சாந்தி ஸ்வரூப் பட்னாகர்-அறிவியலோடு ஒரு அற்புத வாழ்க்கை !


சாந்தி ஸ்வரூப் பட்னாகர் இந்திய அறிவியல் ஆளுமைகளில் முதன்மையானவர். பரமேஸ்வரி சஹா பட்னாகர், பார்வதி தம்பதிக்கு அவர் மகனாகப் பிரிக்கப்படாத இந்தியாவின் பேராவில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் இவரின் அப்பா அரசுப் பணிகளுக்குப் போக மறுத்து பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிப் பல ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி புகட்டினார். அவர் சாந்தி ஸ்வரூப் பத்து மாத சிறுவனாக இருக்கும் பொழுது குடும்பத்தைக் கடும் வறுமையில் விட்டுவிட்டு இறந்து போனார். பட்நாகரின் அன்னையின் தந்தை அப்பொழுதே பொறியியலில் படம் பெற்றார். இவரின் கல்விக்கான வேலைகளை அவர் பார்த்துக்கொண்டார். அறிவியலில் அவரிடம் இருந்து ஆர்வம் தொற்றிக்கொள்ளப் பதினேழு வயதில் கார்பன் பேட்டரிக்களில் இருக்கும் மின்முனைகளுக்கு மாற்றாகக் கரும்புச்சக்கைகள், கரிம பொருட்களை அழுத்தத்தில் வெப்பமூட்டி மின்முனைகள் தயாரிப்பது பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதினார்.

பார்மன் கிறிஸ்துவக்கல்லூரியில் லாகூரில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பயின்றார். நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் காம்ப்டனின் சகாவான பெனடே எனும் பெயர் கொண்ட பேராசிரியர் இவருக்கு ஆசிரியராக அமைந்தார். முதுகலையில் வேதியியல் பட்டத்தை அதே கல்லூரியில் பெற்ற பட்னாகர் பெனடேவின் கீழ் ஆய்வுகள் செய்தார். முதுகலைப் பட்ட ஆய்வை , ’நீரின் பரப்பு இழுவிசையின் மீது பரப்புக் கவரப்பட்ட வாயுக்களின் தாக்கம்’ என்கிற தலைப்பில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் போய் மேற்படிப்புப் படிக்கக் கப்பல் பயணம் போனவர், முதல் உலகப்போரால் அமெரிக்காவுக்குச் செல்லும் எல்லாக் கப்பல்களும் ராணுவ வீரர்களால் நிரம்பியிருந்ததால் இங்கிலாந்திலேயே படிக்க முடிவு செய்தார். அங்கே மூவிணை, ஈரிணைத் திறன் கொண்ட கொழுப்பு அமிலங்களின் உப்புகள் எண்ணெய்களில் கரைவதால் அவற்றின் பரப்பு இழுவிசையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து DSc பட்டம் பெற்றார்.

ஆரம்பித்து ஐந்து வருடங்களே ஆகியிருந்த பனராஸ் இந்து பல்கலையில் மூன்று வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், பஞ்சாப் பல்கலையில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வேலை பார்த்தார். இந்தக்காலத்தில் கூழ்ம மற்றும் காந்த வேதியியல் துறைகளில் எண்ணற்ற ஆய்வுகள் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இவற்றோடு நில்லாமல் தொழிற்துறை சார்ந்த சிக்கல்களிலும் அறிவியல் அறிவை பயன்படுத்தித் தீர்வுகள் கண்டார் அவர். அட்டாக் எண்ணெய் நிறுவனம் எண்ணெயை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்க ஒருவகையான மண்ணைப் பயன்படுத்திக்கொண்டு இருந்தது. உப்புத்தண்ணீர் அதன் மீது பட்டால் அப்படியே கெட்டியாகி அதற்கு மேல் தோண்ட முடியாதவகையில் அடைத்துக்கொண்டு அந்த மண் சிக்கல் தந்தது. பட்னாகர் இந்தியப்பசை ஒன்றை அதில் கலந்து சிக்கலைத்தீர்த்தார். 1925-ல் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாயை அந்த நிறுவனம் தர முன்வந்தது. அதில் பைசா கூடத் தன் பெயருக்கு வாங்கிக்கொள்ளாமல் அப்படியே பெட்ரோலியத் துறை ஒன்றை பஞ்சாப் பல்கலையில் உருவாக்க பட்னாகர் கொடுத்துவிட்டார்.
கே.என்.மாத்தூர் எனும் சக விஞ்ஞானியுடன் இணைந்து வெவ்வேறு சேர்மங்களின் வேதியியல் பண்புகளைக் கண்டறியும் ‘Bhatnagar-Mathur light interference
Balance’-ஐ உருவாக்கினார்கள். அதை வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றி பெறுவதை உறுதி செய்தார்கள். மெக்மில்லன் நிறுவனத்தில் ‘Physical
Principles and Application of Magneto-chemistry’ என்கிற மிக முக்கியமான பாடப்புத்தகத்தை இருவரும் எழுதினார்கள். அது பல்வேறு சர்வதேச பல்கலைக்கழகங்களில் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எமல்ஷன் எனப்படும் நீர்மப்பொருட்களில் இரு வகையான திரவங்கள் பிணைந்திருக்கும். எடுத்துக்காட்டுக்குப் பாலில் கொழுப்பும், நீரும் பிணைந்து இருக்கிறது. அவற்றை ஆனாலும் பிரிக்க முடியும். இந்த எண்ணெய்யில் நீர் இருக்கிற எமல்ஷன்கள், நீரில் எண்ணெய் இருக்கும் எமல்ஷன்கள் ஆகியவற்றை நீரில் எண்ணெய் இருக்கும், எண்ணெயில் நீர் இருக்கும் எமல்ஷன்களாக மாற்றும் தலைகீழ் முறையை இவரே உலகுக்கு நேர்,எதிர்மின்னோட்டங்கள் கொண்ட மின்முனைகள் மூலம் செய்யமுடியும் என்று நிரூபித்தார்.

உலகப்போர் சமயத்தில் பட்னாகர் உருவாக்கிய உடையாத கொள்கலன்கள் அமெரிக்க ராணுவம் வரை பயன்பட்டுப் புகழ்பெற்றது. அந்தப் பாத்திரங்களில் திரவங்களை மிக அதிகமான உயரத்தில் இருந்து விமானங்களில் இருந்து வீசுவது சாத்தியமானது. பன்னிரண்டு மணிநேரம் வரை எரியக்கூடிய வத்திப்பெட்டியை விடச் சற்றே பெரிய கேஸ் ஸ்டவ்வை அவர் உருவாக்கினார். கம்பளி உடை போன்ற கதகதப்பைத் தரும் பருத்தி ஆடையை அவர் தயாரித்தார். விஷ வாயுக்களில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்களையும் அவர் உருவாக்கினார்.

1-4-1940 அன்று அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆணையத்தைத் தன்னுடைய முயற்சிகளால் ராமசாமி முதலியார் ஆங்கிலேய அரசை உருவாக்கச்செய்த பொழுது அதை வழிநடத்த பட்னாகரையே அழைத்தார். இந்த அமைப்புக் காய்கறிகளில் இருந்து எண்ணெய், எரிபொருள் தயாரிப்பது, ராணுவ ஆயுதங்களுக்குப் பிளாஸ்டிக் உறைகள் தயாரிப்பு, வைட்டமின் உருவாக்கம், பைரித்ரியம் க்ரீம் உருவாக்கம் ஆகியவற்றில் வருட நிதி ஒதுக்கீடான ஐந்து லட்சத்தைக் கொண்டு செயல்பட்டது. தொழிற்துறை தேவைகளைப் பூர்த்திச் செய்ய இன்னுமொரு அமைப்பை இதன் கீழேயே துவங்கவேண்டும் என்று ராமசாமி-பட்னாகர் இணை கேட்டுக்கொள்ளத் தொழிற்துறை ஆய்வு பயன்பாட்டு கமிட்டி உருவாக்கப்பட்டு வருடத்துக்குப் பத்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இவ்வளவு நிதியைக் கையாள ஆய்வுகளுக்கு என்று தனித்த கவனம் செலுத்தும் சுயாட்சி கொண்ட அறிவியல் மற்றும் தொழிற்துறை கவுன்சில் (CSIR) உருவாக்கப்பட்டது. அதன்கீழே மேலே சொன்ன இரண்டு அமைப்புகளையும் கொண்டுவந்தார்கள். விடுதலைக்குப் பின்னர் நேரு தன்னுடைய நேரடி கவனிப்பின் கீழ் CSIR அமைப்பை கொண்டுவந்தார். பட்னாகர் நூற்றுக்கணக்கான அறிவியல் அறிஞர்களை இணைத்துக்கொண்டு தான் உயிருடன் இருந்த அடுத்தப் பதிமூன்று ஆண்டுகளில் இந்தியா முழுக்க உலகத்தரமான பன்னிரெண்டு ஆய்வகங்களை வேதியியல், இயற்பியல், தோல் ஆய்வு, உலோகவியல், எரிபொருள் ஆகியவற்றில் செய்ய உருவாக்கினார். அதனோடு மேலும் ஒரு பன்னிரெண்டு ஆய்வகங்களுக்கான திட்டங்களை வகுத்துத் தந்துவிட்டு இறந்துபோனார்.

இந்த அமைப்புப் போகக் கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் தயாரிக்கப் பாலிமர் வேதியியல் துறையைப் பூனாவிலும், மோனோசைட்டை கேரளாவில் இருந்து பிரித்தெடுக்க இந்திய அபூர்வ தனிமங்கள் அமைப்பை அவர் உருவாக்கினார். தேசிய ஆய்வு வளர்ச்சிக் கழகத்தை அவர் துவங்கி தொழிற்துறை சார்ந்த பொருட்களை ஆய்வுகளின் மூலம் உருவாக்கும் அமைப்பாக அதை மாற்றினார். மத்திய அரசில் கல்விச் செயலாளருக்கு ஆலோசகராகவும் அவர் திகழ்ந்தார். பல்வேறு தனியார் நிறுவனங்களை இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபடச்செய்வதை அவர் உறுதி செய்தார். தன்னுடைய எழுத்துக்கள், காப்புரிமைகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த வருமானம் எதையும் தனக்கு என்று வைத்துக்கொள்ளாமல் முழுக்க இந்திய அறிவியல் ஆய்வுகளுக்கே வழங்கிவிட்ட அவர் இந்திய அறிவியலின் வேக வளர்ச்சிக்கான அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர். அவரின் பெயரால் CSIR ஆய்வுகளில் சிறந்து விளங்கும் அறிவியல் அறிஞர்களுக்கு விருது வழங்குகிறது.

மாமேதை மாக்ஸ்வெல் !


இயற்பியல் உலகில் ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டன் ஆகிய இருவருக்கும் இணையாக புகழப்பட வேண்டிய இன்னொரு மேதை மாக்ஸ்வெல். பதினாறு வயது நிரம்புவதற்குள்
அறிவியல் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கிற அளவுக்கு அவர் மேதையாக இருந்தார். மாக்ஸ்வெல் காம்ப்ரிட்ஜ் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றினார்.

மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்று ஏற்கனவே அறிவியலில் புரிதல் இருந்தாலும். அவைப்பற்றி விதிகளும்
இருந்தன. என்றாலும் இவை இரண்டையும் இணைக்கிற பணியை மாக்ஸ்வெல் அவர்களின்
நான்கு சமன்பாடுகள் செய்தன.

மின்சாரம்,காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என்பதை அவரின் சமன்பாடுகள் காட்டிய பொழுது இயற்பியல் உலகம்
நிமிர்ந்து உட்கார்ந்தது. மேலும் வெளியில் பரவும் மின்காந்த அலைகளின் திசை வேகத்தை அவர் கண்டறிந்து சொன்னார். அது ஒளியின் திசை வேகத்தை
ஒத்திருப்பதை கண்டு ஒளியும் மின்காந்த அலைகளால் ஆகி இருக்கிறது என்று அறிவித்தார். ஒளியில் இருந்து சற்றே மாறுபட்ட அலைநீளமும்,அதிர்வெண்ணும்
கொண்ட மின்காந்த அலைகள் இருக்கும் என்று அவர் ஊகமாக தெரிவித்ததை அவருக்குப்பின் வந்த ஹெர்ட்ஸ் தன்னுடைய ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தினார்.

ஆப்டிக்ஸ்,வெப்ப இயக்கவியல் துறையிலும் மகத்தான ஆய்வுகளை செய்த மாக்ஸ்வெல் சனிக்கோளின் வளையம் தூசிகளால் ஆனது என்றும்,மூன்று அடிப்படை
வண்ணங்கள கொண்டு புகைப்படத்தில் எண்ணற்ற வண்ணங்களை கொண்டுவர முடியும் என்றும் மாக்ஸ்வெல் நிரூபித்தார்.

ஹெர்ட்ஸ் மின்காந்த அலைகளை உருவாக்கியும்,அவற்றின் பண்புகளையும் தெளிவாக சொன்ன பொழுது அவரை எல்லாரும் புகழவே ஹெர்ட்ஸ் தன்னடக்கமாக ,”இதெல்லாம்
மேக்ஸ்வெல் எனும் மாமேதையின் சாதனைகள். அதை மீண்டும் இவை நிரூபிக்கின்றன. நான் செய்திருப்பது ஒரு சிறு துளியே !” என்று தன்னடக்கமாக சொன்னார். மாக்ஸ்வெல் புற்றுநோயால் நாற்பத்தி எட்டு வயதில் மரணமுற்றாலும் அவரின் பங்களிப்புகள் அறிவியல் உலகின் செயல்பாடுகளை பல்வேறு தளங்களுக்கு இட்டுச்செல்கிறது.

ஸ்டீவன் ஹாகிங்கும்,மிச்சமிருக்கும் நம்பிக்கையும் !


ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு. இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் அவர் ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார் .

எதோ தடுமாற்றம் உண்டானது ;மாடிப்படியில் நடக்கும் பொழுது தடுமாறினார் ;மங்கலாக உணர ஆரம்பித்தார் .பேச்சு குழற ஆரம்பித்தது ;செயல்பாடுகள் முடங்கின -மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது . இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள் ;முதலில் நொறுங்கிப்போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பணிகளை தொடர்ந்தார் .

காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசை பெற்றது -இந்த காலத்தில் கரங்கள் செயலற்று போயின ; சுத்தமாக பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி வருகிறார் .

1979 இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார் .கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கபடுகிறது . காஸ்மாலஜி துறையை சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே ; இவரின் “A Brief History of Time” நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர் ;சோதனைகளை கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,”உங்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இல்லையா ? எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது ?” என்று கேட்கப்பட்டது ,”என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்கை சுகமானது !” என்றார். நீங்களும் மிச்சமிருப்பதில் மின்னிடுங்கள்

ஐன்ஸ்டீனையும் அசர வைத்த சத்யேந்திர நாத் போஸ் பிறந்தநாள் இன்று !


சத்யேந்திர நாத் போஸ் எனும் ஒப்பற்ற அறிவியல் மாமேதை பிறந்தநாள் இன்று . ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் .குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது .குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால் தான் உருவானது 

இவர் விடுதலைக்கு முந்திய பிளவுபடாத வங்காளத்தில் படித்தார் .பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் இவர் பெற்றிருந்தார்;காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான் . பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார் . இவர் கல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற காலம் வங்கத்தின் பொற்காலம் .தலைசிறந்த பல அறிஞர்கள் இக்காலத்தில் தான் உருவானார்கள் . .வெறும் அறிவியலில் மட்டும் நாட்டம் கொண்டிருக்கவில்லை அவர் .ஐந்து மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் இசை வல்லுனரும் கூட .

இவர் Max Planck’s Law” மற்றும் “Light Quantum Hypothesis” பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார் .அசந்து போனார் அவர் .இருவர் பெயரையும் இணைத்து அதை வெளியிட்டார் அவர் .அந்த கட்டுரையே போஸ் ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் எனும் துறைக்கு வழிவகுத்தது . அப்பொழுது அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்க வில்லை . ஆனால் ஐன்ஸ்டீன் கடிதம் கொடுத்து “அதில் போஸை விட தலைசிறந்த விஞ்ஞானியை நீங்கள் காண முடியுமா ?”என அடிக்குறிப்பிட்டு அனுப்பினார் ; உடனே டாக்கா பல்கலைகழக பேராசிரியர் ஆகினார் போஸ் என்றால் அவரின் மேதமையை உணர்ந்து கொள்ளலாம் . இன்னும் எண்ணற்ற பிரிவுகளில் அவர் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டே இருந்தார் .

இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன் பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது என்றால் அது மிகையில்லை . இவரின் நினைவாக போசான் என துகளுக்கு பெயரிடப்பட்டது . போர் எனும் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒரு உரை நிகழ்த்தும் பொழுது தடுமாறினார் ;கண்மூடிய படியே போஸ் அமர்ந்திருந்தார் ஒரு இடத்தில போருக்கு தடுமாற்றம் வரவே “இதை நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா?” என போசை பார்த்து கேட்க கண்களை திறந்து விளக்கி விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட்டார் மனிதர் .அது தான் போஸ் .தாய்மொழி வழிக்கல்வி தான் அவசியம் என்றார் .வங்காள மொழியில் அறிவியலை பயிற்றுவித்தார் அவர் . அவரை நினைவு கூர்வோம்