சாமானியர்களின் மருத்துவர் சந்திரமோகன்


மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் அவர்கள் காலமானார். தஞ்சைக்கு அருகில் உள்ள நாஞ்சிக் கோட்டை எனும் ஊரில் பிறந்து வளர்ந்தார். அப்பா ரயில்வே துறையில் Sorter ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார். அம்மா ஆரம்ப பள்ளி ஆசிரியை. அறுபதுகளில் முதன்முதலில் மின்சாரம் எட்டிப் பார்த்த வீடாக அவருடையது இருந்தது. தன்னுடைய மூத்த மகனை எப்படியாவது மருத்துவராக ஆக்க வேண்டும் என்கிற கனவு பொய்த்து போன நிலையில், சந்திரமோகனை பார்த்து ‘நீ டாக்டர் ஆகிடணும் தம்பி’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இவருக்கோ ஆட்சிப்பணி, வான்வெளிப் பொறியியல் என்று கனவுகள் இருந்தன. அவை ஒரு நாளில் திசைமாற்றப் பட்டிருந்தன. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சேர்ந்த பின்பு கூட ஓராண்டு காலம், பிடித்த பாடத்தை படிக்க அப்பா அனுமதிப்பாரா என்று ஏக்கத்தோடு காத்திருந்தார். அந்த ஓட்டத்தில், எளிய மனிதர்களின் ஒரே நம்பிக்கையாக அரசு மருத்துவமனை திகழ்வதை கண்டுகொண்டார். மருத்துவ நூல்களின் விலை நெஞ்சடைக்க வைக்கும் சூழல். தன்னுடைய எம்.பி.பி.எஸ் படிப்புக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவ நூலை மட்டும் 13 ரூபாய் கொடுத்து வாங்கிப் படித்தார். மற்ற நேரமெல்லாம் நூலகத்தில் தவங்கிடந்தார்.

மருத்துவக் கல்வி பயின்ற காலத்தில் அறுவை சிகிச்சை உடனடி தீர்வுகளை தருவது அவரை ஈர்த்தது. சாப்பிட விரும்பினாலும், புற்றுநோயால் எதையும் உண்ண முடியாமல் எளிய மனிதர்கள் படும் துயரங்கள் அவர் மனதை தைத்தன. இரையகக்குடலியல் துறையில் சேர்ந்து படித்தார். மாநில அளவில் முதல் மாணவராக தங்கப்பதக்கம் பெற்றார். அதன் பின்பு, 47 கடலோர கிராமங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றினார்.

இரையகக் குடலியல் அறுவை சிகிச்சை துறையில் மேற்படிப்பினை பேராசிரியர் ரங்கபாஷ்யம் வழிகாட்டுதலில் படித்து தேறினார். அதன்பின்னர் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று நீண்ட பயணம் சென்னை மருத்துவ கல்லூரியின் துறைத் தலைவர் ஆகிற அளவுக்கு சென்றது.

இடையில், 1995-ல் ஹாங்காங்கிற்கு மூன்று மாதகால பயிற்சிக்காக அவர் சென்றிருந்தார். இவரின் தேர்ந்த செயல்திறனை, அறுவை சிகிச்சையின் லாகவத்தை கண்ட மருத்துவத் துறை தலைவர் ஹாங்காங்கில் இந்திய மதிப்பில் மூன்று லட்சம் மாத சம்பளம் தரும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ‘இங்கே கற்றுக்கொண்டு என்னுடைய நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் பணியாற்றவே விருப்பம்’ என்று சந்திரமோகன் அவர்கள் மென்மையாக மறுத்தார். அப்போது இங்கே அவர் பெற்றுக்கொண்டிருந்த சம்பளம் 20,000 ரூபாய் !

புகைப்பட நன்றி: Deccan chronicle

(புகைப்பட நன்றி: Deccan Chronicle)

ஒரு பைசா பெறாத காரணங்கள், கண நேர கோபங்கள், மன வருத்தங்களால் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்று இரைப்பை, உணவுக்குழாய் எரிந்து வருகிற பலபேரை போராடிக் காக்கிற பெரும்பணிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டார். மேலும், அமில வீச்சு, தற்கொலை முயற்சியில் இருந்து மீட்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, கல்வி என்றும் அவரின் பணிகள் நீண்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலரை மீட்டெடுப்பதில் அவரின் பங்களிப்பு மகத்தானது.அமிலம் இன்ன பிற அரிக்கும் தன்மையுள்ள பொருட்களால் குரல் வளை-உணவுக்குழாய், இரைப்பை ஆகியவை சுருங்கிப் போவதை சீர்செய்ய அவர் கண்டறிந்த முறை உலகளவில் இன்றளவும் பயன்படுத்தப் படுகிறது. மேலும்,பிற உள் உறுப்புகளை கொண்டு சிதிலமடைந்த பகுதிகளை மீட்கும் முறையின் மூலம் பலரின் வாழ்க்கையில் வெளிச்ச வெள்ளம் பாய்ச்சினார். இரைப்பை, உணவுக்குழாய் சுருங்கிப் போகாமல் தடுக்கும் வண்ணம் நோயாளிகளே தங்களுக்கு சிகிச்சையளித்துக் கொள்ளும் ‘self -dilatation’ முறையை அறிமுகப்படுத்தினார்.

வெற்றிகரமாக மீண்டவர்களினை ஒருங்கிணைத்து ‘ஆதரவு குழுக்களை’ உருவாக்கினார். ஒரு மருத்துவர் ஒரு மணி நேரம் நோயாளியிடம் புற்றுநோய் குறித்து பேசுவதை விட, குணமான நபர் ஒரு நிமிடம் பேசினாலே அவர்கள் நம்பிக்கையோடு நோயை எதிர்கொள்வார்கள் என்கிற அவரின் அணுகுமுறைக்கு பெரும் வெற்றி கிட்டியது. ‘மீண்டும் வாழ்கிறோம், மீண்டு வாழ உதவுவோம்’ என்கிற முழக்கத்தோடு மனிதநேயம் மிக்க இந்த முன்னெடுப்புகளை இறுதி மூச்சு வரை மேற்கொண்டார். சென்னை மருத்துவக் கல்லூரியின் மேல் இரைப்பை,குடலியல் மையம் தனித்துறையாக இவரின் பெருமுயற்சியால் வளர்ந்து பீடுநடை போடுகிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இரையக குடலியல் அறுவை சிகிச்சைக்கான மேற்படிப்பு இடங்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் தான் இருக்கின்றன என்பதற்கான ஆணிவேர் அவரே ஆவார்.

அவர் துறையில் பல்வேறு புற்றுநோயாளிகளை காப்பாற்றும் பணிகளை தொடர்ந்து செய்து வந்தாலும் மக்களிடையே புற்றுநோய் குறித்து அச்சம் நிலவுவதை கண்டார். அதனைப் போக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மேலும், தன்னுடைய பணிக்காலத்திற்கு பின்பு ESOINDIA என்கிற அமைப்பினை நிறுவினார். இதில் பல நூறு நோயாளிகளுக்கு வழிகாட்டுதல் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அடுத்தடுத்த தலைமுறையை சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு உலகின் ஆகச்சிறந்த மருத்துவ நிபுணர்களிடம் கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். அதோடு நில்லாமல், அவர்களின் ஆய்வுலகினில் இயங்க ஊக்கப்படுத்தி சர்வதேச அளவில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க வைத்தார். ‘ஒரு முறை நாம் துவக்கி வைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அந்த மாணவர்கள் அயராமல் ஆய்வுப்பணிகளில் தங்களை தோய்த்துக் கொள்வார்கள்’ என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார்.

‘கேன்சர் என்று தெரிந்து விட்ட நாளே சாவுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது’ என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. உணவுக்குழாய் சார்ந்த பிரச்சனைகள், இரைப்பை சிக்கல்களுக்கு உடனடியாக மருத்துவரிடம் வந்து பரிசோதித்து கொண்டால் நாட்பட்ட நிலையில் புற்றுநோயை வெல்ல முடியாமல் போவது குறையும் என்பது அவரின் தொலைநோக்காக இருந்தது. ‘ஜப்பான் நாட்டில் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60% மக்கள் ஐந்தாண்டுகளை கடந்து வாழ்கிறார்கள். அப்படி நம் மக்களும் மகிழ்வோடு பல காலம் வாழ வேண்டும்.’ என்கிற கனவு அவருக்கு இருந்தது. மக்களுக்கான மருத்துவராக தன் வாழ்நாளை கழித்த சந்திரமோகன் ஐயா காலங்களை கடந்து நினைவுகூரப்படுவார். அவரின் ஆழமான அழுத்த முத்திரை அவர் கட்டியெழுப்பிய அமைப்புகள், தட்டிக் கொடுத்த மருத்துவர்கள், அரவணைத்துக் கொண்ட நோய் பீடித்த மனிதர்கள் என்று நீக்கமற நிறைந்திருக்கிறது.

அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்


மறைமலையடிகள் எனும் தனித்தமிழ் இயக்கத்தந்தை பிறந்த தினம் இன்று. தமிழ் மொழியில் வடமொழி கலந்து எழுதுவது அன்றைய காலத்தில் மிக இயல்பான ஒன்றாக இருந்து வந்தது. அதையே பெருமையாகவும் பண்டிதர்களும் கருதினர். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள காடம்பாடியில் பிறந்த இவருக்கு திருக்கழுக்குன்ற இறைவனை நினைவுப்படுத்தும் வகையில் வேதாசலம் என்று பெயர் சூட்டப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் நூலுக்கு நயவுரை எழுதி இவர் அனுப்பியது சுந்தரம் பிள்ளையை வெகுவாக கவர்ந்தது. அதனால் இவருக்கு கேரளாவில் தமிழ் ஆசிரியர்  பணி கிடைக்குமாறு செய்தார் சுந்தரம் பிள்ளை. அப்பணியை வெகு விரைவில் துறந்து வெளியேறிய வேதாசலம் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பரிதிமாற் கலைஞருடன் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றினார். 

 
 “பெற்ற தாய்தனை மக மறந்தாலும் ” என்று துவங்கும் வள்ளலாரின் அருட்பா பாடலை நெக்குருக பாடிவிட்டு மகள் நீலாம்பிகையை நோக்கி  “இதில் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் ” என்று அடிகளார் பாடியுள்ளார். இதையே யாக்கை எனும் நற்றமிழ் சொல்லால் குறித்திருந்தால் இன்னமும் இனிமையாக இருந்திருக்கும்.” என்று புலம்பினார். அன்று முதல் எல்லாவற்றையும் தனித்தமிழில் பயன்படுத்துவது என்று இருவரும் முடிவு செய்தார்கள். வேதாசலம் மறைமலையடிகள் ஆனார். ‘ச‌ம‌ர‌ச‌ ச‌ன்மார்க்க‌ம்’ என்னும் த‌ம் இல்ல‌த்தின் பெயரை ‘பொதுநிலைக் க‌ழ‌க‌ம்’ என்றும், தாம் ந‌ட‌த்திவ‌ந்த‌ ‘ஞான‌சாக‌ர‌ம்’ திங்க‌ளித‌ழை ‘அறிவுக்க‌ட‌ல்’ என்றும் மாற்றினார். 
 
ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலியவை மறைமலையடிகள் கொண்டுவந்ததே. வேள்வி நிகழ்த்தல், ஆரியவழிபாடு முதலியவற்றையும் எதிர்த்தார். ஆரியர் எப்படி தமிழ்நாட்டை சீரழித்தனர் என்று ஆதாரங்களை அடுக்கினார் அடிகளார். 
 
அதோடு நில்லாமல் சைவ சித்தாந்த பதிப்பகம் உருவாவதற்கும் முக்கிய காரணமானார் . அவரின் வாசிப்பு எல்லையில்லாதது. அவர் மாதத்துக்கு ஐம்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கி வாசிக்கிற குணம் கொண்டவராக இருந்தார். அவரின் நான்காயிரம் நூல்கள் தான் மறைமலையடிகள் நூலகத்துக்கான அச்சாரம். பேச்சில்,எழுத்தில் எங்கும் தனித்தமிழை இவர் கொண்டு வந்த காலத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் ஏற்பட்டு இருந்தது. ஆரியரின் வடமொழியை நிராகரிப்போம் என்று இவரின் வழிநின்று எண்ணற்ற இளைஞர்கள் தனித்தமிழில் செயலாற்ற ஆரம்பித்தனர். 
 
ஐம்பத்தி எட்டு வயதில் ராஜாஜி அரசு சென்னை மாகாணத்தில் ஹிந்தி திணிப்பை செயல்படுத்த முயன்ற பொழுது சிறை புகுந்தார் அடிகள். ‘பொதுமொழி என்பது மக்களால் பேசப்படுகிறது. வாழும் மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி பண்டைய மொழியாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக நெடுங்காலம் பேசப்பட்டு, இப்போதும் பேசும்மொழியாக இருக்கவேண்டும். அந்த மொழி உயரிய இலக்கிய வளம் நிரம்பியதாக இருக்கவேண்டும். அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் அரசியல் கொள்கைகள், சிந்தனை சார்ந்த சமயக் கொள்கைகள், சமூக நெறிகள் போன்ற

மக்கள் மனமுவந்து ஏற்கத்தக்க பல்துறை அறிவுசார்ந்த இலக்கியங்கள் சொந்தப் படைப்பிலக்கியங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் இந்தி மொழிக்கு பழமைச் சிறப்பும் இல்லை; இலக்கிய வளமும் இல்லை. வட இந்தியாவில் இந்தி பேசப்படுவதிலேயே பலவித வேறுபாடுகள் உள்ளபோது தமிழர்களை இந்தியைக் கற்றுக் கொள் என்று வற்புறுத்துவது சக்தியையும் முழு நேரத்தையும் வீணாக்குவதாகும்’ என்று உறுதியாக பதிவு செய்தார் அடிகள் 

 
மறைமலையடிகள் இல்லாமல் போயிருந்தால் இன்றைய தமிழ் உரைநடை தனித்தமிழாக இருந்திருக்காது. தவறிப்போன தமிழாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவரைப்பற்றி தமிழ்த்தென்றல் திரு.வி.க. குறித்த வரிகளோடு இந்த கட்டுரையை முடிக்கலாம் ,” தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்”.