கடவுளின் மரணமும், சாத்தானின் ஆசியும்


ஒரு கரம் கூட வேண்டாம்
திருப்பிக்கொள்ளும் முகங்களின் கரங்கள் நாடி நின்றது போதும்
ஒரு ஆறுதலை மறுதலிப்பது எளிது
உற்றவர் அகன்றதும் உருளும் நீர்த்துளி விழுவதற்குள்
நடக்கப்பழகுவது நலம்
பிரியங்கள் பச்சாதாபமாகத் தெரிவதற்குள் ஒரு தற்கொலைக் கடிதம் முடித்துவிடு
கடித முடிவில் பெயர் எழுதுவதற்குள் கணம் கணமாய்ச் சாவதற்கு ஆயத்தம் ஆகு
நடுக்கங்கள் தலைதட்டி சிரிக்கையில் பூனைக்குட்டியிடம் பொங்கி அழு
நக்கியபடி நகரும் அந்தப் பிராணியின் கண்களில் ஒளிரும் காலம் ஒரு வாதை
திறக்கப்படாத குறுஞ்செய்தியை அழிப்பதாகத் தனிமைகள் தீர்ப்பது இருப்பதில்லை
வசந்தகாலங்கள் வருகையிலும் வெம்மைகள் விரித்தாடும் பள்ளத்தாக்கின் முனையில் அமர்ந்தபடி கதைத்து முடி
ஒரு கரம் கூட வேண்டாம்
ஒரு கடவுளின் மரணம் கடப்பதற்குள் சாத்தானின் ஆசிகளைப் பொறுக்கியபடி அடுத்தப் பிரிவிற்கு, விடை கொடுத்தலுக்கு விண்ணப்பம் எழுது

‘wall’வாங்கு வாழும் வார்த்தைகள்!


 

Rahul Dravid அவர்களின் உரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே:
ஓய்வு பெற்ற பொழுது திராவிட் பேசியது
கிரிக்கெட் குறித்த என்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது. அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தருவது; கண்ணியத்தோடு ஆடுவது, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பது ஆகியவையே அவை. இவற்றில் சிலவற்றையேனும் நான் இறுதிவரை மேற்கொண்டேன் என்று நம்புகிறேன். நான் சமயங்களில் தோற்றிருக்கிறேன், ஆனால், எப்பொழுதும் முயல்வதை நிறுத்தியதே இல்லை. அதனால் தான் நான் சோகத்தோடு விடைபெற்றாலும் பெருமிதத்தோடும் கொடுக்கிறேன்! –பிசிசிஐ விழாவில் அணி குறித்தும். தன்னை உத்வேகப்படுத்தியவர்கள் குறித்தும் திராவிட் குறிப்பிட்டது:

சமயங்களில் சில வீரர்கள் மிகப்பெரும் சாதனைகளைத் தங்களின் உழைப்பு, தியாகம் ஆகியவற்றால் அடைகிறார்கள். ஆனால், அவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும் உள்ளார்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் என்று நீங்கள் எண்களைக் கொண்டேனும் கருதாத பலருடன் நான் விளையாடி இருக்கிறேன். ஆனால், என்னுடைய பார்வையில் இந்த விளையாட்டை என்னுடைய ஆடிய அனைவரும், வெற்றிப் பெறவேண்டும் என்று போராடிய அனைவரும், வெல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தோடு தங்களாலான அனைத்தையும் தந்த அனைவருமே நாயகர்கள் தான். உங்களிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து ஓயாமல் உழைத்தும் தாங்கள் விரும்பியது கிடைக்காமல் போனாலும், மீண்டும், மீண்டும் துவளாது போராடும் உங்களைக் காண்பதே எனக்கு உத்வேகத்தை எப்பொழுதும் தந்தது… இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அதை மட்டுமல்ல வெகுகாலம் நம்மிடையே இருந்த பரஸ்பர நம்பிக்கை, நட்பு, குறும்பாக ஒருவரை ஒருவரை வாரிக்கொண்ட கணங்கள், அந்த ஓயாத தேடல் எல்லாவற்றின் இன்மையையும் ஆழமாக உணர்வேன்…ஆனால், தாளமிடவைக்கும் இசை என்னோடு இருக்கும் என எண்ணுகிறேன்.

பிராட்மான் நினைவு சொற்பொழிவில் தனக்கும். பிராட்மானுக்கும் இடையேயான தொடர்பு குறித்து:

அவரும் என்னைப் போலவே மூன்றாவதாகக் களமிறங்கும் மட்டையாளர். அது மிக, மிகக்கடினமான பணியாகும்.

நாங்கள் தான் கிரிக்கெட்டின் அரசர்களுக்கான வழிப்பாதையைச் செப்பனிட்டு, எளிமையாக்கி தருகிறோம். என்னைவிடப் பிராட்மான் அதனை அதிக வெற்றி, அலாதியான பாணியோடு செய்தார். அவர் பல்வேறு பந்து வீச்சாளர்களைச் சிதறடித்து, இருக்கையின் நுனிக்கே பார்வையாளர்களைக் கொண்டுசென்றார். நான் எவ்வளவு நேரம் ஆடினாலும். மக்கள் சலிப்புற்று உறங்கப்போய்விடும் வாய்ப்புகளே அதிகம். என்றாலும், இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நெடுங்காலம் ஆடியதே பெருமைதான். அதன் அளவுகோல் என்பது தான் மிகச்சேர்ந்த மட்டையாளருக்கான அளவுகோல் என்று நான் அறிவேன். அது போதும் எனக்கு!


பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் பேசிய ‘காத்திருப்பு’ பற்றிய உரை:
என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு என்னைக் கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியைப் பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன். டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளைச் சந்தித்துச் சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்,
“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”(“God’s delays are not God’s denials.” ).

திரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களைத் தைரியமாக எதிர்கொள்ளச் செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாகச் சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்தக் காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …

ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதைக் கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாகப் பெருவளர்ச்சிக்கு அது தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டு அது தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றைச் சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி

“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”((“God’s delays are not God’s denials.” ).

திலீப் சர்தேசாய் நினைவுச் சொற்பொழிவில் பேசியதன் சுருக்கம்:

என்னுடைய கிரிக்கெட் காதல் என் தந்தை என்னிடம் சொன்ன கிரிக்கெட் சாகசங்களில் இருந்தே துவங்கியது. சுனில் கவாஸ்கர் இருபத்தி ஒரு வயதில் தெளிவான ஆட்டம், கச்சிதமான நுட்பம், நேரான மட்டைப்பிடிப்பு ஆகியவற்றோடு தன்னுடைய முதல் தொடரிலேயே நான்கு சதங்கள், மூன்று அரைச் சதங்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்ததை அவர் கண்கள் மின்ன சொல்வார்.

எனக்கு ஒரு தாராப்பூர் கிடைத்ததைப் போலச் சச்சினுக்கு ராம்காந்த் அச்ரேகர் இருந்தார். சச்சினை தன்னுடைய பைக்கின் பின்புறம் வைத்துக்கொண்டு அவரை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் ஆடவைத்த கதை எல்லாம் எங்களுக்குள் சற்று பொறாமையை உண்டு செய்தன. இவர்கள் எல்லாம் எதையும் கைமாறாக எதிர்பார்க்கவில்லை என்பதே ஆச்சரியம் தருகிறது. பெங்களூரில் ஒட்டுமொத்த வலைப்பயிற்சியின் பொழுதும் நின்றுகொண்டு, ஓடிக்கொண்டு, கிரீசை தாண்டி காலை வைக்கும் பந்துவீச்சாளரின் தலைமுடியை பற்றும் பாசாக்கார துரைசாமியை காணலாம். அவருக்கு வயது அதிகமில்லை, எண்பது தான்! நாற்பது வருடங்களாக டெல்லியில் கிரிக்கெட்டை ஒரு தவமாகப் பயிற்றுவித்து வரும் தரக் சிங்கை நினைத்துப் பார்க்கிறேன்.

எங்கள் காலத்தில் வீரர்களிடையே இருந்த உறவை சொல்லியே ஆகவேண்டும். இருபத்தி இரண்டு மணிநேரம் கழிப்பறைக்கு அருகில் ரிசர்வ் செய்யப்படாத இருக்கைகளில் ரயில் பயணங்களை அணியினரோடு மேற்கொண்டு இருக்கிறேன். கர்நாடக ரஞ்சி அணி இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிப் பெட்டியில் பயணிக்கும். எங்களிடம் ஐபாட்கள், ப்ளே ஸ்டேஷன்கள், பிறரிடம் பேசாமல் இருக்கச் செய்யும் வாக்மேன்கள் இல்லை. சீட்டு விளையாட்டு, டம்ப்ஷாரட்ஸ், இன்றைக்கு நீங்கள் கேட்கத் தயாராக இல்லாத பாடல்களால் நிறைந்த பயணங்கள் அவை.

எண்ணற்ற மூத்தவர்களிடம் இப்படிப்பட்ட ரயில் பயணங்களில் நாங்கள் பல்வேறு பாடங்களைப் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஒரு புது நுட்பமும், பாணியும் புரிந்திருக்கும். ..மும்பை ஆட்டக்காரர்களை ‘khadoos’ என்பார்கள். அதை எப்படி மொழிபெயர்ப்பது? அழுத்தமானவர்கள்? விடாக்கண்டர்கள்? தலைவணங்காதவர்கள்? சலிக்காதவர்கள்? அல்லது இவற்றுக்கு இடைப்பட்ட ஒரு சொல்? இல்லை இவை அனைத்தையும் இணைத்த ஒரு சொல்?

இந்தச் சொல்லை மொழிபெயர்க்க முடியாதது போல, ஒரு பிள்ளை இந்தச் சொல் குறிப்பதைப் போல மாற நாம் பாடம் நடத்த முடியாது. அதை இதற்கு முன் ஆடிய அனைத்து மும்பை ஆட்டக்காரர்களின் ‘khadoos’ தன்மையைப் பற்றிப் பகிர்வதாலே சாத்தியம். இரு வகையான பந்து வீச்சாளர்களை இடது, வலது என்று மாறி மாறி பேட்டிங் செய்து எதிர்கொண்ட சுனில் கவாஸ்கரின் சாகசத்தைக் கட்டுரைகளும், ஸ்கோர்கார்டுகளும் சொல்லிவிடாது. பேட்டிங்கில் அளப்பரிய திறனை வாய்மொழி பாரம்பரியம் மூலம் ஒரு இளைஞன் கேட்டறியும் பொழுதே இதனைப் பெறமுடியும்.

வாசு ப்ரஞ்சாபே எனும் மும்பையின் கிரிக்கெட் கதைசொல்லி ஹனீப் முகமது பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. பிராபோர்ன் மைதானத்தில் ஹனீப் மட்டையால் முன்னோக்கி வந்து செய்யும் தடுப்பின் அற்புதமான சப்தம் சர்ச்கேட் வரை எதிரொலிக்கும். அதைக் கேட்டதும் அப்படிப்பட்ட தடுப்புக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

சர்தேசாய் இறக்கின்ற நாள் அன்றுகூட லெக்ஸ்டெம்ப் நோக்கி வரும் ஷார்ட் பாலை எப்படி நான் எதிர்கொள்வது என்று சிசிர் ஹட்டங்காடியிடம் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே பேசிக்கொண்டிருந்தார் என்று எண்ணுகிற பொழுது விதியோடு ஒரு போர் நடக்கிற பொழுதும் கிரிக்கெட் அவரின் ரத்தத்தை உசுப்பேற்றிக்கொண்டிருந்தது என்று சொல்லத்தோன்றுகிறது.

இந்த வாய்மொழிக் கதைகளில் நம்பிக்கைகள், அணுகுமுறைகள், அறிவின் சேமிப்புக் கிடங்குகள் எல்லாம் இணைந்து நம்முடைய கிரிக்கெட்டின் அடையாளத்தைத் தருகின்றன…இந்தியாவின் வண்ணமயமான கிரிக்கெட் கதை இன்னமும் எழுதப்படுகிறது…அதை மேலும் வளப்படுத்துங்கள்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

சி.வி.ராமனிடம் படிக்க பத்து பாடங்கள் !


திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். 
அவரிடம் படிக்க பத்து பாடங்கள் 
எங்கிருந்தும் சாதிக்கலாம் :
படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.

வாசிப்பை நேசி!
அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

பிடித்ததில் பிணைந்திடு!
இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், ‘பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, ‘இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!
அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, ‘இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

உலகை உற்றுக் கவனி!
மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, ‘கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

நம்பிக்கையோடு முன்னேறு!
இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். ‘அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!
ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ”அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே” என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!
”கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ”கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே” என்றார் ராமன்.

துணிவு கொள்!
ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்’ என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!
”ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்” என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சீன மூங்கிலும்,கடவுளின் மறுப்பும்-இது திராவிடின் கதை !


என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு என்னை கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியை பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாக படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன். டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னை தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளை சந்தித்து சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்,
“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”(“God’s delays are not God’s denials.” ).

திரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொள்ள செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாக சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்த காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …

ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதை கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்த செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாக பெருவளர்ச்சிக்கு அது தன்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டு அது தன்னை காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றை சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி

“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”((“God’s delays are not God’s denials.” ).

சார்ல்ஸ் டார்வின் தந்த வெளிச்சம் !


உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை ,”இது தவறு !”என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும்.அது டார்வினிடம் இருந்தது . சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்ற
போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்து
கொண்டிருந்தார்.

தட்டான்பூச்சி,மண்புழுக்கள்,பட்டாம்பூச்சி,வண்டுகள்,அணில்கள்,புறாக்கள் என்று இவற்றை சேகரித்து ஆய்வு செய்கிற ஆர்வம் சிறுவனாகவே அவரிடம் இருந்தது. அப்பா நொந்தே போனார் “உனக்கு படிக்கவே வரலை ; நாய் பின்னாடி ஓடுறது .எலி பிடிக்கிறது இதுதானா உனக்கு தெரிஞ்சது .குடும்ப மானமே உன்னால போகுது !”எனத்தன் மகனைப்பார்த்து சொன்னார் அந்த அப்பா .

அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின் அங்கே சிறுவன் ஒருவன் கதற கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார் . (அப்பொழுது மயக்க மருந்து
பயன்படுத்தப்படவில்லை ). கூடவே அங்கேயும் போய் எலிக்கு நான்கு மீசை இருக்கிறது,தவளைக்கு கால்கள் சவ்வு போல உள்ளன என்றெல்லாம் குறிப்புகள் எடுத்தார். அப்பாவின் ஆலோசனைப்படி இயற்கையியல் வல்லுநர் ஆனார்.

தென் அமெரிக்காவின் கனிம வளங்களை காணச்சென்ற HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகை சுற்றி வந்த பொழுது பல்வேறு அற்புதங்களை கண்டார்;பல விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார் .அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார் .சில அழிந்திருந்தன
;அவையே ,மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார் . என்றாலும் இவற்றை இணைத்து அவரால் உடனே பார்க்க முடியவில்லை.


அப்பொழுது ஒரு பறவையின் மூக்கு அவருக்கு அறிவின் சாளரங்களை திறந்து விட்டது. காலபாக்கஸ் தீவுகளில் பின்ச் பறவைகளை கண்டார். ஒரு தீவில் கடலையை கொத்த பட்டையான மூக்கோடு ஒரு தீவிலும்,எலியை தின்ன கூர்மையான
மூக்கு இன்னொரு தீவிலும்,புழுவை வளைந்து நெளிந்து சாப்பிட வளைந்த மூக்கும் இருப்பதை கண்டார். ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்’ என்று சொன்னார்.

பதினேழாயிரம் விலங்கு,பறவை,படிமங்கள்,பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளை அவர் பெற்றிருந்தாலும் வாயைத்திறக்கவே இல்ல டார்வின். பத்து ஆண்டுகள்
அமைதியாக இருந்தார். எக்கச்சக்க எதிர்ப்புகள் வரும் என்று அவருக்கு
தெரிந்திருந்தது. வாலஸ் என்கிற அறிஞரும் இதே போல இயற்கைத்தேர்வை பற்றி எழுதியிருந்தார். அவரின் தாள்கள் தொலைந்து போயிருந்தன. இருந்தாலும்
டார்வின் அவர் பெயரையும் இணைத்தே வெளியிட்டார். மனிதனை கடவுள் படைத்தார் என்பதில் இருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக்கொள்கை அதில் தான் இருந்தது.


அவர் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின்மூன்று முக்கிய கூறுகளை அவர் விளக்கினார்

1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது )

2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு
எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி )

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில்,பல்வேறு குணங்களில்
உண்டாகும் மாறுபாடுகள் )

பரிணாம கொள்கையை கேட்டு உலகமே ஸ்தம்பித்தது.பலர் ஏற்றுக்கொண்டனர்;இவரை குரங்கு என சித்தரித்தார்கள் பல மதவாதிகள் ; பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். அவரின் பிறந்தநாளை பேய் தினம் என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை
டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின்
நூலைத் தூற்றினார்கள்

மதத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என சொன்ன அவர் ,கடவுளை பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை . அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இன்றைக்கு தான் 154 ஆண்டுகளுக்கு முன் ORIGIN OF SPECIES என்கிற தன் ஆய்வுத்தாளை சமர்ப்பித்தார். “உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான்
நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்”என சொன்ன அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார்

‘நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக்கிடக்கத் தயார்’ என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது. ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது.