Dunkirk- திரையில் ஒரு போர்க்களம்


நோலனின் Dunkirk திரைப்படத்தைப் பார்த்து முடித்தேன். இரண்டாம் உலகப்போரின் ஆரம்பக் கட்டத்தில் வடக்குப் பிரான்சில் ஒரு சிறிய நிலப்பரப்பில் சிக்கிக்கொண்ட நான்கு லட்சம் பிரிட்டன் வீரர்களைப் பத்திரமாக நாடு திருப்புவது தான் கதையின் மையக்களம். ஜெர்மானிய படைகள் ஜலசமாதி கட்ட முயல்கையில் கடற்கரை, வானம், கடல் என்று மூன்று இடங்களில் நடக்கும் வாழ்வுக்கும், மரணத்துக்கும் இடையேயான போராட்டம் திரையில் விரிகிறது.

லகப்போரின் படபடப்பை ஒரு களத்தின் மூலமாக நோலன் கடத்தியிருக்கிறார். திரைப்படத்தில் வசனங்கள் அரிதாகத்தான் இடம் பெறுகின்றன. டன்க்ரிக் தெருவில் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பித்து விட ஓடிவரும் டாமி, இறந்து போன வீரரின் பிணத்தைப் புதைத்துக் கொண்டிருக்கும் கிப்ஸன் ஆகியோருடன் கடற்கரையில் இருந்து பிரிட்டன் திரும்பும் வலிமிகுந்த பயணம் துவங்குகிறது. கப்பல்கள் ஜெர்மானிய வான்படையால், நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்படுகின்றன.

Image may contain: 1 person, text
‘ஒரு ஸ்ட்ரெச்சரில் காயப்பட்ட வீரர் ஒருவரை தாங்கிக்கொண்டு இருக்கும் இடத்தில் ஏழு வீரர்கள் நிற்கலாம்’ என்கிற வரிக்குப் பின்னால் அத்தனை வேதனை தொனிக்கிறது. ‘கைகோர்த்துப் பிரான்ஸ் வீரர்களோடு நடப்போம்’ என்கிற பிரிட்டன் அவர்களைத் தவிக்க விடுவதும், பிரான்ஸ் வீரன் ஒருவன் தப்பி உள்ளே நுழைவதும் என்று காட்சிகள் நகர்கின்றன. வானிலும் குறைந்த எரிபொருளோடு ஒரு மகத்தான போரை பிரிட்டன் படைகள் புரிகின்றன. பல லட்சம் வீரர்களை மீட்க சிறிய படகுகள் உயிரை பணயம் வைத்து டன்கிர்க் நோக்கி பயணிக்கின்றன.

கண் முன்னே உயிர்கள் இறக்கையில் கண்ணீர் கூட விட முடியாமல், தப்பித்து ஓட முடியாமல் வீரர்கள் சிக்கிக்கொண்டு நிற்பது போரின் வெம்மையைக் கடத்துகிறது. ‘நான் எதையுமே இதுவரை வாழ்க்கையில் சாதித்ததில்லை’ என்று போர்க்களம் நோக்கி சிறு படகில் வரும் சிறுவனுக்கு ஏற்படும் துயரமும், அதை ஒட்டி அலைபாயும் கோபம், மனிதம், அடக்கப்பட்ட கண்ணீர் என்று கலவையான உணர்ச்சிகள்.

வாழ்க்கையின் வீழ்ச்சிகளை அள்ளிக்கொள்ள நேரமில்லாமல், கடைசித் துண்டு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு மனிதர்கள் ஒரு பெரும் போராட்டத்தில் பங்கு கொள்கிறார்கள். உயிருக்காகப் பயந்தபடி மற்றவர்களை மரணத்தின் வாயில் ஒப்படைக்கச் சிலர் முயல்கிறார்கள். ஒற்றைக் கோப்பை தேநீர் கூட எத்தனை கதகதப்பை தரமுடியும் என்பது காட்சிகளால் கடத்தப்படுகிறது. இருக்கிற கொஞ்சநஞ்சம் பலத்தைக் கொண்டு சாகசங்கள் புரிகிற வீரர்களும், மனிதர்களும் ஆங்காங்கே மென்மையாக, உறுதியாக நடுக்கங்கள் இடையே கம்பீரமாக நிற்கிறார்கள்.

பின்வாங்கி வீடு திரும்புகையில் அவமானமும், ஏளனமும் வரவேற்கும் என அஞ்சுகிறவர்களை மகத்தான மானுட நம்பிக்கை தழுவி கொள்கிறது. முகங்களைத் தடவி ‘வெல்டன்’ என்கிற முதியவரின் மகன் போரில் இறந்து போயிருக்கலாம். தன்னுடைய ஆற்ற முடியாத வேதனையை மறைத்துக் கொண்டிருக்கலாம். எத்தனை பெரிய தோல்வியிலும் நம்பிக்கைக்கான விதைகள் இருக்கும் என்பதைச் சர்ச்சிலின் வரிகள் எதிரொலிக்க விடப்பட்டு உணர்த்தப்படுகிறது. எனினும், இது மகத்தான உலகப்போர் படங்களில் ஒன்றா என்றால் இல்லை என்றே சொல்வேன். இது நோலனின் சிறந்த படமாக இருக்கலாம். ஆனால், இது ஆழமற்ற கடற்கரையில் நிகழும் நீச்சல் என்பதே சரி. பெரிதாக ரத்தம் கொப்பளிக்காத, அதே சமயம் போரின் வலியை, அதன் ஊடாகத் ததும்பி வழியும் மானுட உணர்ச்சிகளை, மாண்புகளை உணர இப்படத்தைப் பார்க்கலாம்.

— with Christopher Nolan.

போலியோ பிணி தீர்த்த ஜோன்ஸ் சால்க்


போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு
? எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி
தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.

முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க
வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும் வேகப்படுத்தியது.

உலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.

பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான்
தூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில்
கொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.

யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில்
இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.

சால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி
உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?”. அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது 

உலகப்போர் நாயகன் ரூஸ்வெல்ட் !


பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் பிறந்த தினம் இன்று . அமெரிக்கா கண்ட ஜனாதிபதிகளில் ஈடு இணையற்ற இடம் இந்த மனிதருக்கு உண்டு . இவர் ஆட்சிக்கு வந்ததே மிகவும் சிக்கலான ஒரு கட்டத்தில் ;கிரேட் டிப்ரசன் என பொருளாதார நிபுணர்களால் குறிக்கப்படும் காலம் அது . 

மக்கள் பிச்சைக்காரர்கள் ஆகி இருந்தார்கள் ; பசி வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது;கால்வாசி மக்கள் வேலை இழந்து இருந்தார்கள ; முப்பது எட்டு மாகணங்களில் வங்கிகள்மூடப்பட்டு இருந்தன , புது ஒப்பந்தம் ஒன்றை உங்களுக்கு கையளிக்கிறேன் என சொல்லி தேர்தலில் நின்றார் இவர். மக்கள் நம்பி வாக்களித்தார்கள் .ஜனாதிபதி ஆனதும் எழுச்சி மிக்க வகையில் எதையாவது சொல்ல வேண்டும் ;பக்கம் பக்கமாக பேசினால் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை . ,”நாம் அச்சப்பட வேண்டியது அச்சப்படுவதற்கு மட்டுமே “என முழங்கினார் .நாட்டை மறு புனரமைப்பு செய்தார் ;டென்னசி நீர்த்திட்டத்தை கொண்டு வந்தார் ;வேலையில்லாதவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தோடு அரசு வேலை தந்தார் ;நிறுவனங்கள் போட்டியிடாமல் இருக்கும் வண்ணம் சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தினார் .

வங்கிகளை நெறிப்படுத்தும் வேலைகளை செய்தார் . நாடு வளர்ச்சி பாதையில் நடக்க ஆரம்பித்தது . உலகப்போர் சமயத்தில் மனிதர் நேரடியாக போரில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார் . எனினும் போரிடும் நாடுகளுக்கு பொருட்களை உற்பத்தி செய்து விற்று கொள்ளை லாபம் பார்த்தார்கள் அமெரிக்கர்கள் . பியர்ல் ஹார்பரில் ஜப்பான் புகுந்து அடித்து நொறுக்கியது தான் திருப்பம் .

முக்கியமான ராணுவத்தளம் பெருமளவில் துவம்சம் ஆனதால் நாடு அவ்வளவு தான் என பலர் நினைத்தார்கள் . மூத்த தளபதி ,”நாம் இனி எழுவது கடினம் ப்ரெசிடென்ட் என்ற பொழுது போலியோவால் பாதிக்கப்பட்ட இடுப்புக்கு கீழே முழுக்க முடங்கி சக்கர நாற்காலியிலேயே தன் வாழ்க்கையை கழித்து வந்த ரூஸ்வெல்ட் சில நொடிகள் கம்பீரமாக எழுந்து நின்று ,”நான் எழுந்து நிற்க முடியமென்றால் என்னருமை அமெரிக்காவும் எழுந்து நிற்கும் என்றார் .

சத்தமே இல்லாமல் போருக்கு தயாராகி களத்தில் குதித்தது . முரண்பட்ட ரஷ்யாவோடு பொது எதிரி என ஹிட்லரை குறித்துக்கொண்டு ராஜ தந்திர ரீதியில் சேர்ந்து செயலாற்றினார் . போரில் நாடு வெல்லும் தருணத்தை நெருங்கிய நிலையில் மரணமடைந்தார் .அமெரிக்காவில் நான்கு முறை தொடர்ந்து ஜனாதிபதி ஆன பெருமை இவருக்கே உண்டு .அதற்கு பிறகே ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி ஆகக்கூடாது எனும் விதி வந்தது . இவரின் மரணத்தின் பொழுது ராணுவ விதிகளை மீறி கண்ணீர் விட்டபடியே இசைக்கருவியை வாசிக்கும் ராணுவ வீரனின் புகைப்படம் போதும் இவர் எத்தகு தலைவராக தன் மக்களுக்கு திகழ்ந்தார் என சொல்லும். அவரின் பிறந்தநாள் இன்று

சர்ச்சில் 360 டிகிரி ;)


வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் ஜனவரி இருபத்தி நான்கு . உலகப்போரின் மாபெரும் நாயகர்களில் ஒருவராக கொண்டாடப்படும் மனிதர் இவர் . இந்தியா உட்பட பல தேசங்களில் ஆங்கிலேய அரசின் சார்பாக வீரராக பணியாற்றிய இவர் அப்பாவின் பின்புலம் கைகொடுக்க அரசியலில் குதித்து 1900 இல் எம் பி ஆனார் . ஆனால்,ஒரு காலத்திற்கு பிறகு இவரின் அரசியல் செல்வாக்கு மங்கியது .

அப்பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதை எதிர்த்தே அரசியலில் கவனம் பெற ஆரம்பித்தார் . கன்சர்வேடிவ் கட்சியின் பால்ட்வின் அமைச்சரவையில் கருவூலம் இவர் கட்டுப்பாட்டில் வந்தது . 1940 களின் ஆரம்ப கட்டத்தில் ஹிட்லரோடு ஜாலியாக பேசி சிக்கல்களை தீர்த்துவிடலாம் என நம்பிக்கொண்டிருந்த சாம்பர்லைன் அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்தார் .

நாடு முழுக்க அவரின் வழ வழ,கொழ கொழ பாணி எதிர்ப்புக்கு உள்ளாக இவர் பிரதமர் ஆனார் . உலகப்போரில் பிரான்ஸ் வீழ்ந்து இருந்தது ;இங்கிலாந்தில் குண்டுகள் வீசப்பட்டன . இவரே பல சமயம் பயந்து கொண்டு வானொலி நிலையம் போன கூத்தெல்லாம் நடந்தது .

“நான் உங்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை -உதிரம்,வியர்வை,உழைப்பு, கண்ணீர் ஆகியவற்றை தவிர” என சொல்லி மக்களை உசுப்பேற்றினார் . எங்கெங்கும் போராடுவோம் ;இறுதிவரை போராடுவோம் என எழுச்சி ஊட்டினார் .

வீரர்களின் கூடாரம் ஒன்றிற்கு போனார் -ஒரே நிமிடம் ,”நெவெர் நெவெர் அண்ட் நெவெர் கிவ் இன் !”என சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டார் .ஒரு மாபெரும் வீரராக ஆங்கிலேயர் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் இவர் தன் நாடு அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவுக்கும் அடுத்த நிலையிலேயே இருப்பதை உணர்ந்தே இருந்தார். நம்பிக்கையோடு நாட்டை வழிநடத்தினாலும் உண்மையான போர் நிலவரங்களை அறிந்துகொள்ள தன்னை புகழ்கிற நபர்களை ஒதுக்கி வைத்துவிட்டு லண்டனுக்கு வெளியே தனி இலாகா ஒன்றை அமைத்து அதனிடமிருந்து நிதர்சனமான தகவல்களை பெற்றார்.

பல களங்களில் அமெரிக்காவின் “lend-lease “உதவி இல்லாமல் போயிருந்தால் பிரிட்டன் திண்டாடி இருக்கும். காலனி நாடுகளின் வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நிலை ஏற்பட்டிருக்கும் . அடிபட்டாலும் அடிபடாத மாதிரியே விக்டரிக்கான வி முத்திரையை காட்டினார் .

சர்ச்சிலுக்கு ஷாம்பெய்ன்’ இல்லாமல் பொழுது போகாது. கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். ஒருமுறை அமெரிக்கா போயிருந்த பொழுது அவரை கொலை செய்ய தீட்டப்பட்டிருந்த திட்டத்தை கண்டறிந்த மேனஜேர் அதை அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்லவேண்டும் என்ற பொழுது ,”முதலில் ஷாம்பெய்ன் பாட்டிலுக்கு ஆர்டர் சொல்லுங்கள். குடித்துவிட்டு போலீசிடம் சொல்லிக்கொள்ளலாம் !” என்றார் சர்ச்சில்

இந்தியாவுக்கு விடுதலை தருவதை வலிமையாக எதிர்த்தார் ;காந்தியை அரைநிர்வாண பக்கிரி என கொச்சையாக விமர்சனம் செய்தார் ; காந்தி உண்ணாநோன்பு இருந்த பொழுது “இன்னும் சாகவில்லையா இவர் ?” என வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார் .

அவரின் நையாண்டி வெகு பிரசித்தமானது. ஒரு பெண்மணி நாடாளுமன்றத்தில் ,”நீங்கள் என் கணவராக இருந்திருந்தால் விஷத்தை கொடுத்திருப்பேன் உங்களுக்கு !” என்று சொல்ல ,”நீ என் மனைவியாக இருந்தால் விஷத்தை குடித்து நிம்மதியாக கண்ணை மூடியிருப்பேன் !” என்றார் இவர்

பெர்னார்ட் ஷா இவரை தன் நாடகத்துக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகளை அனுப்பி அழைத்திருந்தார். கூடவே ஒரு சீட்டும் இணைத்திருந்தார். ,”உங்கள் நண்பருடன் வரவும் ! அப்படியொருவர் இருந்தால் !” இவர் டிக்கெட்டுகளை திருப்பி ஒரு துண்டுசீட்டை மட்டும் இணைத்து அனுப்பினார். “நாளை வரமுடியாது. அடுத்த வாரம் வரப்பார்க்கிறேன். அதுவரை நாடகம் இருந்தால் !”

இந்தியா மக்கள் பஞ்சத்தால் இறந்த பொழுது உணவுக்கப்பல் அனுப்பமாட்டேன் என சொல்லி பல லட்சம் மக்களை சாகவிட்டவர் இவர் . உலகப்போரில் இங்கிலாந்தை வெற்றியடைய செய்தாலும் இவரை விட்டு நாட்டை மறுநிர்மாணம் செய்ய அட்லியை மக்கள் பிரதமர் ஆக்கினார்கள் .

மீண்டும் பத்து வருடம் கழித்து பிரதமர் ஆனார் .இவரின் எழுத்து அசாத்தியமானது .உலகப்போர் பற்றிய இவரின் நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது . மூன்று தடவை மாரடைப்பு,எட்டு தடவை நிமோனியா ஆகியவற்றில் இருந்து தப்பி சாதித்த சர்ச்சில் உடல் நிலை கெட்டு இதே நாளில் 90 வயதில் மரணமடைந்தார்