இந்தியாவை எதிர்பார்த்தல் பாகம்-2


சேகர் குப்தா நூலின் அறிமுகத்தின் இரண்டாவது பகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வீழ்ச்சி, மோடியின் எழுச்சி, அன்னா ஹசாரே முதல் ஆம் ஆத்மி வரையிலான பகுதிகளைக் காண்போம்.

இந்திராவின் காலத்தில் இடதுசாரிகளும், இடதுசாரிப் பார்வையும் இந்தியாவின் தொழில்துறையை, நாட்டைப் பாதித்தது என்பது குறித்துக் கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கிறார். 97 சதவிகித வருமான வரியும், 31 சதவிகித பண வீக்கமும் தான் இடதுசாரிகளின் சாதனை என்று போட்டு துவைக்கிறார். எமெர்ஜென்சியின் பொழுது இந்திராவின் பக்கம் மூச்சே விடாமல் நின்ற வரலாறும் இவர்களுக்கு உண்டல்லவா என்று நியாயமான கேள்வியை எழுப்புகிறார்.

இரண்டாவது ஆட்சிக்காலத்தில் எப்படிக் காங்கிரஸ் தன்னுடைய சீரான நிர்வாகத்தை இழந்தது என்பதற்குப் பல்வேறு உதாரணங்கள் தருகிறார். ஆர்டில்லரி துப்பாக்கிகளை 23 வருடங்களாக வாங்காமல் இருப்பதையும். கையெழுத்து கூட இல்லாமல் சிபிஐ இயக்குனர் வழங்கிய ஆயுத விற்பனையாளர்கள் குறித்த துண்டுச்சீட்டு புகாரை வைத்துக்கொண்டு ஆயுத கொள்முதலையே மறந்திருப்பதையும் சாடுகிறார். மன்மோகன் சிங்கை 39/3 என்கிற நிலையில் களமிறங்கும் திராவிட் என்று குறிப்பிடுகிறார். ஒரு நாளைக்குப் பதினெட்டு மணிநேரம் உழைத்தும், அவரின் அலுவலகத்துக்கு உண்மையான அதிகாரங்கள் இல்லாததால் அவரின் செயல்பாடுகள் வீணாகப் போய்விட்டன. வாஜ்பேயி வலுமிகுந்த பிரதமர் அலுவலகத்தை வைத்துக்கொண்டு ஆறு மணிநேரம் மட்டுமே உழைக்க வேண்டியிருந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்.

பிரதமர் அலுவலகத்தின் சீர்திருத்தங்களைச் சோனியா காந்தி தலைமையிலான சட்டத்துக்குப் புறம்பான தேசிய ஆலோசனை குழு தடுத்தது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் அரசுக்கு எதிரான பார்வையையே எப்பொழுதும் கொண்ட தீர்வுகள் அற்ற சமூகச் சேவகர்கள் குழு ஆகியோர் அடங்கிய இக்குழு அரசை முடக்கிப் போடுவதில் முக்கியப் பணியாற்றியது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனின் பேட்டி கண்ட அனுபவத்தைக் குப்தா சொல்வதில், ‘ஐயோ! ஐயோ’ என்கிற கடுப்பு மிகுந்த நகைச்சுவை மிளிர்கிறது. காந்தியை கோட்சே கொல்லவில்லை, நேரு தான் பின்னால் இருந்து சுட்டார். அப்பொழுது தான் அவர் பிரதமராகத் தொடரமுடியும் என்பதே காரணம். இதற்கு ஆதாரம் ஒரு ஆந்திர பிரதேச அதிகாரியி நினைவலைகளில் உள்ளது. அவரின் பெயரும், புத்தகத்தின் பெயரும் மறந்துவிட்டது என்று சுதர்சன் காமெடி செய்கிறார். உச்சபட்சமாகப் பாபர் மசூதியை கரசேவகர்கள் இடிக்கவில்லை, உள்ளே இருந்து குண்டு வைத்துக் காங்கிரஸ் தான் தகர்த்தது என்ற தருணத்தில் சேகர் குப்தா தலையில் அடித்துக்கொண்டாரா தெரியவில்லை.

முதலீட்டு கமிஷனின் தலைவராக இருந்த ரத்தன் டாடா நிரந்தரத் தொடர்புகளுக்காக நீரா ராடியாவை நாடவேண்டி இருந்தது என்றால் அரசும், முதலாளிகளும் எப்படித் தொடர்பற்றுக் கிடக்கிறார்கள் எனப் புலனாகிறது என்று கவலைகொள்கிறார். ரகுராம் ராஜன் தன்னுடைய ‘FAULTLINES’ நூலில் இந்தியாவின் புதிய கோடீஸ்வரர்கள் ஐடி, உற்பத்தி துறைகளில் இருந்து வராமல் அரசை அதிகமாக வளைக்கும் வாய்ப்புள்ள, அரசியல்வாதிகள் செல்வாக்கு செலுத்தும் கட்டுமானம், ரியல் எஸ்டேட், சுரங்கத்துறை ஆகியவற்றில் இருந்து வருவதைச் சுட்டி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, தெளிவான சட்ட அமலாக்கம் என்று பல முனைகளில் இயங்க வேண்டியதன் தேவையை அழுத்திப் பதிகிறார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கடன் தள்ளுபடி தான் காங்கிரசுக்கு வெற்றியை வாங்கித் தந்தது என்றால் கொடிய வறுமை மிக்கப் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏன் எண்பத்தி ஆறு இடங்களில் 19 இடங்களைக் காங்கிரஸ் வென்றது என்றும், BIMARU மாநிலங்களில் 48/208 என்று மட்டுமே காங்கிரஸ் ஏன் வெல்லமுடிந்தது என்றும் கேள்விகள் எழுப்புகிறார். வன உரிமைகள் சட்டம் தான் வெற்றியை தந்தது என்றால் பழங்குடியினரின் நாற்பத்தி ஏழு தொகுதிகளில் ஏன் 19-ல் மட்டும் காங்கிரஸ் வென்றது? நகர்ப்புறங்களே காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியை தந்ததை அவர் சுட்டிக்காட்டி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்று அறிவுறுத்துகிறார்.

இஸ்லாமியர்கள் எப்பொழுதும் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் கருதுவதை ஏற்க முடியாது. பாஜக தன்னுடைய மந்திர், மோடி, இந்துத்வா ஆகியவற்றைக் கைக்கொள்ளாமல் வளர்ச்சியை முன்னிறுத்தியே பீகார் சட்டசபை தேர்தலில் 91/102 எனக் கலக்கியதை சுட்டிக்காட்டுகிறார். சமச்சீரான வளர்ச்சி அற்புதங்களைச் செய்யக்கூடும்.

மன்மோகன் சிங் என்கிற நைட்வாட்ச்மேன் விக்கெட் விழாமல் ஆடிவிட்டு, பின்னர் முக்கிய மட்டையாளராகத் தாங்கள் கருதும் ராகுல் காந்தியை களமிறக்கலாம் என்று காங்கிரஸ் எண்ணுவது எப்பொழுதும் சாத்தியமாகாது என்று சரியாகக் கணிக்கிறார். எஸ்.எம்.கிருஷ்ணாவை ஆளுநர் ஆக்குங்கள், இந்தி பகுதியில் இருந்து எந்தப் பெருந்தலையும் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் இருக்கவில்லை என்பதை ஷீலா தீட்சித்தை கொண்டுவந்து சரி செய்யுங்கள், ராஜ்ய சபாவில் தொடர்ந்து நான்கு முறை பதவி பெற்றுக்கொண்டிருக்கும் குழப்பத்துக்கும், ஜால்ராவுக்கும் பெயர் போனவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர் சொன்னதை எதையாவது காங்கிரஸ் கேட்டிருக்கலாம்.

ராபர்ட் ப்ளாக்வெல் என்கிற அமெரிக்கத் தூதர் சொன்ன கதையை அமைச்சர்கள் செயல்படாமல் போய் அவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டஅதிகாரிகள் குறித்து விளக்க சொல்கிறார். பொது மருத்துவர்களைப் போன்ற அதிகாரிகள் அடுத்த நாள் சிறப்பு மருத்துவர் வரும்வரை முதலுதவியே தரவேண்டும், சிறப்பு மருத்துவர் ஒளிந்துகொண்டால் நோயாளி பொது மருத்துவரிடமே மாட்டிக்கொள்ள வேண்டியது தான் என்று கிண்டலடிக்கிறார்.

இந்திய வங்கித்துறை ஐந்து லட்சம் கோடியை எரிசக்தி துறையில்முடக்கிவிட்டு மீட்கமுடியாமல் இருப்பதையும், இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை வெட்டி எடுக்கப் போடப்பட்ட தொடர் தடைகளால் ஒரு லட்சம் கோடி எஃகு உற்பத்தி முடங்கியதையும், ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற ஒழுங்கான கொள்கை தெளிவில்லாத ஆட்களால் மூன்று லட்சம் கோடி பணம் தொலைதொடர்பு துறையில் கடனாக இருப்பதையும், பத்து லட்சம் கோடி கடன்களை அரசின் மெத்தனமான கொள்கையால் வங்கிகள் இழக்க கூடிய நிலை நிலவுவதையும் குட்டிக்காட்டுகிறார்.

தேசிய ஊரக நலத்திட்டத்தில் பல கோடி ஊழலுக்குக் காரணமான குஷ்வாகா எனும் பிஎஸ்பி அமைச்சரை பாஜக கட்சியில் சேர்த்துக் கொண்டதை சுட்டிக்காட்டி பெரிய திட்டங்கள் இல்லாமல் திணறுகிறது என்று கருதுவதாகச் சொல்கிறார். அமித் ஷா பெரிய வெற்றியை பெற்றுத்தர மாட்டார் என்றும் அடித்துப் பேசுகிறார்.

கூட்டாட்சி தத்துவத்தில் பெருமளவு நம்பிக்கை கொண்ட வாஜ்பேயி எல்லா மாநில முதல்வர்களையும் கொள்கைகள் சார்ந்து ஒன்றாக அமரவைத்து பேச முயன்று தோற்றதை சொல்லி காங்கிரஸ் தலைமையிலான அரசு மாநிலங்களை மதிப்பதை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ராபர்ட் வதேராவை காக்க காங்கிரஸ் முயல்வதை அத்தனை அங்கதத்தோடு சேகர் குப்தா சாடுவதைக் கட்டுரையாக வாசிக்கவேண்டும்.

நிர்பயா வன்புணர்வு நிகழ்ந்த பொழுது கண்ணீரோடு கூடிய பல்லாயிரம் மக்களிடம் பேச ஏன் ஒரு அமைச்சரோ, எம்பியோ, முதல்வரோ எட்டிப்பார்க்காத அளவுக்கு மக்களிடம் இருந்து ஏன் காங்கிரஸ் துண்டித்துக்கொண்டது என்று கேட்கிறார். கோபக்கார மக்களையும், காவல்துறையையும் சந்திக்கவிட்டுவிட்டுச் சுகமாக வேடிக்கை பார்ப்பதுதான் ஒரு அரசின் கடமையா என்று சாட்டையைச் சுழற்றுகிறார்.

இந்தியாவின் முக்கியமான ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு ஏன் ஆட்சிப்பணி அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும்? தொழில்துறையைச் சார்ந்தவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் என்று பலரும் உள்ளே வருவது சிறப்பான நிர்வாகத்தைத் தரும். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த பொழுது மக்களை மின்சாரம், தண்ணீர், தானியம், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு உண்மையான விலையைச் செலுத்த வைப்பது தான் பெரிய சவால் என்றதையும் அதை ஓரளவுக்கு அவர் செயல்படுத்தியதையும் பாராட்டுகிறார். குடும்ப ஆட்சியாகப் போய்விட்ட காங்கிரஸ் அதற்கு எதிராக வளர்ந்த ஆந்திர சந்திரபாபு நாயுடு குடும்பம், தமிழகக் கருணாநிதி குடும்பம், மகாராஷ்டிராவின் தாக்கரே குடும்பம், மேகலாவியின் சங்மா குடும்பம், பஞ்சாபின் பாதல் குடும்பம், பீகாரின் லாலு குடும்பம், உபியின் முலாயம் யாதவ் குடும்பம், கர்நாடகத்தின் கவுடாக்கள் என்று குடும்ப அரசியலை எதிர்கொள்ளாமல் நின்றதும், உட்கட்சி ஜனநாயகத்தை வளர்க்காமல் போனதும் அதன் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்று படம்பிடிக்கிறார்.

சஞ்சய் தத்துக்காகக் கட்ஜூ முதல் கடைக்கோடி ஹிந்தி ரசிகன் வரை களம் புகுந்து ஆதரவு தருவதை அடித்துத் துவைக்கிறார். சிறைகளில் ஜாமீன் கட்ட முடியாமல் பல்வேறு அடித்தட்டு மக்கள் வாடுகிறார்கள், சந்தேகத்தின் பெயரில் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் அடைக்கப்பட்டு அநியாயமாகத் துன்புறுகிறார்கள், தலித்கள் கொடுமைக்குச் சிறைகளில் உள்ளாகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் இல்லாத கரிசனம் குற்றவாளி என ஏற்றுக்கொள்ளப்பட்ட சஞ்சய் தத்துக்கு மட்டும் ஏன் என வினவுகிறார். ஷைனி அகுஜா தன்னுடைய பணிப்பெண்ணை வன்புணர்வு செய்து சிறைமீண்டு வந்து படத்தில் நடிக்கிற பொழுது வராத அருவருப்பு டெல்லி வழக்கின் பொழுது மட்டும் வருவது நம்முடைய மந்தைத்தனத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று விமர்சிக்கிறார்.

மாவோயிஸ்ட்கள் எதிர்ப்பில் அரசு மெத்தனமாக, ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் செயல்படுவதே 76 துணை ராணுவ வீரர்கள் இறக்க காரணம் என்று குறிப்பிடுகிற குப்தா, துணை ராணுவத்தினர் இறக்கிற பொழுது ராணுவத்தினர் இறக்கிற பொழுது எழுகிற உணர்ச்சி எழும்புவது இல்லையே ஏன் என வினவுகிறார். சீருடைகள் நம்முடைய சீற்றத்தை தீர்மானிக்கின்றனவா? எனக் கேட்பதோடு, பினாயக் சென் மீதான வழக்கும், அதன் தீர்ப்பும் தவறானவை என்றாலும் அவரை அரசின் திட்டமிடல் குழு ஒன்றில் நியமிப்பது ராணுவத்தினருக்கு என்ன செய்தியை சொல்லும் என்கிறார். ஹர்ஷ் மந்தர் எனும் தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினர் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகியாக ராமகிருஷ்ணா எனும் மாவோயிஸ்ட் தலைவரின் மனைவி இருந்ததைச் சுட்டிக்காட்டி அரசு தன்னுடைய போரில் குழம்பியிருக்கிறது, மாவோயிஸ்ட்கள் அதனை உணர்ந்து அடிக்கிறார்கள் என முடிக்கிறார்.

பாஜக எப்படி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக எதிர்க்கட்சியாக இருந்தது என்று அடுக்குகிறார். பாகிஸ்தானுடன் சமாதானமாகப் பேச்சு வார்த்தை நடத்த முயன்ற காங்கிரசை கோழை என்று கத்துகிற பாஜக, வாஜ்பேயி பாகிஸ்தான் உருவாக அடித்தளமிட்ட லாகூர் தீர்மானம் போடப்பட்ட இடத்தில் நின்றபடி, பாகிஸ்தான் என்கிற நாடு அமைதியும், வளமும் பெற்று சிறக்க வேண்டும் என்ற பொழுது ஆர்.எஸ்.எஸ். முதல் பாஜக வரை அமைதியாகவே இருந்தன என்று சுட்டிக்காட்டுகிறார். பொதுத்துறையின் செயல்படாத பிரிவுகளைத் தனியாருக்கு விற்பதை வீரியமாக அருண் ஷோரி செய்தார், இப்பொழுது காங்கிரஸ் செய்ய முனைகிற பொழுது ஓலம் எழுகிறது. GST எனும் இந்தியாவின் பொருளாதரத்தை மாற்றக்கூடிய சட்டத்தை மோடி ஆசீர்வாதத்தோடு எதிர்ப்பது நடக்கிறது. அணு குண்டு வெடித்த பாஜக அரசு அணு ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது ஏன் என்று வினவுகிறார்.

இஸ்ரத் ஜகான் மரணத்தை வெறும் முஸ்லீம் இந்து பிரச்சனையாகக் காங்கிரஸ் கட்டமைத்து தவறான அரசியலை முன்னெடுக்கிறது என்கிற குப்தா, பஞ்சாபில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளக் கடத்தலுக்குக் கடத்தல், கொலைக்குக் கொலை என்று அஜித் தோவல், கே.பி.எஸ்.கில் அடித்து நொறுக்கி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதை நினைவுபடுத்துகிறார். நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் என்கவுண்டரில் சந்தேகத்தின் பெயரில் அப்பொழுது கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் காலத்தில் நிறைய என்கவுண்டர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஏன் காஷ்மீரிலும் நடந்திருக்கின்றன. அவற்றின் அயோக்கியத்தையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் அல்லவா என்று கேட்கிறார்.

திரிபுராவில் எண்பத்தி எட்டில் TNV எனும் தீவிரவாத அமைப்பு தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு 91 வங்காளிகளைக் கொன்றது, சீர்குலைவுற்ற பகுதி சட்டம் போட்டுக் கடுமையாகச் செயல்படுவது போல ராஜீவ் காந்தி அரசு காட்டிக்கொண்டது. தேர்தலில் அரிதிலும் அரிதாகக் காங்கிரஸ் வென்றது. பின்னர் அந்த அமைப்பின் தலைவருக்கு மன்னிப்பும், மறுவாழ்வும் தந்த நாடகம் என்ன? என்று அதிரவைக்கிறார். மொத்தத்தில், குஜாரத் முதல் படுகொலையும் இல்லை, இறுதியும் இல்லை. பாராளுமன்றத்துக்குப் பதில் சொல்லும் அமைப்பாக உளவுத் துறையை மாற்றாமல் சத்தங்கள் மட்டும் போடும் அரசியல் தீர்வுகளைத் தராது என்று முடிக்கிறார்.

2009-10 வரை ஒரளவுக்குச் சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த எஃகு உற்பத்தி ஐமுகூட்டணியின் இறுதிக்காலத்தில் பெரும் சிக்கலுக்கு உள்ளானதையும், இறுதி மூன்று வருடங்கள் பல மில்லியன் டன் இரும்புத்தாது, நிலக்கரி இறக்குமதி அதிகரித்து இருப்பதையும்,பாக்சைட் தனிமம் பெருமளவில் இருந்தும் அலுமினிய இறக்குமதி நோக்கித் தள்ளப்படும் நிலையில் இருப்பதைச் சொல்லி, தின்ஷா படேல் எனும் சுரங்கத்துறை அமைச்சர் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டு இருப்பதையும் காட்டுகிறார்.

ராகுல் காந்தி சிறைத்தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனே பதவி இழக்கிறார்கள் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற அவசரச்சட்டம் கொண்டுவந்த பொழுது அதை எதிர்த்து தடுத்தார். A.P.வெங்கடேஸ்வரன் எனும் அயலுறவுத் துறை செயலாளர் சொன்ன தகவலும், ராஜீவ் காந்தி சொன்ன தகவலும் மாறுபடுகிறது என்று ஒரு பாகிஸ்தானிய நிருபர் கேள்வி கேட்டதும் அங்கேயே அவரை அப்பதவியை விட்டு நீக்கம் செய்தார் அவசரக்கோல ராஜீவ். வெங்கடேஸ்வரன் இன்னமும் நான்கு வருடம் பதவிக்காலம் இருந்தும் தன்மானத்தோடு ஒட்டுமொத்தமாக அரசுப்பணியை விட்டு விலகினார். அதுபோல மன்மோகன் செய்வாரா என்று சீண்டுகிறார் சேகர் குப்தா.

கூட்டணி தர்மத்துக்காக ராஜாவின் ஊழலையும், தொடர்ந்து தவறுகள் செய்தும் தட்டிக்கேட்காமல் விட்ட கல்மாடி காமன்வெல்த்தில் களவாடியதும், ஆதர்ஷ் ஊழலை அரசு சரிவர முதலிலேயே தடுக்காததும் அதன் பெயரைக் கெடுத்தன என்கிறார் குப்தா. அதோடு, BSNL நல்ல வளர்ச்சியில் இருந்த பொழுது அதைப் பங்குச்சந்தையில் இறக்காமல் விட்டு ஊழலை மலிய வைத்து விட்டாகிற்று.

மன்மோகன் எப்பொழுதும் திராவிட் போல அமைதியாக இருப்பதே அவர் குணம், ஹர்ஷ் மேத்தா ஊழலில் அவருக்குப் பங்கிருக்கிறதா என்று கேள்வி எழுந்த பொழுது, ‘எது நீங்கள் தொடங்கும் புள்ளி என்பதைப் பொறுத்தது’ என்றே அவர் பதில் சொன்னார். பங்குச்சந்தை வீழ்ந்து கொண்டிருந்த பொழுது நான் நிம்மதியாக உறங்குவது இதனால் கெடாது என்று அவரால் சொல்லமுடிந்தது.

லோக்பால் உச்சநீதிமன்றம் துவங்கி சகலரையும் கேள்விகேட்கும் அமைப்பாகப் பார்ப்பது சர்வாதிகாரம் இல்லையா எனக்கேட்கிறார். எங்கும் எப்பொழுதும் நீதிபதியின் அனுமதி இல்லாமல் நுழைந்து சோதனை செய்யும் உரிமையைத் தானே AFSPA எனும் கொடுஞ்சட்டமும் கொண்டிருக்கிறது? நேர்மைக்காகப் போராடுவதாகச் சொல்லும் அர்விந்த் கேஜ்ரிவால் ஒன்பது லட்ச ரூபாயை பணிக்காலத்தில் வேறு வேலைக்குப் போனதற்குச் செலுத்த வேண்டியிருந்தது. அதைத் தரமாட்டேன் என்று இழுத்து பிடித்து நின்றது எப்படி நேர்மையாகும்? பூஷண் தந்தை-மகன் இணையருக்கு மாயாவதி எளியோருக்கு வழங்கப்படும் வீட்டை வெகுமதி போல வழங்கிய பொழுது, தந்தார், எடுத்துக்கொண்டோம் என்றது எவ்வளவு கயமைத்தனமானது? தான் பெற்ற அரசு விருதைக் கொண்டு டிக்கெட்டில் சலுகை பெற்றுக்கொண்டு, முழுத்தொகையைத் தன்னுடைய புரவலர்களிடம் கிரண் பேடி பெற்றது ஊழல் இல்லையா? இவர்களா ஊழலை எதிர்க்க வந்துவிட்டார்கள் என்று பொரிகிறார்.

நீதிபதிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் தவிர்த்து அளவில்லாத நேர்மை கொண்ட ஆட்கள் ஆறு பேரை தேர்வு செய்வோம் என்பது முன்னைய இரு பிரிவில் நேர்மைக் குறைவு உண்டு, அங்கே பெரும்பாலும் நேர்மையானவர்களே இல்லை என்கிற தொனியை அல்லவா தருகிறது என்று கேட்கும் குப்தா, தனக்கான அங்கத்தினரை தேர்வு செய்ய இளம் நீதிபதிகளைப் பயன்படுத்திக்கொள்வதும், லோக்பால் ஆட்களைப் பதவியை விட்டு அனுப்புகிற பொழுது ஐந்து மூத்த நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் என்று குழப்ப சட்டமாக லோக்பால் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டுகிறார்.

புரட்சி என்பது ஒரு சட்டத்தின் மூலம் நடப்பதில்லை. இடதுசாரிகளை ஆட்சியைவிட்டு மோசமான நிர்வாகத்துக்காக எண்பத்தி நான்கு சதவிகிதம் மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்து அனுப்பிவைத்ததையும், மாவோயிஸ்ட்கள் மிகுந்த பகுதியில் PCAPA எனும் தீவிர இடதுசாரிகள் ஆதரவு கட்சியின் வேட்பாளரை ஜார்கிராம் எனும் தொகுதியில் எண்பத்தி சதவிகித வாக்காளர்கள் நிராகரித்து மம்தா கட்சி நபரை தேர்ந்தெடுத்ததைச் சுட்டிக்காட்டும் குப்தா தெற்கு டெல்லி, தெற்கு மும்பையில் முறையே நாற்பத்தி மூன்று, நாற்பத்தி எட்டுச் சதவிகிதம் மக்கள் மட்டுமே ஓட்டளித்து உள்ளார்கள். ஜனநாயகத்தின் அடிப்படையையே நம்பாமல் ஒரு சர்வாதிகிற லோக்பால் தீர்வுகள் தந்துவிடும் என்று இவர்கள் நம்புவது வேடிக்கையானது என்கிறார்.

விபி சிங் ராஜீவ் காந்தியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த பொழுது,செந்த் எனும் ஓட்டைப் போட்டு வீட்டுக்குள் திருடன் நுழைவதை போல ராஜீவ் திருடிவிட்டார். உங்களின் வரியில் தான் அரசு இயங்குகிறது என்று சொல்லிவிட்டு, தீப்பெட்டியை கையில் எடுத்து இந்த இருபத்தி ஐந்து பைசா தீப்பெட்டியில் ஐந்து காசு அரசு எடுத்து உங்களுக்குப் பள்ளி,. சாலைகள் தருகிறது. ஆயுதங்களும் வாங்குகிறது. அந்த உங்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது எனப் புரியவைத்து காங்கிரசுக்கு எதிரான அலையை உண்டு செய்தார். அப்படிப்பட்ட தலைவர்கள் குறைந்து போன இடத்தையே ஆதிக்க மனோபாவம் மிக்க அன்னா ஹசாரே போன்ற ஆட்கள் கைப்பற்றிக்கொண்டதாகச் சேகர் குப்தா சொல்கிறார்.

ஷாந்தி பூஷன் ‘மதுகோடா, ஆ.ராசா போன்றவர்கள் பிரதமர் பதவிக்கு வராமல் லோக்பால் தடுக்கும் என்கிறார். அவரின் பார்வையில் பழங்குடியினர், தலித்துகள் பலரும் ஊழல்மயமானவர்கள் என்கிற மத்தியவர்க்க பார்வையே இருக்கிறது. இவர்கள் தான் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்., இவர்களின் பிரதிநிதிகளுக்கு இடம் மட்டும் தந்தால் போதுமா? அவர்களின் மீதான மேல்தட்டுப் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் எப்படித் தீர்வுகள் சாத்தியம். இந்தியா ஒன்றும் சிங்கப்பூர் இல்லை ஒரு வடிவம் எல்லாவற்றுக்கும் தீர்வாக, இங்கே பலதரப்பட்ட சிக்கல்கள், மக்கள், சவால்கள் உள்ளன. அவற்றை உணராமல் பேசுவது தவறாகும். பங்காரு லக்ஷ்மன் எனும் தலித்தும், திலீப் சிங் ஜுடியோ எனும் ராஜபுத்திரரும் ஊழல் வழக்கில் சிக்கி பாஜகவில் பதவி இழந்தார்கள். ஆதிக்கச் சாதியினரான ஜூடியோ மீண்டும் அரசியலில் ஒங்க முடிந்தது. லக்ஷ்மன் காணமல் போனார். சச்சார் அறிக்கை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மிக அதிகமாக நிறைந்திருக்கும் இடம் சிறைச்சாலைகள் என்று சொல்கிறது. ஊழல் வழக்கில் பெரும்பாலும் இடைநிலை சாதியினர், தலித்துகள் மாட்டுவதற்கு அவர்கள் மட்டுமே தவறு செய்கிறார்கள் என்பது காரணமா? நிச்சயம் இல்லை. இங்கே ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிரான பார்வை வேரூன்றி இருக்கின்றது என்பதே காரணம் என்று நெத்தியடி அடிக்கிறார். இந்த மக்கள் ஆதிக்க ஜாதியினர் முன்னின்று நடத்தும் அன்னா ஹசாரே இயக்கம் போன்றவற்றைச் சந்தேகத்தோடு பார்ப்பது தவறொன்றும் இல்லை என்கிறார் சேகர் குப்தா.

சேகர் குப்தாவின் எழுத்துக்களின் மீதான விமர்சனங்களுக்குச் செல்லலாம். இவரின் மிகப்பெரிய பலம் எனப் பலர் நினைக்கும் அவரின் வாதத்திறமையே அவரின் நடுநிலைமையைக் குலைக்கிறது. ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறார் என்றால் தன்னுடைய பார்வை என்னவோ அதை மட்டுமே நிறுவும் அவர் இன்னொரு தரப்பின் நியாயத்தை மறந்தும் பதியமாட்டார். நரசிம்ம ராவ் இடிப்பின் பொழுது பூஜையில் அமர்ந்தார், அது முடியும்வரை எழவில்லை என்கிற செய்தியை காலுக்குள் நசுக்கிவிடுவார். ரிலையன்ஸ் நிறுவனம், ப.சிதம்பரம் இருவரின் மீதும் தனிக்கரிசனம் அவருக்கு உண்டு என்கிற குற்றச்சாட்டு உண்மைதானோ என்று எண்ணும் வகையிலேயே கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

நேருவின் காலத்தில் அரசு வலதுசாரிகளைக் கட்சியை விட்டு திட்டமிட்டு அகற்றியதே பொருளாதார மந்தநிலைக்குக் காரணம் என்று சொல்கிற சேகர் குப்தா அந்த வளதுசாரிகளில் பலரும் ஊழல்மயமாக, மதவாதிகளாக இருந்ததை மறந்தும் சொல்லமாட்டார். நேருவின் காலத்தில் யாரும் பெரும்பாலும் மாற்றுப் பொருளாதார மாற்றைத் தீவிரமாக முன்வைத்துச் செயல்படுத்திக் காண்பிக்கவில்லை என்பதும், அவர் விரும்புகிற ஜகதீஷ் பகவதி முதலிய பொருளாதார வல்லுனர்களே நேருவின் காலத்தில் இந்திய பொருளாதாரம் சிறப்பாகவே இருந்தது என்று சான்றிதழ் தருவதைக் குப்தா கணக்கில் கொள்ளமாட்டார். இடதுசாரிகளை விமர்சிக்கவேண்டும் என்று வந்த பிறகு நேருவில் இருந்தே துவங்குவதே தானே சரியாக இருக்க முடியும்? தரவுகளாவது, இன்னொரு பக்கம் தர்க்கங்களாவது..

கட்ஜூ செய்தி நிறுவனங்களை முறைப்படுத்த முயன்றதை சாடவந்த குப்தா தன்னுடைய இதழை மட்டுமே செய்தித் துறையின் முகம் என்பது போலப் பேசுகிறார். அதில் புரையோடிப் போயிருக்கும் ஊழல்கள், தவறுகள், செம்மையான ஒழுங்குமுறைக்கான தேவைகள் குறித்து மூச்சுகூட விடவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனம் ‘crony capitalism’-ல் முன்னணி நபர் எனத்தெரிந்தும் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை விமர்சனமாக இல்லை. ஏன் ரிலையன்ஸ் அப்படிச் செய்தது என்று ஒரு தேர்ந்த மக்கள்தொடர்பு அலுவலர் போலவே சேகர் குப்தா ஆதரித்து எழுதிச்செல்கிறார். ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு சிக்கலில் எப்படி விலைகளை அநியாயமாகக் கூட்டி கொள்ளை லாபம் பார்க்கப்பார்த்தது என்பது குறித்துக் கள்ள மவுனம், ஆனால், அதே நிறுவனத்தின் தொழில் பாதிக்கப்பட்டால் கதறுகிறார். அம்பானிக்காக ஐயோ அதானியை மோடி கண்டுகொள்கிறாரே எனப் புலம்புகிறார். பழங்குடியின மக்கள் எப்படிக் கனிமங்களை வெட்டியெடுக்கும் துறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களின் மறுவாழ்வு எப்படிச் சாத்தியமில்லாமல் போகிறது என்றும் பேச மறந்த சேகர் குப்தா சுரங்கப்பணியில் ஈடுபடும் நிறுவனங்களின் கவலையைப் பிரதிபலிப்பதை கச்சிதமாகச் செய்கிறார்.

அத்வானி பொய்யே சொல்லாதவர் என்பதில் துவங்கி பாஜகவின் மூத்த தலைவர்கள் பல வருடங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் பேசியதில்லை என்று அநியாயத்துக்குப் பொய் சொல்கிறார். ப.சிதம்பரம் நேர்மையின் உச்சம் என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறார். FCRA எனும் கொடிய சட்டத்துக்குக் காரணமான ப.சிதம்பரத்தை எந்த இடத்திலும் சாடாமல் அதை விமர்சித்தவரின் கருத்தை மட்டும் போகிற போக்கில் பதிகிற வாதத்திறமையைச் சேகர் குப்தாவிடம் கண்டு அசந்து போவீர்கள்.

இந்திய அரசாங்கத்தின் வன்முறைகள், அது நிகழ்த்திய நிறுவனக்கொலைகள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் வகையில் ‘அப்படித்தான் அரசு ஜீவித்திருக்கும்!’ என்கிற தொனியில் அப்பட்டமாகப் பேச சேகர் குப்தாவால் மட்டுமே முடியும். நீரா ராடியா டேப்புகளில் சம்பந்தப்பட்ட பர்கா தத்தைப் பற்றி விமர்சனங்கள் எதுவுமில்லை. தற்போது அவருடன் இணைந்து ஒரு நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறார் சேகர் குப்தா. ஆர்.ஆர்.எஸ். அமைப்பில் தன்னுடைய இளமைக் காலத்தில் இயங்கிய சேகர் குப்தா ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், பாஜகவையும் தனித்துக் காண்பிக்கிற பணியை அவ்வப்பொழுது கஷ்டப்பட்டுச் செய்கிறார். மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, VHP-ஐ விலக்கி வைத்தவர் என்று சொல்கிற அவரின் வாதம் கண்முன்னாலேயே சரிவதை கண்டுகொண்டு தான் இருப்பார்.

சேகர் குப்தாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்டே இந்த வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவையே அவரின் சிறந்த கட்டுரைகள் என்று அவர் எண்ணுவது அவரின் மனவோட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ‘அரசை வழிபடும் அறிவுஜீவி’ என்று சேகர் குப்தாவை சொல்லலாம் என்றாலும் அதற்கான நியாயங்கள் அவரிடம் இருப்பதே அவரின் வாதங்களோடு சமயங்களில் முரண்பட நேர்ந்தாலும் ரசிக்க வைக்கிறது.

— withShekhar Gupta and N.r narayanamurthy infosys.

 

பொது சிவில் சட்டம் தேவையா?


முப்பது வருடங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தன்னுடைய புகழ்பெற்ற ஷா பானு வழக்குத் தீர்ப்பை வழங்கியது. ஒரு இஸ்லாமிய ஆண் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவளுக்கு ஜீவனாம்சம் தருவதை நிறுத்திக்கொண்டார். அந்தத் தைரியம் மிகுந்த பெண் நீதிக்காகத் தொடர்ந்து அயராமல் போராடி உச்சநீதிமன்ற வாசலை அடைந்தார். இறுதியாக ஏப்ரல் 23, 1985 அன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஜீவனாம்சம் கோரிய ஷா பானுவுக்கு அவர் வாழ்க்கைக்குப் போதுமான நிதியை தரவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஷா பானு வழக்கு இரு வகையான சட்டங்களுக்கு இடையே சிக்கலைக் கொண்டு வந்தது. குறிப்பிடப்பட்ட காலத்துக்குப் பிறகு
பராமரிப்புத் தொகை எதையும் தரவேண்டியது இல்லை என்று முஸ்லீம் தனிச்சட்டம் குறிப்பாகப் பேசுகிறது. ஆனால், குற்ற நடைமுறை சட்டம் பிரிவு 125 போதுமான அளவு வருமான மூலம் உள்ள ஆண் திருமணம் செய்துகொண்ட பெண்ணைப் பிரிந்தாலும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பேசுகிறது.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் CrPC சட்டப்பிரிவு 125 ஐ உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஒரு மனதாகத் தரப்பட்ட இந்தத் தீர்ப்பில் இஸ்லாமிய தனிநபர் சட்டப்படி இஸ்லாமிய கணவன் தான் முடிவு செய்தால் தன்னுடைய மனைவியை நல்ல, மோசமான காரணங்களுக்காகவோ, காரணமே இல்லாமல் கைவிடலாம் என்பதை ஏற்க முடியாது. மேலும் குறிப்பிட்ட காலமான இதாத் காலத்தில் கொடுக்கும் பணம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அது அதற்குப் பிறகு அப்பெண் தன்னுடைய உடல், ஆன்மாவை பராமரிக்க எதையும் அவன் தரவேண்டியதில்லை என்பதை எத்தனை கருணையற்ற ஒன்று?’ எனக்கேட்டார்கள்
இப்படி அடிப்படைகளைத் தொட்ட பின்பு உச்சநீதிமன்றம் அரசமைப்பின் சட்டப்பிரிவு 44 பொதுச் சிவில் சட்டம் தேவை என்று கூறியிருந்தாலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் அது சார்ந்து எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்கள். நீதிமன்றம், ‘பொதுச் சிவில் சட்டம் முரண்பாடான தத்துவங்களைக் கொண்ட சட்டங்களுக்கு வெவ்வேறு வகையான நேர்மை கொண்டிருக்கும் பிரிவினைகளை நீக்கி தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.’

அரசமைப்பின் சட்டப்பிரிவு 44 ஏன் ஒரு வெற்றுக்காகிதமாக ஆனது? பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அரசமைப்பை உருவாக்கிய மற்றவர்கள் ஒரு காலத்தில் இந்த நாட்டில் பொதுச் சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்று நம்பினார்கள். இந்தியா ஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டிருக்க முடியாத அளவுக்குப் பரந்து விரிந்த நாடு என்று சொல்லப்பட்ட பொழுது ஏற்கனவே பொதுவான கிரிமினல் சட்டத்தை நாடு கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.தனிநபர் சட்டத்தை ‘நாடு சீர்திருத்தாவிட்டால்சமூகப் பிரச்சினைகளில் நாடு தேக்க நிலையை அடைந்துவிடும்’ என்று எச்சரித்தார்

அதே சமயம் சட்ட அமைச்சராக அம்பேத்கரும், பிரதமராக நேருவும் ஒரே அடியாகப் பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது புத்திசாலித்தனமானது இல்லை என்று எண்ணினார்கள். முதலில் பெரும்பான்மை சமூகத்தின் தனிநபர் சட்டங்களை அவர்கள் சீர்திருத்த களமிறங்கினார்கள். இந்து ஆண், பெண் இருவரும் தங்களுக்கான இணையை ஜாதிகளைக் கடந்து தேர்வு செய்யும் உரிமை, கொடுமை, மனமொப்பமின்மை முதலிய சூழல்களில் விவாகரத்து பெறுவது, ஒரு இணைக்கு மேலே திருமணம் செய்து கொள்ள மறுப்பு என்று பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. வேறு சில சீர்திருத்தங்கள் பெண்களின் நிலையைக் குறிப்பாக உயர்த்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ஆகவே, முதல் முறையாக விதவைகள், மகள்கள் ஆகியோருக்கு மகனைப் போலவே சொத்தில் சம பங்கு கணவன் இறக்கிற பொழுது வழங்கப்படுவதற்கு வழிவகைச் செய்யப்பட்டது.
அம்பேத்கர், நேரு இந்துச் சட்டங்களைச் சீர்திருத்த முக்கியக் காரணம் பெரிய அளவில் தாராளவாத சிந்தனை கொண்ட இந்துக்கள் நிறையப் பேர் அவர்களை ஆதரித்தார்கள். இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். முதலிய கடுமையான எதிர்ப்புகளைக் கொடுத்த அமைப்புகளை எதிர்கொள்ள அவர்கள் போதிய ஆற்றலும், எண்ணிக்கையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அப்படியும் இந்தச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பத்து வருடங்கள் ஆகின. அவை சட்டங்களாக ஆனபிறகு சட்டத்துறை வல்லுனர் மார்க் கலான்டேர் அவற்றை, ‘முழுமையான, மகத்தான சீர்திருத்தம்’ எனவும், ‘சாஸ்திரங்கள் இந்து சட்டங்களின் மூலமாக இருந்ததை இவை எடுத்துக்கொண்டன’ என்றும் குறித்தார்.

அம்பேத்கர், நேரு இருவரும் காலப்போக்கில் இதே போன்ற தாராளவாத சிந்தனை கொண்ட சக்திகள் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து எழுந்து அவர்களின் சமூகத்தின் தனிநபர் சட்டங்களை நவீன காலப் பாலின சமத்துவத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பார்கள் என்று நம்பினார்கள். ஆனால், சோககரமாக அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆனால், 1985-ன் உச்சநீதிமன்ற தீர்ப்புப் பொதுச் சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை மீண்டும் துவங்கி வைத்தது. நவீன சிந்தனை கொண்டவராக அப்பொழுது அறியப்பட்ட ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது அவரின் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் நானூறு எம்.பி.க்கள் இருந்தார்கள். பிறகு ஏன் பொதுச் சிவில் சட்டத்தை எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவாக உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நிறைவேற்ற அவர் முனையவில்லை?

உண்மையில் ராஜீவ் காந்தி ஷா பானு வழக்குத் தீர்ப்பு வந்ததும் முதலில் அதை வரவேற்கவே செய்தார். பழமைவாத இஸ்லாமியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றத்தில் எதிர்த்த பொழுது அதற்கு அற்புதமாகப் பதிலைத் தந்ததே மத்திய அமைச்சரே ஆரிப் முகமது கான் என்கிற இஸ்லாமியர் தான். ஆனால், வெகு சீக்கிரமே பிரதமர் ஆரிப் முகமதுவின் கருத்தில் இருந்து தன்னை வேறுபட்ட பார்வை கொண்டவராகக் காட்டிக்கொள்ள வேண்டிய நிலை உண்டானது. அப்படி ஆரிப் முகமதை ஆதரித்தால் காங்கிரஸ் இஸ்லாமியர்களின் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்கிற அச்சமே இப்படி ராஜீவை செயல்பட வைத்தது. தைரியமான, நேர்மையான முறையில் தன்னுடைய பெரும்பான்மையைப் பெண்களின் உரிமைகளைக் காக்கவும், அதிகரிக்கவும் பயன்படுத்தியிருக்க வேண்டிய ராஜீவ் காந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கும் சட்டத்தை நிறைவேற்ற பெரும்பான்மையைக் கோழைத்தனமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

முப்பது வருடங்களுக்குப் பிறகும் சட்டப்பிரிவு 44 வெற்றுக்காகிதமாகவே இருக்கிறது. இது தொடர்பான விவாதத்தை முன்னெடுக்க யாரேனும் முயல்கிற பொழுது ஆச்சரியப்படும் வகையில் சக்திகள் அணிதிரள்வதைக் காண இயலும். பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியல் முன்னோடிகள் இந்து தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்கள் வருவதை எதிர்த்ததற்கு (அவை பெண்களுக்கு மிகவும் அதிகமாக விடுதலை தருவதாக) தலைகீழாகப் பா.ஜ.க. பொதுச் சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது. நேருவின் பாதையில் நடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதைக் கடுமையாக எதிர்க்கிறது. நேருவே ஒரு காலத்தில் பொதுச் சிவில் சட்டம் வரும் என்று நம்பினாலும் காங்கிரஸ் இப்படி நடந்து கொள்கிறது.

காங்கிரஸ் கட்சியிடம் இதைவிட ஒன்றை தற்போதைக்கு எதிர்பார்த்துவிட முடியாது. ஆனால், உண்மையில் புரியாமல் இருப்பது பல முக்கியத் தாராளவாத சிந்தனையாளர்கள், பெண்கள் ஆகியோரும் பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல் ஒதுங்கிக்கொள்கிறார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அடிப்படை உரிமை அல்லவா? பெண்ணியாவதிகளின் மைய செயல்திட்டத்தில் பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் சட்டங்களை எதிர்ப்பது (மதங்களின் தனிநபர் சட்டங்கள் செய்வது போன்ற சட்டங்கள் ) இருக்க வேண்டும் அல்லவா? பா.ஜ.க. ஆதரிக்கிறது என்பதற்காகவே அதை எதிர்க்க வேண்டுமா?

ஷா பானு சர்ச்சைக்குப் பிறகு செயல்பாட்டாளர்-அறிஞர் வசுதா தாகம்வார் ஒரு சிறிய புத்தகத்தைப் ‘பொதுச் சிவில் சட்டத்தை நோக்கி’ என்கிற தலைப்பில் எழுதினார். அதை இந்திய சட்ட அமைப்பு வெளியிட்டது. அதை அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அந்நூல் பொதுச் சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தில் அறிவார்ந்த, தத்துவார்த்த வாதங்களைப் பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாக, அற்புதமாக எடுத்து வைக்கிறது.
பொதுச் சிவில் சட்டத்துக்கான இயக்கத்தின் நோக்கத்தில் பொதுத்தன்மையை நாடு முழுக்கக் கொண்டுவந்து தேச ஒற்றுமையை வேகப்படுத்த விரும்புவது இருக்கிறது. இந்துத்வா கருத்தியலில் நம்பிக்கை உள்ளவர்கள் சிறுபான்மையினரை தொடர்ந்து திருப்திப்படுத்தவே பொதுச் சிவில் சட்டம் வரவில்லை என்று தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள். கேள்வி என்னவென்றால் தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுகள் வலதுசாரி இந்துக்கள் சொல்வது போலத் தொடர்ந்து பராமரித்து வந்தது என்றால் ஏன் இன்னமும் அவர்கள் பரம ஏழைகளாக, வறுமை சூழந்தவர்களாக இருக்கிறார்கள்/ தாகம்வார் ‘சிறுபான்மையினர் பராமரிக்கப்படவில்லை, அவர்களின் போலியான, சுயநலம்மிக்கத் தலைவர்கள் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.’ என்று எழுதுகிறார்.

தாகம்வார், ‘இஸ்லாமிய சமூகம் ஒற்றைப்படையானது அல்ல’ என்பதை அழுத்திச் சொல்கிறார். ஷா பானு தீர்ப்பு வந்த பொழுது அதனை எண்ணற்ற இஸ்லாமிய அறிவுஜீவிகள், பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் ஆதரித்தார்கள். அந்தக் குரல்கள் ‘இஸ்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆபத்தில் உள்ளது’ என்று பெருங்குரல் கொடுத்த அடிப்படைவாதிகளின் சத்தத்தில் ஒடுங்கிப் போனது. ஷபனா ஆஸ்மி இப்பொழுது எழுதிய, வரிகளான’நெடுங்காலமாகப் பெண்கள் தனிநபர் சட்டம் என்கிற போர்வையில் கொடுமைப்படுத்தப்பட்டும், நீதி மறுக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகிறார்கள்’என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.

இஸ்லாமின் சிறந்த வரலாற்று அறிஞரான
A.A.A.பைஸின் வரிகளைத் தாகம்வார் குறிப்பிடுகிறார்,’பரிணாமம் என்பது மனிதச்சமூகத்தோடு உடன் இணைந்து. இறந்துபோனவை, உயிரற்றவை தவிர வேறு எதுவும் நிலையானது அல்ல/ சட்டங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி நிச்சயம் இருக்க முடியாது. ‘ மனுவின் சட்டங்கள் தீண்டாமையை அங்கீகரித்தன. அந்தக் கொடிய நடைமுறையை இந்திய அரசியலமைப்புச் சட்ட்டம் நீக்கியது. அதே போல, குரான் பலதார திருமணத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பது தேவையற்றது. நம் முன் உள்ள கேள்வி பாலின சமத்துவத்தில் நவீன பார்வையைக் கொண்ட சமூகம் இவற்றை ஏற்க வேண்டுமா என்பதுதான்.

பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் இன்னுமொரு வாதம் சட்டத்தெளிவு ஆகும். தாகம்வார் சுட்டிக்காட்டுவது போல, ”இந்திய சட்டமைப்பு பல்வேறு வகையான சட்டங்களை உருவாக்கி ஒரு புறம் சட்டங்களைக் கொண்டு உரிமைகளைத் தந்துவிட்டு, இன்னொரு புறம் மதத்தைக் கொண்டு அதே உரிமைகளைப் பறித்துக்கொள்வதைச் செய்கிறது’ A
சில பெண்ணியவாதிகள் பொதுச் சிவில் சட்டத்தை அது இந்து சட்டங்களைச் சிறுபான்மையினர் மீது திணிப்பதாகச் சொல்லி எதிர்க்கிறார்கள். இந்த வாதம் உண்மைக்குப் புறம்பானது. ஐம்பதுகளில் கொண்டுவரப்பட்ட இந்து தனிநபர் சட்டங்களையே தற்போது நீட்டிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்கவில்லை. சட்டங்கள் காலத்துக்கும் ஒரே மாதிரி இருப்பவை அல்ல. அந்தச் சட்டங்கள் சில வகைகளில் குறைபாடுகள் கொண்டதாகவும், முழுமையற்றதாகவும் உள்ளதை நாம் உணர்ந்துள்ளோம். அறுபது வருடங்கள் ஆன நிலையில் இந்தியாவின் மிகச்சிறந்த சட்டத் துறை நிபுணர்கள் ஒன்றாக அமர்ந்து பொதுச் சிவில் சட்டத்தை முதன்மையான தத்துவங்களின் அடிப்படையிலும், சிறந்த அறிவின் அடிப்படையிலும் சீர்திருத்த வேண்டும்..

பாஜக பொதுச் சிவில் சட்டத்தைக் கோருவதாலேயே பல தாராள சிந்தனை கொண்டவர்கள் அதை எதிர்ப்பதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட தடாலடி எதிர்வினைகள் துரதிர்ஷ்ட வசமானது. சமூகப் பழக்கங்களான திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமை, தத்தெடுத்தல் முதலியவற்றைப் பொதுவான சட்டங்களைக் கொண்டு நெறிப்படுத்துவது அவசியம். இதை உலகின் சிறந்த சட்ட நடைமுறைகள், பாலின சமத்துவப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் செய்ய வேண்டும். – Ramachandra Guha

மூலம்: http://www.telegraphindia.com/…/jsp/opinion/story_15128.jsp…

‘பாரத ரத்னா’ மாளவியா வாழ்க்கை வரலாறு !


பண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். இந்து தேசியத்தை முன்னிறுத்தி ஹிந்து மகாசபையைத் துவங்கி வைத்தவர். பாகவத சொற்பொழிவுகள் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்த அவர் சம்ஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றதோடு நில்லாமல் ஆங்கிலக் கல்வியையும் பெற்றார். பின்னர் அரசாங்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் இந்தியர்களுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று அவர் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்தது. காங்கிரசின் முக்கிய முகங்களில் ஒருவராக அவர் மாறுவதற்கான வாய்ப்புகளை அது வழங்கியது. ஹிந்துஸ்தான் இதழின் ஆசிரியராக ஆனவர் அதற்குப் பின்னர்ச் சட்டம் பயின்றுவிட்டு திரும்பினார்.

காசியில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். பல லட்சம் ரூபாய் நிதியை அலைந்து திரிந்து திரட்டினார். அன்னிபெசன்ட் அவர்களும் மத்திய இந்துப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் கனவில் இருந்தார். இரண்டு கனவுகளையும் இணைத்து தனியார் முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி தரும் நிலையமாகப் பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தார்கள்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை போரில் பங்கு பெற்றுச் செயல்பட்டாலும் இஸ்லாமியர்களை இணைத்துக்கொண்டு பணியாற்றும் கிலாபத் இயக்கத்துக்கு எதிராக அவர் இருந்தார். செளரி சௌரா சம்பவத்தால் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பொழுது அந்தக் காவல் நிலைய எரிப்புச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை வாதாடி அவர் மீட்டார்.

ஆங்கிலேய அரசு சட்டசபைகளுக்குள் இந்தியர்களுக்கு இடம் வழங்க ஆரம்பித்த பொழுது அதில் மாளவியாவும் இடம் பெற்றார். உருதுவைப் போலச் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியும் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்கள் நடைபெற்ற பொழுது அதில் இவர் பங்குகொண்டார். அது அப்போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசியது. உருது பரவலாகப் பயன்பாட்டில் இருந்தாலும், அதைக் காயஸ்தர்கள் ஆதரித்தாலும் மத ரீதியாக மொழியை அணுகி மாளவியா சார்ந்திருந்த குழு செயல்பட்டதால் அஞ்சுமான் தாரிக் இ உருது என்கிற உருது மொழி பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்ட மத ரீதியான அரசியலுக்கான வேர்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது. வங்கப்பிரிவினையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் கொதித்துக்கொண்டு இருந்த சமயத்தில் மாளவியா ஆங்கிலேய அரசு இந்து பல்கலை ஒன்றை துவங்குவதைக் கரிசனத்தோடு அணுகியதும், ஹிந்திக்குக் கொடுக்கப்பட்ட சம அந்தஸ்தும் அவரை த்ருப்திபடுத்தின. எல்லாவற்றுக்கும் மேலாகச் சட்டசபையில் அவருக்கும் இடம் தரப்பட்டு இருந்தது. அங்கே குரல் எழுப்பினால் போதும், இறங்கிப் போராட வேண்டிய காலமில்லை இது என்பது அவரின் பார்வையாகச் சுதேசி இயக்க காலத்தில் இருந்தது.

காங்கிரசின் சட்டசபைக்குள் நுழைவதில்லை என்கிற காங்கிரசின் முடிவை மறுத்து 1923 சுயராஜ்யக்கட்சியைச் சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு ஆகியோருடன் மாளவியாயும் இணைந்து ஆரம்பித்தார். அடுத்து வந்த தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஐக்கிய மாகாணங்கள், வங்கத்தில் பெற்றார்கள். கிலாபத் இயக்கத்தினரும் முனிசிபல் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியில் இணைந்து வென்றிருந்தார்கள்.

1924-ல் கோஹத் பகுதியில் நடந்த மதக்கலவரங்களில் எண்ணற்ற ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்கள். காந்தி அமைதி திரும்ப இருபத்தி ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்தார். அதே போல மாப்ளா கிளர்ச்சி ஆங்கிலேயருக்கு எதிராக ஆரம்பத்தில் தோன்றினாலும் அது மதச் சாயம் அடைந்து ஹிந்து-முஸ்லீம் கலவரமாக உருவெடுத்து பரவலான வன்முறைகள் இந்துக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படுவதில் போய் முடிந்தது. சுயராஜ்யக்கட்சியைச் சேர்ந்த சித்தரஞ்சன் தாஸ் இந்து-முஸ்லீம்கள் இடையே கொண்டு வந்திருந்த அமைதி உடன்படிக்கையை மீறி வங்கம் ரத்தமயமானது. இந்து மகாசபையை உண்டாக்கி இருந்த மாளவியா உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் முக்கியப் பங்காற்றினார். வன்மம் ஐக்கிய மாகாணங்களில் பரவி ஐக்கிய மாகாணத்தில் 1926-31 வருடங்கள் வரையான காலத்தில் மட்டும் எண்பத்தி எட்டு மதக்கலவரங்கள் நடந்தன. அதன் சூடு குறையாமல் பார்த்துக்கொள்ளும் வேலையை மாளவியா செய்தார்.

மே 1926-ல் மசூதிகள் முன்னால் இசை இசைப்போம் என்று இந்துக்கள் முழங்க ஆரம்பித்தார்கள். பத்து நிமிடங்கள் மட்டுமாவது தொழுகை செய்யும் பொழுது இசையை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அலகாபாத் இஸ்லாமியர்கள் வேண்டிக்கொண்ட பொழுது 1915-ல் கும்பமேளாவின் பொழுது ஆரம்பித்த ஹிந்து மகாசபையினை மூலம் அதைக் கடுமையாக எதிர்த்தார் மாளவியா. எப்பொழுதும் தொழுகையைச் சத்தமாகச் செய்யக்கூடாது என்று கறாராகக் குரல் கொடுத்தார். சங்கதன் மற்றும் சுத்தி இயக்கங்கள் இந்து மதத்தைக் காக்க கிளம்பியதாகச் சொல்லிக்கொண்டு செயலாற்றின. ஹிந்து மகாசபை மற்றும் சனாதன தர்ம சபை இணைந்து செயல்படுகிற வேலையை மாளவியா பார்த்துக்கொண்டார். மோதிலால் நேரு மதச்சார்பின்மையோடு எல்லாரையும் இணைத்துக்கொண்டு நகர வேண்டும் என்று சொன்னதால், தேர்தலின் பொழுது, “மாட்டுக்கறி உண்பவர். இஸ்லாமியர்கள் பக்கம் நிற்பவர். இந்து மதத்தின் துரோகி !” என்று அவருக்கு மதச்சாயம் பூசினார் மாளவியா. ஹிந்து மகாசபையே சுயராஜ்யக் கட்சியின் முகமாகப் பல்வேறு இடங்களில் மாறிப்போனது. ஹிந்து தொகுதிகளில் பெருவெற்றி பெறுவதையும் அவர்கள் வடக்கில் சாதித்தார்கள். ‘ஹிந்தி,ஹிந்து,ஹிந்துஸ்தான்’ என்கிற கோஷத்தை மிக வலுவாக முன்னெடுக்கிற போக்கை ஆரம்பித்து வைத்தார் மாளவியா.

காந்தி-அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் முக்கியப் பங்காற்றினார் அவர். உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நானூறுக்கும் மேற்பட்ட நபர்களோடு சிறை சென்றார் அவர். அதே வருடம், ‘இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்’, என்கிற திட்டத்தை முன்னெடுத்தார். அதே போல ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் இந்து மதத்துக்குள் சேர்க்க அவர்களுக்கு மந்திர தீட்சை கொடுத்து அவர்களின் ஜாதி போய்விட்டதாக அறிவித்தார் அவர். கலாராம் ஆலயத்துக்குள் இருநூறு தலித்துகள் நுழையும் நிகழ்வை முன்னின்று அவரே நடத்தினார்.

இவர்  ‘தி லீடர்’ என்கிற  ஆங்கில இதழைத் துவங்கினார். அதே போல திவாலாக இருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராகி அதன் விற்பனையை உயர்த்தி, ஹிந்தியிலும் அந்த இதழ் வருவதை உறுதி செய்தார்.

1934-ல் சைமன் கமிஷனுக்குப் போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளைக் கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல், வட கிழக்கு மாகாணத்தைத் தனி மாகாணமாக நடத்துதல், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.

இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித் தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு அம்ச அறிக்கையை உருவாக்கினார். இதற்கு இணையாகக் காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அது! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள்.

இன்னொரு புறம் ஹிந்து மகா சபை, சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். மும்பை காங்கிரஸ் 1934-ல் கூடியது, “காங்கிரஸ் எல்லா மதத்தவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சியாகவே திகழ்கிறது. நாங்கள் தனித்தொகுதிகளை ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை.” என்றது. மாளவியா கடுப்பாகி இது இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் போக்கில் இருக்கிறது என்று தேசிய கட்சியை அதே வருடத்தில் ஆரம்பித்துத் தேர்தலில் நின்று வெறும் பன்னிரெண்டு இடங்களில் தன் கட்சியை வெல்ல வைத்தார். பிரிட்டிஷ் அரசு பல்வேறு தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றியது மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகினார்.

இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

ஆஷிஷ் நந்தியோடு பேசுங்கள் !


TALKING INDIA எனும் ஆஷிஷ் நந்தியுடன் ரமின் ஜஹன்பெக்லோ எனும் இரானிய பேராசிரியர் நிகழ்த்திய உரையாடல்களின்  தொகுப்பாக வந்திருக்கும் நூலை வாசித்து முடித்த பொழுது நம்மின் நம்பிக்கைகளை ஒரே ஒரு நூல் மறுவாசிப்பு செய்ய வைக்கிற அற்புதம் நிகழும் என்கிற நம்பிக்கை மீண்டும் ஆழமாக நிலை பெற்றது.

கல்கத்தாவின் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த ஆஷிஷ் நந்தி மருத்துவப்படிப்பை பிடிக்காமல் துறந்து சமூகவியலில் பட்டம் பெற்று மருத்துவ உளவியலில் முனைவர் ஆய்வில் இறங்கிய அவர் மரபார்ந்த வாசிப்பை விட்டு நகர்ந்து பல்வேறு மறுவாசிப்புகளை அவர் நிகழ்த்தியதை நூலின் ஆரம்பத்தில் சொல்கிறார்.

இந்துத்வவாதிகள்,பெண்ணியவாதிகள் என்று வெவ்வேறு சிதாந்தந்தங்களை கொண்டு இயங்குவதாக சொல்லிக்கொள்கிற இவர்கள் எல்லாரும் யாருக்காக இயங்குவதாக சொல்கிறார்களோ அவர்களையே அதிகம் தாக்கி தங்களின் கருத்து பரிமாற்றத்தை கட்டமைக்கிறார்கள் என்பதை நந்தி குறிக்கிறார். இந்து மதவாதிகள் கிறிஸ்தவர்களை,இஸ்லாமியர்களை கருத்தியல் ரீதியாக தாக்குவதை விட உங்கள் மதத்தின் மீது உங்களுக்கே பற்றில்லையே என்று இந்துக்களின் மீதே அவ்ர்களின் தாக்குதல் தொடர்கிறது. சவர்க்கார் துவங்கி கோட்சே வரை நீங்கள் இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள் போல பற்றோடு இல்லை என்று அழுத்தி சொல்வதை கவனிக்க சொல்கிறார்.

நவீன மதவாதம் பற்றி நாம் கொண்டிருக்கும் பல்வேறு நம்பிக்கைகளை எக்கச்சக்க கேள்விகள் மூலம் மறுவாசிப்புக்கு அவர் உள்ளாக்குகிறார். ஹைதரபாத்தில் இஸ்லாமிய தலைவர் ஒருவரும்,இந்து தலைவர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் கலவரங்களை தங்களின் பேச்சுக்களின் மூலம் அரசியல் தேவைகளுக்காக உண்டு செய்பவர்கள் ; அதே சமயம் அவர்களின் நட்பு அப்படியே இருக்கிறது. கல்யாண் சிங் பாபர் மசூதி இடிப்புக்கு ஒரு முக்கியமான காரணம் ; அடுத்து மதச்சார்பின்மை முகமாக காட்டிகொண்ட சமாஜ்வாதி கட்சியில் அவர் இணைந்தார். அங்கே எந்த நெருடலும் இல்லாமல் அவரின் மகன் அமைச்சரானார். ஆக,கருத்தியல் ரீதியாக இங்கே மதவாதம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்பவைக்கப்படுகிறோம். 96.4 சதவிகித மதக்கலவர மரணங்கள் நகர்ப்புறங்களிலேயே நிகழ்ந்திருக்கின்றன. பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லாத நகர்ப்புறத்தில் மதம் என்கிற ஒற்றை அடையாளத்தின் மூலம் மக்களை வன்முறை நோக்கி திருப்பும் செயலை கச்சிதமாக செய்ய முடிகிறது. பணம் கொடுத்து மதக்கலவரங்களை நிகழ்த்த முடியும் என்கிற வகையில அவை திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன. குஜராத்தில் மோடி அரசு வலிமையாக இருந்த பகுதிகளில் மதக்கலவரங்கள் நடக்கவில்லை ; எங்கே ஓட்டுக்கள் அவர்களுக்கு கடந்த தேர்தல் குறைவாக விழுந்ததோ அங்கே தான் கலவரங்கள் ஏற்பட்டன என்பதை பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.எஸ். ஒரு மத இயக்கம் என்பதைவிட அதை அரசியல் இயக்கம் என்றே பார்க்கவேண்டும் என்று தன் பார்வையை அவர் குறிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் எந்த இந்து கடவுளின் உருவத்தையும் கூட்டங்களில் பயன்படுத்தியது கிடையாது. பாரத மாதாவை மட்டுமே முன்னிறுத்திய அந்த அமைப்பு அயோத்தியாவில் தான் கோயில்கள் சார்ந்த விஷயத்தில் முதன்முறை நுழைந்தார்கள் என்று சொல்கிறார்.

உலகின் எண்பது சதவிகித இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிற இஸ்லாமிய அடிப்படைவாதம் எந்த வகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்புகிறார். சூரியனை வழிபடுகிறார்கள் என்று இரானியர்களை இராக்கியர்கள் குற்றம் சொல்கிறார்கள்,இந்தோனேசிய இஸ்லாம் பவுத்தம் மற்றும் இந்து மதத்தின் தாக்கம் கொண்டிருக்கிறது. வங்கதேச இஸ்லாமும் இந்து மதத்தின் கூறுகளை உள்வாங்கி இருக்கிறது என்கிற பாகிஸ்தான் இஸ்லாமியர்களின் இஸ்லாமும் பல்வேறு மாறுபாடுகளுக்கு உட்பட்டு இருக்கிறது என்பதே சரி ஆக அடிப்படைவாதங்கள் சுய நம்பிக்கையின்மை மற்றும் கலாசார போதாமையால் ஏற்படுகிறது.

  காந்தியே தன் மரணத்தை அப்படி அமைத்துக்கொள்ள விரும்பினார் என்றும் அவரை இந்தியாவின் நவீன முகம் வெறுத்தது,இந்து மதவாதிகள்,லிபரல்கள்,இடதுசாரிகள் என்று பலதரப்பினர் அவரை வெறுத்தார்கள். காந்தியை கொன்ற பின் கோட்சே என் அன்னையை காக்க என் தந்தையான காந்தியை கொல்ல நேர்ந்தது ; அவரை நான் நாயகன் ஆக்கியிருக்கிறேன். அதை அவர் விரும்புவார் என்கிறான். அது உண்மையே ! காந்தி தன்னுடைய மரணம் அதிகம் வீரியம் கொண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர்ந்தே இருந்தார். அவர் விரும்பியவாறே அவர் மரணம் நிகழ்ந்தது. காந்தியின் திறந்த மனதோடு கூடிய இந்து மதம் மற்றும் இறுக்கமான இந்து மதம் ஆகிய இரண்டுக்கும் இடையே நடந்த போராட்டமே காந்தியின் மரணத்தில் வந்து நின்றது. பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த தேர்தலில் காந்தியை போலவே திறந்த மனதோடு கூடிய பெரும்பான்மை இந்துக்கள் பி.ஜே.பியை அடுத்து வந்த தேர்தலில் மொத்தமிருந்த  ஒன்பது தொகுதிகளில் அந்த மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் தோற்கடித்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார்..

 

காந்தியை நவீன இந்தியா மறக்க முயன்றாலும் காந்தி மறக்க முடியாதவராகவே இந்திய சூழலில் இருக்கிறார். அவரை நீங்கள் மறந்தாலும் அவர் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்பதே உண்மை. காந்தியை முன்னோக்கி நகர்த்த எண்ணற்ற காந்தியவாதிகள் தவறிவிட்டார்கள்,அரசாங்கத்தை விமர்சனம் செய்கிற பண்பை அவர்கள் பெரும்பாலும் இழந்து விட்டார்கள்,ஆனால்,ஆச்சரியமாக இந்திய மார்க்சிஸ்ட்கள் காந்தியை பூர்ஷ்வாக்கள் பக்கம் நின்றவர் என்று வசைபாடினாலும் இந்தியாவின் பெண்ணிய,சுற்றுசூழியல் இயக்கங்களை முன்னெடுத்து காந்தியத்தை முன்னகர்த்தி இருக்கிறார்கள். அந்த இயக்கங்களின் அடிப்படை தத்துவங்களை காந்தி ஏற்கனவே வார்த்து தந்துவிட்டு போய்விட்டார் என்பதை கவனிக்க வேண்டும். காந்தியம் காந்தியை உண்கிறது ; மேலும் காந்தி ஆகச்சிறந்த காந்தியவாதி இல்லை என்பதும் உண்மையே என்று பதிகிறார்.

எமெர்ஜென்சி வெறும் இந்திராவின் செயல் மட்டுமில்லை ; ஜனநாயகத்தின் மீது படிப்படியாக வெறுப்புற்ற அதிகார வர்க்கத்தின் உதவியோடே அது  நிகழ்த்தப்பட்டது. பெண்களை சக்தி மிகுந்தவர்களாக பார்க்கிற மரபார்ந்த சிந்தனை இந்தியாவில் இருந்திருக்கிறது ; இந்த தெற்காசிய பகுதியில் தான் அதிகபட்ச பெண் தலைவர்கள் எழுந்திருக்கிறார்கள். அவர்கள் பதவிக்கு வருவதற்கு அவர்களின் பாலினம் தடையாக இல்லை என்பதை கவனிக்க வேண்டும், சதி என்பது நெடுங்காலமாக இந்திய பாரம்பரியத்தில் இருந்தது என்பதும் தவறான பார்வை. இருக்கின்ற தரவுகளின் படி மிகக்குறைவாகவே சதி நிகழ்ந்துள்ளது,அதிலும் சொத்துக்களில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளை வங்கத்தில் பறிக்கவே அது பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் பதிவு செய்த பொழுது பெண்ணிய அமைப்புகளின் தீவிரமான எதிர்ப்புக்கு உள்ளானதை இணைத்தே பதிகிறார்.

ராஜராம் மோகன்ராய் நவீனத்துவ பார்வையை தாங்கியபடி சதியை எதிர்க்கவில்லை. சிவனின் நாட்டியம் பார்வதியின் தீக்குளிப்புக்கு பின்னர் நிகழ்ந்தது ; அந்த நம்பிக்கையில் சதி பின்பற்றப்படுகிறது என்று நீங்கள் நம்பினால் அந்த புனிதம் இன்று இல்லாத பொழுது எப்படி ஒரே ஒரு சடங்கின் மூலம் மட்டும் நம்பிக்கையை காக்க முடியும் என்று கருதுகிறீர்கள் என்று அவர்களின் உள்ளுக்குள் இருந்து கேள்வி எழுப்பி சாதித்தார் என்பதை பதிகிறார். நாடுகளைக்கடந்து கலாசாரங்கள் எல்லா காலங்களிலும் கடத்தப்பட்டு உள்ளன. புத்தர் நேபாளிய இறக்குமதி,சிதார் துவங்கி இசை வரை பல்வேறு அற்புதங்களை தந்த அமீர் குஸ்ரூ ஒரு இரானியர்

பாகிஸ்தானின் வரலாறு என்பது அவர்கள் இருக்கிற பகுதியின் வரலாறை பேசவே இல்லை. அது டெல்லியில்,இந்தோ-கங்கை சமவெளியில் இருந்த ஆட்சிகளை பற்றி பேசி அப்படிப்பட்ட பழம்பெருமை கொண்டவர்கள் நாம் என்றே பேசுகிறது ; பாகிஸ்தானியர்கள் தன்னிடம் பணம் கொடுத்து பொருளைத்தர மறுத்ததை அவர் சொல்லி அவர்கள் நம்மிடம் தோற்பதை விரும்பவில்லை. இரு நாட்டவருமே இன்னொருவரின் இருப்பை விரும்புகிறோம். நமக்கு எதிர்க்க ஒருவர் தேவைப்படுகிறார் ; இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் பாகிஸ்தான் என்கிற கருத்தாக்கத்தை பெரிதும் தூக்கிபிடித்தது தற்கால வங்கதேசமே. இப்போதைய பாகிஸ்தான் விடுதலைக்கு முந்தைய காலத்தில் பல்வேறு பகுதிகளில் இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்பியது. ஒருவேளை வங்கதேசம் பாகிஸ்தான் என்கிற பெயர் சூடியிருந்தால் அவர்களை நாம் எதிர்த்திருப்போம் என்று எள்ளலுடன் குறிக்கிறார். பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியர்கள் இருவருக்கும் மற்றவரை பற்றி நன்றாக தெரியும் என்கிற மாயை இருக்கிறது; அது இன்னொரு பகுதிக்கு பயணிக்கிற பொழுது மாறுகிறது என்பதே உண்மை

சிறுபான்மையினர் பிரிந்து போவதற்காக போராடுகிறார்கள் என்று நினைக்கிறோம் ; உண்மையில் அவர்கள் எதிர்பார்ப்பது தங்களுக்கான கவனத்தை தான். அது ஒழுங்காக தரப்படுகிற பொழுது அவர்களின் எழுச்சி அடங்கிவிடும் என்பதே உண்மை. நவீனத்துவம் வெற்றியாளர்களின் சிந்தனையாக இருக்கிறது ; மதம் ஏற்படுத்திய வன்முறையை தீவிரமாக எதிர்க்கிற அதே சமயம் அது ஏற்படுத்தியதை விட பன்மடங்கு அதிக மரணங்களை நவீனத்துவம் ஏற்படுத்தி இருக்கிறது. நவீனத்துவத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் அடிப்படைவாத இயக்கங்கள் அதன் முக்கிய கூறான வன்முறையை தாங்களும் பற்றிக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

மரபில் பல்வேறு சங்கதிகளை,கூறுகளை சோதித்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதை முற்றிலும் தவறு என்று நாம் நிராகரிக்கிற பொழுது நாம் ஏதேனும் முக்கியமான அம்சத்தை தவறவிட்டிருப்போம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். உண்மையில் அடையாளங்களை தூக்கிப்பிடிக்கும் பலர் தங்களின் பலரையும் உள்வாங்கிக்கொண்டு நகரும் பாரம்பரியத்தை தவற விட்டவர்களே. மேற்கில் போய் இந்துவாக வாழ விரும்புகிற இந்தியாவில் பிறந்த இந்து ஒருவன் இங்கே பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மக்களை ஏற்றுக்கொள்கிற இந்து மதத்தின் கூறுகளை உலகமயமாக்கலில் விட்டு ஒற்றைப்படையான அடையாளத்தை தூக்கிப்பிடித்து வெறுப்பை வளர்க்கிறார்கள். இதுவே அமெரிக்காவில் இருக்கும் யூதர்களுக்கும் பொருந்தும். அவர்கள் இஸ்ரேலிய யூதர்களை விட அதிகம் வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

Talking India: Ashis Nandy in Conversation With Ramin Jahanbeglooபிரிட்டிஷ் அரசு தன் காலத்தில் தன் பகுதியில் எழுந்த ஐயர்லாந்து புரட்சியை தனக்குள் இருந்த வேற்றுமையை மறைத்து இந்தியாவில் ஆட்சி செய்தது. ஒன்றாக இணைந்தே இருங்கள் என்கிற குரல் இங்கே போதிக்கப்பட்டது. நவீனத்தின் வேர்களை பற்றிக்கொண்டு வந்த நாம் அதனால் தான் வேற்றுமைகளை கண்டால் அஞ்சுகிறோம். பல்வேறு மக்களின் நம்பிக்கைகளை மதிக்காமல் ஒற்றுமை என்று மட்டும் குரல் கொடுக்கிறோம்.

நேருவிய பாபியன் சிந்தனைகளை நாம் பெரும்பாலும் துறந்திருக்கிறோம். அவரின் ஜனநாயகத்தை மட்டுமே உள்வாங்கி இருக்கிறோம். காந்தி ஏற்கனவே இருக்கும் ஒரு அமைப்பை அழிக்க அல்லது அதற்கு மாற்றான கருத்தியல் நிலை பெற பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் தீண்டாமையை முதலில் எதிர்த்தார். அவர்களுக்கு சம உரிமை வழங்க இயங்கினார் ; அதையே இன்று தேர்தல் முறை செய்கிறது. இதையே இந்து மதவாதிகளும் செய்வதாக சொல்லி அவர்களை தங்களின் பிரிவுக்குள் கொண்டு வருகிறார்கள்.

காந்தியை ஒரு மதச்சார்பின்மைவாதி என்று ஏற்க மறுக்கும் நந்தி அவர் உண்மையில் மதத்துக்குள் இருந்தே மதத்தின் பெயரால் நிகழும் அடிப்படைவாதத்தை எதிர்த்தார் என்கிறார். இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் மதச்சார்பின்மை என்பதை அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் வெற்று கோஷம் என்றே நினைக்கிறார்கள்.  தொடர்ந்து ஒரு மதத்தின் பெயரால் நடத்தப்படும் வெறுப்பரசியலை ஒற்றைப்படையாக மதத்தின் பெயரால் மட்டும் எதிர்க்கிற பொழுது பல்வேறு சிறிய குழுக்கள் அந்த மதத்தின் உள்வாங்கும் தன்மை கொண்ட,பல்வேறு மதத்தவரோடு இணைந்து அன்போடு பழகிய மக்களையும் இந்த ஒரே ஒரு அடையாளத்துக்குள் அடக்கி நாம் உண்மையில் மதவாதத்துக்கு உதவுகிறோம். பி.ஜே.பி ஆக்கப்பூர்வமான மதச்சார்பின்மை என்கிற கோஷத்தோடு ஐரோப்பிய தேசம் பற்றிய கருத்தியலை இந்தியாவிலும் சாதிக்கலாம் என்று நினைக்கிறது.

உலகமயமாக்கல் இன்னமும் நம்மை தேவைகளை நோக்கி நகர்த்தியிருக்கிறது. ஒரே ஒரு அறையில் பலர் வாழ்ந்த அமெரிக்காவில் இன்று ஒவ்வொரு பிள்ளைக்கும் அறைகள் வேண்டும் என்று எண்ண வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் பசியால் இறக்காத பலரை நகரத்தில் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி நகரத்தின் ஆகக்கொடிய ஏழைகளாக பசியோடு கிராமப்புற மக்களை வாடவிட்டு இருக்கிறோம். நிம்மதியாக இருந்தோம் என்று தங்களவில் வாழ்ந்த மக்களை வறுமையில் இருக்கிறோம் என்று மேலும் மேலும் தேவைகளை ஏற்படுத்தும் நுகர்வு சூழலில் உணரவைத்து உள்ளோம். பழங்குடியின மக்கள்,கிராமப்புற மக்களின் வறுமையை நாம் மாற்றிப்பொருள் கொள்ள வைத்து அவர்களை நம்மோடு இணைத்து வருகிறோம். கூட்டு வாழ்க்கையை காணடித்து நகர்கிறோம்

கிராமங்களை துடைத்துக்கொண்டே நகர்கிறது நவீனத்துவம். உலகமயமாக்கல் மற்றும் வளர்ச்சி சிறுகுழுக்கள்  மற்றும் பழங்குடியினரை தின்று கொண்டே இருக்கிறது. மிக குறுகிய பகுதியில் இயங்கும் கவனமற்ற குழுக்களை அது செரிதுக்கொண்டு நகரும். என்றாலும் உலகமயமாக்கல் வந்த பிறகு அரசின் வலிமை குறைந்திருப்பது வரவேற்க வேண்டியது. மக்கள் நல அரசுகளும் இதனால் காணாமல் போகின்றன என்பது கவலைக்குரிய அம்சம்.  

 

காந்தி அரசியல் என்கிற சேரியில் விருப்பப்பட்டு வாழ்ந்தபடியால் அவர் சிறந்த காந்தியவதியாக ஆகாமல் ஒரு தேர்ந்த அரசியல் ஆளுமையாகவே திகழ்ந்தார். காந்தி இங்கிலாந்தில் இருக்கிற பொழுது மார்க்சியவாதிகள்,சவர்க்காரின் வன்முறையை ஆதரிக்கும் அமைப்பு ஆகியவற்றை எல்லாம் பார்த்தபின்பு இறுதியில் டால்ஸ்டாய் பக்கம் திரும்பினார். அதுவே அவரை நவீனத்துவத்தின் மிக முக்கிய பண்பான வன்முறையை கைவிட செய்தது.

மேற்கை தொடர்ந்து பாசிசத்தை தந்தது என்றும் அமெரிக்காவை கொலைகார தேசம் என்கிற நாம் அங்கே இருந்து தோரோ,டால்ஸ்டாய்,ப்ளேக்,வால்ட் விட்மன்,மார்டின் லூதர் கிங் ஆகியோர் தோன்றினார்கள் என்பதையும் அமெரிக்கா தனிநபர் ஜனநாயகம் என்பதை தன் மூச்சாக கொண்டிருக்கிறது என்பதையும் இணைத்தே பேசவேண்டும். இந்த உரையாடல் நிகழாமல் இறுகியவாறே இருப்பது பயன்தராது.

இப்படிப்பட்ட ஒரு உரையாடலுக்கு இந்த நூல் வழிவகுத்திருக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய பெரும்பாலும் எளிய,ஆனால்,ஆழமான நூல்

விலை : 395

பக்கங்கள் : 148  

    

 

காந்தியார் சாந்தியடைய…


இன்றைக்கு காந்தியின் நினைவு நாள். அவரைக்கொன்ற கோட்சே இங்கே பலருக்கு நாயகன் ! ஜெர்மனியில் ஹிட்லர் பற்றி பேசினால் ஒரு அருவருப்பான பார்வை கண்டிப்பாக கிடைக்கும். நம்மூரில்தான் கோட்சே ஒரு ஈடில்லாத நாயகன் போல கொண்டாடப்படுகிறான்.

காந்தி மதத்தின் அடிப்படையில் தன்னுடைய அரசியலை கட்டமைத்தார் என்பது பொதுவாக சொல்லப்படுகிற கருத்து, அதே சமயம் ஒரு கேள்வியை பலபேர் எழுப்பிக்கொள்வதே இல்லை. காந்தியை ஏன் அப்புறம் மூன்று முறை மதவாத சக்திகள் கொல்ல முயற்சி செய்தார்கள் ? காந்தியை இந்து மத துரோகி என்றும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் ? கோயில் நுழைவு போராட்டங்களை ஏன் சங்கராச்சாரியார் முதலியோரின் எதிர்ப்புகளை மீறி அவரும், அவரின் தொண்டர்களும் முன்னெடுத்தார்கள் ?

‘என் ராமன் அயோத்தி ராமனில்லை ‘ என்று உறுதியாக காந்தியால் சொல்ல முடிந்தது. கோயில்கள் விபச்சார விடுதிகளாக இருக்கின்றன என்று வன்மையாக கண்டிக்கிற பண்பு அவரிடம் இருந்தது. கோயில்களுக்கு போவதை பெரும்பாலும் தவிர்த்தே இருந்திருக்கிறார் அவர் ; மத ஆச்சாரியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார் அவர். மதத்துக்குள் இருந்து வெறுப்பரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரின் நிலைப்பாடு

எல்லா மதத்தின் நல்ல பண்புகளை இணைத்துக்கொண்டு நகரவேண்டும் என்ற காந்தி அகில பாரத சாஹித்ய பரிஷத் கூட்டத்தில் விடுதலைக்கு பதினாறு ஆண்டுகள் முன்னர் பேசியதை குறிப்பிடலாம். “நான் இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆனால் வெறுப்பை விதைக்கிற வகுப்புவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுகிற எல்லா வகையான எழுத்துகள் மற்றும் பேச்சுகளை தடைசெய்வேன் !” என்று காந்தி பேசினார். பெரும்பான்மையினரின் தீவிரவாதம் அவர்களுக்கு அதிகாரத்தையும்,போதையையும் தருகிறது என்று குறித்து அதை தொடர்ந்து எதிர்ப்பேன் என்று செயலாற்றினார் அவர்.

அதேசமயம் சிறுபான்மையினரின் மதவாதத்தை பற்றிய புரிதலும் அவருக்கு இருக்கவே செய்தது. “இந்துக்கள் மற்ற மதத்தவரை கொல்வதை செய்வார்கள் என்றால் அவர்கள் இந்து தர்மத்தை  கொன்றவர்கள் ; அதே போல மற்ற மதத்தவர் மீது வன்முறையை கைக்கொள்ளும் இஸ்லாமியர்களும் இஸ்லாமுக்கு எதிரானவர்களே !” என்று காந்தி பதிவு செய்தார். ஜின்னாவின் மதவெறி அரசியல் இஸ்லாமியமற்றது என்றும் சாடினார் அவர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் பிரியக்கூடாது என்று அழுத்தி சொன்ன காந்தியே வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கை, ஜின்னாவின் மதவாத அரசியல், காங்கிரஸ் மதவாதத்தை எதிர்கொள்வதில் காட்டிய அசட்டை,கட்சிக்குள்ளேயே இருந்த வலதுசாரிகள்,பதவி கிடைத்தால் போதும் என நகர்ந்த தலைவர்கள் என்று எல்லாமும் சேர்ந்து நிற்க நாட்டை பிரிக்க ஒத்துக்கொண்டார். வன்முறைகள் பெருமளவில் வெடிக்கும் ஒரே தாயின் கருவுக்குள் பிள்ளைகள் வெட்டிக்கொண்டு
சாவதை போல இங்கே மரணங்கள் நிகழும் என்று எச்சரித்தார்.

காந்தியின் வித்தியாசமான ஆளுமையையோ ; அவரின் அடிப்படை நேர்மையையோ, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மையையோ சந்தேகிக்க முடியாது. காந்தி ஒரு பழமைவாதியுமல்ல, முற்போக்குவாதியுமல்ல. தன்னளவில் பல முரண்களைக் கொண்டவர் என்றாலும், விடாப்பிடியாகப் பழமையைப் பேணவோ, புதுமையைக் காக்கவோ முனையும் அளவுக்கு அரை குறையானவரோ, தன்னிலிருந்து அந்நியப்பட்ட மனிதரோ அல்ல என்று நந்தி சொல்கிற அளவுக்கு வெறுப்பை உண்டு செய்யும் போக்கை காந்தி தயவு தாட்சண்யம் இல்லாமல் நிராகரித்தார். ‘காந்தி இருக்கும் வரை ஹிந்து தேசம்
சாத்தியமில்லை, இருப்பதும் இஸ்லாமியர்களுக்கு போய் விடும் என்று நம்பியது ஆர்.எஸ்.எஸ். முதலிய ஹிந்து மதவாத அமைப்புகள்.

இஸ்லாமியர்களையும் மதித்து நடக்க வேண்டும் ,அவர்களை கொல்லாதீர்கள் என்று ஹிந்துக்களை நோக்கி காந்தி சொன்னார். “ஏன் இதையே முஸ்லீம்களை நோக்கி சொல்லக்கூடாது?” என்று கேட்டார்கள் ஹிந்து மதவாதிகள். காந்தி வேறு மாதிரி நினைத்தார் .”சிறுபான்மையினரின் பயம் தாங்கள் சார்ந்திருக்கும் நாட்டில் சிறுபான்மை என்று உணர வைக்கப்படுகிற பொழுது எழுகிறது ; அவர்கள் அவ்வாறு உணர்கிற பொழுது இது தாங்கள் கனவு கண்ட தேசமில்லை என்று எண்ணுவார்கள் !” என்று அவர்களின் வலியை உணர்ந்தவராக பேசினார்.

”வெறுப்புக்கு வெறுப்பு தீர்வு கிடையாது. எல்லாரும் கண்ணுக்கு கண் என்று நகர்ந்தால் எல்லாரும் குருடாகத்தான் வேண்டும். ” சிறுபான்மையினர் இப்படி இயங்குவதன் பின்னர் இருக்கும் வெறுப்பை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது; பெரும்பான்மையினரை மிருகமாக்கும் இதை தேசியம் என்று சொல்லும் குழுவை நோக்கி வேகமாக எதிர்த்து இயங்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

வங்கம்,பீகார்,டெல்லி என்று எங்கெல்லாம் வன்முறைகள் வெடித்தனவோ அங்கெல்லாம் வெறுங்காலோடு ஒரே ஒரு ஜீவன் அமைதிக்காக நடந்தது. மதவாதத்தை எதிர்த்து பிரார்த்தனை செய்யுங்கள், அமைதி காத்திருங்கள் என்று மட்டும் சொல்லி ஒரு மனிதனால் அமைதியை மீட்க முடிந்தது என்பது இன்றைக்கு ஆச்சரியம் தரலாம். ஐம்பத்தைந்து ஆயிரம் ராணுவத்தால் கொண்டுவர முடியாத அமைதியை காந்தி கொண்டு வந்தார் என்று சிலாகித்தார்கள் ஆங்கிலேயர்கள் !

“டெல்லி மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் நடைபெற்ற எண்ணற்ற கொலைகளின் பின்னணியாக ஆர்.எஸ்.எஸ் இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை.. ” என்று காந்தி சொன்ன பொழுது இடைமறித்து ஒருவர் சொன்னார்:  ‘ (ஆனால்) ‘வா’வில் உள்ள அகதி முகாமில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் செய்த சேவை குறிப்பிடத்தக்கது. ஒழுங்கு, தைரியம், கடும் பணி செய்யும் திறன் ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.’ இதற்குக் காந்தி, ‘ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். ஹிட்லரின் நாசிகளும், முசோலினியின் பாசிஸ்டுகளும் கூடத்தான் இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘எதேச்சதிகாரப் பார்வை கொண்ட வகுப்புவாத அமைப்பு’ என ஆர். எஸ். எஸ்சை அவர் வரையறுத்தார்.”

பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி தரவேண்டும் என்றும், கலவரங்கள் டெல்லியில் ஓய வேண்டும் என்றும் காந்தி இறுதி உண்ணாவிரதம் இருந்தது ,”காந்தி செத்து மடியட்டும் !” என்று கோஷம் எழுப்புகிற அளவுக்கு வெறுப்பாக மாறி இருந்தது. காந்தியின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கி நிற்கிறது என்று காந்திக்கு தெரியும் ; இப்படி பேசுவதற்காக, இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நம்பி இந்தியா வந்திருக்கும் எண்ணற்ற இஸ்லாமியர்களை காக்க தான் கொடுக்கும் குரல் தன் மூச்சை நிறுத்திவிடும் என்று அவருக்கு தெரிந்தே இருந்தது. “போய்விட்டு போகிறது ! நான் நம்பும் இறைவன் என் பணி முடிந்தது என்று எண்ணிக்கொண்டால் என்னை அழைத்துக்கொள்வான்” என்று அம்புஜம் அம்மாளுக்கு கடிதம் எழுதினார்.

பலபேர் ஏவப்பட்டு இறுதியில் கோட்சே கையால் அது நிகழ்ந்தது. கையில் இஸ்லாமியரின் பெயரை பச்சை குத்தி வன்முறையை தூண்டி நாட்டை ரத்த பூமியாக்க எண்ணிய அந்த மிருகத்தைதான் இங்கே நாயகனாக கொண்டாடுகிறார்கள் பலபேர். அப்பொழுது “காந்தியை கொன்றது ஒரு ஹிந்து !” என்று அழுத்தி சொன்னது ஊடகங்கள். இருந்தாலும் கோட்சேவை அப்படியே நாராயண் ஆப்தேவோடு தூக்கில் போடவில்லை அரசு. ஒழுங்காக வழக்கு விசாரணைகள் நடந்து, அவர்களுக்கு என்று வக்கீல் அமர்த்தப்பட்டு, ஜனாதிபதி வரை கருணை மனு போய் பின்னரே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

காந்தி இறந்ததும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து கொண்டாடிக்கொண்டார்கள் சங் பரிவார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலேயே இருந்த கோட்சே அப்பொழுது தான் அதில் உறுப்பினரில்லை என்றுசொன்னது உடனிருந்தவர்களை காப்பாற்றவே. காந்தியை கொல்ல திட்டம் தீட்டிக்கொடுத்த சவார்க்கரின் படத்தை பி ஜே பி அரசு நாடாளுமன்றத்தில் வைத்தது ; இந்த கண் கொள்ளா கட்சி வேறு எந்த நாட்டிலும் நிகழாது.

உங்களுக்கு காந்தியோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால், மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் வெறுப்பரசியலை தணிக்க அயராது செயலாற்றிய அவரை அந்த ஒரு புள்ளியில் நீங்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்ள முடியும். பெரியார் அதனால் தான் காந்திஸ்தான் என்று இந்தியாவுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று எழுதினார்.

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதன் வலியோடு இங்கே சிக்கல்களை அணுகிய படேல் மற்றும் இஸ்லாமியர்களை இந்தியர்கள் என்று பார்க்க வேண்டும் என்ற நேரு ஆகிய இருவரையும் காந்தியின் மரணம்
உலுக்கியது. எவ்வளவு ஆபத்தானவர்கள் இந்து மதவாதிகள் என்று உணர்ந்தார்கள். இந்தியா இந்து தேசமாகாமல் தப்பியது !

நேரு காந்தியின் அந்த பன்முகத்தன்மையை முன்னோக்கி எடுத்து சென்றார். தேசம் எல்லா மக்களுக்குமான தேசமாக மாறியது. காந்தியார் சாந்தியடைய மதவாதத்தை புறக்கணிக்க வேண்டியது அவசியம் ; வெறுப்பை தாண்டி மனிதத்தை நோக்கி நம்மை செலுத்த வேண்டியது முக்கியம். அடையாள அரசியல்களை தாண்டி நம்மின் பன்முகத்தன்மையை காக்க ஒன்றிணைந்து நகரவேண்டும். ஆர்.எஸ்.எஸ் மாதிரியான அமைப்புகள், இந்தியாவை ஜனநாயகத்தின் மூலமே மீண்டும் வெறுப்பை தூண்டச் செய்யலாம் என்று வேகமாக செயலாற்றிக்கொண்டு இருக்கும் இக்காலத்தில், காந்தி இன்றைய சூழலில் அதிகம் அவசியமாக இருக்கிறார்.

காந்தியின் மரணமும்,ஹிந்து பாகிஸ்தானும் !


ராமச்சந்திர குஹா இன்று சென்னை லாண்ட்மார்க்கில் அவரின் GANDHI BEFORE INDIA நூலைப்பற்றி பேச வந்திருந்தார். அவர் பேசியவை இங்கே தொகுப்பாக. அப்படியே வரிக்கு வரி சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது ; இருந்தாலும் நினைவில் இருந்து எழுதி இருக்கிறேன் :உங்களின் எழுத்துக்களில் பனியா என்று காந்தியை குறிக்கிறீர்கள்.காந்தியா பனியா என்று பெரியாரும்,அம்பேத்கரும் விமர்சித்தார்கள் இல்லையா ? காந்தியை எந்த அளவுக்கு அவரின் ஜாதி ஆக்கியது ?

நான் சமூகவியல் மாணவன். ஜாதி மற்றும் வர்க்கம் பற்றி ஏகத்துக்கும் படித்தவன். அந்த தாக்கத்தில் அப்படி எழுதியிருக்கலாம். காந்தியின் தென் ஆப்ரிக்க அனுபவங்களில் பெரும்பாலும் ஜாதிக்கு இடமில்லை. இந்தியாவில் அவரின் வாழ்வைப்பற்றி பதிவு செய்யப்போகும் என்னுடைய அடுத்த நூலில் கண்டிப்பாக அதை சார்ந்த விஷயங்களை பார்க்கலாம் நீங்கள்.

கறுப்பின மக்களைப்பற்றிய காந்தியின் பார்வை எப்படி இருந்தது ?
அவர் முதலில் அவர்களை காபிர்கள் என்றே அழைக்கிறார். ஆங்கில கல்வி பெற்ற எந்த இந்திய பட்டதாரிக்கும் ஐரோப்பா தான் சிறந்த அறிவின் மூலம் அவர்கள் மேதைகள் என்கிற எண்ணம் இருந்தது. கறுப்பினத்தவரை இழிவாக பார்க்கும் அவர்களின் மனோபவத்தை காந்தியும் கடன் வாங்கியிருந்தார். பின்னர் அதை படிப்படியாக மாற்றிக்கொண்டார் அவர்.

காந்தியின் செயல்பாடுகள் தென் ஆப்ரிக்காவில் அவருக்கு ஆதரவாக இருந்த இஸ்லாமியர்களை ஓரளவுக்கு அவர் மீது நம்பிக்கை இழக்க செய்தது இல்லையா ? அது அவரின் பிந்தைய அரசியல் வாழ்வில் தாக்கம் உண்டு செய்ததா ?

காந்தியின் போராட்டங்களில் முதலில் குஜராத்தி வியாபாரிகள் ஈடுபட்டார்கள். அதில் ஹிந்துக்கள் முஸ்லீம்கள் என இருசாராரும் இருந்தார்கள். பின்னர் அவர்கள் காந்தியை விட்டு விலகியதும் தமிழர்கள் தான் அவரின் போராட்டங்களை வெற்றி பெற வைத்தார்கள். அடுத்து தென் ஆப்ரிக்க கோர்ட் கிறிஸ்துவ திருமணங்கள் தவிர மற்ற திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பு சொன்னதும் காந்தி போராடி அரசிடம் எல்லா திருமணங்களும் என்று அறிவிக்க உறுதி பெற்றார் . அப்பொழுது ஒரே ஒரு திருமணங்கள் மட்டுமே செய்துகொண்டவர்களுக்கு மட்டுமே அச்சட்டம் செல்லுபடியாகும் என்கிற உட்பிரிவை ஏற்றுக்கொண்டார். பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஒரே ஒரு திருமணம் செய்திருந்ததால் இது பெரிய நம்பிக்கை இழப்பு என்று சொல்லமாட்டேன். காந்தி தென் ஆப்ரிக்காவில் இருக்கும் பொழுதே தன் மகன் ஹரிலாலிடம் தீர்க்க தரிசனத்தோடு ,”என்னுடைய உயிர் போகும் என்றால் அது நான் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைகளுக்காக நடத்திக்கொண்டு இருக்கும் போராட்டங்களின் மூலமே உண்டாகும்” என்று குறித்திருக்கிறார்

காந்தியின் வர்க்கம் சார்ந்த பார்வை எப்படி இருந்தது ?

காந்தி பெரும்பாலும் வெறும் வர்க்க கண்ணாடி கொண்டு எல்லாவற்றையும் பார்க்கவில்லை என்பதே உண்மை. அவர் ஏழைகளின் வீடுகளிலும் தங்கினார் ; பணக்கார பிர்லாக்களின் வீட்டிலும் தங்கினார். அவர் இருவரையும் மனிதர்களாக மட்டுமே பார்த்தார். மார்க்ஸிட்டுகள் உடனே காந்தியை பூர்ஷ்வா என்று சொல்லுவார்கள். காந்தி எளிய மக்களின் மேம்பாட்டுக்கும்,அவர்களுக்கு மரியாதையான வேலையை உறுதி செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார் என்பதை பதிவு செய்ய வேண்டும். ஆகவே நான் அவர்களின் பார்வையை காந்தியை எடைபோட கடன்வாங்கவில்லை.

Displaying DSC_0693.jpg
காந்திக்கும்,ஜின்னாவுக்கும் 1897 இல் கடிதப்போக்குவரத்து நிகழ்ந்து இருப்பதாக முதல்முறையாக இந்த நூலில் குறித்திருக்கிறீர்கள். அதைப்பற்றி சொல்லுங்களேன். ?ஜின்னா இம்பீரியல் கவுன்சிலில் காந்தியின் போராட்டங்களை ஆதரித்து பேசியதை பற்றி நடந்த கடிதப்போக்குவரத்தே அவர்களுக்குள் நடந்த முதல் கடிதப்போக்குவரத்து என்று கருதி வந்தோம். ஆவணங்களை தேடிப்பார்த்த பொழுது தென்ஆப்ரிக்காவில் காந்தி இருந்த பொழுது ஜின்னாவிடம் இருந்து காந்திக்கு அதற்கு பதினோரு வருடங்களுக்கு முன்னர் இரண்டு கடிதங்கள் வந்திருக்கிறது. அதில் என்ன இருந்தது என்று தெரியாது. காந்தி தனக்கு உதவ வக்கீல்கள் தேடிக்கொண்டு இருந்ததால் அதை நான் கவனமான யூகித்தலோடு ஜின்னாவை சேர்த்துக்கொள்ள விரும்பினார் என்று அனுமானிக்கிறேன். உண்மை என்று சொல்லவில்லை. என்னுடைய அனுமானம் அவ்வளவே !

காந்தியைப்பற்றிய புத்தகத்தை ஏன் எழுத வேண்டும் நீங்கள் ? அதான் காந்தியின் சுயசரிதையே இருக்கிறதே ?

சுயசரிதையை ஒருவர் எழுதி வைத்துவிட்டுப்போவது தன்னைப்பற்றி வருங்காலத்தில் எழுதப்பட இருக்கும் வாழ்க்கை வரலாற்று நூல்களுடன் நிகழ்த்தப்படும் போராட்டம் என்றே சொல்வேன். காந்தியின் சுயசரிதையில் நேர்மை உள்ளது. ஆனால்,அது தொடர்ச்சியானது இல்லை. உறுத்தும் சம்பவங்களையே அவர் பதிவு செய்திருக்கிறார். தான் சாதித்தவற்றை பற்றி அவர் பெரிதாக குறிக்கவே இல்லை. ஆங்காங்கே தாவித்தாவி காந்தி பதிவு செய்கிறார். நிறைய இடைவெளிகள் வேறு உண்டு. காந்தியின் வாழ்க்கையில் இருக்கும் அந்த இடைவெளிகளை நிரப்புகிற பணியிலேயே ஈடுபட்டிருக்கிறேன்.

தில்லையாடி வள்ளியம்மை பற்றி நூலில் ஏதேனும் குறிப்புகள் உண்டா?
இரண்டு இடங்களில் அவரைப்பற்றி குறிப்புகள் உண்டு. பேராசிரியர் சுவாமிநாதன் என்னை தொடர்ந்து தமிழ் கற்றுக்கொள் என்று சொல்லி நான் தான் கேட்கவில்லை. இந்த நூலில் அதனால் தமிழ் மூலங்களை நான் பயன்படுத்தவில்லை. அவற்றில் ஏதேனும் கூடுதல் தகவல்கள் இருக்ககூடும். அதே சமயம் மிக இளம் வயதில் பெண்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவது தென் ஆப்ரிக்காவில் தான் நிகழ்ந்தது. சுதேசி இயக்கத்தில் பெண்கள் பங்கு பெறவில்லை. அந்த தென் ஆப்ரிக்க போராட்டத்தில் மிக இளம் வயதில் மரித்த வீரப்பெண்மணி வள்ளியம்மை. அவரைப்பற்றி நிறைய நேரடித்தரவுகள் இல்லை என்பதே உண்மை

காந்தியின் போராட்ட அணுகுமுறைகள் பற்றி சொல்லுங்களேன் ?
காந்திக்கு முன்னரே அமைதி வழியில் தர்ணாக்கள்,உண்ணாவிரத போராட்டங்கள் இருந்துள்ளன. அதை அரசியலில் பயன்படுத்திய முதல் ஆள் அவர் தான். சத்தியாக்ரகம் முழுக்க அரசியல் ரீதியானது. அகிம்சை அறம் சார்ந்த நேர்மை என்று சொல்லலாம். அரசாங்கங்களை ஆயுதம் ஏந்தி எதிர்க்க சொல்லவில்லை அவர். விடாது சிறைக்கு போய் அரசுகளை அவமானப்படுத்தி சாதிக்கும் முறையை அவர் நடைமுறைப்படுத்தினார். காந்தியின் போராட்டங்கள் இன்றுவரை அரசாங்கங்களை எதிர்க்கும் சிறந்த வழிமுறை. நாற்பதுகளிலேயே பிரேசிலில் அவரை வாசித்து இருக்கிறார்கள். கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்களின் அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் போராடியதும்,அமெரிக்காவில் நடந்த சிவில் உரிமை போராட்டங்கள்,தென் ஆப்ரிக்கா,பர்மா என்று காந்திய ரீதியான போராட்டங்கள் உலகம் முழுக்க ஏராளம். அதை மூன்றாவது புததகத்தில் பதிவு செய்ய வேண்டும்

காந்தியைப்பற்றி சுவையான சம்பவங்களை சொல்லுங்களேன் ?

காந்தி அவரின் அப்பா உயிரோடிருந்தால் கப்பலில் ஏறி போயிருக்க முடியாது என்பதை குறிப்பால் தன்னுடைய நூலில் உணர்த்துகிறார். அவரின் அப்பா அங்கே அரசில் திவானாக இருந்தார். காந்தியின் சகோதரர் லக்ஷ்மண தாஸ் இளவரசருடன் கூட்டணி போட்டுக்கொண்டு அவர் பட்டம் ஏற உதவி செய்தார். அதன் ஒரு பாகமாக நகைகள் திருடப்பட்டு இருவரும் மாட்டிக்கொண்டார்கள். அதனால் காந்தியின் குடும்பம் போர்பந்தருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னணியில் தான் காந்தி படிக்க லண்டன் போனார். மேலும் காந்தி தென் ஆப்ரிக்காவில் நல்ல வக்கீலாக சாதித்த பின்னர் கிளம்பி இந்தியாவில் வந்து தன் பிள்ளைகளை படிக்க மும்பை வந்தார் அங்கேயே ஒருவேளை நல்ல வழக்குகள் கிடைத்து இருந்தால் செட்டில் ஆகியிருப்பார் அப்படி நடக்கவில்லை. அதே போல தென் ஆப்ரிக்கா போகாமல் இருந்திருந்தால் அவருக்கு இந்தியாவின் பன்முகத்தன்மை அவருக்கு புரிந்திருக்காது. இவற்றில் எது மாறி நடந்திருந்தாலும் மகாத்மா காந்தி இந்த தேசத்துக்கு கிடைத்திருக்க மாட்டார்

காந்தியிடம் உங்களை ஈர்க்கும் விஷயம் என்ன ?
காந்தி மூன்று கண்டங்களில் வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கையை எழுதுவது என்பது மூன்று கண்டங்களின் அரசியல் வரலாறை பதிவு செய்வது உள்ளடக்கிய சவாலான பணி. கடந்த நூற்றாண்டில் அவரைப்போல உலகம் முழுக்க தாக்கம் ஏற்படுத்திய இன்னொரு ஆளுமை கண்டிப்பாக் இல்லை. அதிகம் கொண்டாடப்படும் மற்றும் வெறுக்கப்படும் கலவையான அனுபவத்தை அவரின் ஆளுமை பெற்றிருக்கிறது. ஒரு சுவையான் சம்பவத்தை பதிவு செய்கிறேன். கொண்டபள்ளி சீதராமையா நக்சலைட் தலைவர். அவர் தான் மக்கள் போர் குழுவை உருவாக்கியவர். ஆந்திர அரசு அவரைக்கைது செய்த பொழுது தப்பி ஓடினார் மீண்டும் அவர் மாட்டிக்கொண்டார். நடுவில் எங்கே போயிருந்தார் அவர் தெரியுமா ? எண்ணூறு மைல்கள் எப்படி எப்படியோ பயணம் செய்து காந்தியின் போர்பந்தர் வீட்டுக்கு போய் அவரின் குவளையில் எச்சில் துப்பிவிட்டு வந்திருக்கிறார் என்றால் காந்தி எப்படி இங்கே பாதிப்பை அறுபது வருடங்கள் கடந்தும் உண்டு செய்கிறார் என்று உணரலாம்

Gandhi Before Indiaகாந்தி அப்படி கொல்லப்படாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ? காந்தியின் சாதனை என்ன ?

காந்தி கொல்லப்படாமல் இருந்தால் என்னாகி இருக்கும் என்று சொல்வது கடினம். அது ஒரு வரலாற்றாசிரியரின் வேலை இல்லை. காந்தி கொல்லப்பட்டது இந்தியாவில் அடுத்த இருபது வருடங்களுக்கு அமைதியை கொண்டு வந்தது.. பாகிஸ்தானில் இன ஒழிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது இங்கே வலதுசாரி இயக்கங்கள் வன்முறையை தூண்டிக்கொண்டு இருந்தன. காந்தியின் இறப்பு அவர்களைப்பற்றி பேரச்சத்தை உண்டு செய்து படேல் மற்றும் நேருவை உலுக்கியது. அவர்களை விட்டு மக்களை விலக செய்தது. அதனால் ஹிந்து பாகிஸ்தான் ஒன்று உருவாகாமல் போனது. அப்படி ஆகாமல் போயிருந்தால் வலதுசாரி சக்திகளின் அழுத்தத்துக்கு படிந்து நேரு மற்றும் படேல் இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்றியிருக்கக்கூடும். இந்தியா இன்றும் மதச்சார்பற்ற தேசமாக இருப்பதற்கு காந்தியே காரணம். காந்தியை அதிகம் ஆர்.எஸ்.எஸ்,சங் பரிவார்,பி.ஜே.பி ஆகிய அமைப்புகள் அதிகம் வெறுப்பதற்கும்,வலதுசாரிகள் திட்டுவதற்கும்
இதுவே காரணம்

உங்களின் இந்த நூலை ஆவணங்களாக இருக்கிறது,சலிப்பாக இருக்கிறது என்று இந்தியா டுடேவில் ஒருவர் குறித்திருந்தாரே ?

அவர் மீது எல்லாவகையான மரியாதையுடன் சொல்கிறேன் அவர் பெரும்பாலும் நூல்கள் வாசிப்பதில்லை. என் நூல்கள் நல்ல வாசிப்பு அனுபவத்தை தரும். இந்த நூலை வாசித்துவிட்டு சொல்லுங்கள். நன்றி

காந்தி,படேல்,மோடி !


பெரும்பான்மையினரின் மதவாதம் தேசியம் என்று கருதப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் !- நேரு ஜனவரி ஐந்து,1961.
நேருவை முன்னிறுத்தாமல் தொடர்ந்து வலதுசாரி இயக்கங்கள் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் முதலிய ஹிந்துத்வா அமைப்புகள் மற்றும் மதவாதத்தை உயர்த்திப்பிடிக்கும் பி.ஜே.பி ஆகியவை படேலை ஏன் இப்படி முன்னிறுத்துகிறார்கள். படேல் இந்த தேசத்தை ஒன்று சேர்த்தவர் என்பதும்,காந்தியின் மரணத்துக்கு பின்னர் அவரே ஹிந்துத்வா அமைப்புகள் ஆபத்தானவை என்று உணர்ந்தார் என்பதும் சந்தேகமே இல்லாத உண்மைகள். அதே சமயம் அவரின் மதத்தைப்பற்றிய பார்வை என்ன என்று பார்க்கிற பொழுது அவர் மதவாதத்தை ஆதரிக்கிற ஒரு ஆளுமையாகவே இருந்திருக்கிறார் என்பது தான் கசப்பான உண்மை. அதை விவரிக்கும் எ.ஜி.நூரனியின் கட்டுரையின் உள்ளடக்கம் மட்டும் இங்கே :

நவம்பர் 1945 இல் ப்ரன்சுக்லால் மபாட்லால் ஹிந்து நீச்சல் குளத்தை ஒரு காங்கிரஸ் தலைவர் துவங்கி வைத்தார். அது அன்று முதல் இன்றுவரை ஹிந்துக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நீச்சல் குளம். அதைத்திறந்து வைத்தவர் படேலே தான் . இதை அழகாக கடல் நீரில் கூட பங்கு தர மாட்டார்கள் காங்கிரஸ் காரர்கள் என்று அரசியலாக்கினார் ஜின்னா !

படேல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து மகா சபையோடு நெருக்கமாகவே இருந்தார். வைஸ்ராய் வேவல் இங்கிலாந்து அரசருக்கு எழுதிய கடிதத்தில் படேல் வெளிப்படையாகவே மதவாதியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார் (Transfer of Power, Volume 8, page 772).

கிறிஸ்டோபர் ஜெப்ரோல்ட் இப்படி பதிவு செய்கிறார் :

“ஜூனாகாதுக்கு நவம்பர் 12, 1947 இல் வந்த படேல் “சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம். இங்கே இருக்கும் சிலைகளை மீண்டும் உருவாக்குவது ஹிந்துக்களின் பெருமை மற்றும் நம்பிக்கையை மீட்பது போல இருக்கும் !” என்று பேசினார்

இன்றைக்கு படேலை கொண்டாடும் பலபேர் ராஜாஜியை,நேருவை முற்றாக நிராகரிப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நேரு மத நம்பிக்கை இல்லாதவர் என்பதால் அவரை அவர்கள் நிராகரிக்கவில்லை. நேரு மதசார்பின்மை கொண்டவராக இருந்ததே அவர்களின் கோபம். ராஜாஜி பகவத் கீதை,உபநிஷதங்கள் படித்திருந்தாலும் அவர் மதச்சார்பின்மையில் உறுதியாக இருந்தார். ஏன் தீவிர மத நம்பிக்கை கொண்ட ராஜேந்திர பிரசாத்தை படேல் ராஜாஜியை விடுத்து இந்தியாவின் ஜனாதிபதி ஆக்கினார் என்று நீங்கள் உணரமுடியும் . படேல் தன்னுடைய மகன் நரசிம்மனுக்கு எழுதிய கடிதத்தில் ,”ராஜாஜி ஒரு அரை முஸ்லீம் !” என்று வெறுப்போடு பதிவு செய்கிறார்

இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு படேல் மட்டுமே காரணம் என்பது போல பலர் எழுதுகிறார்கள். மன்னர்களை ஏற்க வைத்த மவுண்ட்பேட்டன்,தொடர்ந்து தீவிரமாக இயங்கிய மேனன் ஆகியோரும் முக்கிய பங்காற்றினார்கள் என்பதை மறைக்கக்கூடாது. கூடவே இளவரசர்கள் கூட்டமைப்பின் தலைவரான போபால் நவாப் நான் ஜின்னாவுக்கு ஆதரவானவன் என்று சொன்னதும் ஹிந்து மன்னர்களை இந்தியாவை நோக்கி செலுத்தியது என்பதும் வரலாறு

காந்தியின் பிரார்ததனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது ; கைது செய்யப்பட்ட மதன்லால் தான் தனி ஆளில்லை என்று தெளிவாக சொல்லியிருந்தான். காந்தியின் படுகொலைக்கும் அந்த குண்டுவெடிப்புக்கும் இடையில் பத்து நாட்கள் இடைவெளி இருந்தது. உள்துறை அமைச்சராக இருந்த படேல் தீவிரமாக் செயலாற்றவில்லை. தொடர்ந்து முடுக்கி இருந்தால் காந்தியை காத்திருக்க முடியும். ஆனால்,நேருவுடன் பிப்ரவர் 27 அன்று தான் குண்டுவெடிப்பு வழக்கினைப்பற்றி தினமும் கவனித்துக்கொண்டு இருந்ததாக குறிக்கிறார் (Durga Das (Ed.) Sardar Patel’s Correspondence (SPC); Navajivan Publishing House; Volume 6, page 56).

ஜின்னாவின் கோபத்துக்கும்,தீவிர இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டு பாகிஸ்தான் என்கிற தேசத்தை ஆதரித்தவர்களையும் தொடர்ந்து எதிர்த்த ஆசாத்தை இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் என்ற அவரை படேல் அவமானப்படுத்தினார். அவர் அமைச்சரவையில் இருந்ததை எதிர்க்கவும் செய்தார்.The (Collected Works of Mahatma Gandhi, Volume 9, page 408). டிசமபர் 27, 1947 இல் முஸ்லீம் லீகை கலைத்துவிட்டு காங்கிரசில் இணையுங்கள் என்று இஸ்லாமியர்களிடம் பேசியிருந்தார் ஆசாத். (Vide the writer’s The Muslims of India: A Documentary Record; Oxford University Press, 2003; page 65 for the full text).

அதே லக்னோவில் ஏழே நாளுக்கு பின்னர் பேசிய படேல் ஆசாத்தின் தேசபக்தியை கேள்வி கேட்டதோடு நில்லாமல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து மகா சபை உறுப்பினர்களை காங்கிரசில் சேரச்சொல்லி அழைப்பு வேறு விடுத்தார்அங்கேயே “இந்திய முஸ்லீம்களை நான் கேட்கிற கேள்வியெல்லாம் நீங்கள் ஏன் காஷ்மீர் பற்றி வாயை திறப்பதே இல்லை ஏன் பாகிஸ்தானின் செய்கையை கண்டிக்கவில்லை ? இது உங்கள் மீது சந்தேகத்தையே உண்டு செய்கிறது. நன்றியோடு இல்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு கிளம்ப வேண்டியது தான் “என்று முஸ்லீம்கள் மத்தியில் பேசினார் படேல்

காந்தியின் படுகொலைக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நோக்கி ” உங்களின் அறிவை,பணிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். தீவிரப்போக்கை கொண்டிருக்காதீர்கள். நன்றி இல்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டியது தான், இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்புவர்கள் ஹிந்துஸ்தான் என்கிற குதிரையை விட்டுவிட வேண்டும். நீங்கள் காங்கிரசில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன் !” என்றும் பேசினார்

November 10, 1949 இல் காங்கிர்ஸ் கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் நுழையலாம் என்கிற தீர்மானத்தை வேறு படேல் நிறைவேற்றினார். நேரு இந்தியாவில் இல்லாத நேரத்தில் இதை அவர் செய்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். (Jaffrelot notes, page 90). நேரு வந்ததும் அந்த தீர்மானம் November 17, 1949 அன்று திரும்ப பெறப்பட்டது

படேல் இஸ்லாமிய அதிகாரிகள் எல்லாரும் துரோகிகள் அவர்கள் பாகிஸ்தானுக்கு உதவுவார்கள் ஆகவே அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தார் நேரு அதற்கு உடன்படவில்லை என்று சர்வபள்ளி கோபால் பதிவு செய்கிறார். இந்தியாவில் இருந்த முஸ்லீம்களை பணயமாக பயன்படுத்தி பாகிஸ்தானில் இருக்கும் ஹிந்துக்களை நன்றாக நடத்த வைக்கலாம் என்று படேல் நினைத்தார். நேரு முஸ்லீம் அகதிகளை கவனிக்க இஸ்லாமியர்களை நியமிக்கலாம் என்று முனைந்த பொழுதும்,சில பகுதிகளை டெல்லியில் இஸ்லாமிய அகதிகள் தங்க ஒதுக்கிய பொழுதும் கடுமையாக எதிர்த்தார். ராணுவத்தை கொண்டு வந்து இஸ்லாமியர்களை காப்பது எந்த பயனையும் தராது என்றும் எழுதினார் படேல் (Gopal; Volume 2, pages 15-16).

நேரு மறுவாழ்வுக்கான அமைச்சரான மோகன்லால் சக்சேனாவை டெல்லி மற்றும் ஐக்கிய மாகாணத்தின் இஸ்லாமிய கடைகளை சீல் செய்ய சொன்னதற்காக ” நீங்கள் எல்லாரும் அகதி மனோபாவத்தில் அதைவிட ஆர்.எஸ்.எஸ் மனோபாவத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாக எனக்கு தெரிகிறது !” என்று கடிந்து கொண்டார் (ibid, page 77).

ஸ்டாபோர்ட் க்ரிப்சிடம் படேல் பேசுகிற பொழுது கலவரங்களில் இருந்து ஒரு முடிவு கிடைத்துக்கொண்டிருக்கிறது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை வென்றிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ரத்தம் சிந்தப்பட்டிருந்தால் காங்கிரசுக்கு அது உதவியாகவும்,முஸ்லீம் லீகை பலவீனப்படுத்தவும் உதவி இருக்கும் என்று இயல்பாக குறித்தார்.
ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில் படேல் ,”வங்கத்தில் அமைதியும்,ஒழுங்குமில்லை என்று தெரிகிறது. என்றாலும் யாரும் இதற்கு பொறுப்பில்லை ; இது முஸ்லீம் லீகுக்கு நல்ல பாடம். எண்ணற்ற முஸ்லீகள் இறந்து போனார்கள் என்று அறிகிறேன் நான் !”
(ibid, page 49).

நேரு பீகார் கலவரங்களால் அதிர்ந்து போயிருந்தார். “முஸ்லீம்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நடந்த சதி அது !” என்று அதிர்ந்து எழுதுகிறார் அவர். ஆனால்,படேல் ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொண்டார்

ஒரே ஒரு கருத்து விவாததுக்கு உரியது ; இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் உண்டாக உதவியுள்ளார்கள். முஸ்லீம்கள் நேர்மையான குடிமகன்கள் என்கிறார்கள். உங்களை எப்படி ஒரே நாளில் நம்ப மடியும் ? உங்களின் மனசாட்சியை நீங்கள் உண்மையனவர்களா என்று கேட்டுக்கொள்ளுங்கள் !” என்று பேசினார் படேல் January 3, 1948 (ibid, page 128). இஸ்லாமியர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றிவிட்டு பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு இடம் தரலாம் என்று கேபினெட் கூட்டங்களில் சொல்கிற அளவுக்கு படேல் போனார்
Vazira Fazila-Yacoobali Zamindar; The Long Partition; Oxford University Press, Karachi, 2008; page 39. மே 4, 1948,அன்று நேருவிடம் “பொதுமக்கள் எக்கச்சக்க வெறுப்பில் இருக்கிறார்கள். நாம் பாகிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர்களை தடுக்கவில்லை என்று குறைபடுகிறார்கள் என்று நேருவுக்கு எழுதினார். (SPC, Volume 6, page 319). ஐ பி யை பயன்படுத்தி அமைச்சரவையில் இருந்த இஸ்லாமியர்களை வேவு பார்க்கிற அளவுக்கு படேலின் சந்தேகங்கள் விரிந்து கொண்டே போயின என்பது தான் வரலாறு. மேலும் வாசிக்க.

http://www.frontline.in/cover-story/patels-communalisma-documented-record/article5389270.ece
நன்றி : Frontline