தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன?


தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்

இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)

தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?

இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை,
பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும்,
இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.

(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )

தமிழில்: பூ.கொ.சரவணன்

ரத்த பிரிவு கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டேயினர்


கார்ல் லேண்ட்ஸ்டேயினர் ரத்த வகைகளை கண்டறிந்த அற்புத மருத்துவர், ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுதே தந்தையை இழந்த இவர் அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். மருத்துவம் பயின்ற பின்னர் அவர் உயிரிவேதியியல் துறையில் தன்னுடைய ஆர்வத்தை திருப்பினார். நாம் உண்ணும் உணவு எப்படி நம்முடைய ரத்தத்தில் இருக்கும் வெவ்வேறு தனிமங்களின் அளவை தீர்மானிக்கிறது என்று ஆய்ந்து சொன்னார்.
நோய் எதிர்ப்பியல் மற்றும் ஆண்டிபாடிகள்பற்றியும் தீவிரமாக ஆய்வுகள் செய்தார் அவர். நோய்க்கிருமிகளின் உடற்கூறியல் துறையிலும் ஓயாத உழைப்பை செலுத்திய இவர் நோய் எதிர்ப்புக்கு காரணமான ஹெப்டான்களை கண்டுபிடித்தார்.


இவரின் ஆய்வு ஆர்வம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கலாம். போலியோ மைலிடிஸ் நோயைப்பற்றி ஆய்வுகள் செய்து கொண்டிருந்த இவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த குழந்தைகளின் மண்டையோட்டை அரைத்து குரங்குகளுக்குள் செலுத்திய பொழுது அவையும் அந்நோயால் பாதிக்கப்பட்டன என்பதைக் கண்டார். அதன் மூலம் நோய் எதிர்ப்பியலை எப்படி அந்நோய்க்கு எதிராக வளர்ப்பது என்று ஆய்வுகள் செய்ய முனைந்த அவருக்கு போதுமான குரங்குகள் கிடைக்கவில்லை. ஆகவே, ஆஸ்திரியாவின் வியன்னா நகரைவிட்டு நீங்கி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர பாஸ்டர் ஆய்வகத்தில் ஆய்வுகள் செய்தார்.


லெண்டாயிஸ் எனும் அறிவியல் அறிஞர் 1875 ஆம் ஆண்டு பிற பாலூட்டிகளின் ரத்தத்தை மனிதர்களுக்கு செலுத்தினால் அவை ரத்த குழாய்களில் அடைத்துக்கொள்வதொடு மட்டுமல்லாமல்,ரத்த செல்கள் வெடித்து ஹீமோகுளோபின் வெளியேறுவதை கண்டார். இந்த ஆய்வை மேலும் முன்னெடுத்த லேண்ட்ஸ்டேயினர் மனிதர்களுக்குள்ளும் அப்படி ரத்தம் செலுத்தினால் எதிர்ப்புகள் உண்டாவதை கண்டறிந்து சொன்னதோடு நில்லாமல் வெவ்வேறு ரத்தப்பிரிவுகளே அதற்கு காரணம் என்றும் அறிவித்தார். இந்த ரத்தப்பிரிவுகளை கொண்டு யார் பிறக்கிற பிள்ளையின் பெற்றோர் என்றும் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் சொன்னார். அவருக்கு இந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. எண்ணற்ற விபத்துகளில் உயிர்கள் காப்பாற்றப்பட காரணமான ரத்த பிரிவை கண்டறிதலை முதன்முதலில் செய்து மனித குலத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய இவர் என்றைக்கும் நினைவில் கொள்ளப்படவேண்டியவர்.

இன்று உலக இரத்ததான தினம்.

டோரத்தி ஹாட்கின் எனும் உன்னத ஆய்வாளர்


டோரத்தி ஹாட்கின் என்கிற பெயர் உயிரி வேதியியல் துறையில் எப்பொழுதும் தனித்து நிற்கிற ஒரு பெயர். எகிப்தில் இங்கிலாந்து தாய் தந்தைக்கு பிறந்தவர் அவர். பெற்றோர் அங்கே அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். விடுமுறை காலத்தில் இங்கிலாந்துக்கு தங்க வந்தவர் உலகப்போரால் இங்கேயே தங்கிவிட்டார். அப்படியே இங்கிலாந்தில் கல்வி பயில ஆரம்பித்தார் 

கேம்ப்ரிட்ஜ்,ஆக்ஸ்போர்ட் என்று நீண்ட அவரின் கல்விக்காலத்திலேயே அவரின் கவனம் படிகவியல் துறை பக்கம் திரும்பியது. படிகங்களின் வழியாக எக்ஸ் கதிர்களை செலுத்தி மூலக்கூறுகளின் உருவத்தை கண்டுபிடிப்பதில் அவரின் ஆர்வம் நகர்ந்தது. அப்படி அவர் முதன்முதலில் ஆய்வு செய்தது செரிமானத்துக்கு உதவும் பெப்சினை ! 

முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் அவருக்கு கைகள் எரிய ஆரம்பித்தன. சோதித்து பார்த்ததில் RHEUMATOID ARTHRITIS இருப்பது தெரிந்தது. வீல்சேரில் தான் வாழ்க்கை என்று ஆன சூழலில் அப்படியே டோரத்தி தேங்கி விடுவார் என்று பலர் நினைத்தார்கள் அப்பொழுது அயல்நாட்டில் நடந்த கருத்தரங்கிற்கு வீல்சேரில் போய் வந்து தான் துவண்டு விடவில்லை என்று உலகுக்கு அறிவித்தார். கொழுப்பின் வடிவத்தை எக்ஸ் ரே படிகவியலின் மூலம் கண்டறிந்தார் அவர். எட்டு வருட உழைப்புக்கு பின்னர் விட்டமின் B 12 இன் உருவத்தை கண்டறிந்தார். 

அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அன்றைய சூழலில் நோபல் பரிசு பெற்ற மூன்றாவது பெண்மணி ஆனார் அவர். அத்தோடு அவர் ஓய்ந்திருக்கலாம். டி.என்.ஏ.வின் உருவத்தை எக்ஸ் ரே படிகவியல் முறையின் மூலம் வாட்சன் க்ரிக் ரோசாலின்ட் ஏற்படுத்திய அடிப்படைகளின் மூலம் கண்டிருப்பதை அறிந்து காரில் பல பேரோடு ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து கேம்ப்ரிட்ஜ் வரை கிளம்பிப்போய் பார்த்துவிட்டு வந்தார். இன்சூலினை ராபின்சன் அவருக்கு அறிமுகப்படுத்தி இருந்தார். அதன் உருவத்தை கண்டுபிடிக்க தன்னுடைய இளம் வயதில் இருந்தே அவர் முயன்று கொண்டிருந்தார். ஒரு வருடம் இரண்டு வருடமில்லை முப்பத்தைந்து வருடகால உழைப்புக்கு பின்னர் அந்த இன்சூலினின் சிக்கலான உருவம் அவருக்கு புலப்பட்டது. “என் வாழ்வின் நெகிழ வைக்கும் சிறந்த தருணம் இது !” என்று கண்ணீரோடு பதிவு செய்தார் அவர். பெனிசிலினின் உருவத்தையும் அவர் கண்டறிந்தார் . இந்த கண்டுபிடிப்புகள் மருந்துகளின் செயல்வேகத்தை அதிகப்படுத்த உதவின . 

கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக பாடுபட்டார் அவர். அவரின் சோவியத் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக அவர் அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்தது அமெரிக்கா. அவர் ஹங்கேரியை அநியாயமாக சோவியத் ரஷ்யா தாக்கியதும் தன்னுடைய கம்யூனிஸ்ட் கட்சிப்பதவியை துறந்தார். “நான் வேதியியல் மற்றும் படிகங்கள் ஆகியவற்றில் மூழ்கி ஆனந்தப்பட படைக்கப்பட்டவள் !” என்ற அவர் தன்னுடைய ஆய்வுகளின் மூலம் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் நிம்மதியை கொண்டுவந்தார் அவர் என்றால் மிகையில்லை. அவரின் பிறந்தநாள் இன்று.