பெண் மொழி பேசும் பிருந்தாவும்,இளம் பருவத்து ஆண்களும்


கவிஞர் அ.வெண்ணிலா அவர்களின் பிருந்தாவும்,இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன். பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் சார்ந்து பெரும்பாலான சிறுகதைகள் எழுந்திருக்கின்றன. அதிலும் எரி நட்சத்திரம் மற்றும் வெளியே எனும் இரு சிறுகதைகளும் உள்ளத்தை கனக்க செய்யும். ஒழுங்கான சுகாதார வசதி இல்லாமல் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களை மிக இயல்பாக அதே சமயம் அதன் வலி குறையாமல் பதிந்திருக்கிறார் ஆசிரியர். 

உறவுகள்,முகம் தெரியாதவர்கள்,நட்புகள் என்று ஒவ்வொரு இடத்திலும் பெண்களின் மீதான வன்முறைகள் வெவ்வேறு விதத்தில் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. அதை முதல் ஐந்து கதைகளும்,பகிர்தல் என்கிற சிறுகதையும் வெவ்வேறு தளங்களில் பதிகின்றன. பெயர்கள் எப்படி மாறிப்போகின்றன என்று சொல்லும் கதையான அம்மணத்தெருவும் அற்புதமான அனுபவத்தை தருகிறது. இரண்டாம் மனைவியின் பிள்ளையாக இருக்கும் சிறுவனின் பார்வையில் விரியும் கதையும்,ஆசை நாயகி ஆன பொன்னம்மாவின் கதையும் என்று எத்தனையோ சித்திரங்களை பதியும் இந்த தொகுப்பில் எதையும் வலிந்து திணிக்கும் பாணி இல்லை. மிக முக்கியமாக பெண்களின் மீதான வன்முறையை பெண் மொழியில் பதிவு செய்த வகையில் இந்த சிறுகதைத்தொகுப்பு தனித்து நிற்கிறது

விகடன் பிரசுரம் 
பக்கங்கள் : நூற்றி அறுபது 
விலை :ரூபாய்.நூறு