இவை போதும்!


சில கடிதங்கள் அப்படியே அனுப்பப்படாமல்
உள்ளறையில் காத்திருக்கின்றன
சில சொற்கள் நெஞ்சுக்குழிக்குள்
ஊர்க்குளம் தப்பிய மீனாய் குதிக்கின்றன
சில போர்கள் அறிவிக்கப்படாமல்
நடத்தப்படும்
சிதறிக்கிடக்கும் கொப்புளங்கள்
யாரின் கண்ணீரால் நனையவோ வெம்பிச்சிரிக்கும்
எப்பொழுதும் நடக்கும் சாலைகளில் சில குருவிகள் நமக்காக
பாடக்காத்திருக்கும்
விழாக்களின் இருக்கைகள் வெறித்திருக்கையில்
ஒரு வானம் அளவுக்கு பரவிட நினைவுகள்
கிடந்தும்
வீட்டின் அலமாரியில் ஒதுங்கி நின்றழுத இடம் போதும்!

அவர்கள் இருக்கிறார்கள்!


அணிகிற உடையின் உயரத்தை
அரைநிர்வாண சாமியார்கள் நிர்மாணிக்கிறார்கள்
எதைப் பெருக்க வேண்டும்
எனச்சொல்லாமல் துடைப்பத்தைத் தந்துவிட்டுப் படம் எடுக்கிறார்கள்
பெற வேண்டிய பிள்ளைகளின்
எண்ணிக்கையை எல்லாம் அறிந்த ஆன்மிகவாதிகள்
தெரிவிக்கிறார்கள்
உண்ண வேண்டியதை ஊசிப்போன
சட்டங்களைத் தூசுதட்டி முடிவு செய்கிறார்கள்
பார்க்க வேண்டிய படங்களின்
பட்டியலை, கேட்க வேண்டிய வசனங்களை
பார்த்து பார்த்துச் செய்து பரிதவிக்கிறார்கள்
படிக்க வேண்டியதை பெருங்கதைகள்
சொல்லி நிறைக்கிறார்கள்
யாருடன் சேர்ந்து சுற்ற வேண்டும் என்று
சுற்றறிக்கைகள் விடுகிறார்கள்
தின்பது
கண்ணயர்வது
காண்பது
களிப்பது
கலப்பது
குளிப்பது
கழிப்பது
என்று அனைத்தையும் நமக்காகக் கவனித்துக்கொள்ள யாரோ
இருக்கையில் கவலையற்று குப்புறப்படுத்து
தூங்குங்கள்

பாப் மார்லி எனும் இசைப்போராளி!


மார்லியின் அப்பா ஆங்கிலேயர், அம்மா ஜமைக்கா பகுதியில் வாழ்ந்த ஆப்ரிக்கர். உலகம் முழுக்க அப்பா சுற்றிக்கொண்டே இருந்தவர் . அவரை அரிதிலும் அரிதாகத்தான் பார்த்தார்; பத்து வயதாகும் பொழுது தந்தை இறந்தே போனார் .

அம்மா எவ்வளவோ கடினப்பட்டுப் படிக்க வைத்தார். இவரின் நாட்டமோ இசைமீது போனது. ஜமைக்காவில் கறுப்பின மக்கள் சரியாக நடத்தப்படாத காலம் அது; ரப்பர்தோட்டங்களில் மிகவும் இன்னல்களுக்கு வெள்ளையர்களால் உள்ளாக்கப்பட்டார்கள். மார்லி தெருவோரம்,கடைநிலை மக்கள் வாழும் இடங்களில் ஒலித்த ரெகே இசையை விரும்பி கற்றார், தன் இசையால் பிரபலம் ஆனார். ஆனால் ராயல்டி தராமல் ஏமாற்றிய பொழுது ப்ளாக்வெல் எனும் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டார்; ஒழுங்காகப் பணம் வர ஆரம்பித்தது .

அவரின் இசை மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் குரலாக ஒலித்தது. ரப்பர் தொழிலாளிகளின் கண்ணீரை வடித்தார். எளிய மக்களின் இசையாகப் பார்க்கப்பட்ட ரெகே இசை இவரால் உலகம் முழுக்கப் பிரபலம் ஆனது. இவரின் இசைக்கோர்வைகள் மூன்றாம் உலக நாடுகளின் முதல் பாப் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை இவருக்கு வழங்கியது
நாடு முழுக்க வன்முறை சூழல் நிறைந்திருந்த பொழுது அன்பு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்வதாக இவரின் பாடல்கள் இருந்தன. ‘அன்பினால் ஒரே உலகம் செய்வோம் !’ என்கிற தொனிப்பொருளில் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டன .”கோபம் குறை ! போர்களில் வலிமை பெறு!” என்று அவரின் கீதங்கள் அறிவுறுத்தின.

இவர் அமெரிக்கா போன பொழுது இசை நிகழ்வை ஒரு நாடகத்தோடு நடத்த கூப்பிட்டவர்கள் இவரின் இசை நிகழ்வு நாடகத்தை விட ஹிட் ஆனதால் பாதியிலேயே வெளியேற்றினார்கள் . காசில்லாமல் நடுத்தெருவில் நின்றவர் தப்பித்து நாடுவந்து சேர்ந்தார் .
பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவர் ; பலநாள் தான் வளர்ந்த அழுக்கு நிறைந்த சாலையில் படுத்து இதுதான் ஏகாந்தம் எனப் பூரிப்பார் . இறப்பதற்கு முன்னர்த் தன் மகனிடம் ,”பணத்தால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது !” என்று சொன்னார். அவரின் மறைவுக்குப்பின் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதை அமெரிக்கா வழங்கியது ; அவரின் பாடல் மற்றும் ஆல்பங்கள் நூற்றாண்டின் மிகச்சிறந்த இசைக்கோர்வைகளாகக் கொண்டாடப்படுகின்றன .

போரிட்டுக்கொண்டு இருந்த ஜமைக்காவின் குழுக்களுக்கு இடையே அமைதியை உண்டு செய்ய ஸ்மைல் ஜமைக்கா எனும் இசை நிகழ்வை நடத்தப்போக அது உயிருக்கே ஆபத்தானது .விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்த் துப்பாக்கி ஏந்திய குழு இவரையும் மனைவியையும் தாக்க இசை நிகழ்வு நடக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டோடு வந்தார் மனிதர் பாடினார். 80,000 பேர் திரண்டார்கள் …
ஸ்மைல் ஜமைக்கா இசைநிகழ்வின் பொழுது “நீங்கள் உயிருக்கு பயப்படவில்லையா ?” எனக்கட்டுகளோடு வந்த இவரைக் கேட்ட பொழுது “உலகத்துக்குத் தீமை செய்பவர்களே பயப்படாத பொழுது இந்த உலகை அன்பால் நிறைக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும் ?” எனக்கேட்டார். அதுதான் மார்லி
அவரின் Get up, stand up பாடலின் மொழிபெயர்ப்பு உங்களுக்காக :
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
போதிக்கும் ஆசாமியே ! சொர்க்கம் பூமிக்கடியில் என்று சொல்லாதே எங்களிடம் !
வாழ்க்கையின் அர்த்தம் உனக்குத் தெரியாது
என நான் அறிவேன்
தகதகப்பது எல்லாம் தங்கமில்லை அல்லவா ?
பாதிக்கதை எப்பொழுதும் பாடப்படுவதே இல்லை
இப்பொழுது தெரிகிறதில்லையா வெளிச்சம் ?உன் உரிமைக்காக எழுந்து நில் ! துணிந்து வா
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு,வாழ்க்கை உன் உரிமை
ஆகவே,போரிடுவதை நிறுத்திட முடியாது !
உன் உரிமைக்காக நிமிர்ந்து நின்றிடு
இறைவா இறைவா
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு போரை தொடர்ந்து நிகழ்த்து
போராடுவதை நிறுத்தாதே
உங்கள் இசங்களும்,போலி ஆட்டங்களும் எங்களுக்கு அலுத்துவிட்டன
இறந்திடு,சொர்க்கத்துக்குக் கர்த்தரின் பெயரால் சென்றிடு,இறைவா
எங்களுக்குப் புரியும் பொழுது எங்களுக்குத் தெரியும்
எல்லாம் வல்ல இறைவன் வாழும் மனிதன்
சிலரை சில நேரம் ஏமாற்றலாம்
எல்லாரும் எல்லாக் கணங்களிலும் ஏமாற மாட்டார்கள்
ஆகவே பேரொளியை பாருங்கள்

நாம் நம்மின் உரிமைக்காக உறுதியாக நிமிர்ந்து நின்றிடுவோம்
ஆகவே நீ எழுந்திடு,நின்றிடு,உன் உரிமைக்காக நிமிர்ந்து நின்றிடு
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு – நூல் அறிமுகம்!


அம்பையின் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு சிறுகதைத் தொகுப்பை இன்று வாசித்து முடித்தேன். சுதா குப்தா என்கிற துப்பறியும் நிபுணரின் அனுபவங்களின் கோர்ப்பாக இந்த மூன்று நெடுங்கதைகள் அமைந்துள்ளன. ஒரு துப்பறியும் நிபுணரின் அனுபவங்கள் என்றாலும் இவை நிச்சயமாகத் துப்பறியும் கதைகள் மட்டுமே அல்ல. பெண் மனதையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், வன்முறைகள் நிறைந்த உலகில் மீண்டும் மீண்டும் அதிலேயே போய் வீழ்வதற்கான போக்கை விட்டு வெளியேற மறுக்கும் பெண்கள் என்று பலதரப்பட்ட அம்சங்கள் கடத்தப்பட்டிருக்கின்றன.

சுதா குப்தா பாத்திரப் படைப்பைப் பற்றி மூன்று கதைகளிலும் நமக்குச் சுவாரசியமான குறிப்புகள் காத்திருக்கின்றன. அதிலும் காதலை ஏற்றுக்கொள்ளும் காட்சியில் அவரிடம் தெரியும் கம்பீரமான கவனிப்பு உங்களை அசரவைக்கும். சுதா இறுதி வரை அதட்டிப் பேசாமல், அதிரடிக்கும் சாகசங்கள் புரியாமலேயே துப்பறிதலை மனித மனங்கள், சம்பவங்களின் வழியாகச் செய்ய வைத்ததில் அத்தனை இயல்புத்தன்மை.

மெல்லிய நகைச்சுவை ஒன்று ஊடாடிக்கொண்டு இருப்பது கதைகளின் வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தாமல் நகரச் செய்கிறது. கொடிய பசி கொண்ட மிருகமாக இருக்கும் ஒரு நபருக்குக் கூட அவனின் செயல்களுக்கு ஆயுள் ‘தண்டனை வழங்கப்பட்டது’ என்று அம்பையால் தான் எழுத முடியும்.

காதல் என்றால் என்னவென்றே உணராமல் இருக்கும் சிங்காரவேலு ஆறுமுகம் கதாபாத்திரமும், ஸ்டெல்லாவும் அத்தனை வேகமாக மனதில் அவர்களின் வாழ்க்கையால், பார்வையால் ஒட்டிக்கொள்கிறார்கள். பிரசங்கம் செய்யும் எழுத்து பாணியில் எந்தக் கதையும் எழுதப்படவில்லை. பாலச்சந்தர் துவங்கி சாய் பாபா வரை பலரின் மீதும் விமர்சனங்கள் அப்படியே இயல்பாக வைக்கப்பட்டு நகர்ந்தாலும் மையச்சரடான மனிதர்களின் மனங்களை வெளிப்படுத்தல் தொய்வில்லாமல் சுதா குப்தா, கோவிந்த் ஆகியோரைக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. ஆனாலும், மழையில் நனைந்து படகு விட்டு, குழந்தைகளின் மேலே விழுந்து ரசிக்கும் வாழ்க்கை அப்படியே இருக்க உலகம் விட்டுவிடுவதில்லை என்கிற உண்மையை இந்த அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்புத் தொகுப்பு தரும்.

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
அம்பை
காலச்சுவடு வெளியீடு
பக்கங்கள்: 118
விலை:100

ஆமாம் ! இஸ்லாமில் சீர்திருத்தங்கள் தேவை


சிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும், கல்வியாளருமான சர் சையது அகமது கான் இறைவனின் வார்த்தையை மறுவாசிப்பு செய்வதன் மூலம் இறைவன் மற்றும் உலக உயிர்களுக்கு இடையே ஒத்திசைவை உண்டு செய்ய வாதாடினார். மனித உயிர்கள், இறைநம்பிக்கை இரண்டுக்கும் இடையே போராட்டம் வருவது போலத் தோன்றினால் இப்படி மறுவாசிப்பு நிகழ வேண்டும் என்று அவர் கருதினார்.

சையது அகமது கானின் பார்வையில், “குரான் கடவுளின் வார்த்தை. இந்த உலகில் பார்க்கும் எல்லாமும் இறைவனின் படைப்பே.” ஆகவே, இறைவனின் படைப்புக்கும், இறைவனின் சொல்லுக்கும் இடையே எந்த முரண்பாட்டையும் யோசித்தல் சாத்தியமற்றது என்றார். “நாம் ஏதேனும் முரண்பாட்டைக் கண்டோம் என்றால் நாம் இறைவனின் வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்றே பொருள்.
இந்த மாதிரியான சூழல்களில் நாம் இறைவனின் வார்த்தை பற்றிய நம்முடைய பார்வையை மறு ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இறைவனின் வார்த்தை, படைப்பு இரண்டுக்கும் இடையே ஒத்திசைவைக் கொண்டு வருவதற்கு நாம் பாடுபட வேண்டும்.” என்று அவர் எழுதினார். ஆகவே, இறைவனின் வார்த்தைகள் நீங்கள் எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வழிகாட்டினாலும், அந்த வார்த்தைகளின் நடைமுறை பயன்பாடு, செயல்பாடு ஆகியவை அக்காலச் சூழல்கள், காலத்தின் தேவைகளைப் பொருத்து முடிவு செய்யப்பட வேண்டும்.

சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களின் மிருகத்தன்மை-அதாவது பெஷாவர் பள்ளிப் படுகொலைகள், பாரீஸ் தாக்குதல்கள் இரண்டிலும் ஈடுபட்டவர்கள் இந்தக் காட்டு மிராண்டித்தனத்துக்கு இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தாங்கள் தூக்கிப் பிடிப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். இதனால் இந்தக் கேள்வி எழாமல் இல்லை, “இஸ்லாமில் சீர்திருத்தம் தேவைப்படுகிறதா? அதைச் சீர்திருத்த முடியுமா?”

இரண்டுக்குமே ஒரே பதில், “ஆம்! முடியும்.”

இஸ்லாமின் பெயரால் நடைபெறும் ஒவ்வொரு இரக்கமற்ற கொலைக்கும் பின்னால், ஒரு சராசரி இஸ்லாமியர் அழுத்தத்துக்கு உள்ளாகிறார். அல்லது தானாகவே அந்தத் தீவிரவாதிகளை விமர்சிப்பதை செய்வது முக்கியம் என்று கருதுகிறார். அவர்கள் அனைவரும் கொலையாளிகளின் மதம் தங்களின் மதமில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், கால ஓட்டத்தில் தாக்குதல்கள் கூடிக்கொண்டு போகப் போக உலகம் இஸ்லாமை ஒரு சிக்கலாகப் பார்க்க ஆரம்பிப்பது அதிகரித்து உள்ளது.

இஸ்லாம் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருந்து விட்டது. மற்ற மதங்கள் சீர்திருத்த இயக்கங்கள், மாற்றத்தை முன்னெடுப்பவர்களை ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்தன. இஸ்லாம் ஒரு ஏழாம் நூற்றாண்டு நம்பிக்கையாக நின்றுவிட்டது. நிறுவனமயமாக்கப்பட்ட மற்ற மதங்கள் இந்த இறைவன்-உலக உயிர்கள் சமநிலையைத் தக்கவைத்ததன் மூலம் அதன் பற்றாளர்கள் இரண்டும் ஒன்றுகொன்று எதிரானதாகப் பார்க்காமல், ஒன்றை இன்னொன்று முழுமைப்படுத்துகிற ஒன்றாகக் காண்கிற நிலையை எட்டினார்கள். ஆகவே, அவர்களின் நம்பிக்கை சொந்த வாழ்க்கையோடு தொடர்புடைய ஒன்றாக அமைந்து விடுகிறது, உலகத்தைப் பார்க்கும் கண்ணாடியாக மதத்தை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. இஸ்லாம் இன்னமும் இந்தச் சமநிலையை அடைய வேண்டியிருக்கிறது. சிலாமியர்கள் இறைவன், உலக உயிர்கள் இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதோ அல்லது அவற்றுக்கிடையே ஆன போராட்டம் என்றோ காணாமல் இரண்டையும் பிணைத்து வாழ்வது கடினமான ஒன்றாக இருக்கிறது.

இதற்காக ஒரு சராசரி முஸ்லீம் மீது குற்றம் சொல்லலாமா? அல்லது இந்த மாறாத மனோபாவம் மதத்தைச் சுற்றியுள்ள சூழலோடு தொடர்ந்து உரசலுக்கு அழைத்துச் செல்கிறதா? எல்லா மத நூல்களும் அவை எப்படி வாசிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து நல்லதாகவோ, தீயதாகவோ மாற முடியும். துரதிர்ஷ்டவசமாக வன்முறை, வெறுப்பை முன்னெடுக்கும் பற்றாளர்களின் குரல்கள் தான் பெரும்பாலும் கேட்கிறது.

காந்தியும், விவேகனந்தரும் கண்ட கீதையின் வாசிப்பு கோட்சே, மோகன் பகவத் வாசிப்பதில் இருந்து மாறுபட்டது. அதே போல மவுலானா ஆசாத், மவுலானா வாஹிதுதின் கான் குரானை வாசிப்பது பக்தாதி, பின் லேடனின் வாசிப்பில் இருந்து மாறுபட்டது. ஆகவே, நூலை குறைசொல்வது பற்றாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவரையும் எங்கும் கொண்டுபோய்ச் சேர்க்கப்போவதில்லை, நூலானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலில் எழுதப்பட்டது. அதன் வாசிப்பும், அதன் விளக்கமும் காலத்துக்கு ஏற்றார் போல மாறவேண்டும்.

இஸ்லாமில் சீர்திருத்தத்துக்கு வருவோம். இஸ்லாம் தோன்றிய காலத்தில் நிலவிய பல்வேறு அவலங்களுக்கு எதிராக அம்மதம் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்ததால் தொடர்ந்து மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. இன்று நம்பிக்கை என்கிற பெயரால் நமக்குக் கிடைப்பது திரிக்கப்பட்ட, பழமைவாதம் நிரம்பிய வாசிப்பு தான். ஆன வாசிப்புதான். இஸ்லாமின் இரண்டு ஆரம்பகால நூற்றாண்டுகள் அறிவியல், நவீன புத்தாக்கங்களில் மாபெரும் சாதனைகளால் நிரம்பியிருந்தது. ஆனால், 13-ம் நூற்றாண்டு துவங்கியே அறிவுச்சூழல் பழமைவாத சேற்றில் மூழ்கி காணாமல் போனது. கல்வி, அறிவியல் விசாரணை, புத்தாக்கம் கெட்ட வார்த்தைகளாக மாறின.

நீதிபதி அமிர் அமீர் அலி தன்னுடைய ‘இஸ்லாமின் மெய்ப்பொருள்’ எனும் அற்புதமான நூலில் ஒரு அரேபிய ஆசிரியரின் கருத்தை குறிப்பிடுகிறார், “அரேபியா எண்ணற்ற கலிலியோக்கள், நியூட்டன்கள், கெப்ளர்கள் ஆகியோரின் தேசமாக இருந்திருக்கலாம், ஆனால், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து இறையியல், சட்டத்தைத் தவிர மற்ற எதிலும் அறிவு பெறுவது வீணானது என்கிற எண்ணம் இஸ்லாமிய உலகின் வளர்ச்சியைத் தடை செய்துவிட்டது. இந்தக் காலம் வரை இது அறியாமை, அறிவுத்தேக்கம் ஆகியவற்றுக்கு முக்கியமான காரணமாகத் திகழ்கிறது.”

இந்த மதிப்பீடு சரியே என்பதற்கு உலக அளவில் இஸ்லாமிய தேசங்களின் நிலையே சான்று. சில செல்வவளம் மிகுந்தவையாக இருந்தாலும் மனித உரிமைகள், பாலின சமத்துவம், ஜனநாயகம், புத்தாக்க குறியீடுகள் ஆகியவற்றில் கடைசி இடங்களில் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன.

இந்த அரேபிய மனோபாவத்தில் இருந்து இஸ்லாம், இஸ்லாமியர்கள் மீட்கப்பட வேண்டும். இஸ்லாமின் நூல், மதத்தத்துவம் ஆகியவற்றைப் பழமைவாதத்திடம் இருந்து காப்பாற்றி நவீன, அறிவியல் விசாரணைக்கு ஏற்ப கருத்துக்கள், வாசிப்புகளைப் பரப்ப வேண்டும். சுன்னி இஸ்லாமில் போப்பை போன்ற மதத்தலைவர் இல்லை என்பது உண்மை என்றாலும் உல்லாமாக்கள், அரசு இரண்டுக்கும் இடையே உள்ள புனிதமற்ற தொடர்பு ஆணாதிக்க, ஜனநாயகத்தன்மையற்ற, பழங்காலக் குரான் வாசிப்பையே வழங்க காரணமாக இருக்கிறது. இந்த இரு சார்பினரும் தங்களுடைய கொடூரமான செயல்பாடுகளுக்கு மதத்தில் இருந்தும், திரிக்கப்பட்ட இறைவாசகத்தில் இருந்தும் பாதுகாப்பு தேடுகிறார்கள்.

இஸ்லாம், இஸ்லாமிய கற்றல் ஜனநாயகமயமாக வேண்டும். மவுலானா ஆசாத் ஒரு முறை குறிப்பிட்டது போல, “வரலாறு முழுக்க உல்லாமாக்களின் செயல்கள் ஒவ்வொரு காலத்திலும் இஸ்லாமுக்கு அவமானம், களங்கம் ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறது.”

சவுதி எண்ணெயை மட்டுமல்லாமல் இஸ்லாமின் பெயரால் பழமைவாதம், காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்கிறது. இது எந்த வகையிலும் மாற்றத்தையோ, சீர்த்திருத்ததையோ கொண்டு வராது. மேற்கிலுள்ள சவூதியின் நண்பர்கள் அதனுடைய கண்மூடித்தனமான போக்கை ஆய்வு செய்ய வேண்டும். சவூதி அரேபியா இஸ்லாமிய வளர்ச்சி, புரிந்துணர்வு ஆகியவற்றுக்கு மற்ற எந்தச் சக்தியை விடவும் பெரிய தீங்கை புரிந்துள்ளது. சவூதியின் இஸ்லாம் பற்றிய பார்வையை நிராகரிக்க வேண்டிய தருணம் இது. மீட்டெடுத்தல் என்பதில் மீண்டும் விழிப்புணர்வு கொள்ளுதல் இல்லையென்றால் அதில் பயனில்லை.

கெய்ரோவின் அல் அசார் பல்கலையில் இஸ்லாமிய சீர்திருத்தங்களுக்கு எகிப்திய அதிபர் குரல் கொடுத்தார். அவரைப் புதிய அட்டடுர்க், இஸ்லாமிய மார்டின் லூதர் கிங் என்றெல்லாம் பரவலாகப் புகழ்கிறார்கள். சீர்திருத்தத்துக்கு ஒரே மாதிரியான நிலையான அணுகுமுறை விடையல்ல என்றே எண்ணுகிறேன். சீர்த்திருத்தத்துக்கான குரல் கீழிருந்து இஸ்லாமிய மறு விழிப்பில் பங்குடைய எளிய ஆண்கள், பெண்களிடமிருந்து எழ வேண்டும்.

இஸ்லாமிய மறுமலர்ச்சி மக்கள் திரளால் ஏற்பட வேண்டும், முல்லாக்களால் ஏற்படுவதாகச் சொல்லப்படும் மறுமலர்ச்சி எல்லாம் காலாவதியான ஒன்று.
மூலம் :
http://www.ndtv.com/arti…/…/yes-islam-needs-to-reform-647551
கட்டுரையாசிரியர் முகமது ஆசிம் NDTV 24×7 சேனலின் மூத்த செய்தி ஆசிரியர்

ரோமைன் ரோலண்ட் எனும் மனிதநேயர் !


ரோமைன் ரோலண்ட் எனும் மாபெரும் மனிதநேயர் மறைந்த தினம் டிசம்பர் முப்பது.
பிரான்ஸ் தேசத்தில் 1844 இல் பிறந்த இவர் தத்துவத்தில் பட்டம் பெற்றார்; ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். எனினும் காலப்போக்கில் ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு உண்டானது; மாணவர்களை அரட்டி,உருட்டி மிரட்டும் அது  அவரின் கனிவான சுபாவத்துக்கு ஒத்துவராத பண்பாக இருந்தது.

வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார் .அவரின் ஆரம்பகால நாடகங்கள் பெரிய
வரவேற்பை பெறவில்லை; அவரை டால்ஸ்டாயின் எழுத்து ஈர்த்தது. பீத்தோவனின் இசைக்கோர்வை அவரை ஈர்த்தது; ஓயாத உழைப்புக்காரர் ஆன மைக்கேலாஞ்சேலோவும்
தான். மூவரின் வாழ்க்கை வரலாற்றையும் அற்புதமான நூல்கள் ஆக்கினார் .

அவருக்கு இந்தியாவின் ஆன்மீகத்தின் மீது காதல் வந்தது; இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார் .தாகூரை அவர் அவர் தேசத்தில் சந்தித்த
பொழுது ,”நீங்கள் விவேகானந்தரை படித்தால் இந்தியாவைப் புரிந்துகொள்ளலாம்.” என சொல்லப்படவே இவர் அவரின் நூல்களை வாசிக்க ஆவல் கொண்டார் .இவருக்கு ஆங்கிலம் தெரியாது; பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தன . இவரின்  சகோதரியின் உதவியோடு அவற்றைப் படித்து நெகிழ்ந்து போனார் .The Life of Ramakrishna andSwami Vivekanandas Life and Gospels.என்கிற அற்புதமான நூலை எழுதினார் .

ரோலண்ட் குறுகிய மனப்பான்மை கொண்டு நாடுகள் சண்டைப்போடுவதைக் கண்டு மனம்
நொந்தார் . இரண்டு வெவ்வேறு துருவங்கள் எனக்கருதப்படும் மனிதர்கள் அன்பால் இணைய முடியாதா? எனக் கேள்வி எழுப்பிக்கொண்டார் . அதை JEAN-CHRISTOPHE என்கிற தன் நாவலுக்குக் கருப்பொருள் ஆக்கினார்; கதையின் நாயகன் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞன் அவன் இக்கட்டான சூழல்களிலும் பிரான்ஸ் தேசத்து இளைஞன் ஒருவன் மீது நட்பு பாராட்டுகிறான் -நாடுகளைக் கடந்து அன்பால் மனிதர்கள் இணைய முடியும் என அடித்துச் சொன்ன ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

காந்தியை மிகவும் நேசித்தார். அவரைச் சந்தித்த பொழுது காந்தி தன்னை முத்தமிட்ட தருணத்தைப் புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின்  முத்தத்தோடு ஒப்பிட்டு சிலாகித்தார் .காந்தியை பெரும்பாலும் நம் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு ஜீவனாக மட்டுமே பார்க்கிறோம்; ஆனால்,ரோலண்ட்  அப்படிப் பார்க்கவில்லை,உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கிற ஒரு மனிதராகத் தான் அவரை அவர் பதிவு செய்கிறார் . அதை ஜெயகாந்தன் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். காந்தியை  பற்றிய இவரின் நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. உலகமே பாசிசம் கண்டு அஞ்சிக்கொண்டு இருந்த பொழுது இவர் வன்முறையின்மையை (PACIFISM ) காந்தியின்  வழியில் வலியுறுத்தினார் .

பார்க்கக் கூடாத படமா ‘PK’ ?


திரையரங்கம் போய் பார்க்கிற இரண்டாவது ஹிந்தி திரைப்படம் ‘PK’. படம் சிறப்பாக இருக்கிறது என்று விமர்சனங்கள் தொடர்ந்து வந்ததால் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் போய் அமர்ந்தேன். எனக்குள் இருந்த வரலாற்று மற்றும் மானுடவியல் மாணவனுக்கு தலைவாழை விருந்தாக இந்த கமர்ஷியல் படம் அமைந்திருக்கிறது. ரசிகர்கள் பல இடங்களில் கைதட்டி,குதூகலித்து கடைசியாக ஒரு படத்தை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. படம் வெகு விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் போவதால் அதைப் பற்றிய விவரிப்பை இந்த கட்டுரையில் பெரும்பாலும் செய்யப்போவதில்லை.

ஒரு குழந்தை எந்த அடையாளமும் இல்லாமல் தனக்குள்ளும்,சக மனிதர்களுக்குள்ளும் இருக்கும் மனிதத்தை மதங்களை கடந்து தேடினால் என்னாகும் ? கடவுளின் தரகர்கள், தூதுவகள் என்று சொல்லிக்கொள்பவர்களை நோக்கி நீங்கள் கேள்விகள் கேட்டிருக்கிறீர்களா ? படிக்காதவர்களை மந்தைகள் என்று விமர்சிக்கும் எத்தனை பேர் சாமியார்வசமும், மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போய் இருக்கிறோம் ? இந்தக் கேள்வியை வெவ்வேறு வகைகளில், ராங் கால் என்கிற அம்சத்தின் மூலம் வெற்றுக்கிரகவாசியான PK வைக்கிறான்.

சொந்த விஷயமான மதத்தைப் பற்றி பொது வெளியில் பேசுகிறீர்கள். ஏன் ஆணுறையை யாரும் உரிமை கொண்டாட மறுக்கிறீர்கள் என்று PK கேட்க, உடலுறவு சொந்த விஷயம் என்று பதில் சொல்கிறார் நாயகி. அப்படி ;என்றால் ஏன் உடலுறவு கொள்ளப்போவதை பெரிய விழா எடுத்துச் சொல்கிறீர்கள் ? என்று அப்பாவியாக கேட்கையில் விசில் பறக்கிறது.

டீ விற்பவனையும், கடவுளை விற்பவனையும் ஒப்பிட்டு பேசும் இடம் இன்னுமொரு கவிதை. அங்கே பெருத்த மூலதனம் தேவை,இங்கே ஒரு கல்,குங்குமம் போதும். அங்கே ஆட்கள் ஆறஅமர அருந்தி ரசிக்க வேண்டும்,இங்கே துரத்திக் கொண்டே இருப்பது தான் வியாபார டெக்னிக். அங்கே நிமிர்ந்து நின்று வேண்டியதை பெறுவீர்கள், இங்கே பயத்தை மூலதனமாக்கி குனிந்து, குனிந்தே வாழ்க்கை கடக்க வைக்கப்படுகிறது.

நமக்குள் இந்த மதத்தவர் இப்படித் தான் என்கிற முத்திரைகள் ஆழமாக பதிந்து போயிருக்கின்றன. பேஷன் என்கிற அணிகிற ஆடைகள்,அடையாளங்களை கொண்டே ஒரு மதத்தினை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கிற எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்பது எவ்வளவு அபத்தமானது. இவர்கள் ஏமாற்றுவார்கள், சாமியார்கள், தேவ விசுவாசம் சொல்பவர்கள் எல்லாம் புனிதர்கள் என்று நாம் ஏன் நம்புகிறோம் ? உலகை படைத்ததாக நீங்கள் நம்பும் கடவுள் அப்படியெல்லாம் செய்ய வைப்பாரா ?

பகுத்தறிவை பயன்படுத்த ஏன் சாமியார்கள் முன் மறந்து போகிறோம். நம்முடைய உளவியல், சொந்த சிக்கல்களுக்கு கோயில்களில், தர்காக்களில், சர்ச்சுகளில், ஆசிரமங்களில் தவங்கிடக்க சொல்லித் தரப்படுகிற நமக்கு ஏன் அந்த சிக்கலை எதிர்கொள்ள சொல்லித்தரப்படுவதில்லை. எல்லா சிக்கலையும் தீர்க்க வல்ல கடவுளின் தூதர்கள் ஏன் நம்மிடம் பணம் பிடுங்குகிறார்கள் ? இப்படி எக்கச்சக்க கேள்விகளை இந்த படம் எழுப்பிச் செல்கிறது.

. வன்மம் கொண்டு மனிதர்களை கொன்று கொண்டே இருந்தால் வெறும் ரத்தம் தோய்ந்த செருப்புகள் மட்டுமே மிஞ்சும் என்கிற குரல் பெஷாவர் சம்பவத்துக்கு பிறகு வரும் படம் என்பதால் அதோடு பொருந்திப் போவதாக தோன்றியது எனக்கு

வெவ்வேறு மதங்களின் செயல்பாடுகள்,கலாசாரங்கள் மாறுபட்டு நிற்கின்றன. அவை எந்த அன்பின் அடிப்படைக்காக எழுந்தனவோ அதை விடுத்து அடையாளங்களை நம் மீது சுமையாக திணிக்கும் வன்முறையை எதிர்த்து யோசித்து இருக்கிறீர்களா ? படத்தில் சிரித்துவிட்டு வீட்டில் லேபிள்களை கழற்றி வைத்துவிட்டு சிந்திக்க இந்த படம் வழிகோலும்.

இந்து மதத்தை மட்டுமே இந்தப்படம் குறிவைத்து தாக்குவதாக சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதைவிடத் தீவிரமான கேள்விகளை OMG படம் எழுப்பிய பொழுது இவர்கள் பாதுகாவலர் வேடம் தரிக்க மறந்து போனார்கள். படத்தில் கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கிய மதம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டே இருக்கிறது. படம் மனிதம் மனதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் தலைமுறையை நோக்கி எடுக்கப்பட்டு இருக்கிறது.
படத்தைப் பார்த்து சிரிக்கவோ, கொஞ்சமாக கண்ணீர் விடவோ, ஒற்றை அடையாளத்தை தூக்கிப் பிடிக்கிற நம்முடைய நாடகத்தனமான போக்கின் மீதான கேள்விகள் துளைத்தாலோ, சாமியார்களை சரமாரியாக கேள்விகளால் குடைய வேண்டும் என்றோ- இவற்றில் எதோ ஒன்று கூட தோன்றாமல் போனால் நல்ல மருத்துவரைப் பார்க்கவும். அன்பு செய்வதை மறந்துவிட்ட மதமெனும் பேய் பிடித்த அனைவருக்கும் அன்பு செய்ய கற்றுத்தருகிறான் PK

கைவிளக்கேந்திய காரிகை !


கைவிளக்கேந்திய காரிகை ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் :
இங்கிலாந்தின் உயர்குடியை சேர்ந்த வில்லியம் எட்வர்ட்
நைட்டிங்கேல் – பிரான்சஸ் ஸ்மித் தம்பதி இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை ப்ளோரன்ஸ் நகரில் பிறக்கவே அந்த பெண் குழந்தைக்கு அப்பெயரையே சூட்டினார்கள். பருவ வயது
வந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார்கள்.

“என்னிடம் மனம் முழுக்க அன்பு செலுத்து என்கிற குரல் தான் கேட்கிறது ! அதற்கான விடை கிடைத்த பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் !” என்று உறுதியாக
மறுத்துவிட்டு செவிலியர் பணிப்பயிற்சியில் இவர் இணைந்தார். செவிலியர் பணி என்பது அன்றைக்கு ஏழைப்பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இழிவான தொழிலாக
பார்க்கப்பட்டது. இவர் அதைப்பற்றி கவலைப்படாமல் சேவைப்பயிற்சியை முடித்தார். புன்முறுவலோடு நோயாளிகளிடம் ஆறுதல் வார்த்தை பேசினார் ; அவர்களின் காயங்களை துடைத்து மருந்து போட்டார். அவர்களுக்கு ஆறுதல் தந்தார்.

ரஷ்யா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த கிரிமியன் போரில் வீரர்கள் காயம்பட்டு உதவ ஆளில்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்து முப்பத்தி எட்டு செவிலியரோடு துருக்கி போனார். அங்கே வீரர்களுக்கு உதவிகளை போர்க்களத்தில் அஞ்சாமல் செய்தார். அவர்களின் வீட்டு முகவரியை கேட்டு கடிதம் மற்றும் பணம் அனுப்பினார். இரட்டை இலக்கத்தில் இருந்த மரண
சதவிகிதம் இவரால் ஐந்து சதவிகிதத்துக்கும் கீழே போனது. இரவெல்லாம் கூட கையில் விளக்கேந்தி வீரர்களுக்கு சேவை செய்ததால் அவரை கை விளக்கேந்திய
காரிகை என்று போற்றினார்கள்.

திருமணமே செய்து கொள்ளாமல் தொடர்ந்து நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டார். அவர் எழுதிய நோட்ஸ் ஆன் நர்சிங் நூல் இன்றைக்கும் இத்துறைக்கு வருகிறவர்களுக்கு வேதநூல். பன்னிரெண்டு
வருடங்கள் எழுந்து நடமாட முடியாத சூழலில் கூட செவிலியர்களின் செயல்பாடுகள் எப்படி அமையவேண்டும் என்பது போன்ற வெவ்வேறு தலைப்புகளில்
இருநூறு புத்தகங்களுக்கு மேலே எழுதியவர் அவர்.

அவரின் சேவைகளை பாராட்டி வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் டாலரை மிகப்பெரிய நர்ஸ் பயிற்சி நிறுவனம் அமைக்க முழுக்க கொடுத்துவிட்டார் அவர். “காலம்
மிகக்குறைவு ! ஆகவே,எல்லாரையும் அன்பு செய்யுங்கள் !” என்கிற
தாரகமந்திரத்தை போதித்து அப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அவரை நினைவு கூர்வோம்

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எனும் தத்துவ ஞானி


பிப்ரவரி இரண்டு :

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எனும் இணையற்ற சிந்தனையாளர்,தத்துவஞானி மறைந்த தினம் இன்று. இவரின் தாத்தா இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் ; மனிதர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். தனிமை வாட்டியது .பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றார் 

அப்பொழுது அவரை யூக்ளிட் எழுதிய வடிவியல் பற்றிய நூலும்,ஷெல்லியின் கவிதைகளும் கட்டிப்போட்டு மரணத்தில் இருந்து காத்தன . கணிதத்தை தர்க்கத்தின் மூலம் கற்க முடியும் என இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றன . கணித தத்துவவியல் எனும் இவரின் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது .

போருக்கு எதிராக உலகப்போர் சமயத்தில் குரல் கொடுத்து விரிவுரையாளராக இருந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .அணு ஆயுத போட்டியை தொடர்ந்து விமர்சித்தார் ..ஹிட்லர்,ஸ்டாலின் இருவரின் சர்வதிகார போக்கையும் விமர்சித்த இவர் ,அமெரிக்கா வியட்நாம் மீது போர் தொடுத்த பொழுது அதையும் எதிர்த்தார் / நாத்திகவாதியான இவர் மதத்தின் மீது கூர்மையான விமர்சனங்களை வைத்தார் .

இவரின் மேற்குலகின் தத்துவ வரலாறு நூல் பலபேரால் விரும்பி படிக்கப்பட்டது .இவரை ஒரு முறை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்த பொழுது ஏதேனும் விலை உயர்ந்த பொருள்கள் இருக்கிறதா எனக்கேட்க ,மிக விலையுயர்ந்த அறிவு உள்ளது என்னிடம் !”என்றார் கம்பீரமாக .அவரின் நினைவு தினம் இன்று 

அவர் பழமையோடு கூடிய தாராள நோக்கை பெற ஒரு கல்வியாளராக பத்து கட்டளைகள் தந்துள்ளார் .அவை :

எதைப்பற்றியும் தீர்மானமான முடிவெடுத்துக்கொண்டு செய்லாற்றாதே 

உண்மையை மறைத்து காரியங்களை சாதிக்காதே ;ஒருநாள் உண்மை வெளிப்பட்டு கட்டாயம் மாட்டிக்கொள்வாய் 

உன்னால் ஜெயிக்க முடியும் என்கிற எண்ணத்தில் உறுதியாக இரு ;சந்தேகம் என்பதையே மறந்துவிடு 

யாருடைய அடக்குமுறையை கண்டும் அஞ்சாதே ;எல்லா அடக்குமுறைக்கும் மாற்று இருந்தே தீரும்.ஆகவே அடக்குமுறைகளை முழுமையாகவே புறக்கணி 

உன்னை எதிர்ப்பது யாராக ஏன் உன் குடும்பத்து உறுப்பினராக இருந்தாலும் அவர்களிடம் உன் அதிகாரத்தைப் பயன்படுத்தாதே, விவாதத்தால்தான் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், அதிகாரத்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வெற்றி ஒரு மாயை, அது பொய்யானதும் கூட 

நாசகர சிந்தனைகளை அதிகாரத்தை கொண்டு கட்டுப்படுத்த முயலாதே ‘அவை அவற்றை மிஞ்சியும் தன் வேலையை காட்டும் 

கிறுக்குத்தனம் என உன் சிந்தனைகளை பிறர் ஒதுக்கினால் கவலைப்படாதே ;இன்றைய தலைசிறந்த சிந்தனைகள் என கொண்டாடப்படுபவையும் ஒரு காலத்தில் அவ்வாறே அழைக்கப்பட்டன 

அமைதியாக ஒத்துப் போவதைவிட அறிவார்ந்த வாக்குவாதங்களில் மகிழ்ச்சி காண வேண்டும் . பிறர் அறிவை நீ சரியாக மதிக்கிற பொழுது ஆழமான புரிதல் உண்டாகும் 

நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு ;அது கசப்பாக இருந்தாலும் அதை மறைத்தல் அதை விட துன்பகரமானது 

முட்டாள்கள் சந்தோசம் இங்கே எனக்கொண்டாடும் மலிவான விஷயங்களை பார்த்து பொறாமைப்படாதே .அவர்கள் தான் அவற்றை இன்பம் தருபவை என்பார்கள்

அமைதிக்கு ஆல்பர்ட் ஸ்வைட்சர்


ஆல்பர்ட் ஸ்வைட்சர் பிறந்த தினம் ஜனவரி பதிமூன்று .அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் இவருக்கு மருத்துவர்,பாதிரியார் ,இசை வல்லுநர்,தத்துவ நிபுணர்,சமூக சேவகர் என பல முகம் உண்டு .ஜெர்மனியில் பிறந்த இவர் அடிப்படையில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார் ;தொடர்ந்து தத்துவ வகுப்புகள் எடுத்து வந்தார் .பல்வேறு மதங்களின் கருத்துக்களை தொடர்ந்து படித்துவந்த இவர் ;இன்றைய வாழ்க்கைக்கு எப்படி அறம் சார்ந்த வாழ்வை இவற்றின் மூலம் கொண்டு வரமுடியும் என தொடர்ந்து யோசித்தார்;வாசித்தார்.உலகப்போர் சமயத்தில் ஆப்ரிக்காவில் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக
,மருத்துவம் பயின்றார் .அங்கே போர்கைதியாக மனைவியோடு சிலகாலம் கஷ்டப்பட்டார் .மனித வாழ்க்கையில் அறம் குறைந்து வருவதைகண்டு மனம் துடித்தார் .

சமண மதத்தின் உயிர்களை கொல்லாமை என்கிற கருத்து அவரை ஈர்த்தது ;உயிர் என்பது காக்க,அழிக்க அல்ல வாழ்தலின் அறம் உயிர்களை காத்தலும் ,பிற உயிரை முடிந்தவரை காயப்படுத்தாமலும்,கொல்லாமலும் இருக்க வேண்டும் என்ற அவரது ,”reverence of life”தத்துவம் ஆப்ரிக்காவில் காண்டாமிருக கூட்டத்துக்கு நடுவில் போகும் பொழுது உதித்தது .அதை அங்கே ஆப்ரிக்காவில் லம்பாரனே எனும் இடத்தில் மருத்துவமனை தொடங்கி எண்ணற்ற உயிர்களை காக்க ஆரம்பித்தார் ,அங்கே தன் தத்துவத்தை செயல்படுத்தினார் ,அவ்வூரின் மக்களுக்கு அதை விளக்கினார்,அன்பை [பரப்பினார் .அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது .அந்த பணத்தை தொழுநோய் சிகிச்சை மையத்தை அங்கே அமைக்க பயன்படுத்தி கொண்டார்.இன்று உலகம் முழுக்க அவர் காட்டிய தத்துவ பாதையில் பல்வேறு அமைப்புகள் உயிர்களை காத்து வருகின்றன