பலே பலே ஃப்ளாஷ்பேக் !


‘தேர்வுகள் நெருங்கிவந்திருச்சே’ என லேசாக உதறல் இருக்கிறதா? இதோ, பிரபலங்களின் வாழ்க்கையில் இருந்து சில ‘எக்ஸாம் பூஸ்டர்’ செய்திகள்…

ஆங்கிலத்தில் தோற்ற ஆர்.கே.நாராயணன்

பள்ளிக் கல்வி முடித்த, ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் என்ற ஆர்.கே.நாராயணன், பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்தார்.  நுழைவுத் தேர்வில் ஆங்கிலத்தில் தோற்றுப்போனார். ஆனாலும், தொடர்ந்து முயன்று, மகாராஜா கல்லூரியில் இடம் பிடித்தார். அங்கேயும் ஒரு வருடம் கூடுதலாக எடுத்துக்கொண்டே பட்டம் பெற்றார். ஓயாத உழைப்பு, வாசிப்பு, வாழ்க்கை அனுபவங்கள் என்று அவர் கலந்து உருவாக்கிய கதைகள், ஆங்கில இலக்கிய உலகில் இன்றைக்கும் போற்றப்படுகின்றன.

பெரிதினும் பெரிதாக அப்துல் கலாம்

கல்லூரியில் வினாத்தாள் லீக் ஆனதால், பட்டம் பெற ஓர் ஆண்டு கூடுதலாகக் காத்திருக்க நேர்ந்தது. விமானிகள் தேர்வுக்குச் சென்ற கலாமுக்கு ஒரே ஒரு கிரேடு அதிகம் வந்திருந்தால், விமானி ஆகியிருப்பார்.  கண்ணீர் மல்க, கங்கையில் குளித்துவிட்டுப், புதிய உத்வேகத்தோடு புறப்பட்டார். விண்ணோடு நேசம் பூண்டார். இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தந்தை ஆனார்.

 தாமதமாக வென்ற டிராவிட்

டிராவிட், பள்ளிக் காலத்தில் கிரிக்கெட் ஆட நிறைய நேரம் செலவு செய்தார். இதனால், ‘படிப்பில் கோட்டைவிட்டுவிடுவார்’ என்று பெற்றோர் பயந்தார்கள். தலைமை ஆசிரியர்தான் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார். விளையாடிவிட்டு டிராவிட் வந்ததும் நண்பர்கள், ஆசிரியர்கள் உதவினார்கள். அழகாகப் படித்துத் தேறினார். கிரிக்கெட்டிலும் ஐந்து வருட உழைப்பு, பல்வேறு தடைகளுக்குப் பின்னரே இந்திய அணிக்குள் நுழைந்தார்.  இப்படிப் பிற்காலத்தில் சொன்னார்… ”கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது, தரவே மாட்டார் என்று அர்த்தம் இல்லை.”

 நிராகரிப்பில் ஈஃபிள்

அலெக்ஸாண்டர் குஸ்டவ் ஈஃபிள் (Alexandre Gustave Eiffel) படிக்க ஆசைப்பட்டு, பொறியியல் கல்வி நிறுவனத்துக்கு விண்ணப்பம் போட்டார். கணக்கில் மட்டும் இன்றி, எல்லாவற்றிலும் பையன் வீக் என்று சொல்லி, கல்லூரியில் இடம் தர மறுத்தார்கள். அழுகை அழுகையாக வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு வெளியேறினார். நம்பிக்கை, கவனித்தல், கட்டடங்களின் மீதான ஆசை என எல்லாமும் சேர்ந்து, அவரை சாதனையாளர் ஆக்கியது. அவர் படைத்த அற்புதங்கள்தான் ஈஃபிள் கோபுரம், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை.

மதிப்பெண் குறைந்த ராமானுஜன்

ஸ்ரீனிவாச ராமானுஜன், இளம் வயதில் கணிதத்தின் மீது காதல்கொண்டது, தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்ற பிறகுதான் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். கணிதத்தில் அவரது நண்பன் சாரங்கபாணி, 45-க்கு 43 வாங்கியிருந்தார். ராமானுஜன், அவரைவிட ஒரு மதிப்பெண்தான் குறைவாக வாங்கினார். அதனால், கல்லூரி மாணவர்கள் படிக்கும் கணிதப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். லோனி (Loney)  எழுதிய ‘மட்டத் திரிகோணவியல்’ என்கிற நூலையும் கார்(carr)எழுதிய ‘சினாப்சிஸ்’ நூலையும் படித்தார். அதன் உள்ளடக்கங்கள் தந்த உத்வேகத்தில் தீவிரமாக இயங்கினார். விரைவிலேயே கணிதத்தில் சாதனைகள் படைத்து, கணித மேதை என்று புகழப்பட்டார்.

தேர்வைத் தவறவிட்ட ரபேல்

ரஃபேல் நடால், டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆடுவதில் இளம் வயதிலேயே புலி. தொடர்ந்து கலக்கிக்கொண்டு இருந்தவரை, ”ஒழுங்காகப் பாடங்கள் படி” என்றார் அப்பா. இவரும் நல்ல பையனாக அப்படியே படித்தார். ஒரு தேர்வு நேரத்தில் விமானத்தில் புத்தகங்களோடு சென்றபோது, அவற்றைத் தவறவிட்டார். வருத்தத்தோடு இருந்த ரஃபேலிடம் அவரது தந்தை, ”மகனே, அந்தத் தேர்வு இருக்கட்டும். டென்னிஸ் உலகம் காத்திருக்கிறது கிளம்பு” என்றார். இப்போது, மிகவும் இளம் வயதில் நான்கு கிராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர், ரஃபேல்.

எதற்கும் அசராத ரெய்மான்

பல்கலையின் பேராசிரியருக்கான தேர்வு அது. பெர்னார்ட் ரீமென் (Bernhard Riemann) காத்திருந்தார். வானையே பார்க்காமல், எந்த நட்சத்திரம் எங்கே தோன்றும் என்று கணக்குப் போட்டே சொன்ன மாமேதை, காஸ்(Gass)வந்தார். மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை ரீமெனுக்குத் தரவேண்டும். அப்போது, மிகக் கடினமான துறையாகப் பார்க்கப்பட்ட வளைபரப்புகள் சார்ந்த தலைப்பை அவருக்குத் தந்தார் காஸ். அசராமல் ஆய்வுகள் செய்து, அந்தத் தேர்வில் வென்றார் ரீமென். அதன் அடிப்படையில் எழுந்ததுதான் சார்பியல் தத்துவம்.

 சவாலை சந்தித்த மைக்கலாஞ்சலோ

மைக்கலாஞ்சலோ (Michelangelo) இத்தாலியின் பெரிய சிற்பி. போப் திடீரென்று அவரை அழைத்தார். ”ரோம் நகரில் உள்ள சிஸ்டின் தேவாலயத்தின் மேற்கூரையில் பைபிள் காட்சிகளை ஓவியமாகத் தீட்ட வேண்டும்” என்று உத்தரவு போட்டார். அது, மிகவும் சவாலான பரீட்சை. ஒப்புக்கொண்டார் மைக்கலாஞ்சலோ. கண்களை நெருக்கி, கடினப்பட்டு ஓயாமல் உழைத்து, ஓவியங்களை வரைந்தார். அன்றைய இத்தாலியின் தலைசிறந்த ஓவியரும், ஏஞ்சலோவைப் போட்டியாளராகக் கருதிய ரஃபேல், அவற்றைப் பார்த்தார். ”இத்தனை சிறப்பான ஓவியங்களைப் பார்த்ததே இல்லை. கண்ணீர் கோத்துக்கொள்கிறது ஏஞ்சலோ, உன் திறமைக்குத்  தலைவணங்குகிறேன்” என்றார்.

 

மின்சார் யுகத்தின் நாயகன் நிகோலா தெஸ்லா !


நிக்கோலா தெஸ்லா… செர்பியாவில் பிறந்த இவர் அறிவியலில் கடந்த
நூற்றாண்டின் தலைசிறந்த ஆளுமை என்றால் அது மிகையில்லை. எடிசனுக்கும் பலபடிகள் மேலே தெஸ்லா என்பதே சரி. எடிசனிடம் முதலில் வேலைக்கு சேர்ந்தார். இவர் கண்டுபிடித்த எண்ணற்ற கண்டுபிடிப்புகள் எடிசனின் கணக்கில் சேர்ந்தன. எடிசனின் ஆற்றல் குறைவான நேர்திசை மின்னோட்ட மோட்டாரை
தான் சிறப்பாக மாற்றிக் காண்பிக்கிறேன் என சொல்ல, அவர் அப்படி செய்தால் ஐம்பதாயிரம் டாலர் தருவதாக சொல்ல… இவர் முடித்தபொழுது,”அது ஒரு ஜோக்!”என்றார். சம்பளத்தை எடிசன் கொஞ்சமே கொஞ்சம் ஏற்ற கோபமாக வெளியேறினார்.

மார்கோனி உருவாக்கிய ரேடியோ இவரின் பதினேழு காப்புரிமை செய்யப்பட்ட பொருட்களைகொண்டே உருவாக்கப்பட்டது. நேர்திசை மின்னோட்டத்தை எடிசன் பயன்படுத்தி மின்சார விநியோகத்தை செய்துகொண்டு இருந்தபொழுது எதிர்திசை மின்னோட்டத்தை உபயோகப்படுத்தி அதிக தூரம் மின்சாரத்தை மெல்லிய
மின்கம்பிகளின் மூலம் கொண்டு செல்ல முடியும் என தீர்க்கமாக சொன்னார். அவ்வாறே எடிசனை விட்டுப்பிரிந்த பின் உருவாக்கி காட்டினார். அயனி மண்டலத்தில் இருந்து மின் சக்தியை எடுத்து உலக மக்கள் அனைவருக்கும் மின்சக்தியானது தண்ணீர் போல கிடைக்கச் செய்யலாம் என உறுதியாக சொன்னார்.

ரேடார், ரேடியோ எக்ஸ் ரே ஆகியவற்றில் முதலில் ஆய்வுகள் செய்த முன்னோடி இவர். உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கியதும் இவரே. ரிமோட் கண்ட்ரோல், நிலஅதிர்வு அளக்கும் கருவி என இவர் உருவாக்கியவை ஏராளம். எடிசனின் பல்புகள் சந்தையை முற்றுகையிட்ட காலத்தில் அதைவிட பல மடங்கு
திறன் மிகுந்த நியான் பல்புகளை இவர் உருவாக்கினார். இவர் தான் ஈட்டிய பணத்தையெல்லாம் ஆய்வுகளிலேயே செலுத்தினார்.

சாகிறபொழுது கடனாளியாக இறந்து போனார். இறுதிவரை தான் கண்டுபிடிததவற்றின் மூலம் பொருளீட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்ததே இல்லை. அறிவியல் மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதில் தெளிவாக இருந்த தெஸ்லா யாரும் கவனிக்க ஆளில்லாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார். எளிய மக்களுக்காக சிந்தித்த மின்சார யுகத்தின் தந்தை இவரே. அவரை நினைவுகூரும் விதமாக காந்தப்புல அலகு அவரின் பெயரால் வழங்கப்படுகிறது.