உன் குரலினும் உற்ற கீதம் உண்டோ அம்மா?


சில குரல்களுக்கு வயதே ஆவதில்லை என்று தோன்றும். அல்லது அக்குரல் எல்லா பருவங்களிலும் நம்மோடு அணுக்கமாக, நெருக்கமாக உரையாடும் ரசவாதம் கூட காரணமாக இருக்கலாம். எஸ்.பி.பி.யின் குரல் அத்தகைய கவர்ச்சியை காலங்களைக் கடந்து பரிசளித்துக் கொண்டே இருந்தது. ரஹ்மானின் குரலிலும் எப்போதும் உணர்வெழுச்சியை, புத்துணர்ச்சியை நல்கும் வசியம் உண்டு. கட்டுரை அதைப்பற்றியல்ல.

முதுமையால் பிடித்த பாடகர்கள் வரிகளை மறக்கும் போது ஏற்படும் பரிதவிப்பே தாள முடியாதது. ஞாபகங்கள் தவறி குழறும் உறவுகளின் குரல்களைப் போல நொறுக்குபவை வேறொன்றில்லை.  முதுமை, மூப்பு, நோய்கள் குறித்த கவலைகள் பெருந்தொற்று காலத்தில் பெருகி இன்று வரை கனவுகளிலும் அச்சுறுத்துகிறது.

என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாளின் குரலுக்கு வயதே ஆவதில்லை எனத் தோன்றும்.  உருவத்திற்கும், குரலிற்கும் தொடர்பில்லை என்பதைப் போன்ற ஆளுமை அக்குரலில் வெளிப்படும். மேடைப் பேச்சிற்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர் அளிக்கும் பயிற்சியே சுவை கூட்டுவது. ஏற்ற, இறக்கம், எங்கே நிறுத்துவது, எப்போது புன்னகைப்பது, எங்கே கைகள் உயர வேண்டும், எங்கே விரைய வேண்டும் என அனைத்தையும் பொறுமையாக சொல்லித்தருவார். அசோகமித்திரனின் புலிக்கலைஞனை அக்கணங்களில் ஏனோ நினைவுபடுத்துவார் அம்மா.

அநேகமாக அம்மாவின் பால்யம் முதல் இன்று வரை நோக்காடே விலகாத துணையாக வருகிறது. மஞ்சள் காமாலை, காசநோய் என்று அத்தனைத் தாக்குதல்களும் அவரின் குரலின் தன்னம்பிக்கையை சிதைக்க முடிந்தது இல்லை. வலியின்றி அவர் உறங்கிய நாட்கள் அரிதாகவே வாய்த்தன. ஆயினும், இன்றைக்கு தான் முதல் முறையாக பள்ளிக்குச் செல்லும் சிறுமியைப் போல் உற்சாகமாக அவர் பள்ளிக்குச் செல்வார். அத்தனை வலியும் ஊழித்தாண்டவத்தில் காணாமல் போகும் நிலத்தைப் போல மறையும். தமிழருவியாய் பொழியும். கதைப்பாடல்கள் கண்முன் விரியும். மெய்ப்பாடுகள் அவரை ஆட்கொள்ளும்.

அம்மாவை பெருந்தொற்றுக் காலம் மனதளவில் சோர்வடைய வைத்தது. குழந்தைகள் இல்லாத அவை வெற்று அறைகளாக அவரை வாட்டின. அவர் குரல் சவலையாக ஒலிக்கும்.  அவர்களைக் கண்ட முதல் நாள் அம்மாவின் குரலின் இளமை ஆச்சரியப்படுத்தியது.

அம்மாவிற்கு சமீபத்தில் உடல்நலம் பெருமளவில் குன்றியது. பக்கவாதம் அவரின் பேச்சையும், செயல்பாட்டையும் பதம் பார்த்தது. மருத்துவமனையின் அச்சுறுத்தும் சூழலில் கூட ‘நான் கொடியேத்தப் போயிருவேனில்ல?’ என்று மட்டுமே அவர் கேட்டார். ‘எப்படா என்ன ஸ்கூலுக்கு கூப்பிட்டுப் போவீங்க’ எனக்கேட்கையில் அக்குரலின் ஏக்கம் என்னவோ செய்தது. ஆயினும், மனவுறுதியாலும், மருத்துவத்தின் உதவியாலும் அம்மா தேறி வருகிறார்.

நேற்று தான் முதல் சுழி போட்ட சிறுமியைப் போல, எழுத்துகளை அசைவற்ற விரல்களால் உயிர்ப்பூட்டினார். அவை கண்ணாமூச்சி ஆடின. அவர் தளர்வார். உடைந்து போய் மீண்டும் முயல்வார். அவரின் குரலை நோய்மை வருத்தியது. மூப்பும், வாழ்வின் நிலையாமையும் இன்னமும் அருகே அச்சுறுத்தின. ஆயினும், அம்மாவின் மணி, மணியான கையெழுத்து மீண்டும் துளிர்த்தது. அவர் பள்ளித்தலம் நோக்கிச் சென்ற அந்நாள் அவரின் குரலில் அத்தனை நம்பிக்கை இல்லை. ஒவ்வொன்றிற்கும் பிறரைச் சார்ந்திருப்பதை அவர் வெறுத்தார். ஆயினும், பள்ளி வாசலை மிதித்ததும் அவரின் குரல் மறுபிறப்பெடுக்கும். காணொளியில் அத்தருணங்களை விழி நீர் வழியாமல் காணவே முடியாது. அம்மாவின் கடந்த காலக்குரல் தான் இப்போதும் ஒலிக்கிறதா எனத்தெரியவில்லை. ஆயினும், அக்குரல் அதிசயமானது. அது துவளாதது. முதுமை அருகே வருகையிலும் இளமையாய் முறுவலிப்பது. உடற்பிணி எவற்றின் தடயமும் இன்றி மிளிர்வது. அம்மா பாடிக் கேட்டதே இல்லை. அவரின் பேச்சினும் அரிய இசைக்குறிப்பு உண்டா என்ன?

(இன்றோடு அம்மா ஆசிரியப்பணியில் சேர்ந்து 26 ஆண்டுகள் நிறைவடைகின்றன).

அம்மா சிரித்தால் அத்தனை அழகு


அம்மா சிரித்தால் அத்தனை அழகு!

அன்னையர் தின சிறப்பு பகிர்வு..

காதலுக்கு இணையாக எல்லாரும் உருகி,மருகி கவிதை பாடுகிற உன்னதம் அம்மா தான். அம்மாவின் உலகம் எத்தகையது என்று நாம் எட்டிப் பார்க்க முயற்சித்து இருக்கிறோமா ? அம்மாவுக்கு என்று என்னென்ன ஆசைகள் இருந்தன,இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள முயன்று இருக்கிறோமா ?

அம்மா சமைப்பார்,மடியில் படுக்க வைத்து உறங்கவைப்பார்,நமக்கு ஒன்று என்றால் துடித்துப் போவார். நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற அற்புதம் அவள் ! அற்புதம் ! கைதட்டுவோம். அம்மாவின் கனவுகள் புடவை,நகைகள் என்று மட்டும்தான் இருக்கிறது இல்லையா ? அம்மாவுக்கு என்று ஒரு மனதிருக்கிறதே ! அப்பாவின் அல்லது வீட்டின் யாரோ ஒரு தலைமை பீடத்தின் மவுத் பீசாகவே பெரும்பாலும் அன்னை இருப்பதை கவனித்திருக்கிறோமா ?

நாளைக்கு நீங்கள் மணந்து கொள்ளப்போகிற பெண்ணும் அன்னை ஆவார். அப்பொழுது நம் அப்பாவைப் போலவே எனக்கும் இந்த அலுவல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கியே நிற்கப்போகிறோம் அப்படித்தானே ? நம் துணி ஒழுங்காக துவைக்கப் படவில்லை என்றால் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிவிடும் நாம் அம்மாவுக்கு அவளின் சுகாதாரத்தின் மீது எவ்வளவு அக்கறை இருக்கிறது என்று கவனித்திருக்கிறோமா ? நம்முடைய சில லட்சங்களும்,சொகுசுமா அவருக்கு ஆனந்தம் தருவது ? அம்மா சாப்பாடு சூப்பர் என்று எத்தனை பேர் சொல்லியிருக்கிறோம். அம்மா சிரித்தால் அத்தனை அழகு என்று சொல்லியிருக்கிறோமா ?

அன்னைக்கு என்று இருக்கும் குரலோ,அவருக்கு என்று இருக்கும் கனவுகளின் குரலோ நமக்கு கேட்பதே இல்லை. அதையெல்லாம் எதிர்பார்க்காத உன்னதம் அன்னை என்று புனிதப்படுத்தி அம்மாவை படுத்தி எடுக்காதீர்கள் ! அம்மா ஒரு காலத்தில் ஊஞ்சலில் அமர்ந்து ஆட ஆசைப்பட்டு இருக்கலாம் ; அவர் படித்த பள்ளியின் திண்ணையில் அமர்ந்து ஆனந்தப்பட ஆசைப்பட்டிருக்கலாம் ; ஒரு முறை சத்தம் போட்டு சிரிக்க விரும்பியிருக்கலாம் ; யாராவது அவள் பேசுவதை காது கொடுத்து கேட்பார்களா என்று ஆசைப்படலாம். அன்னை ஒரு நாள் வாழ்த்து சொல்லியோ ஒரு கவிதை வாசித்தோ கொண்டாடப்படவேண்டிய ஆளில்லை. அவளும் ரத்தமும், சதையும், மனசும், நம்மைப்போன்றே ஆசைகள் உள்ள ஒரு மனுஷி !

அம்மா அம்மா என்று கண்ணீர் வடிக்கிற ஒரு பக்கச் சாய்வு கணங்களை கடந்து அம்மாவின் தாய்மையை நீங்கள் கடன்வாங்கி உங்கள் பிள்ளைகளிடம் காட்டுங்களேன் ! உங்கள் அப்பா அம்மாவுடன் பகிர்ந்து கொள்ள மறுத்த வேலைகளை நீங்கள் ஏன் உங்கள் இணையிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது ? அவளின் சுகாதார சிக்கல்களை தீர்க்க ஏன் இன்னமும் ஆழமாக முனையக்கூடாது ? ஊரெங்கும் அம்மாக்கள் ஊமைகளாகவே நிறைந்திருக்கிறார்கள். கவிதை எழுதி கசக்கிபோட்டுவிட்டு டி .வி.யை ஆன் செய்து ஐ..பி.எல் பார்க்கும் நமக்கு அம்மாவுக்கு சீரியல் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்று புரிய வேண்டும் ! புரியும். அவளின் அற்புத பிள்ளை இல்லையா நீங்கள் ?