இந்தியாவில் மொழி அரசியல் பகுதி -1
`LANGUAGE AND POLITICS IN INDIA’ என்கிற ஆஷா சாரங்கி தொகுத்த நூல் மொழி அரசியல், அரசியலின் மொழி ஆகிய இரண்டைக் குறித்தும் வெவ்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள பல்வேறு கட்டுரைகள் தனித்தனியாக விவரிக்கப்பட வேண்டியிருப்பதால் ஆறு பாகங்களாக இந்த நூல் தொடும் பேசுபொருட்களை எழுதுகிறேன்.
மொழி அரசியல், அரசியலின் மொழி ஆகிய இரண்டையும் ஏன் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆஷா சாரங்கியின் அறிமுகம் விரிவாகப் பேசுகிறது.
மொழி என்பதை வெறும் தகவல்தொடர்பு கருவி எனச் சிலர் சொன்னாலும், மொழிக்கும் சமூகத்துக்கும், வரலாற்றுக்கும், தத்துவத்துக்கும், புலனுணர்வுக்கும், மானுடவியலுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராயும் பிரிவுகள் உலகெங்கும் ஏற்பட்டுள்ளன. ஷெல்டன் போலாக்,’மொழி என்பது ஒரு தேசத்தின் அடையாளமாக மாறுகிறது என்றால் அதற்கு மொழியைத் தேசத்தின் தனித்த அடையாளமாக மாற்றும் செயல்பாடும் ஒரு முக்கியக் காரணம்’ என்று கருதுகிறார். ஐரோப்பியாவில் தேசிய அரசுகள் எழுந்ததை மொழியை எப்படி அவர்கள் தேச உருவாக்கத்தின் தனித்த அடையாளமாக மாற்றினார்கள் என்று அறியாமல் உணர முடியாது. திட்டமிட்டு பல்வேறு சமூக, கலாசார, அரசியல் வேறுபாடுகளை உருவாக்க பல்வேறு மொழியியல் நடைமுறைகள் பரிந்துரைக்கப்பட்டு, கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இந்தத் தேசங்கள் கட்டமைக்கப்பட்டன.
ஹாப்ஸ்பர்க், ஓட்டோமான், பிரெஞ்சு, ஆங்கிலேய, ஸ்பானிய அரசுகள் தங்களுடைய மொழியை உலகம் முழுக்கப் பரப்பியதோடு, தங்களின் மொழியை ஒரு உடைமையாக எண்ணித் தீவிரமாகக் காத்தார்கள். எல்லா மொழிகளும் ஒரு காலனிய அரசின் மொழியாகவோ, அல்லது காலனிகளில் பரவலான மொழியாகவோ மாறுவதில்லை. ராணுவ வெற்றிகள், முதலாளித்துவ விரிவாக்கம், மதப் போர்கள், மத மாற்றங்கள், கல்வி பரவலாக்கம் முதலிய பல்வேறு கூறுகள் இதில் பங்காற்றுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை சாதியப் பாகுபாடுகள்
மொழியின் தூய்மை, அசுத்தம், படிநிலை ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உண்டு. சம்ஸ்கிருதம் என்பதை இரட்டை பிறப்பாளர்களே கற்க வேண்டும் என்கிற பார்வை வெகுகாலம் நிலவி வந்ததும், மைதிலி என்கிற மொழியை ஒடுக்கப்பட்ட ஜாதியினர் பரவலாகப் பேசிவந்த சூழலில் அதனை ‘சுத்தப்படுத்தி’,, வரையறுத்து பிராமணர்களின் அடையாள மொழியாக வெற்றிகரமாக மாற்றி ‘மைதிலி’ எனக் குறிப்பதே மிதிலை பகுதியை சேர்ந்த பிராமணர்களைத் தான் என்கிற சூழலை உண்டாக்கினார்கள் பிராமணர்கள்.
இந்தியாவில் எண்ணற்ற மொழிகள், வட்டார வழக்குகள், பேசு தாய்மொழிகள் ஆகியன வழங்கி வருவதால் இவை அனைத்தையும் கணக்கிடுவது என்பது முடியாத காரியம். மொழியை இனத்தோடு இணைத்து ஆங்கிலேயர் காலத்தில் கணக்கெடுப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஜார்ஜ் கிரியர்சன் இந்தியாவின் மொழியியல் கணக்கெடுப்பை நிகழ்த்தி இருபது வருடங்களில் இந்தியாவில் 179 மொழிகள், 544 வட்டார வழக்குகள் உள்ளதாகப் பன்னிரெண்டு பகுதி தொகுப்பில் தெரிவித்தார். அறுபத்தி ஒன்றில் வெளிவந்த கணக்கெடுப்பு 1,652 பேசு தாய்மொழிகள் இருப்பதாக அறிவித்தது. இதனை முப்பது ஆண்டுகள் கழித்து வந்த கணக்கெடுப்பு 114 மொழிகளுக்குள் பிரித்தது.
அன்விதா அப்பி நாற்பத்தி ஏழு மொழிகளை இந்தி என்கிற பெயரில் வகைப்படுத்தி இருப்பதாக அதிரவைக்கிறார். உதாரணமாக மைதிலி மொழி விடுதலைக்குப் பிந்தைய முதல் இரு கணக்கெடுப்புகளில் இந்திக்குள் அடக்கப்பட்டது. பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழிகளையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டது.
இந்திய மானுடவியல் ஆய்வுக் கழகம் ‘இந்திய மக்கள்’ என்கிற கணக்கெடுப்பை பெருமளவில் மேற்கொண்டு எழுநூறு மொழிகள் நான்கு இந்திய மொழிக்குடும்பங்களைச் சார்ந்திருப்பதாக அறிவித்தார்கள். இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் 325 மொழிகளில் 75 பிராதன மொழிகள் என்று அது சொன்னது. மேலும் இந்தக் கணக்கெடுப்பு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பல்வேறு தாய்மொழிகளைப் பிராதன மொழியோடு சேர்க்கும் வழக்கத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதால் பல்வேறு தாய்மொழிகள் காணாமல் போகச் செய்யப்படுகின்றன எனக் கவலை தெரிவிக்கிறது. 1951 கணக்கெடுப்பில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை நாற்பத்தி இரண்டு சதவிகிதமாக அவாதி, போஜ்புரி, சதீஸ்கரி, பந்தல்கண்டி, கார்வாலி, ஹராவ்தி, ஹரியான்வி, காங்ரி, குமாவ்னி, மகதி, மைதிலி, மேவாரி, பஹாரி, ராஜஸ்தானி மொழிகளை உள்ளடக்கி காட்டப்பட்டது. அடுத்த 1961 கணக்கெடுப்பில் பஞ்சாபி, உருது, இந்துஸ்தானி, மைதிலி, மகதி, போஜ்புரி ஆகிய மொழிகள் தனியாகப் பட்டியலிடப்பட்டதால் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை முப்பது சதவிகிதமாகக் குறைந்தது. கலாசார ரீதியாக ஒன்றாகும் இருக்கும் குழுக்களிடையே கூடப் பல்வேறு மொழிகள் வழங்கி வருவது ‘இந்திய மக்கள்’ திட்டத்தின் மூலம் தெளிவானது.

அனைத்திந்திய வானொலி நூற்றி நான்கு மொழிகளில் தன்னுடைய செயல்பாட்டை மேற்கொள்வது ஒருபுறம், அரசுகள் இருபத்தி இரண்டு மொழிகளில் தங்களுடைய தகவல் தொடர்பை மேற்கொள்கின்றன. ஆதிக்கம் செலுத்துகிற மொழிகளுக்கு வெவ்வேறு மொழிக்குழுவினர் மாறுவது விருப்பதாலோ, சுயமாகவோ நிகழ்வதில்லை., அரசியல் தேவைகள், சமூக மதிப்பு, அடையாளம், பாதுகாப்பு ஆகிய பல்வேறு கூறுகள் இதில் கலந்துள்ளன. இந்தியை தேசத்துக்கான மொழியாக மாற்றுகிற முயற்சி அனைத்திந்திய வானொலியில் அதைக் கட்டாயமாக்குவதன் மூலம் சாதிக்கப்பட்டது. மேலும், திட்டமிட்டு ஹிந்துஸ்தானியின் பாரசீக, அரேபிய சொல்லாக்கங்களைத் துறந்து ‘புனிதப்படுத்தப்பட்டதாக’ சொல்லப்பட்ட சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியையே வானொலி பயன்படுத்தியது.
இந்திய அரசியலமைப்புச் சபை ஆறு வாரங்களுக்கு எது இந்தியாவின் தேசிய/அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்று விவாதித்து வாக்களித்தது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது. மேலும் இந்த இந்தி தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்படும் என்பதோடு, பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் துணை மொழியாகத் தகவல் தொடர்புக்கும், பயன்பாட்டுக்கும் தொடரலாம் என்று முன்ஷி-அய்யங்கார் திட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சட்டப்பிரிவுகள் 343-351 மொழிச்சிக்கலை விரிவாக
எதிர்கொள்கின்றன. ஒரு மொழியை மாநில அரசு அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அம்மொழி பதினைந்து சதவிகித மாநில மக்களால் குறைந்தபட்சம் பேசப்படவேண்டும் எனச் சட்டப்பிரிவு 345வரையறுப்பதைப் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்கள் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தன. ஜனாதிபதி விரும்பினால் ஒரு மொழியை மாநில அரசு அங்கீகரிக்க வழி செய்யலாம் என்று சட்டப்பிரிவு 347 கூறுகிறது. அதே சட்டப்பிரிவு ஒரு மாநிலத்தில் எழுபது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே மொழியைப் பேசினால் மட்டுமே அது ஒரு மொழி பயன்படுத்தும் மாநிலமாக அறிவிக்கப்படலாம் என்று கூறுகிறது.
மாநில அரசின் எல்லைக்குள் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும், இந்தியாவில் பேசப்படும் எந்த மொழியிலும் தன்னுடைய விண்ணப்பத்தை ஒரு குடிமகன் சமர்ப்பிக்கலாம் என்று சட்டப்பிரிவு 350 கூறுகிறது. மொழிச்சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க 350(A), 350 (B), 29(1), 30, 347, 350 சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.
எட்டாவது பட்டியலில் ஆங்கிலத்தை 1959-ல் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது அது இந்திய மொழியில்லை என்று அது தடுக்கப்பட்டது. இந்தப் பட்டியல் என்ன அடிப்படைகளைக் கொண்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளது என்பதில் தெளிவில்லை. ஒரு பகுதியில் பயன்படுத்தப்படும் தனித்துவம், எண்ணிக்கை அளவிலான பெரும்பான்மை, வளம்மிகுந்த கடந்தகாலப் பண்பாட்டு வரலாறு,
திருந்திய மொழி ஆகியன கூறுகள் என்று கொண்டால் நம்மால் முறையே ராஜஸ்தானி, பிரஜ், போஜ்புரி ஆகிய மொழிகள் இப்பட்டியலில் இடம் பெறாததையோ, சிந்தி, கொங்கணி, சம்ஸ்கிருதம் ஆகியன இப்பட்டியலில் இடம்பிடிப்பதையோ விளக்க முடியாது.
பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் பழங்குடியின மொழிகளைப் பற்றித் தெளிவாக அரிய எமானோ சொல்வதைப் போல அவர்களின் இனக்குழு வரலாறு, ஜாதி, பழங்குடியினம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவு ஆகியவற்றை உணரவேண்டும். ஜார்கண்ட், நாகா, மிசோ, காசி இயக்கங்கள் தங்களுடைய இன அடையாளத்தைத் தீவிரமாக மொழியைக்கொண்டே கட்டமைக்கின்றன. பில், புயான், பூமிஜ், முரியா, கோண்டு, மல்பஹரியா, லோதா முதலிய பழங்குடியினர் தங்களின் மொழியை ஒன்று இழந்தோ, அல்லது வேறு மொழிக்கு மாறும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். குவி எனும் திராவிட மொழி பேசும் மத்திய பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கத்தில் பரவியுள்ள மக்கள் அந்தந்த பகுதியின் ஆதிக்க மொழிக்கு நகர்ந்துள்ளனர்.
வரிவடிவத்தில் கூட எண்ணற்ற சிக்கல்கள், போரட்டங்கள் நிகழ்ந்துள்ளன. போடோ மொழியினர் வங்காளி, அசாமி மொழிகளின் வரிவடிவத்தை முதலில் பயன்படுத்தினார்கள். அசாமியர்கள் போராட்டம் நிகழ்த்தி தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயன்ற பொழுது அசாமிய ஆதிக்கத்துக்கு எதிராக அந்த வரிவடிவத்தைப் போடோக்கள் துறந்தார்கள். ரோமானிய வரிவடிவத்துக்கு அவர்கள் மாற முயன்றதை அசாமியர்கள் கடுமையாக எதிர்க்க, மத்திய அரசின் தலையீட்டில் அவர்கள் தேவநாகரி மொழிக்கு மாறினார்கள். கொங்கணி, சந்தாலி மொழிகள் ஐந்து வரிவடிவங்களில் எழுதப்படுகின்றன, சௌராஷ்டிரா, படகா ஆகிய மொழிகள் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்படலாமா என்கிற விவாதமும் உள்ளது.

இந்திய அரசின் மும்மொழிக்கொள்கையும் குறிப்பிட்ட மொழிகள் வளர்வதற்கு மட்டுமே வழிவகைச் செய்கிறது. இந்தி மொழி பிராதனமாக வழங்கும் பகுதிகளில் ஆங்கிலம், இந்தி ஆகியவற்றொரு ஒரு தென்னிந்திய மொழி கற்பது கட்டாயமாக உள்ளது. பிற பகுதிகளில் இந்தி, அவரவரின் தாய்மொழி எட்டாவது பட்டியலில் உள்ள மொழியாக இருந்தால் அதைக்கற்பது, ஆங்கிலம் என்று பட்டியல் சற்றே மாறுபடும். இந்தப் பட்டியலுக்குள் வராமல் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் உள்ளன. அவற்றைப் பேசும் மொழிச்சிறுபான்மையினர் சமயங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு மொழிக்கும் உள்ளார்கள். அன்விதா அப்பி எனும் மொழியியல் அறிஞர் இந்திய அரசு இந்த மொழிகளையும் கற்க நான்கு மொழிக்கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார்.
ஜாதி, மொழிகளுக்கிடையே தொடர்பும் சிக்கலானது. பல்வேறு தனித்த எழுத்துக்கள் தலித்துகளின் பக்கமிருந்து பல்வேறு மொழிகளில் எழுவது ஒருபுறம் என்றால், தலித்துகளில் பலர் ஆங்கிலத்தை அடக்குமுறையில் இருந்து விடுபடும் மொழியாகவும், வாழ்க்கையில் முன்னேறும் வழியாகவும் காண்கிறார்கள்.
டி.கே.ஓமென் தன்னுடைய, ‘தேசம், மக்கள் சமுதாய, சமூக இயக்கங்கள்’ நூலில் பல்வேறு தேசக்குழுக்களை உள்ளடக்கிய இந்தியாவில் கலாசார மறுமலர்ச்சிக்கு மொழியை உகந்த அடிப்படை என்கிறார். மேலும், தமிழோடு திராவிட இந்து மதத்தை, சம்ஸ்கிருதத்தோடு வடக்கின் இந்து மதத்தை, பஞ்சாபிய மொழியோடு சீக்கிய மதத்தை, உருதுவோடு இஸ்லாமிய மதத்தை, பாலியோடு புத்த மதத்தை, ஆங்கிலத்தோடு கிறிஸ்துவ மதத்தைத் தொடர்புபடுத்தி ஒற்றைப்படையாகக் காண்பது தவறாகும்.இந்தியா மாதிரியான வண்ணமயமான, வேற்றுமை மிகுந்த சமூகங்கள் மிக்க நாட்டில் இப்படி ஒரு மதத்தை ஒரு மொழியோடு அடையாளப்படுத்துவது சமூக உறவுகள், அடையாளங்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை மறுதலிக்கும் செயல்பாடாகும். மொழி அரசியலும், அரசியலின் மொழியும் ஒன்றுக்கொன்று நெருங்கி பிணைந்த ஒன்றாகும். ஆங்கிலம், இந்தியாவை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆக்குவதைச் சார்ந்து எண்ணற்ற வன்முறை சம்பவங்கள், போராட்டங்கள், கலவரங்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தச் சிக்கலான பரப்பைப் பற்றி விரிவாக அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.