திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சிநேகா சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற்றிருப்பது தலைப்புச் செய்தியாக ஒளிர்ந்த வண்ணம் இருக்கிறது. பலர் முன்மாதிரி என்றும், இப்படி இருந்துவிட்டால் நம் தமிழ்ச் சமூகம் எங்கேயோ போய் விடாதா என்கிற தொனியில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களைக் கூறுபோடும் அடையாளங்களை, அவர்களைப் பாகுபடுத்தும் பிரிவுகளைத் தாண்டி ‘ஒரு மனிதர், ஒரு மதிப்பு’ என்கிற கனவை எட்ட பலரும் விரும்புவது புரிகிறது.
மேற்குறிப்பிட்ட வழக்கறிஞரின் செயலைத் தனிப்பட்ட ரீதியில் கேள்வி கேட்கப்போவதில்லை. மனிதராக உணர்வதற்கான முன்னெடுப்பை தன்னுடைய அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்துகிற முயற்சியாகவே அதனைக் கணக்கில் கொள்ளலாம். ‘நரகத்திற்கான பாதை நல்ல நோக்கங்களோடுதான் வழிகோலப்படுகிறது’ என்றொரு வாசகம் உண்டு. அதைப்போன்றதுதான் இதுவும்.
இந்தியாவில் affirmative action எனப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட செயல்திட்டங்கள், தனி மனிதரை அளவுகோலாகக் கொண்டவை அல்ல. குழுவாக, சாதியாகப் பாகுபடுத்தப்படுவதால் அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது நெடுநாள் பார்வை. அதனையே உச்ச நீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தம் இதனை மாற்ற முனைகிறது. அது இருக்கட்டும்.
இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் நிலவி வரும் இட ஒதுக்கீட்டு முறையை வரலாற்று ஆய்வாளர் முகுல் கேசவன் தன்னுடைய ‘secular common sense’ நூலில் ‘இந்து இட ஒதுக்கீட்டு முறை’ என்று அழைப்பார். அதாவது ‘இந்துக்கள்’ என்று யாரெல்லாம் வரையறுக்கப்பட்டு உள்ளார்களோ அவர்களுக்கே இட ஒதுக்கீட்டின் பலன்கள் பெரும்பாலும் போய்ச் சேருகின்றன. வி.பி.சிங் காலத்தில் பௌத்தர்களில் உள்ள தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கு முன்பு வரை இந்துக்கள், சீக்கியர்களுக்கே தலித் என்கிற அடையாள அடிப்படையிலான இட ஒதுக்கீடு உண்டு. கிறிஸ்துவ, இஸ்லாமிய தலித்துகளுக்கு இந்திய அளவில் இட ஒதுக்கீடு என்பது கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று நிரூபிக்கப்பட்டால் மதச்சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு உண்டு. (அவர்கள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அல்ல இந்த ஒதுக்கீடு, அவர்கள் கல்வியிலும், சமூகத்திலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உழலும் அநீதியை சரி செய்யும் முயற்சி அது)
சிலர் உடனே இஸ்லாமிய, கிறிஸ்துவ மதப் பீடங்கள் தலித் அடையாளத்தை ஏற்றுக்கொள்வது கிடையாது. அதனால் இட ஒதுக்கீடு இல்லை என்று வாதிடுவார்கள். அப்படி என்றால், சீக்கிய, பவுத்த மதங்களும் அவ்வாறே சமத்துவம் பேசுகின்றன. பின் ஏன் அம்மதத்தில் உள்ள தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு. மத நூல்களில் என்ன இருக்கிறது என்பதை விட, நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைக் கணக்கில் கொண்டு அரசியலமைப்பு ‘transformative’ ஆக இருக்க வேண்டும் என்பது அரசியல் அறிஞர்கள் பலரின் கருத்து.
இந்த அடையாள துறப்பில் உள்ள சிக்கல் மிக எளிதான ஒன்று. என்னுடைய அடையாளம் சார்ந்து நிகழ்த்தப்படும் பாகுபடுத்தலுக்கு நான் முக்கியக் காரணமில்லை. ஒரு தலித்தாக, ஒரு பிற்படுத்தப்பட்ட சூத்திரனாகச் சமூக அடுக்கினில் நீடிக்க மக்கள் விரும்பவில்லை. அவர்கள் பிறப்பால் இதில் தான் தொடர வேண்டும், உழல வேண்டும் என்று இந்திய சாதி மனம் தொடர்ந்து இயங்குகிறது. அதிகார மட்டங்களில் அவர்களுக்கான இடம் மறுக்கப்படுவதை முடிந்த அளவு சீர்செய்யும் முன்னெடுப்பே சமூக நீதி.
இப்போது சாதி, மதம் அற்றவன்/அற்றவள் என்று இங்கு இருக்கிற தலித்தோ, பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரோ அழைத்துக் கொள்வதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. அவர் தன்னுடைய அடையாளத்தின் பெயரால் நடக்கிற அநீதி சூழ் உலகினை விட்டு பெயர் மாற்றத்தின் மூலம் விடுபடலாம் என்று எண்ணுகிறார். அதாவது, ‘இனிமேல் உன் பேரு சங்கிலி இல்லை, கங்குலி’ என்பதைப் போலதான். சமூகமாகப் பாகுபடுத்தும் ஒருவர் தனி மனிதராகத் தன்னுடைய அடையாளத்தை மாற்ற முனைகிறார்.
ஒரு மேல் சாதி நபருக்கு தன்னுடைய அடையாள நீக்கம் வசதியான ஒன்று. அவர்களின் பிறப்பின் அடிப்படையிலான இழிவுகளை அவர்கள் சந்திப்பதில்லை. அவர்களின் பிறப்பிற்காகத் தீண்டாமையை, வன்முறையை, அதிகார மறுப்பை, இழிவை அவர்கள் சந்திப்பதில்லை. ‘நான் மனிதன்’ என்று தன்னுடைய அடையாளத்தை விட்டு விலகுவதாகக் காட்டிக்கொள்வது அவருக்கு எளிதானதாக இருக்கிறது. எத்தனை உயர்ந்த மனிதர் என்று கூடச் சுற்றத்தார் மெச்சக்கூடும். அவருக்கு இழப்பதற்கும் பெரிதாக ஒன்றுமில்லை. ஒருவர் தன்னுடைய பூணூலை, சாதிப்பெயரை தூக்கி எறிந்தால், ‘சே! செம இல்லை’ என்கிறோம். அதாவது அவமானப்பட வேண்டிய அடையாளத்தை எறிவதற்கு ஒருவரை கொண்டாடுகிறோம் என்பது எத்தனை அவலமானது?
மேலும், ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலின சாதியை சேர்ந்த ஒரு நபர் தன்னைச் சாதி, மத அடையாளங்கள் அற்றவர் என்று சான்றிதழ் பெற்றுக்கொள்வதால் என்ன ஆகிறது? அவரின் பிறப்புச் சார்ந்த பாகுபாட்டை நிகழ்த்தும் சமூக அநீதியில் இருந்து அரண் செய்யும் இட ஒதுக்கீட்டுப் பலன்கள் அவரை விட்டுப் போகின்றன. ஒரு மேல் சாதி நபருக்கு இந்த இழப்பு இல்லை. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மேட்டுக்குடியாக உள்ளவர்களுக்கும் இதனால் இழப்பில்லை. ஆனால், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் ஏழைக்குடும்பத்தினரும், பழங்குடியினரும் இந்த ‘அதிகாரப்பூர்வ அடையாள’ துறப்பில் ஈடுபடும் போது என்னாகிறது? தங்களுடைய பிள்ளைகளுக்குச் சட்டப்படியும், நியாயமாகவும் கிடைக்க வேண்டியதை அவர்களின் விருப்பமின்றியே மறுக்கிற அநீதியை புரிகிறார்கள்.
சாதிகள் கடந்து திருமணம் கொள்ளும் இணையர்களின் பிள்ளைகளுக்குச் ‘சாதியற்றோர்’ என்கிற பிரிவினில் இட ஒதுக்கீடு வழங்கி உதவலாம் என்றொரு கருத்து உண்டு. சில சாதிகள் பல்வேறு துணை சாதிப் பெயர்களில் உலவிக்கொண்டு இருக்கின்றன. அவை எளிதாக இந்தத் திட்டத்தைக் கைப்பற்றும் வாய்ப்புண்டு. மேலும், மேட்டுக்குடி வர்க்கமும் இதனால் பயன்பெறும் வாய்ப்பு உண்டு. அது ஒரு புறம். இட ஒதுக்கீட்டின் கனிகளைப் போலியான சாதி சான்றிதழ் கொடுத்தும், சட்டப்படி வரையறுக்கப்பட்டிருக்கும் வரம்பை தாண்டி வருமானம் ஈட்டியும் போலியாகக் கணக்கு காண்பிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையோர் இந்த அடையாள துறப்பினில் ஈடுபட்டால் வரவேற்கலாம். அனுதினமும் சாதியின் கொடுங்கரங்களில் சிக்குண்டு இருப்பவர்கள் அப்பொறுப்பை ஏற்பது என்பதே சத்தமில்லாமல் ஆதிக்கக் குழுவினருக்கு உதவக்கூடும்.
ஒரு பெண் அந்த அடையாளத்துக்காகப் பாகுபடுத்தப்படுகிறார் என்பதற்காக ‘நான் இனிமேல் பெண் இல்லை. நான் மனிதர்’ என்று அவர் அறிவித்துக் கொள்வதால் அவருக்கு நடக்கும் அநீதிகள் தீர்ந்து விடுமா? அவருக்கான நியாயங்கள் உறுதி செய்யப்பட்டு விடுமா? அது போலத்தான் இதுவும் இருக்கிறது. நம்முடைய அடையாளத்தை ஹர்சோத் சிங் பாதல் சொல்வதைப் போல, நாம் தேர்வு செய்வதில்லை, நம்மை ஒடுக்குபவர்களே முடிவு செய்கிறார்கள். அந்தப் பாவங்களைக் கழுவும் பொறுப்பைத் தலித்துகள் மீதும், கல்வி, சமூகத்தில் மேல் எழும்பாத பிற்படுத்தப்பட்ட ஏழைகளிடமும் ஒப்படைப்பது பிழையானது. இது ‘இட ஒதுக்கீடு பிச்சை’, ‘இப்பலாம் யார் சாதி பாக்குறா’ என்கிற பார்வையை வேறு வகையில் முன்னிறுத்துவது தான்.
இத்தகைய ‘அதிகாரப்பூர்வ அடையாளத்துறப்புகள்’ சினிமாவில் ஒளிரும் சங்கர் படம் போல. செலவும் அதிகம். உள்ளடக்கமும் பெரிதாக இருக்காது. ஆனால், பிரமாண்டமாகத் தோன்றும். கவனம் தேவை. அமைப்புரீதியான மாற்றங்களும், சமூக அளவிலான தேடல்களும், இட ஒதுக்கீட்டை தாண்டிய சமூக நீதி முன்னெடுப்புகளுமே அவசரத்தேவை. சான்றிதழ் அழிப்புச் சமத்துவம் தரும் என்பவர்கள் குறளி வித்தைக்காரர்கள். அவர்களை நம்பி விசில் அடிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.