மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள் :
மதம், மொழி என்பதைச் சார்ந்து அரசியல் அணியாகப் பல்வேறு குழுக்கள் திரள்கிறார்கள். இந்தியாவில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் மொழிச் சிக்கல்கள் இருந்தாலும் ஆங்கிலேய அரசு மதம் சார்ந்த அடையாளங்களைக் கொண்டே அதிகாரப் பிரிப்பை மேற்கொண்டதால் மத அரசியல் மொழி அரசியலை பின்னுக்குத் தள்ளியது. விடுதலைக்குப் பின்னால் நாற்பத்தி ஏழு வழக்கு மொழிகள், வட்டார வழக்குகள் எல்லாவாற்றையும் இணைத்து கரிபோலி என்கிற இந்தி வடிவத்தின் ஆதிக்கத்துக்குள் ஆட்படுத்தும் அரசியல் நடைபெற்றது. இந்த இந்தி சம்ஸ்கிருதமயமாக ஆக்கப்பட்டது.
விடுதலைக்கு முன்னால் உருதை முன்னெடுக்கும் அரசியலை மேற்கு ஐக்கிய மாகாணத்தில் (தற்போதைய உத்திர பிரதேசம்) பலமாக வேரூன்றி இருந்த இஸ்லாமிய இயக்கமான தியோபந்த்தும், அதன் அரசியல்-கலாசார இயக்கமான ஜமாத்-இ-உலமா-இ-ஹிந்த் அமைப்பும் மேற்கொண்டன. எனினும், இவை இரண்டும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவையாக, காங்கிரஸ் சார்பாக இருந்ததால் உருது மொழியைப் பிரிவினையோடு இணைப்பது முழுக்கச் சரியல்ல.
பனராஸ் இந்து பல்கலையை உருவாக்கிய மதன் மோகன் மாளவியா ஹிந்தி சாஹித்திய சம்மேளனத்தை நிறுவினார். இந்து மதம், அதன் நூல்கள் ஆகியவற்றைப் பிரபலப்படுத்தும் நோக்கம் ஒருபுறம் என்றால், பாரசீகம்-அரேபிய மொழிகளால் அசுத்தமானதாக அவர்கள் கருதிய இந்தியை சம்ஸ்கிருதமயத்தின் மூலம் தூய்மைப்படுத்தினர். இந்தி-உருது சிக்கல் இந்து-முஸ்லீம் பிரச்சனையாக வடக்கில் கட்டமைக்கப்பட்டது. தெற்கில் நிலைமை வேறாக இருந்தது. மொழி அந்நியர்கள் என்று உருது மொழியை வடக்கில் சொன்ன பிராமணர்கள் தெற்கில் அந்நியர்கள் என்றும், அவர்களின் வடமொழி அன்னியம் என்றும் திராவிட இயக்கத்தால் வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனிய, சம்ஸ்கிருத கலாசாரம் அந்நியமானது என்று இங்கே அடையாளப்படுத்தப்பட்டது.
வடநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட இந்தியைக் கொண்டு இந்து-முஸ்லீம் தொடர்பு கொள்ளலில் இருந்ததாகத் தூய்மைவாதிகள் சொல்லிக்கொண்ட தடையை வட்டார வழக்குகள், பிற பேசு மொழிகள் ஆகியவற்றை இணைத்து நிலைநிறுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ இந்தியின் மூலம் சரி செய்ய முயன்றார்கள். எனினும், இந்து-முஸ்லீம் வேற்றுமை இப்படிப்பட்ட முயற்சிகளால் அதிகப்படவே செய்தது. இதைவிட மோசமாக, இஸ்லாமியர்களின் மொழியாக மட்டுமல்லாமல் எண்ணற்ற இந்துக்களின் மொழியாகவும் இருந்த உருது மொழியைக் காலங்காலமாக உருது மொழியைப் பேசாத பிற பகுதி இஸ்லாமியர்கள் தங்களின் மொழி என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியும் காரியம் நிகழ்ந்தேறியது. உருது மொழியை இஸ்லாமியர்களோடு தொடர்பு படுத்தும் செயல் இப்படி உச்சத்தைக் கவலைக்குரிய வகையில் எட்டியது.
ஒரு மொழியைப் பிடிக்கவில்லை என்றால் என்ன சிக்கல் என்று சிலர் கேட்கலாம். தமிழகத்தின் முதல்வராக இருந்த பக்தவத்சலம் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற பொழுது பேசியது நகைமுரணாக இதற்குப் பதில் தரும், ‘ஒரு மொழியை ஒருவர் வெறுக்கிறேன் என்று சொன்னால் அதைப் பேசுகிறவர்களை வெறுப்பதாகவே பொருள். இது ஒரு மொழி, அதைப் பேசுபவர்கள் மீதான வெறுப்பை நாசூக்காக வெளிப்படுத்துவது ஆகும். அதிலும் இந்தியில் வளமை இல்லை என்று மறைமுகமாகக் கருதுவதன் வெளிப்பாடு இது.’ என்று அவர் சொன்னார். வடநாட்டின் மொழி இயக்கம் மதங்களைக் கொண்டு பிளவுபடுத்திய பொழுது, தெற்கில் நடைபெற்ற மொழி இயக்கம் தாங்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பெருமைகொண்ட எல்லா மதத்தவரையும் இணைத்துக் கொண்டு செயலாற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது.
தெற்கில் அதிகாரத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பிராமணர்களைப் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் சுலபமாக அந்த இடங்களை விட்டு நகர்த்தியதால், வடக்கைப் போல வன்முறைகள் எதுவும் அவர்கள் மீது நடக்கவில்லை.
பால் பிராஸ் ஒரு மொழிக்காக மக்கள் தங்கள் உயிரைக் கொடுப்பார்கள் என்பதை தான் நம்பவில்லை என்று சொல்கிறார். எண்ணற்ற காரணிகள் இணைந்து அவற்றை மொழியின் பெயரால் எதிர்ப்பதே நடப்பதாக அவர் கருதுகிறார். மொழியியல் அறிஞரான அண்ணாமலை தமிழகத்தில் தாய்மொழிக்காக வேறு எதையும் எதிர்நோக்காமல் உயிரைவிட்ட எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லி மொழிக்காக அப்படிப்பட்ட தியாகங்கள் நிகழ்வது சாத்தியம் என்று பதில் தருகிறார்.
சம்ஸ்கிருதத்தை மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொல்லப்படுவதைப் போல நிச்சயம் ஐம்பாதாயிரம் பேர் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. மேலும், அம்மொழியைத் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாகவே இருக்கும். எனினும், மேட்டுக்குடி இந்தியாவின் இந்து கலாசாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் அடையாளமாக அது திகழ்வதால் எட்டாவது அட்டவணையில் அதற்கு இடம் தரப்பட்டது.
அதே போலப் பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த சிந்திக்கள் சிந்தி மொழியைப் பேசினார்கள். இவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாக, அதிகக் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்கள் தங்களின் பிழைப்புக்கு இந்தி, ஆங்கிலம் கற்றாலும் தங்களுக்கு என்று தனியான ஒரு பகுதியை கேட்டுப் போராட்டம் செய்யாவிட்டாலும் எட்டாவது அட்டவணையில் ஒரு மொழியாகத் தங்கள் மொழியைச் சேர்க்க வேண்டும் என்று போராடினார்கள். அது தங்களைத் தனித்து அடையாளப்படுத்தும் ஒரு செயலாக அவர்கள் உணர்ந்தார்கள். அதனால் அரசுக்கு எந்தச் செலவும் இல்லை என்பது ஒருபுறம், இன்னொருபுறம் சிந்த் மாகாணத்தை இந்தியாவை விட்டுப் பிரித்தது தவறு என்பதைச் சூசகமாக உணர்த்தும் அரசியல் லாபம் இந்திய அரசுக்கு இருந்தது.
மூன்றாவதாக மைதிலி மொழியை எட்டாவது பட்டியலில் சேர்க்க ஒரு காலத்தில் போராட்டம் நடந்து பிசுபிசுத்துப் போனது. ஆனால். பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பொழுது பீகாரில் உள்ள பிராமணர்கள் பேசும் மொழியை மைதிலியை எந்த வேண்டுகோளும் இல்லாமலே எட்டாவது அட்டவணை மொழியாகச் சேர்த்தார்கள். பீகார், உத்திர பிரதேசத்தில் உருது மொழி சார்ந்து நடந்த அரசியல் காய் நகர்த்தல்கள் அடுத்தடுத்த பத்திகளில் இப்பொழுது காண்போம்.

இந்தியாவில் எட்டாவது பட்டியலில் மொழியாக உருது சேர்க்கப்பட்டு இருந்தாலும், அது பீகார், உத்திர பிரதேச பகுதிகளில் பரவலாகப் பேசப்பட்டாலும் அதை அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அரசுகள் அறிவிக்கவில்லை. ஜனதா அரசின் ஆட்சி கவிழ்ந்த பிறகு வந்த பீகார், உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பதாகக் காங்கிரஸ் (இ) வாக்குக் கொடுத்தது. இது குறித்துச் சமர்பிக்கப்பட்டு இருந்த குஜ்ரால் அறிக்கையைச் செயல்படுத்துவதாகக் கோடிட்டிருந்தது. இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெறப் போடப்பட்ட கணக்கு என்று சொல்லவேண்டியதில்லை.
பீகாரில் ஜெகந்நாத் மிஷ்ரா முதல்வராக இருந்தார். மைதிலி பிரமாணரான அவர் தன்னுடைய ஜாதியினரை உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்குவதை எதிர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மைதிலி மொழியினருக்குச் சலுகைகள் வழங்கி இரண்டு மாங்காய்களைப் பறித்தார். இதற்கு முன்னர் உருதை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற முயன்ற பொழுது ஜனசங்கம் பீகாரில் போர்க்கோலம் பூண்டது என்றாலும்,தற்போது பாஜக வேடிக்கை பார்த்தது. உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்க 67-ல் முயன்ற பொழுது 15௦ பேர் கலவரங்களில் இறந்தார்கள். உருதுக்கு எதிராகப் போராட்டங்கள் எண்பதில் ஓரளவுக்கு வெடித்த பொழுது பத்து பேர் இறந்தார்கள். அன்ஜூமன்-தாரீக்-இ-உருது அமைப்பு உருதை அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்குவதில் தீவிரமாக இயங்கியது.
உத்திர பிரதேசத்தில் இப்படிப்பட்ட உருதை அதிகாரப்பூர்வ இரண்டாவது மொழியாக ஆக்கும் முயற்சி வெற்றிபெறவே இல்லை. எண்பத்தி ஒன்றின் டிசம்பர் மாதத்தில் தன்னுடைய கட்சி சகாக்கள், பிரதமர் ஆகியோரின் அனுமதியில்லாமல் உருதை வி.பி.சிங் அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்க முயன்று கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். அதிகாரப்பூர்வ என்கிற சொல்லை நீக்கி இரண்டாவது மொழி என்றாவது ஆக்கலாம் என்று முயன்றார். அவர் கொண்டுவந்த அவசரச்சட்டம் லக்னோ உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் முதல்வர் ஸ்ரீபதி மிஸ்ராவும் வி.பி.சிங் வழியில் இரண்டாவது மொழியாக மட்டும் உருது மொழியை மாற்ற அவசரச்சட்டம் கொண்டு வர கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது.

அதற்கு அடுத்து என்.டி.திவாரி முதல்வரானார். ராஜீவ் காந்தியின் இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்தும் போக்குக்கு வலுசேர்க்க அவர் பழைய ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவரும் அதே இரண்டாவது மொழி முயற்சியை மேற்கொண்டார். இந்தமுறை நிலைமை மோசமானது. உருதை ஆதரித்து ஒரு கல்லூரி மாணவர்களும், எதிர்த்து இன்னொரு கல்லூரி மாணவர்களும் பதவுன் நகரத்தில் ஊர்வலம் போய்ச் சந்தித்துக் கொள்ள அரசு கணக்கின்படி 26 பேர் இறந்து போனார்கள். இன்னமும் உருது அதிக மக்களால் பேசப்பட்டும் மாநில அரசால் அங்கீகரிக்கப்படாமல் உத்திர பிரதேசத்தில் இருக்கிறது.
முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச முதல்வர் ஆனபொழுது விபி சிங்கின் ஜனதா அரசை மூன்று காரணங்களுக்காக வெறுப்பதாகச் சொன்னார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது, ஆங்கிலத்தை ஆதரித்துச் செயல்பட்டது, தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் காப்பி அடித்துத் தேர்ச்சி பெறுவதற்கு எதிரான விபி சிங்கின் பார்வையே என்று அவர் சொன்னார். அவர் ‘அங்க்ரேஸி ஹட்டாவ்’ (ஆங்கிலமே வெளியேறு) என்கிற முழக்கத்தைத் தந்தார். ஆங்கிலம் ஆதிக்க சக்திகளின் மொழி என்றும், அது மாநிலத்தை விட்டு வெளியேறி அந்த இடத்தை இந்தி பெறவேண்டும் என்றும், வெவ்வேறு மாநில அரசுகள் தங்களுக்குள் தத்தமது மொழியில் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பது அவரின் பார்வை.
லாலு இதற்கு மாறான பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆங்கிலம் கற்பதன் மூலமே முன்னேற முடியும் என்று அவர் ஆங்கிலம் கற்பித்தலை அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கினார். அதைப் போல இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெற பாகல்பூரில் யாதவர்கள் இஸ்லாமியர்களைக் கலவரத்தில் கொன்றது போல இனிமேல் நடைபெறாது என்று உறுதி தந்தார். உருதும் அதன் இடத்தைப் பீகாரில் தொடர்ந்து பெற்றது. மைதிலி பிராமணர்களின் மொழியான மைதிலி அரசுப்பணிகளுக்குத் தேர்வு எழுதும் பட்டியலில் இருந்து லாலு அரசால் நீக்கப்பட்டது.

உருது மொழி உத்திர பிரதேசத்தில் தனக்குரிய இடத்தைப் பெறமுடியாமல் நிற்பது ஒரு முரண் என்றால், காஷ்மீரில் பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இல்லாத உருது அங்கே அதிகாரப்பூர்வ மொழியாக ஆதிக்கம் செலுத்துவது இன்னொரு கதை. காஷ்மீரில் மக்களால் பேசப்படும் மொழிகள் என்று கணக்கு போட்டால் காஷ்மீரி, டோக்ரி, கோஜ்ரி, மேற்கு பஹரி, இந்துஸ்தானி, பொத்வாரி, பால்ட்டி, லடாக்கி., ஷினா, புருஷாஸ்கி என்று பட்டியல் இறங்குவரிசையில் நீளும். இதில் காணப்படாத உருது தான் ஆனால் காஷ்மீர் அரசால் வளர்க்கப்படுகிறது.
ஒரு வினோதமான அம்சம் என்னவென்றால் பஞ்சாபில் இந்துக்கள் பஞ்சாபியை மொழியைப் பேசிய பொழுதும், தாங்கள் இந்தி மொழி பேசுவதாகக் கணக்கெடுப்புகளில் கூறினார்கள். கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் முஸ்லீம்கள் உருது மொழியில் பேசுவதாகக் கணக்கை கூட்ட பொய் சொல்வது நடந்தது. காஷ்மீரிலோ இஸ்லாமியர்கள் தங்களுடைய தாய் மொழியான காஷ்மீரை நேர்மையோடு பதிவது நிகழ்கிறது. ஷேக் அப்துல்லா நாற்பத்தி நான்கில் காஷ்மிரி, பால்டி, டார்டி, டோக்ரி, பஞ்சாபி, பஹரி, லடாக்கி முதலிய மொழிகளைக் காஷ்மீரின் தேசிய மொழிகளாகவும், உருதுவை இணைப்பு மொழியாகவும் ஆட்சிக்கு வந்தால் மாற்றுவதாக அறிவித்தார்.
காஷ்மீரில் உயர்கல்வியில் காஷ்மீரி மொழிக்கு இடமில்லை. பாடப்புத்தகங்கள் கூடக் காஷ்மீரி மொழியில் கிடைப்பதில்லை. காஷ்மீரி மொழியிலோ, இன்னபிற சிறுபான்மை மொழிகளிலோ செய்தித்தாள்கள் வருவதும் அரிதான ஒன்றாகவே உள்ளது. காஷ்மீரி மொழி சாரதா வரிவடிவத்தில் எழுதப்படுவது, அதைக் காஷ்மீரி பண்டிட்கள் நாகரி வரிவடிவத்தில் எழுதுவார்கள். இரண்டு வரிவடிவங்களையும் காஷ்மீர் அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அதோடு, எல்லா முக்கியத் தகவல் தொடர்பும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகியவற்றிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரி மொழிக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைவாகவோ, செலவு செய்யப்படாமலோ இருக்கிறது. எட்டாம் வகுப்புவரை காஷ்மீரி மொழியைக் கட்டாயமாக்கும் முயற்சியும் ஓரளவுக்கே வெற்றி பெற்றுள்ளது.
திபெத்திய மொழியின் கிளையான லடாக்கி மொழிக்கு வரிவடிவம் இருந்தும் லடாக் பகுதியில் உருது பயிற்றுமொழியாகத் திணிக்கப்பட்டது. திபெத்திய மொழியின் ஒரு பிரிவான பல்டி மொழியும் இந்தியாவின் வசமுள்ள காஷ்மீர், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் இரண்டு பக்கமும் உருது மொழியால் ஆதிக்கத்துக்கு உள்ளாகி காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. பூன்ச், ரஜவுரி மாவட்டங்களில் நான்காம் வகுப்பு வரை கோஜ்ரி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. பஹரி மொழிக்கும் காஷ்மீர் அரசுகள் சில சலுகைகளை வழங்குகின்றன. இந்தக் கொள்கையை வரிக்கூ எனும் பேராசிரியர் காஷ்மீரை இஸ்லாம் மயமாக்கும் வேலையே என்று கருதுகிறார். அரசியல் அறிவியல் அறிஞர் பால் பிராஸ் இதற்கு மாறாக வேலைவாய்ப்புகள் அருகியும், இந்தியாவில் இருந்தும் துண்டிக்கப்பட்டதாக உணரும் காஷ்மீரிக்களை மேலும் தகுதியுள்ளவர்கள் ஆக்கவும், இந்திய அரசுடனான தொடர்பு சுமுகமாக இருக்கவும் இந்த இந்தி, ஆங்கிலம், உருது எனும் மும்மொழிக்கொள்கை உதவுவதாகக் கருதுகிறார்.