இம்ரான் கான் பெற்றுத்தந்த உலக கோப்பை !


மார்ச் 25: பாகிஸ்தான் உலக கோப்பையை வென்ற தினம் (1992)
 
 

உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது.

இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன் எலும்பு முறிவால் விலகி இருந்தார். பேட்டிங் நம்பிக்கை சயீத் அன்வரும் உலகக்கோப்பையில் ஆட வரவில்லை. ஜாவித் மியான்தத் மற்றும் இம்ரான் இருவருக்கும் காயங்கள் உலகக்கோப்பை முடிகிற வரை கூடவே ஒட்டிக்கொண்டு தொல்லை கொடுத்தன.

அணியை ஸ்ட்ரிக்ட்டான தலைமைஆசிரியர் போலத்தான் நடத்தினார் இம்ரான். சரியாக ஆடாவிட்டால் தனியாக கதவை சாற்றிவிட்டு டோஸ் விட்டு உசுப்பேற்றுவார். ஆனால்,முதல் ஐந்து போட்டியில் நடந்தது என்னவோ வேறு ! மேற்கிந்திய தீவுகளிடம் பத்து விக்கெட்டில் தோல்வி,பரமவைரி இந்தியாவிடம் 43 ரன்களில் தோல்வி,தென் ஆப்ரிக்காவிடம் இருபது ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். ஒரு போட்டியை தத்தி தத்தி டை செய்தார்கள். இன்னொரு போட்டியில் வெறும் 74 ரன்களில் சுருண்டு இருந்தார்கள். எதோ மழை வந்து புண்ணியம் கட்டிக்கொண்டது. அடுத்த ஐந்து போட்டிகளில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதி என்கிற நிலை !

இம்ரான் கான் அணியினரை அழைத்தார் ,”நாம் ஒரு ஓரத்துக்கு தள்ளப்பட்ட புலிகள் போலத்தான் இப்பொழுது உணரவேண்டும். புலிகள் ஒதுங்குவது ஒழித்துகட்டத்தான் ! இறங்கி அடிப்போம் ! வெற்றி நமதே !” என்று கர்ஜித்தார். எண்பதுகளில் கிரிக்கெட் பாணியில் அணியின் ஆட்டத்தை அமைத்துக்கொண்டார்கள். முதல் நாற்பது ஓவர்களில் பெரிதாக விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு மெதுவாக ஆடுவார்கள், இறுதி பத்து ஓவரில் துவம்சம் செய்து வெல்வார்கள். இப்படி ஆடியே அரையிறுதியை தொட்டது அணி !

அதுவரைக்கும் அணியில் சொதப்பிக்கொண்டு இருந்த இன்சமாமை தூக்கி விட வேண்டும் என்று எல்லாரும் முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர் கண்கள் கலங்கி இம்ரான் அறைக்குள் வந்தார் ,”எந்த போட்டியிலும் நான் ஒழுங்காக ஆடவே இல்லை ! அப்படியே ஊருக்கு கிளம்பறேன். வேற நல்ல ப்ளேயரை போட்டுக்குங்க கேப்டன் !”

இம்ரான் சுருக்கம் விழுந்த முகம் விரிய இன்சமாமை பார்த்து இப்படி உறுதியாக சொன்னார் ,”உன்னை முல்தானில் இருந்து கூப்பிட்டு வந்தது நீ ஆடி ஜெயிக்க வைப்பேன்னு தான் ! நடுவில எல்லாம் அனுப்ப முடியாது. நீ அரையிறுதியில் ஆடுறே ! நாம உன்னால ஜெயிக்கிறோம் ! போ ரெடியாகு !”. கேப்டன் பேசிவிட்டால் எதிர்த்து பேச முடியாது ! கூடாது.

நியூசிலாந்து அணியுடனான அந்த போட்டியில் பாகிஸ்தான் பவுலிங் செய்தது. 262 ரன்கள் அடிக்கப்பட்டு இருந்தது. அதை சேஸ் செய்ய பாகிஸ்தான் களம் புகுந்த பொழுது இந்த அணி தேறாது என்று முடிவு செய்து எதிரணியின் க்ரோவ் காயம் படாமல் இறுதிப்போட்டியில் ஆட  அறையில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டார். அது பெரிய தவறாக முடிந்தது என்பது இறுதி பத்து ஓவரில் தான் புரிந்தது. முதல் நாற்பது ஓவரில் 140 /4 என்றே ஸ்கோர் சிரித்துகொண்டு நின்றது. இறுதிப்போட்டியில் நாம் தான் என்று நியூசிலாந்து அணி குதூகலித்து கொண்டிருந்தது. இன்சமாம் இல்லை என்று அடித்து ஆடி நிரூபித்தார். முப்பத்தி ஏழு பந்துகளில் அறுபது ரன்கள் அடித்து அணியை இறுதிபோட்டிக்கு கூட்டிக்கொண்டு போனார் அந்த அதுவரை சொதப்பல் மன்னர் !

அதுவரை சிங்கம் போல ஆடிக்கொண்டு இருந்த இங்கிலாந்து அணி இருதிப்போட்டிக்குள்  சர்ச்சைக்குரிய மழையால் பாதித்த அரையிறுதி போட்டியின் உதவியோடு வந்திருந்தது. பாகிஸ்தான் இந்த முறை முதலில் பேட் செய்தது. ரமலான் மாதத்தின் பதினெட்டாவது நாள் அன்று. 87,182 பேர் நிரம்பியிருந்த எம்.சி.ஜி. மைதானத்தில் போட்டி துவங்கியது. முந்தைய அதே பாணி   நாற்பது ஓவரில் வெறும் 150 ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இன்சமாம் மற்றும் வாசிம் அகரம் இறுதி பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட  நூறு ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை  249 க்கு உயர்த்தினார்கள். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் சுலபமாக சரிந்து விழுந்தது. லாம்ப் மற்றும் பேர்ப்ராதர் எனும் இரண்டு பேர் மட்டும் தண்ணிக்காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

இம்ரான் கான் முப்பத்தி ஐந்தாவது ஓவரில் வாசிம் அக்ரமை மீண்டும் அழைத்தார். “எனக்கு வேண்டியது வெற்றி மட்டுமே !” என்று சொல்லித்தான் பந்து தரப்பட்டு இருந்தது. எதோ மாயாஜாலம் போல அந்த இரண்டு பந்துகளில் அற்புதம் புரிந்தார் அக்ரம். இரண்டு இன்ஸ்விங்கர்கள் இரண்டு விக்கெட்கள். அவ்வளவு தான்,கொஞ்ச நேரத்தில் வாலையும் மடக்கி கோப்பையை பாகிஸ்தானின் நாற்பது வயது புலி இம்ரான் தூக்கிய பொழுது தேசமே கொண்டாட்டத்தில் மூழ்கிப்போனது. கேன்சர் மருத்துவமனை கட்ட பணம் திரட்டிய திருப்தியோடு அணியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார் அவர். ஏனோ எல்லாரின் கண்களும் கலங்கியிருந்தன. அந்த நம்ப முடியாத வெற்றிப்பயணத்தின் இறுதிக்கணம் நடந்த தினம் மார்ச் 25

கிரிக்கெட்டுக்கு ஒரு டான் பிராட்மான் !


டோனால்ட் பிராட்மன் எனும் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் மறைந்த தினம் இன்று . (பிப்ரவரி 25) கிரிக்கெட்டின் அதிகபட்ச டெஸ்ட் சராசரியான 99.94 இவர் வசம் இருந்தது என்பது இவரின் பிரம்மாண்டத்தை தெளிவாக சொல்லும். சின்னப்பையனாக யாரும் பயிற்சி தராமல் கிரிக்கெட் ஸ்டாம்ப்பை கொண்டு கோல்ப் பந்தை அடித்து விளையாடி பயிற்சி செய்தவர் அவர் . அவர் ஆடிய காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மிகக்குறைவாகவே ஆடப்பட்டன .

அப்பொழுது இங்கிலாந்தும்,ஆஸ்திரேலியாவும் மிகப்பெரிய சண்டைக்கோழிகள் . ஆஷஸ் தொடரை வாழ்வா சாவா பிரச்சனையாக இருநாட்டவரும் கருதினார்கள் . இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தருணத்தில் கிரிக்கெட் உலகிற்குள் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக நுழைந்தார் பிராட்மன் .இன்றைக்கு போல அவர் காலத்தில் கிரிக்கெட்டில் பெரிய வருமானம் கிடையாது ;ஸ்டாக் ப்ரோக்கராக வேலை பார்த்தார் இவர் ;காலையில் ஏழு மணியில் இருந்து பத்து வரை அங்கே வேலை பார்த்துவிட்டு மைதானத்துக்கு வருவார் ;பின் இரவு ஏழு முதல் பத்து மணிவரை மீண்டும் அந்த வேலையை செய்வார். 

இவர் ஆடிய இருபதாண்டு காலத்தில் ஒரே ஒரு முறை தான் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை இழந்தது என்பதே இவர் எத்தகைய ஆட்டத்திறன் கொண்டவர் என்பதை விளக்கும் . இங்கிலாந்து ஜெயித்த ஒரு முறையும் பாடிலைன் என்கிற பந்துவீச்சு முறையை பின்பற்றியது -ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி லெக் ஸ்டம்ப் பக்கம் பந்து எழும்புமாறு செய்வார்கள் ;எண்ணற்ற பீல்டர்கள் லெக் சைடில் நிற்க வைக்கப்பட்டு விக்கெட்டை கழட்டி விடுவார்கள் .இது கிரிக்கெட்டின் ஆரோக்கியமான போக்கிற்கு எதிரானது என எதிர்ப்பும் எழுந்தது .அப்படிப்பட்ட தொடரில் கூட 56 என்கிற சராசரியை வைத்திருந்தார் அவர் .

ஒரு உள்ளூர் போட்டியில் டான் பிராட்மன் ஆட களம் புகுந்தார். அவரின் விக்கெட்டை ஏற்கனவே ஒருமுறை ஐம்பத்தி இரண்டு ரன்களுக்கு ஒருமுறை எடுத்திருந்த போட்டி நடந்த ப்ளாக்ஹீத் ஊரின் வீரரான வெண்டெல் பில்லுக்கு ஒரே ஆரவாரத்தின் மூலம் உற்சாகப்படுத்தினார்கள் ரசிகர்கள். முதல் ஓவரின் எட்டு பந்துகளில் 6, 6, 4, 2, 4, 4, 6, 1 என்றும் அடுத்த ஓவரில் 6, 4, 4, 6, 6, 4, 6, 4 என்றும் அடித்து நொறுக்கிய பிராட்மன் இருபத்தி இரண்டு பந்துகளில் நூறு ரன்களை கடந்தார் ! இந்தப்போட்டி நடந்த வருடம் 1931. !

கடைசி இன்னிங்க்சில் நான்கு ரன்கள் எடுத்தால் 7,000 ரன்கள் மற்றும் நூறு என்கிற சராசரியை தொட முடியும் என்கிற நிலையில் டக் அவுட்டாகி வெளியேறினார் . சச்சின் அவரை அவரின் 90 வயதில் சந்தித்தார் ;”நீங்கள் இப்பொழுது ஆடியிருந்தால் என்ன சராசரி வைத்திருப்பீர்கள் டான் ?”என சச்சின் கேட்ட பொழுது “70 !”என்றார் டான் .ஏன் அப்படி என்பது போல சச்சின் பார்க்க ,”கம்மான் !90 வயதில் எழுபது என்பது ஒன்றும் குறைவான சராசரி இல்லை !”என்றார் பிராட்மன் . கிரிக்கெட்டில் 99.94 என்கிற எண்ணுக்கு மிகப்பெரிய வசீகரத்தை தந்த நூற்றுக்கு நூறு கச்சிதமான பிராட்மனின் நினைவு தினம் இன்று

சர்ச்சில் 360 டிகிரி ;)


வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் ஜனவரி இருபத்தி நான்கு . உலகப்போரின் மாபெரும் நாயகர்களில் ஒருவராக கொண்டாடப்படும் மனிதர் இவர் . இந்தியா உட்பட பல தேசங்களில் ஆங்கிலேய அரசின் சார்பாக வீரராக பணியாற்றிய இவர் அப்பாவின் பின்புலம் கைகொடுக்க அரசியலில் குதித்து 1900 இல் எம் பி ஆனார் . ஆனால்,ஒரு காலத்திற்கு பிறகு இவரின் அரசியல் செல்வாக்கு மங்கியது .

அப்பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதை எதிர்த்தே அரசியலில் கவனம் பெற ஆரம்பித்தார் . கன்சர்வேடிவ் கட்சியின் பால்ட்வின் அமைச்சரவையில் கருவூலம் இவர் கட்டுப்பாட்டில் வந்தது . 1940 களின் ஆரம்ப கட்டத்தில் ஹிட்லரோடு ஜாலியாக பேசி சிக்கல்களை தீர்த்துவிடலாம் என நம்பிக்கொண்டிருந்த சாம்பர்லைன் அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்தார் .

நாடு முழுக்க அவரின் வழ வழ,கொழ கொழ பாணி எதிர்ப்புக்கு உள்ளாக இவர் பிரதமர் ஆனார் . உலகப்போரில் பிரான்ஸ் வீழ்ந்து இருந்தது ;இங்கிலாந்தில் குண்டுகள் வீசப்பட்டன . இவரே பல சமயம் பயந்து கொண்டு வானொலி நிலையம் போன கூத்தெல்லாம் நடந்தது .

“நான் உங்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை -உதிரம்,வியர்வை,உழைப்பு, கண்ணீர் ஆகியவற்றை தவிர” என சொல்லி மக்களை உசுப்பேற்றினார் . எங்கெங்கும் போராடுவோம் ;இறுதிவரை போராடுவோம் என எழுச்சி ஊட்டினார் .

வீரர்களின் கூடாரம் ஒன்றிற்கு போனார் -ஒரே நிமிடம் ,”நெவெர் நெவெர் அண்ட் நெவெர் கிவ் இன் !”என சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டார் .ஒரு மாபெரும் வீரராக ஆங்கிலேயர் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் இவர் தன் நாடு அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவுக்கும் அடுத்த நிலையிலேயே இருப்பதை உணர்ந்தே இருந்தார். நம்பிக்கையோடு நாட்டை வழிநடத்தினாலும் உண்மையான போர் நிலவரங்களை அறிந்துகொள்ள தன்னை புகழ்கிற நபர்களை ஒதுக்கி வைத்துவிட்டு லண்டனுக்கு வெளியே தனி இலாகா ஒன்றை அமைத்து அதனிடமிருந்து நிதர்சனமான தகவல்களை பெற்றார்.

பல களங்களில் அமெரிக்காவின் “lend-lease “உதவி இல்லாமல் போயிருந்தால் பிரிட்டன் திண்டாடி இருக்கும். காலனி நாடுகளின் வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நிலை ஏற்பட்டிருக்கும் . அடிபட்டாலும் அடிபடாத மாதிரியே விக்டரிக்கான வி முத்திரையை காட்டினார் .

சர்ச்சிலுக்கு ஷாம்பெய்ன்’ இல்லாமல் பொழுது போகாது. கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். ஒருமுறை அமெரிக்கா போயிருந்த பொழுது அவரை கொலை செய்ய தீட்டப்பட்டிருந்த திட்டத்தை கண்டறிந்த மேனஜேர் அதை அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்லவேண்டும் என்ற பொழுது ,”முதலில் ஷாம்பெய்ன் பாட்டிலுக்கு ஆர்டர் சொல்லுங்கள். குடித்துவிட்டு போலீசிடம் சொல்லிக்கொள்ளலாம் !” என்றார் சர்ச்சில்

இந்தியாவுக்கு விடுதலை தருவதை வலிமையாக எதிர்த்தார் ;காந்தியை அரைநிர்வாண பக்கிரி என கொச்சையாக விமர்சனம் செய்தார் ; காந்தி உண்ணாநோன்பு இருந்த பொழுது “இன்னும் சாகவில்லையா இவர் ?” என வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார் .

அவரின் நையாண்டி வெகு பிரசித்தமானது. ஒரு பெண்மணி நாடாளுமன்றத்தில் ,”நீங்கள் என் கணவராக இருந்திருந்தால் விஷத்தை கொடுத்திருப்பேன் உங்களுக்கு !” என்று சொல்ல ,”நீ என் மனைவியாக இருந்தால் விஷத்தை குடித்து நிம்மதியாக கண்ணை மூடியிருப்பேன் !” என்றார் இவர்

பெர்னார்ட் ஷா இவரை தன் நாடகத்துக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகளை அனுப்பி அழைத்திருந்தார். கூடவே ஒரு சீட்டும் இணைத்திருந்தார். ,”உங்கள் நண்பருடன் வரவும் ! அப்படியொருவர் இருந்தால் !” இவர் டிக்கெட்டுகளை திருப்பி ஒரு துண்டுசீட்டை மட்டும் இணைத்து அனுப்பினார். “நாளை வரமுடியாது. அடுத்த வாரம் வரப்பார்க்கிறேன். அதுவரை நாடகம் இருந்தால் !”

இந்தியா மக்கள் பஞ்சத்தால் இறந்த பொழுது உணவுக்கப்பல் அனுப்பமாட்டேன் என சொல்லி பல லட்சம் மக்களை சாகவிட்டவர் இவர் . உலகப்போரில் இங்கிலாந்தை வெற்றியடைய செய்தாலும் இவரை விட்டு நாட்டை மறுநிர்மாணம் செய்ய அட்லியை மக்கள் பிரதமர் ஆக்கினார்கள் .

மீண்டும் பத்து வருடம் கழித்து பிரதமர் ஆனார் .இவரின் எழுத்து அசாத்தியமானது .உலகப்போர் பற்றிய இவரின் நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது . மூன்று தடவை மாரடைப்பு,எட்டு தடவை நிமோனியா ஆகியவற்றில் இருந்து தப்பி சாதித்த சர்ச்சில் உடல் நிலை கெட்டு இதே நாளில் 90 வயதில் மரணமடைந்தார்

பேச்சுக்கொரு எட்மண்ட் பர்க்


உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் தனிப்பெரும் இடம் பெற்றிருக்கும் எட்மண்ட் பர்க் பிறந்த தினம் ஜனவரி பன்னிரெண்டு .அயர்லாந்தில் பிறந்த இவர் ; தன் மாற்று சிந்தனைகளால் கவனம் பெற்றார் . பத்திரிகை துறையை நான்காவது தூண் என அழைத்தவர் இவரே .1765 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்தார் .அவர் பேசிய முதல் பேச்சே எல்லாரையும் மெய்மறக்க செய்தது

.அமெரிக்காவின் சுதந்திர போருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார் ;அதே சமயம் பிரெஞ்சு புரட்சி ஐரோப்பா முழுக்க பரவி குழப்பத்தை உண்டாக்கும் என்றார் -அவ்வாறே நடந்தது . இந்தியாவின் மீது தனிக்கரிசனம் அவருக்கு இருந்தது ; வாரன் ஹாஸ்டிங்க்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்து
எண்ணற்ற ஊழல்கள் செய்தார் ; நிர்வாகத்தில் மக்களை பற்றி கவலைப்படவில்லை . அவரை நாடாளுமன்றத்தில் ராஜா துரோக குற்றத்துக்காக நிற்க வைத்தார் பர்க் .

அப்பொழுது அவர் ,இந்தியாவின் கர்நாடகத்தில் வறண்ட பூமியை அம்மக்கள் நீர்த்தேக்கங்கள் கட்டி பசுமை பூமியாக்கினர் ;அவர்களை முட்டாள் என நினைத்து அவற்றை சீரழிய விட்டு தினமும் பஞ்சத்தொடு இரவுணவு அருந்தப்போனார் ஹாஸ்டிங்க்ஸ் என பின்னி எடுத்தார் ராஜா. ஆனாலும்,துரோக குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இந்த உரையை பதினாறு முறை திருத்தி எழுதி தயாரானார் அவர் .

மிகவும் அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட இவர் ,உலக வரலாற்றை
நாற்பதாண்டு கால உழைப்பில் எழுதினார் ;ஒரு கொலை அவர வீட்டருகில் நடந்தது பார்த்த பலரும் பல விதமாக அதை விவரிக்க தன் உழைப்பை எல்லாம் தீயிட்டு கொளுத்திவிட்டு ,”இயேசுவை புத்தரை பற்றி இவர்கள் பதிவு செய்தது உண்மை என நான் எப்படி நம்புவது ?புத்தக அறிவு மட்டும் போதாது !”எனக்கம்பீரமாக
சொல்லிவிட்டு நடந்தார்;”நல்லவர்கள எதுவும் செய்யாமல் இருப்பதே தீமையை செழிக்க வைக்கும் என சொன்ன தலைசிறந்த மனிதரின் பிறந்தநாள் இன்று

பேச்சுக்கொரு எட்மண்ட் பர்க்


உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் தனிப்பெரும் இடம் பெற்றிருக்கும் எட்மண்ட் பர்க் பிறந்த தினம் ஜனவரி பன்னிரெண்டு .அயர்லாந்தில் பிறந்த இவர் ; தன் மாற்று சிந்தனைகளால் கவனம் பெற்றார் . பத்திரிகை துறையை நான்காவது தூண் என அழைத்தவர் இவரே .1765 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்தார் .அவர் பேசிய முதல் பேச்சே எல்லாரையும் மெய்மறக்க செய்தது

.அமெரிக்காவின் சுதந்திர போருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார் ;அதே சமயம் பிரெஞ்சு புரட்சி ஐரோப்பா முழுக்க பரவி குழப்பத்தை உண்டாக்கும் என்றார் -அவ்வாறே நடந்தது . இந்தியாவின் மீது தனிக்கரிசனம் அவருக்கு இருந்தது ; வாரன் ஹாஸ்டிங்க்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்து
எண்ணற்ற ஊழல்கள் செய்தார் ; நிர்வாகத்தில் மக்களை பற்றி கவலைப்படவில்லை . அவரை நாடாளுமன்றத்தில் ராஜா துரோக குற்றத்துக்காக நிற்க வைத்தார் பர்க் .

அப்பொழுது அவர் ,இந்தியாவின் கர்நாடகத்தில் வறண்ட பூமியை அம்மக்கள் நீர்த்தேக்கங்கள் கட்டி பசுமை பூமியாக்கினர் ;அவர்களை முட்டாள் என நினைத்து அவற்றை சீரழிய விட்டு தினமும் பஞ்சத்தொடு இரவுணவு அருந்தப்போனார் ஹாஸ்டிங்க்ஸ் என பின்னி எடுத்தார் ராஜா. ஆனாலும்,துரோக குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இந்த உரையை பதினாறு முறை திருத்தி எழுதி தயாரானார் அவர் .

மிகவும் அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட இவர் ,உலக வரலாற்றை
நாற்பதாண்டு கால உழைப்பில் எழுதினார் ;ஒரு கொலை அவர வீட்டருகில் நடந்தது பார்த்த பலரும் பல விதமாக அதை விவரிக்க தன் உழைப்பை எல்லாம் தீயிட்டு கொளுத்திவிட்டு ,”இயேசுவை புத்தரை பற்றி இவர்கள் பதிவு செய்தது உண்மை என நான் எப்படி நம்புவது ?புத்தக அறிவு மட்டும் போதாது !”எனக்கம்பீரமாக
சொல்லிவிட்டு நடந்தார்;”நல்லவர்கள எதுவும் செய்யாமல் இருப்பதே தீமையை செழிக்க வைக்கும் என சொன்ன தலைசிறந்த மனிதரின் பிறந்தநாள் இன்று