கம்யூனிசம் தந்த காரல் மார்க்ஸ்


மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் நாளை .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை .
போராட்டம்,வறுமை,வலிகள்,பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில்
இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்


ஜெர்மனியில் மே – 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற
அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது .

தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை
போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு
நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .

கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல
வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள்
எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித
அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .

பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .

ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி
காட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை
ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .

வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே
இருந்தார் . இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு
பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை
வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும்
தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை
-மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்
.

அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;”பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை
!”என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .

ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த
மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது

கட்டுப்படுத்திய கம்யூனிச ரஷ்யா,கதறி விழுந்த எழுத்து நாயகன் !


பிப்ரவரி 10: போரிஸ் பாஸ்டர்நாக் பிறந்த தின சிறப்பு பகிர்வு
 
Posted Date : 08:11 (10/02/2014)Last updated : 08:11 (10/02/2014)

எழுத்தின் மூலம் தான் எண்ணியதை துணிந்து சொன்ன எழுத்தாளன் அவர் . ரஷ்யாவில் பிறந்த அவர் இளம் வயதில் இசை மீது நாட்டம் கொண்டார் . அதற்கு பின் அவருக்கு கவிதை பிடித்துப்போனது .

ஜெர்மனிக்கு படிக்கப்போனவர் அங்கே ஒரு பெண்ணின் மீது  பூண்டார் .காதலை சொன்னார் ;அது நிராகரிக்கப்பட்டது ; நாடு திரும்பினார். முதல் உலகப்போர் சமயத்தில் காலில் காயம் ஏற்பட்டு இருந்ததால் கட்டாய ராணுவ சேவைக்கு அனுப்பபடாமல் ஆரல் மலை இருந்த பகுதியில் வேலை பார்த்தார்  .ரஷ்ய புரட்சியை கொண்டாடினார் அவர் ; ஆனால் ஸ்டாலின் காலத்து படுகொலைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவரை வெறுப்புக்குள்ளாக்கின .

டாக்டர் ஷிவாகோ எனும்  நாவலை படைத்தார் .நாவலின் நாயகன் ரஷ்ய புரட்சியை வரவேற்கிறான் ;அதை கொண்டாடுகிறான் .மருத்துவனாகி வேலை செய்கிறான் . எனினும் அரசு அவனை எப்படி சிந்திக்க வேண்டும் என்றும்,எப்படி புரட்சி செய்ய வேண்டும் என கற்பிப்பதை வெறுக்கிறான் . விடுதலையை நாடி ஆரல்  மலை நோக்கி போகிறான் .

அங்கே ஒரு பெண்ணோடு காதல் பூக்கிறது . அவளை அரசு மஞ்சூரியாவுக்கு நாடு கடத்தி விடுகிறது ;மனமுடைந்து மாஸ்கோ திரும்புகிற அவன் நடுத்தெருவில் மனமுடைந்து மாரடைப்பு வந்து அனாதையாக செத்துப்போகிறான் . இந்த நாவல் ரஷ்யாவில் வெளியாக விடவில்லை அரசு .

அவரைப்பார்க்க வந்த இத்தாலி நண்பரிடம் நூலின் ஒரு பிரதியை தர அதை வாங்கி சென்று அவர் வெளியிட அது விற்று தீர்த்தது .பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது . அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது .அதை வாங்கிக்கொள்ள நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது ;நாட்டை விட்டு வெளியேறி வாங்கிக்கொள்ளட்டும் என்றார்கள் .

அவர் இப்படி  அதிபர் குருஷேவுக்கு கடிதம் எழுதினார் “என் நாட்டை மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக நேசிக்கிறேன் .எனக்கு பரிசு  வேண்டாம் என சொல்லி விடுகிறேன் “என முடித்திருந்தார் . நோபல் கமிட்டியிடம்  அரசின் நிர்பந்தத்தால் பரிசை வாங்கிக்கொள்ள முடியாது என்றார் . அவர் நுரையீரல்  புற்றுநோயால் அவதிப்பட்டு அவமானத்துக்கு உள்ளாகி தாகூரின் கவிதை தொகுப்பை மொழிபெயர்க்கும் கனவை கைவிட்டார் .அப்படியே சொந்த நாட்டிலேயே  அகதிபோல் மறைந்தும் போனார்

அவருக்கு மட்டுமல்ல அவரைப்போலவே நவீன ரஷ்யாவின் மிகச் சிறந்த  கவிஞரான ஓசிப் மெண்டல்ஷ்டாம் சிறை முகாம் ஒன்றிற்கு போகும்  வழியில் சைபீரியாவில் இறந்து போனார். கவிதைக்காக நோபல் பரிசு பெற்ற ஜோசப் ப்ராட்ஸ்கி ‘‘சமுதாய ஒட்டுண்ணி” என பட்டம் தரப்பட்டு சிறை முகாம்களில் மிகவும் துன்புறுத்தப்பட்டு பின் நாட்டை விட்டு வெளியேறினார் . பாஸ்டர்நாக்கை பின்பற்றி எழுதிய  அலெக்ஸாண்டர்  சோல்செனிட்ஸினுக்கு நோபல் பரிசு
அறிவிக்கப்பட்ட போதும் அதனை ஏற்க ரஷ்ய அரசு அனுமதி மறுத்து விட்டது. எழுத்தின் சுதந்திரம் பெரிதென அடக்குமுறைக்கு எதிராக நின்ற பாஸ்டர்நாக் பிறந்த தினம் இன்று .

அணையா ஜோதி பாசு !


ஜோதி பாசு எனும் இணையற்ற தலைவர் மறைந்த தினம் ஜனவரி பதினேழு  வளமிகுந்த குடும்பத்தில் பிறந்த இவர்.எல்லாரும் பெண்களாக இருந்த பள்ளியில் ஒரே ஆணாக தன் கல்வியை தொடங்கினார் . ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு லண்டனில் சட்டம் படிக்க போனார் ;அங்கே பல கம்யூனிஸ்ட் தோழர்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது;இந்தியா லீகில் இணைந்து செயலாற்றினார். அங்கே தலைசிறந்த சிந்தனையாளர் ரஜ்னி பாமிதத்தை சந்தித்தார். மார்க்சிய சிந்தனைகள் அவரை செதுக்கியது 

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் அக்கட்சியில் இணைந்தார் . பல முக்கியமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார் ; கம்யூனிஸ்ட் கட்சி சீனப்போரின் பொழுது இரண்டாக உடைந்த பொழுது இவர் சி பி ஐ மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார் . பல காலம் பொலிட் பீரோவின் உறுப்பினராக இருந்தார் .1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்று பங்களா காங்கிரஸ் வென்ற பொழுது ஜோதி பாசு அவர்கள் துணை முதல்வர் ஆனார் 

1970 இல் இவரை பாட்னா ரயில்வே நிலையத்தில் கொல்ல முயற்சி நடந்தது . இவருக்கு பதிலாக வேறொரு தோழர் உயிர்த்தியாகம் செய்தார் . அப்பொழுதும் தப்பித்து ஓடாமல் அந்த சுட்டவனை பிடியுங்கள் என அவனிருந்த திசையை காட்டினார் இவர் .
1977 இல் எமெர்ஜென்சிக்கு பிறகு ஜோதி பாசு முதல்வர் ஆனார் . 

23 வருடங்கள் தொடர்ந்து முதல்வராக இருந்தது இன்னமும் சாதனை.அதிலும் பதினான்கு கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டே செயலாற்றினார் . பல்வேறு நிலசீர்திருத்தங்களை கொண்டுவந்து ஏழை மக்களுக்கு நிலங்கள் கிடைக்க வழிவகை செய்தார் . அவரின் சாதனை எத்தகையது என்பதை இந்த எண்ணிக்கை புரியவைக்கும்- நாட்டில் நடந்த மொத்த நிலச் சீர்திருத்தத்தில் 22% மேற்கு வங்கத்தில், அவரது ஆட்சியால் அமல்படுத்தப்பட்டது. நாட்டில் நிலச் சீர்திருத்தத்தால் பலனடைந்தவர்களில் 54.6% பேர் மேற்கு வங்க விவசாயிகள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் வெகுகாலத்துக்கு முன்னமே தந்தார். 

பலமுறை மதக்கலவரங்களால் நொந்து போயிருந்த மேற்கு வங்காளம் இவரின் ஆட்சிக்காலத்தில் மிகவும் அமைதியாக இருந்தது . இந்திரா காந்தியின் மரணத்துக்கு பின்னர் சீக்கியர் படுகொலைகள் நாடு முழுக்க நடைபெற்ற பொழுது பல லட்சம் சீக்கியர்கள் வாழ்ந்து கொண்டிருந்த கொல்கத்தாவில் வன்முறையின் சாயல் சற்றும் தலைகாட்டாமல் இருக்க தொழிற்சங்கங்களை களத்தில் இறக்கி சாதித்தார் இவர். 

மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அவர் ஒரே ஒரு மெய்க்காப்பாளர் மட்டுமே வைத்துக்கொண்டார். தனி மனித ஆராதனையை என்றைக்கும் ஏற்றுக்கொண்டது இல்லை. அதிகாரிகள் இடமாற்றம் முதலிய முடிவுகளில் எந்த அரசியல் தலையீட்டுக்கும் இடம் கொடுக்காமல் தலைமை செயலாளர் முடிவுக்கே விட்டுவிடுவார். 

ராஜீவ் காந்தி இறந்த பொழுது மிகுந்த வருத்ததோடு ,கோபத்தோடு “அவர் நிறைய தவறுகள் செய்தார் ;அதற்காக கொன்றிருக்க கூடாது .எல்லாரும் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் தானே இயங்குகிறோம் !”என கண்ணீர் வடித்தார் .

1996 இல் பிரதமர் பதவி வந்த பொழுது கட்சியின் கட்டுப்பாடு காரணமாக அவர் அதை ஏற்கவில்லை ;பின் அதை வரலாற்றுப்பிழை என அவரே வர்ணித்தார் ,ஆனாலும்,போர்க்கொடி தூக்காமல் இருந்தார் -அது தான் அவர் . அவர் ஆட்சிக்காலத்தில் மக்களின் உடல்நலம்,கல்வி கீழே போனது -ஆங்கிலத்தை கல்விக்கூடங்களை விட்டு துரத்தியது வேலை வாய்ப்பை குறைக்க செய்தது .2000 இல் உடல்நிலையை காரணம் காட்டி முதல்வர் பதவியை விட்டு இறங்கினார்.தொழிற்சாலைகளின்எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே இருந்தது ;பெரிதாக வளர்ச்சி ஏற்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் உண்டு 

எளிமையான வாழ்க்கையே இறுதிவரை வாழ்ந்தார் -தனக்கென்று எந்த சொத்தும் சேர்த்துக்கொள்ளவில்லை அவர் ;நாத்திகவாதியாக இருந்தாலும் அன்னை தெரசா தன்னை எப்பொழுதும் எந்த முன் அனுமதியுமின்றி சந்திக்கலாம் என்றவர் அவர்.மரணத்திற்கு பின்னும் தன் உடல் பயன்பட வேண்டும் என்று உடல்தானம் செய்த நிஜமான காம்ரேட் அவர். அவரின் சுயசரிதையில் ஒரு இடத்தில் கூட தன்னைப்பற்றி பெருமிதமாக ஒரு சொல் எழுதி நீங்கள் பார்க்க முடியாது. எப்படிப்பட்ட வாழ்க்கை தான் வாழ்ந்ததாக அவர் நினைக்கிறார் என்பதை அவரின் வரிகளிலேயே முடிப்பது சரியாக இருக்கும் :

“மனிதர்களுடனான உறவை விட பெரிய சொத்தில்லை. மரணத்தை கண்டு அஞ்சக்கூடாது. அது எப்பொழுது வந்தாலும் நான் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன். அதே சமயம்,வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே என்கிற ஏமாற்றம் சாகிற தருணத்தில் தோன்றக்கூடாது. என் வாழ்வின் இறுதி கணத்தில் என்னால் உறுதியாக சொல்ல முடியும் ,மனிதகுலத்தின் விடுதலைக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று !”

சோவியத் ரஷ்யா உடைந்த தினம் !


சோவியத் ரஷ்யா உடைந்த தினம் இன்று. இரண்டாம் உலகப்போருக்கு பின் சோவியத் ரஷ்யாவும்,அமெரிக்காவும் பல்வேறு முனைகளில் பல்வேறு தளங்களில் பனிப்போரை நடத்திக்கொண்டு இருந்தன . ஸ்டாலின் காலத்தில் 1930 களில் கோர்பசேவின் இரு தாத்தாக்களும் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் சைபீரியாவுக்கு நாடு
கடத்தப்பட்டிருந்தனர் .

அப்பா அறுவடை இயந்திரம் இயக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் ; கோர்பசேவ் சட்டம் படித்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் . எளிய பின்னணியில் இருந்து வந்த இவர் மிகக்குறுகிய காலத்தில் ரஷ்யாவில் மூன்று மூத்த தலைவர்கள் மறையவே,ரஷ்ய புரட்சிக்கு பிந்தைய காலத்தில் பிறந்த கோர்பசேவ் வசம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பதவி வந்து சேர்ந்தது
.பதவிக்கு வந்த பொழுது இவருக்கு வயது 54 .

சில வெளிநாடுகளுக்கு கட்சிப்பணிகள் காரணமாக பயணம் போனார் . மேலும் மக்களுக்கு விடுதலை,ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துதல்,தேக்கமடைந்து இருந்த
பொருளாதாரத்தை சீர்திருத்துதல் ஆகியன அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆயின.பீர் மற்றும் வோட்காவின் மீதான விலையை ஏற்றினார் ;அதை மிகக்குறைந்த அளவிலேயே அரசாங்கம் உற்பத்தி செய்யும் என்றார் . மது கிடைக்காமல் மக்கள் வாடினார்கள் ;கள்ள சந்தை கொழிக்க ஆரம்பித்தது . இதனால் அரசுக்கு பில்லியன் டாலர்களில் நட்டம் உண்டானது ,28 வருடங்களாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவரை வீட்டுக்கு போங்க என அனுப்பி வைத்தார்

.அமெரிக்காவை நோக்கி நட்புக்கரம் நீட்டினார் ;அணு ஆயுத குறைப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் .கூடுதலாக ஆப்கானை விட்டு 28,000 வீரர்களை இழந்திருந்த சோவியத் படைகளை வெளியேற்றினார் . பெர்லின் சுவரை கடந்து மக்கள் போக ஆரம்பித்த பொழுது அமைதி காத்தார் .கிழக்கு ஐரோப்பாவில் தான் செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக்கொள்வதாக அவர் அறிவித்த பொழுது உலகமே கொஞ்சம் ஸ்தம்பித்து தான் போனது . அங்கே இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிகள் அப்படியே சீட்டுக்கட்டு போல சரிந்தன .

எழுபது வருடங்களாக மறுக்கப்பட்ட பேச்சுரிமை,எழுத்துரிமையை மக்களுக்கு வழங்கினார் ;அரசாங்க அமைப்புகளை விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் கிடைத்தது . தனியார் நிறுவனங்களை முக்கியமான துறைகளில் களமிறக்கினார் ;ஆனால்,மக்கள் ஒரு வேலை உணவுக்கே அலைய வேண்டிய நிலை உண்டானது . ரேசன் முறையில் உலகப்போர் சமயம் போல சாப்பாடு போட வேண்டியதாயிற்று .ஜனநாயகத்தை அமைப்புகளில் கொண்டு வந்தார் ;போரிஸ் யெல்ஸ்டின் மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக உருவாகிக்கொண்டிருந்தார்

கருத்துரிமை கிடைத்ததும் எப்படியெல்லாம் மற்ற நாட்டு மக்களின் குரல் நசுக்கப்பட்டிருந்தது என அவர்களுக்கே புரிய ஆரம்பித்தது . அது வரை அடங்கி இருந்த தேசிய உணர்ச்சி எல்லா நாடுகளிலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது ;மக்கள் தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்தார்கள் . நிலைமை ரொம்பவும் மோசமாகி இவரே மூன்று நாள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். தங்களை சோவியத் யூனியனில் இருந்து விடுவித்து கொள்வதாக தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டன .

மண்டேலாவிடம் அவரின் தேசத்தைதாண்டி கவர்ந்த ஆளுமைகள் யார் என்று கேட்ட பொழுது ,”காந்தியை எல்லாரையும் நேசித்து அமைதி வழியில் இணைந்து செயல்படவைக்கும் வழியை சாதியப்படுத்தியதற்காக பிடிக்கும். எந்த கொள்கையினுள்ளே தான் இத்தனை காலமாக வாழ்ந்தோமே அந்த கொள்கையை உள்ளிருந்தே கேள்வி கேட்டு அதன் தவறுகளை ஒத்துக்கொண்டு மாற்றங்களை முன்னெடுத்த கோர்பசேவையும் பிடிக்கும்” என்றார் 

சோவியத் ரஷ்யா இதே தினத்தில் சிதறுண்டது . கோர்பசேவ் பதவியை விட்டு விலகினார் ;அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது . எத்தனையோ பாடங்கள் இவர் வாழ்வில் இருந்து கற்க முடியுமென்றாலும் மிக முக்கியமானது இதுவாகத்தான் இருக்கக்கூடும் -நோயாளி அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லாத பொழுது கத்தியை வைத்தால் கோரமான மரணம் தான் முடிவில் கிட்டும்

ஸ்டாலின் எனும் கம்யூனிஸ்ட் ஜார் !


ஸ்டாலின் எனும் கம்யூனிச போர்வை போர்த்திய கொடூரன் மறைந்த தினம் டிசம்பர் பதினெட்டு . அடிப்படையில் ஜார்ஜியா பகுதியில் பிறந்த இவர் ஜார் அரசை எதிர்த்து செயல்பட்டதால் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் ; பின் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர் லெனினுடன் இணைந்தார் ட்ராட்ஸ்கி மற்றும் லெனின் இணைந்து 1917 இல் ஏற்பட்டிருந்த ஆட்சியை கவிழ்த்த பொழுது ஓரளவிற்கே பங்காற்றிய இவர் அதற்கு பின் வெற்றிகரமாக லெனின் இடத்தை பிடிக்க காய்கள் நகர்த்தினார்

லெனின் இறந்ததும் அடுத்த இடத்தில் இருந்த ட்ராட்ஸ்கி ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ட்ராட்ஸ்கியின் திறமையை கண்டு பலர் அஞ்சினார்கள். அவரை ஆளவிட்டால் ஒரே ஆள் ஆதிக்கம் வந்திடும் என்கிற கருத்து இருந்தது. கூட்டாக ஆட்சி செய்ய உகந்த ஆள் என்று ஸ்டாலினை கொண்டு வந்தார்கள். லெனின் தன்னுடைய உயிலில் ஸ்டாலின் அவரின் பதவியை விட்டு நீக்கப்படவேண்டும் என்று எழுதியிருந்தார். அதை யாரும் கேட்கவில்லை. சர்வம் ஸ்டாலின் மயம் ஆனது . 

படிப்படியாக பொலிட்பீரோவை விட்டு தன்னை எதிர்ப்பவர்களை வெளியேற்றினார் ஸ்டாலின். ட்ராட்ஸ்கியை ஆள் வைத்து தூக்கினார் . ஆட்சிக்கு வந்த பின் நாட்டை கட்டமைக்கும் பொறுப்பு அவரின் தலையில் விழுந்தது. “மற்ற வளர்ந்த நாடுகளை விட ஐம்பது நூறு வருடங்கள் பின்தங்கி இருக்கிறோம். இந்த தூரத்தை பத்தாண்டுகளில் கடக்க வேண்டும் !” என்று சபதம் போட்டார். ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் நிலக்கரி,இரும்பு,எஃகு,இயந்திரங்களின் வளர்ச்சி பெருக்கப்பட்டது. இருபது வருட காலத்துக்குள் இங்கிலாந்தை இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் முந்தியது சோவியத் ரஷ்யா. 

வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து சேர்ந்தார்கள். கல்வி விரிவாக்கப்பட்டது. தொழிற்சாலையிலும் கல்வி போதிக்கப்பட்டது. திறன்மிகுந்த தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கும்,அதீத உற்பத்தியை சாதித்தவர்களுக்கும் ஸ்டேக்கனோவைட்ஸ் எனப்படும் விருதுகள் தரப்பட்டன.நீர்மின் நிலையங்கள் எழுந்தன . சாதாரண உழைப்பாளிகள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டார்கள். 

கூட்டு விவசாய முறை கொண்டுவரப்பட்ட சின்ன சின்ன நிலங்கள் எல்லாம் இணைக்கப்பட்டது. சின்ன நிலங்களின் உரிமையாளர்களான குலாக்குகள் விரட்டப்பட்டார்கள்,எதிர்த்தால் காணாமல் போனார்கள். ஆனால்,திட்டம் பெருந்தோல்வி அடைந்தது. விவசாயம் உண்மையில் படுத்தது. தானிய உற்பத்தி வீழ்ந்தது. ஐந்து மில்லியன் மக்கள் பசியால் இறந்த பொழுது பதினேழு லட்சம் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கு பின்னர் இயந்திரமயம் சில ஆண்டுகள் கழித்து உற்பத்தியை அதிகப்படுத்தியது. கால்நடை உற்பத்தி மீள இருபத்தைந்து வருடங்கள் ஆனது. 

எதிரிகள் என சந்தேகப்பட்டு பல லட்சம் சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்தார். அறிவிக்கபடாத சர்வாதிகாரம் நிலவியது . ரத்தத்தின் மீது . ஹிடல்ருடன் கைகோர்த்து கொண்டார் ;போலந்தை இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஒருபுறம் ,இவர் ஒரு புறம் தாக்கினார்கள் .இருவரும் எப்பொழுது இன்னொருவரை கவிழ்க்கலாம் என காத்துக்கொண்டிருந்த பொழுது,இவர்அதிக நிலத்தை கிழக்கு ஐரோப்பாவில் கைப்பற்றுவதை பார்த்தார் ஹிட்லர் -இவர் மீது போர் அறிவித்தார் .

ஸ்டாலின்க்ராட் ,மாஸ்கோ என நீண்ட போரில் பின்வாங்கவே மறுக்காத இரண்டு படைகளும் மோதிக்கொண்டன . உக்ரைனில் இவரின் அட்டூழியம் தாங்காமல் ஜெர்மானியர்களை வரவேற்றார்கள். அவர்களும் இவருக்கு மிஞ்சியவர்களாக இருந்தார்கள். தோல்வியே சந்திக்காத ஹிட்லரை எண்ணற்ற படைகள்,படுகொலை பயம் ஆகியவற்றின் மூலம் வென்று காட்டினார் .நாட்டையே இரும்புத்திரை போல வைத்திருந்த இவர் காலத்து படுகொலைகள் ஹிட்லரின் யூத படுகொலைகளுக்கு அடுத்த இடத்தை நிச்சயம் பெறும் அடுத்து பனிப்போரையும் வேகப்படுத்திய பெருமை இவருக்குண்டு .

இசை,பத்திரிக்கை,எழுத்து என்று எல்லாமும் அரசாங்க புகழ் பாடும் மையங்களாக மாற்றப்பட்டன. சர்ச்சுகள் மூடப்பட்டன ,பாதிரிகள் கொல்லப்பட்டார்கள். என்றாலும் நாற்பதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மதநம்பிக்கை உள்ளவர்களாகவே இருந்தார்கள். நாற்பத்தி ஏழு சதவிகித மக்கள் ரஷ்யர்கள் இல்லை. ஆகவே அவர்களுக்கு மொழி மற்றும் கலாச்சாரத்தில் ஓரளவுக்கு விடுதலை தந்தார் ஸ்டாலின். அதே சமயம் ஏதேனும் எதிர்ப்பு கிளம்பினால் ஒரே அடி தான் என்பதை அடிக்கடி செய்து காட்டினார். 
.
உண்மையில் ஸ்டாலினை கம்யூனிஸ்ட் என்றே சொல்லக்கூடாது, லெனின் மற்றும் மார்க்ஸின் கொள்கைகளில் இருந்து வெகுதூரம் தவறிப்போனார் அவர். கட்சியின் தலைவர்கள் முதலாளிகளின் வீடுகளை எடுத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள். மெத்வதேவ் என்கிற வரலாற்றாசியர் சொல்வதைப்போல ஸ்டாலினின் ஆட்சியில் வர்க்க பேதமற்ற ஆட்சி எழுவதற்கு பதிலாக ஜார் மன்னர்கள் ஆட்சியைப்போலவே விவசாயிகள்,தொழிலாளர்கள் சுரண்டப்பட்டார்கள். !