இந்தியாவில் மொழி அரசியல் பகுதி 2:
மொழியும், அரசமைப்புச் சட்டமும்- அரை-மனதான சமரசம்!
கிரான்வில் ஆஸ்டின் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்படி அரை மனதான சமரசத்தை மொழிக்கொள்கையில் மேற்கொண்டது என்பதை விரிவாகப் பேசுகிறார். விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் இந்தி, உருது, பஞ்சாபி முதலிய பல்வேறு மொழிகளை இணைத்துப் பேசப்பட்ட ‘பஜார் மொழி’யான இந்துஸ்தானி கூட 45% மக்களாலேயே பேசப்பட்டது.
இந்தியா என்கிற தேசக் கருத்தாக்கத்துக்கு விடுதலைக்குப் பின்னர் ஒரு தேசிய மொழி வேண்டும் என்கிற கருத்தாக்கம் பலரிடம் நிலவியது. அதே சமயம், அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே ஒரு மொழியை இந்தியாவுக்கான மொழியாக்கும் அதீத முடிவை எடுக்கவில்லை.
சாமர்த்தியமாக இந்தியை ‘இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி’ என்று அறிவித்தார்கள். ஆங்கிலத்தை இணை அதிகாரப்பூர்வ மொழியாகப் பதினைந்து ஆண்டுகள் தொடரலாம். அதற்குப் பிறகு இந்தி அதன் இடத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும் அல்லது முந்தைய நிலையை நாடாளுமன்றம் தொடரலாம் என்றும் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆங்கிலம் நீதிமன்றம், அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை அடைவதற்கு முன்னர் நிகழ்ந்த போராட்டங்கள், விவாதங்கள், எதிர்ப்புகள் முக்கியமானவை.
இந்தி/இந்துஸ்தானி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலும் ஆங்கிலம் எத்தனை ஆண்டுகளுக்கு அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வது, மற்ற மொழிகளுக்கு என்ன இடத்தைக் கொடுப்பது என்பதில் பலத்த கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில் மூன்று சாரார் இருந்தார்கள். இந்தித் தீவிரவாதிகள் என ஆஸ்டின் அழைக்கும் முதல் பிரிவினர், பெரும்பாலும் இந்து தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்.
இவர்கள் பனராஸ், அலகாபாத்தில் உள்ள இந்து கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்கள். கோவிந்த தாஸ், தாண்டன், பாலகிருஷ்ண சர்மா ஆகியவர்கள் பண்டைய இந்து மன்னர்களின் ஆட்சியைப் போல வருங்காலம் அமையவேண்டும் என்று கனவு கண்டார்கள். தாண்டன் இந்து சீர்திருத்த சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜி.எஸ்.குப்தா ஆரிய சமாஜத்தில் தொடர்ந்து இயங்கிய இஸ்லாமிய வெறுப்பை விதைத்தவர். ரகுவீரா பிற்காலத்தில் மதவாத ஜனசங்கத்தின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டவர். எனினும் அளகுராய் சாஸ்திரி, வி.டி.திரிபாதி, எஸ்.எல்.சக்சேனா ஆகியோர் மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மட்டுமே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் அனைவரும் முழங்கினார்கள். மிதவாதிகள் இந்தி இந்தியாவின் முதன்மை மொழியாக இருந்தாலும், மற்ற மொழிகளும் சமமான இடத்தைப் பெறவேண்டும் என்று வாதாடினார்கள். நேரு இந்தப் பிரிவை சார்ந்திருந்தார், இதில் தான் வங்கம், மெட்ராஸ், பம்பாய் முதலிய பகுதிகளைச் சேர்ந்த ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகக் கொண்ட உறுப்பினர்களும் இருந்தார்கள்.
இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழி என அழுத்தி வாதிட்டு இந்தியாவைப் பிளவுபடுத்தினாலும் பரவாயில்லை என்பது போன்ற பார்வையையே இந்திவாலாக்கள் பிரதிபலித்தார்கள். இவர்கள் ஆங்கிலம் இந்திய தேச விடுதலைக்கு எதிரானது என்பதால் அதனைத் தேசிய மொழியாகக் கொள்ளவே முடியாது என்று வாதிட்டார்கள். அதனதன் தளத்தில் அந்தந்த மொழியைப் பயன்படுத்துவோம் என்றார்கள் மிதவாதிகள். இந்தியை தேசிய மொழியாக ஆக்காவிட்டாலும், உருது மொழியால் வளப்பட்டிருந்த இந்தி மொழியை அரசு பயன்படுத்துகிற பொழுது சம்ஸ்கிருத சொற்களையே பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் பிரிவை சேர்த்தார்கள். மிதவாதிகள் இந்தியாவின் பன்மையான கலாசாரம், இந்துஸ்தானியில் காணப்படும் வடிவங்கள், பாணி, வெளிப்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இந்தி அமையவேண்டும் என்கிற வரியை சேர்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்கள்.

பாகிஸ்தான், கனடா, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்திலும் பல்வேறு மொழிகள் புழக்கத்தில் உள்ளன என்றாலும் அங்கே நிலவரம் இவ்வளவு சிக்கலானது இல்லை. பாகிஸ்தான் பெரும்பான்மை மொழிகளை விடுத்து உருது மொழியை தேசிய மொழியாகத் திணித்தது. கனடா, தென் ஆப்ரிக்காவில் மக்கள் தொகையும் , மொழிகள் எண்ணிக்கையும் இந்தியாவோடு ஒப்பிடும் பொழுது குறைவே! இவ்விரண்டு நாடுகளிலும் இரண்டு மொழிகளே பிரதான மொழிகள். சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்று மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
காந்தி இந்திய விடுதலைக் களத்துக்குள் வந்த பொழுதே, ‘இந்தியை தேசிய மொழிக்கான இடத்தையும் , மற்ற பிராந்திய மொழிகளை அவற்றுக்கான இடத்தை மக்களின் வாழ்வில் தராவிட்டால் சுயராஜ்யம் என்பது முழுமையடையாது என்பது என்னுடைய அடக்கமான, ஆனால், உறுதியான கருத்தாகும்.’ என்றார். காந்தியின் தலைமையில் மக்களின் மொழிகளைத் தன்னுடைய கூட்டங்களின் அலுவல் மொழியாகக் காங்கிரஸ் மாற்றியது. காக்கிநாடா காங்கிரசில் இந்துஸ்தானியிலேயே கட்சியின் அலுவல்கள் முடிந்தவரை நடைபெற வேண்டும் என்று கட்சிச்சட்டம் மாற்றப்பட்டாலும் ஆங்கிலத்தைப்
பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

மோதிலால் நேருவின் அறிக்கை இந்தியாவின் பொது மொழியாக இந்துஸ்தானி ஆகவேண்டும் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டது. நேரு காந்தியைப் போலவே அந்தந்த பகுதி மக்களின் வளர்ச்சி தங்களின் தாய்மொழியால் கற்பதன் மூலமே சாத்தியம் என்று சொன்னார். ஆங்கிலத்தின் முந்தைய தொடர்புகள், தற்போதைய தேவையால் அதனைத் தவிர்க்க முடியாது என்று நேரு நடைமுறை உணர்ந்து கருதினார். இந்துஸ்தானி இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று காந்தி நூறு முறை சொல்லியிருப்பார். நேருவும் அதுவே இந்தியாவின் தேசிய மொழியாகும் என்று கருதினார். ஏன் அப்படி? இந்துஸ்தானி சம்ஸ்கிருதமயமாக்கப்படாமல்,பாரசீகமயமாக்கப்பட்ட உருதுவாகவும் இல்லாமல் எல்லாப் பிராந்திய மொழிகளிலும் இருந்து வார்த்தைகளைப் பெற்று அம்மொழி வளரவே அவர்கள் கனவு கண்டார்கள்.
ராஜாஜி இந்துஸ்தானிய பிராந்திய மொழிகளின் வரிவடிவங்களில் எழுதுவதன் மூலம் அம்மொழியை வளர்க்க முடியும் என்று கருதினார். இந்திவாலாக்கள் இந்தி மொழியானது உருது, ஆங்கிலத்தை முழுக்க விலக்கி எழவேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். ஆனால், நேரு உட்படப் பல இந்துக்கள் உருதுவை தங்களின் தாய்மொழியாகக் கொண்டிருந்தார்கள். காந்தி தொடர்ந்து இந்துஸ்தானி மொழியே இந்துக்கள், இஸ்லாமியர்களை இணைக்கும் என்று கருதினார். நாற்பத்தி ஐந்தில் தாண்டன் இந்தி சாஹித்திய சம்மேளனத்தில் நாகரி வடிவத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதைத் தொடர்ந்தால் தான் அவ்வமைப்பில் இருந்து விலகுவதாக எச்சரித்தார். தாண்டன் ஆங்கிலத்தைத் துரத்திவிட்டு பிராந்திய மொழிகளைப் பேசுபவர்கள் இந்திக்கு மாற்றப்பட வேண்டும் என்றார். காந்தி பதவி விலகினார். முப்பத்தி ஏழில் ராஜாஜி, சுப்பராயன் இந்துஸ்தானியை உயர்கல்வியின் மூன்று ஃபார்ம்களில் திணிக்க, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக. சுப்பராயன் ஒழிக! ராஜாஜி ஒழிக!’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மொழிப்போர்:
விதிமுறைகள் கமிட்டியில் தான் முதல் சிக்கல் ஆரம்பமானது. அரசியலமைப்பு சட்ட விவாதங்கள் இந்துஸ்தானி அல்லது ஆங்கிலத்தில் நடக்கலாம் என்று ராஜேந்திர பிரசாத் அறிவிக்க, சேத் கோவிந் தாஸ் ‘இருபத்தி ஐந்து வருடங்கள் காந்தியடிகள் போராடியும் இந்துஸ்தானியை தெற்கைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலம் இந்தச் சபையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை எங்களின் பொறுமையை முழுவதும் சோதிக்கிறது.’ என முழங்க, ‘ஒட்டுமொத்த சபையின் அலுவலும் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்’ என்று கே.சந்தானம் தீர்மானம் கொண்டுவந்தார். எனினும், இரண்டு மொழிகளுமே தொடரும் என்றே முடிவு செய்யப்பட்டது.
.
மத்திய அரசமைப்புச் சட்ட கமிட்டியில் இருந்த பனகல் நரசிங்க ராவ் பிராந்திய மொழிகளுக்கு எந்த இடத்தையும் அரசமைப்புச் சட்டத்தில் தர முடியாது என்றும், சட்டசபைகளில் கூட இந்துஸ்தானியோ, ஆங்கிலமோ தான் பயன்பாட்டு மொழியாக இருக்கும் என்று அவர் மாதிரியை வகுத்தார். இந்துஸ்தானியின் இடத்தை இந்திக்கு வழங்கியும், சட்டசபையில் இந்தியும், பிராந்திய மொழியும் தொடரும் என்றும் திருத்தங்கள் படேல் அறிமுகப்படுத்திய சட்ட வரைவில் கொண்டுவரப்பட்டன. இந்தச் சூழலில் பிரிவினை ஏற்பட்டு இந்துஸ்தானி மொழியை ஆதரிப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கும்,, பிரிவினைக்கும் ஆதரவானவர்கள் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்றது. இந்தச் சிக்கலால் இந்துஸ்தானி என்கிற சொல்லுக்குப் பதிலாக நேரு, காந்தி முதலியவர்களே ‘பரவலான இந்தி’ என்று பயன்படுத்தினார்கள். விடுதலைக்குப் பிறகு மீண்டும் மொழிச்சிக்கல் களத்துக்கு வந்தது. இந்தியை ஏற்க இஸ்லாமியர்கள் தங்களின் தேசபக்தி பரிசோதனையில் வெற்றிபெற சம்மதித்தார்கள், தெற்கைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலமும் இணைந்து பயன்பாட்டில் பதினைந்து வருடம் இருக்க வேண்டும் என்று கோரினார்கள். வெறும் இந்தி மட்டுமே வேண்டும் என்று முரண்டுபிடித்தார்கள் இந்திவாலாக்கள்.
பீரார், மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அரசியலமைப்பு குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த திருத்தம் நிலைமையைச் சூடாக்கியது. மத்திய அரசுப்பணி தேர்வுகளில் ஒருவர் வெற்றி பெற இந்தி அறிவு கட்டாயம் தேவை என்றும், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ வடிவம் இந்தியிலேயே இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இது இந்தி பேசாத பகுதி உறுப்பினர்களைக் கவலைகொள்ள வைத்தது. டிடிகே ‘ஏற்கனவே பிரிவினையைத் தென்னகத்தில் சில சக்திகள் பேசிக்கொண்டிருக்கையில், இந்த ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் ‘இந்தி சர்வாதிகாரம்’ அவர்களை வலுப்படுத்தும்.’ என்று கவலைப்பட்டார்.
ராஜேந்திர பிரசாத் ஏற்கனவே ஹிந்துஸ்தானி, உருது, இந்தி ஆகிய மொழியைப் பயன்படுத்த அலுவலில் அனுமதித்தாலும், ஆங்கிலச் சொற்களை இணைத்துக் கொள்ளவும், ஆங்கில மொழியை அலுவலில் பயன்படுத்தவும், தெற்கைச் சேர்ந்த பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் ஆக உதவியிருந்த அவரே அதிகாரப்பூர்வ அரசமைப்புச் சட்டமாக இந்தி வடிவமே கொள்ளப்பட வேண்டும் என்று அடம்பிடித்தார். நேரு ஆங்கில வடிவமே தொடரவேண்டும் என்றும், பலகாலம் கழித்து வேண்டுமானால் இந்திக்கு அந்த இடம் தரப்படலாம் என்றும் சொன்னார்.
சிறுபான்மையினர் தங்களின் மொழியை, கலாசாரத்தைக் காத்துக்கொள்ள உரிமை தந்த அதே சமயம், அரசு சிறுபான்மையினருக்கான கல்விக்கூடங்களை அமைப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் அம்பேத்கர், முன்ஷி கருதினார்கள். அதாவது அரசு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லும் அதே சமயம், இதையெல்லாம் செய்க என்று சிறுபான்மையினர் சார்ந்து சொல்லக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள். அரசுக்கு அறக்கடமையாக அது அமையலாமே அன்றிக் கட்டாயம் என்று அழுத்தம் தர அவர்கள் விரும்பவில்லை. மொழிச் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மை மொழியைத் திணிக்கக் கூடாது என்றும் அத்தீர்மானம் சொன்னது.

நாற்பத்தி எட்டாம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் ஓரிசா மாகாணத்தில் ஒரியா, தெலுங்கு இரண்டும் அதிகாரப்பூர்வ மொழி என்ற பொழுதும் கஞ்சம், கோராபுட் முதலிய தெலுங்கு பெரும்பான்மை மாவட்டங்களில் ஒரியா திணிக்கப்பட்டது. பீகாரின் மன்பாம் மாவட்டத்தில் வங்க மொழியினர் பெரும்பான்மையினராக இருந்த சூழலில் அங்கே இந்தி மொழி பள்ளிகளில் திணிக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் நாக்பூரில் மராத்தி பேசுபவர்கள் இந்தி பேசுபவர்களைப் போல் இருமடங்கு இருந்தும் நாக்பூர் பல்கலை இந்தியை பயிற்றுமொழியாக அறிவித்தது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் செயற்குழு ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய பகுதியில் பயன்படுத்த வேண்டிய மொழியை அதுவே தேர்வு செய்யலாம். நீதிமன்ற, அலுவல் மொழியாக அதனையே பயன்படுத்தலாம் என்றும், இருபது சதவிகிதம் வரை ஒரே மொழிச் சிறுபான்மையினர் இருந்தால் அரசின் கோப்புகள் அந்த மொழியிலும் அமைய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தொடர்பு கொள்ளும் மொழி மத்திய அரசு பயன்படுத்தும் ஒரு மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 7 1949-ல் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தாண்டன் யாரெல்லாம் இந்தியை நாகரி வரிவடிவத்தில் தேசிய மொழி ஆவதை எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள், மதவாத சக்திகளுக்குத் துணை போவதையும் செய்கிறார்கள் என்றார். அரசமைப்பு வரைவுக் குழு கூடிய பொழுது நாடாளுமன்றம் ஆங்கிலம் அல்லது/மற்றும் இந்தி ஆகிய இரண்டையும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் பத்து வருடங்கள் பயன்படுத்தலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உள்ள ஓட்டையைப் பலர் எதிர்த்தார்கள். சந்தானம் தலைமையிலான குழு பதினைந்து ஆண்டுகள் என்று இதனை விரிவுபடுத்த கோரியது. அதோடு நில்லாமல் பொதுப் பயன்பாட்டுக்கு அரேபிய எண் முறையைப் பயன்படுத்தலாம் என்றும் அது பரிந்துரைத்தது.

இந்தியை தேசிய மொழியாக்கவும், இந்தியாவுக்குப் பாரத் எனப் பெயர் சூட்டவும் ஒரு பெண் துறவி உண்ணாவிரதம் இருந்தார். அவரை நேரு முதலியோர் சந்தித்துச் சமாதானப்படுத்தினார்கள். அரேபிய எண்கள் என்றால் எதிர்ப்பு வரும் என்று உணர்ந்து அதை ‘சர்வதேச எண்கள்’ என மாற்றினார்கள். இவை அனைத்தும் ஓட்டெடுப்புக்கு வந்தது. எழுபத்தி நான்கு-எழுபத்தி நான்கு என்று அரேபிய எண்கள், நாகரி எண்கள் இரண்டுக்கும் ஓட்டுக்கள் கிடைத்தன. மேலும், இந்தி பேசும் மாகாணங்கள் அரசோடு தொடர்பு கொள்ள இந்தியைப் பயன்படுத்தலாம் என்றும், எட்டாவது அட்டவணையில் ஆங்கிலம் சேர்க்கப்படாது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தப் பதினைந்து வருடத்தைக் குறைக்கவும், நாகரி எண்களைப் பயன்படுத்தவும், அரசுப்பணிகளில் இந்தியை கட்டாயமாக்கவும் இந்திவாலாக்கள் போராடினார்கள். இறுதியில் நாகரி எண்கள், இந்தி எண்கள், சர்வதேச எண்கள் இணைந்து பயன்படும் என்றும், உச்ச, உயர் நீதிமன்றங்களில், சட்டங்கள், அவசரச்சட்டங்கள் ஆகியற்றில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே பதினைந்து வருட காலத்துக்கு இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியை இந்தியா முழுக்க வளர்ப்பதன் வேகத்தைக் கண்டறிய இந்தி கமிஷன்கள் அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பிற மொழிகள் எட்டாவது பட்டியலில் இடம் அளிக்கப்பட்டதோடு, அரசுப் பணித் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதவும் அனுமதிக்கப்பட்டது. அந்தப் பிற மொழிகளைப் பிராந்திய மொழிகள் என்று சொல்லாமல், ‘அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்’ என்று அறிவிக்க நேரு சொன்னார். ஆர்.எஸ்.சுக்லா இப்படிப் பட்டியலில் பிற மொழிகளைச் சேர்ப்பது தேவையில்லாதது என்றார். இந்து மகாசபையின் முன்னாள் தலைவரும், வங்காளியுமான ஷ்யாம் பிரசாத் முகர்ஜி இந்தப் பட்டியலிடுதலை வரவேற்று இது இந்திக்கு இணையாகப் பிற மொழிக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்கிற சூழலை சரி செய்யும்.’ என்றார்.
ஓட்டெடுப்பில் இவை பெரும்பாலும் ஏற்கப்பட்டு இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக இந்துஸ்தானியை ஒரு ஓட்டில் முந்தி வென்றது. அம்பேத்கர் உட்பட இருபத்தி எட்டு பேர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்க தீர்மானம் கொண்டுவந்தார்கள். எல்.கே.மைத்ரா என்பவர் யாருக்கும் வடமொழி தெரியாது என்பதால் அனைவர்க்கும் சமமான வாய்ப்பை அது வழங்கும் என்றார். எனினும் அது ஏற்கப்படவில்லை. நேரு இந்திவாலாக்களின் தொனியில் இருந்த அதிகார மமதையைக் கண்டித்தார். மக்களின் மொழிதான் தேசிய மொழியாக வேண்டுமே அன்றி, கற்ற சிலரின் மொழியல்ல என்றார்.
தாண்டன் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது நம்மைப் பின்னோக்கி தள்ளிவிடும் என்றும், நாகரி வடிவத்தில் மட்டும் எண்களைப் பயன்படுத்துவது நம் பண்டைய பாரம்பரியத்தின் அடையாளம் என்றும், உடனடியாக ஆங்கிலத்தின் இடத்தை முழுமையாக இந்திக்குத் தரலாம், அதிகபட்சம் ஐந்து வருடங்கள் வேண்டுமானால் ஆங்கிலம் அமலில் இருக்கலாம் என்று கொதித்துப் பேச, மவுலானா அபுல் கலாம் ஆசாத், இந்தி படிப்படியாகவே தென்னகத்தை அடைய வேண்டும் என்றும், வடக்கு-தெற்கு இரண்டையும் இணைக்கும் புள்ளியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டால் அந்த இணைப்பு அறுந்துவிடும் என்று எச்சரித்தார்.
இறுதியாக முன்ஷி-அய்யங்கார் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நாகரி, ஆங்கில எண் பயன்பாடு குறித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றும். உயர்நீதிமன்றங்களில் ஜனாதிபதி அனுமதித்தால் இந்தி அலுவல் மொழியாகப் பயன்படலாம், சட்டங்கள், அவசரச்சட்டங்கள், மசோதாக்கள் அந்தந்த மாநில மொழியில் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழியாக்கத்தோடு பதிப்பிக்கப்படலாம் என ஒத்துக்கொள்ளப்பட்டது. சம்ஸ்கிருதம் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டது.
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்தியின் பயன்பாடு அரசு அலுவல்களில் குறையவே செய்தது. காங்கிரஸ் கட்சியே ஆங்கிலத்தில் தன்னுடைய அலுவல்களை நடத்தியது. மொழி ஆதிக்கத்தைச் செலுத்த முயன்ற இந்தி வாலாக்களின் போக்கு அதற்குப் பலத்த எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. அரைமனதான ஒரு சமரசமே எட்டப்பட்டது என்றாலும், அடுத்தடுத்து வந்த 1963-ன் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் ஆங்கிலத்தை இந்தியோடு அரசின் அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வதை உறுதி செய்தது. ஆங்கிலம் பேசுவது இந்தியத் தன்மைக்கு எதிரானது இல்லை என்கிற புரிதல் உண்டானது.