1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH நூல் அறிமுகம். பாகம் 1:
போர்கள் இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். ஆனால், போர்கள் நடந்து முடிந்த பின்னால் மாபெரும் வெற்றி என்றோ, பெருந்தோல்வி என்றோ கதைகள் எழுதப்படுகின்றன. சிலரை நாயகனாக, சிலரை வில்லனாக ஆக்கும் கருப்பு, வெள்ளை கதைகள் தான் போர்கள் சார்ந்து பெரும்பாலும் உலவி வருகிறது. வரலாறு ஆனால் அத்தனை எளியது இல்லை. ‘போர்களைப் புரிந்து கொள்வோம்.’ என்கிறார் ராணுவ வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன்.

இந்தியாவின் முன்னணி ராணுவ வரலாற்று ஆசிரியரான அவர் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு, 1971 போர் குறித்த சர்வதேச வரலாறு, நேரு காலத்தில் போரும், அமைதியும் என்று வெவ்வேறு தலைப்புகளில் மிக முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். அவரின் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்த நூலை வாசித்து முடித்தேன்.
நூல் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் துவங்குகிறது. இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லை பிரச்சனையைப் போரில் கொண்டு போய்ப் பாகிஸ்தான் நிறுத்தியது. அந்தப் போரை சோவியத் ரஷ்யா சமாதானம் செய்து வைத்து முடித்த ஆறே வருடத்தில் ஏன் இன்னொரு போர் ஏற்பட்டது? மேற்கு, கிழக்கு என்று பாகிஸ்தான் இரு பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. இந்தியா நடுவில் இருக்க, மனதளவிலும், நாடு என்கிற உணர்விலும் வேறுபடும் பல்வேறு தருணங்கள் இரு பகுதிகளுக்கு இடையே நடந்தன.
ஜின்னா 1948 ஆம் வருடம் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்றார். 1956-ல் பாகிஸ்தானின் பிரதமரும், வங்காளி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குவாஜா நஜிமுதீன் உருது மொழி மட்டுமே அதிகாரப் பூர்வ மொழி என்று அறிவிக்க வங்கதேச மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். ரத்த வெள்ளம் ஓடியதற்குப் பின்பு வங்கமொழியும் தேசிய மொழியானது. கிழக்கு பாகிஸ்தானின் சணல் ஏற்றுமதியில் கிடைத்த வருமானம் மேற்கு பாகிஸ்தானை வளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. 1954-1960 காலத்தில் மேற்கின் வளர்ச்சி 3.2% லிருந்து 7.2% ஆக உயர்ந்தது. கிழக்கு பகுதியின் வளர்ச்சி 1.7% லிருந்து 5.2% என்கிற அளவுக்கே உயர்ந்தது. பல்வேறு சலுகைகள் மேற்கு பகுதிக்கே வாரி இறைக்கப்பட்டன. அதிகாரம் பெரும்பாலும் மேற்கு பாகிஸ்தான் வசமே இருந்தது.
வங்கதேசம் என்கிற நாடு உருவாக இந்த மாற்றாந்தாய் மனோபாவமே காரணம் என்று சொல்லப்பட்டாலும் வங்கதேச உருவாக்க வரலாறு என்பது ஸ்ரீநாத் ராகவனின் பார்வையில், ‘சந்தர்ப்பம், தற்செயல், தேர்வு, வாய்ப்பு’ ஆகியவை ஒருங்கே கைகூடி வந்ததால் உண்டான ஒன்று. பாகிஸ்தானை அறுபதுகளில் அயூப் கான் ஆண்டுக் கொண்டிருந்தார். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மாணவர்களுக்குப் பல்கலையில் கல்வி புதிய விழிப்புணர்வை தந்தது. ஒரு முறை தேர்வில் தவறினால் ஒரே முறை மட்டுமே மீண்டும் தேர்வு எழுத அனுமதி முதலிய விதிகள் கடும் அதிருப்தியை உண்டு செய்தன. 86.5 லட்சமாக இருந்த வறியவர்கள் எண்ணிக்கை 93.3 லட்சமாக உயர்ந்து நின்றது. தலைமை பொருளாதார அறிஞரின் வார்த்தைகளில், நாட்டின் 66% தொழில்வளம், 87% வங்கி, காப்பீட்டு வளங்கள் 22 குடும்பங்களிடம் குவிந்து கிடந்தன.
ஒரு சிறு பொறி தான். பல்வேறு இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். நாடே ரணகளம் ஆனது. எதிர்ப்பின் வெம்மை தாங்காமல் அயூப் கான் விலகி யாஹ்யா கான் எனும் ராணுவத் தளபதிக்கு வழிவிட்டார். ஜனநாயகம், புது அரசமைப்புச் சட்டம் வரும்வரை மட்டுமே தான் பதவியில் இருப்பேன் என்று யாஹ்யா கான் வாக்குத் தந்தார். தேர்தல் வந்தது.

கிழக்குப் பாகிஸ்தானில் அவாமி முஸ்லீம் லீகின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆறு அம்சத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று போர்க்குரல் கொடுத்தார். உண்மையான கூட்டாட்சி வேண்டும், ராணுவம், வெளியுறவு ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும், இரு தனித்தனி நாணயங்கள், தனி நிதிக் கொள்கைகள், தனி அயல்நாட்டுப் பரிவர்த்தனைகள் நிகழ அனுமதி வேண்டும். கிழக்கு பாகிஸ்தானுக்குத் தனிப்படையை வைத்துக்கொள்ள அங்கீகாரம் வேண்டும் என 1966-ல் கொடுத்த கோஷங்களை மீண்டும் எழுப்பினார். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் அவர் பின்னால் அணிவகுத்தார்கள். மேற்கு பாகிஸ்தானில் பூட்டோ களத்தில் இருந்தார்.
தேர்தல் முடிவுகள் வந்தன. யாரும் எதிர்பாராத வகையில் முஜிபுர் ரஹ்மானின் கட்சி கிழக்குப் பாகிஸ்தானில் 160/162 என்று வென்று இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் 81/138 என்கிற அளவிலேயே பூட்டோ கட்சி வென்றது. ஆட்சி அமைக்க முஜிபுர் உரிமை கோரினார். பூட்டோவுடன் இணைந்து ஆட்சி அமையுங்கள் என்று யாஹ்யா கான் அடம்பிடித்தார். சிந்தும், பஞ்சாபும் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்துவிடும், ஆகவே, முஜிபுரின் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்று பூட்டோ கிளம்பினார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க தேசிய கவுன்சிலின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று முஜிபுர் கோரினார். இவர்களுக்கு அதிகாரத்தைத் தரவேண்டுமா எனக் கடுப்பாக யாஹ்யா கான் பார்த்தார். ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.
ஆறு அம்ச திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முஜிபுர் உறுதியாக இருந்தார். தேசிய கவுன்சிலை காலவரையறை இல்லாமல் ஒத்தி வைத்தார் யாஹ்யா. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்துவது போலப் பாவனைச் செய்துகொண்டே, படைகளை ஆசீர்வதித்துக் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பிணங்கள் விழுந்தன. மொத்தமாக அப்பகுதியின் அமைதி குலைந்து போனது. அப்பகுதி மாணவர்கள் அமர் சோனா பங்களா (என் இனிய பொன் வங்கமே) எனும் தாகூரின் பாடலை தேசிய கீதம் என அறிவித்தார்கள். தனி நாடு என முழங்கினார்கள்.
முஜிபுர் தனி நாடு என்று எங்கேயும் உச்சரிக்கவில்லை. ராணுவச்சட்டத்தை நீக்கிவிட்டு, படைகளைத் திரும்பப் பெறுங்கள். ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடுகள் மீது விசாரணை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரத்தைக் கைமாற்றுவது ஆகிய கோரிக்கைகளை மட்டுமே அவர் வைத்தார். அது நிச்சயம் முடியாது என்று யாஹ்யா-பூட்டோ செயல்களால் சொன்னார்கள். ராணுவத்துக்கு இறங்கி ஆடுங்கள் என்று உத்தரவு தந்தார் யாஹ்யா. முஜிபுர் கைது செய்யப்பட்டார். படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அரங்கேற ஆரம்பித்தன.
பரவலாக இந்தியாவில் சொல்லப்படும் கதை, இந்திரா வங்கதேசத்தைக் கச்சிதமாகத் திட்டமிட்டு சாதித்தார் என்பதே ஆகும். ஆனால், வரலாறு வேறு வகையாக இருக்கிறது. இந்திரா பாகிஸ்தானில் பிரச்சனை ஆரம்பித்த பொழுது, தன்னுடைய கட்சியில் ஏற்பட்ட பிளவை சமாளிக்கப் போரடிக் கொண்டு இருந்தார். ‘வறுமையே வெளியேறு’ என்கிற கோஷத்தோடு அவர் மீண்டும் மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருந்தார்.
வங்கதேசம் என்கிற நாடு உருவாக வேண்டாம் என்பதே முதலில் இந்தியாவின் கருத்தாக இருந்தது. தனியாக உருவாகும் வங்கதேசம் அப்படியே மேற்கு வங்காளத்தையும் சேர்த்துக்கொண்டால் என்னாவது என்பது முதல் கவலை. அடுத்து அசாம் வேறு கிளம்பலாம் என்பது அடுத்தக் கவலை. காஷ்மீர் உள்நாட்டு சிக்கல் என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவிட்டு, இப்பொழுது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது எப்படி என்பது அடுத்தத் தலைவலி. நைஜீரியாவின் BIAFRA எனும் பிரிவினை இயக்கம் நடைபெற்ற பொழுது அரங்கேறிய இனப்படுகொலைகளை ஐநா கண்டுகொள்ளவில்லை.ஆகவே, தனி நாட்டை எல்லாம் எதற்கு உருவாக்கி தலைவலியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே இந்தியா நினைத்தது.
மேலும், இந்திய ராணுவத் தளபதி மானெக்ஷாவின் கூற்றுப்படி, ‘ஏதேனும் செய்யுங்கள் தளபதி. உடனே போர் தொடுங்கள். போர் ஆரம்பித்தாலும் கவலையில்லை.’ என்று இந்திரா கெஞ்சிக்கேட்டும் அவர் போகவில்லை. ஆனால், இது உண்மையில்லை என்று ஆவணங்கள் நிரூபிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் நவீனமயமாகி இருந்தது. 90-120 நாட்கள் இந்தியாவுடன் போர் செய்யும் அளவுக்கு அதனிடம் வலிமை இருப்பதாக இந்திராவிடம் அறிக்கை தரப்பட்டு இருந்தது. ‘ஆயுதங்களைக் குவித்துக்கொண்டு போரில் பருவமழைக்குப் பின்னர் இறங்கலாம். அப்பொழுது பனிக்காலம் என்பதால் இமயமலையைக் கடந்து சீனா வர முடியாது.’ முதலிய வாதங்களை மானெக்ஷா வைத்தததால் இந்திரா பின்வாங்கினார் என்று ராணுவத் தளபதி சொன்னாலும், இந்திராவோ, அரசின் அதிகார மையங்களோ போரில் குதிப்பதை பற்றி அப்பொழுது யோசிக்கவே இல்லை என்பதே உண்மை.
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் அகதிகள் என்கிற எண்ணிக்கையில் பல லட்சம் மக்கள் இந்தியாவிற்கு இனப்படுகொலையால் தஞ்சம் புகுந்தார்கள். அதிலும் இந்துக்களைக் குறிவைத்து தாக்குவது தொடர்ந்தது. வந்த அகதிகளில் 80% இந்துக்கள் என்பது இதனைத் தெளிவுபடுத்தும். ஆனால், இதை இப்பொழுது வெளிப்படுத்தினால் இதை ‘இந்து-முஸ்லீம்’ பிரச்சனையாகப் பாகிஸ்தான் மாற்றும் என்று இந்திரா உணர்ந்திருந்தார். வாஜ்பேயியை அழைத்து, இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். IDSA அமைப்பின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் உடனே இறங்கி அடித்தால், வெற்றி பெற்றுவிடலாம். ஒரு தனி நாட்டை உருவாக்கிவிடலாம் என்று அறிவுரை சொன்னார். யாரும் கேட்பதாக இல்லை.
இதற்குச் சற்று முன்பு தான் ரஷ்யா-சீனா உறவு உருக்குலைந்து இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவில் ராணுவத்தைக் கொண்டு அரசை அடித்துத் துவம்சம் செய்த கையோடு சோவியத் ரஷ்யா ‘பிரெஷ்னேவ் சாசனம்’ என்று ஒன்றை அறிவித்தது. உலகில் எங்கெல்லாம் சோசியலிசம் சரியாக அமல்படுத்தப்படவில்லையோ அங்கெல்லாம் வந்து சரி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. சீனாவுக்கு வியர்த்தது. உசுரி நதிக்கரையில் இருபடைகளும் மோதிக்கொண்டன. பலத்த சேதத்தை இரு தரப்பும் சந்தித்தன. மீண்டும் சில மோதல்கள். உறவு முறிந்து போனது.
அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கர் அகமகிழ்ந்து போனார். யாஹ்யா கானை அழைத்துச் சீனாவுடன் உறவு ஏற்படுத்த உதவுமாறு கேட்டார். தூதுவராக யாஹ்யா சென்று /வந்தார். சீனா பொறுமையாகவே அடியெடுத்து வைத்தது. இன்னொருபுறம் அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவிற்குப் பயணம் வந்து போனார். ‘செவ்வாய் கிரகத்துக்குச் சேர்ந்து போவோம்.’என்றெல்லாம் உற்சாகம் பொங்க பேசினார். ஆனால், 1965 போருக்குப் பின்னால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு ஆயுத விநியோகம் கிடையாது என்கிற விதியை தற்காலிகமாகப் பாகிஸ்தானுக்கு மட்டும் தளர்த்தினார். சீனா லட்சியம்.
கிழக்குப் பாகிஸ்தானில் நிலைமை மோசமாகி இருந்தது. சட்டத்தைத் தூக்கிப்பிடித்து, மாகாண சுயாட்சியைத் தரவேண்டும் என்று முஜிபுர் தரப்புக் கேட்டாலும், மூன்றே கட்சிகள் தான் இனி இருக்கும். அவாமி லீக் தடைசெய்யப்பட்டது. முஜிபுர் பொதுவாழ்வில் ஈடுபட வாழ்நாள் தடை என்று அறிவித்தார் யாஹ்யா. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க என்று தானே ஒரு குழுவை வேறு நியமித்தார். கண் துடைப்பு என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்குத் தெரியும். ராணுவ டாங்கிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டு இருந்தன.
ரஷ்யா-இந்தியா போட்டுக்கொண்ட இருபது ஆண்டுகால நட்புணர்வு, ஒத்துழைப்பு ஒப்பந்தம் தான் அமெரிக்கா-சீனாவை இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபடாமல் தடுத்தது என்பது பரவலாகச் சொல்லப்படுவது. உண்மையில் நடந்தது இன்னும் சிக்கலானது. சோவியத் ரஷ்யா ஒரு தனி நாடு உருவாவதை விரும்பவில்லை. சீனாவின் ஆதிக்கத்தை அது அதிகப்படுத்தும் என்பது ஒரு கவலை. இரண்டாவது நீர்த்துப்போன பூர்ஷ்வாக்கள் என்றே வங்கதேசம் நாடி போராடியவர்களை அவர்கள் நம்பினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக அமெரிக்கா-ரஷ்யா இருவரும் இந்தச் சிக்கலை அணுகியதில் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. அமெரிக்கா இதைப் பனிப்போரின் நீட்சியாகக் கண்டது. ரஷ்யாவோ அகதிகள் சிக்கல் தனி, பாகிஸ்தானின் அரசியல் சிக்கல் தனி என்று பிரித்துப் பார்த்தது.
இந்தியாவுடன் அந்த ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ளலாம் என்று வெகுகாலமாக ரஷ்யா கேட்டது. எனினும், உள்நாட்டில் நிலைமை தனக்குச் சாதகமாக இல்லாத சூழலில் அதனை அப்பொழுதைக்குச் செய்ய இந்திரா மறுத்தார். கிஸ்ஸிங்கர், ‘இந்தியா பாகிஸ்தான் மீது பாய்ந்தால் சீனா அதன் உதவிக்கு வரும்.’ என்று இந்திய தூதுவர் L.K.ஜாவை எச்சரித்தார். அவ்வளவு தான். வெகுகாலமாக இழுத்தடித்து ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போட்டது.

பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக இருந்த அந்தோணி மாஸிகரென்ஸ் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்று பார்த்த பொழுது பத்து நாட்களில் எப்படிப்பட்ட இனப்படுகொலை நடக்கிறது என உணர்ந்து /கொண்டார். தன்னுடைய நாட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறினார். லண்டனின் ‘சண்டே டைம்ஸ்’ இதழில் இனப்படுகொலை என்கிற தலைப்பில் 5000 வார்த்தைகளில் அவர் எழுதிய கட்டுரை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அம்மக்களுக்கு அனுதாபம் பெருகியது.

மோசமான பொருளாதாரச் சிக்கலில் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. தரவேண்டிய கடன்கள் கழுத்தை நெரித்தன. பொன்முட்டை கிழக்குப் பாகிஸ்தான் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. உலகம் முழுக்க இருந்த வங்காளிகளைப் பணம் அனுப்ப வேண்டாம் என்று போராளிகள் கேட்டுக்கொண்டது வேறு பெரிய சேதத்தை உண்டு செய்தது. அமெரிக்கா நான் இருக்கிறேன் என்று நிதியுதவி செய்தது. சீனா மசிந்து கொடுத்து விடாதா என்று ஓரமாக வேறு கவனித்துக் கொண்டிருந்தது. சீனா என்ன தான் நினைத்துக் கொண்டிருந்தது?
சீனப்போருக்கு பின்னரும் இந்திய-சீன உறவினில் சிக்கல்கள் தொடர்ந்தன. எல்லையில் சமயங்களில் மோதிக்கொண்டன. சீனா உறவை சீர் செய்யலாம் என முயன்ற பொழுது இந்திரா அதற்கு ஒப்பவில்லை. இன்னமும் சீன வெறுப்பு உச்சத்தில் உள்ளது என உணர்ந்திருந்தார். எனினும் தொடர்ந்து சீனாவுடன் இந்தியா தொடர்பில் இருந்தது. சீனா பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரின் கில்கிட் பகுதியில் சாலையை அமைத்த பொழுதும் இந்தியா பெரிதாக எதிர்க்கவில்லை.
சீனா பற்றியெரிந்த கிழக்குப் பாகிஸ்தான் சிக்கலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. காரணங்கள் பல. ரஷ்யாவை போலவே சீனாவும் வங்கப்போராளிகளைப் பூர்ஷ்வாக்கள் என எண்ணியது. சீன பாகிஸ்தான் உறவின் முதல் விதையைப் போட்டது சுஹ்ரவர்த்தி எனும் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரதமர். அப்பகுதியில் பலர் சீன அனுதாபிகளாக இருந்தார்கள். மேலும் 2 சீன ஆதரவு கட்சிகள் கிழக்குப் பாகிஸ்தானில் செயல்பட்டன. உள்நாட்டுப்போர் தன் ஆதரவாளர்களை அழித்து ஒழிப்பதையும் சீனா கண்டது. சீனா நேரடியாகக் களத்தில் இறங்கவோ, பெரிதாகவோ மிரட்டவில்லை. காரணம் மாவோ!
கலாச்சாரப் புரட்சியின் என்கிற பெயரில் பல லட்சம் சீனர்கள் இறக்க காரணமானார் மாவோ. கட்சி, அரசு ஆகியவற்றுக்கு எதிராக ராணுவத்தைக் களமிறக்கியதன் மூலம் ராணுவம் நாட்டில் முதன்மையானது என்கிற நிலையை உண்டாக்கினார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வரவிருப்பது லின் பியாவோ எனும் ராணுவ தளபதி எனக் கருதப்பட்டது. மாவோவிற்கு அரிப்பெடுத்தது. தன் நாற்காலி ஆட்டம் காண்பதாக உணர்ந்தார். லின் பியாவோவை எப்படியேனும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று காய்கள் நகர்த்தினார். அவரோ அசராமல் அரசுக்கு நேர்மையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அவரின் மகன் அவசரப்பட்டு ஒரு கிளர்ச்சியை நடத்த முயன்றார். மாவோ அனைவரையும் ஒழித்துக்கட்ட கிளம்பினார். லின் பியாவோ தப்பித்து ஓட வேண்டியதாயிற்று. ராணுவத்தின் பெருந்தலைகள ஒழித்துக் கட்டிவிட்டு பெருமூச்சு விட்டார் மாவோ. அதே காலத்தில் தான் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரில் தள்ளாடிக்கொண்டு இருந்தது.

இந்தியா கொரில்லா போர் முறையைப் போராளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தது. முக்தி பாஹினி, முஜிப் வாஹினி என இடதுசாரிகளைக் கொண்ட படை எனப் பிரிந்து கிடந்த பல்வேறு குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. எனினும் அது போதுமானதாக இல்லை. ஒரு கோடிக்கும் மேல் அகதிகள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். எவ்வளவு தான் தாங்குவது? என இந்தியா உலக நாடுகளிடம் கேட்டது. ஐநா சில எச்சரிக்கை, கொஞ்சம் களப்பணி என்பதோடு நின்று கொண்டது. இரு வல்லரசுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன.
இந்தியா தன்னுடைய வீரர்களைச் சத்தமே இல்லாமல் போராளிகள் இடையே கலந்து மறைமுகப் போரை நடத்திக்கொண்டு இருந்தது. பாகிஸ்தான் மேற்கு பக்கமிருந்து இந்தியாவைத் தாக்கியது. ஒரு பெண் ஆளும் தேசம் தானே எனக் கொக்கரித்தார்கள். ‘CRUSH INDIA’எனக் கார்களில் அணிந்து கொண்டு திரிந்தார்கள். ஒரு முஸ்லீம் பத்து இந்தியர்களுக்குச் சமம் என நம்பினார்கள்.
போர் துவங்கியது என இந்தியா அறிவித்தது. மேற்கு எல்லையைக் காத்துக்கொண்டு கிழக்கில் படைகள் முன்னேறின.சிட்டகாங், குல்னா முதலிய துறைமுகங்களைக் கைப்பற்றுவது; முக்கிய நதி வழித்தடங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவது; நெல்லிக்காய் மூட்டையைக் கலைப்பது போலப் பாகிஸ்தான் வீரர்களைப் பிரித்து நசுக்குவது எனத் திட்டம் வகுக்கப்பட்டது. எனினும் டாக்காவை கைப்பற்றும் திட்டமில்லை. பத்மா, ஜமுனா, மேக்னா என ஏதேனும் ஒரு நதியை கடந்தாக வேண்டிய பெரும் சவால் இருந்தது. முடிந்தவரை பகுதிகளைக் கைப்பற்றி அங்கே தற்காலிக அரசை கொண்டுவருவது என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. எனினும் ஒரு வித்தியாசமான வெற்றிக் காத்திருந்தது.
ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த வேண்டும்; தங்களின் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டும்; அரசியல் தீர்வு நோக்கி நகர வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சாரம் இந்தியாவிற்கு இதிலென்ன வேலை. ரஷ்யா வீட்டோ மூலம் தடுத்தது. பொதுச் சபையில் 104-11 எனத் தீர்மானம் நிறைவேறி இந்தியா அழுத்தத்துக்கு ஆளானது.
அமெரிக்கா கொதித்தது. சீனா களமிறங்க வேண்டும் எனத் தூண்டி விட்டார்கள். வாயை மட்டும் மென்றது சீனா. ஆயுதங்களை அமெரிக்கா நேரடியாகக் கொடுக்கத் தடையிருந்தபடியால் ஈரான் ஜோர்டான் மூலம் முயன்றது. ரஷ்யாவுக்குப் பயந்து கொண்டு ஈரான் நேரடியாக ஆயுதங்கள் அனுப்ப மறுத்தது.
‘சீக்கிரம் முடித்துத் தொலையுங்கள்’ என இந்தியாவிடம் சோவியத் ரஷ்யா சொன்னது. அமெரிக்கா தன்னுடைய மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை இந்தியப்பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. இந்தியப்படைகளுக்கு உத்வேகம் தரும் வகையில் ஒன்று நடந்தது.

கிழக்குப் பாகிஸ்தானில் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் படைகளின் மேஜர் ஜெனரல் ராவ் ஃபர்மான் அலி கான் ஒரு கோரிக்கை கடிதம் எழுதினார். உடனே போர் நிறுத்தம், 72 மணிநேர பரஸ்பர அமைதி, ராணுவ வீரர்கள், மக்கள் ஆகியோரை அவரவரின் பகுதிகளுக்கு அனுப்ப அனுமதிப்பது, பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக எந்தத் தண்டனையும் அளிக்கப்படக்கூடாது என நீண்ட அதன் செய்தி- ‘தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான்!’. யாஹ்யா கான் அதைக் கிழித்துப் போட்டாலும் வீடு கலகலத்து விட்டது.
டாக்கா நோக்கி இந்தியப்படைகள் விரைந்தன. போலந்து போரை நிறுத்தவும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சோவியத் ரஷ்யாவின் நட்பு நாடு அது. செய்தி இந்தியா முடித்துக் கொள்ளவும் என்பதே அது. பிரிட்டன் பிரான்ஸ் என இந்திய ஆதரவுப்போக்கு நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்தன. போலந்து தீர்மானத்தில் முஜிபுர் ரஹ்மான் உடன் தான் பேச்சுவார்த்தை எனும் அறிவுறுத்தல் வரைவில் இருந்தாலும் இறுதி வடிவில் இல்லாமல் போயிருந்தது. இந்தியாவிற்கு வேலையில்லை, வங்கதேசம் கனவு என்பது செய்தி.

போலந்து தீர்மானத்தை ஏற்கவும் என யாஹ்யா ஐநாவில் இருந்த பூட்டோவுக்குத் தொலைபேசியில் உத்தரவிட்டார். ‘ஹலோ என்ன கேக்கலையே’ என மழுப்பினார் பூட்டோ. ‘தெளிவாகக் கேட்கிறது’ என்ற ஆபரேட்டரை வாயை மூடும்படி பூட்டோ சொன்னார். போலந்து தீர்மானத்தைக் கிழித்துப் போட்டார். 93000 பாகிஸ்தான் படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். பூட்டோவுக்கு ராணுவம் வலுவிழந்து தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான காய் நகர்த்தலை முடித்த திருப்தி. வங்கதேசம் உருவானது.
அமெரிக்கா இந்தியாவிடம் சீனா உதவிக்கு வரும் எனப் பொய் சொல்லாமல் போயிருந்தால் இந்தியா ரஷ்யாவோடு ஒப்பந்தம் செய்திருக்காது. சீனாவின் உள்நாட்டுக் குழப்பம் தடுத்திருக்காவிட்டால், அமெரிக்கா பாகிஸ்தானை திவாலாகாமல் காத்திருக்காவிட்டால், போலந்து தீர்மானத்தைப் பூட்டோ கிழிக்காமல் இருந்திருந்தால் வங்கதேசம் உருவாகியிருக்காது.
ஊழல், செயல்திறமின்மை முஜிபுர் ரஹ்மான் ஆட்சியில் மிகுந்து போராட்டங்கள் வெடித்தன. அவசரநிலையைக் கொண்டு வந்தார். குடும்பத்தோடு ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியா சுப்ரமணியம் சொன்னதைப்போல முதலிலேயே போரில் அடித்து ஆடியிருந்தால் பல லட்சம் மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். ராணுவம், அரசியல்வாதிகள், இடதுசாரிகள், கட்சிகள் இடையே அவநம்பிக்கை மிகுந்திருக்காது. நாடு விடுதலைக்குப் பின்பு அப்படி அவலங்களைச் சந்திருக்காது. வங்கதேச உருவாக்கம் இந்திராவின் மகத்தான ராணுவ வெற்றி, மிக மோசமான ராஜதந்திர தோல்வி.

1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH
ஶ்ரீநாத் ராகவன்
பக்கங்கள் 358
விலை 599
PERMANENT BLACK