டாப் 200 வரலாற்று மனிதர்கள் – முன்னுரை


டாப் 200 வரலாற்று மனிதர்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை:

மேடைகளில் பேச ஆரம்பித்த பால்ய காலத்தில் இருந்து
வரலாறும், இலக்கியமும், விளையாட்டும், அறிவியலும் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டே இருக்கின்றன. மேடைப்பேச்சுக்கான குறிப்புகளைக் காற்றில் பறக்க விடுவதே பழக்கம். வாசிப்பதில் தனித்த சுகம் கண்டுகொண்டே இருந்தாலும் எழுத வேண்டும் என்று தோன்றியது இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்புவரை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதியது கிடையாது.

சிக்கலான விஷயங்களைச் சுவைபடச் சொல்வதற்குப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதைத் தமிழில் பொறியியல் புத்தகங்களை மொழிபெயர்த்த பொழுது கிடைத்த ஆதரவின் மூலம் உணர முடிந்தது. வாசித்ததை, ரசித்ததைத் தொடர்ந்து பதிவோம் என்று அப்பொழுது அறிமுகமான முகநூலில் இரண்டு, மூன்று பத்திகளில் அன்றைய சிறப்பைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்.

ஆறு மாதகாலம் வரை மனதில் இருந்து வாசித்தவற்றை எழுதிக்கொண்டிருந்த சூழலில், நியூட்டன் பற்றிய கட்டுரையைச் சுட்டி விகடனின் முகநூல் பக்கத்தில் சரா (Saraa Subramaniam) அண்ணன் கேட்டு வெளியிட்டார். அதற்குக் கிடைத்த உடனடி ஆதரவு பொறுப்பை அதிகப்படுத்தியது. ஒரு தினத்துக்கு ஒரு கட்டுரை என்று வாரம் முழுக்க எழுத ஆரம்பித்தேன். எண்ணற்ற புத்தகங்களை வாசிப்பது, அவை தொடர்பான பேட்டிகளைக் காண்பது, ஆவணப்படங்களைப் பார்ப்பது என்று கட்டுரையின் சரித்தன்மைக்கு நிறையப் பாடுபடப் பழகினேன்.

சுட்டி விகடனில் எழுதிய ‘என் 10’ தொடர் ஆளுமைகளைப் பற்றிச் சுவைபடச் சொல்வதைச் சாத்தியப்படுத்தியது. பொதுவாக ஆளுமைகள் பற்றி எழுதப்படுவதில் இருந்து சற்று விலகி அவர்களின் கவிதைகள், பேச்சுக்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கட்டுரைகளில் எழுதினேன். அரசியல் ஆளுமைகள் பற்றி எழுதிய பொழுது மிகத்தீவிரமாகப் பல்வேறு கோணங்களை உள்வாங்கி இன்றைக்கு இருக்கும் விவாதங்களுக்கு ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தரும் பொறுப்பை உணர்ந்தே செயல்பட்டேன்.

தகவல்களின் தொகுப்பாகப் பல கட்டுரைகளை எழுதியவாறே, இந்தியாவை, உலகை உலுக்கிய சம்பவங்கள் பற்றிக் குறுக்குவெட்டுத் தோற்றம் தர தூக்கம் மறந்து தேடி எழுதிய காலங்கள் பரவசமானவை. என்னுடைய அர்ப்பணிப்பை மிஞ்சும் வகையில் பிரிட்டோ அண்ணன் ( Britto Brits ) வடிவமைப்புச் செய்து தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அரவிந்தன் அண்ணன் ( Ara Vindan )சினிமா ஆளுமைகள், அறிவியல் ஆளுமைகள் பற்றிக் கட்டுரைகள் எழுத வைத்து அழகு பார்த்தார்.

இந்தக் கட்டுரைகளை ஒலிப்பதிவாக ஆக்கி அனுதினமும் ‘ஒரு தேதி, ஒரு சேதி’ என்கிற தலைப்பில் வருடம் முழுக்கப் பேசலாம் என்று முடிவு செய்யப்பட்ட பொழுது எப்பொழுதும் வழிகாட்டும் கணேசன் சார் Ganesan Kothandaraman) தந்த உத்வேகம் இன்னமும் பல புதிய கட்டுரைகளை எழுதத் தூண்டியது. எல்லாமும் சேர்ந்து நானூறு கட்டுரைகளைத் தாண்டின. அவற்றில் பலவற்றை நீக்கி, இந்தப் புத்தகம் வருவது என்றானதும் மேலும் ஒரு நாற்பது கட்டுரைகளை மூன்று மாதத்தில் எழுதிச் சேர்த்தேன்.

எந்தத்தொகுப்பும் முழுமையான ஒன்றாக முடியாது. அதே சமயம் தேடலின், அறிவு வானின் பரந்த பரப்பில் அகல் விளக்கு அளவு வெளிச்சமேனும் தர வேண்டும் என்கிற ஆவலில் எழுந்தவையே இக்கட்டுரைகள். ‘ஒரு தேதி ஒரு சேதி’யை ஒலிப்பதிவாக, ஒளிப்பதிவாக வருவதைச் சாத்தியப்படுத்திய நியூட்டன், ரகுவீர், ஹசன் ஹபீழ் ( Mgnewton Mgn, Raghuveer RaoHassan Hafeezh) அண்ணன்கள் பல்வேறு உதவிகள் புரிந்தார்கள். நெஞ்செல்லாம் நிறைத்து வைத்திருக்கும் உறவுகள், நேசர்கள் அளித்த ஊக்கம், உற்சாகம் மறக்க முடியாதவை.

ஆனந்த விகடன் ஆசிரியர் அண்ணன் ரா.கண்ணன், என் எழுத்துலக ஆசான் ப.திருமாவேலன் ஆகியோர் இல்லாவிட்டால் இப்படி ஒரு புத்தகம் சாத்தியம் ஆகியிருக்காது. இவர்கள் அனைவருக்கும் சொல்லித்தீராத நன்றிகள்… வாசகர்கள் நூலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தாருங்கள், தேடல்களைத் தொடருங்கள்.

அன்புடன்,
பூ.கொ.சரவணன்
pu.ko.saravanan@gmail.com
புத்தகத்தை இணையத்தில் வாங்க :
http://books.vikatan.com/index.php?bid=2278

7.83 ஹெர்ட்ஸ் – தவறவிடக் கூடாத நாவல்!


7.83 ஹெர்ட்ஸ் நாவலை வாசித்து முடித்தேன். ஆசிரியரின் முந்தைய நாவலை இன்னமும் வாசிக்காததால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாக வாசிக்கப் புகுந்தேன். கடுமையான உழைப்பில் விறுவிறுப்பான ஒரு நாவலை ஆக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர்.

ஓநாய்கள் மீதான நம்முடைய பார்வை இந்த நாவலைப் படித்து முடிக்கையில் கண்டிப்பாக மாறும். உலகம் முழுக்க வளர்ந்த நாடுகள் எப்படி வன்முறையை வெவ்வேறு நாடுகளில அறிவியல் தொழில்நுட்பங்களின் மூலம் வன்முறையைத் தூண்டி விடுகின்றன என்பதை நாவலை வாசிக்கிற பொழுது அறிந்து அதிர்ந்து போவீர்கள்.

அறிவியல் புனைகதை என்றாலும் அதிலும் மனதைவிட்டு அகலாத பாத்திரமாக வேதநாயகத்தை ஆசிரியர் மண்ணின் மணத்தோடு படைத்து கைகட்டி அவர் சொல்லும் கதைகளைக் கேட்க வைக்கிறார். கதையின் எந்தச் சரடையும் இங்கே சொல்லி கதை வாசிப்பதன் சுவாரசியத்தை மட்டுப்படுத்த விரும்பவில்லை.

இந்த நூலில் எக்கச்சக்க அறிவியல் சங்கதிகள் பேசப்பட்டு இருந்தாலும் அவை துளிகூட அலுப்புத் தராமல் கடத்தப்பட்டதில் இருக்கிறது ஆசிரியரின் வெற்றி. அதே சமயம் உணர்வுப்பூர்வமான தருணங்கள் வருகிற பொழுது நாவலின் வேகத்தை மட்டுப்படுத்தும் என்று எண்ணியோ என்னவோ வேகவேகமாகக் கடந்துவிடுகிறார்.

அவசியம் வாசியுங்கள்!

7.83 ஹெர்ட்ஸ்
க.சுதாகர்
வம்சி புக்ஸ்
228 பக்கங்கள்
விலை: 200

சாந்தி ஸ்வரூப் பட்னாகர்-அறிவியலோடு ஒரு அற்புத வாழ்க்கை !


சாந்தி ஸ்வரூப் பட்னாகர் இந்திய அறிவியல் ஆளுமைகளில் முதன்மையானவர். பரமேஸ்வரி சஹா பட்னாகர், பார்வதி தம்பதிக்கு அவர் மகனாகப் பிரிக்கப்படாத இந்தியாவின் பேராவில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் இவரின் அப்பா அரசுப் பணிகளுக்குப் போக மறுத்து பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிப் பல ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி புகட்டினார். அவர் சாந்தி ஸ்வரூப் பத்து மாத சிறுவனாக இருக்கும் பொழுது குடும்பத்தைக் கடும் வறுமையில் விட்டுவிட்டு இறந்து போனார். பட்நாகரின் அன்னையின் தந்தை அப்பொழுதே பொறியியலில் படம் பெற்றார். இவரின் கல்விக்கான வேலைகளை அவர் பார்த்துக்கொண்டார். அறிவியலில் அவரிடம் இருந்து ஆர்வம் தொற்றிக்கொள்ளப் பதினேழு வயதில் கார்பன் பேட்டரிக்களில் இருக்கும் மின்முனைகளுக்கு மாற்றாகக் கரும்புச்சக்கைகள், கரிம பொருட்களை அழுத்தத்தில் வெப்பமூட்டி மின்முனைகள் தயாரிப்பது பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதினார்.

பார்மன் கிறிஸ்துவக்கல்லூரியில் லாகூரில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பயின்றார். நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் காம்ப்டனின் சகாவான பெனடே எனும் பெயர் கொண்ட பேராசிரியர் இவருக்கு ஆசிரியராக அமைந்தார். முதுகலையில் வேதியியல் பட்டத்தை அதே கல்லூரியில் பெற்ற பட்னாகர் பெனடேவின் கீழ் ஆய்வுகள் செய்தார். முதுகலைப் பட்ட ஆய்வை , ’நீரின் பரப்பு இழுவிசையின் மீது பரப்புக் கவரப்பட்ட வாயுக்களின் தாக்கம்’ என்கிற தலைப்பில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் போய் மேற்படிப்புப் படிக்கக் கப்பல் பயணம் போனவர், முதல் உலகப்போரால் அமெரிக்காவுக்குச் செல்லும் எல்லாக் கப்பல்களும் ராணுவ வீரர்களால் நிரம்பியிருந்ததால் இங்கிலாந்திலேயே படிக்க முடிவு செய்தார். அங்கே மூவிணை, ஈரிணைத் திறன் கொண்ட கொழுப்பு அமிலங்களின் உப்புகள் எண்ணெய்களில் கரைவதால் அவற்றின் பரப்பு இழுவிசையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து DSc பட்டம் பெற்றார்.

ஆரம்பித்து ஐந்து வருடங்களே ஆகியிருந்த பனராஸ் இந்து பல்கலையில் மூன்று வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், பஞ்சாப் பல்கலையில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வேலை பார்த்தார். இந்தக்காலத்தில் கூழ்ம மற்றும் காந்த வேதியியல் துறைகளில் எண்ணற்ற ஆய்வுகள் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இவற்றோடு நில்லாமல் தொழிற்துறை சார்ந்த சிக்கல்களிலும் அறிவியல் அறிவை பயன்படுத்தித் தீர்வுகள் கண்டார் அவர். அட்டாக் எண்ணெய் நிறுவனம் எண்ணெயை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்க ஒருவகையான மண்ணைப் பயன்படுத்திக்கொண்டு இருந்தது. உப்புத்தண்ணீர் அதன் மீது பட்டால் அப்படியே கெட்டியாகி அதற்கு மேல் தோண்ட முடியாதவகையில் அடைத்துக்கொண்டு அந்த மண் சிக்கல் தந்தது. பட்னாகர் இந்தியப்பசை ஒன்றை அதில் கலந்து சிக்கலைத்தீர்த்தார். 1925-ல் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாயை அந்த நிறுவனம் தர முன்வந்தது. அதில் பைசா கூடத் தன் பெயருக்கு வாங்கிக்கொள்ளாமல் அப்படியே பெட்ரோலியத் துறை ஒன்றை பஞ்சாப் பல்கலையில் உருவாக்க பட்னாகர் கொடுத்துவிட்டார்.
கே.என்.மாத்தூர் எனும் சக விஞ்ஞானியுடன் இணைந்து வெவ்வேறு சேர்மங்களின் வேதியியல் பண்புகளைக் கண்டறியும் ‘Bhatnagar-Mathur light interference
Balance’-ஐ உருவாக்கினார்கள். அதை வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றி பெறுவதை உறுதி செய்தார்கள். மெக்மில்லன் நிறுவனத்தில் ‘Physical
Principles and Application of Magneto-chemistry’ என்கிற மிக முக்கியமான பாடப்புத்தகத்தை இருவரும் எழுதினார்கள். அது பல்வேறு சர்வதேச பல்கலைக்கழகங்களில் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எமல்ஷன் எனப்படும் நீர்மப்பொருட்களில் இரு வகையான திரவங்கள் பிணைந்திருக்கும். எடுத்துக்காட்டுக்குப் பாலில் கொழுப்பும், நீரும் பிணைந்து இருக்கிறது. அவற்றை ஆனாலும் பிரிக்க முடியும். இந்த எண்ணெய்யில் நீர் இருக்கிற எமல்ஷன்கள், நீரில் எண்ணெய் இருக்கும் எமல்ஷன்கள் ஆகியவற்றை நீரில் எண்ணெய் இருக்கும், எண்ணெயில் நீர் இருக்கும் எமல்ஷன்களாக மாற்றும் தலைகீழ் முறையை இவரே உலகுக்கு நேர்,எதிர்மின்னோட்டங்கள் கொண்ட மின்முனைகள் மூலம் செய்யமுடியும் என்று நிரூபித்தார்.

உலகப்போர் சமயத்தில் பட்னாகர் உருவாக்கிய உடையாத கொள்கலன்கள் அமெரிக்க ராணுவம் வரை பயன்பட்டுப் புகழ்பெற்றது. அந்தப் பாத்திரங்களில் திரவங்களை மிக அதிகமான உயரத்தில் இருந்து விமானங்களில் இருந்து வீசுவது சாத்தியமானது. பன்னிரண்டு மணிநேரம் வரை எரியக்கூடிய வத்திப்பெட்டியை விடச் சற்றே பெரிய கேஸ் ஸ்டவ்வை அவர் உருவாக்கினார். கம்பளி உடை போன்ற கதகதப்பைத் தரும் பருத்தி ஆடையை அவர் தயாரித்தார். விஷ வாயுக்களில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்களையும் அவர் உருவாக்கினார்.

1-4-1940 அன்று அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆணையத்தைத் தன்னுடைய முயற்சிகளால் ராமசாமி முதலியார் ஆங்கிலேய அரசை உருவாக்கச்செய்த பொழுது அதை வழிநடத்த பட்னாகரையே அழைத்தார். இந்த அமைப்புக் காய்கறிகளில் இருந்து எண்ணெய், எரிபொருள் தயாரிப்பது, ராணுவ ஆயுதங்களுக்குப் பிளாஸ்டிக் உறைகள் தயாரிப்பு, வைட்டமின் உருவாக்கம், பைரித்ரியம் க்ரீம் உருவாக்கம் ஆகியவற்றில் வருட நிதி ஒதுக்கீடான ஐந்து லட்சத்தைக் கொண்டு செயல்பட்டது. தொழிற்துறை தேவைகளைப் பூர்த்திச் செய்ய இன்னுமொரு அமைப்பை இதன் கீழேயே துவங்கவேண்டும் என்று ராமசாமி-பட்னாகர் இணை கேட்டுக்கொள்ளத் தொழிற்துறை ஆய்வு பயன்பாட்டு கமிட்டி உருவாக்கப்பட்டு வருடத்துக்குப் பத்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இவ்வளவு நிதியைக் கையாள ஆய்வுகளுக்கு என்று தனித்த கவனம் செலுத்தும் சுயாட்சி கொண்ட அறிவியல் மற்றும் தொழிற்துறை கவுன்சில் (CSIR) உருவாக்கப்பட்டது. அதன்கீழே மேலே சொன்ன இரண்டு அமைப்புகளையும் கொண்டுவந்தார்கள். விடுதலைக்குப் பின்னர் நேரு தன்னுடைய நேரடி கவனிப்பின் கீழ் CSIR அமைப்பை கொண்டுவந்தார். பட்னாகர் நூற்றுக்கணக்கான அறிவியல் அறிஞர்களை இணைத்துக்கொண்டு தான் உயிருடன் இருந்த அடுத்தப் பதிமூன்று ஆண்டுகளில் இந்தியா முழுக்க உலகத்தரமான பன்னிரெண்டு ஆய்வகங்களை வேதியியல், இயற்பியல், தோல் ஆய்வு, உலோகவியல், எரிபொருள் ஆகியவற்றில் செய்ய உருவாக்கினார். அதனோடு மேலும் ஒரு பன்னிரெண்டு ஆய்வகங்களுக்கான திட்டங்களை வகுத்துத் தந்துவிட்டு இறந்துபோனார்.

இந்த அமைப்புப் போகக் கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் தயாரிக்கப் பாலிமர் வேதியியல் துறையைப் பூனாவிலும், மோனோசைட்டை கேரளாவில் இருந்து பிரித்தெடுக்க இந்திய அபூர்வ தனிமங்கள் அமைப்பை அவர் உருவாக்கினார். தேசிய ஆய்வு வளர்ச்சிக் கழகத்தை அவர் துவங்கி தொழிற்துறை சார்ந்த பொருட்களை ஆய்வுகளின் மூலம் உருவாக்கும் அமைப்பாக அதை மாற்றினார். மத்திய அரசில் கல்விச் செயலாளருக்கு ஆலோசகராகவும் அவர் திகழ்ந்தார். பல்வேறு தனியார் நிறுவனங்களை இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபடச்செய்வதை அவர் உறுதி செய்தார். தன்னுடைய எழுத்துக்கள், காப்புரிமைகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த வருமானம் எதையும் தனக்கு என்று வைத்துக்கொள்ளாமல் முழுக்க இந்திய அறிவியல் ஆய்வுகளுக்கே வழங்கிவிட்ட அவர் இந்திய அறிவியலின் வேக வளர்ச்சிக்கான அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர். அவரின் பெயரால் CSIR ஆய்வுகளில் சிறந்து விளங்கும் அறிவியல் அறிஞர்களுக்கு விருது வழங்குகிறது.

சார்லஸ் குட்இயரின் ரப்பர் கதை !


நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னரும் எத்தனையோ ஆய்வுகளும்,அதீத உழைப்பும் உறைந்து போயிருக்கிறது என்று நாம் அறிவோமா ?
எடுத்துக்காட்டாக நாம் செல்லும் வண்டிகள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக இருக்கும் ரப்பர் டயருக்கு பின்னும் தன்னம்பிக்கை பொங்கும் ஒரு வாழ்க்கை கதை இருக்கிறது. அது சார்லஸ் குட் இயர் அவர்களின் கதை.

அமெரிக்காவில் பிறந்த இவர் இளம் வயதிலேயே வாட்டர் ப்ரூப் ரப்பர் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை ஆர்வத்துடன் பார்த்தார். ஆனால் அவை
வெயில் காலத்தில் ஒட்டிக்கொள்வதையும்,குளிர காலத்தில் விரிசல் அடைவதும் மிகப்பெரிய தொல்லையாக இருந்தது. ஏதேனும் செய்து சரி செய்ய வேண்டும் என்று
ரப்பரும்,கையுமாக ஆராய்ச்சியில் இறங்கினார் அவர்.

ரப்பரைக்கொண்டு இவர் செய்து ஆய்வுகள் அவருக்கு எண்ணற்ற சோதனைகளை கொடுத்தது. கடன் அதிகமாகி அடிக்கடி ஜெயிலுக்கு போய்விட்டு வந்தார். அவர்
ரப்பரை எரிப்பது நாற்றத்தை உண்டாக்கி தூக்கத்தை,சுவாசத்தை கெடுக்கிறது
என்று போலீஸ் வரை புகார் போய் ஊரைவிட்டே காலி செய்தார். இருந்தாலும் நம்பிக்கையை விடாமல் ஆய்வுகள் மட்டும் நகர்ந்து கொண்டே இருந்தன.

நைட்ரிக் அமிலத்தை ரப்பரில் கலந்து தயாரித்த பொருட்கள் நல்ல முடிவையே ஆரம்பத்தில் தந்தன. அவற்றைக்கொண்டு ரப்பர் பைகள் செய்து அவர் அரசாங்க
தபால் துறைக்கு அனுப்பி வைத்த பின்னர் அவை ஒட்டிக்கொண்டும்,விரிசல்
தந்தும் தொல்லைகள் கொடுப்பதாக எல்லாம் திருப்பி அனுப்பப்பட மனம் நொந்தார். ஒரு நாள் கந்தகம் மற்றும் காரியத்தை ரப்பரோடு கலந்து ஆய்வுகள்
செய்து கொண்டிருந்தார். 

அப்பொழுது அந்த கலவை அருகில் இருந்த அடுப்பில் தெரியாமல் எதேச்சையாக பட்டது. அதை அதற்கு பின்னர் எடுத்து பார்த்த பொழுது
அது பிசுபிசுப்பு இல்லாமல் இருந்தது. அதை பயன்படுத்தி பார்த்த பொழுது விரிசலோ,ஒட்டிக்கொள்ளுதலோ நிகழவில்லை. அவை நன்றாக வளைகிற தன்மையும்
கொண்டிருந்தன. அதற்கு காப்புரிமை பெற்றார் அவர். அங்கே இருந்து தான் எல்லாரும் எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடிய டயர்கள் உலகுக்கு கிடைத்தன. அந்த முறைக்கு வல்கானைசேஷன் என்று பெயரிடப்பட்டது. இயர் வறுமையில்
வாடித்தான் இறந்து போனாலும் அவரின் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு மாபெரும் பாய்ச்சலை வழங்கியது என்பதே சரி. அந்த முறைக்கு அவர் காப்புரிமை பெற்ற தினம் ஜூன் 15

நோய் எதிர்ப்பியலின் தந்தை எட்வர்ட் ஜென்னர் !


எட்வர்ட் ஜென்னர் எனும் மனித குலம் காக்க வந்த பெருமனிதர் பிறந்த தினம் இன்று . பெரியம்மை உலகை பல நூற்றாண்டுகளாக உலுக்கி கொண்டிருந்தது . எகிப்திய மம்மிக்களின் முகத்தில் அம்மை வடுக்கள் இருக்கிறது என்பது எவ்வளவு காலமாக அது உலகை ஆட்டிப்படைத்து இருக்கும் என்பதை புரிய வைக்கும் . எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு அந்நோய் வந்து சேர்ந்தது . உலகம் முழுக்க போர் மற்றும் வியாபாரம் செய்யப்போனவர்களின் உபயத்தில் நோய் பரவியது . ஒரு வருடத்தில் மட்டும் நான்கு லட்சம் பேர் நோயால் இறப்பது வருடாந்திர நிகழ்வானது . பிழைத்தாலும் விடாது கருப்பு போல மூன்றில் ஒரு நபருக்கு கண்பார்வை காலி . 

முகம் முழுக்க தழும்புகள் ; எண்ணற்ற மரணங்கள் என்று உலகம் பீதியில் உறைந்து போயிருந்தது . அம்ஹெர்ஸ்ட் எனும் ஆங்கிலேய தளபதி பெரியம்மை கிருமியை அமெரிக்க பழங்குடியின மக்களுக்கு எதிராக பயன்படுத்த யோசனை எல்லாம் தெரிவித்தான் ; அம்மை குத்துதல் என்கிற முறை இந்தியா,சீனா,ஆப்ரிக்கா ஆகியவ்ற்றில் பிரபலமாக இருந்தது . பெரியம்மையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுதலை பெற்ற நபரின் மருக்களில் பாலை எடுத்து இயல்பான மனிதர்களுக்கு குத்துவார்கள் . இதுதான் அம்மை குத்துதல் . ஏகப்பட்ட நபர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு அந்த திரவம் கிடைக்காது . வீரியமும் ஒரே மாதிரி இல்லாமல் இருந்தது . 

இப்பொழுது தான் ஜென்னர் காட்சிக்கு வருகிறார் . இளவயதில் மருத்துவம் பயின்றுவிட்டு ஊர் திரும்பியவர்,பிரபல ஜான் ஹன்டரை பார்த்தார் . அவரிடம் எண்ணற்ற விஷயங்களை அனுபவப்பூர்வமாக கற்றுக்கொண்டார் . அவரின் வழிகாட்டுதலில் குயில்களை பற்றி ஆய்வு செய்தார் . அதில் குயில்கள் பிற பறவைகளின் கூடுகளை எடுத்துக்கொள்வதும்,வளர்ப்பு பறவையை ஏமாற்றுவதையும் சொன்னார் .நடுவில் ஹைட்ரஜன் பலூனை சொந்தமாக தயாரித்து பறக்க விட்டு விளையாடிக்கொண்டு இருந்தார் 

ஒரு பிரபலமான பழமொழி இங்கிலாந்தில் இருந்தது ,”பசு மேய்க்கும் பெண்களும் பளிச்சான முகம் பெரியம்மையால் போகாது !” என்பதே அது . பசுவை கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கு பெரியம்மை வந்து பார்த்ததே இல்லை மக்கள் . இதை நகர்புற வாசிகள் முட்டாள்தனம் என்றனர் ஜென்னர் இதை கவனித்தார் . அப்பொழுது தான் பசு அம்மையால் பாதிக்கப்படும் பொழுது அதன் புண்களில் இருந்து வரும் திரவம் இவர்களின் உடம்பில் செலுத்தப்படுவதால் நோய் எதிர்ப்பு உருவாவதை கண்டார் . 

சாரா நெம்ப்ஸ் எனும் பெண்ணின் கைநகத்தில் இருந்து பசுவின் நோய்க்கிருமியை எடுத்து பிப்ஸ் எனும் எட்டு வயது பெரியம்மை பாதிக்கப்பட்ட சிறுவனின் உடம்பில் செலுத்தினார் / பையன் பிழைத்துக்கொண்டான் . மதபீடங்கள் கடவுள் கொடுக்கும் தண்டனை இது என்று சொல்லிக்கொண்டு இருந்தது . இதை ஏற்க மறுத்தார்கள். ராயல் கழகத்தில் இன்னமும் நன்றாக ஆராய்ச்சி செய்து ஆதாரத்தோடு வா என அனுப்பி விட்டார்கள் . போனார் தன் பதினோரு மாத பையன் உட்பட பல பேருக்கு அதே நோய்க்கிருமியை சுத்திகரித்து பயன்படுத்தினார் . எல்லாரும் பிழைத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஏகத்துக்கும் இந்த முப்பதாண்டு காலத்தில் எள்ளலுக்கு உள்ளானார் . ஒரு ஆங்கில பத்திரிக்கை,ஜென்னரின் தடுப்பு முறையை எடுத்துக்கொண்டவர்களுக்கு பசுவின் தலை முளைப்பதை போல கார்டூன் தீட்டியது . ஆனாலும் முப்பதாண்டு காலத்தில் உலகம் முழுக்க இம்முறை பரவ ஆரம்பித்து வென்றது . ஜென்னர் இறுதி வரை காப்புரிமை பெறாமல் எல்லா மக்களும் பயன் பெறட்டும் என்று விட்டுவிட்டார் 

இங்கிலாந்தின் சில ராணுவ வீரர்கள் நெப்போலியன் படையால் கைது செய்யப்பட்ட பொழுது உதவசொல்லி ஜென்னர் ஜோசபின்னுக்கு கடிதம் எழுதினார் . அவரோ நெப்போலியனிடம் கேட்ட பொழுது மனிதர் மறுத்து விட்டார். ஜென்னரின் கடிதம் என்று தெரிந்ததும் பதறியடித்து கொண்டு அனுமதி தந்தார் நெப்போலியன் . அந்த அளவுக்கு தெய்வத்துக்கு இணையாக அவர் கருதப்பட்டார் . உலகம் முழுக்க [பெரியம்மை கடந்த நூற்றாண்டில் ஒழிக்கப்பட்டது . ஜென்னர் நோய் எதிர்ப்பியலின் தந்தை என புகழப்படுகிறார். சொந்த மகனை பணயம் வைத்து,பணத்தை முக்கியமாக கருதாமல்,எளிய மக்களின் நம்பிக்கைகளை புறந்தள்ளாமல் வாழ்ந்த ஜென்னரிடம் நாம் கற்க எண்ணற்ற பாடங்கள் உண்டு .அவரின் பிறந்தநாள் இன்று

நானோ தந்த காதலர் பெய்ன்மான் !


நானோ தொழில்நுட்பம் எனும் துறை உருவாவதற்கான வித்தை போட்ட ரிச்சர்ட் ஃபெய்ன்மான் பிறந்த தினம் இன்று . யூதக்குடும்பத்தில் பிறந்த இவர்,இளம் வயதிலேயே மத நம்பிக்கை இல்லாதவராக வளர்க்கப்பட்டார் 

பேசும் திறன் இவருக்கு மூன்று வயது வரை கிட்டாது இருந்ததால் இவருடன் தொடர்ந்து இவரின் தந்தை பேசிக்கொண்டே இருப்பார் .வீட்டில் இருந்தே இவர் கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை கற்றுத்தேர்ந்தார் .கொலும்பியா பல்கலைகழகத்துக்கு விண்ணப்பம் போட்டால் போ வெளியே என நிராகரித்து விட்டார்கள் .எம் ஐ டியில் சேர்ந்தார் /

இயற்பியலின் அத்தனை துறையிலும் சேர்ந்து பாடம் கற்றார் வரலாறு,ஆங்கிலம் இரண்டும் மனிதரை பாடாய் படுத்தின ;இரண்டிலும் கஷ்டப்பட்டு பாஸ் ஆனார் .அவர் முனைவர் பட்டத்துக்காக எடுத்துக்கொண்ட தலைப்பின் விளைவாக மின்னியக்கவிசையியலின் முக்கிய தத்துவமான வீலர்-ஃபெய்ன்மான் உட்கவர் தத்துவம் உருவானது .

இவர் ஏகத்துக்கும் குறும்புக்காரர் .அணுகுண்டை உருவாக்கிய மன்ஹட்டன் திட்டத்தில் பணியாற்றிய பொழுது சில குறிப்புகளை சங்கேத மொழியில் அங்கங்கே விட்டு சகாக்களை முக்கியமான விஷயங்களை கண்டுபிடிக்க வைப்பார் .இதனால் பலபேர் உளவாளி யாரோ நுழைந்து விட்டதாக பீதியாகி எல்லாம் இருக்கிறார்கள் .அணுகுண்டு வெடித்ததும் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு உள்ளானார் ;இத்தனை உயிர்கள் இறந்து விட்டதே என்கிற கவலை அவரை பிழிந்தது. வேலை பார்த்த பல்கலைகழகம் வேலைக்கு வர சொன்ன பொழுது அவர் போகாததால் வேலையும் போனது . 

அதற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வெளியே வந்தவருக்கு குவாண்டம் மின்னியக்கவிசையியலின் மீது அவரின் ஆர்வம் மீண்டும் பொங்கியது ;ஃபெய்ன்மான் வரைபடங்களை உருவாக்கினார் ;அவற்றை இன்டக்ரல் பாதை தொகுப்பின் கொண்டு வரையறுத்தார் .அவற்றைக்கொண்டு இணை அணு துகள்களின் இடையே நடக்கும் உள்வினைகள் பற்றி துல்லியமாக விளக்கினார் .இதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது . அவருக்கு அப்பொழுது வயது 38 !

அவருக்கு ஒரு அற்புதமான காதல் கதை இருந்தது. ஆர்லைன் என்கிற பெயர் கொண்ட பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்லைனுக்கு கொடிய காசநோய் இருந்ததால் முத்தமிடவோ முடியாது என்றும்,குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டு எல்லையில்லாமல் அன்பு செய்தார். ஆர்லைன் வெகு சீக்கிரம் உடல்நலக்குறைவால் இறந்து போன பிறகு தனிமையில் அவர் நினைவில் மூழ்கினார் இவர். அவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆனபிறகு இப்படி கடிதம் எழுதினார் தன்னுடைய அன்புக்குரிய ஆர்லைனுக்கு ,இன்றைக்கு உனக்கு பொருந்தும் ஒரு அழகான கவுனை கடையில் கண்டேன் ! அதை நீ அணிந்து என்னால் பார்க்க முடியவில்லை !” 

ஹீலியம் மிகக்குறைந்த வெப்பநிலையில் பாகுநிலை இல்லாத சூப்பர் திரவத்தன்மையை ஏன் கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார் .பாதை இன்டக்ரல்களை துல்லியமாக கணிக்கும் தத்துவத்தை இவர் உருவாக்கி தர அது செயற்கைக்கோள் செலுத்துதலை மிக துல்லியமானதாக ஆக்கிற்று .1959 இல் .”There’s plenty of room in the bottom “எனும் இவரின் புகழ்பெற்ற உரை நானோ தொழில்நுட்பத்துக்கான கதவுகளை திறந்து விட்டது .தன்னை அறிவியலின் மகத்தான பிள்ளைகளில் ஒருவராக தன்னைக்கருதிக்கொண்ட அவர் மதம் சார்ந்தோ,இனம் சார்ந்தோ தன்னை குறிப்பதை எதிர்த்தார் .நான் மனிதன் என்றார் அவரின் பிறந்த நாள் இன்று

அடடா டாவின்சி


இரட்டை கைகளில் எழுதும் ஆற்றல் பெற்ற பென்சில் காதலர் ஒருவரின் பிறந்த
நாள் இன்று .அவரை நமக்கெல்லாம் ஒரே ஒரு ஓவியத்தால் நன்றாக தெரியும் .அவர்
தான் லியனார்டோ டாவின்சிகணிதம், இயந்திரவியல், சிற்பம், தாவரவியல், மனித
உடற்கூறு ஆய்வுகள்வானவியல், நிலவியல் கதைகள் கவிதைகள் எனஆல் இன் ஆல்
இவர்தான்

டாவின்சியின் முழுமையான பெயர் Leonardo di ser Piera da Vinci. அதாவது
வின்சி என்ற நகரில் உள்ள பியரோ என்பவரின் மகன் லியனோர்டோ என்று பொருள்.
இத்தாலியில் 1452 ஆம் ஆண்டு பிறந்தார் டாவின்சி. இவரது அப்பா ஒரு
நீதிபதி. வெரோசியோ என்ற ஓவியரிடம் தங்கி சில காலம் டாவின்சி நுண்கலை
படித்திருக்கிறார். அதன் பிறகு ரோம், வெனிஸ் போன்ற இடங்களில் ஓவியம்
வரைவதற்காக தங்கியிருக்கிறார்
சிறிய யந்திரப் படகும், தண்ணீர் இறைக்கும் இயந்திரமும் இவரால் மிக இளம்
வயதிலேயே உருவாக்கப்பட்டன.

மாபெரும் குதிரைச்சிலை ஒன்றை டாவின்சி பிளாரென்சின் டியூக்கிற்காக அவரின்
எல்லையற்ற அதிகாரத்தை குறிக்கும் வகையில் உருவாக்குகிறார்.பின் அவரின்
எதிரிகள் அந்த ஊரை கைப்பற்றியதும் அச்சிலை சிதைக்கபட்டது.கலை காதல்
இல்லாத இந்த ஊரில் இருக்க கூடாது என்று பிளாரென்சை விட்டு வெனிஸ்
சென்றார் .
.

டாவின்சி மனிதனை பற்றி புரிந்து கொள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று
மரணத்தருவாயில் உள்ள மனிதர்களின் கடைசி நிமிசங்களை நேரடியாக ஆய்வு செய்து
ஓவியங்களாக தீட்டியிருக்கிறார். அது போலவே இறந்து போன மனிதர்களின்
உடல்களை ரகசியமாக விலைக்கு வாங்கி தனது இருப்பிடத்தில் வைத்து அறுவை
செய்து உடலின் உள் அமைப்புகளை சித்திரமாக தீட்டியிருக்கிறார்.

இன்றைய நவீன மருத்துவத்தின் ஆரம்ப முயற்சிகள் பலவற்றிற்கு துவக்கப்புள்ளி
டாவின்சியின் ஓவியங்களே.. இதயம் சுருங்கி விரிவதை விளக்கும் ஓவியம்
,குழந்தை அன்னையின் கருவில் இருக்கும் ஓவியம் ,உடல் உறுப்புகளின் அளவு
மற்றும் நிறத்தை துல்லியமாக குறிக்கும் கவனம் என இவரின் உழைப்பு
அலாதியானது .

இன்னொரு புறம் பீரங்கி, ஹெலிகாப்டர், சூரிய ஒளியைச் சேமிக்கும் கலன்கள்,
கால்குலேட்டர் ,பாரசூட் என இவர் அவதானித்து வரைந்தவை ஏராளம்

உலகின் மிகப்புகழ் பெற்ற ஓவியமான மோனாலிசா ஓவியத்தில் இருக்கின்ற பெண்மணி
Lisa di Anton Maria di Noldo Gherardini. ஜியோரெடினி பிரபுவின் மனைவி.
தங்களது புதிய மாளிகை, குடிபுகுவதற்காகவும், இரண்டாவது மகன் பிறந்துள்ள
சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காகவும் இந்த ஓவியத்தை வரையும்படியாக ஏற்பாடு
செய்தார் ஜியோரெடினி .இந்த ஓவியத்தை பதினாறு ஆண்டுகள் ரொம்ப பொறுமையாக
வரைந்தார் மனிதர் .

டாவின்சியின் மரணத்திற்குப் பிறகு அவரது மாணவரான சேலேயிடம் இந்த ஓவியம்
பல காலமிருந்தது;அதை நெப்போலியன் தன்னறையில் வைத்திருந்தார் .பின் அது
லூவர் மியுசியத்துக்கு போனது .அங்கே திருடப்பட்ட பொழுது வெற்றிடத்தை
பார்க்கவே கூட்டம் கூடியது .பின் அந்த ஓவியம் மீட்கப்பட்டது .முடிவுறாத
ஓவியம் என்றும் இதை சிலர் சொல்கிறார்கள் .அறிவியல் ஆர்வலர்கள் கண்டிப்பாக
அவரின் நோட்புக் குறிப்புகளை படிக்க வேண்டும்

இவரின் கடைசி விருந்து ஓவியம் சிதைந்து போய் கொண்டிருந்தது .காரணம் இதை
ஒரு தேவாலய சுவரில் வரைந்து விட்டார் மனிதர் ,அதை மீட்க தனி அக்கப்போர்
நடந்தது .அவரின் மிகக்குறைவான ஓவியங்களே இன்றைக்கு நமக்கு கிடைக்கின்றன
.அவரின் பிறந்தநாள் இன்று

பெனிசிலின் தந்த பிளெமிங்


எண்ணற்ற மக்களின் உயிர் காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங். ஸ்காட்லாந்தில் பிறந்த இவர் இளம் வயதில் தன் தந்தையை இழந்தார். அதன் பின்னர் வறுமையான சூழலிலேயே படித்து வந்தார். போலோ மற்றும் நீச்சலில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர் இவர். ஒருநாள் நீர்நிலையில் ஒரு சிறுவன் தத்தளிப்பதை பார்த்து உதவினார் இவர், அந்த சிறுவன் பிரபு வீடு பிள்ளை. அவரின் அப்பா பிளெமிங்கின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார். அந்த தத்தளித்த சிறுவன் வருங்காலத்தில் பிரிட்டனின் பிரதமர் ஆன சர்ச்சில் !

பாலிடெக்னிக் படித்துவிட்டு புனித மேரி மருத்துவப்பள்ளியில் மருத்துவ படிப்பை மேற்கொண்ட பின்னர் ஆல்மோத் ரைட் எனும் நுண்ணுயிரி ஆய்வாளரிடம் வேலைக்கு சேர்ந்தார். அங்கே டைபாய்ட் நோய்க்கு தடுப்பூசி போடும் முறையை கண்டறிந்தார். பின் தன் துறை சார்ந்தே பேராசிரியர் ஆனார். லைசோசோம் நோய்களை தடுப்பதையும்,நோய் எதிர்ப்புக்கும் வெள்ளை அணுக்களுக்கு அதில் உள்ள பங்கு பற்றியும் விவரித்தார். 

ஸ்டைபாலோ காகஸ் பாக்டீரியா இருந்த ஒரு தட்டை மூடாமல் அப்படியே திறந்துவிட்டு நகர்ந்துவிட்டார் இவரின் உதவியாளர். அடுத்த நாள் காலையில் அப்படியே திறந்து கிடப்பதை கண்டு உதவியாளரை கடிந்து கொண்டார். அவர் அதை கொட்ட எடுத்துக்கொண்டு போன பொழுது அவசரப்படாமல் அந்த தட்டை வாங்கி நுண்ணோக்கியில் வைத்து பார்த்தார். 

நீல நிறத்தில் எதோ ஒன்று பாக்டீரியவை தின்று தீர்த்து இருந்தது. அந்த நீல நிற பூஞ்சை தான் பெனிசிலின் எனும் அற்புதம். உலகின் முதல் ஆண்டி பயாடிக் கண்டறியப்பட்டது. அந்த பூஞ்சையின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார்நிமோனியா,தொண்டை அடைப்பான் முதலிய நோய்களுக்கு தீர்வு தருகிற அற்புதத்தை பென்சிலின் செய்கிறது. பதினான்கு வருடங்கள் கழித்து அதை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் முறையை வேறிரு அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு நாள் இன்று

சி.வி.ராமனிடம் படிக்க பத்து பாடங்கள் !


திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். 
அவரிடம் படிக்க பத்து பாடங்கள் 
எங்கிருந்தும் சாதிக்கலாம் :
படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.

வாசிப்பை நேசி!
அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

பிடித்ததில் பிணைந்திடு!
இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், ‘பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, ‘இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!
அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, ‘இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

உலகை உற்றுக் கவனி!
மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, ‘கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

நம்பிக்கையோடு முன்னேறு!
இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். ‘அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!
ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ”அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே” என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!
”கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ”கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே” என்றார் ராமன்.

துணிவு கொள்!
ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்’ என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!
”ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்” என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

வியக்க வைத்த வீட்ஸ்டோன்


சார்ல்ஸ் வீட்ஸ்டோன் எனும் இணையற்ற இயற்பியல் அறிஞர் பிறந்த நாள் பிப்ரவரி ஆறு. இன்று அப்பா இசைக்கருவிகள் விற்கும் தொழில் செய்து வந்தார் . இவருக்கோ இலக்கியத்தின் மீது நாட்டம் போனது.சில கவிதைகள் எழுதினார் ; மாமாவின் அரவணைப்பில் வளர்ந்த பொழுது வோல்டாவின் பரிசோதனைகள் எனும் பபிரெஞ்சு மொழி புத்தகம் இவருக்கு கிடைத்தது ;ஆங்கிலேயரான இவர் சிறுக சிறுக பணம் சேர்த்து ஒரு அகராதியை வாங்கி அதைக்கொண்டு அந்த நூலை படித்து முடித்தார் .

அதில் சொன்னபடி ஒரு பேட்டரியை வடிவமைத்து முடித்ததும் அவர் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். வசிய யாழ் என சொல்லிக்கொண்டு ஒரு கருவியை உருவாக்கினார் அது பியானோ உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளின் இசைக்குறிப்புகளை எழுப்பியது . ஒலியும் ஒளி போலவே பயணம் செய்கிறது என்றும் அதைகொண்டு செய்திகளை கடத்த முடியும் எனவும் சொன்னார் .

கலைடோபோன் என ஒரு கருவியை உருவாக்கினார் . ஒலிக்குறிப்புகளை வெளிச்ச உருவங்களாக அது வரைந்து காட்டியது . ஒளியின் திசை வேகத்தை கண்டறியவும் முயன்றார் . முதன்முதலாக நிறப்பிரிகை உமிழ்வு கோடுகளை கண்டறிந்து ஒளிக்கதிர் ஆய்வுகளில் புரட்சி செய்தார் .மின்சார சக்தியால் இயங்கும் ஐந்து ஊசி டெலிகிராப் கருவியை வடிவமைத்தார் . இதற்கு ஷில்லிங் எனும் அறிஞரின் கருவியை ஒத்திருந்தாலும் அதை சந்தைப்படுத்தி பலரும் பயன்படுத்தும் வகையில் இவரே மாற்றினார் .

1837 இல் இரண்டரை கிலோமீட்டர் தூரத்துக்கு முதல் செய்திக்குறிப்பு இதன் மூலம் அனுப்பப்பட்டது . இது அவ்வளவாக முதலில் பிரபலமடையவில்லை . பின் 7,500 கிலோமீட்டர் தூரத்துக்கு செய்தி குறிப்புகளை செலுத்தும் அளவுக்கு பிரபலமானது .முக்கிய காரணம் ஜான் டாவெல் எனும் கொலைகாரனை கண்டுபிடிக்க இக்கருவி உதவி இருந்தது . எந்த கண்டுப்பிடிப்பிலும் பணம் ஈட்ட எண்ணாத இவர் இந்த டெலிகிராப்பில் மட்டும் பணம் பார்த்தார் ;ஆட்டோமாடிக் ட்ரான்ஸ்மீட்டரை உருவாக்கினார் .

மூளை இரண்டு வெவ்வேறு படங்களை இரண்டு கண்கள் வழியாக வாங்கி அதை முப்பரிமாண படமாக தருகிறது என விளக்கி அதைக்கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கும் ஸ்டீரியோஸ்கோப் கருவியை உருவாக்கினார் -இதுவே இன்றைய முப்பரிமாண படக்கருவிகளுக்கு முன்னோடி . 

ஏற்கனவே ஹன்டர் கிறிஸ்டி கண்டுப்பிடித்திருந்த மின்பால அமைப்பை மேம்படுத்தி எளிமையாக்கி அதன் மூலம் மின்சாரம் மற்றும் மின்தடையை ஓம் விதிப்படி எளிமையாக கண்டுபிடிக்கும் வீட்ஸ்டோன் பாலத்தை உருவாக்கினார் .மின்தடையை கொண்டு கடத்தியின் நீளத்தையும் இந்த அமைப்பில் அளவிட முடியும் .மேடையில் பேச வராத இவரின் கண்டுப்பிடிப்புகள் காலத்தை கடந்தும் அவருக்காக பேசுகின்றன என்றால் அது மிகையில்லை