கலிலியோ மண்டியிடவில்லை-நூல் அறிமுகம்


கலிலியோ மண்டியிடவில்லை :
அறிவியல் சார்ந்தவர்கள் இலக்கியத்திலோ,இசையிலோ,சினிமாவிலோ ஆர்வம் கொண்டிருக்க கூடாது என்பது நம்முடைய பொதுவான எண்ணமாக இருக்கிறது. அதை இயல்பாக மறுவாசிப்பு செய்யும் கட்டுரைத்தொகுப்பு தான் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கலிலியோ மண்டியிடவில்லை கட்டுரைத்தொகுப்பு. அறியாத அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கையும் இணைத்தே இந்நூல் பதிவு செய்கிறது. 

எந்த மத பீடத்துக்கு எதிராக பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று கலிலியோ எழுதினாரோ அதே மத பீடத்தில் தான் வறுமை காரணமாக தன்னுடைய மகளை கன்னியாஸ்திரி ஆக அனுப்பினார் என்பது வலிமிகுந்த வரலாறு. அங்கே இருந்து தன்னைச்சுற்றி நடக்கும் கொடுமைகளை மகள் எழுதுவதை ஒரு கட்டுரை பதிகிறது. நானோதொழில்நுட்பத்துக்கான விதையை தன்னுடைய பேச்சின் மூலம் போட்ட நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் பெயின்மானின் காதல் வாழ்க்கை என்னவோ செய்கிறது. ஆர்லைன் எனும் தன்னுடைய காதலிக்கு இருந்த காசநோயால் அவரை முத்தமிடவோ,பிள்ளை பெற்றுக்கொள்ளவோ முடியாது என்று மருத்துவர்கள் சொன்ன பின்னும் தீராக்காதலோடு அவரையே திருமணம் செய்து கொள்கிறார். மனைவி இறந்த பின்னும் சோகம் தாளாமல் கடிதங்களை எழுதுகிறார் ,”இன்றைக்கு உனக்கு பொருந்தும் ஒரு அழகான கவுனை கடையில் கண்டேன் ! அதை நீ அணிந்து பார்க்க முடியவில்லை என்னால் !” என்று அவர் இறந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் கடிதம் எழுதி குமைகிறார் அவர். 

கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தன்னுடைய பரிணாமக்கொள்கையை வெளியிடாமலே இருந்த டார்வின் தன்னுடைய மகள் இறந்து போனதும் கடவுளுடனான போராட்டத்தை முடித்துக்கொண்டு அந்த தாள்களை புத்தகம் ஆக்குகிறார். காஸ் பகுத்தறிவே பெரிய கடவுள் என்கிறார். தாஸ்த்தோவோயேஸ்கியின் தீவிர ரசிகராக ஐன்ஸ்டீன் இருந்திருக்கிறார் ; அவரின் கவித்துவமான,பிரபஞ்சத்தை ,அறிவியலை எல்லாம் எழுத்தில் கொண்டு வந்த நடைக்கு எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் ரசிகர்கள் !

இரண்டு லட்சம் விதை ரகங்களை உலகம் முழுக்க இருந்து சேகரித்த நிகோலா வாவிலோவ் கம்யூனிஸ்ட் எதிரி என்று தவறாக ஸ்டாலின் படைகளால் சந்தேகிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சோபி ஜெர்மைன் என்கிற ஈபில் டவர் எழக்காரணமான பெண் அவர் காலத்தில் அவர் பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்டார். வேலை எதுவும் இல்லாத பெண் என்றே அவரை அன்றைய அரசாங்க ஏடுகள் குறிக்கின்றன. சந்திரசேகர் எனும் நோபல் தமிழர் இசை மற்றும் இலக்கிய ரசிகர் அவர் ஷேக்ஸ்பியர்,நியூட்டன் மற்றும் பீத்தோவன் என்றொரு கட்டுரை கூட எழுதியிருக்கிறார்.

உயிர்மை வெளியீடு