‘ராமச்சந்திர குஹா’வின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் -1


ராமச்சந்திர குஹாவுக்குத் தனிப்பட்ட அறிமுகம் தேவையில்லை. அவரின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். வாரத்துக்கு அவரின் இரண்டு கட்டுரைகளைக் குறைந்தபட்சம் படித்துவிடுவதாலும், ஏற்கனவே வெளிவந்த நூலின் கருத்துக்களின் நீட்சியாகச் சில கட்டுரைகள் அமைவதாலும் நூல் சற்றே சலிப்பைத் தந்தது. எனினும், நூல் சுவையான வாசிப்பு அனுபவமாக நிறைய இடங்களில் இருந்தது. இரு பகுதிகளாக நூல் அறிமுகம் அமையும். முதல் பாகத்தில் அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பும், இரண்டாவது பகுதியில் ஆளுமைகள் குறித்த அறிமுகங்களும் இடம்பெறும்.

Image result for ramachandra guha democrats and dissenters

காங்கிரஸ் பேரியக்கத்துக்கு அஞ்சலி:

காங்கிரஸ் இயக்கம் காந்தியின் வருகைக்கு முன்னரே இந்தியா முழுக்க இருந்து ஆளுமைகளைத் தனதாக்கி கொண்டது. அதே சமயம் நகரங்களில் அது இயங்கியது. ஆங்கிலமே அதன் அலுவல் மொழியாக இருந்தது. காந்தி காங்கிரசில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்தார். கட்சியின் அலுவல்கள் உள்ளூர் மொழிகளில் நிகழ்த்தப்பட்டன. மூன்றாவதாகப் பெண்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பாடுபட்டார். இதன் மூலம் கட்சி காயஸ்தர்கள், பனியாக்கள், பிரமணர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஆன கட்சி என்கிற அவப்பெயரை துடைக்க முயன்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கினார். காந்தி மூன்றாவது இலக்கில் பெருமளவில் வெற்றியை பெற முடியவில்லை.

விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அறுபதுகள் வரை நம்பிக்கையை, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தேசத்தை இணைக்க முயன்றது. வெறுப்பினால் ஒரு புதிய தேசத்தை அது எழுப்ப முனையவில்லை. மதச்சார்பின்மை, சகல குடிமக்களுக்கும் சம உரிமைகள் ஆகியவற்றை அது முழக்கமாகக் கொண்டிருந்தது. ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை சுயமாக, வலிமை மிக்கவையாக மாறுவதை நேருவின் காலம் உறுதி செய்தது.

Image result for CONGRESS NEHRU INDIRA RAJIV

நேருவுக்குப் பிந்தைய இந்திராவின் காலத்தில் நாகலாந்து, மிசோரம் பகுதிகளில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகம் இந்தி திணிப்பில் குமைந்து கொண்டிருந்தது. நக்சலைட் இயக்கம் உருப்பெற்று இருந்தது. பொருளாதாரம் பெருமளவு அடிவாங்கி இருந்தது. இரண்டு போர்களின் காயங்களில் இருந்து இந்தியா மீண்டிருக்கவில்லை. அறுபத்தி ஏழு தேர்தல்களில் கேரளா, தமிழகம், வங்கம், ஒரிசாவில் ஆட்சி பறிப் போயிருந்தது. பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தாவி காங்கிரஸ் ஆட்சிக்கு உலை வைக்கப்பட்டது. இந்திராவை ஊமை பொம்மையாகக் கருதி பதவிக்குக் கொண்டு வந்த சிண்டிகேட் வேறு தலைக்கு மேலே கத்தி போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்திரா அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டார். கட்சியைப் பிளந்து தனக்குத் தலைவணங்கி, துதிபாடுபவர்களை வளர்த்தார்கள். காஷ்மீரி பண்டிட்கள் நான்கு பேரை கொண்டு தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலே அவசரநிலையின் மூலம் ஜனநாயகத்தைக் கல்லறைக்கு அனுப்பினார். அவரின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டு எழுவது போலத் தோன்றினாலும் அடுத்து வந்த தேர்தலில் நாற்பது சதவிகித அளவு வாக்குகளைப் பெற்றது. சமீபத்திய தேர்தலில் அது 20% க்கும் கீழே போய்விட்டது.

காங்கிரஸ் மீண்டு எழுவதற்குப் வாய்ப்பே இல்லை என்கிறார் ராமச்சந்திர குஹா. அது படிப்படியாக மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிற அவர் நேரு குடும்பத்தை விட்டு அது விலக வேண்டும் என்று எப்பொழுதும் சொல்வதை மீண்டும் சொல்கிறார். எனினும், காங்கிரஸ் கட்சி எப்படி அதனுடைய அஸ்தமனத்துக்குப் பின்னர் நினைவுகூரப்பட வேண்டும்? இந்திய விடுதலை காலத்தில் காங்கிரஸ் பல்வேறு மத, மொழிக்குழுக்களை உள்ளடக்கி, பல கட்சிகள் பங்குகொள்ளும் தேர்தல் ஜனநாயகத்தை, மதசார்பின்மையைச் சாதித்தது. வயது வந்த எல்லாருக்கும் வாக்குரிமை தந்தது. ஜாதி, பாலின பாகுபாடுகளைப் போக்க ஆரம்பக் காலத்தில் பெருமளவில் முயன்றது. இதை மதச்சிறுபான்மையினருக்கு சம உரிமைகள், இடம் தராமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற இந்துத்வவாதிகள், சர்வாதிகார போக்குக் கொண்ட ஆட்சியை நிறுவ பார்த்த இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் தரக்கூடாது என்று இயங்கிய பிராமணியர்கள், பெண்களுக்கு உரிமைகளை மறுத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கு நடுவே இவற்றை முன்னெடுத்தார்கள். இந்தத் தேசம் முன்னைவிட ஒன்றுபட்டதாக, வன்முறை குறைந்ததாக அவர்கள் காலத்தில் மாறியது. சமூகத்தின் ஆணாதிக்கப் போக்கு குறைவதிலும், சகிப்பின்மை அறுபதுகள் வரை இருந்த காங்கிரசால் மட்டுப்படுவது நிகழ்ந்தது. சமூகத்தின் சமத்துவமின்மை, கட்டுப்பாடுகள் குறைந்தது. இவற்றைக் காங்கிரஸ் தன்னுடைய குறைகளோடு சாதித்தது. இவ்வாறே நினைவுக்கூரப்பட வேண்டும் என்கிறார்.

கருத்துரிமைக்கு எதிரான எட்டு ஆபத்துகள்:

காந்தியின் ‘இந்து சுயராஜ்யம்’ நூல் வெளிவந்த பொழுதே அதை ஆங்கிலேய அரசு இந்தியாவில் தடை செய்தது. அப்பொழுது காந்தி, ‘ஒருவர் சிந்திக்கவும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் முழு உரிமை உண்டு. அவர் வன்முறையைப் பயன்படுத்தாதவரை அவரின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.’ என்று எழுதினார். வன்முறையைத் தூண்டிவிடவும் கூடாது என்று சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் குஹா.

Image result for eight threats to freedom of expression

இந்தியாவில் கருத்துரிமைக்குப் பெரும் சவாலாக ஆங்கிலேயர் கால IPC சட்டங்களான 153, 153A, 295, 295A , 499, 500, 505 ஆகியவை திகழ்கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாகக் காந்தி ஆங்கிலேயர் சட்டம் என்கிற பெயரில் செய்யும் வன்புணர்வு என்று வர்ணித்த 124A கருத்துரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். விடுதலைக்குப் பின்னால் இடது, வலது இரண்டும் இந்திய அரசுக்கு எதிராக வன்முறை வழியைக் கைக்கொண்ட பொழுது இந்துத்துவ இதழான Organiser, இடதுசாரி இதழான Crossroads ஆகியவை தடை செய்யப்பட்டன. பிரிவினை, அகதிகள் சிக்கல், காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளுக்கு அரசு பயந்து முதலாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு நேரு, அம்பேத்கர் மீது கருத்துரிமையைக் கட்டுப்படுத்துகிற கடுமையான செயலை செய்தார்கள் என்கிறார் குஹா. ஒரு வரலாற்று ஆசிரியராக அவர் சறுக்கும் இடம் அது. முதலாவது சட்டத்திருத்தத்தில் மதவாதத்தை எதிர்கொள்ளப் பேச்சுரிமையைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தாலும், அதில் கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் செயல்பாட்டையும் இருவரும் செய்தார்கள். மேலும், முதலாவது சட்டதிருத்தத்துக்கு முன்னே பேச்சுரிமைக்குக் கட்டுப்பாடுகள் இருந்தது. எப்படி என்று விரிவாகத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: https://indconlawphil.wordpress.com/…/on-reasonable-restri…/

இந்தியாவில் நீதித்துறை மிகவும் மெத்தனமாக இயங்குவதும், நீண்டு கொண்டே போகும் வழக்குகளும் கருத்துரிமைக்குச் சவாலாக அமைகின்றன என்கிறார் குஹா. அடையாள அரசியலும் கருத்துரிமைக்கு ஆபத்தாக இருக்கிறது; Satanic Verses எனும் சல்மான் ரூஷ்டியின் நூலை வாசிக்காமல், ஈரானுக்கு முன்னால் முந்திக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு தடை செய்தது. சிவாஜியின் பிறப்பு பற்றிய பல்வேறு கதைகளைத் தொகுத்த லென் அவர்களின் நூல் வராமல் இந்துத்வவாதிகள் பார்த்துக் கொண்டார்கள். மேற்கு வங்க இடதுசாரி அரசு தஸ்லீமா நஸ்ரினின் நாவலை தடை செய்தது. கருத்துரிமையை நீதிமன்றங்கள் காக்க முயன்றாலும் காவல் துறை கைகட்டி நிற்பதும் நிகழ்கிறது. சட்டம், ஒழுங்கு முக்கியம் என்று சொல்லியபடி கருத்துரிமையைக் காவு கொடுப்பது நிகழ்கிறது. ஹுசைன்-தோஷி இருவரும் இணைந்து ஓவிய கண்காட்சி நிகழ்த்திய பொழுது அது முழுவதும் தாக்கப்படுவதைக் காவல்துறை வேடிக்கை பார்த்தது. சிவாஜி குறித்த லேனின் புத்தகத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் காவல் துறை பதிப்பகத்துக்குப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது.

அரசியல்வாதிகள் எப்படிக் கருத்துரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. குஜராத்தில் சாயஜிராவ் பல்கலையை இந்துத்வர்கள் தாக்கிய பொழுது அப்பொழுதைய மோடி அரசு வேடிக்கை பார்க்கவே செய்தது. இந்தியாவின் மிகச்சிறந்த கலை சார்ந்த படைப்பகம் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு அதிமுக, திமுக இரண்டுமே ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று குஹா சுட்டிக்காட்டுகிறார். அரசாங்க விளம்பரங்களை நம்பிக்கொண்டு இருக்கும் ஊடகங்கள் மறந்தும் எதிர்க்குரல் எழுப்புவது இல்லை. ஊடகத்தினர் எதோ ஒரு கருத்தால் காயப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு தாக்க கிளம்பும் குண்டர்கள் குழு தங்களுக்குத் தகவலை தெரிவித்ததும் அதைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தாமல் பிரேக்கிங் நியூஸ், exclusive என்று கல்லா கட்டுவதைக் கவனப்படுத்துகிறார். தாராளமயம் காலத்திற்கு முன்பு பல்வேறு இதழ்களில் தனியாகச் சுற்றுசூழலுக்கு என்று நிருபர்கள் இருந்தார்கள். அவர்களின் பொருளாதாரப் பாய்ச்சலின் பொழுது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். விளம்பரம் தரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொழுது கண்டும், காணாமல் ஊடகங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் பல்வேறு ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் வெகுசில நிறுவனங்கள் பெரும்பான்மை ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது நிகழ்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இதழ்கள் எழுதினால் டாட்டா நிறுவனம் செய்தது போல விளம்பரத்தை நிறுத்துவது நிகழ்கிறது. அரசியல் சார்புநிலைகள் எடுத்துக்கொண்டு படைப்பாளிகள் கருத்துரிமை சார்ந்தும் சார்புநிலைகள் குரல் கொடுப்பதும் கருத்துரிமைக்கு ஆபத்தாக அமைகிறது என்று சுட்டுகிறார் குஹா.

எங்கே போனது ஆழமான அரசியல் உரையாடல்?:
இந்தியாவின் அரசியலில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் தேர்தல் அரசியலை விடுத்துச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். எனினும் இரண்டாவது பொதுத் தேர்தல் காலத்தில் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒரு கட்சித்தலைவராகச் செயல்படுவதை விட தேசிய தலைவராகச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் இடதுசாரியான தனக்கு லேபர் கட்சியை நெருக்கமானது என்றாலும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கன்சர்வேடிவ் கட்சி வலிமை பெறவே விரும்புவேன். ஒரு கட்சி சகல அதிகாரத்தையும் பெறுவதை விட, விரும்பத்தகாத எதிர்கட்சிகள் கொஞ்சம் கூடுதல் வலிமை பெறுவது தவறில்லை. நாடாளுமன்ற முறை தோற்றுவிட்டது. வேறு வகையான அரசியல் முறைகள் குறித்து யோசிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டார்.

நேரு போர்க்காலங்களில் இப்படிப்பட்ட பொதுவான அரசுகள் சாத்தியம் என்றாலும், வெவ்வேறு இலக்குகள்,தொலைநோக்குகள் கொண்டவர்கள் இணைந்து செயல்படுவது சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில், அயலுறவில் உகந்ததாக இருக்காது என்றார். தேர்தலில் நிற்பது, கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் மக்களின் மனதை மாற்றுவது முதலிய முறைகளை மற்ற கட்சிகள் செய்ய எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இன்னமும் வலிமைப்படுத்துவதை எப்படித் தான் செய்ய முடியும் என்று புரியவில்லை நேரு எழுதினார். அப்படி எதிர்க்கட்சிகளைப் பாதுகாத்து, பராமரித்து வளர்க்க முனைந்தால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும். நாடாளுமன்ற முறை பல்வேறு தோல்விகளால் ஆனது. எனினும் இருப்பதில் அதுவே சிறந்த முறை என்று நேரு பதில் தந்ததோடு மாற்று முறையைப் பரிந்துரைக்கும்படி ஜெபியிடம் கேட்டார். அவர் ‘ Plea for the Reconstruction of the Indian Polity’ என்கிற கட்டுரையில் இன்றைய பஞ்சாயத்து ஆட்சிமுறைக்கான விதையை ஊன்றினார்.

Image result for NEHRU AND JAYAPRAKASH NARAYAN

இப்படிப்பட்ட தேர்ந்த உரையாடல்கள் இந்திய அரசியலில் பல்வேறு தளங்களில் அப்பொழுது நிகழ்ந்தது. ராஜ ராம் மோகன் ராய், கிறிஸ்துவ மிஷனரிகள் இந்து மதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமா என உரையாடினார்கள். மேற்கை பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று தாகூர், காந்தி உரையாடினார்கள். ஜாதியை எப்படி அற, அரசியல் தளங்களில் எதிர்கொள்வது என்று காந்தி, அம்பேத்கர் உரையாடினார்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் ஒரு தேசமாக இணைந்து இருக்க முடியுமா என்று காந்தி, ஜின்னா பேசினார்கள். பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் முதலாளிகளின் பங்கு என்ன என்று நேரு, ராஜாஜியும், அடிமைப்படுத்தியவர்களின் மொழியான ஆங்கிலத்துக்கு இந்தியாவில் என்ன இடம் என்று ராஜாஜி, லோகியாவும் உரையாடினார்கள். இப்படிப்பட்ட உரையாடல்கள் இல்லாமல் இன்றைய அரசியல் இருக்கிறது.

சீனா, பாகிஸ்தானை புரிந்து கொள்வது:
சீனாவில் மாண்டரின் மொழியும் ஹன் இனமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கே திபெத்திய மொழியோ, யூகுர் மொழியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசில் இணைந்து பணியாற்ற சீன மொழியைக் கற்பது கட்டாயம். காலனியம், ஜப்பானிய தாக்குதல், கம்யூனிச புரட்சி ஆகியவற்றால் நாட்டைப் பிணைக்க மொழியைச் சீனா பயன்படுத்துகிறது. தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போலீஸ் வந்து நிற்கும். சீனாவில் பெண்கள் இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் வேலை செய்யும் பெண்களின் சதவிகிதம் 30%, சீனாவில் 70%. இந்தியாவில் 25 வயது நிறைந்த பெண்களில் பள்ளிக்கல்வியை முழுமையாக முடித்தவர்கள் 27% சீனாவில் 54%. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் பெண்களின் பங்கு 12% அங்கே 21%. இங்கே பிரசவத்தின் பொழுது மரணிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 37/1 லட்சம், 174/1 லட்சம். இந்தியா சீனாவுக்குப் போட்டி என்று பலவற்றில் தன்னைக் கருதிக் கொள்கிறது. பெண்கள் விஷயத்தில் அதைக்கருத்தில் கொள்ளலாம்.

பழங்குடியினர் குறித்த குஹாவின் கட்டுரை பெருமளவில் இந்த உரையில் அடங்கி இருக்கிறது: https://saravananagathan.wordpress.com/…/%E0%AE%AA%E0%AE%B…/

பாகிஸ்தான் தன்னுடைய அரசியல் தலைவர்களில் ஊக்கம் தேட முடியாமல், அக்பர், பாபர் என்று பெருமை கொள்கிறது. அதற்கு மாறாக இந்தியாவில் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் உத்வேகம் தருவதற்குக் கடந்த காலங்களில் இருக்கிறார்கள். லாகூர் நகரத்தில் இந்து, சீக்கிய, இஸ்லாமிய, பார்சி கலாசாரங்கள் இணைந்து இருந்தாலும் லாகூர் குறித்த நூல்களில் இஸ்லாமிய முகத்துக்கு மட்டுமே கவனம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒற்றைப்படையான வரலாற்று எழுதியல் இந்தியாவிலும் நிகழலாம் என்கிறார் குஹா. பாகிஸ்தான் என்கிற தேசம் குறித்த முழக்கத்தை முதன்முதலில் மின்டோ பார்க்கில் ஜின்னா வைத்தார். அங்கே ஒரு கோபுரத்தை கட்ட மக்கள் நிதி தராமல் போகவே திரைப்பட நுழைவுச்சீட்டு, குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் மீது வரி போட்டு அதைப் பாகிஸ்தானிய அரசு கட்டியது.

வன்முறையை எப்படிப் போராட்டக்குழுக்கள் கைக்கொள்வைது?:

. தேர்தல், பல கட்சி ஆட்சிமுறை, வலுவான நீதித்துறை, வாழ, பணி செய்ய, சொத்து சேர்க்க குடிமக்களுக்கு உரிமை ஆகியவை எந்தளவுக்கு ஒரு ஜனநாயகத்தில் கிடைக்கின்றன என்பதைப் பொறுத்தே அது எவ்வளவு வலிமையான அரசு என்று அறிய முடியும். இவற்றோடு பல்வேறு மதங்கள் இணைந்து இருப்பது, தங்களுடைய மொழியில் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது, விரும்பியதை உண்பது, உடுத்துவது, விரும்பியவரை மணத்தல் ஆகிய அனைத்தும் ஒரு நாட்டில் சகலருக்கும் கிடைக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் உண்டு. காஷ்மீரில் தேர்தல்கள் பெரும்பாலும் நேர்மையாக நடத்தப்பட்டதில்லை. ஒடுக்குமுறைகள் மிகுந்தே இருந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை விட்டு திட்டமிட்டு விலக்கப்பட்டதோடு, தமிழ் மொழி இரண்டாம்பட்சமான இடத்தைப் பெற்றது. திட்டமிட்ட படுகொலைகள் வன்முறை பாதைக்குத் திருப்பியது. காஷ்மீரிலும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய் ஆயுத போராட்டங்கள் எழுந்தன. இலங்கையில் 2009-ல் போர் முடிந்து பல்வேறு இழப்புகளுக்குப் பிறகு நாடு அமைதிக்குத் திரும்பியிருக்கிறது.

எனினும், அங்கே பூரண உரிமைகளோ, நிம்மதியான வாழ்க்கையோ இன்னமும் சாத்தியமாக இல்லை. காஷ்மீர் எரிந்து கொண்டு இருக்கிறது. இதில் வன்முறையின் பங்கு என்ன? வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போராடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது? ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெகுமக்கள் மீது எப்பொழுதும் ஆயுதம் ஏந்தி போரிட்டது இல்லை.

இந்தியாவில் அமைதியாகத் தனிநாடு கேட்ட திராவிட இயக்கம் பின்னர்த் திமுகவால் தேர்தல் அரசியலில் கலந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றது. மாநில அளவில் ஆட்சி செய்யவும் செய்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆயுத கிளர்ச்சியை விடுத்து முழுமையான மன்னிப்பு பெற்றுத் தேர்தலில் நின்றது. வெற்றி பெற்று ஆட்சியில் இருந்ததோடு எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. அரசுகள் ஜனநாயக அமைப்புகளை வலிமைபப்டுத்த வேண்டும், நேர்மையான தேர்தல்களை நடத்த வேண்டும். சிறுபான்மையினரின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மதிக்க வேண்டும், சட்டங்கள், கொள்கைகளில் சிறுபான்மையினர் கருத்தை கணக்கில் கொள்ள வேண்டும். மாநில சுயாட்சியை வழங்குவதோடு வேலை, சுகாதாரம், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்துத் தனிப்பட்ட நேர்மையான விசாரணைகள் நிகழ்த்தி தண்டனை தரவேண்டும் என்கிறா குஹா.

Democrats and Dissenters
Ramachandra Guha
Allen Lane Publishers
பக்கங்கள்: 310
விலை: 699

ஆணி, சிலுவை, அம்மா, திராவிடம், அரசியல் – குழப்ப கொத்து பரோட்டா!


ஜெயலலிதா மக்களின் முதல்வர் பட்டத்தில் இருந்து மீண்டும் முதல்வர் பதவிக்குத் திரும்பே வேண்டும் என்று சிலுவையில் கைகளில் ஆணி அடித்துக்கொண்டது பெருத்த நகைப்பு மற்றும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டிய அதே சூழலில் சில கேள்விகளையும் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில பொதுமைப்படுத்தல்களுக்கும் பதில் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்பதிவு திராவிட இயக்கத்தை அதன் வெகுஜன அரசியலில் அதனால் பரவலாக்கப்பட்ட வாரிசு அரசியல், ஊழல், தனி மனித வழிபாடு ஆகியவற்றில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது இல்லை. அதே சமயம் போகிற போக்கில் வைக்கப்படும் வாதங்கள் முழுமையானவையா என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இப்பதிவு.

சினிமாவால் தமிழகம் சீரழிந்தது என்பது முழுக்கச் சரியான வாதமாக இருக்க முடியாது. தமிழகம் பல்வேறு துறைகளிலும், மனிதவளக் குறியீட்டிலும் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. காமராஜர் ஆட்சி என்று மட்டுமே சொல்லிப்பழகிவிட்ட நமக்கு (அந்தச் சொல்லாடல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ் கொண்டு வந்த கோஷம் என்கிற புரிதல் இல்லாமலே உச்சரிக்கிற நமக்கு) காமராஜரை தமிழக மக்கள் கைவிட்டது போலப் பேசுகிறோம். காமராஜர் தான் சீனப்போருக்கு பின்னர் விழுந்திருந்த நேருவின் இமேஜை சரிக்கட்டவும், நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் கட்சி பெற்ற தோல்வியால் துணுக்குற்றும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசியலுக்குள் புகுந்தார்.

தமிழகத்தில் உணவுப்பஞ்சம் பக்தவத்சலத்தின் ஆட்சிக்காலத்தில் பெருமளவில் ஏற்பட்டது. காமராஜர் கொண்டு வந்த சாஸ்திரி இந்தியை பந்த்தின் மூலம் திணித்த பொழுது இங்கே ஒத்துழைப்பையே சத்தியமூர்த்தி நல்கினார். பல நூறு பிள்ளைகளின் பிணங்கள் விழுந்தன, அரசு இயந்திரம் சுட்டுத்தள்ளியும், தீக்குளிப்புகளுக்குப் பிறகும் அரசு இறங்கி வராத சூழலில் மத்திய அமைச்சர்களின் பதவி விலகலே அதைத் தடுத்தது. நிர்வாகச் சீர்கேடுகள், உணவுப்பஞ்சம், மக்களைக் கொன்று தீர்த்த இந்தித்திணிப்பு இத்தனையும் காங்கிரசை மண்ணைக்கவ்வ செய்தன. “படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்.” என்று காமராஜர் சொன்னாரே அன்றி நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிற தொனியில் கட்சி பெரும்பாலும் செயல்படவே இல்லை.

அடுத்தது அரசியலுக்குள் சினிமாவைக் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தில் துவங்கிய ஒன்று அல்ல. தீரர் சத்தியமூர்த்தித் தான் அதைப் பெருமளவில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் முன்னெடுத்தவர். அதே சமயம் அவர் விடுதலைப் போருக்காக அப்படிச் செயல்பட்டார் என்று வாதிட எண்ணினாலும் மன்னிக்க. அவர் தேர்தல் அரசியலில் நீதிக்கட்சியைப் போல ஈடுபடவும் அந்த ஊடகத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அவர்கள் பாணியில் கிளம்பிய திராவிட இயக்கம் தன்னுடைய பிரச்சாரத்தை அதைக்கொண்டு கச்சிதமாகச் செய்தது.

வாரிசு அரசியல் என்பதன் சுவடுகள் இந்திராவால் எழுபதுகளில் மத்தியில் சஞ்சய் காந்தியை சூப்பர் பிரதமர் ஆக்கியதில் துவங்கியது. அண்ணா தனக்குப் பின்னர் இவர் தான் வாரிசு என்று யாரையும் குறிப்பிடவில்லை. வாரிசு அரசியலை எம்.ஜி.ஆர். எதிர்ப்பு என்பதை முன்னெடுத்த காலத்தில் மு.க.முத்துவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை தவிர்த்து பெரிய அளவில் கருணாநிதி அக்காலத்தில் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவரால் ஜனநாயகம் போனது என்று கண்ணீர் வடிக்கிற பலரும் உட்கட்சி ஜனநாயகத்தைப் பெருமளவில் தொண்ணூறுகள் வரை காப்பாற்றியவர் அவரே என்பதையும் இணைத்தே பேசவேண்டும். இந்திராவோ காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகத்தை இதே காலங்களில் துடைத்து எறிந்திருந்தார்.

நாயக வழிபாடு என்பதும், சினிமா நட்சத்திரங்களைக் கொண்டாடித் தீர்த்துத் தமிழகம் முட்டாளாகத் திகழ்கிறது என்று பலர் பேசக்கேட்டிருக்கலாம். எம்.ஜி.ஆரை ஓயாமல் தமிழகம் முதல்வராக அரியணை ஏற்றியது என்பதை மட்டும் வைத்துப் பார்த்து இந்த வாதம் நியாயம் எனத்தோன்றும். அவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ந்ததும், அதிகாரிகள் நடத்திய ஆட்சியாக அது திகழ்ந்ததும் உண்மை. ஊழல் தலையெடுக்க ஆரம்பித்து இருந்த கருணாநிதியின் ஆட்சியின் தொடர்ச்சி போலவே அவரின் ஆட்சியும் அமைந்தது. யாரெல்லாம் மு.க.வின் ஆட்சியில் தவறு செய்தார்கள் என்று அவர் சொன்னாரோ அவர்களையே தன்னுடைய அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார். . அதே சமயம் அடித்தட்டு மக்களைப் பற்றியும் கவலை கொள்கிற மனம் அவருக்கு இருந்தது. சமூக நலத்திட்டங்களை அவர் முன்னெடுக்கவே செய்தார். கொள்கை ரீதியான எதிர்ப்பு என்பது தனிமனித எதிர்ப்பாக இவர்கள் காலத்தில் ஆனது.

தமிழகம் சினிமா நாயகர்களை எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பின்னர்க் கொண்டாடுகிறதா என்கிற கேள்வியைத் தீவிரமாக எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பின்னர்க் கட்சி ஆரம்பித்த பல நடிகர்களை முகவரி இல்லாமல் மாற்றியிருக்கிறார்கள். ‘சூப்பர் ஸ்டார்’ என்று புகழப்படும் நபரின் குரலால் ஆட்சியைப் பிடித்தது திமுக என்கிற பிம்பமும் உண்டு. அப்பொழுது ஆட்சிக்கு எதிராக வீசிய எதிர்ப்பலையில் முதல்வரே தோற்றுப்போன பொழுது அதற்கு அவரின் வாய்ஸ் தான் முக்கியக் காரணம் என்றால் சிரிக்கவே வேண்டியிருக்கிறது. பின்னர் அவர் குரல் கொடுத்தும் நாற்பதிலும் வாக்காளர்கள் ஏன் அவர் ஆதரித்த கூட்டணியைத் தோற்கடித்தார்கள்? விஜயகாந்த்தை மாற்றாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கை உண்டு. அதே சமயம் அவருக்கு மகத்தான வெற்றியை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் தூக்கித்தரவில்லை.

ஆந்திராவில் என்.டி.ஆர். தொடர்ந்து திடீர் திடீரென்று ஆந்திர முதல்வர்கள் மாற்றப்பட்டது, ராஜீவ் காந்தியால் ஒரு ஆந்திர முதல்வர் அவமதிக்கப்பட்டது அனைத்தையும் கொண்டு முன்னெடுத்த ‘அடையாள அரசியல்’ அங்கே அவருக்கு வெற்றியைத் தரவே செய்தது. ஆந்திர மக்கள் சமீபத்தில் சிரஞ்சீவிக்கும் குறிப்பிடத் தகுந்த வெற்றியை தந்தார்கள். அவர்களுக்கும் அறிவே இல்லை என்று சொல்லிவிடலாம் இல்லையா? கர்நாடகாவில் ‘கோகக் போராட்டங்கள்’ என்று கன்னடத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்ட மொழிப் போராட்டங்கள் எண்பதுகளின் இறுதியில் நடந்த பொழுது அதற்கு ஒரு வெகுஜன ஈர்ப்பை ராஜ்குமாரின் வாய்ஸ் கொடுத்தது. அரசு அந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளைப் பெருமளவில் ஏற்கிற அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்தது. அங்கே சினிமா நடிகர்கள் தேர்தலில் நின்று வெல்வதும் நடைபெறுகிறது. சினிமாக்கவர்ச்சி தமிழகத்தில் உண்டு என்பதை மறுக்க முடியாது என்றாலும் பொதுப்படையாக அது என்னவோ தமிழகத்தின் பண்பு மட்டுமே என்று முத்திரைக் குத்துவது சரி கிடையாது. ஒழுங்கான மாற்றுகள் எதுவும் கண்ணில் தென்படாத பொழுது இருப்பவர்களில் குறைந்த தீமை எதுவென்றே தேர்வு செய்ய வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

ஊழலில் தெற்கு மட்டுமே திளைத்து நிற்பது போன்ற பிம்பமும் உண்டாக்கப்படுகிறது. இதில் வடக்கு ஒன்றும் சளைத்தது இல்லை என்பதும், பல முதல்வர்களை ஆட்சியை விட்டே 75 களில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அனுப்பும் கிளர்ச்சிகள் குஜராத், பீகாரில் நடந்தன என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்திரா ஆட்சிக்காலத்தில் ஊழல்கள் பலம் பெற ஆரம்பித்தன என்றால் மொரார்ஜி தேசாயின் மகன் செய்த முறைகேடுகள் ஜனதா ஆட்சியில் சந்தி சிரித்தன. ராஜீவின் ஆட்சியைப் பற்றி உலகறியும். நரசிம்ம ராவின் ஆட்சியின் ஊழல்கள் சர்க்கரை ஊழல், அரசுக் குடியிருப்பு ஊழல், ஹவாலா ஊழல் என்று நீண்டன.

அந்தந்த பகுதியின் விருப்பங்கள், கலாசார, மொழிப் பின்புலங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இங்கே ஆட்சியைப் பிடிக்க எண்ணிக்கொண்டு செயல்படும் தேசியக்கட்சிகள் பெருத்த தோல்வியையே சந்தித்து வருகிறார்கள். பிரிவினைவாதிகள் என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்படும் தமிழகம் பல்வேறு சமயங்களில் அநியாயங்கள் இழைக்கப்பட்டாலும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் மிசோரம்,நாகலாந்து, பஞ்சாப், காஷ்மீர் போல ஈடுபடவில்லை என்பதையும் இணைத்து கவனிக்க வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை. அது ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. வாரிசு அரசியலாக ஒரு கட்சியும், ஓரிரு குடும்பங்களில் பீடமாக இன்னொரு கட்சியும் மாறியிருக்கின்றன என்பதையோ, தனி மனித வழிபாட்டை நிகழ்த்தும் நபர்களைக் கண்டித்துக் கூடப் பேசாமல் ஊக்குவிக்கிற தொனியில் தான் இரண்டு முதல்வர்களும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கட்டாயம் கவலையோடு அணுகவேண்டும். அதே சமயம், பொதுமைப்படுத்தல்கள் மூலம் விவாதத்தின் நடுவே அவரவரின் சார்பு, முன்முடிவுகள் ஆகியவற்றை முன்னிறுத்துவதைக் கவனத்தோடு அணுக வேண்டும். கடந்த காலத்தில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதோடு, எதிரணியும் என்னென்ன தவறுகள் செய்தது என்கிற புரிதல் அவசியம். அவரவரின் கருத்துக்களை மட்டுமே நம்புவதைவிட வரலாற்றை நோக்கி நாமே தேடலை நிகழ்த்தல் அவசியம்

நேருவின் ஆட்சி-பதியம் போட்ட 18 ஆண்டுகள் !


நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :

தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.

பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.

சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.

காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.

காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.

இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.

மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,

முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.

சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.

அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.

சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115

புத்தகத்தை வாங்க :
http://www.wecanshopping.com/products/நேருவின்-ஆட்சி.html
—————————————————————————————————

இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.

ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.

அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.

இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.

சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.

‘நான் துணிந்தவள் !’-கிரண் பேடி !கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.

நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார். போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.

ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாக
செய்தார். பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.

பயங்கரமான ஆட்கள் நிறைந்த இடமாக கருதப்படும் திஹார் சிறையின் தலைமைப்பொறுப்பு இவர் வசம் வந்த பொழுது முடிந்தார் இவர் என்றே அனைவரும் எண்ணினார்கள். குற்றவாளிகளை மனிதர்களாக பார்த்தார் இவர். அங்கே பத்து சதவிகிதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதையும் கவனித்தார். அவர்களுக்கு என்று ஜனநாயக பிரிவுகளை உருவாக்கினார். யோகா,போதை பழக்கத்தில் இருந்து விடுதலை,விளையாட,கல்வி கற்க ,உற்சாகமாக செயலாற்ற உதவிகள் எல்லாமும் செய்தார். சிறைக்குளே வங்கியும் துவங்கி கைதிகளை ஊக்குவித்தார். டெல்லியின் மாவட்டங்களில் பொறுப்பில் இருந்த பொழுது நீல மற்றும் வெள்ளை அறைகளை அமைத்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் நடவடிக்கைகளையும் எடுத்தார் அவர்.

நான் துணிந்தவள் என்று தலைப்பிடப்பட்ட அவரின் சுயசரிதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று. துணிந்து, நிமிர்ந்து நின்று வானைத்தொட முயலும் எல்லா பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் கிரண் பேடி ஒரு முன்மாதிரியே.

சிவந்த சீக்கிய தேசம்-தடதடக்கும் வரலாறு !


ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன. 

மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவிகளில் போதிய இடமில்லை” என்பதையும் இணைத்து போராடினார்கள். 

ஆனால்,அப்பொழுதைய சூழலை ஆய்ந்த பல்தேவ் ராஜ் நய்யார் எனும் சமூகவியல் அறிஞர் இந்திய ராணுவத்தில் இருபது சதவிகிதம் சீக்கியர்களே இருந்தார்கள்,மேலும் தாங்கள் இந்திய மக்கள் தொகையில் இருந்த அளவுக்கு இரு மடங்கு அதிகமாக அரசாங்கப்பதவிகளில் சீக்கியர்கள் நிறைந்து இருந்தார்கள் என்கிறார். பின்னர் என்ன காரணம் என்றால்,தொடர்ந்து தேர்தல்களில் காங்கிரஸ் அங்கே வென்று கொண்டிருந்தது.

கெய்ரோன் கோலோச்சி கொண்டிருந்தார் ; வளர்ச்சி,கல்வி,விவசாயம் என்று கலக்கி எடுத்தார். எதிர்ப்பு குரல் எழுந்தால் தூக்கி உள்ளே போடுவதை சாவகசமாக செய்தார். கூடவே குடும்பத்துக்கு என்று சொத்தும் சேர்த்துக்கொண்டார். நேரு விசாரிக்க வேண்டும் அவரை என்ற வேண்டுகோள் அழுத்தி வைக்கப்பட்டதால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விசாரணைக்குழு ஒன்று அமைப்பதோடு அமைதி காத்தார். என்ன ஆனாலும் கெய்ரோன் மற்றும் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தார்கள். 

இந்தி மட்டும் போதும் என்று பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்த இந்துக்கள் சொன்னார்கள்,குருமுகி வரிவடிவம் கொண்ட பஞ்சாபியும் தேவை என்று சீக்கியர்கள் முழங்கினார்கள்,தாரா சிங்குக்கு பதிலாக பதே சிங் சிரோன்மணி அகாலிதள தலைவர் ஆகியிருந்தார்; மத ரீதியான தனி மாநில கோரிக்கையை மொழிரீதியான கோரிக்கையாக மாற்றியிருந்தார். காங்க்ரா என்கிற பகுதி மக்கள் ஹிமாச்சல பிரேதசத்தில் இணைய விரும்பினார்கள். இந்தி பேசும் மக்களுக்கு ஹரியானா,பஞ்சாபி பேசியவர்களுக்கு பஞ்சாப் மற்றும் காங்க்ரா ஹிமாசல பிரேதசம் போய் சேரட்டும் என்று 1966-ல் இந்திரா காந்தி பிரதமரானதும் பிரித்து தந்தார். 

1972 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம் வென்றது. அடுத்த தேர்தலில் தோற்றதும் மீண்டும் சிக்கலை கையில் எடுத்தார்கள்.அனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதில் பாதுகாப்பு,அயல்நாட்டு உறவு மற்றும் நாணயம் ஆகியவற்றை தவிர மற்ற எல்லாவற்றையும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் என்கிற சுயாட்சி கோருகிற தீர்மானம் எழுந்திருந்தது. கூடவே,தீர்மானத்தின் முதல் பக்கத்தில் தனி நாடு கிடைத்தாலும் பரவாயில்லை என்றொரு வரியை அமைதியாக சேர்த்திருந்தார்கள். 

எமெர்ஜென்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பெருவெற்றியோடு சிரோன்மணி அகாலிதளம் பிடித்தது. நடுவே காலிஸ்தான் கோரிக்கை வேறு மீண்டும் துளிர்த்து இருந்தது. அறுபது வருடங்களுக்கு முன்னர் மின்டோ-மார்லி முன்னர் எழுப்பப்பட்ட கோரிக்கை அது. 

1971-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் என்கிற நாடு பஞ்சாபியர்களுக்கு உருவாக உள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம் கொடுத்தார். இதற்கு பாகிஸ்தான் வேறு ஆசீர்வாதம் செய்திருந்தது. ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்திராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். அவரின் தளபதி பல்பீர் சிங் சந்து பஞ்சாபில் இருந்தவாறு அதே அறிவிப்பை வெளியிட்டார். கூடவே தனி நாணயம் மற்றும் ஸ்டாம்புகள் வெளிவந்தன. இந்திரா அரசு கண்டும்,காணமல் இருந்தது. 

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்ததும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கலைப்பு நிகழ்த்தி இந்திரா அரசு தேர்தல் நடத்தியது. அதற்கு அது பிந்த்ரன்வாலேவை பஞ்சாபில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது. 

குர்பச்சன் சிங் என்பவர் நிரங்காரிகள் என்கிற மதப்பிரிவை துவங்கி சீக்கிய மதத்தை சுத்தம் செய்வதாக சொல்லி இந்து மதத்தோடு இணைந்து விட வேண்டும் என்று அவர் முழங்கினார். முடியை,தாடியை மழித்து விட்டு,டர்பனை கழட்டிவிட்டு சுத்தமாக அவர் அழைக்க அதை எதிர்த்து அகண்ட கீர்த்தனி என்கிற அமைப்புன் களமிறங்கியது. அதன் தலைவர் ஃபௌஜா சிங் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மோதலில் இறந்து போனார்கள். கோர்ட் குர்பச்சன் சிங் நிரபராதி என்று விடுவித்தது. 

இறந்து போன ஃபௌஜா சிங்கின் மனைவி களத்தில் குதித்தார் அவருக்கு ஆதரவாக சீக்கியர்கள் சுத்தமாக வேண்டும்,இந்தியாவில் இந்துக்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று முழங்கிய பிந்த்ரன்வாலே களத்துக்கு வந்தார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தோற்கடிக்க வேண்டிய சூழலில் இந்திரா அவரோடு கைகோர்த்து மேடையேறினார். மூன்று தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவாக பிந்த்ரன்வாலே பிரச்சாரம் செய்தார். தீவிரப்போக்கை கைக்கொள்ள இளைஞர்களை அழைத்தார் ; தனிப்பிரிவு நான்கள் என்பதோடு காலிஸ்தான் நோக்கியும் பயணம் நகரும் என்பதை கோடிட்டு காட்டினார். 

அங்கே இருந்த பிந்த்ரான்வாலேவின் உடனிருந்தவர்கள் கொலைகள் செய்ய அஞ்சவே இல்லை. இவர் பேச்சுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பதினைந்து பேர் இறந்து போனார்கள் அவரின் தீவிரவாதப்போக்கை கண்டித்து எழுதிய பஞ்சாப் கேசரி ஆசிரியர் ஜக்ஜித் நாராயண் கொல்லப்பட்டார். அதற்கு காரணம் பிந்த்ரன்வாலே என்று எல்லாருக்கும் தெரியும். களம் புகுந்தது போலீஸ். அவரைக்கைது செய்யாமல் கொஞ்சம் இருங்கள் என்று ஹரியானா வரை போன போலீசுக்கு உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் உத்தரவு போட்டார். நானே இரண்டு வாரத்தில் சரண்டர் ஆகிறேன் என்று சொன்ன பிந்த்ரான்வாலேவை கைது செய்ய போலீஸ் போனதும் கலவரம் உண்டாகி அவரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் பதினோரு போலீஸ்காரர்கள் பலியானார்கள். அடுத்து ஒரு விமானம் கடத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது ; கோர்ட் போதிய ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டார் என்று விடுதலை செய்தது. 

அதுவரை அவரை வெறுத்த சீக்கியர்கள் மத்தியில் கூட அவர் நாயகர் ஆனார். சிரோன்மணி அகாலிதள தலைவர் லோங்கோவால் பொற்கோயில் வந்து தங்கிக்கொள்ள அவருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே சிரோன்மணி கட்சியினர் 83 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தங்களின் சட்டசபை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தார்கள். பிந்த்ரன்வாலேவும் கிளம்பினார். காலிஸ்தான் கோரிக்கைக்கு அமெரிக்கா,கனடா மற்றும் இங்கிலாந்தில் இருந்து நிதி குவிந்தது ஒரு புறம். எக்கச்சக்க ஆயுதங்களோடு உள்ளே காத்துக்கொண்டு இருந்தார்கள். காங்கிரஸ் கூட்டாளி பிந்த்ரன்வாலே இப்பொழுது கட்சி மாறியிருந்தார். 

பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்திரா முயற்சித்தார். இரண்டு நதிகளை பிரிவினையின் பொழுது இழந்து விட்டோம்,இருக்கிற மூன்று நதிகளை மற்ற இரு மாநிலங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம் அதெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை,ஹரியானா மற்றும் பஞ்சாபுக்கு பொதுவாக இருக்கும் சந்திகர் எங்களுக்கு மட்டும் வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொடுத்தார்கள். வன்முறையும் எகிறிக்கொண்டு இருந்தது. இந்துக்கள் மீதும்,எதிர்த்த சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன,பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு இடங்களில் கொள்ளை நடைபெற்றது. பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு அப்பாவி மக்கள் சுடப்பட்டு இறந்தார்கள் ; பயம் பஞ்சாபை பீடித்தது. 

“காங்கிரசின் ஆட்சி முகலாயர் ஆட்சியை போன்றது ; நாற்பது சீக்கியர்களால் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்ள முடிந்தது என்றால் நம்மால் முடியாதா ? அமைதி என்பதே நமக்கு இங்கே சாத்தியமில்லை. தனி நாடே இலக்கு “,என்றும்,”இந்துக்கள் உங்களை தேடிக்கொண்டு வந்தால் அவர்களின் தலைகளை டிவி ஆண்டெனாக்களை கொண்டு நசுக்குங்கள் !” என்றெல்லாம் பேசி பேசி வன்முறையை தூண்டிவிட்டார். இந்திரா எப்படியும் அமைதியாக முடித்துக்கொள்ளலாம் என்று இறுதிவரை பேச்சுவார்த்தைகள் நடத்திப்பார்த்தார். எதுவும் சாத்தியமில்லை என்று சொல்வது போல டி.ஐ.ஜி கொல்லப்பட்டார். ஜனாதிபதி பொற்கோயிலுக்கு போன பொழுது அவர் காதை உரசிக்கொண்டு குண்டு சென்றது. ராணுவம் நுழையலாம் என்று சிக்னல் தரப்பட்டது. ஜூன் மூன்றில் பொற்கோயில் சுற்றி வளைக்கப்படுவதற்கு முன்னர் லோங்கோவால் நிலவரி,தண்ணீர் மற்றும் மின்சார் பில்கள் கட்ட மாட்டோம்,மாநிலத்தை விட்டு தானியங்களை அனுப்பமாட்டோம் என்றெல்லாம் முழங்கினார். ஒரே நாளில் வேலை முடிந்துவிடும் என்று மிஷின் கன்களோடு போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிடைத்த இடைவெளியில் எல்லாம் துப்பாக்கிகள் நீட்டிக்கொண்டு இருந்தன. மறைவிடங்கள்,சுட்டிவிட்டு தப்பிக்கும் வழிகள் என்று அனைத்தும் தெளிவாக இருந்தது. கூடவே குறுகிய இடைவெளிகளில் புகுந்து தாக்கிவிட்டு தண்ணி காட்டிகொண்டு இருந்தார்கள். எறிகுண்டுகள் வேறு பயமுறுத்தின. பஞ்சாபியான பிரார் வழிகாட்டிக்கொண்டு இருந்தார் எந்த சுபேக் சிங்குடன் இணைந்து வங்கதேச விடுதலையை சாதித்தாரோ அவர் எதிர் முகாமில் தலைமை தாங்கிக்கொண்டு இருந்தார். 

துப்பாக்கிகள் போதாது என்று வெகு செக்கிரம் புரிந்தது. டேங்குகள் தேவை என்று டெல்லிக்கு சொல்லப்பட்டது. பதிமூன்று டேங்குகள் வந்து சேர்ந்தன. அஅவர்களும் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். இறுதியில் நான்கு அதிகாரிகள்,79 வீரர்கள் மற்றும் 492 தீவிரவாதிகள் இறந்து போனதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் சொல்லின. ஆனால் சில ஆயிரங்களில் இருக்கும் இறப்புகள் என்பது பொதுவான கருத்து.. 

கூடவே,ஹர்மீந்தர் சாஹிப் மற்றும் அகால் தக்த் என்கிற சீக்கியர்களின் புனிதமான பீடங்கள் சேதப்படுத்தப்பட்டு அவர்களின் புனித ஆலயமான பொற்கோயில் ரத்த நிலமாக மாறி ஆறாவடுவை உண்டாக்கி இருந்தது. அரசியல் பகடையில் முன்னேறி மேலே போன பிந்த்ரன்வாலே கூடவே மாணவர் அமைப்பின் தலைவர் அம்ரீக் சிங் இறந்து கிடந்தார்கள். சுபேக் சிங் வாக்கி டாக்கியோடு இறந்து கிடந்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் முடிந்தது. அப்பொழுதைக்கு சிக்கல் ஓய்ந்தது போல இருந்தாலும் அமைதி திரும்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டது. நடுவில் பின்விளைவுகளாக இந்திரா காந்தியின் படுகொலை,சீக்கியர்கள் மீதான கலவரங்கள்,படுகொலைகள்  ஆகியன காத்திருந்தன. அரசியல் ஆடுகளத்தில் உயிர்கள் எத்தனை மலிவாக போயின என்பதன் நிகழ்கால உதாரணம் பஞ்சாப் சிக்கல்

நான் சொன்னது நடந்திடுச்சா- கேட்கிறார் நாஸ்ட்ரடமஸ்


நாஸ்ட்ரடமஸ் பிறந்த நாள் இன்று. இப்படி ஆரம்பிப்பதிலேயே அவரின் வாழ்க்கையின் சுவாரசியம் துவங்கி விடுகிறது. அவர் இன்னுமொரு ஏழு நாட்கள் கழித்து பிறந்தார் காலண்டர் குழப்பம் என்று சொல்வதில் இருந்து அவர் சொன்னவை வரை எல்லாமே செம த்ரில் தருபவை. நாளைக்கு என்ன நடக்கும் என்று சொல்கிற ஜோசியர்கள் பலபேரை பார்த்திருப்போம். பல நூறு வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததைப்போல சொன்னவர் தான் இவர்

பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர் இவர். கலை,மருத்துவம் என்று எதெதையோ படிக்கப்போய் எதையும் முழுதாக முடிக்காமல் வெளியேறினார் இவர். மருத்துவம் படிக்கிற காலத்தில் சொந்தமாக மருந்து தயாரித்தார் என்று சொல்லி வெளியேற்றினார்கள். பின்னர் அவர் வெற்றிகரமான மருத்துவரானார். அவர் கொடுத்த ரோஸ் மாத்திரை ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியது.

எகிப்தின் பிரமிடுகள் பற்றிய ரகசியங்கள்,ரசவாதம்,யூத கிறிஸ்துவ,இஸ்லாம் மதங்களின் மாந்த்ரீக வேலைகள்,கப்பாலா என்கிற ஆருட முறை என்று பலவற்றை தேடிக்கற்றுக்கொண்டார் இவர். தீர்க்கதரிசனங்கள் என்கிற நூலை எழுதினார் அவர். அதில் பிக்காடர் எனும் பதினான்காம் நூற்றாண்டு பிரெஞ்சு மொழி பாணியில் சங்கேத மொழியில் பாடல்கள் எழுதி வைத்துவிட்டுப்போனார் இவர்.

ஒருநாள் பிரபு ஒருவரின் வீட்டில் சாப்பிட போயிருந்தார் இவர். அவரின் வீட்டில் வெள்ளை மற்றும் கருப்பு பன்றிகளில் எதை இன்று இரவு உண்போம் என்று கேட்டார் செல்வந்தர். “கருப்பு பன்றி தான் இரவு உணவுக்கு ! வெள்ளை பன்றியை ஓநாய் தின்று விடும் !” என்றார் நாஸ்ட்ரடமஸ். செல்வந்தர் வெள்ளைப் பன்றியை சமைக்க சொன்னார். இரவு உணவின் பொழுது “எப்படி இருக்கிறது வெள்ளை பன்றி ?” என்று செல்வந்தர் கேட்ட பொழுது வேலையாள் ,”வெள்ளை பன்றி மாமிசத்தை நாய் தின்று விட்டது. கருப்பு பன்றியை தான் உண்கிறீர்கள் ” என்றான். அந்த நாயின் பெற்றோரில் ஒன்று ஓநாய் !

தன்னுடைய மகன் ஜோசியத்தால் இறப்பான் என்று சரியாக சொன்னார் அவர். இன்று ஊர்ப்பற்றிக்கொள்ளும் என்று அவன் சொன்னது நடக்காமல் போகவே மக்கள் அவனை நெருங்கி வந்தார்கள். கம்பளியில் தன்னை சுற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டான் அவன். ஊரும் பற்றி எரிந்தது,அவனும் இறந்து போனான்.

பிரான்ஸ் அரசி அவரைப்பார்க்க அழைத்திருந்தார். அவரிடம் ராஜ வம்சத்தைப்பற்றிய தன்னுடைய ஆரூடத்தை சொன்னார் அவர். ஏழு பிள்ளைகளும் அரசு ஆள்வார்கள் ; கடைசிப்பிள்ளை மட்டும் நிலையான ஆட்சியை தருவான் என்று துல்லியமாக சொன்னார் நாஸ்ட்ரடமஸ் . அவர் அங்கே சொல்லாமல் முன்னரே அவரின் தீர்க்கதரிசனங்கள் நூலில் எழுதியிருந்தது ராணியின் கணவரின் மரணம் பற்றி ! தங்கக்கூண்டில் கண்கள் குத்தப்பட்டு இறப்பார் என்று அவர் எழுதியிருந்த மாதிரியே வீர விளையாட்டின் பொழுது கண்கள் குத்தப்பட்டு அரசர் மரணமடைந்தார்.

நாஸ்ட்ரடஸ் தான் இறக்கிற பொழுது கூடவே ரகசிய ஆவணங்கள் சிலவற்றை தன்னோடு சேர்த்து புதைக்க சொன்னார். அதை சர்ச் தோண்டி பார்த்தது. அவரின் கழுத்தில் 1700 என்று தோண்டி பார்த்த வருடம் கச்சிதமாக குறிக்கப்பட்டு இருக்கவே அப்படியே விட்டுவிட்டார்கள். பிரெஞ்சு புரட்சி சமயத்தில் நாஸ்ட்ரடமஸ் மண்டை ஓட்டில் மது ஊற்றி குடித்தால் ஆரூடம் சொல்லும் திறன் வரும் என்று நம்பிய வீரர் கூட்டம் ஒன்று அவரின் கல்லறையை நோண்டியது. அதனுள் “நான் இறந்த நூறாவது ஆண்டில் என் கல்லறையை தோண்டி எடுக்கும் இழிவானவன் மரணமடைவான் !” என்று எழுதியிருந்தார் நாஸ்ட்ரடமஸ். அதைப்படித்து கொண்டிருக்கும் பொழுதே தோட்டா பாய்ந்து இறந்து போனான் அந்த வீரன்

‘இத்தாலியில் பிறக்கும் பேரரசன் பேரிழப்பு தருவான் ; அவனின் சேர்க்கை அவனின் கூட்டு அவனை மன்னன் என்று சொல்லாது கசாப்பு கடைக்காரன் என்று எண்ண வைக்கும்” என்று அவர் நெப்போலியனை பற்றி முன்னமே சொல்லிவிட்டார்.லண்டனில் ஏற்பட்ட பெருந்தீ விபத்தை வருடத்தோடு துல்லியமாக நூறு வருடங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தார் நாஸ்ட்ரடமஸ். பிரெஞ்சு புரட்சியை ,”இளவரசர்களும்,பிரபுக்களும் தலையில்லா மூடர்கள் ஆக்கப்படுவார்கள் அடக்கப்பட்டவர்களால் !” என்று பாடி சென்றிருக்கிறார்

Napoleón y Hitler

லூயிஸ் பாஸ்டரின் பெயரோடு அவரை கடவுள் போல மறைக்கப்பட்ட ஒன்றை கண்டுபிடித்ததால் மக்கள் கொண்டாடுவார்கள் என்று முன்னூறு வருடங்களுக்கு முன்னரே பதிந்து விட்டுப்போய் இருக்கிறார். டயானாவின் மரணதைப்பற்றியும் புள்ளி வைத்தது மாதிரி பதிந்து விட்டார் அவர். அவரின் இறுதிக்காதலன் நபியின் துணைப்பெயரை கொண்டிருப்பான் என்றும் சொன்னார். அப்படியே நடந்தது. அந்த காதலனின் பெயர் முகமது அல் பயத் !

“ஏழைகளின் பிள்ளையொன்று மேற்கு ஐரோப்பாவின் ஆழங்களில் இருந்து எழும் ! நாவால் பெரும்படையை பேச்சால் இழுத்து கிழக்கில் புகழ் பெறுவான் அவன் !” என்று ஹிட்லரை பற்றி அவர் எழுதி இருந்தார். அதை கூடுதலாக கொஞ்சம் மசாலா அயிட்டங்கள் தடவி பிரபலம் ஆக்கினான் ஹிட்லர். சர்ச்சில் அவனின் வீழ்ச்சியைப்பற்றி நாஸ்ட்ரடமஸ் எழுதி இருந்ததை அச்சடித்து விநியோகித்து பதிலடி தந்தார்.

“இரு நகரங்களின் வாசலருகே இருபெரும் ஆயுத தாக்குதல் நிகழும் ! பஞ்சம்,கொடிய நோய்கள் வாளின் முனையில் கோரங்கள் அரங்கேறும் ! மக்கள் இறைவனிடம் உதவிக்கு இறைஞ்சி அழுவார்கள் !” என்று ஹிரோஷிமா,நாகசாகி அணுகுண்டு வெடிப்பு நடப்பதை எச்சரித்து விட்டார் நாஸ்ட்ரடமஸ். “ஆயிரம் வருடங்கள் முடியும் காலத்துக்கு சற்று முன்னர் எழில் வரும் ஓராண்டில் விளையாட்டில் படுகொலைகள் நிகழும் ! கல்லறையில் இருந்து வருவார்கள் புதைக்கப்பட்டவர்கள் !” என்று முனிச்சில் நடந்த ஒலிம்பிக் படுகொலைகளை ஆருடம் சொல்லியிருக்கிறார்

ஜான் கென்னடியின் கொலை செய்யப்படக்கூடும் என்று முன்னரே உளவுத்துறை எச்சரிக்கும் அவர் இருந்தாலும் சுடப்படுவார் அவரின் சகோதரரும் இறப்பார் என்றும் பாடலில் பாடிவிட்டார். 3797 இல் உலகம் அழியும் என்று வேறு அடித்துச்சொல்லிவிட்டு போயிருக்கிறார் நாஸ்ட்ரடமஸ்.

இந்தியாவைப்பற்றி ஏதேனும் தீர்க்கதரிசனம் உண்டா நாஸ்ட்ரடமஸ் அவர்களிடம் ? உண்டு ! இந்திரா,ராஜீவ்,ஜான்சி ராணி,போஸ் என்று நீளும் பட்டியல் அது.
“துரத்தப்பட்ட ராஜ்யத்தை மீண்டும் பெறுவாள் அவள் ; சதியாளர்கள் எதிரிகள் ஆவர் ! மூன்று மற்றும் எழில் அவளுக்கு மரணம் நிச்சயம் !” என்று எழுதியிருக்கிறார். இந்திரா 70-3 = 67 வயதில் இறந்தார் என்பதை கொண்டும,எமேர்ஜென்சியால் ஆட்சியை இழந்து மீண்டும் அவர் வந்தார் என்பதையும் பொருத்திக்கொள்ளுங்கள்.

“தான் தோற்பதை நேரில் காண்பாள் ! ஆணின் வீரத்தோடு போரிடுவாள் ; குதிரையில் ஏறி தனியே நதியை கடப்பாள். இரும்பு தொடர்ந்திட நம்பிக்கைகளை பொய்யாக்கிடுவாள் !” என்று ஜான்சி ராணி பெண் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டும் என்பதை உடைத்து போரிட்டு குதிரையில் தப்பி போனதை நேரில் பார்த்தது போல குறிக்கிறார்.

 

எண்ணற்றோரின் தலைவன் வெவ்வேறு பண்புகள் உள்ள நாட்டில்,மொழியில் வீரர்களை உத்வேகப்படுத்துவான் . நீரில் தப்பி போவான் ” என்று போஸின் வாழ்க்கை பதிவு செய்யப்படுகிறது. போஸ் நீர் மூழ்கி கப்பலில் தப்பினார். !

ராஜீவ் காந்திப்பற்றிய பாடலோடு முடிக்கலாம். ராஜீவ் பதவிக்கு வந்து ஏழு வருடங்கள் கழித்து இறந்தார். அவரின் மனைவி சோனியா வெனிட்டோ மாநிலத்தை சேர்ந்தவர். அம்மாநில தலைநகர் வெனிஸ் !
“அரச ஆணையால் பெரும் விமானி அனுப்படுவார் ; படையை விட்டு உயரிய இடம் நோக்கி ; ஏழு ஆண்டுகள் கழித்து ரத்தாகும் ; காட்டுமிராண்டிகளின் கொடுஞ்செயல் வெனிசை பயத்துக்கு உள்ளாக்கும் !”

நாஸ்ட்ரடமஸ் பிறந்தநாள் இது என்று ஆருடம் சொல்லப்படுகிறது

பூட்டோவின் பெருங்கதை இது !


ஜுல்பிகர் அலி பூட்டோ தன்னுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்த தினம் இன்று. பூட்டோ அரசியல் களத்தில் அடித்து ஆடியவர் ; அந்த அதிரடியின் இறுதியில் தானே மரணத்தை தழுவியது எதிர்பாராத திருப்பம். பூட்டோவின் தந்தை ஜூனாகாதின் திவானாக இருந்தவர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும் பாகிஸ்தானுக்கு அப்பகுதியை தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு முதலில் வென்றார் அவர். பின்னர் இந்திய ராணுவம் நுழைந்து ஓட்டெடுப்பு நடத்தி இந்தியாவின் பகுதியானது அது என்பது தனிக்கதைபூட்டோ அமெரிக்காவில் படித்துவிட்டு,இங்கிலாந்தில் பாரீஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார். அயுப் கான் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்ததும் இவரை இளவயதிலேயே அமைச்சர் ஆக்கினார். சீன்ப்போரில் இந்தியா தோற்றதும் சீனாவை நோக்கி நட்ப்புக்கரம் நீட்டினார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பூட்டோ. காஷ்மீரில் பிடித்திருந்த பகுதிகள் சிலவற்றை சீனாவுக்கு வார்த்துவிட்டு இந்தியாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு தந்திரமாக அழைத்தார்.

இந்தியா குஜராத்தின் கட்ச் மீதான எல்லை சிக்கலில் அடக்கி வாசித்ததை கண்டதும் ஆபரேசன் கிப்ரல்டார் என்கிற பெயரில் பாய்ந்தார். பாகிஸ்தானின் பகுதிகளுக்குள் புகுந்து இந்திய ராணுவம் கலக்கி எடுத்தது. சாஸ்திரி தாஸ்கண்டுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்போனார். கோசிஜின்,அயுப் மற்றும் பூட்டோ சேர்ந்து கொண்டு இந்தியா போர்க்கைதிகளை விடுவிக்க வேண்டும் கைப்பற்றிய கார்கில் உள்ளிட்ட பகுதிகளை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி சாதித்தார்கள் பூட்டோவின் ராஜதந்திரம் தான் இதற்கு முக்கிய காரணம் என்றே சொல்லவேண்டும். அடுத்து அயுப் கானுடன் சிக்கல் ஏற்பட்டு பதவியை துறந்தார் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தொடங்கினார். யஹியா கான் அதிபராக ஆகி இருந்தார்.

தேர்தல் வந்தது . முஜுபிர் ரஹ்மான் தலைமையில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் திரண்டிருந்தார்கள். வங்க மொழி பேசிய அவர்களை இரண்டாம் தர குடிமக்கள் போலவே அரசு நடத்தி வந்திருந்தது. கூடவே பதவிகள்,வரிப்பகிர்வு,வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கி இருந்தார்கள். தேர்தலில் பெரும்பான்மையை அள்ளி இருந்தது ரஹ்மானின் கட்சி. ஆட்சியை அமைக்க கூடாது அவர்கள் என்று முஷ்டி முறுக்கினார் பூட்டோ. ஏற்கனவே ஒரு போருக்கு காரணமான அவர் இந்த முறையும் அப்படி ஒரு சூழலுக்கு நாட்டை நகர்த்தினார். எண்ணற்ற மக்கள் கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்கள்.. லட்சக்கனக்கனோர் அகதியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். போர் மேகம் எழுந்து வங்கதேசம் உருவானது. அப்பொழுதும் சிறையில் இருந்த ரஹ்மானை சந்தித்து இன்னமும் போர் முடியவில்லை ஐம்பதாயிரம் டாலர் மற்றும் ஜனாதிபதி பதவி தருவதாக பேரம் பேசினார் பூட்டோ.

இவரே போருக்கு பின்னர் நாட்டின் தலைமைபொறுப்புக்கு வந்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வந்து பிரதமருக்கு அதிகாரங்களை அதிகப்படுத்தினார் அவர். மீண்டும் தன்னுடைய தந்திரத்தை பயன்படுத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்களை இந்தியாவிடம் இருந்து மீட்டுக்கொண்டு போய் இந்திராவிடம் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டார். அணு ஆயுத திட்டத்தை வேகமாக முன்னெடுத்து “புல்லை தின்றாவது இந்தியாவைப்போல அணு குண்டு வெடிப்போம் !” என்று சபதம் செய்தார். ஆனால் அகமதியா மதப்பிரிவை இஸ்லாமில் சேராது என்று சொன்னதில் அப்துஸ் சலாம் நாட்டைவிட்டு வெளியேறியது ஒரு பின்னடைவாக இருந்தது. சீனாவின் உதவியில் அக்கனவு நிஜமானது. பல்வேறு துறைகளை தேசியமயமாக்கி இருந்தார் பூட்டோ

மீண்டும் தேர்தல் வந்த பொழுது எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தலில் நின்றன. இருந்தாலும் வென்றார் இவர் ; தேர்தலே மோசடி என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாடு கொதிநிலையில் இருந்தது. ஜியா உல் ஹக் எனும் தளபதி ஆட்சியை கைப்பற்றினார். அகமது ராசா கஸ்துரி எனும் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்ட முயற்சி செய்து அவரின் குடும்பத்தை பூட்டோ கொன்றார் என குற்றச்சாட்டை வைத்து கோர்ட்டுக்கு போனது வழக்கு. ஆதாரங்கள் இல்லை என்று தள்ளுபடி செய்த நீதிபதி அனுப்பப்பட்டு மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு தூக்கு விதிக்கப்பட்டது இவருக்கு.

சுப்ரீம் கோர்ட் வரை போயும் இவரை காப்பாற்ற முடியவில்லை. ஜியாவிடம் கருணை மனுக்கள் ஆயிரக்கணக்கில் இவருக்காக குவிந்தும் மரண வாசலை தொட்டார் இவர். “நான் அந்த தவறை செய்யவில்லை என்று என் இறைவனுக்கு தெரியும் !” என்று சொன்ன பூட்டோ அதற்கு முன் செய்த தவறுகளைப்பற்றி என்ன இறைவன் நினைத்திருப்பார் என்று உள்ளுக்குள் நினைத்திருக்கலாம் !