படிக்காத பொழுது டேய் சிலிண்டர் என ஆசிரியை அழைத்ததை அப்பாவிடம் சொன்ன பொழுது என்னை தூக்கிக்கொண்டு என் அப்பா ஏதோ சங்கீதமாய் சொன்னார் ,”யார் உன்னை காயப்படுத்த நெனைச்சாலும் ,அவங்களுக்கு ஒரு சிரிப்பை மட்டும் பரிசாக கொடு குட்டிப்பா!”என அதன் நாதம் சொன்னது.”திக்குவாய் !”என பிறர் சொன்ன பொழுது என் அப்பா நாயை கூப்பிட்டு வந்து “போடா உன் அண்ணன் கூட பேசு என்பார் !”அங்கே பேச தொடங்கியவன் நான்.முட்டாள் என பிறர் சொன்னதாக நெஞ்சம் புதைத்து அழுதபொழுது ,”பானிபூரி சாப்பிடலாமா பூ.கொ.உனக்கு பிடிக்குமே !”என கேட்பார்.”மொக்கை போடுகிறான் !”என பிறர் சொன்னதாக சொல்லி புலம்பிய பொழுது ,”எல்லார் கூடவும் குடும்பம் நடத்தாதே !கடந்து போக கத்துக்கோ !”என சொன்ன அவரின் வார்த்தைகள் பத்து வருடம் கடந்தும் ஒலிக்கின்றன 

 

அவருக்கு என்னை ஒரு கதை சொல்லி ஆகி பார்ப்பதில் அத்தனை விருப்பம்.ராணி காமிக்சை  அவர் என் கையில் திணித்த பொழுது நான் ஆறு வயசு பாலகன் ,ஜூ.வி.என் கையில் சேர்க்கப்பட்ட பொழுது எனக்கு எட்டு வயது ,எனக்கு தெரிந்து ஒரு வாரத்திற்கு வெறும் ஐநூறு ரூபாய் எட்டிய காலத்திலேயே அவர் எனக்கு நூறு ரூபாய் புத்தகத்திற்கு செலவு செய்தார் !என் அம்மா பள்ளி ஆசிரியை ஆனவர் ஆதலால் என்னை அடி பின்னி விடுவார் !இன்னமும் அதன் அடையாளங்கள் என் உடலில் கொட்டி கிடக்கின்றன !ஆனாலும் அதை விட என் அப்பா என்னை ஒன்றுமே சொல்லாமல் தழுவிக்கொண்டு தந்த ஒற்றை முத்தத்தின் ஈரம் தான் காணாமல்  போய் விட்டது.நான் பேசுவதை கேட்பதற்காக தனக்கு  இருந்த பின்கழுத்து தேயலை மறைத்துக்கொண்டு எட்டு வருடம் என்னோடு இணைந்து பொன்பத்தி சாலை முழுக்க தனித்தனி சைக்கிளில் பயணம் செய்தப்படியே உலகையே நாங்கள் அலசும் பொழுது,ஒரு முப்பது பேர் எங்களுக்கு பின்னும்,முன்னும் மெதுவாக போகும் பொழுது,”மகனே ரசிகனுக்கு என்னைக்கும் போரடிக்கிற மாதிரி பேசக்கூடாது புரியுது இல்ல !”என்பார்.இப்பொழுது அப்பாவால் சைக்கிள் ஒட்ட முடியாது ,கழுத்து எழும்பு தேய்ந்து போய் ,என்னுடைய  வளர்ச்சியை வார்த்தவர் அவர் 

 

அது ஒரு தீபாவளி தினம்,சிலிண்டர் அவர் காலின் மீது விழுந்து சரி ஆழமாக ஒரு காயம் ஏற்ப்பட்டு அதை மறைத்துக்கொண்டு பிள்ளைகள் தீபாவளியை கொண்டாடட்டும் என அமைதியாக காக்கி பேண்டின் ஊடாக காயத்தை மறைத்துக்கொண்டு இருந்தவர் அவர் .யாரின் கருத்துக்களுக்கும் முன் தடையாக நிற்க மாட்டார் ,நான் பதினோரு வயதில் சைவமானதும் அவர் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார் ,”கண்ணா ஒரு விசயத்தில குதிக்கிறதுக்கு முன்னாடி மனசார அதை காதலிக்க ஆரம்பிச்சுடு !”என  அவர் சொல்லியது இன்னமும் என்னை வழிநடத்துகிறது .பெரியாரையும் ,காந்தியையும்,அம்பேத்கரையும் ,மார்க்சையும்,இன்னம் சொல்வதென்றால் எங்கள் ஊர் நூலகத்தின் ஒட்டு மொத்த புத்தகத்தையும் எனக்காக ஏலம் எடுத்த என் தந்தைக்கு ஆழ்ந்த வாசிப்பு கிடையாது ,காரணம் இரவானால் பார்வை ரொம்பவே ,மந்தம் ஆனாலும் நான் எழுத்தும் கட்டுரையை வரிக்கு வரிக்கு படித்து விடுவார் !”இதெல்லாம் ஒரு எழுத்தா?”என என்னை அருமை நடுவர் கிண்டலடித்த பொழுது ,”எழுத்துல பெருசு சிறுசு எல்லாம் கிடையாது .எது உண்மை சொல்லுது ,எது பொய் சொல்லுது !அப்படிங்கறது மட்டும் தான் முக்கியம் நீ மேல எழுது !”என  அவர்  சொன்னதை விடப்பெரிய பத்திரிகை  பாடம் இருக்க முடியாது .ஒரு ஐம்பது காதல் ஜோடிகளை சேர்த்து வைத்து இருப்பார்.நானும் அவரும் இணைந்தே சைட் அடிக்க போவதாக கமென்ட் அடிக்கிற அளவிற்கு சுதந்திரம் உண்டு 

 

அவரின் கவலைகளுக்கு என்றைக்கும் மது,சிகரெட் ஆகியவற்றை தொட்டது இல்லை,டீ காபிக்கு பெரிய தடா !மனிதர்களை மட்டுமே சம்பாதித்த என் அப்பாவின் வங்கி கணக்கில் இன்றைக்கு அறுநூறு ரூபாய் தான் இருக்கிறது ,ஆனால்  என் தங்கையின் விழாவிற்கு அவரின் மனிதர்கள் மூவாயிரம் பேர் வந்தார்கள் !நான் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வில் இருக்கும் பொழுது அரட்டை அரங்கத்திற்கு என்னைப்பேச  அழைத்துப்போன நம்பிக்கைகாரர் அவர் .நான் பன்னிரெண்டாம் வகுப்பில் அம்மா எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறமால் போனாலும் ,”அடுத்தது என்னனு பாரு !”என்கிற அப்பாவின் நம்பிக்கை ஊட்டுகிற வார்த்தையில் மாற்றம் இல்லை.பெண்களை எல்லாம் அவரை விட பெரிதாக மதித்து விட முடியாது !அவரின் ஒரு பிரதிபிம்பாகவே நான் முயற்சிக்கிறேன் !அவருக்கு ஒழுங்காக ஐந்து செட் துணிக்கிடையாது,ஆனால் நான் குவித்த பதக்கங்களை வைக்க இன்னொரு அலமாரி கட்ட வேண்டும் என சொல்கிற நம்பிக்கைகாரர்.மருத்துவன்,எழுத்தாளன்,கவிஞன் என விரிந்து பொறியியல் மாணவன் என என் கனவுகள் எப்படி எல்லாமோ மாறி இருக்கிறது ஆனாலும் அதே  காக்கி சட்டை ஒழுகும் வியர்வை அதோடு புன்னகையில் தெறிக்கிற நம்பிக்கையோடு இருக்கும் என் அப்பாவை பார்க்கிற பொழுதெல்லாம் ,”அப்பா நீ தான் என் தாயுமானவன் “என சொல்ல எண்ணி எண்ணி மனம் துடிக்கிறது !அவரின் நம்பிக்கை விதை தான் என்னை ஐம்பது நாடகங்களின் இயக்குனராகவும் ,ஐநூறு ஒட்டு பெற்று ஜெயித்த மாணவர் தலைவனாகவும்,மூன்று முறை வினாடி வினாவில் மாநில முதல்வனாகவும்,கம்பராமாயண ,பெரியபுராண ,திருவாசக சொற்பொழிவாளர் ஆகவும் ,இருநூறு  மேடை தொட்டவனாகவும் ,பல பள்ளி மாணவரின் மன  காயம் துடைக்கும் நண்பனாகவும் ,இன்னமும் சொல்வதென்றால் யாருக்கும் தலைவணங்காத நேர்மைக்காரனாகவும் ஆக்கி இருக்கிறது .ஆனாலும் இப்படி தான் என்னை இந்த உலகம் அறிய ஆசை ,”காஸ் மெக்கானிக் பூங்காவனத்தின் மகன் இவன் !”அப்பா இந்த கட்டுரை இருபது வருடமாக உங்கள் காலை தொட்டாலும் இன்னமும் தொட முடியாத  உயரத்தில் அன்பு காட்டும் உங்களுக்கான ஒரு சிறு சமர்ப்பணம் .அம்மாக்களால் உலகம் புனிதம் அடையலாம்,ஆனால் அப்பாக்களால் தான் அழாமல் இருக்கிறது .

பழைய புத்தகங்கள் தரும் வலி !


பழைய புத்தகங்களை பெரும்பாலும் வாங்குவதில்லை. விலை குறைவானவை என்றாலும் அவை கடத்திவிடும் வலி சொல்லி மாயாது. ஒவ்வொரு பழைய புத்தகத்துக்கு பின்னும் எதோ ஒரு கதை ஒளிந்து கொண்டு இருக்கிறது என்பதை புத்தகங்களோடு பதினைந்து ஆண்டுகளாக உறவாடுபவன் என்பதால் அறிவேன். சில புத்தகங்கள் தங்களின் காதலன் அல்லது காதலிக்கு பரிசாக கொடுக்கப்பட்டு இருக்கும் ! அதை எதோ ஒரு கணத்தில் தொலைத்திருக்கிறார்கள் அவர்கள் அல்லது அது அழுத்திய நினைவுகளால் பிரிவை மறக்க துறந்திருக்கிறார்கள் ! 

சில சமயம் நண்பர்கள் ஆசை,ஆசையாக செல்லப்பெயரிட்டு கொடுத்த புத்தகங்களும் கடைநோக்கி வந்திருக்கும். இடத்தை அடைத்தது என்று நினைத்தார்களோ என்னவோ அல்லது எங்கேனும் தவறவிட்டு இருக்கலாம் அல்லது தேவையில்லாத தலைப்பில் கொடுக்கப்பட்ட புத்தகம் என்றும் எண்ணப்பட்டு இருக்கலாம். ஒரு பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்கப்போன பொழுது மண்ணையும்,கல்லையும் வாரி இறைத்துக்கொண்டு இருந்தார் ஒரு முதியவர். ” அவரு சேர்த்து வெச்ச புக் சார் இதெல்லாம் ! கடன் காரனுங்க எதுவுமே தேறாம வீட்டில இருந்த எல்லாத்தையும் தூக்கிட்டாங்க. இதையும் இவர் இல்லாத நேரத்தில் இங்கே கொண்டுவந்து போட்டுட்டாங்க ! நான் என்ன செய்ய ?” என்று கேட்ட கணம் கனத்து நிற்கிறது. 

இன்றைக்கு சுனில் கவாஸ்கர் ஆம்னிபஸ் புத்தகத்தை அப்படியும் பழைய புத்தகக்கடையில் வாங்கிவிட்டேன். உள்ளே இருந்த ஒரு அட்டையில் “பிரியமிகுந்த அப்பாவுக்கு கார்த்திக் ரமணி வாங்கித்தந்தது !” என்று இருந்ததே என்னவோ செய்தது. அடுத்து முதல் பக்கத்தை திருப்பியதும் கைகள் நடுங்கியே விட்டன. “என்னுடைய அன்பான அப்பாவுக்கு அம்மாவின் மூலம் நான் வாங்கித்தந்திருக்கும் பிறந்தநாள் பரிசு இது !” என்று எழுதியிருந்தது. எதோ செய்தது. புத்தகத்தை மூடிவைத்து விட்டேன் ! பழைய புத்தகங்கள் வாங்கவே கூடாது