அகிலமெங்கும் ஒரே அப்பா !


அப்பாக்கள் அழகானவர்கள்;அற்புதமானவர்கள். சத்தமில்லாமல் உலகை எளிமையான,போற்றுதல்கள் இல்லாத அன்பால் நிறைத்து விட்டுப்போகும் மாயம் அவர்களுக்கு வரமாகவும்,சாபமாகவும் தொடர்ந்து வந்திருக்கிறது. பல மாமனிதர்கள் தந்தைகளால் ஆக்கப்பட்டு உள்ளார்கள். அதைப்பற்றிய ஒரு சின்னத்தொகுப்பு இதோ 

உலகின் எல்லா மூலைகளையும் முற்றுகையிட்ட சிவப்பு சித்தாந்தத்தை தந்த காரல் மார்க்ஸ் அவர்களை அவர் போக்கில் விட்ட,என்ன செய்தாலும் ஏன் என்று கேட்காத அதீத அன்புக்காரர் அவர் தந்தை. “உன் பையன் சீரழிகிறான்.பார்த்துக்கோ !”என ஊரில் உள்ளவர்கள் அவரை உசுப்பேற்றிய பொழுதெல்லாம் மகனுக்கு இன்னம் கொஞ்சம் கூடுதலாக பணம் அனுப்பிய வித்தியாசமான தந்தை அவர். காரல் மார்க்ஸ் இறக்கும் வரை அந்த இணையில்லா தகப்பனின் படம் சட்டைப்பையில் மகனின் துன்பங்களுக்கு நடுவே நம்பிக்கை கீற்றாக மின்னிக்கொண்டு இருந்தது 

முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியில் வாழ்க்கை வாழ்ந்தவர் மோதிலால் நேரு . வீட்டில் அந்த காலத்திலேயே மின்சாரம்,வெள்ளையரைப்போல உணவு பழக்கம்,மகனை பள்ளியில் இருந்து கூட்டு வர எல்லா பள்ளியின் எல்லா வாசல்களிலும் கார்கள்,வீட்டில் நீச்சல் குளம்,புலால் உணவு என ஏகபோக வாழ்க்கை அவருடையது . எதை வேண்டுமானாலும் விடுத்து அவரால் இருக்க முடியும் ; பிள்ளைப்பாசம் என்பதை மட்டும் விட முடியாத ஒரு நபராக அவர் இருந்தார். லட்சங்களில் வருமானம் ஈட்டித்தந்த வக்கீல் தொழிலை மகனுக்காக விட்டு வெளியேறினார். ஜவகர்லால் நேருவுக்காக தானும் விடுதலைப்போரில் ஈடுபட்டார் . 

சிறையில் மகன் மீது கொண்ட பாசத்தால் உள்ளே போனவர் வீட்டு சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டார் . அதைக்கொண்டு வர சொன்னார் , நேரு அப்படியே சாப்பாட்டை வெளியே எறிந்து விட்டு ,”அப்பா எத்தனை மக்கள் எளிய உணவு உண்டு நாட்டுக்காக போராடுகிறார்கள்.என கடிந்து இவரை விடுதலைப்போரில் ஈடுபட வைத்தார் . வெறுந்தரையில் பிள்ளைப்பாசத்துக்காக படுத்து நாட்டு விடுதலைப்போரில் பங்குகொண்டார் மனிதர் . அரச மாளிகைக்கு ஈடாக கட்டப்பட்ட தன்னுடைய ஆனந்த பவனத்தை நாட்டு விடுதலைப்போருக்கு அர்ப்பணித்தார் மனிதர் 

லிங்கன் அப்பா ஓயாமல் உழைத்தவர் ;இதுதான் வேலை என்று என்றைக்கும் வகுத்துக்கொண்டது இல்லை மனிதர் ஓயாத உழைப்பு,யாரையும் ஏமாற்றக்கூடாது . சக மனிதரிடம் அன்பாக இருக்கவேண்டும் என்பது தான் வாழ்க்கையின் நோக்கம் என்று வாழ்ந்த அற்புத ஆத்மா அவர். அதையே வாழ்நாள் முழுக்க லிங்கன் கடைபிடித்தார். தன் அப்பா தனக்கு சேர்த்து வைத்து விட்டுப்போன செல்வங்கள் அவை என ஆனந்த கூத்தாடினார். “உன் தந்தை தைத்த செருப்பு என் கால்களை அலங்கரித்து கொண்டிருக்கிறது லிங்கன் ” என்று ஒரு செனட்டர் சொன்னபொழுது லிங்கன் புன்னகை மாறாமல் ,”இன்னமும் அந்த செருப்பு பிய்ந்து போகாமல் இருக்கிறது என்றால் அது என் தந்தையின் உழைப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் செருப்பை கொடுங்கள்;தைத்து தருகிறேன். என் தந்தை கற்றுத்தந்த தொழில் அல்லவா அது . எப்பொழுதும் கைவிடாது ” என சொன்னார் 

விம்பிள்டனை பெடரரிடம் இருந்து நடால் வென்ற பின்னர் வாழ்வின் மிகவும் வலிமிகுந்த கட்டம் நடாலுக்கு காத்திருந்தது. அவருக்கு அடிக்கடி காலில் வலி வர ஆரம்பித்து இருந்தது. இடது காலில் ஒரு சிறிய எலும்பில் சிக்கல் இருந்தது. இளம் வயதிலேயே அந்த குறைபாடு இருந்து அதை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அதனால் அதன் சிக்கல் பெரிதாகி டென்னிஸ் வாழ்க்கையே நடாலுக்கு முடியக்கூடும் என்று மருத்துவர் எச்சரித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றோடு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருந்து வெளியேறுவது நடந்தது. கண்ணீர் விட்டு அழுதார் நடால். 

அதுவரை எப்பொழுதும் பெரும்பாலும் வாயைத்திறந்து பேசாத அவரின் அப்பா பேசினார்,”பார்த்துக்கொள்ளலாம் ! இது இல்லாவிட்டால் என்ன ? கோல்ப் ஆடப்போகலாம் நீ ! உனக்கு நிரம்ப பிடித்தது இல்லையா அது ? மேலும் அப்படி ஆட முடியாமல் போகலாம் என்று தான் மருத்துவர் எச்சரித்து இருக்கிறார். அதுவே நடக்க வேண்டும் என்று அவசியமில்லை !” என்று தந்தை சொல்ல உற்சாகம் ததும்ப மீண்டும் மீண்டு வந்தார் நடால். போட்டிகளில் கலந்து கொண்டார். பெடரரை ஹார்ட் கோர்ட்டில் வென்றதும் நம்பிக்கை பிறந்தது. அப்படியே அடித்து ஆடி நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளையும் இளம் வயதில் வென்றவர் என்கிற சாதனை அவர் வசம் வந்து சேர்ந்தது 

பீலே பிரேசிலின் மத்திய பகுதி மாநிலம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். வறுமையான குடும்பம்,அப்பா கால்பந்து ஆடுவதை கண்கள் விரிய பீலே கண்டார். அவரின் அப்பா ஒரே ஒரு போட்டியில் தலையால் மட்டுமே ஐந்து கோல்கள் அடித்ததை பார்த்து இப்படி ஒரே ஒரு முறை சாதனை புரிந்துவிட்டால் போதுமே என்று கால்பந்து மீது வெறிகொண்டு அவர் விளையாட வந்தார். இறுதிவரை தன்னுடைய தந்தையின் சாதனையை அவர் முறியடிக்கவே இல்லை. நான்கு கோல்களை ஒரே போட்டியில் தலையால் தட்டி அடித்த கணம் அவருக்கு வாய்த்தது. “என் தந்தையின் சாதனை என்றைக்கும் அப்படியே இருக்கட்டும் !” என்று உணர்ச்சி பெருக்கோடு விடைபெற்றார் கருப்பு முத்து ! நடுவில் மூன்று உலகக்கோப்பைகள் பிரேசில் வசம் வந்திருந்தன

சச்சின் அப்பா மராத்தி எழுத்தாளர் ; கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. “நான் டென்னிஸ் ஆடப்போகிறேன் !”என்று சச்சின் சொன்னாலும் சரி என்பதே அவரின் பதிலாக இருக்கும் . நான் தேர்வெழுத போவதில்லை போட்டி இருக்கிறது என்றாலும் உன் இஷ்டம் என்பதே அவரின் பதில். கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் என்னவென்று சச்சின் அவரிடம் விளக்கி சொன்னதில்லை,ஆனால்,”உனக்கு பிடித்ததை செய் !”என கைதட்டி கொண்டாடிய அப்பா அவர். மகனை எல்லாரும் புகழ்கிறார்கள் என்று தெரியும் ; பெரும்பாலும் சச்சின் இருக்கும் பொழுது எந்த முகமாற்றமும் காட்ட மாட்டார். ஆனால், மூத்த பெண்ணை மணக்கிறேன் என்று சச்சின் வந்து நின்ற பொழுதும் நோ சொல்லாத மனிதர் . ஆனால்,ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தி சொல்வார் தன் செயல்களின் மூலம் .

உலககோப்பை 1999 வருடம் வந்தது ; தந்தைக்கு உடல்நிலை மோசமான பொழுது சச்சின் வெளிநாட்டில் ஆடிக்கொண்டு இருந்தார். உயிர் போகிற தருவாயிலும் ,”செய்கிற கடமையே முக்கியம் ; வரவேண்டாம் . அங்கே அவனை ஆடச்சொல்லுங்கள் !”என்று அவர் சொன்னதை சொல்லித்தான் சிவந்த கண்களோடு சச்சினை வீட்டை விட்டு அனுப்பினார்கள். கென்யாவுடன் நூற்றி நாற்பது ரன்களை அடித்த பொழுது அந்த சதத்தை தலையை தூக்கி தன் அப்பாவுக்கு சமர்ப்பித்தார் சச்சின். இன்று வரை தொடர்கிறது அது. சச்சினின் ஆட்டம் அவர் அப்பாவுக்கு புரியாமல் இருக்கலாம்,அன்பின் மொழி புரிந்திருக்கும்

தன் பிள்ளைகளுக்காக இப்படி உதவிய தந்தைகள் ஒருபுறம் என்றால் வித்தியாசமான தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சொத்தில் தொன்னூறு சதவிகிதத்துக்கு மேல் அறக்காரியங்களுக்கு கொடுத்து விட்டு கைகட்டி நிற்கிறார் பில்கேட்ஸ். முழுதாக கொடுத்துவிட்டு என் மகன் சொந்தக்காலில் நிற்பான் என்கிறார் ஜாக்கிசான் 

அப்பாக்கள் வரலாறு முழுக்க நிரம்பிக்கிடக்கிறார்கள் ; வரலாறாகவே இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்

அப்பாக்களால் அழாமல் இருக்கிறது உலகம்


இந்த கட்டுரையை எப்படி தொடங்குவது என சத்தியமாக எனக்கு எந்த திட்டமும் இல்லை !பல நாளாக தூரிகையை தீண்டாமல் பைத்தியம் பிடித்து கிடந்த வான்காவின் உள்ளப்பெருக்கை கொட்டுவதற்கு அவர் அண்ணன் வாய்த்ததுபோல எனக்கு வாய்த்தவர் என் அப்பா.அவரினை பற்றி ஒரு தெளிவான பிம்பம் தருவது அல்ல என் நோக்கம்.என் தந்தை எனக்குள் உருவாக்கிய மாற்றங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு சின்ன பகிர்வே இது 

 

என் ஊர் பொன்பத்தி எனும் குக்கிராமம்;என் அப்பாவின் பெயர் பூங்காவனம்.அவர் அடிப்படையில் ஒரு பி.காம் பட்டதாரி.நான் முக உருவில் அவரின் அச்சுப்பிரதி .ஆனால் குணத்தில் அவரை மாதிரி இரண்டு முனைகளின் உச்சமாக சத்தியமாக என்னால் முடியாது.அவரை மாதிரி தெருவில் போக்கிரித்தனம் பண்ணிய ஆள் ஒரு காலத்தில் கிடையாது ,ஹாக்கி விளையாட போன இடங்களில் அவரும் அவர் கூட்டாளிகளும் உடைத்த மண்டைகளின் எண்ணிக்கை ஏராளம் !ஆனால் ஊர் பக்கம் போனால் அவரை மாதிரி ஒரு நல்ல பையன் இல்லை என சொல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இவருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்,வீட்டை விட்டு இவரை என் பாட்டி வெளியேறச்சொன்ன பொழுதும் சரி,இருந்த கொஞ்ச நிலத்தை பிரிப்பதில் இவருக்கு பாரபட்சம் காட்டிய பொழுதும் சரி மனிதர் முகத்திலோ,மனதிலோ எந்த வகையான சலனமோ,எதிர் வினையோ ஏற்பட்டது இல்லை !”அப்பா அம்மாவை எதிர்த்து பேசி என்னடா பண்ணப்போறோம் ?!” என கேள்வி கேட்டு விட்டு நடையைக்கட்டி விடுவார் 

 

சரி இது தான் இப்படி என்றால்,இவரின் கல்வி வரலாறு இன்னமும் சுவாரசியமானது ,அவர் சார்ந்த சமுகத்தில் பிள்ளைகளை படிக்க செலவு செய்ய மறுத்த நிலையில் சொந்தமாக மூட்டை தூக்கி படித்து பி.காம்.பட்டம் பெற்றார்.ஆனால் விதியின் வன்னகையோ என்னவோ ,அன்றைக்கு சுமை தூக்க ஆரம்பித்த என் தந்தை இன்று வரை அந்த சுமை தூக்கலை விட முடியவில்லை.இப்பொழுதும் எண்பது கிலோ சிலிண்டரை என் அப்பா  தோளில் தூக்கும் பொழுது நெஞ்சம் கனக்கும்,ஒரு ஸ்டவ் மெக்கானிக்காக தன் வாழ்வை கட்டமைத்து கொண்டார்.அவரின் தோற்றம் இப்படி தான் !ஒரு காக்கி உடை ,நெற்றி நிறைய விபூதி,எல்லாருக்கும் தாரளமாக பொங்கும் சிரிப்பு,இன்னமும் மாற்றிக்கொள்ளாத டி.வி.எஸ். பிப்டி செருப்பே அணிய மறுத்து விடுகிற கால்கள்,எல்லாவற்றிற்கும் மேலாக யாரையும் புண்படுத்தாத சொற்கள்.

மனிதின் அன்றாட அலுவல்களை  சொல்கிறேன் கேளுங்கள் !அம்மாவிற்கு உடல் நலம் முடியாது ஆதலால் மனிதர் காலையில் தானே எழுந்து எல்லா வேலையையும் முடித்து விடுவார் !அவர் எழுந்து இருக்கும் பொழுது அனேகமாக மணி மூன்று இருக்கும்.என் அப்பாவின் சமையல் தனி ரகம்,எல்லா உணவும் நாக்கை தொட்டு விடா விட்டாலும்,அவர் எனக்கு பிடிக்கும் என்று இரவே ஊற வைத்து சமைத்து  தரும் உருளைக்கிழங்கு பொரியல்,பிள்ளை அடுத்த போட்டிக்கு கிளம்பி விடுவனோ என்கிற அவசரத்தில் அவரின் அமுது போன்ற வியர்வை கலந்து சமைக்கிற முருங்கைக்கீரை சாம்பார் எல்லாமே நாவோடு இன்னமும் வாழ்பவை.லா.சா.ராவின் பாற்கடலில் வரும் நார்த்தங்காய் ஊறுகாயை விட எல்லாருக்காகவும் தன்னை கரைத்துக்கொண்ட ஜீவன் என் அப்பா !இது முடிந்து எப்படியும் இருப்பது துணிகளையாவது தினமும் கிணற்றடிக்கு கொண்டு போய் தோய்த்து விட்டு வருவார் ,போகும் பொழுது மறக்காமல் தான் நாய் பிள்ளைகளுக்கு தனி சாப்பாடு வேறு சமைத்து விட்டுப்போவார்.கூடவே நான்கு  பிஸ்கட்  பாக்கெட்கள் அவரின் வண்டியோடு பயணம் போகும் அவை தெருவில் காத்து இருக்கும் அவரின் மற்றும் சில நாய் சகாக்களுக்கு!

 

இதோடு வீட்டு வேலை முடிந்தது என்றால் அவர் அடுப்பை சீர் செய்ய  எடுத்துக்கொள்ளும்  மெனக்கிடல் எனக்கு “தாள் கண்டார் தாளே கண்டார் !”என்கிற வரிகளை அலையடிக்க செய்கிறது.நிச்சயமாக அவ்வளவு அழகியல் இருக்கும் அவரின் வேலையில்,அவர் ஒரு அடுப்பை தன் பிள்ளைபோல தடவி,அதன் துருவை பல காலம் தொடாத வயலினை இசைக்கலைஞன் தொடுவது போல பொறுமையாக தொட்டு ,அதன் சிக்கலை அம்மாவை போல விசாரித்து அதை சரி செய்து கொடுக்கும் பொழுது நம் கண் முன்னே அந்த அடுப்பு புதிதாக பிறந்து இருக்கும் ,அவ்வளவு ஒரு நேர்த்திக்காரர் அவர்.இதற்கு நடுவில் பல மண்டபங்களுக்கு சிலிண்டர் சுமந்து  போய் போடுவார்,என்னை வகுப்புகளில் ஆரம்ப காலங்களில் சரியாக படிக்காத பொழுது டேய் சிலிண்டர் என ஆசிரியை அழைத்ததை அப்பாவிடம் சொன்ன பொழுது என்னை தூக்கிக்கொண்டு என் அப்பா ஏதோ சங்கீதமாய் சொன்னார் ,”யார் உன்னை காயப்படுத்த நெனைச்சாலும் ,அவங்களுக்கு ஒரு சிரிப்பை மட்டும் பரிசாக கொடு குட்டிப்பா!”என அதன் நாதம் சொன்னது.”திக்குவாய் !”என பிறர் சொன்ன பொழுது என் அப்பா நாயை கூப்பிட்டு வந்து “போடா உன் அண்ணன் கூட பேசு என்பார் !”அங்கே பேச தொடங்கியவன் நான்.முட்டாள் என பிறர் சொன்னதாக நெஞ்சம் புதைத்து அழுதபொழுது ,”பானிபூரி சாப்பிடலாமா பூ.கொ.உனக்கு பிடிக்குமே !”என கேட்பார்.”மொக்கை போடுகிறான் !”என பிறர் சொன்னதாக சொல்லி புலம்பிய பொழுது ,”எல்லார் கூடவும் குடும்பம் நடத்தாதே !கடந்து போக கத்துக்கோ !”என சொன்ன அவரின் வார்த்தைகள் பத்து வருடம் கடந்தும் ஒலிக்கின்றன 

 

அவருக்கு என்னை ஒரு கதை சொல்லி ஆகி பார்ப்பதில் அத்தனை விருப்பம்.ராணி காமிக்சை  அவர் என் கையில் திணித்த பொழுது நான் ஆறு வயசு பாலகன் ,ஜூ.வி.என் கையில் சேர்க்கப்பட்ட பொழுது எனக்கு எட்டு வயது ,எனக்கு தெரிந்து ஒரு வாரத்திற்கு வெறும் ஐநூறு ரூபாய் எட்டிய காலத்திலேயே அவர் எனக்கு நூறு ரூபாய் புத்தகத்திற்கு செலவு செய்தார் !என் அம்மா பள்ளி ஆசிரியை ஆனவர் ஆதலால் என்னை அடி பின்னி விடுவார் !இன்னமும் அதன் அடையாளங்கள் என் உடலில் கொட்டி கிடக்கின்றன !ஆனாலும் அதை விட என் அப்பா என்னை ஒன்றுமே சொல்லாமல் தழுவிக்கொண்டு தந்த ஒற்றை முத்தத்தின் ஈரம் தான் காணாமல்  போய் விட்டது.நான் பேசுவதை கேட்பதற்காக தனக்கு  இருந்த பின்கழுத்து தேயலை மறைத்துக்கொண்டு எட்டு வருடம் என்னோடு இணைந்து பொன்பத்தி சாலை முழுக்க தனித்தனி சைக்கிளில் பயணம் செய்தப்படியே உலகையே நாங்கள் அலசும் பொழுது,ஒரு முப்பது பேர் எங்களுக்கு பின்னும்,முன்னும் மெதுவாக போகும் பொழுது,”மகனே ரசிகனுக்கு என்னைக்கும் போரடிக்கிற மாதிரி பேசக்கூடாது புரியுது இல்ல !”என்பார்.இப்பொழுது அப்பாவால் சைக்கிள் ஒட்ட முடியாது ,கழுத்து எழும்பு தேய்ந்து போய் ,என்னுடைய  வளர்ச்சியை வார்த்தவர் அவர் 

 

அது ஒரு தீபாவளி தினம்,சிலிண்டர் அவர் காலின் மீது விழுந்து சரி ஆழமாக ஒரு காயம் ஏற்ப்பட்டு அதை மறைத்துக்கொண்டு பிள்ளைகள் தீபாவளியை கொண்டாடட்டும் என அமைதியாக காக்கி பேண்டின் ஊடாக காயத்தை மறைத்துக்கொண்டு இருந்தவர் அவர் .யாரின் கருத்துக்களுக்கும் முன் தடையாக நிற்க மாட்டார் ,நான் பதினோரு வயதில் சைவமானதும் அவர் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார் ,”கண்ணா ஒரு விசயத்தில குதிக்கிறதுக்கு முன்னாடி மனசார அதை காதலிக்க ஆரம்பிச்சுடு !”என  அவர் சொல்லியது இன்னமும் என்னை வழிநடத்துகிறது .பெரியாரையும் ,காந்தியையும்,அம்பேத்கரையும் ,மார்க்சையும்,இன்னம் சொல்வதென்றால் எங்கள் ஊர் நூலகத்தின் ஒட்டு மொத்த புத்தகத்தையும் எனக்காக ஏலம் எடுத்த என் தந்தைக்கு ஆழ்ந்த வாசிப்பு கிடையாது ,காரணம் இரவானால் பார்வை ரொம்பவே ,மந்தம் ஆனாலும் நான் எழுத்தும் கட்டுரையை வரிக்கு வரிக்கு படித்து விடுவார் !”இதெல்லாம் ஒரு எழுத்தா?”என என்னை அருமை நடுவர் கிண்டலடித்த பொழுது ,”எழுத்துல பெருசு சிறுசு எல்லாம் கிடையாது .எது உண்மை சொல்லுது ,எது பொய் சொல்லுது !அப்படிங்கறது மட்டும் தான் முக்கியம் நீ மேல எழுது !”என  அவர்  சொன்னதை விடப்பெரிய பத்திரிகை  பாடம் இருக்க முடியாது .ஒரு ஐம்பது காதல் ஜோடிகளை சேர்த்து வைத்து இருப்பார்.நானும் அவரும் இணைந்தே சைட் அடிக்க போவதாக கமென்ட் அடிக்கிற அளவிற்கு சுதந்திரம் உண்டு 

 

அவரின் கவலைகளுக்கு என்றைக்கும் மது,சிகரெட் ஆகியவற்றை தொட்டது இல்லை,டீ காபிக்கு பெரிய தடா !மனிதர்களை மட்டுமே சம்பாதித்த என் அப்பாவின் வங்கி கணக்கில் இன்றைக்கு அறுநூறு ரூபாய் தான் இருக்கிறது ,ஆனால்  என் தங்கையின் விழாவிற்கு அவரின் மனிதர்கள் மூவாயிரம் பேர் வந்தார்கள் !நான் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வில் இருக்கும் பொழுது அரட்டை அரங்கத்திற்கு என்னைப்பேச  அழைத்துப்போன நம்பிக்கைகாரர் அவர் .நான் பன்னிரெண்டாம் வகுப்பில் அம்மா எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறமால் போனாலும் ,”அடுத்தது என்னனு பாரு !”என்கிற அப்பாவின் நம்பிக்கை ஊட்டுகிற வார்த்தையில் மாற்றம் இல்லை.பெண்களை எல்லாம் அவரை விட பெரிதாக மதித்து விட முடியாது !அவரின் ஒரு பிரதிபிம்பாகவே நான் முயற்சிக்கிறேன் !அவருக்கு ஒழுங்காக ஐந்து செட் துணிக்கிடையாது,ஆனால் நான் குவித்த பதக்கங்களை வைக்க இன்னொரு அலமாரி கட்ட வேண்டும் என சொல்கிற நம்பிக்கைகாரர்.மருத்துவன்,எழுத்தாளன்,கவிஞன் என விரிந்து பொறியியல் மாணவன் என என் கனவுகள் எப்படி எல்லாமோ மாறி இருக்கிறது ஆனாலும் அதே  காக்கி சட்டை ஒழுகும் வியர்வை அதோடு புன்னகையில் தெறிக்கிற நம்பிக்கையோடு இருக்கும் என் அப்பாவை பார்க்கிற பொழுதெல்லாம் ,”அப்பா நீ தான் என் தாயுமானவன் “என சொல்ல எண்ணி எண்ணி மனம் துடிக்கிறது !அவரின் நம்பிக்கை விதை தான் என்னை ஐம்பது நாடகங்களின் இயக்குனராகவும் ,ஐநூறு ஒட்டு பெற்று ஜெயித்த மாணவர் தலைவனாகவும்,மூன்று முறை வினாடி வினாவில் மாநில முதல்வனாகவும்,கம்பராமாயண ,பெரியபுராண ,திருவாசக சொற்பொழிவாளர் ஆகவும் ,இருநூறு  மேடை தொட்டவனாகவும் ,பல பள்ளி மாணவரின் மன  காயம் துடைக்கும் நண்பனாகவும் ,இன்னமும் சொல்வதென்றால் யாருக்கும் தலைவணங்காத நேர்மைக்காரனாகவும் ஆக்கி இருக்கிறது .ஆனாலும் இப்படி தான் என்னை இந்த உலகம் அறிய ஆசை ,”காஸ் மெக்கானிக் பூங்காவனத்தின் மகன் இவன் !”அப்பா இந்த கட்டுரை இருபது வருடமாக உங்கள் காலை தொட்டாலும் இன்னமும் தொட முடியாத  உயரத்தில் அன்பு காட்டும் உங்களுக்கான ஒரு சிறு சமர்ப்பணம் .அம்மாக்களால் உலகம் புனிதம் அடையலாம்,ஆனால் அப்பாக்களால் தான் அழாமல் இருக்கிறது .