Wendy Doniger ‘ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து மதத்தைப் பற்றி எழுத வேண்டும்’ என்கிற தலைப்பில் எழுதிய The Times of India கட்டுரை:
வில்லியம் டால்ரிம்பிள் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திக்கொண்டிருந்த என்னுடைய லண்டன் உரையின் பொழுது என் மீது யாரோ ஒரு முட்டையை வீசினார்கள். ஆனால், சில முறை முயற்சித்தும் என் மீது சரியாக அவர்களால் முட்டையை எறிய முடியவில்லை. இந்தச் சம்பவத்தைத் தன்னுடைய இந்திய வரலாறு பற்றிய கட்டுரையில் விவரித்த டால்ரிம்பிள், “இந்தியாவுக்குள் இந்து வலதுசாரிகளால் கூட்டப்பட்ட கூட்டங்கள் அவ்வப்பொழுது கலைக்கண்காட்சிகள், நூலகங்கள், வெளியீட்டாளர்கள், திரைப்பட நிறுவனங்கள் ஆகியவற்றை அவர்களின் தேசபக்தியற்ற, இந்து எதிர்ப்பு செயல்பாடுகளுக்காகத் தாக்குவதாகச் சொல்லிக்கொண்டு செயல்படுவார்கள். தற்பொழுது இந்த மாதிரியான செயல்பாடுகள் உலகம் முழுக்க இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. உலகின் பெரிய அறிவுச்சமூகத்தில் அமெரிக்க அறிஞர்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உள்ளார்கள். ஆனாலும், எங்களுக்கும் சிக்கல்கள் உள்ளன. அமெரிக்க அறிஞர்களான ஜெப்ரி க்ரிபால், பால் கோர்ட்ரைட், ஜிம் லேயின் ஆகியோரின் புத்தகங்கள் இந்தியாவில் தாக்கப்பட்ட பொழுது அவற்றின் இந்தியப் பிரதிகள் ஒடுக்கப்பட்டன. அமெரிக்காவிலும் இவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன/
நான் முன்பெல்லாம் இந்து மதத்தைப் பற்றி உரையாற்றினால் அந்த உரையின் முடிவில் ஒரு மூத்த இந்து ஆண் (எப்பொழுதும் ஆண் தான்) எழுந்து, என்னைப் பெரிய அளவில் புகழ்ந்த பின்னர், ஒரு மினி-லெக்சரை நிகழ்த்துவார். பல சமயங்களில் கற்றறிந்த ஒன்றாகவும், சில சமயம் தலைப்புக்கு பொருந்துவதாகவும் அது அமைந்திருக்கும். அவை இந்த அமெரிக்கப் பெண்ணுக்கு தெரியாத விஷயங்கள் எனக்குத் தெரிந்திருக்கின்றன என்று காட்டும் பாணியில் இருக்கும். அதில் எந்தத் தவறும் இல்லை. தன்னுடைய இந்து மதத்தின் மீது தன்னுடைய அறிவும், ஆளுமையும் அதிகப்படியானது என்று அவர்கள் நிறுவ முயல்கிறார்கள். தங்களுடைய இந்து மதத்தை, இந்துக்களைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் முனைகிறார்கள். அவர் மதிக்கத்தக்க, ஆர்வம் தரும் ஒன்றை சேர்க்கிற பொழுது, உரைக்குப் பின்னரும் ரிசப்சனில் இருவரும் உரையாடிக்கொண்டு இருப்போம். சமயங்களில் அது வெறும் சடங்காகவே, தொடர்பில்லாத ஒரு உரையாடலாக இடத்தை அடைத்துக்கொள்ளும் ஒன்றாக அமைந்திருக்கும். சமீபத்திய குறிக்கீடுகள் இவற்றில் இருந்து மாறுபட்டு தீய நோக்கம் கொண்டவையாக உள்ளன. இணையத்தில் உள்ள நபர்கள் அந்த மூத்த ஆண்களைப் போலக் கற்றவர்கலகவோ, நாகரீகம் கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. அந்த மூத்தோரை இப்படி மிஸ் செய்வேன் என்று அப்பொழுது எண்ணியதில்லை. அவர்களில் சிலர் என்னுடைய உரைகளில் தென்படுகிற பொழுது சற்றே நிம்மதியாக இருக்கிறது.
இந்து மதத்தைப் பற்றிய இந்துக்கள் அல்லாதவர்கள் எழுதும் புத்தகங்களை எதிர்க்கும் இந்துக்கள் மூன்று அடிப்படையான சிக்கல்களில் கவலை கொண்டு இருக்கிறார்கள்:
1. இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள் அல்லாதவர்களே பெரும்பாலும் எழுதுகிறார்கள் ;
2. இந்துக்கள் அல்லாதவர்கள், சமயங்களில் இந்துக்களும் கூடத் தவறான இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள்;
3. முக்கியமான அறிஞர்கள் (இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள்) ஆய்வுப் பார்வையிலேயே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்களே அன்றி நம்பிக்கையின் பார்வையில் எழுதுவதில்லை.
இந்த மூன்று சிக்கல்களும் பல சமயங்களில் தவறாகப் பூதாகரம் ஆக்கப்பட்டும், உண்மையான சிக்கலை மழுங்கடித்து, ஏற்கனவே குழம்பிய குட்டையை இன்னமும் குழப்புகிறது. ஒவ்வொரு சிக்கலாக இங்கே பேசுவோம்.
Non-Hindus rather than Hindus are writing about Hinduism.
என் மீது முட்டை எறியப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு
டார்லம்பில் இப்படிச் சொன்னார், “அந்த உரைக்குப் பிந்தையைக் கேள்வி நேரத்தில் முட்டை எறிபவனோடு வந்திருந்த குழு வென்டி டோனிங்கரை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள். தொடர்ந்து இந்து அல்லாத ஒருவர் தங்களுடைய மதத்தைப் பற்றிக் கருத்து சொல்ல தகுதியவற்றவர் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது.” இந்துக்கள் மட்டுமே இந்து மதத்தைப் பேச வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவர்களும், யூதர்களும் கிறிஸ்துவம், யூத மதம் ஆகியவற்றின் எழுத்துக்களைப் பெரும்பாலும் கட்டுப்படுத்துவதாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாகத் தங்கள் மதத்தைப் பற்றிய கருத்துக்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். (கிறிஸ்துவர்கள் மட்டுமே தங்கள் மதத்தைப் பற்றிய கருத்துக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது உண்மையில்லை. பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு இந்துக்கள் குறிப்பாக ராம் மோகன் ராய், சுவாமி தயானந்தர் முதலியோர் கிறிஸ்துவத்தின் மீது தீவிரமான விமர்சனங்களை வைத்துள்ளார்கள். (அவற்றில் பெரும்பாலானவை உண்மையானவை.) இவர்களின் இந்தக் கவலையை நாம் கரிசனத்தோடு அது ஒரு அரசியல் கவலை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

முதல் எதிர்ப்புக்கு பதில்:
இந்துக்கள் அல்லாதவரே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள் என்பது உண்மையல்ல. இரு குழுக்களும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன. இந்துக்கள் இந்து மதத்தைப் பற்றி Iபுத்தகங்கள் எழுதுவதில் பல்வேறு அனுகூலங்கள் உள்ளன. இந்துக்களுக்கு மட்டுமே தெரிந்த இந்து மதம் பற்றிய விஷயங்கள் இந்த நூல்களில் இடம்பெறும். என்னைப் போல இந்து மதத்தைப் பற்றிக் கற்பவர்களும், அதைக் கற்பிக்கும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து மதத்தின் பண்டைய மூலங்கள், இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் எழுதிய அற்புதமான நூல்களைப் படித்து எழுதவும், பாடம் நடத்தவும் செய்கிறோம். சில இந்துக்கள் இதற்கு எதிராக இந்துக்கள் அல்லாத அறிஞர்கள் எழுதிய நூல்கள் மட்டுமே மூடிய குழுவாக இயங்கும் பதிப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆதரிக்கிறார்கள். இவற்றை இந்து அறிஞர்கள் உடைக்க முடியாது என்று அவர்கள் சொல்லக்கூடும். அதில் ஒரளவுக்கு உண்மை கடந்த காலத்தில் இருந்தது என்றாலும், தற்பொழுது அது பெருமளவில் குறைந்துவிட்டது. மேலும், மேலும் அற்புதமான பல நூல்களை இந்து அறிஞர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றை நாடு முழுக்க வகுப்புகளில் பயன்படுத்தவும் செய்கிறோம். .
சில இந்துக்கள் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளில் தங்களுடைய கல்வியை முடித்து இந்திய ஆய்வுமுறைகள், மற்றநாட்டு ஆய்வுமுறைகள் இரண்டிலும் தேர்ச்சி பெறுகிறார்கள். இவர்கள் இரட்டை நோக்கு கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். ஏ.கே.ராமானுஜன் வார்த்தைகளில் இந்த இந்தோ-அமெரிக்கர்கள் இந்திய, இந்தியர் அல்லாத அறிவுஜீவி உலகினில் வாழ்கிறார்கள். இரண்டு உலகங்களைச் சேர்ந்த அறிவு ஜீவிக்களாலும் நிச்சயம் எழுத முடியாத புத்தகங்களை இவர்கள் எழுதுகிறார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை ராமாயணம் பற்றி ஏ.கே.ராமனுஜன் எழுதிய முக்கியமான கட்டுரையைப் பாடப்புத்தகங்கள், ஆக்ஸ்போர்ட் தொகுப்பு ஆகியவற்றில் இருந்து நீக்க நடந்த முயற்சிகளும், அந்த எதிர்ப்புகள் ஆற்றல், வெற்றி ஆகியவற்றை மீறியும் அந்தக் கட்டுரை காப்பற்றப்பட்டது இந்திய ஜனநாயகம் உயிர்த்திருப்பதன் மீதான நம்பிக்கையின் அடையாளம்.
நாம் இந்த வகையான அறிஞர்களைப் புகழ்வதால் வெறுமனே இரு கலாசாரக் கல்வி கொண்ட இந்துக்கள் மட்டுமே நூல்களை எழுத வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. உள்ளிருந்து ஒரு விஷயத்தை அனுகுபவரின் எழுத்தில் உள்ள நியாயத்தை நான் நிச்சயம் மறுக்க மாட்டேன். ஆனால், அதனுடன் கூடுதலாக வேறு ஆக்கங்களும் எழவேண்டும் என்பேன். இந்துக்கள் தங்களின் மதத்தைப் பற்றி வெளிப்படுத்துவது கட்டாயமான அடிப்படை; அதே சமயம் அவர்களின் கருத்தை மட்டுமே ஏற்க வேண்டும் என்பது மதத்தைப் பற்றிய ஆய்வுப்பூர்வமான வாசிப்பின் அடிப்படைக்கூறுகளைச் சேதப்படுத்தும்.
இந்து மதத்தைப் பற்றி இந்து அல்லாதவர் எழுதும் நூலிலும் சாதகங்கள் உள்ளன. அவர்கள் இந்து மதத்தைப் பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி மார்க்ஸ், ப்ராய்ட், டெர்ரிடா, எட்வர்ட் செட் முதலியோர் பார்வையில் பார்க்க முனைகிறார்கள். இது பயன்மிக்க ஒரு இடைவெளியை சாதிக்கிறது. எந்த இந்துவும் முழுமையாக எல்லா வகையான இந்து மதங்களையும் தெரிந்திருக்கவோ, அவை அனைத்துக்கும் தானே பிரதிநிதியாகவோ திகழ முடியாது. இந்துக்களின் மதம் பற்றிய மாறுபட்ட அறிவு சார்ந்த ஆய்வு, புரிதல் ஆகியவற்றை இந்துக்கள் அல்லாத அறிஞர்கள் திறக்க முடியும். இவை இரண்டிலும் சாய்வான நிலைப்பாடுகள் நிச்சயம் உள்ளன. இரண்டு சாய்வான ஆய்வுகளும் ஒன்றுகொன்று ஏற்படுத்தும் தாக்கத்தைச் சரிசெய்து கொள்ளும். ஆனால், அடுத்தக் குற்றச்சாட்டு உள்ளது
சில இந்துக்கள் அல்லாதவர்கள் (சமயங்களில் இந்துக்களும்) தவறான இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள்.
இந்துத்வவாதிகள் பேச மட்டும் விரும்பவில்லை. அவர்கள் தாங்கள் சொல்வதைக் கேட்க வைக்கவும் விரும்புகிறார்கள். இந்து மதத்தைப் பற்றிக் கேட்க விருப்பமில்லை என்பவர்களை அமைதிப்படுத்தவும் அவர்கள் இயங்குகிறார்கள். அமெரிக்கர்கள் (சில அமெரிக்க இந்துக்கள் உட்பட) தங்களின் மதத்தைப் பற்றிச் சொல்லும் குறிப்புகளைத் தங்கள் பார்வையில் இந்து மதத்தைத் தொடர்ந்து அவமதிக்க வெளியிடுவதாகக் கருதுகிறார்கள். ஆகவே, அவற்றை அவர்கள் தவிர்க்க செயல்படுகிறார்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவுக்கு நியாயம் இருக்கவே செய்கிறது. பல்வேறு அமெரிக்கக் கல்ட்கள் தங்களை இந்து மதத்தின் அடிப்படையில் ஆனவை என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை மலிவான ஒன்றாக, தவறான ஒன்றாகக் காட்டியுள்ளன. தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்ளும் இவை பெரும்பாலும் தாந்த்ரீக ரீதியிலானவை மட்டுமே.
டேவிட் கார்டன் வைட்டின் வரிகளில். ” இந்த அமெரிக்கர்கள் புது யுக தாந்த்ரீக செக்சை மிக மோசமான முறையில் இந்திய பாலியல் கூறுகள், பாலியல் கலைகள், மசாஜ் முறைகள், ஆயுர்வேதம், யோகா ஆகியவற்றை இணைத்து ஒரே பாரம்பரியமாகக் கட்டமைக்கிறார்கள்” . “ஆகவே, இடைக்காலத் தாந்த்ரீகம் புது யுக தாந்த்ரீகத்துக்கு அடிப்படை என்பது கைரேகைப் பதிவு எப்படி நவீன ஓவியத்துக்கு அடிப்படை என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு உண்மை”
“கேளிக்கைக் கூடாரமாகத் திகழும் நவீன காலத் தாந்த்ரீகத்தை இந்தியாவைச் சேர்ந்த குருக்கள், பயிற்றுநர்கள் மேற்கின் அறிஞர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டு மேற்கைச் சேர்ந்த தாகம் மிகுந்த சீடர்களுக்குக் கிழக்கின் மாயங்களைக் காட்டுவதாகச் சொல்லி விற்கிறார்கள்.” என்று வைட் பொரிந்து தள்ளுகிறார். இந்த மாதிரியான சிதைக்கப்பட்ட பார்வையை ஏன் இந்துக்கள் எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

பெரிய முரண் என்னவெனில் இந்தியாவே இந்தியாவைப் பற்றிய மேற்கின் தவறான பார்வைக்கான மூலமாக இருப்பது தான். இந்துத்வவாதிகள் சிருங்கார ரசம் இல்லாத இந்துமதத்தை வரலாற்றில் தேடி எடுக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக உபநிஷதங்களில் இருக்கும் சன்யாசம் பற்றிய குறிப்புகள், பதினோராம் நூற்றாண்டில் அபிநவகுப்தர் தாந்த்ரீகம் பற்றி அளித்த விளக்கம், விக்டோரியா ராணி காலத்தில் பதினோராம் நூற்றாண்டு இந்து மதம் மீது ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் இந்து மதத்தில் பாலியல் வேட்கைக்கு இடமில்லை என்று நிறுவ முயல்கிறார்கள். இந்துத்வவாதிகள் காமத்தை, பிராய்டை (அவரைக் காமம் பற்றி மட்டுமே பேசியவர் என்று தவறாக எண்ணிக்கொண்டு) எதிர்க்கிறார்கள். கூடவே காமசூத்திரம், இந்து மதத்தின் பாலியல் பக்கங்களை, அதனுடைய உணர்ச்சிகரமான பகுதிகளை எழுதும் என்னைப் போன்ற எண்ணற்ற அறிஞர்களை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய மதத்தில் இருக்கும் சிருங்கார ரசம் சார்ந்த கூறுகளை இந்துக்களே மறுதலிக்கிற அளவுக்குச் சிக்கலான உளவியல், வரலாற்றுக்காரணிகள் வளர்ந்துள்ளன. இது அவர்களின் நகைச்சுவை உணர்வை அற்றுப்போகச் செய்துள்ளது. சமஸ்க்ருத இலக்கியத்தில் இருக்கும் நகைச்சுவை, அங்கதம் ஆகியவற்றை ரசிக்காமல் அவற்றை இந்து மதத்தை அவமதிப்பதாகப் புறக்கணிக்கிறார்கள். இந்து மதத்தின் மகத்தான பண்பே தன்னுடைய கடவுள்களையே கேலி செய்யும் அதன் திறன் தான். அதனையே இவர்களின் செயல்களால் இழப்பது அவமானமான ஒன்றாகும்.
இரண்டாவது எதிர்ப்புக்குப் பதில்:
இந்து மதத்தை ஒற்றையான, குறுகலான ( அதன் சிருங்கார ரசத்தை நீக்கிய ) மதமாக வாசிப்பது என்பது கிறிஸ்துவத்தைப் பற்றி ஒரு நூலை எழுதி அதில் எல்லாக் கிறிஸ்துவர்களும் டார்வின் சொன்னது தவறு என்று முழுமையாக நம்புகிறார்கள். இறைவன் ஏழே நாளில் உலகத்தைப் படைத்ததே உண்மை என்று அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள் என்பது போலத்தான்.
இந்த மாதிரியான தவறான இந்துமதத்தின் மீதான கருத்தியல் சாய்வு இந்துக்கள் அல்லாதவர்கள் மீதான இனவெறியை விட மோசமானது. இந்தக் கருத்தியல் சாய்வு சம்பந்தப்பட்ட அறிஞர் தங்கள் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதோடு தங்களின் கருத்தையே மீண்டும் ஓத வேண்டும் என்று விரும்புகிறது. இதனால் தான் பக்தி மிகுந்த இந்துவாகத் திகழ்ந்தாலும் ஆய்வுப் பார்வையை மாற்றிக்கொள்ளாமல் இயங்கும் இந்து மதத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இந்துத்வவாதிகள் இனவெறியோடு செயல்படுவதாக நிராகரிக்கிறார்கள்.

மூன்றாவது எதிர்ப்பு:
முக்கியமான அமெரிக்க அறிஞர்கள், இந்துக்கள் (அ) இந்துக்கள் அல்லாதவர்கள் அறிவுப்புலத்தில் இருந்தே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்களே அன்றி நம்பிக்கை சார்ந்து இந்து மதம் பற்றி எழுதுவதில்லை:
இது உண்மையே. அது நல்ல விஷயமும் கூட. ஒரு மதத்தைப் பற்றி எழுதக் கிளம்பி உள்ள ஒரு ஆசிரியர் அதனைப் பற்றி நேரிடையாகத் தெரிந்து கொள்வது தெளிவு பெறும் திட்டத்தின் அடிப்படையான, அவசியமான கூறை மீறுவதாகும். ஒரு மதத்தைப் பற்றி வேறொரு மதத்தில் நேரடி அனுபவமுள்ள ஒருவராகவும் எழுதக்கூடாது. ப்ரோட்டஸ்டன்ட் பார்வையில் இந்து மதத்தை எழுதுவதைச் செய்யக்கூடாது. இது வெகுகாலமாக நடந்து வந்துள்ளது. அதுவே இணையத்தில் இந்துக்களிடையே கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. இந்துவின் பார்வையில் இந்து மதத்தை எழுதக்கூடாது. இந்து மதத்தை ஆய்வுப்பார்வையில், அறிவுத்தளத்தில் நோக்கி எழுத வேண்டும். இந்து மதத்தின் பல்வேறு வகையான உருவங்கள் உயிர்த்து உள்ளன. உலகம் முழுக்க அவை பரவியுள்ளன. அவற்றில் வெகு சிலவே அறிஞர்களுக்குத் தெரிந்துள்ளன. சில பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக உள்ளது. இவை இரண்டும் அவ்வப்பொழுது சந்திக்கவும் செய்கின்றன. ஆனால், ஒரு அறிஞர் பக்தரும் கூட, ஆனால், எழுதுகிற பொழுது அறிஞர் என்கிற ஆடையை அணிந்துகொள்பவர் அவர்.
இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு எனும் ஆசிரியரின் நூல் வலதுசாரிகள் எதிர்ப்பால் பென்குயின் நிறுவனத்தால் இந்தியாவில் இருந்து திரும்பப் பெறப்பட்டது.
மூலம்: http://timesofindia.indiatimes.com/…/articlesh…/46571491.cms
WENDY DONIGER Mircea Eliade Distinguished Service Professor of the History of Religions; also in the Department of South Asian Languages and Civilizations, the Committee on Social Thought, and the College
மொழிபெயர்ப்பு: பூ.கொ. சரவணன்