அந்திவேளையில் மேகம் தூறுகையில் விடைபெறல்கள் அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும்.
சொற்கள் அருகி விக்கி நிற்கையில் பிரிதல்கள் நிகழ்கின்றன.
அலைபேசியின் ஊடாக அழுது அயர்ந்து போன முகங்கள் உடைந்து மறைகின்றன.
புன்னகைத்தபடி கையசைத்து விலகுகையில் சன்னலோரம் பிரியமிக்க உறவொன்று எட்டிப்பார்க்கையில் கேவல்கள் மின்னி அறைகின்றன.
துயர்மிக்க காலங்களை கடக்கும் வண்ணம் விழாவொன்று நிகழ்கிறது.
உடைந்தபடி உருகி வழியும் இசைச்சரம் ஒன்றின் தொடர்பறுந்து செவி துடிக்கையில் பிரிவுக்காலத்தின் வெம்மை இளைப்பாறுகிறது.
ஒவ்வொரு பிரிதலின் கணத்தினிலும் புதிய நடுக்கங்கள் கரம் சேரும்.
ஆயினும், பிரிவைக் கடக்கும் பயணத்தில் புதிதாய் பூக்கும் தழும்பொன்றின் நேசம் மட்டும் எப்போதும் உடனிருக்கும். – பூ கொ சரவணன்