ஒரு கனவின் இசை !


கிருஷ்ணா டாவின்சி அவர்களின் எழுத்தில் மலர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறான ஒரு கனவின் இசை நூலை வாசித்து முடித்தேன். அப்பாவின் மரணத்தால் இசைத்துறையில் நுழைந்த ரஹ்மான் ஒரு காலத்தில் இசைத்துறை சோறு போடாவிட்டால் என்ன செய்வது என்று டிரைவர் வேலைக்காக கார் ஓட்ட கற்றுக்கொண்டார் என்பதே வலி தருகிறது. முதலில் இசை என்பது பெரிய பரவசத்தை தருகிற அனுபவமாக ஆரம்பிக்காவிட்டாலும் போகப்போக ஒவ்வொரு கருவியைத்தொடுகிற பொழுதும் மிகச்சிறந்த கலைஞர் எப்படி வாசித்திருப்பாரோ அதே ஈர்ப்பு மற்றும் கச்சிதத்தோடு வாசிக்க வேண்டும் என்கிற உறுதி ரஹ்மானுக்குள் பாய்ந்து மாயங்கள் செய்திருக்கிறது.

ரோஜா படத்துக்கு அவருக்கு தரப்பட்ட சம்பளத்தை வெறும் மூன்று மணிநேரத்தில் சம்பாதிக்க முடியும் என்கிற பொழுதும் மணிரத்னம் எனும் பல்கலைக்கழகத்திடம் கற்றுக்கொள்ள அதற்கு இசைந்ததாக ரஹ்மான் சொல்கிறார்.தில்சே படத்தின் பாடல்கள் வெளி வந்த பொழுது இசைத்துறையில் பெரிய தேக்க நிலை உண்டாகி இருந்தது. ஆனால்,ஒரே வாரத்தில் இருபது லட்சம் கேசட்டுகள் விற்று அலற வைத்திருக்கிறது ரஹ்மான் மோகம். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை. ஆஷா போன்ஸ்லேவுக்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தது அப்படம்.

பொறுமையாக நௌஷாத் போல இசையமைத்துக்கொண்டு இருந்த ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு வெறும் இரண்டே வாரத்தில் இசை அமைத்து அசத்தி இருக்கிறார் அவர். அப்படத்துக்கு இசையமைக்கிறோம் என்கிற ரகசியத்தை உடன் வேலை பார்த்தவர்களிடம் இறுதிவரை சொல்லவேயில்லை,ஜெய் ஹோ பாடலை டானி பாயிலிடம் சொல்லி படத்தில் சேர்த்து இரண்டு ஆஸ்கர்களை அள்ளுகிற பாதைக்கு வழிகோலி இருக்கிறார் இசைப்புயல்.

ஒருவரை பல்வேறு முறைகளில் பாடவிட்டும்,இசைக்கோர்வையோ கோர்க்கவிட்டும் பின்னர் அவற்றில் இருந்து பெஸ்ட்டை தேர்வு செய்துகொள்வார். வந்தே மாதரம் பாடலை வெளியிட்டதும் இப்படி இசைகோர்த்து ஹிந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துகிறார் என்று இந்து அடிப்படைவாத அமைப்புகளும்,ஒரு இஸ்லாமியர் ஹிந்து கடவுள்களின் பெயர் வரும் பாடலுக்கு இசையமைக்கலாமா என்று சிக்கலை கிளப்பி இருக்கிறார்கள்.. சுப்புடு வந்து ஏமாத்துறோம் என்று எழுதி விமர்சித்திருக்கிறார். எப்பொழுதும் போல மென்மையான புன்னகை மட்டுமே அவரிடம் இருந்து வந்திருக்கிறது.

ரோஜா படத்தின் இசைக்கோர்வையை போட்டு முடித்து சின்ன சின்ன ஆசைப்பாடலை அம்மாவிடம் முதன்முதலில் இசையமைத்துக்கொடுத்து இருக்கிறார் ரஹ்மான். கேட்டுவிட்டு அம்மா கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். “பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !” என்று அம்மா சொல்லியிருக்கிறார். அதுதான் நடந்தது.

விகடன் பிரசுரம்
120 பக்கங்கள்