மொழி அரசியல் பகுதி-6 கன்னட மொழி அரசியல் வரலாறு


கன்னட மொழி அரசியல் குறித்த ஜானகி நாயரின் கட்டுரை ‘LANGUAGE AND POLITICS IN INDIA’ நூலில் உள்ள கட்டுரைகளிலேயே முக்கியமானது எனலாம்., ஐம்பது பக்கங்களில் நீளும் அதன் சுருக்கத்தை இங்கே தந்தாலும், அதன் மூலத்தை முடிந்தவர்கள் வாசிக்கவும்.


புத்தாயிரம் வருடத்தின் ஜூலை 3௦ அன்று வீரப்பன் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்திய பொழுது நகரமே மூன்று நாட்களுக்கு மயான அமைதி கொண்டது. அவர் கடத்தப்பட்டு இருந்து நூற்றி எட்டு நாட்களும் பந்த்கள், உருளும் சேவைகள், பூஜைகள், கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நகரத்தில் ஒரளவுக்கு வன்முறையும் இந்தக் காலத்தில் ஏற்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பன் தன்னுடைய கடத்தல் நாடகத்தில் கன்னட, தமிழ் தேசியங்களை எதிரெதிராக நிறுத்த முயன்றான்

.

நிலம், வேலைகள், நதிநீர் என்று பல்வேறு சிக்கல்களில் மோதிக் கொண்ட வரலாறை இருபது வருடங்களாகக் குறைந்தபட்சம் கொண்டிருந்த இம்மாநிலங்களுக்கு இடையே பகையை மேலும் வளர்க்கும் வகையில் அவனுடைய நிபந்தனைகள் இருந்தன. காவிரி நதிநீர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு, 91 நடந்த காவிரி கலவரங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடு, தமிழை நிர்வாக மொழியாகப் பெங்களூரில் பயன்படுத்துவது, வள்ளுவர் சிலையை அந்நகரில் திறப்பது, சிறப்பு அதிரடிப் படையின் அட்டூழியங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவ கமிட்டியின் மீதான நீதிமன்றத் தடையை நீக்குவது ஆகியன அதில் அடங்கும். தோட்டத்தொழிலாளர்களுக்கு இரு மாநிலங்களும் 15௦ ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் அவன் வைத்தான்.

பெங்களூர் வாழ் தமிழர்கள் தங்களை வீரப்பனின் கோரிக்கைகளில் இருந்து விலகியவர்களாகக் காட்டிக்கொண்டார்கள். பெங்களூரில் உள்ள தமிழ் சங்கங்களின் வேண்டுகோளுக்குச் செவி மடுக்காத கர்நாடக அரசு தற்போது வீரப்பனின் நிபந்தனைகளை ஏற்க முனைவதை தமிழ் சங்க தலைவர் ஆர்.எஸ்.மாறன் விமர்சித்தார். அரசின் கட்டுப்பாட்டை விட்டு போய்விட்ட இந்த விஷயங்களில் அரசு மீண்டும் தன்னுடைய பிடியை கொண்டுவரவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

ராஜ்குமார் கடத்தப்பட்டது ஒட்டுமொத்த கன்னட மொழியின் பெருமையைக் கடத்தியதற்கு ஒப்பாகும் என்று பல கன்னட அமைப்புகள் கொதித்தன. கன்னட பெருமையும் , கன்னட மொழி அரசியலும் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைக் குறித்து விரிவாகப் பேசவேண்டி இருக்கிறது. மைசூர் அரசு ஆங்கிலேய ஆளுகைக்குக் கட்டுப்பட்டு இருந்தாலும் தனித்தே ஆட்சி செய்துவந்தது. நவீன வசதிகளைத் தன்னுடைய ஆட்சிப் பகுதியில் அவ்வரசு கொண்டு வந்தது. எனினும், தங்களுடைய மைசூர் மாகாண தேசியத்தில் மொழிப்பற்று இல்லை என்று அல்லூர் வெங்கட் ராவ் முதலிய அறிஞர்கள் கருதினார்கள், கன்னட சாஹித்ய பரிஷத் அமைப்பு மைசூரின் பொருளாதார வளர்ச்சிக்காக விஸ்வேஸ்வரய்யா தலைமையில் நூறு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பொழுது அது கன்னட மொழி வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பி.எம்.ஸ்ரீ கேட்டுக்கொண்டார்.

கன்னடமே உயர்ந்த மொழி என்கிற கருத்து மைசூர் மாநிலத்தில் நிலவிய பொழுதும், கேரளாவை போல நூலக இயக்கங்களின் மூலமோ, கல்வி இயக்கங்களின் மூலமோ மக்களைத் தாய்மொழியில் பெருமளவில் படிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. முப்பதுகளில் கன்னட ஆசிரியரின் நிலைமை கவலைக்குரியதாகவே இருந்தது. ஆங்கிலமே அறிவியல், தொழில்நுட்பம்,, முதலாளிகள் அனைவருக்கும் உரிய மொழியாகப் பெருமளவில் இருந்தது கன்னட பற்றாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கியது. முப்பத்தி ஐந்தில் கன்னடத்தைப் பயிற்றுமொழியாக ஆக்கினாலும், உயர்நிலைப் பள்ளிகளில் சேர கன்னடம் தேவை என்கிற கட்டாய விதி அதே ஆண்டு நீக்கப்பட்டது. நித்தூர் ஸ்ரீனிவாச ராவ் முதலிய வெகுசில அறிவுஜீவிகள் தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்க முயன்றார்கள்.

கர்நாடகாவை பொறுத்தவரை அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், ஐடி துறையில் ஆங்கிலமும், தொலைகாட்சி, சினிமாக்களில் இந்தி, தமிழ் ஆகியவை கலாசார ரீதியாகக் கோலோச்சுவது அம்மொழி மக்களைக் கடுப்பாக்கியது. எழுபதுகளில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சாலுவலி இயக்கத்தின் சார்பாகத் தமிழகத்தின் சில பகுதிகளைக் கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராட்டம் நிகழ்த்தியது. கடைகள், சினிமா கொட்டகைகள் தாக்கப்பட்டன. ஒரு தமிழகப் பேருந்து தாக்கப்பட்டது. கருணாநிதியின் கொடும்பாவி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. லக்ஷ்மிபுரம், ஒக்கலிபுரம், மகதி சாலை முதலிய தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டன. மைசூரின் பன்மொழி கலாசாரம் இப்பொழுது சுமையாகக் காணப்பட்டது.


அல்லூர் வெங்கட் ராவ் கர்நாடக விடுதலை இந்தியாவில் மாநிலமாக உருவான பொழுது, ‘கர்நாடகம் என்பது கன்னடத்தை விட விரிவானது…பிற வட்டார வழக்குகள், சிறுபான்மையின மொழிகளுக்கும் இங்கே இடமுண்டு. கன்னடமே ஆதிக்கம் நிறைந்தது என்றாலும் அறிவை எல்லாப் புறங்களில் இருந்தும் வரவேற்க வேண்டும்., ..;’ என்று அவர் பேசினார். இப்படிப்பட்ட ஆன்மீக தேசியத்தை விட்டுப் பயத்தை மையமாகக் கொண்ட சித்தானந்தா மூர்த்தி முதலியோர் முன்னிலைப்படுத்திய வெறுப்பைத் தூண்டும் தேசியம் முன்னணிக்கு வந்ததை டி.ஆர்.நாகராஜ் கவலையோடு குறிப்பிட்டார்.

இந்தச் சித்தானந்த மூர்த்தியின் மொழி அரசியலானது தமிழ் மொழி அரசியலின் அதே ஆண் தன்மையைத் தானும் கைக்கொண்டது. 91, 94 வருடங்களில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் மீது மொழி வெறியால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கன்னடத்தில் மராத்தி,. உருது, தெலுங்கு, தமிழ் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் பங்களிப்பு உண்டு என்பதை அவர்கள் வசதியாக மறந்தார்கள். சித்தானந்த மூர்த்தித் தன்னுடைய சொந்த அனுபவங்களில் இருந்தே இந்தப் பயம் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதாகச் சொன்னார். மேலும் பெங்களூரின் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் மட்டுமே கன்னடர்கள் இருப்பதைக் கவலையோடு சொன்னார். கொல்கத்தாவில் இருபது சதவிகித பீகாரிகள் இருப்பதையும், சென்னையில் பரவலான மலையாள, தெலுங்கு மொழின் பேசுபவர்கள் இருப்பதும் வங்க, தமிழ் மொழியின் ஆதிக்கத்தைத் தடுத்துவிடவில்லை என்பதை அவர் மறந்து போனார். மேலும் தாய்மொழி என்று தங்களின் மொழியைப் பதிவு செய்தாலும் தமிழர்கள், மராத்தியர்கள் ஆகியோரில் பலரும் கன்னட மொழியில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர்கள் என்கிற உண்மையும் கணக்கில் கொள்ளப்படவில்லை.

‘கர்நாடக இதன் பெயர், கன்னடம் நம் மூச்சாகட்டும்’ என்கிற கோஷத்தோடு தான் கர்நாடக மாநிலம் உதயமானது. 65 % கன்னட மொழி பேசுபவர்களும், துளு, குடகு, தெலுங்கு, தமிழ், மராத்தி முதலிய மொழிகளைப் பேசும் சிறுபான்மையினரும் மாநிலத்தில் இருந்தார்கள். மொழி சார்ந்து நான்கு கிளர்ச்சிகள் கர்நாடகாவில் நடைபெற்றன. கோகக் கிளர்ச்சி (1982), காவிரி போராட்டம் (1991), உருது ஒளிபரப்பு எதிர்ப்புப் போராட்டம் (1994), ராஜ்குமார் கடத்தல் (2000) உண்டாக்கிய கலவரம் ஆகியனவே அவை. முதல் போராட்டம் ஹூப்ளி-தாராவத் பகுதியை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் ராஜ்குமாரின் ஆதரவால் தாக்கியது, இராண்டாவது காவிரி போராட்டம் காவிரி படுகையான தெற்கு கர்நாடகத்தில் துவங்கி பெங்களூர் வரை பரவியது, உருது ஒளிபரப்பு எதிர்ப்புப் போராட்டம் பெங்களூர், மைசூர் பகுதிகளில் மட்டுமே நடைபெற்றது.

ராஜ்குமார் அபிமானிகள் சங்க தலைவர் ச.ரா. கோவிந்து கர்நாடகம் பலருக்குமான காஸ்மோபோலிடன் நகராக மாறி தங்களின் வாய்ப்புகள் பறிபோவதை தடுக்கப் பெங்களூரில் புதிய தொழிற்சாலைகள் எழுவது தடை செய்யப்பட வேண்டும் என்று கோரினார். கர்நாடக விமோசன ரங்கா முதலிய சிறிய அமைப்புகள் தனிக் கர்நாடக தேசம் என்றெல்லாம் கனவு கண்டன.
அறுபதுகளில் பெங்களூரின் ராமோத்ஸ்வ விழாக்களில் தமிழ் பாடகர்கள் அதிகம் இடம்பெறுவதை மாற்றி அங்கே கன்னட பாடகர்கள் இடம்பெற வேண்டும் என்று ஆ.நா.கிருஷ்ண ராவ், மா.ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய கர்நாடக சம்யுக்தா ரங்கா அமைப்புக் கிளர்ச்சி செய்தது.63-ல் வெளிவந்த காஞ்சித் தலைவன் எனும் எம்ஜிஆர் திரைப்படம் கன்னட அரசனான மயூரவர்மனை அவமானப்படுத்துவதால் ஒட்டுமொத்த கன்னட தேசமே அவமானப்பட்டதாகச் சொல்லி அப்படம் திரையை விட்டு நீக்கப்பட்டது./ வாட்டாள் நாகராஜ் தமிழ் படங்களை வன்முறையைக் கொண்டேனும் நிறுத்துவேன் என்று மெஜஸ்டிக் பகுதியில் இருந்த திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.


தமிழர்கள் ஆகாசவாணி என்கிற சொல்லை எதிர்த்ததை தேசியத்துக்கு எதிரானது என்று கன்னட அறிஞர்கள் சிலர் கூறினார்கள். கன்னட மொழியில் வானொலியில் ப்ரைம் டைம் செய்தி வாசிக்கப்படவேண்டும் என்று கர்நாடக அதிமுகக் கோரிக்கை வைத்தது. இந்தியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர்களை வேலைவாய்ப்புகளைக் குறைக்கிறது என்று எதிர்த்தார்களே அன்றி,, இந்தி எதிர்ப்பால் அதைக் கன்னடர்கள் செய்யவில்லை.

தொண்ணூறுகளின் நடுவில் ராஜ்குமார் அபிமானிகள் சங்கம் ஆறு மாத காலத்துக்குக் கன்னட படங்களே திரையரங்குகளில் ஓட வேண்டும், ஒரு வருடத்துக்குப் பிற மொழி படங்களைத் தடை செய்யா வேண்டும், கன்னட படங்களுக்கு மட்டும் திரையரங்க வாடகையைக் குறைக்க வேண்டும் என்று கர்நாடக தயாரிப்பாளர், இயக்குனர் சங்கங்களை இணைத்துக் கொண்டு போராடியது. இந்த மற்ற மொழி திரைப்பட முடக்கம் தற்கொலைக்குச் சமம் என்று சொல்கிற அளவுக்குத் தொழிலை முடக்கியது. 76-ஆம் வருடத்தில் எல்லாத் திரையரங்குகளையும் மாநில அரசே எடுத்து நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆறு மொழிகளில் படங்களைக் காட்டுகிறோம் என்று சொன்னாலும் அரசுத் தொலைக்காட்சி ப்ரைம் டைமில் கன்னட படங்களைக் காட்டவே செய்தது. பலர் இதனால் சேனல் மாற்றும் வேலையைச் செவ்வனே செய்தார்கள்.

கன்னடத்துவ அரசியலும், இந்துத்வ அரசியலும் பல்வேறு சமயங்களில் கைகோர்த்துக் கொண்டன என்றால் அது மிகையில்லை. 1994-ல் ப்ரைம் டைமில் உருது செய்தியை பத்தே நிமிடங்கள் ஒலிபரப்ப அரசு முடிவு செய்தது. எந்த இஸ்லாமிய அமைப்பும் இதற்காக எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை. மேலும், இஸ்லாமியர்கள் மட்டுமே கர்நாடகாவில் உருது மொழி பேசுபவர்கள் இல்லை. சித்தானந்த மூர்த்தி ஆசீர்வாதத்தோடு உருது பேசும் இஸ்லாமியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இருபத்தி ஐந்து இஸ்லாமியர்கள் இறந்து போனார்கள்.

1984-ல் நான்காவது, மூன்றாவது வகுப்பு அரசுப் பணிக்கு சேர கட்டாயக் கன்னடம் தேவையில்லை என்று ராமகிருஷ்ண ஹெக்டே அரசு முடிவு செய்த பொழுது அது உருது பேசும் மக்களுக்கு ஆதரவானது என்று கலவரங்கள் வெடித்தும் அந்த அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. எனினும், இந்த முறை அரசு விட்டுக்கொடுத்தது.
74-ல் தமிழகத்தில் தமிழக அரசு எண்பது சதவிகித வேலையிடங்களைத் தமிழர்களுக்கு ஒதுக்கிய பொழுது ஓரளவுக்கு மலையாளிகள் மீது நடந்த வன்முறை நீங்கலாகத் தமிழகம் மொழிச் சிறுபான்மையினர் மீது வன்முறையை மேற்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் மீது இப்படித் தாக்குதல் என்றால் கிறிஸ்துவர்கள் மீதும் மொழிச்சாயம் பூசிக்கொண்டு தாக்குதல் நடைபெற்றது. ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்கள் கன்னட மொழியில் பூஜை நடத்தும் பாதிரியார்களை எல்லாச் சர்ச்சுகளிலும் நியமித்ததால் அவர்கள் சிக்கலில்லாமல் தப்பித்தார்கள். பெங்களூரில் உள்ள எண்பது சதவிகித கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்கள் மீது மொழி வெறியால் வன்முறை கையாளப்பட்டது. கோகக் முதலிய மொழி அறிஞர்கள் கன்னட கத்தோலிக்கர்கள் மீது தமிழை இந்தச் சர்ச்சுகள் திணிப்பதாகக் குற்றஞ்சாட்டின. எண்பத்தி ஒன்றில் கிறிஸ்தரச் சங்கம் எனும் கன்னட சர்ச்சுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று இயங்கிய அமைப்பு அருட்தந்தை ஆரோக்கியசாமி எனும் தமிழரை தாக்கியது. பெரும்பாலும் தமிழர்களே பிரியன்ட் சதுக்கச் சர்ச்சில் வழிபாட்டுக்கு வந்தாலும் கன்னடமே ஹை மாஸ் நிகழ்வில் பயன்படுத்தப்பட வேண்டும் எனச்]சொல்லி அந்தச் சர்ச் தாக்கப்பட்டது.

கன்னட எழுத்தாளர்கள் இது மத, கலாசாரப் பிரச்சனையில்லை, இது மொழிப்பிரச்சனை என்றதோடு கன்னட மொழியில் தமிழ் பாடல்களை அச்சிட்டுத் தருவது மொழித் திணிப்பு என்று வாதிட்டார்கள். எண்பத்தி எட்டில் கன்னட, தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழியில் ஆராதனை செய்யப்படும் எனச் சர்ச் அறிவித்தும் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் தொடர்ந்து கன்னட மொழிப்பற்றாளர்கள் போராடுகிறார்கள். தற்போது ஆர்ச்பிஷப் கர்நாடகாவில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்.

எண்பத்தி ஒன்றில் INTUC அமைப்பு நடத்திய வேலை நிறுத்தத்தில் தமிழர்கள், மலையாளிகள் அரசு வேலையை விட்டு அனுப்பப்பட வேண்டும் என்று கடும் கோரிக்கைகள் எழுந்தன. அடுத்து கோகக் போராட்டங்கள் எல்லா இடத்திலும் கன்னட மொழி பயன்பாட்டை உருவாக்க அறிவுஜீவிகள் வட்டத்தில் முதலில் துவங்கினாலும், அதற்கு ராஜ்குமார் ஆதரவு தெரிவிக்க மக்கள் போராட்டமாக மாறியது. பொதுச்சொத்துக்கள் கடும் வன்முறையால் தாக்கப்பட்டன. சரோஜ் மகிஷி கமிட்டி அமைக்கப்பட்டுக் கடைநிலை அரசு வேலைகளில் முழுக்கக் கன்னடர்களே வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் முதலிய அரசுப் பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை என்கிற கருத்தாக்கத்தை அது செயல்படுத்த உதவியது.

தமிழர்கள் மீது காவிரி நதிநீர் மன்ற ஆணையை கர்நாடக அமல்படுத்த தவறிய 91-ம் வருடம் நடைபெற்ற வன்முறைகள் குறித்து ஆராய்ந்த என்.டி.வெங்கடேஷ் கமிஷன் தரும் தகவல்கள் ஆச்சரியமூட்டலாம். மொழி சார்ந்த சிக்கல் என்று சொல்லப்பட்டாலும், இது நிலம் சார்ந்த சிக்கல் என்று அந்த அறிக்கை சுட்டுகிறது. தண்ணீர் சார்ந்த சண்டைகள், சச்சரவுகள் இருந்தாலும் பெங்களூரின் மேற்குப் பகுதியிலேயே கலவரங்கள் மிகுந்ததைக் காட்டி, அங்கே பல தமிழர்கள் சேரிப்பகுதிகளில் வாழ்வதையும், பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதும் நிலம் என்பது சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி தமிழர்கள் எந்தச் சூழலிலும் வாழ்ந்து தங்களின் வேலையைப் பறித்துக் கொள்வார்கள் என்கிற பார்வை அம்மக்களிடம் நிலவியதை கமிட்டி சுட்டுகிறது. அந்தக் கலவரங்களின் பொழுது போலீஸ் துப்பாக்கி சூட்டில் 17 தமிழர்கள், கலவரத்தில் 6 தமிழர்கள் இறந்தார்கள். மற்றபடி, 17 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டது இது பொருளாதாரத் தாக்குதல் என்பதை விளக்கும்.

தமிழகத்தில் இருந்து ஆதி திராவிடர்கள் பஞ்சம் பிழைக்கக் கர்நாடகம் நோக்கி வருவது ஜெர்ட்ரூட் வுட்ரபேவின் ஆய்வுகள் காட்டுகின்றன. பெங்களூரில் தெரு வண்டி வைத்தோ, வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கவோ தங்களால் முடிவதாக அம்மக்கள் தெரிவிக்கிறார்கள். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும், தந்தை பெரியாரும் கன்னட மண்ணில் தமிழர்கள் கன்னடர்களாகவே வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். தமிழர்கள் தங்களின் கன்னடத் தொடர்பை மேலும் உறுதிப்படுத்த கெம்பகவுடா எனும் பெங்களூரு நகரை நிர்மாணித்தவர் வன்னியர் என்று குறிப்பிட்டார்கள்.

கோகக் போராட்டம் உச்சத்தில் இருந்த பொழுது அதைக் கடுமையாக விமர்சித்த டெக்கான் ஹெரால்ட் இதழின் ஆசிரியர் ஹரிகுமார்,’கன்னடத்தின் முக்கியமான அறிவுஜீவிகள் பெரும்பாலும் மொழி அறிஞர்களாக இருப்பதால் மொழிகளின் பணி, அதிலும் குறிப்பாகக் கன்னடத்தின் தேவை அதீதமாக முன்னிறுத்தப்படுகிறது. மொழி சாராத அடையாளங்கள், வெளிப்பாட்டு முறைகள், சமூக, அரசியல் சக்திகள் கணக்கில் கொள்ளப்படாமலோ, அல்லது மொழிக்கு அடங்கியவையாகவோ காணப்படுகின்றன.’ என்று எழுதினார்.

ஹரிஜன் ஒடுக்குமுறை, தீண்டாமை, திருமணம், தொழிற்சங்க போராட்டங்கள் ஆகியவற்றில் மொழிக்குப் பங்கில்லாமல் போகிறது, அல்லது மொழி வேறொரு பணியை ஆற்றுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். எழுபத்தி மூன்றில் புசா போராட்டங்களின் பொழுது கவிஞர் சித்தலிங்கையா எனும் தலித்துக்கு ஆதரவாகத் தமிழ் தலித்துகள் செயல்பட்டதை இந்தக் கருத்தோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம். தற்போது சேவைத் துறை மயத்தால் பெங்களூர் நிரம்பிக் கொண்டிருக்கும் சூழலில் கர்நாடக விமோசன ரங்கா அரசின் மொழி முதலாளித்துவமே என்று உறுதிபடக் கருதுகிறது. ஆண்மையிழந்த மொழி என்று இந்தி போரட்டங்களின் பொழுது அமைதியாக இருந்த கன்னடர்களைத் தமிழர்கள் நகைத்து வளையல்களை அனுப்பி வைத்ததாக ஒரு கதை உண்டு. அதற்குப் பிந்தைய காலத்தில் கன்னட மொழியை வெறியும், ஆண்தன்மையும் கொண்ட மொழியாக அதன் பற்றாளர்கள் கட்டமைத்தார்கள்.

ராஜ்குமார் கோகக் போராட்டங்களில் கலந்து கொண்டாலும், இந்திராவை எதிர்த்துச் சிக்மகளூரில் நிற்க தேடப்பட்ட பொழுது தலைமறைவானார். ராமகிருஷ்ண ஹெக்டே அரசு கன்னடத்தைக் கட்டாயமாக 2,3,4ம் வகுப்புப் பணிகளில் சேர கற்க வேண்டியதில்லை என அறிவித்த பொழுது போராட்டங்கள் எழுந்த நிலையில் அதனை நியாயம் என்றாலும் தான் பங்குபெறப்போவதில்லை என்று ராஜ்குமார் அறிவித்தார். தெற்கு ரயில்வேயின் மையம் கர்நாடகாவில் வேண்டும் என்று அவர் பெயரால் வன்முறையான போராட்டங்கள் நடைபெற்ற பொழுது தனக்கும் ரசிகர் மன்றங்களுக்கும் தொடர்பில்லை என்று கும்பிடு போட்டார்.

முன்னாள் அமைச்சர் நாகப்பா வீரப்பனால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சூழலில் தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டன, தமிழ் படங்கள் நிறுத்தப்பட்டன. மொழி, தண்ணீர், நிலம் என்று பல்வேறு சிக்கல்கள் இருமாநில உறவை பாதிக்கின்றன.